நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை காணும்போது முஸ்லிம்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெரிய வருகின்றது. ஏதோ மமக விற்கு மட்டும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தனி சின்னத்துடன் பெற்று விட்டதால், முஸ்லிம்களுக்கு போதிய பிரதி நிதித்துவம் கிடைத்து விட்டதாக சிலர் எண்ணிக் கொண்டுள்ளனர். தற்போதைய ஆட்சியில், போதிய முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களோ, மந்திரி சபையில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவமோ, தலைமை செயலகத்தில் தற்போது நியமிக்கப் பட்டுள்ள அரசு உயர் அதிகாரிகள், மற்றும் முதல்வரின் தனி செயலாளர்கள் என்று நியமிக்கப் பட்ட எல்லா மட்டத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது!.
முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஷீலா பிரியா, ராம் மனோகர் ராவ், வெங்கட்ராமன், ராமலிங்கம் மற்றும் ரீடா ஹாரிஸ் தக்கார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓருவர் கூட முஸ்லிம் இல்லை!. கடந்த ஆதிமுக ஆட்சியில் முனீர் ஹோதா நியமிக்கப்பட்டு, கடைசியில் அவர் பந்தாடப்பட்டதும் நினைவிருக்கலாம்!.
கடந்த சட்டமன்றத்தில் இருந்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு ஆகும். தற்போது முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான அரசியல் எழுச்சி, மற்றும் முஸ்லிம்களின் சார்பில் ம.ம.க மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகிய புதிய அரசியல் கட்சிகளின் வருகை ஆகியவற்றின் மூலம் புதிய சட்டமன்றத்தில், குறைந்த பட்சம் அல்லது கேவலம் ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கவேண்டும். மாறாக இருந்ததும் போச்சுடா என்பதை போலவும், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாகி, இருந்ததில் ஓரு உறுப்பினரின் எண்ணிக்கையும் குறைந்து, தற்போது ஆறே ஆறு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினரை நாம் பெற்றுள்ளோம்.
கடந்த சட்டமன்றத்தில் இரண்டு முஸ்லிம் அமைச்சர்களை பெற்று இருந்தோம். குறிப்பாக இந்த தேர்தலில், முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கே சென்றுள்ளதும் தெளிவாகின்றது. அப்படி இருந்தும், தற்போதைய அமைச்சரவையில் ஏதோ பிச்சை போட்டதுபோல், மரியம் பிச்சை என்ற ஒரே ஓரு முஸ்லிம் அமைச்சர்!. கொங்கு வேளாளர் இனத்துக்கு மட்டும் எட்டு அமைச்சர்களை ஒதுக்கியவர்கள் முஸ்லிம்களுக்கு என்று குறைந்து கடந்த ஆட்சியை போலவே இரண்டையாவது ஒதுக்கி இருக்கலாம். இது முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்தில், அரசியலின், வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?. இதுவே நம் முன் உள்ள கேள்விகள்!.
தற்போது நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற (தமிழகம்,மேற்குவங்கம், கேரளா,பாண்டிச்சேரி,அஸ்ஸாம்) தேர்தல்களில் மொத்தம் 130 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது கடந்த கால எண்ணிக்கையை விட 25 முஸ்லிம்கள் கூடுதலாகும். இதில் பெரும் பங்கை அள்ளி கொடுத்துள்ளது மேற்குவங்கம் ஆகும். இங்கு போட்டியிட்ட 59 முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இங்கு கடந்த கால எண்ணிக்கையை விட 13 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகரித்துள்ளனர்.
மேற்குவங்கத்தை அடுத்து கேரளா இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. கேரளாவில் இந்த சட்டமன்றத்தில் 36 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது கடந்த கால உறுபினர்களை விட 11 முஸ்லிம்கள் கூடுதலாகும். கடந்த ஆட்சியில் இங்கு 25 முஸ்லிம் உறுப்பினர்களே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மூன்றாம் இடத்தை அஸ்ஸாம் பெறுகின்றது. இங்கு கடந்த ஆட்சியில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ஆகும். தற்போது 3 முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடி 28 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்து முஸ்லிம்களின் இயக்கங்களும் தயக்கங்களும் நிறைந்து காணப்படும் தமிழ்நாட்டில் மட்டும், கடந்த சட்டமன்றத்தில் ஏழு என்று இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டு ஆறாக மாறியுள்ளது!. முக்கிய கட்சிகளின் சார்பில் 15 பேர்கள் போட்டியிட்டும், இந்த அவலநிலை!. பாண்டிச்சேரியிலும் இரண்டு உறுப்பினர் என்ற நிலைமாறி, தற்போது ஒரே ஓரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே!.
மாநிலம்/ இடங்கள்/ 2006/ 2011/ மாற்றம்
மே.வங்கம் 294 46 59 +13
கேரளா 140 25 36 +11
அஸ்ஸாம் 126 25 28 +03
தமிழ்நாடு 234 07 06 -01
புதுச்சேரி 30 02 01 -01
மேற்குவங்கம்: 59 முஸ்லிம் MLA (20%)
கேரளா: 36 முஸ்லிம் MLA (25.7%)
அஸ்ஸாம்: 28 முஸ்லிம் MLA (22.2%)
தமிழ்நாடு: 6 முஸ்லிம் MLA (2.5%)
பாண்டிச்சேரி: 1 முஸ்லிம் MLA (3.3%)
மேற்குறிப்பிட்டுள்ள மற்ற மாநிலங்களில் எல்லாம் முஸ்லிம்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தில் கனிசமாக உயர்ந்து இருக்கும்போது, தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரியில் மட்டும் குறைந்து இருப்பதற்கு காரணம் என்ன?.
காரணம் ஒன்றே ஒன்றுதான்!. நம்மிடையே ஒற்றுமைக்கு பதில் ஈகோ எனும் நீயா நானா என்ற போட்டி பொறாமை மட்டுமே!. அங்கெல்லாம் தமிழ்நாடுபோல ததஜ, இதஜ, தமுமுக, மமக, பேரவை, ஜமாத்கள் இயக்கம், தயக்கம் என்றெல்லாம் கிடையாது!. மார்க்க பிரச்சாரத்தை அதன் வழியிலும், அரசியல் விழிப்புணர்வை அதன் வழியிலும் செய்கின்றனர். வலது இடது கம்யூனிஸ்ட்கள் எல்லாம் ஒரே அணியில் நின்று களம் காணும் போது, தமிழகத்தில் இரண்டு முஸ்லிம் இயக்கங்கள், ஜமாத்கள், ஓர் அணியில் வர தயங்குவது விநோதமானது!. இதன் விளைவையே தற்போது நாம் அனுபவிக்கின்றோம்.
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஜமாஅத்களும் தேர்தலில் மட்டுமாவது ஒன்றிணைத்து, ஒரே கூட்டணியின் சார்பில் நிற்காமல், ஆளாக்கு ஓரு அணி எனவும், தனியாகவும், ஆதரவு மட்டுமே என்றும், களம் கண்டதின் விளைவே இது!. நாமும் முன்பு எஸ்டிபிஐ, ததஜ உள்ளிட்ட அனைத்து இயக்கத்திற்கும் கோரிக்கை வைத்தோம்!. தங்களின் முடிவை மறுபரிசீலைனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்தோம்!.
சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்கு பதில், எடுத்த நிலைபாட்டை மாற்றாமலும், அவ்வாறு தவறாக எடுத்த முடிவையும் சரி என்று வாதிட்டும், சிறுபிள்ளைத்தனமான எதிர் வாதங்களை முன்வைத்தும் நின்றதன் விளைவே, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நாம் குறைவான அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற காரணம். உங்களின் இந்த ஈகோவினால் சமுதாயம் பலன் அடைந்துள்ளதா?. அல்லது சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளதா?. சிந்திக்க வேண்டாமா?. இதற்குத்தானே இவ்வளவு சிரமபட்டீர்கள்!.
இந்த குளறுபடிகளுக்கு யார் காரணம் என்று இதைப்படிக்கும் உங்களுக்கு மிக நன்றாக விளங்கி இருக்கும். குறிப்பாக தற்போது கிடைத்துள்ள ஆறு சட்டமன்ற உறுப்பினர்களில், இருவர் மமக வை சேர்ந்தவர்கள். இவர்களையும் தோற்கடிக்கவேண்டி சிலபேர் களப்பணி ஆற்றினார்கள். அவ்வாறு இந்த இரண்டு மமக வேட்பாளரும் தோற்று இருந்தார்களேயானால், நான்கே நான்கு உறுப்பினர்களே தற்போது இருந்திருப்பார்கள். இது இன்னும் கேவலமாக இருந்திருக்கும்!. ஆனால், சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டுமே!.
எனவே இன்னும் சிறிது காலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வர உள்ளது. அங்கேயும் இது போன்ற ஆளுக்கொரு முடிவு என்று எடுத்தீர்களேயானால், சட்டமன்ற ஏற்பட்ட கதிதான் அங்கேயும் ஏற்படும் என்பது திண்ணம். இது முஸ்லிம்கள் அரசியல், ஆட்சி அதிகாரத்தில் பின்னோக்கி சென்று தங்களுக்கு தாங்களே கேடு விளைவிக்கும் செயலாகும். இனி எத்துனை கமிஷன்களை அரசுகள் அமைத்து, நமக்கு சலுகைகளை வழங்கினாலும், நாம் ஒற்றுமையாக ஓரணியில் இல்லாவிட்டால், ஒரு பலனையும் இந்த சமுதாயம் அடையப் போவதில்லை!. நமக்கு இது ஒரு எச்சரிக்கையுமாகும்!.
விழிப்புணர்வே நிலையான அறம்!
அதிரை முஜீப்.
7 Responses So Far:
தல குப்புர விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார் ஒருவர், தல நிமிர்ந்தவர்களும் தான் தன் என்று அதிகாரம் கொள்ளாமல் இருந்தால் சரி தான்
வாங்க சின்ன காக்கா !
க விழுந்ததால் J ன்னுதானே சொல்ல்லுவாங்க ! அது அவய்ங்க அரசியல் !
--------------------------------
விழிப்புணர்வே நிலையான அறம்!
* * * * * * * * * * * * ** * *
அடிமேல் அடி(கொடுத்து) கொண்டிருக்கனும் அப்பதான் அம்மியும் அசைந்திடுமாமே !?
===============================
புள்ளி விவரங்களோடு இத்தனை எளிதாக விளக்கியிருப்பது எனக்கேப் புரிகிறதே தலைகளுக்கு ஏன் புரிவதில்லை?
// sabeer.abushahruk சொன்னது… புள்ளி விவரங்களோடு இத்தனை எளிதாக விளக்கியிருப்பது எனக்கேப் புரிகிறதே தலைகளுக்கு ஏன் புரிவதில்லை?//
சபீர் காக்கா,
"அறிந்தும் அறியாமலும்" "புரிந்தும் புரியாமலும்" "தெரிந்தும் தெரியாமலும்" என்பது இதுதானா.............
ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் முஸ்லீம்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டுதான் இருக்கிறது. என்னதான் இரண்டு முன்று தொகுதிகளில் நம்மவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தாலும், இன்னும் நாம் ஏனோ இன்னும் தோற்ற மாணவர்களாகவே இருக்கிறோம். எல்லாவற்றிற்கு காரணம் ஈகோ என்னும் மனநோயே காரணம்.
நல்ல ஆய்வு பதிவு..
நன்றி சகோதரர் முஜீப்..
நல்ல ஆய்வு காக்கா...எப்ப திருந்த போகிறோம் நாமும் நம் சமுதாய தலைவர்களும்....
CAN ANY PROMINENT FUGURE OF MUSLIM COMMUNITY TRY TO BRING THE HARD HEADED (HEADS) LEADERS TOGETHER?
- MOHAMED THAMEEM
Post a Comment