Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 17 17

அதிரைநிருபர் பதிப்பகம் | May 08, 2012 | , ,


மக்காவிலும் சரி, மதீனாவிலும் சரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவாகக் கவிஞர்களை அடையாளம் கண்டு வைத்திருந்தார்கள். ஏனெனில்,
إن من الشعرحكمة

“திண்ணமாக, கவிதையில் நுண்ணறிவு பொதிந்துள்ளது” (இப்னு மாஜா) என்பதை ஆழமாகப் புரிந்து வைத்திருந்ததால்தான், நல்ல கவிஞர்களை நபியவர்கள் நேசித்தார்கள்; வசைக்கவி புனைந்தோருக்குக் கவிஞர்களைக்கொண்டு வாயாப்புக் கொடுத்தார்கள்; கவிகளால் வசைபாடிப் பின்னர் திருந்தி வந்தவர்களைக் கருணை உள்ளங்கொண்டு மன்னித்தார்கள்; அவர்களைப் பெருமைப் படுத்தினார்கள் என்பதை இதற்கு முன் சில பதிவுகளில் பார்த்தோம்.

கிராமவாசி ஒருவர் மஸ்ஜிதுன் நபவியில் இறைவனிடம் இறைஞ்சிக்கொண்டிருந்தார். அவ்விறைஞ்சலானது, தற்காலத்துப் புதுக்கவிதை ( free verse ) போன்று  இருந்தது. ஆனால், அதில் இறை ஒருமைப்பாட்டின் கருத்து பொதிந்திருந்தது:

يا من لا تراه العيون !  ولا تخالطه الظنون !
ولا يصفه الواصفون، ولا تغيره الحوادث
ولا يخشى الدوائر
يعلم مثاقيل الجبال، ومكاييل البحار
وعدد قطر الامطار، وعدد ورق الأشجار
وعدد ما أظلم الليل، وأشرق عليه النهار
ولا تواري منه سماء سماء، والارض أرضا
ولا مجرما في قبره، اجعل خير عمري أخيرة
وخير عملي خواتيمي، وخير أيامي يوم القاك فيه

கண்களுக்கு எட்டாத காவலனே!
எண்ணங்களும் அடைய முடியாது உன்னை.
வகுத்துரைக்க உன் தன்மை அளவில் அடங்காது!
துயர நிகழ்வுகள் உன்னை ஒன்றும் செய்யா.
அச்சமென்பது உனக்கில்லை.
மலைகளின் எடைகளை, மாக்கடலின் ஆழத்தை,
மழைத் துளிகளின் எண்ணிக்கையை அறிந்தவனே!
இரவிலும் பகலிலும் வானிலும் கடலிலும் மலையிலும்
மறைந்தவற்றை அறிந்தவனே!
என் வாழ்வின் இறுதிச் செயல்களைச்
சிறந்தவையாக்கிச் செழுமைப்படுத்து.
வந்துன்னை மறுமையில்
சந்திக்கும் நாளை இனிதாக்கித் தந்துவிடு!

இந்த இனிய இறைஞ்சலை அந்தச் சிற்றூர்க்காரரின் வாய்மொழியாகக் கேட்டவுடன், மன மகிழ்ச்சி கொண்ட மாநபியவர்கள், அன்று அவர்களிடம் வந்திருந்த போர்ப் பொருள்களில் இருந்த தங்கக் கட்டியொன்றை  எடுத்து அம்மனிதருக்கு அன்பளிப்புச் செய்தார்கள். 
(சான்றுகள்: தபரானி, மஜ்மஉ ஜவாயித்) 

ஹிஜ்ரி எட்டில் மக்காவை வெற்றிகொண்டு, மனங்குளிரக் கஅபாவை வலம் வந்துகொண்டிருந்தார்கள் அண்ணலார் (ஸல்). கூட்ட நெரிசல், குதூகலம், கூக்குரல்களின் இடையே ஒருவர் அண்ணலை நெருங்கி வந்துகொண்டிருந்தார்! அவருடைய எண்ணம் புண்ணாகிப் புரையோடிப் போயிருந்தது. ஆம்! அவருள்ளத்தில் ஒரு கொலைத் திட்டம்! ‘இன்று தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான், இந்த முஹம்மதை!’

அத்தருணத்தில், பெருமானாரின் பார்வை அவர் மேல் பட்டது! 

“நீர் ஃபுழாலாதானே?”  கேட்டார்கள் நபியவர்கள். 

“ஆமாம், அல்லாஹ்வின் தூதரவர்களே!”  அதிர்ச்சியுடன், தன்னையும் அறியாமல் உண்மையை ஒப்புக்கொண்டார் அவர். 

அடுத்துக் கேட்டார்கள் அண்ணலார்: “உன் மனத்துள் ஏதேனும் (தீய) எண்ணமுண்டா?” 

மீண்டுமோர் அதிர்ச்சி அவருக்கு! 

அதுவரை, தம் மீது வசை பாடிக்கொண்டிருந்த ஃபுழாலா இப்னு உமைர் இப்னு முலவ்விஹ் அல் – லைதீ என்ற கவிஞரைத் தெரியாதா பெருமானாருக்கு? 

ஒரு நொடியின் அதிர்ச்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, “ஒன்றுமில்லை! அல்லாஹ்வை நினைவுகூர்ந்தேன்; அவ்வளவுதான்” என்று கூறிச் சமாளித்தார். 

அண்ணலார் (ஸல்) சிறுநகை புரிந்து சொன்னார்கள்: “ஃபுழாலா!  இத்தருணத்திலே அல்லாஹ்விடம் அழுது மன்னிப்புக் கேள்.”  இவ்வாறு கூறியவர்களாகத் தம் கையால் அவருடைய நெஞ்சில் தடவினார்கள்.  அடுத்து நடந்ததோ, அற்புதம்!

ஃபுழாலாவின் உள்ளம் விரிந்தது! உண்மை தெளிவானது! “அப்புனிதக் கை எனது நெஞ்சில் பட்டு, அது எடுபடுவதற்குள் இதயத்தில் அமைதி ஏற்படத் தொடங்கிற்று! இறைவனின் படைப்புகளுள் எதுவும் எனக்கு அந்தக் கையைவிட உவப்பானதாக இருக்கவில்லை! நான் என் மனைவியிடத்தில் போய் நடந்ததைக் கூற முயன்றபோது, ‘சொல்லுங்கள்! என்ன நடந்தது? ஏன் இவ்வளவு அதிர்ச்சி?’  என்று கேட்டாள். ‘ஒன்றுமில்ல’ எனக் கூறினேன்” என்றவர், பாட்டிசைக்கத் தொடங்கிவிட்டார்:

قالت هلم إلى الحديث فقلت لا، يأتي عليك الله والإسلام
لو ما رايت محمدا وقبيله، بالفتح يوم تكسر الأصنام
لرأيت دينا الله أضحي بينا، والشرك يغشى وجهه الإظلام

இதன் தமிழ்க் கவியாக்கம்:

           நடந்ததையே சொல்லுமாறு மனைவி கேட்டாள். 
                        நானில்லை எனச்சொல்லி, உண்மை சொன்னேன்!
           கடைத்தேறும் வழிகாட்டி இஸ்லா மென்னும்
                        கவின்மார்க்கம் வந்ததுவென் வாழ்வி லென்றேன்!
            மடந்தைநீ முஹம்மதரைக் கண்டி ருந்தால்
                         மாபெரிய அந்நாளில் சிலைக ளெல்லாம்
            உடைந்ததையும் கண்டிருப்பாய்! இணைவைத் தோதும்
                         ஒன்றேனும் இல்லாமல் அழிந்த தன்றே!
( சான்று: சீரத்துன் நபி – இப்னு ஹிஷாம் )

கஅபாவின் கற்சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டதன் பின்,

يا أيها الناس إنا خلقناكم من ذكروانثىوجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير 

“மனிதர்களே! உங்களை நாம் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்.  அதன் பின்னர், உங்களுள் எவர் இறையச்சம் உடையவர்கள் என்று நீங்கள் ஒருவரை ஒருவர் பிரித்தறிவதற்காக, உங்களைப் பல பிரிவினராகவும் இனத்தவராகவும்  ஆக்கினோம். திண்ணமாக, அல்லாஹ் இதனை மிக்க அறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்” (49:13) என்ற இறைவசனத்தை ஓதி, அண்ணலார் அனைவரையும் அரவணைத்தார்கள்.

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

17 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவிஞர்களை வீணர்கள் பின் பற்றுவார்கள் என்ற ஒரே வசனத்தை வைத்து ஒட்டு மொத்த கவிதையையும்.வெறுத்து இருந்த எங்களுக்கு.நபி (ஸல்) அவர்கள்.அங்கிகரித்த ஆர்வமூட்டிய பல கவிதைகளை எங்களுக்கு ஆதாரங்களாக அடுக்கி கொண்டே இருக்கும்.அஹ்மத் அப்பாவுக்கு அல்லாஹ் நல் சுகத்தை தந்து இன்னும் அதிகமான விசயங்களை அறிய தருவதற்கு கிருபை செய்வானாக ஆமீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//கவிஞர்களை வீணர்கள் பின் பற்றுவார்கள் என்ற ஒரே வசனத்தை வைத்து //

இது குரான் வசனம்.அல்லாஹ்வின் - நம்மை படைத்தவனின் பேச்சு.
கருத்து சொல்லும் போது உணர்ச்சி வசப்படாமல்,ஆளைப் பார்த்து சொல்லாமல்,முகஸ்துதி பாராமல் கருத்து சொல்லுங்கள்.
மீண்டும் கவனியுங்கள்,அது அல்லாஹ்வின் வாக்கு,சொல்,பேச்சு.
அல்லாஹ்வின் ஒரு எழுத்து மட்டும் போதும் - பின்பற்றுவதற்கு.
என்ன பந்தயம்,நான் கெட்டுத்தான் போவேன் என்றால்,நாம் என்ன செய்ய?அல்லாஹ்வின் வசனத்தில் விளையாடவேண்டாம்.

அன்புடன் புகாரி said...

>>>>மழைத் துளிகளின் எண்ணிக்கையை அறிந்தவனே<<<<

அடடா எத்தனை கவிநயம்? வியந்தேன்.

அற்புதமான இந்த ஆய்வினை வெகு சிறப்பாகச் செய்திருக்கும் அய்யா அதிரை அகமது அவர்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.

அன்புடன் புகாரி

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

(ராஜாளி பார்வை) என்று சொல்லுங்கள்.இல்லை என்றால் முகஸ்துதியா போனாலும் போய்விடும்.

Yasir said...

சிறந்த ஆய்வு

///.........../// மறுபடியும் முதலில் இருந்தா :) .......நேரம் இல்லையே

Unknown said...

//ராஜ பார்வை!//

அதுதான் உங்கள் பார்வை. உங்கள் புகைப்படமே சொல்கின்றதே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆய்வுகளுக்கு இலக்கணம் சொல்லித்தரும் ஆய்வுப் பார்வை !

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

'இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்ம' எனும் நபிமொழி 'இன்ன மினஷ் ஷர்ரி ஹிக்ம' = "தீமையில் ஞானம் திண்ணமாயுண்டு" எனும் பொருள் தருவதாய் அரபியில் அய்ன் விடுபட்டுப் பதிவாகியுள்ளதை இன்று அதிகாலையில் பின்னூட்டியிருந்தேன்.

சற்று நேரத்துக்குப் பின்னர் அதைக் காணவில்லை. அது எனக்கு வருத்தமளிக்கவில்லை.

ஓரெழுத்துக் குறைவினால் தலைகீழாகப் பொருள் தரும் பிழை இன்னும் திருத்தப்படாமலிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது!


Composed in Sellinam

Anonymous said...

//விடுபட்டுப் பதிவாகியுள்ளதை இன்று அதிகாலையில் பின்னூட்டியிருந்தேன்.

சற்று நேரத்துக்குப் பின்னர் அதைக் காணவில்லை. அது எனக்கு வருத்தமளிக்கவில்லை. //

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... காக்கா,

தாங்கள் குறிப்பிட்டிருந்த பின்னூட்டம் பதிவானதாக தெரியவில்லை, ஸ்பேம் பக்கம் ஒதுங்கக் கூடியதும் அல்ல அங்கேயும் பார்த்து விட்டேன் இல்லை !

தாங்கள் குறிப்பிட்டிருந்த "الشعر" சேர்த்து விட்டோம்.. ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா..

இப்போதுதான் தங்களின் பின்னூட்டத்தினை கவனித்தேன் மின்சாரம் மூர்ச்சைப் பிடித்துக் கொண்டிருக்கும்போதே மாற்றியும் விட்டேன் அல்ஹம்துலில்லாஹ் ! :)

sabeer.abushahruk said...

முகஸ்துதிக்கும் பாரட்டுக்கும் மயிரிழைதான் வித்தியாசம்.

நான் பாராட்டுவதற்காக அஹ்மது காக்கா எனக்கு ஒரு தென்னந்தோப்பை எழுதி வைப்பார்கள் என்று எதிர் பார்த்தால் அது முகஸ்துதி.

எதிர் வாதம் செய்யமுடியாத அளவுக்கு திடமான ஆதரங்களோடும் தரமான மொழி ஞானத்தோடும் இந்த ஆய்வை எழுதிக்கொண்டிருக்கும் அஹ்மது காக்காவை ஜஸ்ட் லைக் தட் என்று பாராட்டிவிட நான் நன்றி கெட்டவனல்ல.

இது... 
ராஜ பார்வைதான்
எங்கூர் ராஜாவின் பார்வைதான்
இப்ப அதுக்கென்ன?
ஏற்க மறுக்கும் அறிவுஜீவிகளுடன் விவாதிக்க நான் தயார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஏற்க மறுக்கும் அறிவுஜீவிகளுடன் விவாதிக்க நான் தயார்.//

அப்பாடா நான் அந்த லிஸ்டில் இல்லை !

ஏன்னா விவாதிக்க அதிரை மின்சாரம் ஜமாத்தாக பிரிந்து கிடக்கிறது ஒன்னா இருந்தாத்தான் நான் விவாதிக்க வருவேன் ஆமாம் !

KALAM SHAICK ABDUL KADER said...

//முகஸ்துதிக்கும் பாரட்டுக்கும் மயிரிழைதான் வித்தியாசம்.//
உண்மை உரைத்தீர் கவிவேந்தர் சபீர்!

என் ஆசான் அவர்கள் இவ்வாய்வின “ராஜபார்வை”யுடன் மட்டுமல்ல “ராஜபாட்டையுடன்” நடத்துகின்றார்கள்; அவர்களின் “கழுகுப் பார்வை” யினால், இலக்கணப்பிழை/ஒற்றுப்பிழை/அச்சுப்பிழைகள் அகப்பட்டுக் கொள்ளும்;ஆயினும் அவர்களின் “கருணை பார்வை” யினால் கனிவுடனும் விரைவாகவும் மறுமொழியிட்டு மின்னஞ்சலில் திருத்தம் அனுப்பும் பண்பினால், அவர்கள் தமிழை நேசிக்கின்றார்கள் என்பது உண்மை. அவர்களின் எழுத்து நடையிலும் கம்பீரம்; அவர்கள் எழுந்து நடப்பதிலும் கம்பீரம். (அவர்கள் நடந்து வரும் அழகை அணுவணுவாக இரசிப்பவன் என்பதால் பதிகின்றேன்). ஆனால், சென்ற விடுப்பில் ஊரில் அவர்களைக் கண்ட பொழுது சோர்வான- தளர்ந்த நடை கண்டேன்; முதுமை காரணமாக இருக்கலாம்; ஆயினும், அவர்களின் எழுத்தும், பேச்சும் இன்னும் இளமையுடன் இருப்பதும் அல்லாஹ்வின் அருட்கொடை; இன்ஷா அல்லாஹ் அவர்களின் நீண்ட ஆயுளுக்கும், உடல் நலத்திற்கும் துஆ செய்வோமாக! அவர்களிடமிருந்து இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// எதிர் வாதம் செய்யமுடியாத அளவுக்கு திடமான ஆதரங்களோடும் தரமான மொழி ஞானத்தோடும் இந்த ஆய்வை எழுதிக்கொண்டிருக்கும் அஹ்மது காக்காவை ஜஸ்ட் லைக் தட் என்று பாராட்டிவிட நான் நன்றி கெட்டவனல்ல.//

காக்கா உங்களுடைய வார்த்தை கவி கூடாரத்தில் எக்கோவாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

ஐ லைக் இட் திஸ் சவுண்டு.

Yasir said...

//அறிவுஜீவிகளுடன் விவாதிக்க நான் தயார்./// என்னை கெழட்டி விட்டுறாதீங்க.....நானும் ரெடி.....செக்கிழுத்த மாட்டை , மாட்டுவண்டியில் கட்டாதவரை

”அறிவுஜீவிகள்” ஹாஹாஹா !!! எக்ஸ்கீயூஸ் மீ இந்த அட்ரஸ் எங்கிருக்கு என்று சொல்லமுடியுமா ??

அன்புடன் புகாரி said...

>>>>Kaifal Hal Mister Ye Bee? <<<

alhamdulillah Mr J na2

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.