Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொட்டால் தொடரும்...! குறுந்தொடர்-4 23

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2012 | ,

எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள்....

அரபு நாட்டுப் பயணத்தின் ஆரம்ப நாட்களில் மக்கள் இலவசமாகத்தான் அங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள். பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டுவது, 

பாலைவனங்களில் சாலைபோடுவது போன்ற கடினமான பணிகள் அவர்களுக்குத் தரப்பட்டன. சுகமாக மூன்று வேளை சாப்பிட்டு வேலை செய்தும் செய்யாமலும் வாழ்ந்தவர்களுக்கு அரபு நாட்டு வெயிலும் உணவும் வேலையும் இடுப்பை முறித்து விட்டன. நண்பர் ஒருவர் சொன்ன வார்த்தை,"உம்மாட்டே குடிச்ச பாலு பூரா வெளியே வந்துட்டுது" இன்னும் நினைவில் நிற்கிறது.

பாவேந்தர் பாரரதிதாசன் பாடியதுபோல ....

"சித்திரச் சோலைகளே / உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே/ முன்பு எத்தனைத் தோழர்கள்/ ரத்தம் சொரிந்தனரோ/ உங்கள் வேரினிலே...." என்பது துபையின் புஜைரா சாலைகளையும் அபுதாபியின் வானுயர்ந்த கட்டிடங்களையும் அல் அய்னின் பச்சை மலைகளையும் பார்க்கும்போது புரிகிறது. 

1980 க்குப் பிறகு பணம் கொடுத்துப் போகும் நிலை ஏற்பட்டது. ரெண்டாயிரம் ரூபாயில் ஆரம்பித்து போகப்போக பல ஆயிரங்களைக் கடந்து லட்சங்களைத் தொட்டது "அரபு நாட்டு விசா ரேட்". 1960 லிருந்து 80 , 85 வரை சென்றவர்கள் பெரும்பாலும் லேபர்கள்தான். முக்கியமாக முஸ்லிம்கள். சம்பளம் 500 அல்லது 600 ரியால்கள். ஊருக்கு 1000 ரூபாய் அனுப்ப வேண்டுமானால் கிட்டத்தட்ட 500 ரியாலாவது கொடுக்க வேண்டும். பலபேர் 500 ரூபாய்தான் அனுப்புவார்கள். அதுபோக சாப்பாடு செலவு,சிகரெட்,வீடியோவில் தமிழ் சினிமா பார்க்கக் கட்டணம்,இதர செலவுகள் என்று பல இருந்தன. வீட்டுக்கு அனுப்பும் 500 ரூபாய் அப்போது பெரிய தொகை. அதில்கூட சில குடும்பங்கள் மிச்சம் பிடித்தன.

அன்று பத்து ரூபாய்க்கு வாங்கிய ஒரு பெரிய மீனின் இன்றைய விலை குறைந்தது 500 ரூபாய்.ஒரு கிராம் தங்கத்தின் விலை 55 ரூபாய்.(77 இல்). இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய்: 2700 /- 

அன்று அனுப்பிய ஐநூறு ரூபாயை வைத்து இன்று ஒரு நாளைக்குக் கூட மீன் வாங்க முடியாது. அன்று ஒரு பஸ் கண்டக்டரின் சம்பளம் 300 ரூபாய்தான். வாத்தியாருக்கு ஐநூறு. போலிசுக்கு முன்னூறு. இதுதான் அரசு வருமானத்தின் அளவு. ஆனால் படிக்காத ஒரு பாமரனின் வருமானம் ஆயிரம் ரெண்டாயிரம் என்பது சமுதாயத்தில் பிரமிப்பை உண்டாக்கியது. இன்னொரு விசேசம்...ஹவ்ஸ் பாய் ஆபீஸ் பாய் வேலைக்குப் போன சிலர் பார்ட் டைமாக வெளியே வேலைப் பார்த்து கூடுதலாகச் சம்பாதித்தார்கள்.அவர்கள் மூவாயிரம் நாலாயிரம் என்று வீட்டுக்கு பணம் அனுப்பி வைத்து சொத்துக்கள் வாங்கினார்கள். பத்தாயிரம் ரூபாய் இருந்தால் ஊரிலுள்ள தெருவில் ஒரு வீடு வாங்கலாம். வாங்கினார்கள். இன்று அதே வீடு முப்பது லட்சத்துக்கு மேல். இது பொய்யில்லை...... சத்தியம் சத்தியம்.

"படிக்காதவன், வெவரமில்லாதவன் அரேபியாவிலே போயி சம்பாதிச்சு வயலு வீடு தோப்பு வாங்குறான். நாம முன்னூறு சம்பளத்துலே ஒன்றுமே வாங்க முடியாது"ன்னு தாலுகா ஆப்பீசிலும் கலெக்டர் ஆபீசிலும் வேலைப் பார்த்தவர்கள் கொதித்துப் போனார்கள்.அப்புறம்தான் படித்தவர்களின் படையெடுப்பு அரேபியாவை நோக்கி நகர்ந்தது. அரசு வேலையை துறந்தார்கள். மனைவி மக்களைப் பிரிந்தார்கள். ஊரைவிட்டுப் புறப்பட்டார்கள். மனசு முழுதும் "யா நப்சீ....யா நப்சீ..." என்பதுபோல் "பணம்....பணம்..." என்று அடித்துக் கொண்டது. விமானத்தில் பறக்கும்போதே "வயலும் வாழ்வும்" ஓட ஆரம்பித்தது.அரபு மண்ணில் காலை வைத்ததும் அந்த வெயிலும் சூடும் அவர்களை சுட்டது. அவர்கள் எதிர்பார்த்த வேலையும் சம்பளமும் கிடைக்கவில்லை. சிலர் ஓரிரு மாதத்தில் திரும்பினார்கள். சிலர் தாக்குப் பிடித்தார்கள். அதுவரை சமுதாயம் ஓரளவுக்கு சமநிலையாகத்தான் இருந்தது. அதன் பிறகு படிப்புக்குத் தகுந்த வேலை,அதிக சம்பளம் இவற்றை குறி வைத்து படித்தவர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்தது. சமுதாயம் பணம் சம்பாதிக்கும் வழியை கண்டு கொண்டது.

இருபது வயது முடிந்த பிறகும் ஒருவன் ஊரில் நின்றால் அவனுக்கு மரியாதை இல்லை என்ற நிலை வந்தபிறகு ஊரில் இளைஞர் கூட்டமே குறைந்துபோய்விட்டது.

அப்போதெல்லாம் செல்போன் வசதி என்ன,டெலிபோன் வசதியே கிடையாது. பத்து வருஷம் சௌதியில் வேலை பார்த்த பலர் ஒருநாள்கூட மனைவியிடம் போனில் பேசியது கிடையாது.கடிதம்தான்.ஒரு கடிதம் அனுப்பி மறு கடிதம் வர ஒரு மாதம்வரை கூட ஆகும்.

இப்போதுபோல் மனைவி மக்களின் முகத்தையோ அவர்களின் பேச்சையோ அன்றைய "தியாகிகள்" பார்த்ததுமில்லை,கேட்டதுமில்லை. ஆனாலும் அவர்கள் துன்பங்களைஎல்லாம் இன்பங்களாக எண்ணி உழைத்தார்கள். கப்பலுக்குப் போன மச்சானைத்தேடி வீட்டின் கரையில் மனைவி காத்திருந்தாள். 

உம்மாவுக்குப் பிறைக் கவுணியும், வாப்பாவுக்கு தலைத் துண்டும் அத்தரும், பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்து, பரிசுப் பொருட்களும் கொண்டவளுக்குத் தன்னையும் சுமந்து வந்தவனை அந்த குடும்பமே கூடி வந்து கட்டிக் கொண்டது. போலித்தனமில்லாத அவர்களின் ஆனந்தக் கண்ணீரிலும் ஜம்ஜம் நீரின் வாசம் வீசியது.
( இன்ஷா அல்லாஹ் தொடர்வேன்...)
-அபூஹாஷிமா

23 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//மனசு முழுதும் "யா நப்சீ....யா நப்சீ..." என்பதுபோல் "பணம்....பணம்..." என்று அடித்துக் கொண்டது. //நல்ல வர்ணனை.அந்தப் பலனை நம் சமுதாயம் பல வகைகளில் அறுவடை செய்கிறது.அல்லாஹ்தான் நம் சமுதாயத்தைக் காக்க வேண்டும்.

இப்பொழுதும் அது தொடரத்தான் செய்கிறது.பணம் ஒன்றே குறிக்கோள் என்று சிலர் எண்ணி விடுவதால்,ஹலால்-ஹராம் பேணுவதில்லை.அரபு நாடுகளை தவிர்த்து,மேற்கத்திய நாடுகளில் இருக்கும் சிலர் சாராயக் கடைகளில் வேலை பார்த்து காசு பார்க்கின்றனர் என்பது மிக வேதனை.அல்லாஹ் அவர்களையும்,நம்மையும் மன்னிக்கட்டும்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

//போலித்தனமில்லாத அவர்களின் ஆனந்தக் கண்ணீரிலும் ஜம்ஜம் நீரின் வாசம் வீசியது//

Class comparison. Yes, it is comparison.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு நேரத்தில் அரபு நாட்டில் வருடக்கணக்கில் பணிபுரிந்து வரும் ஆண் மக்களுக்கு தன்னை சீராட்டி, பாராட்டி, வாழ்த்தி அந்த வல்லோனிடம் வேண்டி வழியனுப்பி வைத்த‌ வீட்டின் பிரியமான பெரியவர்கள் மவுத்தாகும் பொழுது அந்த செய்தி ஜனாஸா அடக்கப்பட்டு ஒரு வாரமோ அல்லது ஒரு மாதத்திற்குப்பின்னரோ தான் அரபு நாட்டில் தன் ரத்தத்தையும், வியர்வையையும் ஒரு சேர சுண்டச்செய்து பணிபுரியும் அந்த ஆண்மகனுக்கு தபால் மூலமோ அல்லது ஊரிலிருந்து குடும்ப சுமைகளை தன்னைப்போல் சுமந்து வந்திருக்கும் புதிய நபர்கள் மூலமோ தெரிவிக்கப்படும்.

ஆனால் இன்றெல்லாம் அல்லாஹ் மனித மூளைக்கு கொடுத்த அபரிமிதமான வளர்ச்சியில் மரணச்செய்தி கேட்ட உடனேயே எங்கிருந்தாலும் விமான டிக்கட் உடனே பதிவு செய்து ஜனாஸாவை குளிப்பாட்டும் முன் வீடு வந்து சேர்ந்து விட முடிகிறது.

ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கைப்பேசி வ‌ருவ‌த‌ற்கு முன்ன‌ர் ச‌வுதியிலிருந்து வீட்டிற்கு நேர‌டியாக‌ அல்ல‌து அக்க‌ம் ப‌க்க‌த்து வீட்டின‌ரின் தொலைபேசி மூல‌மாக ஊரிலிருக்கும் தாய், த‌ந்தைய‌ரிட‌ம் பேச‌ க‌டும் குளிரிலும் சுபுஹ் தொழுகைக்கு முன்ன‌ர் நெடுந்தூர‌ம் ந‌ட‌ந்து ஒரு நாளுக்கு முன்ன‌ரே கையில் நாண‌ய‌ங்க‌ளை மாற்றி சில்லரையாக‌ வைத்துக்கொண்டு காலை 6 ம‌ணிக்கு முன்பு பேசினால் கட்டணத்த‌ள்ளுப‌டி உண்டு என்ப‌தை க‌ருத்தில் கொண்டு நாண‌ய‌ம் இட்டு பேசும் தொலைபேசிக்கு சென்று பேசுவோம். ஒரு நிமிட‌த்திற்கு கட்டணம் 6 ரியால்க‌ள் என‌ இருந்த‌ ச‌ம‌ய‌ம் அது. கடும் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தாலும் குடும்ப பிரியங்களுடன் உரையாடும் பொழுது துன்பமெல்லாம் இன்பமாகி இதமாகவே உள்ளத்தை வருடிக்கொண்டிருந்தது அந்த‌ நேரம்.

சவுதிக்குள்ளேயே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பெருநாள் விடுமுறை நாட்களிலோ அல்லது உம்ரா செய்ய செல்லும் சமயமோ ஆங்காங்கே பணிபுரியும் நம் ஊர் பிரியமான நட்புகளை சந்திக்கச்செல்ல வேண்டுமென்றாலும் நாம் வேலை செய்யும் நிறுவனத்தின் முறையான முத்திரைகள் குத்தப்பட்டு இத்தனை நாட்கள் என குறிக்கப்பட்ட‌ கடிதத்துடன் தான் செல்ல முடியும். அதை முறையே வாங்காமல் சென்றாலோ அல்லது அதில் குறித்த‌ நாட்கள் தாண்டி விட்டாலோ திண்டாட்டம் தான். அதற்காக‌ சிறைவாசம் கூட நேரிடலாம். அரபு நாடுகளில் நம் மக்கள் அன்று முதல் இன்று வரை படும் அல்லல்களை அடுக்கிக்கொண்டே போனால் அது உலகின் உயரமான பர்ஜ் அல் கலீஃபா கட்டிடத்தின் உயரத்தையும் மிஞ்சி விடும்.

இப்பொழுது வேத‌னையாக‌ தெரியும்/பேசப்படும் அந்த‌ கால‌க்க‌ட்ட‌ம் அப்பொழுது வேத‌னைக‌ள் பெரிதுமின்றி இன்ப‌மாக‌த்தான் க‌ழிந்த‌து. ஆனால் இன்று ம‌னித‌னிட‌ம் அப‌ரிமித‌மான‌ வ‌ச‌தி வாய்ப்புகள், பணங்காசுகள் வ‌ந்து ம‌னித‌ ம‌ண‌ம் சுண்டி சுருங்கி விட்ட‌து. ம‌னித‌ நேய‌ம், ஈவு இர‌க்க‌ம், அன்பு, பாச‌ம், நேச‌ம், ப‌ரிவு, உற‌வு பாராட்டுத‌ல், ஒருவ‌ருக்கொருவ‌ர் உத‌விக்கொள்ளுத‌ல், த‌ன்ன‌ல‌மில்லா பிற‌ர் ந‌ல‌ம் போன்ற‌ ந‌ல்ல‌ ப‌ண்புக‌ள் எல்லாம் அப்பொழுது ப‌ட்ட‌ க‌ஷ்ட்ட‌ங்களாக‌ க‌ருத‌ப்ப‌டுப‌வைக‌ளுட‌ன் குழி தோண்டி புதைக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌வோ? என‌ இன்று எண்ண‌த்தோன்றுகிற‌து.

அன்பு பாராட்டிய, குடும்ப சுமைகளை சுமந்து, சுமந்தே சுண்ணாம்பாகிப்போன‌ எத்த‌னையோ ந‌ல்லுள்ள‌ங்க‌ள் இன்று அமைதியாய் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட க‌ப்ருஸ்தானில் ச‌ப்த‌மின்றி செட்டிலாகி விட்ட‌ன‌.

ச‌கோ. அபுஹாஷிமா உங்க‌ள் க‌ட்டுரைக‌ள் எம் வேத‌னைக‌ளின் க‌ண்ணாடிக‌ள்............மெள‌ன‌மாய் வ‌டியும் க‌ண்ணீரின் அர்த்த‌ம் அந்த‌ இறைவ‌னுக்கே விள‌ங்கும்.... தொட‌ருங்க‌ள்

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உருக்கியெடுக்கிறது !

Unknown said...

மனதை தொட்ட உண்மைகள் .........

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

1992 முதல் 98 வரையிலும் தொடர்ந்து ஐந்தரை ஆண்டு சவூதி வாழ்க்கை ஊஞ்சல் ஆடுகிறது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மலரும் நினைவுகள்! அனைத்தும் உண்மையே!

அதிரை சித்திக் said...

வறண்ட பாலைவனத்தை சோலைவனமாக ..,

குடுசை இருந்த இடங்களை கோபுரங்கள் கட்டியவர்கள்

நம்மவர்கள் எல்லா நாடுகளிலும் பத்து இருபது வருடம்

உழைத்த வர்களுக்கு நிரந்தர குடிஉரிமை கொடுத்து நன்றி

பாராட்டுகிறார்கள் ஆனால் அரபு தேசத்தில் முடிந்தவரை

பயன் படுத்தி விட்டு கரி வேப்பில்லை போல் தூக்கி

எரிந்து விடுகிறார்கள் நான் அரபி என்ற அகந்தை

மனசாட்சியற்ற தன்மை அரபிகளிடம் கொட்டி கிடக்கிறது

தீண்டான்மை கூட உள்ளது என்பேன் ..ஹதா ..,ஹிந்தி ..

என்று அக்ரினையில் அழைப்பதை கூட என் காதால்

கேட்டிருக்கிறேன் ..,வருடக்கணக்கில் சம்பள பாக்கி

நயவஞ்சகமாய் நயமாய் பேசி ஏற்போர்ட் வரை

அழைத்து வந்து உடுத்திய உடையோடு ஊருக்கு

அப்பாவி வேலை காரனை அனுப்பிய சம்பவங்களும் உண்டு

கண்ணீரால் எழுதப்பட வேண்டிய காவியம் இது ..

தொட்டால் ..,தொடரும் சோகம் படிக்காமல் வேலைக்கு

சென்றவர்களின் வாழ்க்கை ..,

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தொட்டால் தொடரும் (இது நல்ல) பெருந்தொடர்!

நாடு கடக்க, கடத்தப்பட்டதன் உண்மை உள்ளபடியே உரைக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையில் உள்நாட்டு வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு அரசு காட்டிய மெத்தனமும் காரணமா என்பதையும் விளக்குங்களேன்!

Noor Mohamed said...

இன்பமாய் குடும்பங்கள் வாழ இன்னல்கள் பலவற்றை அரபு நாட்டில் அனுபவித்த நம் சகோதரர்கள் ஏராளம். சகோ. அபூஹாஷிமா அவர்களின் தொட்டால் தொடரும் குறுந்தொடர், இறந்தகால நினைவுகளை ஈரமாக்குகின்றன.

அதிரை சித்திக் சொன்னது…

//வருடக்கணக்கில் சம்பள பாக்கி
நயவஞ்சகமாய் நயமாய் பேசி ஏற்போர்ட் வரை
அழைத்து வந்து உடுத்திய உடையோடு ஊருக்கு
அப்பாவி வேலை காரனை அனுப்பிய சம்பவங்களும் உண்டு
கண்ணீரால் எழுதப்பட வேண்டிய காவியம் இது ..//

ஆம்!!! இதை அனுபவித்தவர்கள் தண்ணீரிலிருந்து வெளியில் தூக்கி எறியப்பட்ட மீன்களைப் போல துடியாய் துடித்ததை என் கண்களால் கண்டுள்ளேன்.

Yasir said...

//அன்றைய "தியாகிகள்" /// ஆம் தன் குடும்பத்தின் வெளிச்சதிற்க்காக தன்னைத்தானே அழித்துக்கொண்ட மெழுகுவர்த்திகள் இவர்கள்....யா அல்லாஹ் இவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வாயாக...

சகோ.அபூஹாஷிமா தொடருங்கள் ..உங்கள் நெருடல்களை

Yasir said...

//நிரந்தர குடிஉரிமை கொடுத்து நன்றி
பாராட்டுகிறார்கள் ஆனால் அரபு தேசத்தில்// சகோ.அதிரை சித்திக் அப்படிக்கொடுத்து இருந்தால் ...பள்ளிவாசல்களின் எண்ணிக்கை குறைந்து மற்றவைகைளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் மலேசியாவில் ஏற்பட்டது போல்..அல்லாஹ் அரபு நாடுகளை காப்பாற்றிவிட்டான்...இன்னொன்று...பிறந்த இடத்தில் மடிவதுதான் என்னைபொருத்தவரை சிறப்பு ,ஆனால் உழைக்கும் வர்க்கத்திற்க்கு இந்த அரபு தேசங்கள் வேறுவிதமான கைமாறு செய்து இருக்கவேண்டும்

எங்கள் வாப்பா சொன்னதுபோல் 1976-ல் துபாயில் குடியுரிமை வழங்கப்பட்டது....ஆனால் லிஸ்ட் எடுத்து பார்க்கும் போது “அவர்களின்” எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் படிப்படியாக திரும்ப பெறப்பட்டது..சில மலையாளிகளும் / வெகு சில சிந்திகளும் இன்னும் யூ.ஏ.இ சிட்டிஷனாக உள்ளார்கள்

ZAKIR HUSSAIN said...

முதல் அத்யாயத்தில் இருந்த விசயங்களை விட இந்த அத்யாயம் படிக்கும்போது மனதுக்குள் ஏதோ செய்தது என்னவோ உண்மை. நீங்கள் சொன்ன "தியாகிகள்" இன்னும் அதற்குறிய மரியாதையுடன் நடத்தப்பட்டால் நீங்கள் எழுதுவதின் நோக்கம் நிறைவேறும் என நினைக்கிறேன்.

இன்னும் பொருள்கள் மீதான ஆசையில் இந்தக்கடையில் இது வாங்கினால் இது இலவசம், இத்தனை ஸ்டிக்கர் சேர்த்தால் ஒரு சில்வர்தட்டு இனாம் என்று அழியும் [ அலையும் அல்ல ] சமுதாயம் இருக்கும் வரை இதுபோல் அரபு நாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து இப்போது ஓய்வை விரும்பும் சமுதாயம் சரியாக மதிக்கப்பட வேண்டும்.

முன்பு செய்த உதவிகளை "பெரிசா என்ன செஞ்சாரு?" என்று எப்போது நன்றி கெட்ட தனமான வார்த்தைகள் வருகிறதோ [ குடும்பத்திலிருந்து ]" அப்போதே சொன்னவருக்கு CountDown ஆரம்பிக்கிறது.

ZAKIR HUSSAIN said...

அதிரை சித்திக் சொன்னது…

//வருடக்கணக்கில் சம்பள பாக்கி
நயவஞ்சகமாய் நயமாய் பேசி ஏற்போர்ட் வரை
அழைத்து வந்து உடுத்திய உடையோடு ஊருக்கு
அப்பாவி வேலை காரனை அனுப்பிய சம்பவங்களும் உண்டு
கண்ணீரால் எழுதப்பட வேண்டிய காவியம் இது ..//

Noor Mohamed Said

ஆம்!!! இதை அனுபவித்தவர்கள் தண்ணீரிலிருந்து வெளியில் தூக்கி எறியப்பட்ட மீன்களைப் போல துடியாய் துடித்ததை என் கண்களால் கண்டுள்ளேன்.

== இப்படி வேலையாட்களை ஏமாற்றியவர்கள் இன்னும் நல்லபடியாக இருக்க வாய்ப்பில்லை. நீதி ஞாயங்கள் அந்த மிகப்பெரிய வல்லமையுள்ளவனால் நிர்வகிக்கப்படுகிறது. சமயங்களில் சீக்கிரம் அழிந்துபோகும் மனிதன் தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அதை பார்ப்பதில்லை.

அப்துல்மாலிக் said...

//"படிக்காதவன், வெவரமில்லாதவன் அரேபியாவிலே போயி சம்பாதிச்சு வயலு வீடு தோப்பு வாங்குறான். நாம முன்னூறு சம்பளத்துலே ஒன்றுமே வாங்க முடியாது"//

பள்ளிக்காலத்தில் என் சக வயதினோர் வெளிநாட்டு சாமான்கள் வைத்து (பேனா, பேக்) விளையாடுவதை பார்க்கும்போது என் வாப்பா வாத்தியார் வேலைப்பார்த்து உள்நாட்டிலே இருப்பதால் இதையெல்லாம் அனுபவிக்க முடியலே என்று என் மனம் ஏங்கிய நாட்கள் ஏராளம், ஆனால் இன்று இதை படித்ததும் என் வாப்பா சந்தோஷமான குடும்ப வாழ்வு வாழ்ந்திருக்காங்க என்று என்னும்போது அந்த அல்லாஹ்விற்கு நன்றி கூறுகிறேன்......

KALAM SHAICK ABDUL KADER said...

கண்ணீரைக் கவிதையாக்கி விட்டீர்கள்; கடைசி வரிகளில் உண்மையில் கவிதையின் தாக்கம்; கண்ணீரை இருவகைத் தண்ணிருடன் ஒப்பிட்ட உவமை சொல்லும் உண்மை, இன்னமும் என்னுள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்து ஆட்டிவிட்டது என்பதும் உண்மை. உங்களின் இத்தொடரின் தலைப்பைப் போல இந்த “சுகமான சுமைகள்” தொடரும் என்பதும் உண்மை! கவிதை மலர்களைத் தேடித் தேடி வண்டாய்ப் பறக்கும் சகோ.இப்றாஹிம் அன்சாரி அவர்கள் கண்டுபிடித்து அறிமுகம் செய்த இந்தக் கவிமுகம் காணத் துடிக்கும் என் முகம். அறிஞர்கள் உலா வரும் அதிரை நிருபர் வலைத்தளம் எமக்குக் கிடைத்த ஓர் அற்புத விளைநிலம்!

இன்னும் எத்தனை எத்தனை அறிஞர்கள்/ கவிஞர்கள்/ உளவியல் வல்லுநர்கள்/ இத்தளம் வழியாக நமக்குக் கிடைப்பார்களோ என்ற அவாவினை ஏற்படுத்தி விட்டதால், அதிரையின் தரமான வலைத்தளம் எனும் அடைமொழியும் வழங்க விழைகின்றேன்.

அதிரை சித்திக் said...

நிரந்தர குடிஉரிமை என்பது அரசு மூலம்

அனுமதி அளிப்பது.., நாட்டிற்கோ நாட்டின்

கொள்கைக்கோ குந்தகம் விளைவிக்கும் பச்சத்தில்

அவர் வெளியேற்ற படலாம்.., நம்மவர் மலேசியாவில்

குடியுரிமை பெற்றிருந்தமையால் வயோதிக காலம் வரை

தன்ன்னபிக்கையோடு வாழ்ந்தார்கள் ..அரபு நாடுகளில்

எகிப்திய மக்களுக்கு அதுவும் எகிப்திய கிருத்துவர்களுக்கு

மொழியை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்கி

இருக்கிறார்கள் ..வணிகம் பெருக வேண்டும் சுற்றுலா பயணிகள்

வரத்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மறைமுகமாக

விபச்சாரத்தை அனுபவிகிரார்கள் .குடி .,இன்னும் பல மார்க்க

விரோத மான செயல் அதிகரித்து தான் இருக்கிறது மலேசியா

முஸ்லிம் நாடு என்றாலும் சீனர் இந்தியர் அதிக அளவில் கலந்து

இருக்கிறார்கள் ..,

abu haashima said...

வருவதும் போவதும்


வரும் நேரம்
நெருங்கி விட்டது!

நிமிடங்கள்
மின்னலைப்போல் மறைய
மனதுக்குள்
மின்சாரத்தின் அதிர்வு!

நெஞ்சுக்குழிக்குள்
ஊற்றெடுத்த வியர்வை
நெற்றியிலும்
மிருதுவான முகத்திலும்
பனித்துளிகளாய் பூக்க
எதிர்பார்ப்பிலேயே
அடிவயிற்றில்
அமிலம் சுரக்கிறது!

வெளியே வருவதற்கு
இத்தனை சிரமமா?

முகத்தைப்
பார்த்து விட்டால் போதும்
மனம்
நிறைந்து விடும்!

அனுபவித்துப் பார்த்தால்தான்
தெரிகிறது
அவஸ்தையிலும்
இப்படி ஓர் இன்பம்!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
போகும் நேரம்
நெருங்கி விட்டது!

நேற்றுவரை இருந்த சிரிப்பை
மெல்ல மெல்ல வந்த
சோகம்
துடைத்துச் சென்றுவிட
செடியைப் பிரிந்தப் பூவாய்
வாடிக் கிடக்கிறது முகம்!

தண்ணீரை வாரி
முகத்தில் அடித்தாலும்
இதழோரத்தில் கரிக்கிறது
கண்ணீரின் உப்பு!

வேதனைச் சுமைகள்
அழுத்தியபோதும்
மூட மறுக்கும்
இமைகள்!

கண்ணீரால்
தடைபோட முடியாத
பயணம்
தொடங்கி விட்டது!

இனி.....
நினைவுகளை சுமக்கக்
கற்றுக் கொள்ள வேண்டும்!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வரவேற்கவும்
வழியனுப்பவும் வரும்
பெண்களைப் பார்க்க
பரிதாபமாகத்தானிருக்கிறது ......
விமான நிலையத்தில்!
.........அபூஹாஷிமா........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சவுதியில் சுட்டுக் கொலை//
இன்றைய தினமலர் செய்தி (10-05-12)

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வழுதூரைச் சேர்ந்த அன்வர்தீன், சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் இரவு, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வழுதூர் அலாவுதீன் மகன் அன்வர்தீன், 33. இவர் சவுதி அரேபியாவில், அல்ராஸ் பகுதியில் சொந்தமாக பெட்ரோல் பங்க் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில், இவர் பணியிலிருந்துள்ளார்.
நேற்று அதிகாலை, பங்க்கிற்கு சென்ற அன்வர்தீனின் சகோதரி மகன் முபாரக் அலி, குண்டு காயத்துடன் இறந்து கிடந்த அன்வர்தீனை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் குறித்து, ராமநாதபுரத்தில் வசிக்கும் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அன்வர்தீனுக்கு, அலிம் நிஷா என்ற மனைவியும், அஸ்மிரா பேகம், 7, முகமது அசின், 3, அஜிமா, 1, என்ற குழந்தைகளும் உள்ளனர்.

காத்திருந்த பிரியமானவளுக்கும், வழி நோக்கி இருந்த பிள்ளைகளுக்கும் சவுதி மன்னரே தனி விமானத்தில் வந்து ஆறுதல் சொல்லி சென்றாலும் இழந்தவனுக்காக ஈடு செய்ய இனி எது தான் உலகில் இருந்திட முடியும்?

தொடரும் துயரங்கள் மண்ணறை செல்லும் முன் மறைந்திட வாய்ப்பேதுமுண்டோ?

அபுஹஷிமாவின் எழுத்து ஹிரோஷிமாவின் தாக்கம்....

Yasir said...

//அதிரையின் தரமான வலைத்தளம் /// i like it
சகோ.கலாம் நீங்கள் இருப்பதால் எங்களுக்கெல்லாம் பலம்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்புள்ள நண்பர் அபூ ஹஷிமா அவர்களுக்கு,

உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களை இந்த அறிவுஜீவிகள் சஞ்சாரிக்கும் அதிரை நிருபர் வலைதளத்தில் அறிமுகப்படுத்தியவன் என்ற முறையில் – ஒரு கருத்துக்கருவூலத்தை அடையாளம் காட்டிய எனது மகிழ்வை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

சமுதாயத்தின் இதயத்துடிப்பை உணர்ந்து, வரலாறும்-வாழ்வியலும் கலந்த அருமையான தொடரை தந்து கொண்டு இருக்கிறீர்கள். எங்களது நண்பர்கள் உங்களின் ஆக்கத்தை ஆர்வமுடன் படித்து ஊக்கப்படுத்துகிற வகையில் பின்னூட்டம் தந்து கொண்டு இருககிறார்கள்.

குமரித்தமிழ் ஒன்றும் அதிரைக்குப் புதிதல்ல.

கவிமணி மர்ஹூம் . கா. அப்துல் கபூர் அவர்களும், அவர்களின் இளவல் கா. முகமது பாரூக் அவர்களும் எங்கள் கா.மு. கல்லூரியில் எங்களின் மூத்த சகோதரர்களுக்கு தமிழ் பயிற்றுவித்தவர்கள். கவிமணி அவர்கள் கல்லூரியின் முதல்வராக பலகாலம் இருந்து பணியாற்றினார்கள். இன்றைக்கும் நாங்கள் எழுதும் எழுத்திலும் எங்கள் மண்ணில் உருவான பேச்சாளர்களின் பேச்சிலும் கவிமணி அவர்களின் சாயலும் வாடையும் அடிப்பதை யாருமே மறுக்க முடியாது. அதே போல் நான் படிக்கும்போது ந. மு. அசன் அவர்களும் தமிழ்த் துறைப் பேராசிரியராக பணியாற்றினார்கள்.

நான் வாணியம்பாடியில் படிக்கும்போது நாஞ்சில் மு. ஆரிது அவர்களும், நிஜாம இக்பால் அவர்களும் தமிழ்த்துறையில் கவிக்கோ அப்துல் ரகுமானின் கீழ் பணியாற்றினார்கள். ஆகவே குமரித்தமிழுக்கும் அதிரைக்கும் ஒரு பந்தம் மிக நீண்ட காலமாக இருந்து வந்து இருக்கிறது. அந்த பந்தம்தான் உங்களை எங்களுடன் இணைத்து வைத்திருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இந்த நிலையில் நான் உங்களிடம் வைக்கும் விண்ணப்பம் இதுதான். இந்த தொடர் முடிந்த பின்னும் , நீங்கள் மேலும், மேலும் பல தொடர்கள் எழுதவேண்டும் என்பதே.

இதில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது நமது சமுதாயம் பல பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது. நமக்குள் இப்படி ஒரு தகவல் பரிமாற்றங்கள் நம்மை ஒருவழியாக சிந்திப்பதற்கும் செயல் படுத்துவதற்கும் துணையாக நிற்கலாம். நாங்கள் எடுத்துவைக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கான சில நடவடிக்கைகளில் நீங்களும் கை கோர்க்கலாம். எங்களின் ஆக்கங்களையும் , கருத்துக்களையும் நீங்களும் உங்களின் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

நமது முயற்சிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.
Ebrahim Ansari

KALAM SHAICK ABDUL KADER said...

//அனுபவித்துப் பார்த்தால்தான்
தெரிகிறது
அவஸ்தையிலும்
இப்படி ஓர் இன்பம்!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ //

முதலிரவுப் பெண்ணின் அனுபவம்;
ப்ரசவிக்கும் தாயின் அனுபவம்;
பாலையாம் வாழ்கையை
பசுஞ்சோலையாய் மாற்ற
பாலைவன நாட்டுக்குப்
பறந்து வந்து
காலை தூக்கத்தை
காசாக்கி
காசோலையாய் மாற்றும்
சுகமான சுமைகளின் அனுபவம்
ஓர் இன்பம்
துன்பத்தில் இன்பம்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.