Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திரண்ட வளமும் சுரண்டல் கொள்கைகளும்... 25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 18, 2012 | , , , , ,

சிறு வயதில் ஒரு கதை படித்த அல்லது கேட்ட நினைவு.

ஒரு ஊரை அடித்து உலையில் போடுபவனும் மற்றொரு ஒன்றுமறியா அப்பாவியும் கூட்டாக ஒரு தொழில் செய்ய முடிவு செய்தார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்து கடைசியில் விவசாயம் செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். நெல் பயிரிடுவது என்று முடிவானது. அயோக்கியன் சொன்னான் விளைவதில் நிலத்துக்கு மேலே இருப்பது எனக்கு கீழே உள்ளது உனக்கு என்று. அப்பாவி ஒப்புக்கொண்டான். உழைத்து விளைந்த பயிரை எல்லாம் அயோக்கியன்  அடித்துக் கொண்டு போனான். அப்பாவிக்கு  தரைக்குக் கீழே இருந்த புல் பூண்டே கிடைத்தது. அவன் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த அயோக்கியன் இந்த முறை இன்னொரு பயிர்  போடலாம். நீ தரைக்கு மேலே இருப்பதை எடுத்துக்கொள் நான் தரைக்கு கீழே இருப்பதை எடுத்துக் கொள்கிறேன் கணக்கு சரியாகிவிடும் என்றான். அப்பாவி சந்தோஷமாக ஒப்புக்கொண்டான். விளைவித்த பயிர் மரவள்ளிக் கிழங்கு.   அறுவடை வந்ததும் ஒப்பந்தப்படி தரைக்குக் கீழே இருந்த கிழங்குகளை அநியாயக்காரன் அள்ளிக்கொண்டு போனான். அப்பாவி  தலையில் கைவைத்துக் கொண்டு ஐயோ என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டான். இந்த கதை போலத்தான் இருக்கிறது இந்தியா அரசு தனது மூலவளங்களை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு மக்கள் தலையில் கை வைத்துக்கொண்டு இருப்பது.  

ஒரு நாட்டின் செல்வ வளம் என்பது அந்த நாட்டில் கண்ணுக்குத் தெரியும் இயற்கை வளங்கள் மட்டுமல்ல. நாட்டில் நிலத்துக்கடியில் மறைந்து கிடக்கும் மூலவளங்களும்தான். இந்திய நாட்டின் பூகோளப்பாடத்தை பள்ளிகளில் படிக்கும்போது வாயில் நுழையாத பெயர் கொண்ட  கனிம வளங்கள் எல்லாம் இந்நாட்டில் இருப்பதைப் படித்து இருக்கிறோம். போதாக்குறைக்கு நமது கவிஞர்கள்  நாட்டில் ஓடும நதிகள் முதல் – மலைகள் முதல் – பூமிக்கடியில் புதைந்திருக்கும் இரும்பு, செம்பு, தங்கம், நிலக்கரி முதலிய அனைத்து செல்வங்களைப் பற்றியும் வரிவரியாகப் பாடி இருககிறார்கள். 

அரபு நாடுகளில் கடலுக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் அந்த நாடுகளின் பொருளாதார நிலையை உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டன. அண்மையில் ஆபிரிக்க நாடான அங்கோலாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரச்சுரங்கங்கள் அந்த நாட்டின் பொருளாதார நிலையை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இருக்கின்றன. இதேபோல்  தென் ஆப்ரிக்காவின் தங்க சுரங்கங்களும், சீன, மலேசியா, தாய்லாந்து நாடுகளின்  டின் வளமும், வட அமெரிக்காவின் வெள்ளியும், சீனா, அமெரிக்க, ஆஸ்திரேலியாவின் நிலக்கரியும் , சீன, ரஷ்ய, பிரேசில் நாடுகளின் மக்நீசியமும், ஜெர்மனியின் அலுமணியமும், சீன, ஜெர்மனி, கொரியா, உக்ரைன் நாடுகளின் இரும்புத்தாதுக்களும் அந்தந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர  உறுதுணையாக நிற்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம்  தேசிய சொத்துக்களான கனிம வளங்கள் தேசத்தின் சொத்துக்களாகவே நிர்வாகிக்கப்படுவதுதான். நாட்டின்  மூலவளங்கள் பொது உடமையாக்கப்பட்டு அவற்றின் மூலம் கிடைக்கும் இலாபங்கள் நாட்டின் பொது முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் அரசின் வருவாயாக ஆக்கப்பட்டு மக்கள் நலத்திட்டங்கள் அந்த வருவாயிலிருந்து செய்யப்படுவதுதான். 

இந்தியாவிலும் மறைத்து கிடக்கும் கனிம வளங்களுக்கு எந்தக் குறைவும் இல்லை. ஆனால் அது தொடர்பான நிர்வாகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. இந்த தேசத்தின் மக்களுக்குச் சொந்தமான   தேசியச் சொத்துக்கள். தண்ணீர் உட்பட்ட மூலவளங்கள், கனிம வளங்கள்  தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு சுரங்கம் தோண்டி சுரண்டப்படுகின்றன. இந்த தேசிய சொத்துக்கள் அரசியல்  காரணங்களுக்காக இந்த நாட்டின் பொதுமக்கள் நலனையும் பொருளாதார வளர்ச்சியையும் புறந்தள்ளிவிட்டு சொல்வாக்கும், செல்வாக்கும் படைத்த அரசியல்வாதிகளுக்கு அத்துமீறல்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. ஆந்திராவின் சுரங்க வளங்களை ஒரு சகோதரக் குடும்பம் கோடிகோடியாக கொள்ளையடித்து     குபேரர்களாயினர். இறுதியில் கைதாகி வழக்குத்தொடுக்கப்பட்டு ஜாமீனில் வெளிவர ஒரு நீதிபதிக்கு அவர்களால் கொடுக்கப்பட்ட இலஞ்சப்பணமே பத்துகோடிஎன்றால் அவர்கள் செய்த சுரங்க சுரண்டலின் பரிமாணம் எவ்வளவு இருக்கும்?

அண்மையில் இரு பெரும் ஊழல்கள் வெட்டவெளிச்சமாகி – உண்மையில் வெட்ட வெட்ட வெளிச்சமாகி – தோண்டத்தோண்ட நாட்டை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. ஒன்று, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் . இரண்டு, கிரானைட் கற்கள் உள்ளடக்கிய குவாரிகளின் சட்டத்துக்குப் புறம்பான கொள்ளைகள். இந்த இரண்டு கொள்ளைகளுக்கும் பின்னணியில் அரசியல் மற்றும் ஆதிக்க சக்திகள் இருந்தன . இருக்கின்றன. ஊடகங்கள் இப்போது இவைகளைப் பற்றி கதைகதையாய் அளந்துவிடுகின்றன. ஐந்து ரூபாய் கையில் இல்லாமல் தேநீர் கூட குடிக்க வசதியில்லாமல் திண்ணைகளில் சாக்கு மறைப்பைக் கட்டிக்கொண்டு படுத்துக்கிடக்கும் இந்நாட்டு    மன்னர்கள் தங்களுக்கு சொந்தமான செல்வங்களை இப்படி தனியார் சூறையாடுவதைப் பற்றி கவலைப்படாமல் கட்சி  ஊர்வலத்துக்கு லாரிகளில் ஆட்களை திரட்டிக்கொண்டு இருககிறார்கள். 

இப்போதெல்லாம் சில வியாபாரங்கள் அந்தப் பெயரால் வியாபாரம் என்று அழைக்கப்படுவதில்லை.  உதாரணமாக மணல் வியாபாரம் அப்படி அழைக்கப்படுவதில்லை. மணல கொள்ளை என்றே அழைக்கப்படுகிறது. அதேபோல் கிரானைட் வியாபாரமும், நிலக்கரி வியாபாரமும்  சுரண்டல் என்றும், சூறை என்றுமே அழைக்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் வியாபாரம் நில மோசடி என்றே அழைக்கப்படுகிறது.  இதற்கு காரணம் இந்த துறைகளிலெல்லாம் நடைபெறும் வியாபாரங்கள் ஒரு நியாயமான ஒப்பந்தம், மற்றும்  இலாப உபரியின்  (PROFIT MARGIN) அடிப்படையில்  நடைபெறுவதில்லை. ரூபாய் ஐம்பத்தி ஐந்து ஆயிரத்துக்கு வாங்கப்பட்ட ஒரு அரசு ஒதுக்கீடு  மனை சமீபத்தில் ரூபாய் பதினெட்டு இலட்சத்துக்கு விற்கப்பட்டது ஒன்றே இதற்கு உதாரணம்.

நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் தாங்கள் கட்சிகளுக்கு வளர்ச்சி நிதியாக பெற்ற தொகைகள் பற்றிய ஒரு அறிக்கையை  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள ஒரு விபரத்தின் அடிப்படையில் தேசிய தேர்தல் கண்காணிப்புத் துறை வெளியிட்டு இருக்கிறது. நாம் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கும் மாநில மற்றும் தேசிய அரசியல் katchகட்சிகள் நடத்தும் அதிகார சூத்திரத்தின் அடிப்படையில் செய்யும் அரசியல் வியாபாரத்தில் அடைந்த இலாபங்களை இப்படி பட்டியலிட்டு இருக்கிறது.


CONGRESS 2,348 CRORES,
BJP 994 CRORES,
BAHUJAN SAMAJ PARTY 484 CRORES,
MAXSIST COMMUNIST 417 CRORES,
SAMAJWADI  PARTY 278 CRORES,
ADMK 59 CRORES,
DMK 44 CRORES

ஆளும் பொறுப்பில் உள்ள கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிக்கும் இந்த நன்கொடைகள்  செல்லக்காரணம் அவைகளின் வாயடைக்கவே. “நெல்லுக்கு இறைத்த  நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே பொசியுமாம்” என்று ஆரம்பப்பள்ளியில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது.  எந்த ஒரு தனியாருக்கும் விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கப்படும்  நாட்டின் சொத்துக்களின் இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் நன்கொடையாக செல்ல   வேண்டுமென்பது  தலைநகரில் நடைமுறையில் உள்ள சம்பிரதாயம். இந்த சதவீதத்தில் குளறுபடி  ஏற்பட்டால் அதுவே பாராளுமன்றம் முடக்கப்படுவதற்கும், கூச்சல் குழப்பம் எற்படுத்தப்படுவதற்கும் காரணம் ஆகும். கொடுக்கப்படவேண்டியது கொடுக்கப்பட்டுவிட்டால் ஊழலுக்கு காரணமான அமைச்சர் ராஜினாமா  செய்ய வேண்டாம். பெட்டி போய்விட்டால் பிள்ளைகள் சுட்டிப்பிள்ளைகள் ஆகிவிடும்.    

இப்படி அரசியல் கட்சிகள் கொள்ளை இலாபம் அடிக்கும் வேளையில் பல சிறு தொழில்கள் நசிந்துவிட்டன. விவசாயம் பொய்த்துவிட்டது. விலைவாசி ஏறிவிட்டது. மக்கள் கடனாளியாகிவிட்டனர். பலர் தற்கொலை செய்துகொண்டார்கள். கிராமியப் பொருளாதாரம் தனது அடையாளத்தை இழந்துவிட்டது. அரசு போடும் இலவசப் பிச்சைகளினால்  உழைத்து உண்ணும பழக்கம் மருகிவருகிறது.  

வருமானம் வரும் வழி குறுகிப்போன நிலையில், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் வரும் வழிகளையெல்லாம் குறைந்த விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் ஜேப்படி திட்டங்களின் மூலம்  தனக்குத்தானே இழப்பை ஏற்படுத்திக்கொள்ளும் போக்கு, அண்மையில் அதிகமாக இருக்கிறது.

நிலக்கரி, கிரானைட், வெள்ளி, தங்கம், மக்னீசியம், ஜிங்க், இரும்புத்தாதுகள் போன்ற நாட்டின் செல்வங்கள் நிலத்துக்கடியில் நிறைய இருக்கின்றன. இவைகளை மட்டுமல்லாமல் பணி அளவில் 2G, 3 G, மற்றும் சில அரசுக்கு பெரும் இலாபம் ஈட்டித்தரும் துறைகள் சார்ந்தவைகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்யும்போது அரபு நாடுகளை அல்லது மற்ற உலகின் பாகங்களில் செய்வது போன்ற அரசு முறையான முறைகளை மேற்கொண்டு ஒதுக்கீடு  , விலை நிர்ணயம் மற்றும்   விற்பனை செய்தால் , ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு கோடிக்கணக்கில் இலாபம் வரும். அதை வைத்து அண்மையில் ஏற்பட்ட  டீசல் விலை உயர்வு போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள முடியும். நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு அந்நிய நாட்டில் பதுக்கப்படுகின்றன. மக்களோ டீசல் விலை உயர்வை எதிர்த்து ஒரு  நாள் உண்ணாவிரதம் இருந்து  அந்த சடங்கை நிறைவு செய்கின்றனர். இப்படி  ஜனநாயகத்தின் பெயரில் நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு, மக்கள் நலனின் குரல்வளை நெறிக்கப்படுகிறது.

ஜனநாயகம் பெற்றுப்போட்ட வேண்டாத பிள்ளைகளில் ஊழல் பிள்ளையே கண்டிக்கவும் தண்டிக்கவும் படவேண்டிய  மூத்த பிள்ளை. இதனால் நாடு தனது மூலவளங்களை இழந்துகொண்டு இருக்கிறது. மூலவளங்கள் இழப்பு ஒரு நாட்டை திவாலாக்கி நாட்டு மக்களின் நலனுக்கு வேட்டுவைத்துவிடும்.

ஆபிரஹாம் லிங்கன் கூறினாராம்

DEMACRACY OF THE PEOPLE, FOR THE PEOPLE AND BY THE PEOPLE –என்று.

ஆனால் உணமையில் நடப்பது

DEMACRACY OFF THE PEOPLE, FAR THE PEOPLE AND TO BUY THE PEOPLE- என்பதே. 

ஜனநாயகம் என்பது இன்று நாட்டில் நடப்பதைப்பார்த்தால் மக்கள் நலனை விட்டு விலகி  வெகுதூரம் போய் ஆள்வோர் மக்களை அழும் பிள்ளைக்கு வாழைப்பழம் தருவதுபோல் இலவசம் , மற்றும் ஓட்டுக்குப்  பணம் என்று விலைகொடுத்து வாங்கும் அவலத்துக்கு தள்ளி விட்டது.

எப்போதாவது விடியுமா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்.

இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் சொல்லப்பட்ட மேற்சொன்ன உதாரணம் மிகவும் பொருத்தமானதாகும்.

“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)

லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.

ஹஜ்ரத் உமர் ரலியன்ஹு அவர்களின் நீதமான அரசை நாம் அனைவரும் அறிவோம். காந்திஜி கூட அவர்களின் ஆட்சியைப்புகழ்ந்து கூறியுள்ளார்.

///எப்போதாவது விடியுமா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்.///

இறைச்சட்டங்களும் இறைத்தூதரின் வழிமுறைகளும் செயல்படுத்தப்பட்டாலே தவிர இது சாத்தியமில்லை

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

பூமிக்கடியில் உள்ள சொத்துக்கள் அரசுக்கு சொந்தம் இது இந்திய சட்டம் அரசு என்பது இந்திய மக்கள். (பொதுமக்கள்) கணிம வளங்களின் மூலம் வரும் வருவாய் நாட்டுமக்களை தனி நபர் வருமானத்தில் ஏற்றம் இருந்தால் பூமிக்கடியில் உள்ளசொத்து அரசுக்கு சொந்தம் என்பதில் நியாயம் இருக்கும் நடப்பதோ வேரு அரசென்பது ஆள்பவனும் அவனின் அடிவருடியும் அன்னியமுத்லீட்டார்களுமே பிறகு என்னசெய்ய
காக்கா சொன்னது போல் ஏமாலி விவசாயிதான் ஓட்டுப்போடும் நாமெல்லாம் அல்லாதான் அவர்களுக்கு ஹிதாயத் கொடுக்கனும்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கொள்ளையர்களுக்கு கொடிபிடிக்கும் அரசியல் வாதிகளிடமிருந்து கொடியை பிடுங்காதவரயிலும் நம் நாடு பள்ளம் விழுந்து கொண்டேதான் இருக்கும் என்பதை அழகிய முறையில் அமைதியின் ஆளுமையில் பொறிக்கப் பட்டிருப்பதை நம் ஊர் மக்கள் மட்டுமில்லை எத்தனையோ ஊர் மக்கள் ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

// இறுதியில் கைதாகி வழக்குத்தொடுக்கப்பட்டு ஜாமீனில் வெளிவர ஒரு நீதிபதிக்கு அவர்களால் கொடுக்கப்பட்ட இலஞ்சப்பணமே பத்துகோடிஎன்றால் அவர்கள் செய்த சுரங்க சுரண்டலின் பரிமாணம் எவ்வளவு இருக்கும்?//

மறுமையை நம்பக் கூடியவர்கள் துணிச்சலாக இலஞ்சம் கொடுக்கும் போது.மறுமையை மறுக்கும் அவர்கள் கொடுப்பது ஆச்சிரியப் படுவதற்க்கில்லை.

இவர்கலெல்லாம் மறுமையில் பணத்திற்கு பதிலாக. தன்னையே நரகத்திற்கு இலஞ்சமாக கொடுக்கணுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.

அதிரை சித்திக் said...

தமிழூற்று மாத இதழில் ஒரு பக்க
கட்டுரை ராஜயோகி என்ற புனை பெயரில்
எழுதி வந்தேன் ..ஒரு முறை எழுதிய
கட்டுரையின் சாரம் ...மனித உடன்பினை
உரிமை கொண்டாடலாம் உள்ளுக்குள் உள்ள உயிரை
எடுக்க உரிமையில்லை அது போன்று நிலத்தினை
உரிமை கொண்டாடலாம் நிலத்திற்கு அடியில் உள்ள
கனிமத்தை உரிமை கொண்டாட முடியாது ..
அரசியல் வாதிகள் உயிரையும் எடுப்பார்கள்
நிலத்திற்கு அடியில் உள்ள கணிமதையும் எடுப்பார்கள்
"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா'..என்று
கவுண்டமணியின் குரல் கேட்கிறது

Shameed said...

இறைவன் நமக்கு அளித்த வளங்களை சமமாக பங்கிட்டால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாய் இருப்பார்கள்

இயற்க்கை வளங்கள் பற்றி வளமாய் ஆக்கம் தந்த மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்திய அரசாண்மையின் அவலம் பற்றிய தெளிவாக ஆக்கம்!

அரசியல்வாதிகள் கீரியும் பாம்புமாய் இருந்தாலும் மக்களை மடையனாக்கி அங்கே நரித்தந்திரம் கையாளப்பட்டு அவர்களே பங்குதாரராகி நாமோ கை நீட்டி அரசின் பொய் வாக்கினை நம்பி வாக்களித்து விட்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

Iqbal M. Salih said...

டாக்டர் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்கட்கு,

தங்களின் கட்டுரைகளைத்தொடர்ந்து படித்து வருகிறேன். பொருளாதாரத்தில் தங்களின் பரந்த அறிவும் சமூக நலன் குறித்த தங்களின் Satirical and ironical writings-என்னைப்போன்ற இளையவர்களைப் பிரமிக்க வைக்கின்றன! அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஹயாத்தைத் தந்து இன்னும் நிறைய எழுதுங்கள், இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Iqbal M. Salih சொன்னது…

டாக்டர் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்கட்கு,//

கலாநிதி ஆஹா ! தகுமான பட்டம் !

ஒவ்வொரு கட்டுரையின் கரு தருப்பிலிருந்து அதன் பின்னால் தாங்கள் எவ்வாறு சிரத்தை எடுக்கிறீர்கள் என்பதை நன்கு உணர்ந்ததால் நிச்சயம் அதிரைநிருபர் தளமே "டாக்டர்" பட்டம் வழங்கும்.

ஒவ்வொரு ஆய்வு கட்டுரையினை முடித்ததும் அடுத்ததொரு ஆய்வுக்கு தயாராவதும் தங்களிடம் கற்றுக் கொண்டதில் அந்த கால அளவு எங்களுக்கு நல்ல பலனே... இது மிகைப்படுத்திச் சொல்லவில்லை, புகழ்ச்சியும் அல்ல, இதுதான் உண்மை.

பதிவினை அனுப்பித் தந்ததும் அதற்கான தொடர் உரையாடல்களில் எங்களுக்கு அளிக்கும் முழு சுதந்திரம் என்றுமே எங்களை பெருமை கொள்ள வைக்கும்.

தங்களின் பதிவில் அதிகம் என் கருத்துக்கள் அதிகமிருந்திருக்காது, காரணம் நிறைய நாம் உரையாடியிருப்போம் அதன் பின்புலத்தில் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

//அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஹயாத்தைத் தந்து இன்னும் நிறைய எழுதுங்கள், இன்ஷா அல்லாஹ்.//

அலாவுதீன்.S. said...

சகோ. இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

வல்ல அல்லாஹ்வின் ஆட்சி ஏற்படும் வரை இந்த அவலங்கள் இன்னும் வீரியமாக தலைவிரித்தாடும்.

நாட்டின் வளங்களை வெளிநாட்டு கொள்ளையர்களுக்குத் தாரை வார்த்த இந்திய அரசியல் வியாதிகள், தற்பொழுது சிறு தொழிலில் கொள்ளையடிக்க வால்மார்ட், கேரிபோர் போன்ற கொள்ளையர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள் அரசியல் வியாதிகள்.

//// எப்போதாவது விடியுமா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம். /////

இனி ஒரு சுதந்திரத்திற்கு மக்கள் தயாராகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் விரைவில்.

தங்களின் ஆய்வு கட்டுரைக்கு வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

அன்பின் தம்பிகள் இக்பால் மற்றும் அபூ இப்ராஹீம்.

என்ன ஆச்சு? இக்பால் நகைச்சுவையுடன் தொடர்புடைய அருமையான தொடர் எழுதுகிறீர்கள். அ.இ. அதை நெறியாள்கிறீர்கள்.அதற்காக என்ன இப்படி என்னை வைத்து. உங்கள் அன்பு காக்காக்களில் ஒருவனாக இருப்பதே உயர்ந்த நிலை என்று கருதுகிறேன். எனவே இனி வேண்டாமே. ப்ளீஸ்.

தம்பி இக்பால் மிக சின்னஞ்சிறு வயதில் பார்த்தது. இன்று அமெரிக்காவில்
அல்லாஹ் உதவியால் இருப்பது அறிய மகிழ்ச்சி. எங்களுடன் இணைந்திருப்பதிலும் நல்ல ஒரு தொடர் தொடங்கி இருப்பதையும் காண இரட்டிப்பு மகிழ்ச்சி.

நமக்குள் நாலு வார்த்தை நல்லபடி சொல்லிக்கொள்வது கூட சிலருக்கு பிடிக்காத சூழ்நிலையில் உயர்ந்த வார்த்தை சொல்லி இருக்கிறீர்கள். அந்த அன்புக்கு நன்றி.

Iqbal M. Salih said...

நாந்தான் என் நெருங்கிய நண்பன் ஜலீலுடன் சிறு வயதில் உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேனே டாக்டர் காக்கா? ஹோமியொபதி க்ளினிக் எதிரில் உங்க வீடு. உங்க உம்மா அவனுக்கு மாமி. ரொம்ப நேரம் உட்கார்ந்து தங்கள் தாயாருடன் பேசிக்கொன்டிருப்போம். கண் மருத்துவம் பார்த்தபிறகு பரவாயில்லையா டாக்டர் காக்கா? நீங்கள் மறுத்தாலும் சரி. இன்றிலிருந்து நீங்கள் டாக்டர்தான். இது அதிரை நிருபர் மீது ஆணை!

Iqbal M. Salih said...

என் என்பது விட்டுப்போய்விட்டது. அதிரை நிருபர் மீது என் ஆணை என வாசிக்கவும்.

Yasir said...

ஆச்சரியம் தரும் ஆய்வுக்கட்டுரைகள்...பிரச்சனைகளை அலசி அதனை கழுவ தீர்வுகளும் தரும் பொருளாதார மேதை டாக்டர் அன்சாரி மாமாவிற்க்கு வாழ்த்துக்களும்,துவாக்களும்

இந்த DEMOCRACY னால நாமெல்லம் DEMO"CRAZY" ஆனது உண்மை

sabeer.abushahruk said...

டாக்டர்,இபுறாகீம் காக்கா அவரகளுக்கு,

அழைப்பது நாங்கள்; தாங்கள் அனுமதித்தால் மட்டும் போதும். சரி, இப்ப என்ன? ஏதாவது பல்கலைக்கழகம் தரவேண்டுமா? தங்கள் தோழர் மதிப்பிற்குரிய அப்துல் காதர் சார் அவர்களிடம் விசாரியுங்கள், தாங்கள் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் பொருளாதார/மனித வள கட்டுரைகளுக்கு PhD தருவார்களா மாட்டார்களா என்று?

நாம்தான் இப்படி இருக்கிறோம். டாக்டர் பட்டம் வாங்குவது எல்லாம் எதற்கு என்று. சரிசரி நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். தொகுத்து ஒருநாள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் நிச்சயம் அழைத்துத் தரும் "டாக்டர்" பட்டம்.

அதுவரை, அதிரை நிருபரின் வாசக வட்டத்தால் அழைக்கப்படுவதை அனுமதித்தால்தான் என்னவாம்?

வழக்கம்போல் சக்கைப்போடு போடுகிறது இந்தப் பதிவும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Yasir said...

A.N moderator...i think there is a typing mistake in "DEMOCRACY" please change "A" to "O"..Am i right mama ??

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

உங்கள் ஆக்கம் படிக்கும் போது யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

India is not a poor country, Indians are poor.

இப்படி கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளின் கையில் இருந்தால் அதை வைத்து என்னதான் செய்யப்போகிறார்கள்.?

KALAM SHAICK ABDUL KADER said...

//அழைப்பது நாங்கள்; தாங்கள் அனுமதித்தால் மட்டும் போதும். சரி, இப்ப என்ன? ஏதாவது பல்கலைக்கழகம் தரவேண்டுமா? தங்கள் தோழர் மதிப்பிற்குரிய அப்துல் காதர் சார் அவர்களிடம் விசாரியுங்கள், தாங்கள் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் பொருளாதார/மனித வள கட்டுரைகளுக்கு PhD தருவார்களா மாட்டார்களா என்று?//

உண்மையில் என்னுள்ளத்தில் உதித்ததும் எழுத எண்ணிய வரிகளையே கவிவேந்தர் சபீர் அவர்களும் உடன் சொல்லி விட்டதால் முழுதாக வழிமொழிகின்றேன். அடியேன் துவக்கமாக “பொருளாதார வல்லுநர்” என்றே அழைத்தேன் (நற்பெயருடன் பட்டம் தருவது ஆகுமானது தானே காக்கா) எனக்கும் அதில் 100 விழுக்காடு உடன்பாடு உண்டு. பட்டங்களைத் தானாக வரவழைத்துக் கொள்வது தான் கூடாது; மதிக்கும் நல்லுள்ளங்கள் மாண்புடன் வழங்கும் பட்டத்திற்கு முழுமையான தகுதி தங்கட்கு உண்டென்பதும், கவிவேந்தர் சபீர் அவர்கள் ஆலோசனையும் ஏற்க முடியும் என்பதும் என் நிலைபாடு. காரணம்: ph.d க்கு ஆய்வுகள் செய்து அப்பட்டம் பெறுவோரின் ஆய்வுகளை விடப் பன்மடங்கு ஆக்கப்பூர்வமானதும் சிந்தனைக்குரியதுமான உங்கள் ஆக்கம் / ஆய்வுரை என்ற தகுதிக்கு வரும் வேளையில் “டாக்டர்” பட்டம் சாலப் பொருத்தம் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாது.

மீண்டும் நினைவூட்டுகின்றோம்: அமெரிக்காவிலிருந்து வான்வழியாக வந்திறங்கி அதிரை நிருபர் எனும் பல்கலைக்கழகத்தில் வழங்கும் இப்பட்டம் ஏற்புடையதே என்பதால் , தங்களை “டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா” என்றே மாண்புடனும் மதிப்புடனும் அழைப்போம்.

அடியேன் நேற்று அன்புத் தம்பி ஜாஹிர் அவர்களை “உளவியல் மருத்துவர்” என்று அழைக்கவில்லையா?

அதிரை நிருபர் எனும் வலைத்தளம் அதிரையின் பல்கலைக்கழகம்! “நல்லதொரு குடும்பம் பலகலைக்கழகம்” என்றான் ஒரு கவிஞன்; நாம் எல்லாரும் “நல்லதொரு குடும்பமாகப்” பழகி வருகின்றோம்- அவ்வகையிலும் இஃது ஒரு பல்கலைக்கழகம்; மேலும், இங்கு மூத்த அறிஞர்கள், தமிழ் ஆசான்கள், உளவியல் போதகர்கள், கவிஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், பொருளாதார ஆசானாகிய தாங்கள்.. இப்படி அறிவூற்றின் கண்ணாக விளங்கும் இவ்விடம் ஒரு பல்கலைக்கழகமே; எனவே, இப்பல்கலைக்கழகம் வழியாக வழங்கப்படும் “டாக்டர்” பட்டம் தங்களின் ஆய்வுரைக்கான சான்றிதழ் என்றே கருதுக.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி இக்பால்,

நீங்கள் எனது மைத்துனர் ஜலீல் மற்றும் எங்கள் வீடு பற்றி சொன்னவை உண்மையே.
நன்றாக உங்களை நினைவு இருக்கிறது. அண்மையில் ஊர் வந்து சென்ற செய்தி மருமகன் சாவன்னா அல்லது ஜலீல் சொல்லி இருந்தால் சந்தித்து இருப்பேனே. மிக்க மகிழ்ச்சி.

Ebrahim Ansari said...

அதிரை நிருபர் தளத்தின் இதயத்தின் இடது வலது ஆரிக்கிள் மற்றும் வென்றிக்கில்களே! இரு கவிப் பெருமகன்களே! நீங்கள் இருவரும் சொல்லும் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல எனக்கு வார்த்தை வரவில்லை. அல்லாஹ் பெரியவன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//நீங்கள் இருவரும் சொல்லும் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல எனக்கு வார்த்தை வரவில்லை. அல்லாஹ் பெரியவன். //

JAZAKKALLAAH KHAIRAN, DOCTOR EBRAHIM ANSARI KAAKKAA.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

பாவம்! பூகோளம் தெரியாத பெண்களோ பூக்கோலம்
போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
அறிவியல் அறியாத ஆண்களோ அரசியல்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்!
அப்பாவியோ சுண்டல் செய்கிறான் _ விற்றுப் பிழைக்க!
அப் பாவியோ சுரண்டல் செய்கிறான் _ சொத்து சேர்க்க!
பூமிக்கு வெளியே இருந்தே, பூமிக்கு உள்ளே உள்ள
கனிமங்களைக் கொள்ளை அடிக்கிறானே,
இவனை பூமிக்கு உள்ளே அனுப்பி வக்கிறோமே,
அங்கே போய் எவ்வளவு கொள்ளை அடிப்பானோ!

வா..

KALAM SHAICK ABDUL KADER said...

வா...வ் வா..வ்/ வாவன்னா சார்,

ஓவியம் தீட்டுகின்ற உங்களால் இன்றுநான்
காவியம் தீட்டுதல் காண்

அதிரை சித்திக் said...

வா வண்ணா சாருக்கா
கவி நயத்திற்கு பஞ்சம் ...!
பள்ளி மீலாது விழாவில்
நபியை பற்றி கூறுகையில்
மக்கா ..இருந்த மக்களை (சிலேடை)
மதி நாவால் திருத்திய மாநபியே ..!(சிலேடை)
பூகோளம் பாடம் நடுத்துகையில்
ஜம்மு காஸ்மீர் இந்தியா மேல்
ஜம்முனு உட்கார்ந்து இருக்கு
என்று கவி நயமாய் பாடம்
நேடத்திய மா மேதை
அதிரையில் கடை வைத்திருக்கும் போது
கடை வாசலில் தனம் ஒரு கவி காண்பேன்
உறவு தொடரில் ஆசிரியர் மாணவன்
உறவில் வாவண்ண சார் குணம்
பற்றியும் பெருமை பற்றியும்
அவசியம் கூறுவேன்

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த ஆக்கம் படித்து பின்னூட்டம் இட்டதுடன் தங்களின் அன்பையும் வெளிப்படுத்திய அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி. என்றும்போல் உங்களின் அன்புக்கு என்னை அருகதை உள்ளவனாக தொடர்ந்து இறைவன் ஆக்கிவைப்பனாக ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு புதிய சுவையான பகிர்வுடன் சந்திக்கலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஆனால் உணமையில் நடப்பது

DEMACRACY OFF THE PEOPLE, FAR THE PEOPLE AND TO BUY THE PEOPLE- என்பதே. //

இபுறாஹீம் அன்சாரி காக்கா,

இது அரசாங்கத்துக்கு மட்டுமால்ல, சமுதாய அமைப்புகளுக்கும் பொருந்தும் தானே...

:)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.