அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை: முதல்வராகிறார் ஜெயலலிதா!

தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடைசிகட்டத்தை எட்டி முடிவுகள் நிறைவுக்குள் வரும் நிலையில், அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது..

மூன்றாவது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

தனது கூட்டணி கட்சிகளின் உறுதுணையின்றி, தனித்து ஆட்சியமைக்கக் கூடிய அளவில் தனிப் பெரும்பான்மையை பெறுகிறது, அதிமுக.

வரும் 15-ம் தேதி சென்னை - கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே, முதல்வர் கருணாநிதி தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, தனக்கு மக்கள் ஓய்வு கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.

அதிமுகவுக்கு எழுச்சி தந்த 'சாதகங்கள்'!

* திமுக குடும்ப அரசியல்.

* முஸ்லீம்களின் ஆதரவு...

* தேமுதிகவுடன் கைகோர்த்த காரணத்தால் கிடைத்த வாக்கு வங்கி.

* பொதுவாகவே ஆளும் அரசு மீது மக்களுக்கு ஏற்படும் இயல்பான அதிருப்தியும் ஏமாற்றமும்.

* கவனத்தை வெகுவாக ஈர்த்த தேர்தல் அறிக்கை.

* தைரியமான பெண்மணி, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை.

இப்படியான சாதகங்கள் வலு பெற்றதால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது அதிமுக அணி!

திமுக-வை வீழ்த்திய 'பாதகங்கள்'!

* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். அது குறித்த மக்களின் விழிப்பு உணர்வு.

* படித்தவர்கள் மத்தியில் கருணாநிதி மீதான வெறுப்பு.

* குடும்ப ஆதிக்கம்.

* ஈழ விவகாரத்தில் கருணாநிதியின் செயல்பாடு.

* தமிழ் ஆர்வலர்களின் காங்கிரஸ் வெறுப்பு.

* ஓயாத மின் வெட்டு.

* கடுமையான விலைவாசி உயர்வு.

* தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி.

இவை போன்ற மக்களை எளிதில் வெறுப்புக்கு ஆளாக்கவல்ல பாதகங்களே திமுக கூட்டணி மண்ணைக் கவ்வுவதற்கான சூழலை ஏற்படுத்திவிட்டது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

ஜெயலலிதா: பயோ-டேட்டா

பிறந்த தேதி : பிப்ரவரி 24,1948 (வயது 63)

பிறந்த இடம் : மேல்கோட்டை மைசூர், கர்நாடகா

வசிப்பிடம் : சென்னை

பூர்விகம்: திருச்சி மாவட்டத்தின் ஸ்ரீரங்கம்

முன்னாள் தென்னிந்திய திரைப்பட நடிகையான ஜெயலலிதா, ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமானார்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அரசியலில் நுழைந்தவர், அ.தி.மு.க.வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1989-ம் அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

கடந்த 1989 முதல் 1991 வரை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தார். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் மே 12, 2006 வரையிலும் தமிழக முதல்வராக வலம் வந்தார். 2006-ல் இருந்து 2011-வரை மீண்டும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரானார்.

தற்போது நடந்து முடிந்தத் தேர்தலில், அதிமுக கூட்டணியின் எழுச்சியால் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளார்!


8 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

முதலில் வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் !

முஸ்லீம்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முன்னிருத்தி, அதற்கு செயல் வடிவம் விரைவில் கொடுப்பார் என்று எதிர்பார்ப்போம் அதற்க்கான நினைவூட்டலை அதன் தோழமைக் கட்சியான ம.ம.கா. வெற்றி பெற்ற உறுப்பினர்கள் செய்து கொண்டிப்பார்க்கள் என்றும் நம்புவோம்.

மனித நேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும் மற்றும் அஸ்லம் பாஷா அவர்களுக்கும் எங்கள் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ம.ம.க.வின் தனித் தன்மை எவ்வகையில் பழுதுபடாமல் களம் கண்டிடவும் நம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை மென்மேலும் பலப் படுத்தா பாடுபடவேண்டும் என்பதும் எங்கள் அவா !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

ஆஹா!சரியான நேரத்தில் சரியான தகவல்கள்.
மைசூர் மகாராணி முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்குறுதியைவிட அதிகமாக செய்ய வாழ்த்துக்கள்
.திருவாரூர் ராஜா நல்லா ஓய்வெடுங்கள்.அடுத்த ஐந்தான்டில் மீண்டும் பிடிக்கலாம் ஆட்சியை நிச்சயம்
.நம் இஸ்லாமிய MLA க்கள் முழுமையாகப்போராடி பெறவேண்டும் நம் உரிமையை.
நம் வாக்களர்கள் மாறிமாறி பிழைக்க வாய்ப்பு கொடுக்கும் நல்லுள்ளங்கள்

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். இப்ப நான் முன்பு எழுதின கருத்துக்கணிப்ப திரும்பி பார்கவும். ஜெ.தனி மெஜாரிட்டி வரவும் சாத்தியம் என குறிப்பிட்டிருந்தேன். அதற்கு தம்பி இர்ஸாத்கூட மறுப்பாய் சான்சே இல்லைன்னு எழுதியிருந்தார். இதிலிருந்து சொல்லவற்ற விசயம் இதுதான். கிரவுன் ஒருதடவ சொன்னா எல்லாம் சரியாதான் இருக்கும். ஹஹஹ்ஹஹஹஹ்ஹஹ்.

அப்துல்மாலிக் சொன்னது…

தேர்தல் முடிவு மக்களின் ஆதரவு அதிமுக வுக்கு இல்லை, மாறாக திமுக விற்கு எதிரான மக்களின் மவுனப்புரட்சியே. தமிழ்நாட்டின் தலைவிதி இந்த இருவேறு கட்சிகள் தான் என்றாகிவிட்டது. ஜெ இனிமேலாவது சுதாரித்து பலிவாங்கும் படலத்தை ஒத்திவைத்துவிட்டு நாட்டுமக்களின் தேவையறிந்து, மதவெறி கொள்கையிலிருந்து விலகி நல்லாட்சி நடத்தினால் நிச்சயம் மக்களுக்கு பிடித்ததாகவே அமையும், புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்

Meerashah Rafia சொன்னது…

அரசியல் குறித்து கண்ணதாசன்

தங்களது துயரங்களை தாங்களே தேடிக் கொள்வதற்கு, மக்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பே தேர்தல்.

ஜனநாயகத்தில் மிக விசேஷமான ஒரு அம்சம், அது, ஜனங்களுக்கு சம்பந்தமில்லாதது என்பது தான்!

ஆட்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையில் விட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவனை குறை சொல்வது தான் ஜனநாயகம்.

ஆழமான கிணற்றில் நீர் எடுக்க நீளமான கயிறு வேண்டும்; அழுத்தமான ஜனங்களை திருத்தியமைக்க அறிவுள்ள தலைவன் வேண்டும்.

பணமும், பதவியும் மோசமானவையென்று ஞானிகள் ஏன் கூறினர்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால்; கிடைக்க கூடாதவனுக்கு கிடைப்பதால்.

சுடத் தெரியாதவன் கையில் துப்பாக்கி இருந்தாலும், சுடத் தெரிந்தவனும் அவனிடம் சரணடைகிறான்.
ஆட்சி ஒரு முட்டாளின் கையில் இருந்தால், அறிவுள்ளவனும் அவனுக்கு தொண்டானாகிறான்.

விதை இல்லாமல் புல் முளைக்கிறது; வேரில்லாமல் ரோமம் முளைக்கிறது. விதையும், வேருமில்லாமல் அரசியல் முளைக்கிறது.

நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை திருப்தி செய்வதை தர்மம் ஒப்புக் கொள்ளாது. ஜனநாயகம் ஒப்புக் கொள்ளும்! காரணம், கட்சிகள் சேர்ந்து அரசு அமைப்பதை அது ஒப்புக் கொள்கிறதே!

அரசியலில், "நா'ணயத்தை இழந்தால் தான் குடும்பத்திற்கு, "நாணய'த்தை சேர்க்கலாம்; ஒரே வார்த்தைக்கு இரு பொருள் வைத்தது எவ்வளவு சுகமாக இருக்கிறது.

இந்திய ஜனநாயத்தை பற்றி எவ்வளவோ பேர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்; நானோ அதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்!
அடடா... ஒரு சடலம் எவ்வளவு நாளாக அழுகாமல் இருக்கிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

தேர்தல் முடிவு மக்களின் ஆதரவு அதிமுக வுக்கு இல்லை, மாறாக திமுக விற்கு எதிரான மக்களின் மவுனப்புரட்சியே. ஜெ இனிமேலாவது சுதாரித்து பலிவாங்கும் படலத்தை ஒத்திவைத்துவிட்டு நாட்டுமக்களின் தேவையறிந்து, மதவெறி கொள்கையிலிருந்து விலகி நல்லாட்சி நடத்தினால் நிச்சயம் மக்களுக்கு பிடித்ததாகவே அமையும், புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்.

மமக 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ளது.

அதிமுக கூட்டனியில் இருக்கப்போகும் 5 ஆண்டுகளில் இக்கட்சியின் செயல்பாடுகளே இவர்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும்.

மமகவின் மாற்று அரசியல் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Shameed சொன்னது…

//தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி//

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி என்பதைவிட தேர்தல் ஆணையத்தின் நேர்மையான கெடுபிடிஎன்று சொல்லலாம்

Yasir சொன்னது…

புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்...மக்களின் அதிருப்திதான் இப்படி ஒரு சுனாமியை உருவாக்கி கலைஞர் அரசை கவிழ்த்து இருக்கிறது....வரக்கூடிய ஆட்சியாளர்கள் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மக்களின் தேவைகளை செய்வார்கள் என்று நம்புவோம்