இப்படியுமா இருப்பாய்ங்க !?

ஆர்ப்பரிக்கும் சூடு அளவுக்கு ஏற்ப புழுதிக் காற்று அணிந்திருக்கும் மேலாடையின் கழுத்துப் பகுதிப் பக்கம் அழுக்கென்று ஏதும் படியாத வேர்வை இப்படியாகத்தான் இன்றைய பொழுதோடு உழன்றோடினேன்.

நிற்க !

நேற்றைய முன் தினம் எனக்கு ஒரு அவசரத் தேவையிருந்ததால் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன், அதன் பின்னர் எங்கள் அலுவலகத்திலிருக்கும் ஸ்கேனர் மற்றும் ஃபேக்ஸ் மெஷின் திடீரென்று வேலை நிறுத்தம் செய்து மல்லுக் கட்டியிருக்கிறது அதனை இணைத்திருக்கும் நெட்வொர்க்கிலும் வேலை செய்யவில்லை. வழக்கமாக இப்படியாக ஏதும் நிகழ்ந்தால் சட்டை பொத்தான் தைக்க வீட்டில் வைத்திருக்கும் ஊசி நூல் போல் என்னை அவ்வப்போது கூப்பிட்டு குத்திப் பார்க்க வைத்து விடுவார்கள் அதென்னமோ கைவைத்ததும் சிக்கலுக்கு விக்கல் வந்து ஓடிடும், ஆனால் அன்று நான் இல்லாததால் சொந்தமென்று சொல்லி முதலாளியால் சேர்க்கப்பட்ட ஒரு மேலாளர் அதனை தட்டிப் பார்த்திருக்கிறார் குட்டிப் பார்த்திருக்கிறார் வேலை நிறுத்தம் வாபஸ் இல்லை என்று தெரிந்ததும் அதனை சர்வீஸ் செய்ய அந்தக் கம்பெனியினுடைய இன்ஜினியரை அழைத்திருக்கார் அவரும் நாளை வருவதாகவும் சொல்லிவிட்டார்.

சரி !

அடுத்த காலை வழக்கமாக வேலைக்குச் சென்ற நான் முதலில் என் கண்ணில் பட்டது அந்த ஸ்டிக்கர் "தொடாதே" அதாவது do not touchன்னு ஒரு பஞ்ச் இருந்திச்சு என்ன இது என்று அருகிலிருந்தவரிடம் கேட்டேன் அவரும் "நேற்றையிலிருந்து வேலை நிறுத்தம் செய்கிறது பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதி இன்று வருவாராம்" என்றார் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே!

நானும் அமைதியாக வழக்கமான வேலையில் ஈடுபட கவனத்தை மாற்றிக் கொண்டு சென்றேன் என் இருக்கைக்கு. காலை பதினொன்று மணிக்கு வந்தார் அந்த பழுதுபார்க்கும் பொறியாளர் !!! அவரின் முதல் வருகை என்பது எனக்குத் தெரியும் இருப்பினும் மவுனம் காத்திருப்போம் என்று இருக்கைக்கு திரும்பாமல் அவரருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

முதலில் அவர் செய்தது ஆன் செய்திருந்த அந்த ஃபேக்ஸ் மெஷினை ஆஃப் செய்தார் அப்புறம் சொருகியிருந்த அனைத்து கேபிள்களை கழட்டினார்... கழட்டிய கேபிளின் நுனியை வாயருகில் கொண்டு வந்து ஃப்பூ ஃப்பூ ஃப்பூ என்று ஊதினார் அப்புறம் ஒவ்வொன்றாக திரும்பவும் உருவிய இடத்திலேயே சொருகினார் அதனைத் தொடர்ந்து ஃபேக்ஸ் மெஷினை ஆன் செய்தார். ம்ம்ம்ம்ம்ஹும் மல்லுக்கட்டிய மெஷின் மறியலை திரும்பப் பெறவில்லை.

அவரும் சற்று யோசித்து விட்டு தனது லேப்டாப்பை எடுத்தார் அவசரமாக ஆன் செய்தார், அதிலிருந்து ஒரு யுஎஸ்பி கேபிளை எடுத்து மெஷினோடும் லேப்டாப்போடும் இணைத்துக் கொண்டார், நானும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன் அவரது லேப்டாப்பில் இருக்கும் ஃபோல்டர்களை திறப்பது மூடுவதும் அதனுள்ளே இருக்கும் ஃபைல்களை மாறி மாறி காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் மீண்டும் ஃபேக்ஸ் மெஷினை ஆன் செய்தார் எந்த முன்னேற்றமும் இல்லை...

உடனே சர்வீஸ் ரிப்போர்ட் புக்கை எடுத்தார் நிறைய எழுதினார் அப்புறம் மேனேஜரிடம் சென்று கையெழுத்து வாங்கி விட்டு சென்றும் விட்டார். ஆனால் மெஷின் வேலை செய்யவில்லை என்று அலுவலகத்தில் முடிவும் செய்யப்பட்டுவிட்டது.

நானும் சாதரணமாக ஃபோக்ஸ் மெஷின் பக்கம் சென்றேன் பளிச்சென்று தெரிந்த error என்ன வென்று தெரிந்ததும் மூன்றடுக்கு தகடுபோலிருந்த டிரேயில் ஒன்றை கழட்டிவிட்டு அங்கிருந்து சிறிய காகிதத் துண்டு ஒன்றை வெளியில் எடுத்து விட்டு மீண்டும் மாட்டினேன் மெஷின் வேலை செய்யத் துவங்கியது.

அப்புறம் அந்த சர்வீஸ் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தேன் அதில் எழுதியிருந்தது "system error, hardware problem, parts need to change" என்று பட்டியல் நீண்டது அதாவது மாசா மாசம் தஞ்சாவூர் பட்டுக்கோட்டைக்கு போயி டாக்டரிடம் வாங்கி வரும் மருந்துச் சீட்டில் எழுதியிருக்கும் மாத்திரைகள் போல் நீண்ட லிஸ்ட் !

ஆனா ஒரு விஷயம் புரிந்தது ! களிமண்ணு வைத்தும் அடுக்குமாடிகள் கட்டலாம் அங்கே மழை பெய்யாத வரை என்று !

இப்படியுமா இருப்பாய்ங்க !?

- அபுஇபுறாஹிம்

10 கருத்துகள்

ZAKIR HUSSAIN சொன்னது…

மறக்காமெ அந்த ஆளை படம் புடிச்சி அனுப்புங்க...இது மாதிரி ஆட்கள் எல்லாம் ஜப்பான் , கொரியா மாதிரி இடங்களில் வேலை பார்த்தால் செயற்கை சுனாமி வரவழைத்து சாவடிச்சிடுவானுங்க..

சிங்கப்பூரில் முன்பு PR கார்டுக்கு இது போன்ற டுபாக்கூர் பேர்வழிகள் தன்னை டாக்டர் என்று அறிமுகம் செய்து [ அட்டு சர்டிபிகேட் உடன்] வந்தது. சிங்கப்பூரில் ஒரு இலை மரத்திலிருந்து கீழே விழுவதானாலும் அரசாங்க அனுமதி இல்லாமல் விழமுடியாது . பிறகு சிங்கப்பூரின் மெடிக்கல் கவன்சில் இந்தியாவில் செக் பண்ணும்போது இவர்கள் கம்பவுன்டருக்கு கூட படிக்கவில்லை என தெரிந்தது...இப்படியும் இருக்கானுங்க

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அசத்தல் காக்கா, இன்னொன்று சொல்ல்றேன் அவர் அந்தன்னைக்கு லேட்பாப் ஆன்செய்து கொண்டே..

"வயர்லெஸ் இருக்கா" என்றார் நானும் "இருக்கு" என்றேன்..

அப்புறம் "IT டிபார்ட்மெண்ட் யாரும் இருக்காங்களா?" என்றும் கேட்டார்

நான் "ஹெட்டாஃபிஸ்லா இருப்பாங்க"ன்னு சொன்னேன்..

அவரும் "சரி சரி வயலெஸ் இருக்கு நான் பார்த்த்துக்கிறேன்னு சொல்லிட்டு வேலையைத் தொடர்ந்தார் !!

வயர்லெஸ்ஸூக்கு செக்யூரிட்டி பாஸ்வேர்ட் இல்லாமலே வேலை செய்வதுபோல் என்னிடமே அவர் பாவனை செய்தது என்னமோ என்னை "கனிமொழிக்காக வாதாடிய வக்கீலாக நினைச்சு இப்படி செய்திருப்பாரோ என்று தோணிடுச்சு அப்படியே அசந்துட்டேன் காக்கா !!!"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

சூப்பர் காக்கா [ஊசி முனையிலும் நுணுக்கமறியும்] நீங்களும்,
உங்க கம்பெனிக்கு வாய்ச்ச இத்துப்போன இஞ்சினியரும்.

அப்துல்மாலிக் சொன்னது…

காக்கா இதுமாதிரி பார்த்ததும் அனுபவித்ததும் 10க்கு மேல் தொடர் எழுதலாம். இந்த மண்னாப்போறவங்க அவன் சொன்னதைதான் வேதவாக்கா நெனச்சு என்னாவேணாலும் செய் எனக்கு மெஷின் வேலை செய்யனும் என்று சொல்லும் டேமேஜர்களும் உண்டு. கஸ்டமர் சப்போர்ட் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கு, அது ஒரு மெகாசீரியல் மாதிரி ஒரே ஜோக்கா இருக்கும். நீங்க செய்ததை ஹெட் ஆஃபீஸுக்கு சொன்னாலும் நம்பாமல் அந்த இஞ்சீனியர் சொன்னதுதான் சரி என்றும் வாதாடுவார்கள்

sabeer.abushahruk சொன்னது…

எல்லாவற்றிலும் டேட்டா லிங்க்கை செறுகி ஜோஸியம் பார்த்துடறாங்க.

நீங்க அந்த காகிதத் துண்டை எடுக்கப்போய் பல கரன்ஸி காகிதத் துண்டுகள் தப்பிச்சிச்சு.

இங்கு சில டாக்டர்களும் பேஷன்ட்டையே தொடாமல் ஃபைலைப் பார்த்தே மருந்து எழுதிடறாங்க.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

இது போன்று லாஜிக் இல்லாத மேஜிக்குகளே அதிகம்.

சகோதரர் மாலிக் சொல்லுவது போல் 10 தொடர்க்கு மேல் ஜொக்காக எழுதலாம் அன்றா அலுவலக நிகழ்வுகளை.

மர்மயோகி சொன்னது…

அபு இபுராஹீம் யாருடைய அனுபவத்தையோ தன் அனுபவம் போல் எழுதிருக்கிறார் என்றே தோன்றுகிறது..
அப்புறம் வயர்லெஸ் இன்டர்நெட்டுக்கு செக்யுரிட்டி பாஸ்வர்ட் இல்லாமல் வேலை செய்ததாக பாவ்லா பண்ணியதாக சொல்வதுகூட - கவுண்டமணி வயர் கட் பண்ண போனில் பேசுவதின் - உல்டா என்றே நினைக்கிறேன்..
ஹ்ம்ம் இப்படியும் இருக்கிறார்கள்தான்..

Shameed சொன்னது…

இதுபோல் நடை முறையில் எல்லோருக்கும் தினமும் நடக்கும் நிகழ்ச்சி தான் அதை அழகா தொகுத்து தந்தது தான் ஹை லைட் இதை போய் உல்டா சுல்ட்டா என்று சொல்வதுதான் புருடா !

Yasir சொன்னது…

எல்லா ஆபீஸ்லையும் நடக்கும் நிகழ்வு,வெவ்வேறு தருணங்களில் விதவிதமாக..அதை தொகுத்தளித்த விதம் எப்போதும் போலவே கண்முன் கொண்டுவந்து காட்டியது...இது உங்களுக்கே உரிய பாணி..இவனுங்க எப்போதும் இப்படிதான்.....

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//Shameed சொன்னது…

இதை போய் உல்டா சுல்ட்டா என்று சொல்வதுதான் புருடா !//

:) :) :)