Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

26 ஆண்டுகளாக முதலிடம் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2011 |

வியக்க வைக்கும் விருதுநகர் ரிசல்ட்

'ஏழை மக்களின் சந்ததிகள் கல்விக் கண்ணைத் திறந்து முன்னேற வேண்டும்’ என்ற கனவோடு காமராஜர், இலவசக் கல்வித் திட்டத்தையும், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தையும் அமல்படுத்தினார். அவரது கனவை நிறைவேற்றும் விதமாக, தொடர்ந்து 26 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வின் தேர்ச்சி சதவிகிதத்தில் முதல் இடம் பெற்று மகிழ்வில் இருக்கிறது, விருதுநகர் மாவட்டம்!

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 95.93 சதவிகிதம் பெற்ற இந்த மாவட்டம், இந்த ஆண்டு 95.07 சதவிகிதம் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

வியாபாரம் மற்றும் தொழில் துறையில் அடுத்த தலைமுறையினர் முன்னேறக் கல்வியே முக்கியம் என்பதை உணர்ந்ததால்தான் இந்த சாதனை தொடர்கிறது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் என்று ஒவ்வோர் ஊரிலும் உள்ள நாடார் சமுதாயத்தினர், தங்களது மகமை மற்றும் உறவின்முறை அமைப்புகள் மூலம் பள்ளிகளைத் தொடங்கி
இலவசமாகத் தரமான கல்வியைக் கொடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்கள். அவர்களின் கல்வி நிறுவனங்களைப் பார்த்து, பிற சமுதாயத்தினரும் கல்விப் பணிகளைத் தொடங்க... அருமையான வளர்ச்சி!

வறட்சியான விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த வரை, 165 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 65. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளும் இங்கு அதிகம். பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தில் ஏழு அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றன; 50-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் 90 சதவிகிதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று இருக்கின்றன.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கணேசனிடம் பேசினோம். ''இப்போதைய போட்டி உலகத்தில், கடுமையாக உழைத்தால்தான் நம்மை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற மனோநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது.

அதனால்தான் இந்த வெற்றி. தவிர, பெற்றோர்களும், மாணவர்களும் தீவிரமாக உழைத்தனர். தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கும். விளைவு, நாங்களும் சிறப்பு வகுப்புகளைத் தொடங்கினோம். இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்தது...'' என்றார் உற்சாகம் கொப்பளிக்க.

விருதுநகர் நாடார் சமுதாயத்தின் கே.வி.எஸ். பள்ளியின் முன்னாள் நிர்வாகி சங்கரவேல், ''எங்கள் சமுதாயம் 1905-ம் ஆண்டில் இருந்தே பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றது. தரமான கல்வி வழங்கினால்தான் நம் பிள்ளைகள் பெரிய அளவில் வர முடியும் என்பதை உணர்ந்தோம். அதன்படி, சுமாராக படிக்கும் மாணவர்கள், சிறப்பாகப் படிப்பவர்கள், மாநில அளவில் மார்க் பெறுபவர்கள் என்று தனித்தனியாக மதிப்பிட்டு, அதற்கு ஏற்றபடி சிறப்புப் பயிற்சிகளை ஏற்படுத்தினோம். விடுமுறைகளிலும், பள்ளி முடிந்த பிறகும், சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உணவும் வழங்கப்படுகிறது.

ஆகவே, நாங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ஒருங்கிணைத்து உழைத்ததுதான் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்!'' என்றார் பூரிப்போடு.

பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு நம்மிடம், ''அரசுப் பள்ளிகளின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், ஆசிரியர்களின் கடின உழைப்புதான். நான் அமைச்சர் ஆனதும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளும் தரத்தில் சிறப்பாக விளங்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக ஆசிரியர்களுக்கு அடிக்கடி கூட்டங்கள் நடத்தி கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி சதவிகிதம்பற்றி பல முறை வலியுறுத்தினோம். இப்போது அதன்படி பெருமளவில் சாதித்துவிட்டோம். எதிர்காலத்திலும் இந்த சாதனை தொடரும்...'' என்றார்.

நல்லன தொடரட்டும்!

நன்றி : ஆனந்த விகடன்

இப்படியாக நம்மைச் சுற்றியும் இனிமையான நிகழ்வுகள் நிகழாதா என்று ஏங்க வைக்கும் மேற்சொன்ன சூழலும் என்ற ஏக்கம் எழுவதை ஏனோ தடுக்க முடியவில்லை !

தொகுப்பு : அபுஇபுறாஹீம்.

2 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல பதிப்பு,
இந்த நவீன காலத்தில் நம்மூரு கல்விநிறுவனங்கள் காதிர்முகைதீன், இமாம் ஷாஃபி போன்றவை பாரம்பரியம் என்ற பெருமை மட்டுமல்லாமல் A என்ற ஊரின் முதல் எழுத்திற்கேற்ப கல்வித்தரத்திலும் முன்னுக்கு வரவேண்டும்.
இதற்கு கல்வி மேலாண்மை தேவைக்கேற்ப நல்ல கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
ஊர்வாசிகள் அனைவரும் மேலாண்மைக்கு ஒத்துழைப்பும் கருத்தும் வழங்க வேண்டும்.
இல்லாத ரெயிலை கேட்பது போல,இருக்கிற கல்வியை (தரத்தை)உயர்த்துவோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அற்புதமான உதாரணம், கல்வி தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு.

முறையான சேவை நோக்குடன் கூடிய கல்வி திட்டங்களே நல்ல பலன் தரும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் வாழ்த்துக்கள்..

நம் சமுதாயத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களே சிந்திக்கலாமே..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.