Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - தொடர் - 6 18

அதிரைநிருபர் பதிப்பகம் | September 08, 2012 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

மே மாதம் 5ஆம் அத்தியாயம் வெளிவந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில்,    இந்த அத்தியாயம் வெளிவருகிறது. வேலைப்பளு காரணமாக திட்டமிட்டப்படி தொடர முடியவில்லை. இனி வரும் அத்தியாயங்கள் தொய்வு ஏற்படாமல்,  தொடர்ந்து வருவதற்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்!.

ஆண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? பெண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? இருவரையும் வளர்ப்பதில் யாருக்கு செலவு அதிகம் ஆகிறது? என்று தொடர் 5ல் கேட்ட கேள்விக்கு காரணம்: ஆண்பிள்ளைக்கு செய்யும் செலவுகள் திரும்பி வருபவை, பெண் பிள்ளைக்கு செய்யும் செலவு வாராக் கணக்கு என்று சமுதாயத்தின் பார்வையில் உள்ளது. ''அடுத்த வீட்டுக்கு போறவள் இவளுக்கு எதற்கு 'படிப்பு' 'சம்பாரித்தா' போடப்போகிறாள். ஆண் பிள்ளையை செலவு செய்து படிக்க வைத்தாலாவது நமக்கு சம்பாரித்து போடுவான்'' என்று நம் மக்கள் சர்வசாதாரணமாக பேசி வருவதை கேட்க முடிகிறது.  

ஆண், பெண் பிள்ளைகள் இருவரும் இரண்டு கண்களே! இவர்களிடம் பாரபட்சம் காட்டினால் ''நீதி வழங்கும் மறுமை நாளில் தலைகுனிந்து நிற்க நேரிடும் பெற்றோர்களுக்கு!''.

கோடை விடுமுறையில் ஊரில் நடந்த திருமணங்களில் வரதட்சணை வாங்கியும், மஹர் கொடுத்தும் திருமணங்கள் நடந்தததை பார்க்க முடிந்தது.

மணக்கொடை: 
பெண்களுக்கு  அவர்களின் மணக் கொடைகளை கட்டயாமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் : 4:4) 

மணக்கொடை (மஹரை) கொடுத்து விடுங்கள் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான். நடைமுறையில் மஹரை கொடுக்காமல் இருப்பதோடு பெண்ணின் தந்தையிடம் கைநீட்டி வாங்குவது நீதியா? அநீதியா? 
என்பதைப் ''பெண்ணுக்குப் பெண்ணே எதிரியான பையனின் தாய்தான் சிந்திக்க வேண்டும்''.  தந்தை அதிக இடங்களில் 'ரப்பர் ஸ்டாம்பாகி விடுகிறார்', ''பாவப்பட்ட தந்தையை விட்டுவிடுவோம்''.

வரதட்சணை:
பணம் வாங்கினால்தான் வரதட்சணையாம். இத்தனை பவுன் கொடுங்கள், வீடு அல்லது மனை கொடுங்கள் என்று கேட்பது வரதட்சணை இல்லையாம். (சில  இடங்களில் தந்தைமார்களும் மகனுக்கு வரதட்சணை கேட்பதில் சளைத்தவர்கள் இல்லை). ''இது எப்படி வரதட்சணையில் சேரும்?'' வீடும், நகையும் அவர்கள் பெண்ணுக்குத்தானே தருகிறார்கள்?'' என்று பெண்களே! சொன்ன விளக்கம்.

பெண்ணுக்கு மஹர்:
மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்து, ''பெண் பிடித்திருக்கிறது, நீங்கள் பெண்ணுக்கு என்ன தருவீர்கள்?'' என்று கேட்கும்பொழுது, ''நாங்கள் தருவதா? நீங்கள்தான் தரவேண்டும்'' என்று பெண்ணின் தந்தை: மாப்பிள்ளை, அவரின்  தாய், தந்தை மூவரையும் அழைத்து ''என் மகளை தங்கள் மகனுக்கு மணமுடித்து தருகிறோம். பெண்ணுக்கு மாப்பிள்ளையின் இரண்டு வருட சம்பளத்தை மஹராக தந்து விடுங்கள். வெளிநாடு செல்லாத மாப்பிள்ளையாக இருந்தால், என் கடையில் இரண்டு வருடம் சம்பளம் வாங்காமல் வேலை செய்வதை மஹராக தந்து விட வேண்டும் சம்மதமா?'' என்று மூவரிடமும் கேட்டால் எப்படி இருக்கும், ஒத்துக்கொள்வார்களா? அவர்கள்! (''காக்கா, நீங்கள் என்ன சந்திரமண்டலத்திலா இருக்கிறீர்கள்?'' என்று கேட்பது புரிகிறது).

மஹராக எட்டு ஆண்டு கூலி:
எட்டு ஆண்டு கூலியை மஹராக கொடுத்து மணமுடித்த வரலாற்று முன்மாதிரியை வல்ல அல்லாஹ் சொல்லிக் காட்டுவது "எத்தனை தாய்மார்களுக்குத் தெரியும்''. 

''எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை  உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது)உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்''  என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் : 28:27)

இதுவே எனக்கும் உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் : 28:28) 

மூஸா(அலை) அவர்களிடம், பெண்ணின் தந்தை எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ''பத்து ஆண்டுகள் பூர்த்தி செய்வது உம்முடைய விருப்பத்தைச் சேர்ந்தது, உனக்கு சிரமம் தர விரும்பவில்லை'' என்றும் கூறுகிறார். (எட்டு ஆண்டுகள் வேலை செய்வது சிரமம் இல்லையா?) மூஸா நபி எட்டு ஆண்டுக் கூலியை மஹராகக் கொடுத்திருக்கிறார்கள். மக்களே! நமக்கு இதில் படிப்பினை இல்லையா?

வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை:
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.( அல்குர்ஆன் : 33:36)

இம்மார்க்கத்தில்  எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன், அறிந்தவன்.(அல்குர்ஆன் : 2:256) 

''வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாங்களும் வழி கெட்டு, அதிகமானோரையும் வழி கெடுத்து, நேரான பாதயை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்!'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் : 5:77)

...தடுத்து நிறுத்த முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன் உமது முகத்தை நிலையான மார்க்கத்தை நோக்கி நிலை நிறுத்துவீராக! (அல்குர்ஆன் : 30:43)

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தான் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.(அல்குர்ஆன் : 2:208)

வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் பெற்றோர்கள்  அல்லாஹ்வின் எச்சரிக்கையை நன்றாக மனதில் வைத்து இந்த கொடுமையிலிருந்து விலகிக்கொண்டு தூய்மையான மார்க்கத்தை அறிந்து பின்பற்றி நடந்தால்  நன்மை வந்தடையும். இல்லையென்றால் இந்த உலகிலும், மறுமையிலும் ''வல்ல அல்லாஹ்வின் தண்டனை கடுமையானதாக இருக்கும்'' என்பதை மறந்து விடாதீர்கள். 

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ''மாப்பிள்ளை - பெண் பேசி வைப்பது'' சரியா? இருவரையும் வருடக்கணக்கில் போனில் பேச வைத்து, பிறகு ''மாப்பிள்ளை அல்லது பெண் அல்லது பெற்றோர்கள் மணமுடிக்க மாட்டேன்'' என்று சொல்வது சரிதானா? 
இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
S.அலாவுதீன்

18 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்பு சகோதரர் S.அலாவுதீன் அவர்களுக்கு,

மகிழ்வாக இருக்கிறது மீண்டும் சகோதரியை தொடர்வதற்கு.

உங்களின் இந்த முயற்சி சிறப்புடனும், நேர்மையுடனும் நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக.

//ஆண், பெண் பிள்ளைகள் இருவரும் இரண்டு கண்களே! இவர்களிடம் பாரபட்சம் காட்டினால் ''நீதி வழங்கும் மறுமை நாளில் தலைகுனிந்து நிற்க நேரிடும் பெற்றோர்களுக்கு!''.//

நிதர்சனம்.. ! ஒவ்வொருவரும் அறிய வேண்டிய எச்சரிக்கை.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கள் அதிரை நிருபர் தளத்திற்குக் கிடைத்த பேறு பெற்ற பண்பாளர் ஆவார்கள் என்பதை அவர்களுடன் சில மணி நேரங்கள் பயணித்துப் பேசி கொண்ட போது அவர்களிடமுள்ள “அமல்களின்பால்” தீவிர பற்றும் விடாமுயற்சியின் வழியாகக் கண்டேன்;

1) மதுரையில் கண் மருத்துவமனையில் இருந்த போது “தொழுகைக்குப் போக மஸ்ஜித் எங்குள்ளது? எப்படிப் போக வேண்டும்” என்று தீர விசாரித்த அவர்களின் ‘ஈமான்” எனும் நம்பிக்கை;தொழுகையை விடாமல் குறித்த நேரத்தில் தொழுது விட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் இருப்பதைக் கண்டு கொண்டேன்.

2) துபை வரும்பொழுது இஷா தொழுகையை எப்படியும் வழியில் ஒரு மஸ்ஜிதில் தொழுது விட வேண்டும் என்று ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டே வந்த அவர்களின் விடாமுயற்சியும் தொழுகை மற்றும் குர் ஆன் ஓதுதல் (குர் ஆன் ஓதி முடிப்பதற்காகவே இத்தளத்தில் ரமலான் மாத்த்தில் ஆக்கங்கள் எழுதவில்லை என்ற கட்டுப்பாடு0 ஆகிய நற்பழக்கங்களைக் கண்டு வியந்தேன்

இவற்றை அடியேன் ஈண்டுக் குறிப்பிடுவதால் ‘தனிநபர்” புகழாரம் என்று கருத வேண்டா. எவரொருவர் அமல்களில் கவனமுடன் இருப்பாரோ அவரே தான் “பயான்’ செய்யவும் பிறருக்குத் தூண்டுகோல் செய்ப்வராகவும் இருக்க முடியும்; வீண் பெருமைக்காக (அமல் செய்யாமல்) பிறர்க்குக் குர்-ஆன் ஹதீஸ் விளக்கம் சொல்லுவதால் இக்லாஸ் எனும் உளத்தூய்மையின்றி எப்பலனும் கிட்டாமல் போய்விடும். ஆனால், அருமைச் சகோதரர் அலாவுதீன் அவர்களிடம் அமல்கள் செய்து கொண்டு பிறர்க்கும் எத்தி வைக்கும் இக்லாஸ் இருப்பதாற்றான், இத்தொடர் மட்டுமல்ல அவர்கள் எழுதும் எத்தொடரும் நிறைவான வெற்றியை எட்டும், இன்ஷா அல்லாஹ்!

அவர்கள் நீடுழி வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் நம்மை அழைக்கும் இச்சீரிய பணிக்கு அல்லாஹ்விடமே நற்கூலிகளைப் பெறுவார்களாக!

இவ்வாக்கத்தின் இறுதியில் கேட்கப்பட்ட வினாவிற்கான விடை;

கூடாது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பான அலாவுதீன் காக்கா,அஸ்ஸலாமு அலைக்கும்,

நீண்ட இடைவேளிக்கு பிறகு தங்களின் இந்த சகோதரி ஆக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ் ஹைர்.

நல்ல பயனுல்ல உபதேசங்கள்.. அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக.

//மஹராக எட்டு ஆண்டு கூலி:
எட்டு ஆண்டு கூலியை மஹராக கொடுத்து மணமுடித்த வரலாற்று முன்மாதிரியை வல்ல அல்லாஹ் சொல்லிக் காட்டுவது "எத்தனை தாய்மார்களுக்குத் தெரியும்''.

''எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது)உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் : 28:27) //

நிச்சயம் இந்த செய்தி நிறைய தாய்மார்களுக்கு தெரியாது. சரியான குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//வாசகர்களுக்கு ஒரு கேள்வி:
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ''மாப்பிள்ளை - பெண் பேசி வைப்பது'' சரியா? இருவரையும் வருடக்கணக்கில் போனில் பேச வைத்து, பிறகு ''மாப்பிள்ளை அல்லது பெண் அல்லது பெற்றோர்கள் மணமுடிக்க மாட்டேன்'' என்று சொல்வது சரிதானா? //

இரண்டு கேள்விக்கு பதில்: தவறு.

முன்பாகவே மாப்பிள்ளை பெண் பேசிவைப்பதில், சில நன்மையை தவிர நிறைய தீமைகளே அதிகம் உண்டு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோதரியே வருக வருக!
மேலான நிறைய விசயங்கள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மீண்டும் சகோதரியைக் காண வாய்ப்புத்தந்த வ்ல்லோனுக்கே எல்லாப்புகழும். சகோதரர் அலாவுதீன் அவர்கள் மீண்டும் நலம் பெற்று தொடந்து இரண்டு தொடர்களை தொடர்ச்சியாகத் தந்திருப்பது இந்த தளத்தை வலம் வருவோர்க்கு நலம் தரும் செய்தியாகும்.

பெண்ணுக்கு போடுவதாக பேசிய நகைகளின் பவுன் அளவுக்குப் போட்ட பிறகும் அவற்றை கடையில் நிறுத்துப்பார்த்து நூல், பவளம், கருப்பு மணி, தக்கை ஆகியவற்றை கழித்து அத்துடன் சேதாரமும் கழித்து இன்னும் பாக்கிப் பவுன போடவேண்டுமேன்று ஓட ஓட விரட்டுபவர்களும் எனக்குத்தெரிந்து இருககிறார்கள்.
MEANS THEY CALCULATE ONLY NET WEIGHT NOT THE GROSS WEIGHT.

Ebrahim Ansari said...

//வாசகர்களுக்கு ஒரு கேள்வி:
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ''மாப்பிள்ளை - பெண் பேசி வைப்பது'' சரியா? இருவரையும் வருடக்கணக்கில் போனில் பேச வைத்து, பிறகு ''மாப்பிள்ளை அல்லது பெண் அல்லது பெற்றோர்கள் மணமுடிக்க மாட்டேன்'' என்று சொல்வது சரிதானா? //

இரண்டு கேள்விக்கு பதில்: தவறு.

தவறுதான். ஆனால் குழந்தை பிறந்து தொட்டிலில் போடும்போதே சில குடும்பத்தில் மனதளவில் முடிவு செய்கிறார்களே.இன்னாருக்கு இன்னார் என்று சில பெரிய குடும்பங்களில் match the suitable words விளையாட்டும் லிஸ்ட் போட்டு நடக்கிறதே. குடும்பச்சொத்து பிரியக்கூடாது என்று ஜோடிப் பொருத்தமில்லா திருமணங்கள் நடந்து அவை பிரிந்த கதைகள் நிறைய உண்டே.

sabeer.abushahruk said...

சகோதரனே,

"சகோதரியே"வைத் தொடர்வதற்காக நன்றியும் வாழ்த்துகளும்.

கவியன்பனின் கருத்துகள் உன்னைப்பற்றிய உண்மைகளைச் சொல்கின்றன. உங்களிருவருக்கும் காரோட்டிக்கொண்டிருந்ததால் நீயும் கவியன்பனும் உரையாடிய பொருட்களின் சாராம்சம் சரியாக கவனிக்க முடியாமல் போனது.

உன்னை அனுகுபவர்களின் அன்பைப்பெறும் பாங்கு உன்னிடம் இருக்கிறது என்பது எனக்கு 7 வயதிலேயேத் தெரியும்.

உன் கேள்விக்குப் பதில்:

"பேசிவைக்கக்கூடாது - அனுபவம்"
"பேசவிடக்கூடாது" - கலாசாரச் சீரழிவால் கண்கூடு.

sabeer.abushahruk said...

//MEANS THEY CALCULATE ONLY NET WEIGHT NOT THE GROSS WEIGHT.//

what a thought.

I understand, kaakaa.

KALAM SHAICK ABDUL KADER said...

இத்தொடரைத் தொடர்ந்து படிக்கும் சமுதாயக் கண்மணிகளாம் நம் பெண்மணிகள் உங்களின் வினாவுக்கு விடை தர விழைகின்றேன்; காரணம், அதிரையில் அதிகம் பெண்களின் வாய்வழி மூலமாகவே பெண் பேசும் படலம் தொடங்கி விடுகின்றது. தொட்டிலில் போட்டதும் குழந்தைக்குப் பெயர்ச் சூட்டுவதை விட ஜோடி பேசுவதுதான் அதிரை பெண்கள் அதிகம் நாட்டமுடையவர்களாகி இறுதியில் நட்டமுடையவர்களாகி விடுகின்றனர். இப்பொழுது ஓரளவுக்குப் படித்த பெண்களாக நம் சமுதாயப் பெண்கள் இருப்பதால் குடும்பச் சண்டைகள் மற்றும் நீங்கள் கேட்டுள்ள வினாவின்படி குழந்தைப் பருவத்தில் ஜோடி பேசுதல் போன்ற தீமைகள் குறைவாகவே உள. இஃது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி; மனம் பெறும் மகிழ்ச்சி!

Shameed said...

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:
// இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ''மாப்பிள்ளை - பெண் பேசி வைப்பது'' சரியா? இருவரையும் வருடக்கணக்கில் போனில் பேச வைத்து, பிறகு ''மாப்பிள்ளை அல்லது பெண் அல்லது பெற்றோர்கள் மணமுடிக்க மாட்டேன்'' என்று சொல்வது சரிதானா? //

பேசிவைக்கவும் கூடாது பேசிக்கொள்ள சொல்லவும் கூடாது

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட
அன்புச் சகோதரி Ameena A.

*************************
அன்புச் சகோதரர்கள்:
அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர்)
தாஜுதீன்,
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) ,
Ebrahim Ansari ,
sabeer.abushahruk ,
Shameed

அனைவருக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த சகோதரி தொடர் பலரின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. இன்சாஅல்லாஹ் இதுபோல் மாற்றம் வர அல்லாஹ் அருள்புரிவானகவும். சகோ. அலாவுதீனுக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும்,பரக்கத்தையும் தரபோதுமானவன் ஆமீன்.

ZAKIR HUSSAIN said...

To Bro Alaudeen,

இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட ஆக்கங்களில் வரும் ஹதீஸ் எடுத்துக்காட்டுக்கள் அனைத்தும் அருமை. இதற்கு சரியான ஞாபக சக்தி இருக்க வேண்டும்.

ஏனோ நம் ஊர் போன்ற இடங்களில் நடக்கும் திருமணங்களில் "திட்ட மிட்டாப்ல" மறந்திடறாங்க..

Yasir said...

அல்ஹம்துலில்லாஹ் சகோதரி ஆரம்பித்தாகிவிட்டது...சிலருக்கு சந்தோஷமாகவும், நாம வரதட்சணை வாங்கலாம் என்று முடிவு செய்து இருந்தவர்களுக்கு சங்கடமாகவும் இருக்கும்...உண்மை வெளிவரவேண்டும் அதன் வெளிச்சம் அனைவருக்கும் பயன்பட வேண்டும்..வாழ்த்துக்கள் காக்கா

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட crown,, ZAKIR HUSSAIN,, Yasir சகோதரர்களுக்கு நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

y.m.ansari said...

//''இது எப்படி வரதட்சணையில் சேரும்?'' வீடும், நகையும் அவர்கள் பெண்ணுக்குத்தானே தருகிறார்கள்?'' என்று பெண்களே! சொன்ன விளக்கம்.//

ஒரு குடும்பத்தின் கிட்டத்தட்ட முழு சொத்தாகிய வீட்டை மகளுக்கு கொடுத்து விட்டு மகனை உன் மனைவி வீட்டில் போய் வாழ் என்று சொல்வது அநீதி இல்லையா அல்லாஹ் குர்ஆனில் கட்டளை இட்ட சொத்து பங்கீட்டில் நமது மனோ இச்சையை பிபற்றினால் நம்மை நரகில் சேர்க்கத்தா. அல்லாஹ்வை பயந்து எப்போதுதான் நம் சமுதாயம் திருந்துமோ

எனதருமை சகோதர சகோதரிகளே கீழே உள்ள வீடியோவை பாருங்கள்

http://srilankamoors.com/Media-centre/Veedum-sheetham-ahumaa.html

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.