Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெந்நீர் ஒத்தடம் - இரண்டாம் பாகம் 20

அதிரைநிருபர் | December 05, 2011 | , , ,

இந்தப் பதிவை வாசிக்கும் முன், இந்தச் சுட்டியைச் சொடுக்கி எனது ‘வெந்நீர் ஒத்தடம் – 1”ஐ வாசித்தீர்களேயானால் ‘முதல் பக்கங்கள் கிழிந்துபோன பழைய நாவல் படிக்கும்’ அயர்ச்சி நேராமல் தவிர்க்கலாம். 

என் வலது கை சுட்டு விரலைப்பற்றிப் புகழ்ந்து நானே சொன்னால் நல்லாயிருக்காது. அவ்வளவு அழகாக இருக்கும்.  வெண்டைக்காயைப் போல நீண்டு, ஆர்டர் கொடுத்து செதுக்கி வாங்கியதுபோல கவர்ச்சியாய் மிருதுவாய் இருக்கும்.  கொஞ்சம் மருதாணி இட்டு நகத்தின் நுனியை பிறைபோல நருக்கி ரோஸ் நிறத்தில் நகச்சாயம் பூசிவைத்தால், கூரான கிருதா வைத்த இளைஞர்கள் வந்து பொண்ணு கேட்கும் அளவுக்கு அம்சமாயிருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 அப்படியாகப்பட்ட என் செல்ல விரல் ஒரு நான்கு மாதங்களாக என்னைப் பாடாப் படுத்தி எடுத்துவிட்டது. ‘சொந்தக்கதை சோகக்கதையையெல்லாம் எங்களுக்கு ஏன்யா சொல்ல வந்தே’ என்றெல்லாம் கேட்கப்படாது.  என் அனுபவம் ஒரு பாடம் என்பதால், தொட்டுப்பார்த்துதான் தீ சுடும் என்று அறிய வேண்டியதில்லை அல்லவா? அதுபோல உங்களுக்கு ஏதும் எனக்கு நேர்ந்தமாதிரி நடந்துவிடக்கூடாது எனும் நல்லெண்ணமும் அக்கறையும்தான்.

இனி என் அனுபவங்களோடு தொடருவோம்.

 ஓர் அடையாளம் நினைவில்லாத காலைப்பொழுதில் வழக்கம்போல் தானாக எழுந்துவிடும் என்னைத் தட்டி எழுப்பியது வெற்றி என்ற வலி (விண்ணென்று வலித்ததாய் ஆங்கிலக் கலப்போடு எழுத என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம்).

தூக்கத்தில் எப்படியோ சுட்டுவிரலின் (சுண்டுவிரலல்ல) நுனி மூட்டில் வலித்ததால், பினாங்குக்காரவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து ரோகத்துக்கும் கைகண்ட நிவாரணியாக அனைத்து இயக்கங்களாலும்(?) ஏற்றுக்கொள்ளப்பட்ட கோடாலித்தைலத்தை தடவவும் வலி அசடு வழிந்து, எங்கும்மா சொல்வதுபோல் “நீ இரு நான் போறேன்னு” போச்சு. போயிந்தி. சலா கயா. இட்ஸ் கான் மேன்!
வளவளக்காமல் நடந்தவற்றை பட்டியலிட்டுவிடுகிறேன்.

டாக்டர் நம்பர் 01: சாட்ஷாத் நானேதான். வலிக்கும்போதெல்லாம் வருடுவது, தைலம் தேய்ப்பது என்று விரலை ஏய்த்தே 2 மாதங்களைக் கடத்தி விட்டேன்.  ஒவ்வொரு முறையும் ஆஃப்டர் ஆல் ஒரு விரலின் நுனிதானே என்று அலட்சியப்படுத்தியும் வந்தேன்.

டாக்டர் நம்பர் 02: என் மச்சானின் மகன். என் உம்மாவின் கட்டளைக்குட்பட்டு (கோடாலிச்சாப்புக்கே கேக்கலேன்னா இது சுலுக்குத்தான். ரெட்டப்பிள்ளை வழிச்சி விட்டா சுலுக்குப் போயிடும் வாப்பா) என் விரலைப்பிடித்து,

 “அன்னிக்கு பரீட்சைல 5 மார்க் குறைஞ்சதற்கு சத்தம் போட்டியல்ல சாச்சா” 

என்பதுபோலொரு பார்வையைக் கண்ணில் தேக்கி, என் விரலை நசுக்கியும் பிதுக்கியும் இழுத்தும் வழைத்தும் விரலைத் தவிர மற்ற என் உடம்பு முழுவதிலும் இருந்து சுலுக்கு எடுத்து விட்டான்.  அவன் சிகிச்சை முடிந்து கிருத்தியாக 2 மணி நேரம் கழித்து என் விரல் நுனி, சொல்லவே வேதனையாக இருக்கிறது, அந்தக் காலத்திலே சுடப்படும் போலீஸ் பனியான் மாதிரி உப்பி, விரலுக்கேத்த வீக்கமெனும் கோட்பாடுகளையெல்லாம் கடந்து வீங்கி பளபளவென வெடிக்கக் காத்திருக்கும் பலூன் போல மாறிப்போய்விட்டிருந்தது. பக்கத்திலே சிறுவர் சிறுமியர் யாரும் இருந்திருந்தால் வெடித்தும் காட்டியிருக்குமோ என்னவோ. (சிறுவர்களிடம் வெடிக்காத பலூனும் சண்டையிலே கிழிபடாத சட்டையும் எந்த ஊர்லே இருக்கு).

டாக்டர் நம்பர் 03: என் மாமி.

உம்மா பயந்து போய், வழக்கம்போல அழுது,  தன் கைகண்ட வைத்தியரான என் மாமியிடம் ‘ரோசனை’ கேட்க, அந்தகால ப்ளஸ் 2வாகிய மாமி, தன் டிஃபால்ட் நிவாரணங்களில் ஒன்றான மஞ்சளை வைத்து கட்டி, “காலைல சரியாயிடும், போய்ப் படுங்க மருமகனே” என்று சொன்னார்கள்.

வலி நிவாரணி ஏதும் எடுத்துக் கொள்ளாததால் இரவு முழுதும் “வெற்றி, வெற்றி” என்று வலித்ததால் தூங்காமல் இருந்தவனை காலையில் உம்மா எழுப்பினார்கள்!?. மஞ்சத்தில்! படுத்திருந்த… அதாவது மஞ்சளில் படுத்தி வைத்திருந்த என் விரல் நுனி மசாலாவில் ஊரிய ரால் மாதிரி மவுனமாக அழுதுகொண்டிருந்தது.  இதுக்குமேல் வைத்துக்கொண்டிருக்கக்கூடாது என்று சுயேட்சையாக தீர்மானித்த உம்மா உடனே என் விரலைக் காரில் ஏற்ற நானும் கூட போகவேன்டியதாயிற்று.

டாக்டர் நம்பர் 04: எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான டாக்டர் ராஜூ அவர்கள்: நானும் உம்மாவும் ஒன்றாகப் போக, 

“நேத்துத்தானே வந்திய, இப்ப என்ன?” என்று கேட்க, “எனக்கில்ல வாப்பா (எங்கம்மவுக்கு எல்லா ஆண்களும் பாசம் மிக்க ‘வாப்பா’ தான்) என் பிள்ளைக்கு” என்று விரலைப் பிடித்து காட்டினார்கள்.  டாக்டர் மேலே சொல்லப்பட்டக் கதையெல்லாம் கேட்டுக்கொண்டே அனிச்சையாக மூன்று நாட்களுக்கு ஆன்ட்டி பயாட்டிக்கும் சூ.பட்டையிலே ஓர் ஊசியும் போட்டுவிட்டு கடமையே கண்ணாயினார்.  விடுமுறையும் முடிந்துவிட்டதால் மேற்கொண்டு அவரிடம் காட்ட முடியாமல் (நான் ஊசி போட்ட இடத்தைச் சொல்லவில்லை) திரும்பி ஷார்ஜா வந்துவிட்டேன்.

அதற்குப்பிறகு என் விரல் என்ன நினைத்ததோ, நாணம் கொண்ட மணப்பெண்போல தலை சாய்த்ததைக் கண்டு பயந்துபோய் இங்குள்ள டாக்டரை அண்டினேன்,

டாக்டர் நம்பர் 05: மழமழவென மழித்த முகத்தோடு ஒரு மலையாள மருத்துவன் (மரியாதை கொடுத்து மருத்துவர் என்று விளிக்க ஆயாளுக்கு அறுகதை இல்லை). ஏதோ படப்பிடிப்பின் நடுவே எழுந்து வந்ததுபோல நேர்த்தியாய் தோற்றமளிப்பதிலேயே குறியாயிருந்தான். “இது இப்ப க்ரோனிக் ஆயிடிச்சி” என்று இரத்தமெல்லாம் சோதித்துவிட்டு எக்ஸ்ரேயெல்லாம் பார்த்துவிட்டு “ரெண்டு வாரத்திற்கு மருந்து சாப்பிடு. சரியாகலேன்னா அப்புறம் இது ரெமொட்டோய்ட் அர்தரைட்டீஸாக (Rheumatoid Arthritis) இருக்க வாய்ப்புண்டு” என்றான். ஆர் ஏ (இனி இப்படி இதை சுருக்கமாக அழைப்போம்) என்றால் என்னவென்று தெரியாத நான், “அப்படீன்னா இதுக்கு குணமில்லையா? வளைந்த விரல் நிமிராதா?” என வினவ, அவன் கொடுத்த அதிர்ச்சியோடு வெளியேறிய நான் எழுதியதுதான் “சற்றே பொறுக்கவும்”.  

அந்த நாசமாப்போனவன் சொன்னான், “சுண்டு விரலில் சிறிய வளைவுதானே. விட்டுவிடு. இது ஆர் ஏ எனும்பட்சத்தில் மேற்கொண்டு பரவாமல் இருக்க ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ” என்று பயம் காட்டிவிட்டு தமக்குக் கொடுக்கப்பட்ட வசனத்தைப் பேசி முடித்துவிட்ட தோரணையில் மெளனித்தான்.

வீட்டுக்கு வந்த நான் ஆர் ஏ என்றால் என்னவென்று கூகில் அண்ணாத்தைகிட்ட கேட்க அதன் விளக்கம் தூக்கி வாரிப்போட்டது. ஆர் ஏவைப் படம் வரைந்து பாகங்களைக் குறித்து தமிழில் “முடக்கு வாதம்” என்றது. எனக்கா முடக்கு வாதம் என்று மனசு செத்துப்போக, ஏனோ எனக்கு விபரீதமான கற்பனைகளும் சோகப்பாடல்களும் வாழ்க்கையே முடிந்து போனது போலவும் சோகம் அப்பியது.  நண்பர்கள் அலி, ஜாகிருக்கெல்லாம் சொல்லி அங்கு டாடர்களைக் கன்செல்ட் செய்யச் சொன்னேன். “இது ஆர் ஏ அல்ல டாடி, லுக்ஸ் லைக் ‘க்ரொவுட்(grout)’டாடி” என்ற மகளை முறைத்தேன்.  எல்லோரிடமும் எரிந்து விழுந்தேன். 

ஆயினும், ஆர் ஏ வுக்கான சிம்ப்டம்ஸ்(symptoms) இல்லாததால் ஜி எம் ஸி ஹாஸ்பிட்டலிலும் ஒரு கன்சல்டேஷன் பண்ண அங்கு சென்றேன்.

டாக்டர் நம்பர் 06: ஆர்த்தோவிலே பேராசிரியர் அந்த டாக்டர். எடுத்த எடுப்பிலேயே “இது ஆர் ஏ வல்ல. 100 வகையான அர்தரைடிஸில் ஒன்னு. எதற்கும் எக்ஸ்ரேயும். மொத்த ரெத்த பரிசோதனையும் (total profile of blood)  செய்துவிடலாம்” என்று சொன்னார்.

எனக்கு மனசு சற்றே லேசானது எனினும் ரிஸல்ட் வரும்வரை யோசனைகள் பல வந்து போயின, “நாம் யாருக்கு என்ன பாவம் பன்னோம். ஏன் முடக்கு வாதம்? வட்டி வாங்கினோமா வயிற்றலடிச்சோமா. ஏன் அல்லாஹ் இந்த விதி” என்று ரொம்பவே புலம்பினேன்.

ரிஸல்ட்டும் வந்தது. எல்லாம் நார்மல் என்றும் “ரோஸ் வேலர் (Rose Whaler)’  நெகட்டிவ் என்றும், மூட்டில் இன்ஃபெக்ஷன் (infection) இருப்பதாகவும் சொல்லிற்று ரிஸல்ட்.  டாக்டர் ஆர் ஏ இல்லையென்று தீர்ப்பளித்தார். “எனினும், நீ விரலை ஏறத்தாழ ஃபிரெஞ்ச் டார்ச்சருக்கு ஈடாக சித்திரவதை செய்துவிட்டதால் வளைந்த நுனிமட்டும் நிமிராது” என்று சொன்னார். பிரசவத்தில் சிரமம் ஏற்படும்போது ரிம்லெஸ் கண்ணாடி போட்ட லேடி டாக்டர் “ரெண்டு உயிரில் ஒன்றைத்தான் காப்பாத்த முடியும்” என்பவரிடம்,”பெரிய உயிரைக் காப்பாத்துங்கள், பிள்ளை பிறகுவேணுமானாலும் பெத்துக்கலாம்” என்பார்களே அதுபோல, நானும், “பரவாயில்லை, ஒன்பது விரல்கள் சரியாயிருந்தாலே போதும்” என்று சமாதானமானேன். 

டாக்டர் 15 நாட்களுக்கு மருந்து எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் வரச்சொன்னார், முடிச்சில் உள்ள புண் ஆறிவிடும் என்ற நம்பிக்கையில்.

இன்னும் முடியல.  வேனும்னா ஒரு காஃபி குடிச்சிட்டு வந்து தொடர்ந்து படியுங்கள்.

டாக்டர் நம்பர் 07: ஆர்த்தோ சர்ஜன், ஜி எம் ஸீ ஹாஸ்பிட்டல், அஜ்மான்: 16வது நாளும் வலி குறைந்திருந்ததே தவிர நீங்கவில்லை என்பதால் மீண்டும் போனபோது, “அவர் விடுமுறையில் சென்றுள்ளார். 40 நாட்கள் கழித்து வாருங்கள்” என்று வாரினார்கள். நான், “காத்திருக்க முடியாது. வேறு ஸ்பெஷலிஸ்ட் உண்டெனில் அனுப்பு எனக் கேட்க எலும்பு அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்ப, அவர் “15 நாட்கள் ஆகியும் குணமாகாததால் நீங்கள் ஆர் ஏ சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டைக் காண்பது நலம் என்று சுருக்கமாக முடிக்க நான் சம்மதித்தேன். மேலும், அவர் அங்கு விசிட்டிங் கன்சல்ட்டன்ட் தான்.

விதி, விடுமுறை எனும் முகமூடியிட்டு விளையாடியதால் அவரும் 10 நாட்கள் கழித்துத்தான் வருவார். அவர் ஓர் இராக்கி என்றனர். காத்திருக்குகையில், ஜாகிர், அலி ஆகியோர் ‘இது அதல்ல’ என்று விசாரித்துச் சொன்னார்கள். நான் 25 வருஷத்துக்குப்பிறகு சந்திக்கபோகும் தம்பதியில் ஒருவனாக இர்ராக்கி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டுக்காகக் காத்திருந்தேன்.

டாக்டர் நம்பர் 08: ரெமொட்டொலஜிஸ்ட். (rheumotalogist) அரபு நாடுகளின் அரசியல் எழுச்சியினால் அடிக்கடி பார்த்த முகங்களில் ஒன்றோடு அமர்ந்திருந்தார். ஏழுபது வயதிருக்கும். என் விரலைப் பார்த்தவுடன்,”உன்னை யார் என்னிடம் அனுப்பியது. நான் ரெமொட்டொய்ட் மட்டுதான் பார்ப்பேன். இது அதல்ல”. நான்,”என்ன டாக்டர் ரிப்பொர்ட்லாம் பார்க்காமலேயே சொல்றீங்களே” என்றதற்கு, அவர்”R A வை எனக்கு என் குழந்தைகளைப்போல பரிச்சயம். அவை, மணிக்கட்டு, விரல்களின் அடி மூட்டு, ரொம்ப அரிதாக விரல்களின் நடு மூட்டுகளில்தான் வரும். நுனி மூட்டில் வரவே வராது” என்று ஆணித்தரமா அடித்துச்சொன்னார்” என் வயிற்றில் பால் வார்த்தார். "அப்படியானால் இது என்ன என்று கேட்க” அவர் சொன்னது நாம் அனைவரும் அறியவேண்டிய ஒரு பாடம்:

“விரலில் வலி வந்தவுடன் அதற்கான சிகிச்சை செய்திருந்தால் இவ்வளவு தூரம் உனக்கு பிரச்சினை இருந்திருக்காது. கற்றுக்குட்டி வைத்தியங்களால் விரல் நுனி மூட்டில் ‘ஹைபர்டன்ஸ் நோட்ஸ்” (hiberden's nodes)) எனும் முடிச்சு விரலின் முதுகில் விழுந்து விரலை உள்நோக்கி வளைத்துவிட்டது. மருந்தெல்லாம் ஒன்றும் வேண்டாம். ஃபிங்கர் ஸ்ப்லின்ட் (finger splint))  போட்டுக்கோ. 4 செஸ்ஸன் ஃபிஸியோ தெரப்பி ( 4 sessions of physiotherapy))  போனால் சரியாயிடும். என்ன ஒன்று க்ரோனிக் ஸ்டேஜுக்கு நீ கொண்டு போய்விட்டதால் நிவாரணம் கிடைக்க நாளாகலாம்” என்றார். வாழ்த்தி விடை தந்த அந்த டாக்டரை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

last but not least,
டாக்டர்நம்பர்08:
ஃபிஸியோதெரபிஸ்ட்:
ஊட்டி கான்வென்ட்டில் துவங்கி எம் எம் சி என்று படித்த கோவைக்கார லேடி அவங்க. சிறப்பான ட்ரீட்மென்ட்டால் இதோ விரல் நன்றாக நிமிரத்துவங்கி இருக்கிறது. அவங்க என்ன சொல்றாங்கன்னா, "உங்களுக்கு சீக்கிரமே குணம் தெரிவதால் இது ஹைபர்டென்ஸ் நோட்ஸாகக்கூட இருக்க வாய்ப்பு குறைவு. இது அடிபட்டதால் ஏற்பட்ட ஸ்வான் நெக் (swan neck) எனும் சாதாரண நிலைதான்" என்று முடித்த டாக்டர் சொன்னார். (கவனிக்கவும்...)

"நீங்கள் அப்பவே வெந்நீர் ஒத்தடம் கொடுத்திருந்தால் இந்நிலை வந்திருக்காது"

- சபீர்

20 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வெந்நீர் ஒத்தடம் கொடுத்திருந்திருக்கனும் அப்பவே !

//வலி நிவாரணி ஏதும் எடுத்துக் கொள்ளாததால் இரவு முழுதும் “வெற்றி, வெற்றி” என்று வலித்ததால் தூங்காமல் இருந்தவனை காலையில் உம்மா எழுப்பினார்கள்!?. மஞ்சத்தில்! படுத்திருந்த… அதாவது மஞ்சளில் படுத்தி வைத்திருந்த என் விரல் நுனி மசாலாவில் ஊரிய ரால் மாதிரி மவுனமாக அழுதுகொண்டிருந்தது. இதுக்குமேல் வைத்துக்கொண்டிருக்கக்கூடாது என்று சுயேட்சையாக தீர்மானித்த உம்மா உடனே என் விரலைக் காரில் ஏற்ற நானும் கூட போகவேன்டியதாயிற்று.//

ஆஹா உம்மவோட அனுசரனையும் அந்த வலியோடு ரசனையும் !! :)

ஓ அதான் எதெற்கெடுத்தாலும் வலி(கண்ட)வெற்றிதான் WIN WINன்னு இருக்கோ...

ஆனா WIN என்றால் தோற்றவர்களுக்குத்தானே வலிக்கும் ! இதில் யார் வெற்றி பெற்றவர் !?

நகைச்சுவை இழையோடலும், குப்பென்ற சிரிப்பொலியும், சட்டென்ற கோபமும் வருகிறது வாசிக்கையிலே....

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
// இன்னும் முடியல. வேனும்னா ஒரு காஃபி குடிச்சிட்டு வந்து தொடர்ந்து படியுங்கள்.//

காக்கா என் கடைக்கு பக்கத்திலே டீ கடை ஒன்றும் இல்லை பரவாயில்லை தொண்டை சூட்டோடு உங்கள் வெந்நீரையும் குடிச்சிறோம் சாரி படிச்சிறோம்.

சபீர் காக்கா சுளுக்குஎன நினைத்து.மருத்துவரின் முடக்கு வாதம் என்ற தவறான சொல்.சொடக்காக போன உங்கள் வேதனையை எழுதி சாதனை படைத்து எங்களுக்கு ஒத்தடம் செய்துள்ளீர்.

ஜப்பான் நாட்டில் வேலை பளுவால் உடல் வழியை போக்க 365.நாளும் இரவு நேரத்தில் வெந்நீரில் குளித்து
நிவாரணம் பெற்ற அனுபவம் எங்களுக்கு உண்டு.

வெந்நீர் ஆறாமல் சூடான மருத்துவ ஒத்தடம் எங்களுக்கு தந்துகிட்டே இருங்க.

Yasir said...

மறுபடியும் வெந்நீர் ஒத்தடம் தானா மருந்து.......அல்லாஹ் உங்களுக்கு ஒரு குறையும் தர மாட்டான் காக்கா....

ZAKIR HUSSAIN said...

உன்னுடைய விரல் "உலகத்திலேயே அதிக டாக்டர்களைப்பார்த்த விரல்" எனும் பரிசை வெல்கிறது. மரவாமல் பரிசை வாங்கிக்கொள்ளவும்.

Anonymous said...

சபீர் காக்கா மிக அழகாக வருணித்துள்ளீர்கள் வெந்நீரை பற்றி....

வெந்நீர் சூடு ரொம்ப அதிகமாக இருந்தாலும் கஸ்ட்டம் தான் அதில் பச்சை தண்ணீரையும் கலந்து குடிப்பார்கள் அல்லது குளிப்பார்கள். வெந்நீரில் ஒத்தடம் குடுப்பதற்கு மிக அழகாக இருக்கும் யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது.அல்லாஹ் யாருக்கும் எந்த குறையும் வைக்க வில்லை அது எப்போ என்று சொன்னால் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவரை.சுளுக்கு,இரத்தக்கட்டு,கால் வீங்குதல்
ஆகியவற்றைக்கு வெந்நீரில் ஒத்தடம் கொடுப்பார்கள்.

மு.செ.மு.அபூபக்கர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூப்பரு!வெண்ணீர் ஒத்தடமும் வென்டிக்கா மாதிரி விரலும் வெற்றி 'ண்டு'வலித்ததும்.

அங்கேயும் லேடியின் குசும்பு கிராசிங்.
இங்கேயும் கோவை லேடியின் சிறப்பு ட்ரீட்.
ஆக வலி விடுதலையானதும் சந்தோசமே.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஹபர் சாதிக் சொன்னது:
// சூப்பரு!வெண்ணீர் ஒத்தடமும் வென்டிக்கா மாதிரி விரலும் வெற்றி 'ண்டு'வலித்ததும்.//

சூப்பரு என்ற வார்த்தையை அடிக்கடி ஜகபரு சொல்லுவது சூப்பராதான் இருக்கு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அறிவியலுடன் நக்கலும் அருமை காக்கா.

//என் விரலை நசுக்கியும் பிதுக்கியும் இழுத்தும் வழைத்தும் விரலைத் தவிர மற்ற என் உடம்பு முழுவதிலும் இருந்து சுலுக்கு எடுத்து விட்டான். //

நம்மிடம் திட்டு வாங்கிய சிறுசுகளிடம் சுலுக்க எடுத்தச்சொன்னால் இதான் நிலை.. எச்சரிக்கை

அப்பவே வெந்நீர் ஒத்தடம் கொடுத்திருக்கலாம் தான்..

KALAM SHAICK ABDUL KADER said...

மனதின் காயங்கள் உங்கள்
மலர்ப்பா மருந்தால் தீரும்
தினமும் சுட்டும் விரலின்
திடீர் காயம் பற்றி
வனப்பாய்க் கவியாய்ச் சொல்லி
வார்த்தை மருந்தால் வருடி
கனக்கும் கவலை விரட்டும்
கவிஞர் சபீர் வாழ்க

sabeer.abushahruk said...

கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு.

காலப்போக்கில்
களிமண் திரண்டு
கரையை நிறைத்ததால்
கடல் வணிகம் குன்றிப்போக
காலாவதியாகிப்போன
கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும்

காரைக்குடி சென்னை
கம்பன் எக்ஸ்பிரஸ்
கைவிடப்பட்டதால்
காற்று வாங்கும் ரயிலடிக்கும்
இடையே

பல ஆண்டுகளாக
பசுமை மாறாமல்
பரந்து நிற்கின்ற
பாதாம் மரத்தடியில்
பள்ளிப் பருவத்தில்
பரீட்ச்சைக்குப் படிக்கச்
செல்வதுண்டு

குட்டிக்ககுரா பவுடரும்
கொலுசுச் சப்தமுமாக
உலவும்
மோகினிப் பிசாசுக்குப்
பயந்து
கட்டிடத்துள்
செல்வதில்லை எனினும்

இயற்கையின்
ஓர் உபாதைக்கு
கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள்
ஒதுங்குகயில்
ஆர்வம் எட்டிப்பார்க்க

தூசு படிந்த தரையில்
சற்றே சுத்தமான மூலையில்
சப்பையான காலிக் குப்பியும்
காளிமார்க் சோடா போத்தலும்
நீர்த்துப்போன பீடித்துண்டுகளும்

கசங்கிய காகிதப் பொட்டலத்துள்
நசுங்கிய காய்ந்த தாமரை இலையும்

உதிரியாய்
பல பூவிதழ்களும்
சணலில் தொடுத்த காம்புகளும்
தரையில்
பிடரியளவு
ஒட்டிய எண்ணெய்ப் பிசுக்கும்
ஒரு சரிகை இழையும்
சில ஜிகுனா துகள்களும்
கண்டு

மோகினிப் பிசாசுவின்
பழக்க வழக்கங்கள் குறித்து
தெளிவில்லாமலிருந்தது

சமீபத்தில் ஊர்சென்றிருந்தபோது
கஸ்டம்ஸ் கட்டிடம்
இடிக்கப்பட்டுவிட்டதால்
அதே
பழக்க வழக்கங்களுடைய
மோகினிப் பிசாசு
இருப்பதற்கான அடையாளங்களை
உப்பளக் கொட்டகையின்
பம்ப் செட்டுக்கருகில்
காண முடிந்தது.

-sabeer.abuShahruk@gmail.com
thanks: www.thinnai.com

Shameed said...

விளா வாரியா விரல் பற்றி சொன்னது "சூப்"பர் நான் ரசித்தவை

//கூரான கிருதா வைத்த இளைஞர்கள் வந்து பொண்ணு கேட்கும் அளவுக்கு அம்சமாயிருக்கும்//

//என்னைத் தட்டி எழுப்பியது வெற்றி என்ற வலி (விண்ணென்று வலித்ததாய் ஆங்கிலக் கலப்போடு எழுத என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம்)//

//“அன்னிக்கு பரீட்சைல 5 மார்க் குறைஞ்சதற்கு சத்தம் போட்டியல்ல சாச்சா”//

//சூ.பட்டையிலே ஓர் ஊசியும் போட்டுவிட்டு//


//மேற்கொண்டு அவரிடம் காட்ட முடியாமல் (நான் ஊசி போட்ட இடத்தைச் சொல்லவில்லை)//

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தர் சபீர்,

இரயிலடியில் பதிவாக வேண்டிய கவிதை
விரலடியில் பதிவாகி விட்டதே
திண்ணையில் மட்டுமே உட்காராமல்
திக்கெட்டும் படரட்டும் உங்கள் பாக்கொடி

Ahamed irshad said...

ரொம்ப‌ உப‌யோக‌மான‌ ஆக்க‌ம் காக்கா..பிரிண்ட் அவுட் எடுக்க‌லாமான்னு யோசிச்சிஃபையிங்..

ந‌ம்மூர் குசும்பு கொப்புளிக்கிற‌து காக்கா உங்க‌ள‌து ப‌திவுக‌ளில்..இது உண்மையான‌ க‌ல‌ப்ப‌ட‌மில்லாத‌ க‌மெண்ட்டு...ஆங்... :)

அதேபோல் அந்த‌ க‌ஸ்ட‌ம்ஸ் கட்டிட‌ க‌விதை செம‌...

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------

காக்காவுக்கு கவிதையில் தான் கை வந்த கலை என்ற நெனப்பில் இருந்தோம் ஆனாக்க அடிக்கடி மருத்துவரிடம் மாட்டிக்கிறிங்களே காக்கா...

இத படிச்சதும் இதுக்கு முன்னாடி எழுதுனதை படிக்க தேடித் தேடி வாசிச்சுட்டென்.

எல்லாமெ அழகுமட்டுமல்ல ஏதோ ஒரு செய்தி மறைந்து வந்து சொல்லுது.

நன்றி காக்கா.

- UmmHashim

Shameed said...

//“முடக்கு வாதம்” என்றது. எனக்கா முடக்கு வாதம் என்று மனசு செத்துப்போக, ஏனோ எனக்கு விபரீதமான கற்பனைகளும் சோகப்பாடல்களும் வாழ்க்கையே முடிந்து போனது போலவும் சோகம் அப்பியது//

முடக்கு வாதம் என்று சொன்னதும் ஒரு மொடக்கு தண்ணி கூடதான் குடிச்சிடீங்க!

Yasir said...

நீங்கள் பார்த்த மோகினி பிசாசின் - மகள் மோகினியின் புழக்கம் நாங்க படிக்கும் காலத்தில் இருந்தது,இப்ப அதன் பேரபிள்ளை மோகினிகள் அலையுதுண்டு நினைக்கின்றேன்...என்னமே இருந்தாலும் மோகினியிடம் பழகி பார்த்தவன் சீக்கு வந்துதான் செத்தான் / சாகிறான் / சாவப்போகிறான்

//கசங்கிய காகிதப் பொட்டலத்துள்
நசுங்கிய காய்ந்த தாமரை இலையும் // வொண்டர்ஃபுல்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இப்படியும் எழுதி தடம் பதிக்கமுடியும்? நல்ல நடை! வெந்நீர் ஒத்தடம் கொடுத்ததுபோல் கதகதப்பாய் இருக்கிறது படிக்கும் போதே! தன் வலியைகூட இப்படி பிறர் விலா நோக விவரிக்கவும், சிரித்து வயிற்றில் வலி உண்டாக்கவும் முடிகிறது!!! மேலும் எல்லா விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ். ஒரு நோய்க்கு நிவாரனித்தேடி அலைந்ததில் நீங்களே
அவ்வவுக்கும் டாக்கர் பட்டம் வாங்கக்கூடிய அளவிற்க்கு கள ஆய்வு செய்திருக்கிறீர்கள்.மொத்தத்தில் உஙல் வர்னித்து விளக்கும் பானிக்கு அந்த சுட்டுவிரலுக்கு ஒரு மோதிரம் சூட்டினால் கிரீடம்(கிரவுன்)அணிவித்தது போல இருக்கும்.

தலைத்தனையன் said...

சபீரின் சுந்தர விரல் கண்ட சோதனை.
சுந்தர விரலுக்கு சுடுநீர் ஒத்தடம்.
எழுத்தினூடே எங்களையும் வலியால்
வேதனிக்க வைத்து, சிரிக்க வைத்து,
சிந்திக்க வைத்தார்.

சபீரின் தன் அழகு விரல் குறித்த குறிப்பை கண்டவுடன் என் விரலையும் பார்த்தேன் சகிக்கவில்லை. சவுதி
ஜுபைலில் இருக்கும்பொழுது, ஒரு வாலி பால் மேட்ச் பார்க்கப் போனேன். கோர்ட்டை நெருங்கும் முன்பே கோர்ட்டிலிருந்து பறந்து வந்த பந்தை இடது கையில் வாங்கும்பொழுது மோதிர விரலில் சுரீர் என்று வலி.
லேசாக தடவி விட்டு. அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அது பெர்மனென்ட் ஸ்வான் நெக் ஆகிவிட்டது. தலைப்பின் படத்தை
முதல் தடவை பார்த்தபொழுது, யாரோ தேன் புட்டியை திறக்க முயற்சிப்பதுபோல் தெரிந்தது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு