ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - பொதுக்குழுக் கூட்டம் !

புத்துணர்ச்சி ஊட்டிய பொதுக்குழுக் கூட்டம்!

'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தனது பொதுக்குழு பற்றிய அறிவிப்புச் செய்த பின்னர் வெகுவாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இன்றைய தினம் (29 / 05 / 2011) பொதுக்குழுக் கூட்டம், சங்கத்தின் புதிய கட்டிடத்தில் ஜனாப் இக்பால் ஹாஜியாரின் தலைமையில், சங்கத் தலைவர் அட்வகேட் அப்துர்ரஜாக் ஹாஜியார், எம்.எஸ். தாஜுத்தீன் ஹாஜியார், சங்கச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க, இன்று காலை பத்து மணியளவில் கூடியது.

சங்க நிர்வாகிகளின் அன்பான வரவேற்புடன், பொதுக்குழு வருகையாளர்கள் ஆவலுடன் கூட்ட நிகழ்வுகளுக்காகக் காத்திருந்தனர். முன்னதாக, காரீ அப்துல் ஹாதி பாகவியவர்களின் திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம் முறையாகத் தொடங்கிற்று. அதனைத் தொடர்ந்து, 2010 – 2011 நிதியாண்டின் வரவு செலவுக் கணக்கு, சங்கப் பொருளாளரால் வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சங்கத் துணைச் செயலாளர், சங்கப் புதிய நிர்வாகத்தின் கடந்த காலச் செயல்பாடுகள் பற்றிய தொகுப்புரையை வழங்கினார்.

அடுத்த நிகழ்வாக, சங்கத்தின் சட்ட வரைவுகளின் திருத்தங்கள், பரிந்துரைகள் பற்றிய அறிமுக உரையை, அக்குழுவின் தலைவர் மவ்லவி அஹ்மது இப்ராஹீம் காஷிஃபி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

அதனையடுத்து, பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் சங்கப் புதிய கட்டிடத்தைப் பூர்த்தி செய்வதற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் நன்கொடைப் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்திச் சிற்றுரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துரைகளுக்கான வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தம் கருத்துகளை மைக் மூலம் தெரிவிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. கருத்துரைகள் – கண்டனமாக இருந்தாலும், வரவேற்பாக இருந்தாலும் – திறந்த மனத்துடன் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டன. அவை வருமாறு:

  • முன்னதாக சகோதரர் ஒருவர், சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் தேர்வு முறையாக நடக்கவில்லை என்றும், அது பொதுக்குழுவால் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை வரவேற்ற நிர்வாகிகள், அவருடைய ஆட்சேபனையை இந்தப் பொதுக்குழுவில் முன்வைத்து, அதற்கு ஒப்புதல் பெற்றனர்.
  • அடுத்து பேசிய சகோதரரின் ஆட்சேபனை, சங்க நிர்வாகிகள் வாரத்தில் ஆறு நாட்கள் கூடி, தலாக் போன்ற பிரச்சினைகளில் ஆண்களை மட்டும் விசாரணை செய்கின்றனர். ஆனால், பெண்களின் கருத்தாடல் அங்கே புறக்கணிக்கப் படுகின்றது. அதனால் இந்தத் தீர்வுகள் ஒரு பக்கச் சார்புடையவை; பெண்களையும் பெண்களைக் கொண்டே விசாரணை செய்து, அவற்றின் விவரங்களைப் பெற்றுத் தீர்ப்புச் செய்வதே நல்லது என்பதை முன்வைத்தார். இந்தப் பரிந்துரை பலரால் வரவேற்கப்பட்டது; எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டியது என நிர்வாகிகளால் உறுதியளிக்கப்பட்டது.
  • பேரசிரியர் அப்துல் காதர் தனது உரையின்போது, நமதூர் மக்கள் உள்ளூரில் இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு, 'ஷிஃபா மருத்தவமனை, காதிர்முகைதீன் கல்வி நிலையங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார். இது பற்றிய கருத்துரையில், சகோதரர் ஒருவர் தனது ஆட்சேபனையைப் பதிவு செய்தார். தன் மகளை நிறைமாதக் கர்ப்பிணியாக ஷிஃபாவில் சேர்த்தபோது, அங்கிருந்த மகப்பேறு மருத்துவர் நடந்து கொண்ட விதத்தைக் கடுமையாக விமரிசித்தார்.
  • சங்கத்தின் அறிவிக்கை ஒன்றில், சங்கக் கட்டிட நிதி வசூலாக ஒவ்வொரு வீட்டினரும் கட்டாயம் இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர் அப்துல் காதர், அந்த இருநூறு ரூபாய் என்பது மிகவும் குறைந்தது; அதனால், அந்தத் தொகையைக் கூட்டி அறிவிக்க வேண்டும் என்பதைத் தமது சொந்தக் கருத்தாக எடுத்து வைத்தார். பலர் அதற்கு மாற்றமான கருத்துகளை வெளியிட்டனர். முடிவில், தொகை குறிப்பிடாமல், கூடுதலோ குறைவானதோ, எதுவாயினும் அவர்கள் நன்கொடையாகத் தருவதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகக் கோரினர். அதையே பொதுக்குழுவும் ஏற்றுப் பரிந்துரைத்தது.
  • விரைவில் நடக்கவிருக்கும் பேரூராட்சித் தேர்தலில் நமது பகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சங்கத்தின் அனுமதியையும் ஆதரவையும் பெற்று எதிர்ப்பின்றித் தேர்வு பெறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு நம் சங்கம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற பரிந்துரை மற்றொரு சகோதரர் ஒருவரால் வைக்கப்பட்டு, அது ஒருமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • ஊரின் கட்டிடப் பணிகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை, அதற்கான காரணங்களுடன் விரிவாக விளக்கி சகோதரர்ஒருவர் பேசி, அதற்காக சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சம்மந்தப்பட்டவர்களிடம் அதனை அமுல் படுத்துமாறு கோரவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அமர்வில் கலந்துகொண்ட அனைவரும் இதனை வரவேற்றனர்.
  • சங்கத்தின் திருமணப் பதிவேட்டிற்கு மாற்றமாகச் சிலர் தனித்தனிப் பதிவேடுகள் வைத்திருப்பது பற்றியும், அப்படி வைத்திருப்பவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்னொரு சகோதரர் கருத்தறிவித்தார். "அப்படிச் செயல்படுவோர் உங்கள் உறவினர்களாக இருந்தால், அவர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பீர்களா?" என்ற கேள்வி சங்க நிர்வாகிகளால் எழுப்பப்பட்டபோது, "நிச்சயமாகப் புறக்கணிப்போம்" என்று பலர் குரலெழுப்பினர்.

இவை போன்ற இன்னும் பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன. கூட்டம் நிறைவடையும் தருவாயில், சங்கக் கட்டிடப் பணிக்காக யார் யார் எவ்வளவு தர முடியும் என்ற கணக்கெடுப்பும் நடந்தது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டம் எழுச்சியும் ஆர்வமும் பொங்க உறுப்பினர்களுள் பெரும்பாலோர் கலந்துகொண்டு, ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, சங்க நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துவிட்டது குறிப்பிடத் தக்கதாகும்.

அனலாய் எரித்தெடுக்கும் வெயிலைத் தணிக்கும் விதத்தில், இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இரண்டு முறை குளிர் மோரும் தண்ணீரும் வழங்கியதைப் பொதுக்குழு உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

நிறைவாக, அஹ்மது இப்ராஹீம் ஆலிமவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே முடிந்தது.

தகவல் : முஹம்மத்

5 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இனிதே நடந்து முடிந்த கூட்டம் போல இனி எடுக்கும் முடிவுகளனைத்தும் எல்லாரும் ஏற்கக்கூடியதாக (இனிதாகவே) இருக்கட்டும்.ஒத்துழைப்போம்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

நல்ல பகிர்வு.

//•சங்கத்தின் திருமணப் பதிவேட்டிற்கு மாற்றமாகச் சிலர் தனித்தனிப் பதிவேடுகள் வைத்திருப்பது பற்றியும், அப்படி வைத்திருப்பவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்னொரு சகோதரர் கருத்தறிவித்தார். "அப்படிச் செயல்படுவோர் உங்கள் உறவினர்களாக இருந்தால், அவர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பீர்களா?" என்ற கேள்வி சங்க நிர்வாகிகளால் எழுப்பப்பட்டபோது, "நிச்சயமாகப் புறக்கணிப்போம்" என்று பலர் குரலெழுப்பினர்.//

மேல் சொல்லப்பட்ட புறக்கணிப்பு விவகாரம், மார்க்கத்துக்கு விரோதமான திருமணங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

வரதட்சனை வாங்கும் திருமணத்திற்கு சங்க பதிவு புத்தகம் செல்லக்கூடாது என்பதில் ஏனோ நம் அதிரை சங்கங்கள் தயங்குகிறது..

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

புது நிர்வாகம் !
புது கட்டிடம் !
புது உறுப்பினர்கள் !

எல்லாமே புதியதாக இருக்கும் பட்சத்தில் !

பழமையே பஞ்சாங்கமென்று... இருந்திடாமல் சூழலுக்குத் தகுந்த முடிவுகளும் (யாவும் மார்க்கக் கட்டுக்குள்) பாராபட்சமின்றி நடப்பதிலும், உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிறப்புடன் செயல்கள் தொடர்ந்திட வாழ்த்துகிறோம் !

அதிரைநிருபர் பதிப்பகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நம் சங்கத்தின் பொதுக் கூழு கூட்டப்பட்ட செய்தியை அதிரை நிருபரின் மூலமாக அறிந்தோம்; மகிழ்ச்சி! ஒற்றுமையும், கட்டுப்பாடும், கூட்டு வாழ்க்கையும் இஸ்லாம் போதிக்கின்ற முக்கிய அம்சங்கள். இறை நம்பிக்கையாளர்களிடையே இருக்க வேண்டிய நறபன்புகள். இப்பன்புகள் நம்மிடையே மேலோங்க அல்லாஹ் அருள் புரிவானாக!

மேலும் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இறையச்சத்தோடு அமைத்துக்கொள்ளும் போது அல்லாஹ்வின் உதவியும், மக்களின் ஆதரவும் நிச்சம் கிடைக்கும்.

பொதுவாகவே நம் கூட்டு வாழ்க்கை பலப்பட வேண்டுமெனில் ஏழை பனக்காரன் என்ற ஏற்றத் தாழ்வில்லாமல்; குடும்பம், கோத்திரம், பாரம்பரியம் என்று பாகுபாடு பேசித் திறியாமல் அனைவரையும் சமமாகப் பாவித்து அனைத்து தரப்பு மக்களின் நன் மதிப்பையும் சங்கமும், சங்க நிர்வாகிகளும் பெற வேண்டும். அப்போதுதான் தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக்க்கொள்ள சங்கத்தை நோக்கி அனைவரும் வருவார்கள் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.

இங்கே கடந்த காலத்து சங்கத்தின் செயல்பாடு ஒன்றை மேற்கோல் கட்ட விறும்புகிறேன். அதாவது வரதட்சனை திருமனங்களுக்கு ஆதரவு கொடுத்து வரதட்சனை இல்லாத மேலும் சுன்னத்தான முறைகளிலே நடத்தப்படுகிற திருமனங்களுக்கு ஆதரவு கொடுக்காமை!? இச்செயல் நிச்சயமாக நகைப்புக்குறியதே. எனவே புதிய நிர்வாகம் இது போன்ற செயல்களில் பழையபடி இறங்கிவிடாமல் எழுச்சியோடு செயல்பட வேண்டும் என்பதே நல்லுள்ளம் கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

எனவே, சங்கம் தனது செயல்பாடுகளை இஸ்லாத்திற்கு உட்பட்டு, இந்திய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு போதும் தீமைக்கு துணை போய்விடக் கூடாது. சங்கத்தின் செயல்பாடுகள் மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்தும் முகமாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாகவும் அமைய வேண்டும். ஒரு குறுகிய செயல்பாட்டுத் திட்டத்தோடு தங்களுடைய பனிகளை சுருக்கிக்கொள்ளாமல் விரிவான செயல்பாட்டுத் திட்டங்களோடு செயல்பட வேண்டும்.

உதாரனத்திற்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது;

அரசாங்கம் அறிவிக்கும் நலத் திட்டங்களை உறியவர்களுக்கு பெற்றுத்தர வழி வகை செய்வது.

மக்களின் கல்வித் தரத்தை உயர்த்த புதிய வியூகங்களை வகுத்து செயல்முறைப் படுத்துவது.

குர்'ஆன், சுன்னாஹ் அடிப்படையில் மக்களுக்கு போதனை செய்ய ஏற்பாடுகள் செய்வது போன்ற பல தரப்பிலும் சங்கம் செயலாற்றி அல்லாஹ்வின் திருப் பொறுத்தத்தையும், மக்களின் நன் மதிப்பையும் பெற வேண்டும். அல்லாஹ் அருள்புரிவானாக!

முஃமின்களே! ... இன்னும் நன்மையிலும், இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; மேலும் பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கட்மையாகத் தண்டிப்பவன். - அல் குர்'ஆன் 5:2

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம'அஸ்ஸலாம்
அன்புடன்
அபு ஈசா

chinnakaka சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.