Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2012 | ,

தொடர் - 3
பட்டப்பெயர்கள்:

நபிகள் நாயகத்தை, தூதராக அனுப்பிய அல்லாஹ், "நற்செய்தி சொல்பவர் (முபஷ்ஷிர்)" என்றும் (அல்-குர்ஆன் 2:223); "மகத்தான நற்குணம் உடையவர்" என்றும் (அல்-குர் ஆன் 68:4); "அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரி" (33:21) என்றெல்லாம் அழைக்கின்றான்.

சொந்த ஊர்க்காரர்கள் "அல்-அமீன் (நன்நம்பிக்கையாளர்) என்ற பட்டமளித்தனர்.

அன்னை கதீஜா (ரலி), "யா அபல்காசிம் (காசிமின் தந்தையே)" என்று பிரியமுடன் அழைத்தனர்.

"என் உயிரினும் மேலானவரே!" என்றும் "என் தாய் தந்தையைவிட மேலானவரே" என்றும் சத்திய சஹாபாக்கள் போற்றி மகிழ்ந்தனர்.

மேற்கண்ட பெயர்கள் மட்டுமல்லாது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்னும் பல அழகிய பெயர்களாலும்  பல சமயங்களில் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அண்ணலாரின் தோழமை சற்றேனும் சடைவு கொண்டதாகவோ அல்லது சுவாரஸ்யமற்ற மந்தமான சூழல் நிலவக்கூடியதாகவோ அவர்களின் தோழர்களுக்கு  ஒருக்காலும் இருந்ததேயில்லை!

அப்துல்லாஹ் இப்னு அல்-ஹாரித் பின் ஜாஸ் (ரலி) என்ற தோழரின் கூற்று: "புன்முறுவல் பூத்த புன்னகை வேந்தராகவே பொன்மனம் கொண்ட பெருமானார் எங்களுக்குத் தோன்றினார்கள், மேலும், பார்க்கும்போதல்லாம் புத்துணர்ச்சியுடன் பெருமானாரைத்தவிர வேறு யாரையும் யான் கண்டதேயில்லை!" (அஹ்மது 17251).

தம்  அருமைத் தோழர்கள் சிலரை நபி (ஸல்) அவர்கள் சில செல்லப்பெயர்களிட்டு அழைத்தார்கள். அந்த செல்லப்பெயர்களால் அழைக்கப்படுவதால் பூரிப்பும் புளகாங்கிதமும் சஹாபாக்களுக்கு ஏற்பட்டதே தவிர,ஒருபோதும் அந்தப் பெயர்கள் தோழர்களுக்கு வருத்தமேற்படுத்தியதேயில்லை!

அபூ துராப்:
ஒருமுறை உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் தம் அருமை மகள் பாத்திமாவின் வீட்டுக்குக்கு வருகை தந்து, "உன் கணவர் எங்கே?" என்று வினவினார்கள். "தந்தையே! எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய விவாதம் நிகழ்ந்தது. எனவே, என் மீது கோபமாக அவர் வெளியேறி விட்டார்" என பதில் கிடைத்தது. ஆளை அனுப்பித் தேடியதில் மஸ்ஜித் நபவீயில் கண்டதாகத் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தால், அலீ(ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.  அதைப் பார்த்ததும் அண்ணலார் அவர்கள் மனம் நெகிழ்ந்து, அவர் மீது படிந்திருந்த மண்ணைத் தட்டித் துடைத்து விட்டவாறே,  "எழுந்திரும்! ஓ அபூதுராப். (மண்ணின் தந்தையே) எழுந்திரும்!" என்றார்கள். அவர் உறக்கம் கலைந்தது. அழகிய அழைப்பால் வருத்தம் மறைந்தது. அன்றிலிருந்து அந்த செல்லப்பெயர் நிலைத்துப்போனது. அவருக்கும் அது மிகப் பிடித்துப்போனது. (புஹாரி  6280).

ஒருவர் மிக விரும்பும் ஒன்றின் பெயரோடு 'அபூ' சேர்த்துச் செல்லப் பெயராக்கி விளிப்பது அரபியர் வழக்கம். ஆடுகளை அதிகம் நேசிப்பவர் 'அபுல்கனம்'  என்றும் வல்லூறுகளை நேசிப்பவர் 'அபூஸகர்' என்றும் விளிக்கப்படுவது அரபுகளின்  மரபு. ஐக்கிய அமீரகங்களின் தலைநகர், மானின் தந்தை (அபூதபி) என்பவரின் பெயரால் விளங்குகிறது. தற்போது இணையத்தில் உலவும் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கூட 'அபூ' எனும் சொல்லோடு, தாம் அதிகம் நேசிக்கும் மகன்/மகளின் பெயரை இணைத்து, புனைந்துகொண்டு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. (உதாரணம் : அபுஇப்ராஹீம், அபுஷாருக், அபுசுஹைமா).

அபூபக்ரு (ரலி):
இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல் கஅபா.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் அருமைத் தோழருக்கு அப்துல்லாஹ் எனப் பெயரிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய தொடக்கத்தில்  வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் அல்-சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற காரணப் பெயரும் அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அபூபக்ரு என்பதும் அவர்களின் காரணப் பெயராகும்.   அண்ணல் நபி அவர்கள், மூமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மணந்த பின்னர், அபூபக்ர் (கன்னிப்பெண்ணின் தந்தை) என கண்ணியமாக அழைக்கப்பட்டார்கள்; அப்பெயரே நிலைத்துப் போனது. (அல் இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088). 

அபூஹுரைரா (ரலி):
கைபர் யுத்தம் நிகழ்ந்த சமயத்தில் பனீ-தவ்ஸ் கிளையிலிருந்து வந்து நபிமணி (ஸல்) அவர்களைச்  சந்தித்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதும் அப்துஷ் ஷம்ஸு என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த அவர் அப்துர்ரஹ்மான் என அழைக்கப்பட்டார். அபாரமான நினைவாற்றல் கொண்டிருந்த அவர், திண்ணைத் தோழர்களில் ஒருவராகத் தன்னையும் இணைத்துக்கொண்டார். அல்லாஹ்வின் தூதரை அதிகம் அண்மியிருந்ததால் அண்ணலின் அங்க அசைவுகளையும் அதோடு அவர்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் உள்வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் இவர் அறிவித்த ஹதீஸ்கள் மட்டும் 1600 க்கும் அதிகம் என்று வரலாற்றுக் குறிப்பேடுகள் கூறுகின்றன.

பூனைகள் மீது அதிகம் விருப்பங்கொண்டிருந்ததால் நபி(ஸல்) அவரைப் "பூனைத் தோழன்" (அபூஹிர்!) எனச்செல்லமாய் அழைத்தார்கள். அப்துஷ்ஷம்ஸு அத்தவ்ஸீ, அப்துர்ரஹ்மான் அத்தவ்ஸீ என்றெல்லாம் குறிப்பிட்டால் நாமெல்லாம் விளங்காமல்  விழிப்போம். "அபூஹுரைரா" என்றாலோ... 'அட, நம்ம அபூஹுரைரா' என்று சட்டெனப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அண்ணலின் அழைப்பு, உலகப்புகழ் வாய்ந்ததாக அமைந்துபோனது. 

இருசெவிச்சிறுவன்:
அனஸ் இப்னு மாலிக் (ரலி) சிறுபிராயத்திலிருந்தே நபி(ஸல்)அவர்களின் ஊழியத்தில் இருந்தார். ஓர் இனிய நாளில் அவரை "ஓ!  இரண்டு காதுகள் கொண்டவரே!" என அண்ணலார் அன்புடன் அழைத்தார்கள் என நபி மொழிக் குறிப்புகள் கூறுகின்றன. (அபூதாவுத் 4984).

நிற்க, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் அருள்மறையாம் குர்ஆனிலே பட்டப்பெயர் குறித்துக் கூறுவதைக் காண்போம்.
بسم الله الرحمن الرحيم

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَِ

முஃமின்களே! ஒரு சமூகத்தார்  இன்னொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்.  (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர்(தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்;  எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல் ஹுஜுராத் 11 )

சிந்திக்கவும்:
கெட்டப்பெயர் வைத்து அதனைப் பட்டப்பெயர் என அழைக்கும் அசிங்கமும் அவலமும் குறிப்பாக, வாய் கிழிய மார்க்கம் பேசும் நம் சமூகத்தில்தான் அதிகம் என்பதே ஒரு வெட்ககேடான, வேதனை நிறைந்த விஷயமாகும். இந்த கணத்திலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் சக மனிதனை அவன் விரும்பாத கெட்டப்பெயர் வைத்து கூவி அழைக்கும் இந்த ஈனச்செயலை  உடனடியாக நிறுத்த வேண்டும். அவன்தான் உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த அடிமை. நபியை நேசிக்கும் நல்ல முஸ்லிம். அடையாளம் சொன்னால்தான் விளங்குமென்றால் நபி நாதர் சூட்டியது போல் நல்ல பெயர் சூட்டலாம் அல்லது அவன் தந்தையின் மகன் என அழைக்கலாம் (உதாரணம் : அபுல் கலாம் s/o. ஷைக் அப்துல் காதிர்).
 தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

24 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

காத்திருக்க வைத்து வெளிவரும் பதிவுகளில் அழகிய கருத்துக்களை தாங்கி வரும் பதிவுகளில் இதுவும் ஒன்று இது என்றால் மிகையாகாது.

ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோதரர் அவர்களே!

Shameed said...

அபூ க்களின் விளக்கம் மற்றும் அதான் எடுத்துக்காட்டுக்கள் அருமை

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உயிரிலும் மேலான நபிகளார் பற்றிய அழகான தகவல்கள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

Anonymous said...

தெளிந்த நீரோடையில் நீச்சல் அடிக்கும் சுகம், அற்புதமான எழுத்து நடை, நேர்த்தியான தொகுப்பு.

கற்றரிந்தவர்களின் களம் என்பதை இந்த பதிவின் வாயிலாக சாட்சி அளித்திருக்கிறீர்கள்.

மாஷா அலலாஹ், சகோதரர் அவர்களுக்கு இன்னும் வளமான எழுத்தாற்றலை அல்லாஹ் வழங்குவானாக.

அதிரைநிருபர் வலைப்பூவில் மவுனமாக வாசித்து வந்த என்னையும் கருத்து எழுத தூண்டியிருக்கிறது இந்த பதிவு.

ஹாரூன்
வேலூர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இக்பால் M ஸாலிஹ் காக்கா,

தங்களின் நிதாதமான பேச்சை போல் உங்கள் எழுத்து நடையும்.. மாஷா அல்லாஹ்...

// ஒவ்வொரு முஸ்லிமும் சக மனிதனை அவன் விரும்பாத கெட்டப்பெயர் வைத்து கூவி அழைக்கும் இந்த ஈனச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். அவன்தான் உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த அடிமை. நபியை நேசிக்கும் நல்ல முஸ்லிம்.//

ஒருவன் விரும்பாத கெட்டப்பெயரை வைத்து கூவி கூவி விமர்சனம், செய்வது வழக்கு மொழியாகிவிட்டது. மேல் சொன்ன வரிகள் அனைவருக்குமான அறிவுரை.

ஜஸக்கல்லாஹ் ஹைர்..

Ebrahim Ansari said...

// நபியை நேசிக்கும் நல்ல முஸ்லிம். அடையாளம் சொன்னால்தான் விளங்குமென்றால் நபி நாதர் சூட்டியது போல் நல்ல பெயர் சூட்டலாம் அல்லது அவன் தந்தையின் மகன் என அழைக்கலாம் (உதாரணம் : அபுல் கலாம் s/o. ஷைக் அப்துல் காதிர்).//

தம்பி இக்பால் அவர்களே! தெரிந்தவர்களை உதாரணமாக சுட்டி விளங்கவைப்பது ஒரு சிறந்த நுணுக்கமான பயிற்சி. அருமையான நடை அற்புத கருத்துக்கள். மாஷா அல்லாஹ்.

Yasir said...

மாநபியின் மாண்புகளையும் அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் உங்கள் எழுத்தின் அழகிய நடையில் படிக்கும்போது...மனம் அமைதிகொள்கிறது,ஒரு விதமான சந்தோஷம் மனதை சூழ்ந்து கொள்கிறது..அல்லாஹ் உங்களுக்கு விசாலமான அறிவைக்கொடுத்து இத்தொடர் மென்மெலும் மெருகு பெற துவாச்செய்கின்றோம்......

இப்படிக்கு
அபூசாஜித்

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புத்தம்பி இக்பால்!
ஆற்றொழுக்கு போன்ற உன் அழகிய தமிழ் நடையும் தெளிவான கருத்தும் உன்னோடு நேராக உரையாடுவது போன்ற உணர்வை எனக்கும் மற்றும் உன்னோடு நெருங்கிப் பழகிய பிற நண்பர்களுக்கும் ஏற்படுத்துகிறது.
நாம் எல்லோரும் பேசிக் கலந்து உரையாடிய இன்னும் பல அருமையான நினைவுகளை நீ மீண்டும் நினைவு கூர்வாய் என்று நம்புகிறேன். நம் அன்னை ராபியா பற்றி நீ கூறுவாய் என எதிர் பார்க்கின்றேன்.
Wassalam
N.A.Shahul Hameed

ZAKIR HUSSAIN said...

இக்பால்...உன் எழுத்துக்களில் தோன்றும் ஆதாரமான விசயங்கள் எங்களுக்கு புதிது. பெருமானாரின் வாழ்க்கையில் சில விசயங்களை எடுத்து சொல்லும்போது அந்த மாநபியை பார்க்காத காலத்தில் வாழ்கிறோமே என்ற வருத்தம்தான் வருகிறது.

இன்னும் உன் எழுத்துக்களை எதிர்பார்ப்பதுடன்...ஒரு சின்ன ரிக்வெஸ்ட்....பயண அலைச்சலில் உன் ஹெல்த் மீதான கவனத்தை மறந்துவிடாதேடா..

sabeer.abushahruk said...

எல்லாம் பட்டப்பெயர்கள் என்று சிலர் புரிந்துவைத்திருக்கிறார்கள். அண்ணாவென்று அண்ணாதுரையையும் அம்மாவென்று ஜெயலலிதாவையும், அய்யா என்று ராமதாஸையும் அழைப்பது பட்டப்பெயரல்ல, மரியாதை நிமித்தம் இட்ட பெயர்.

மருத்துவர், பொறியியல் வல்லுனர், ஓவியர் என்பதெல்லாம் தொழிலாகுபெயர்கள், பட்டப்பெயர்களல்ல.

அழைக்க உபயோகிக்கப்படும் பெயர்கள் அழைக்கப்படுபவரை காயப்படுத்தாத வரை எந்தப் பெயரும் கண்டிக்கத்தக்க பட்டப் பெயர்கள் அல்ல.

அருமையானத் தொடருக்கும் அற்புதமான அத்தியாயத்திற்கும் நன்றி-டா, இக்பால்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தங்களோட கருத்துக்களை இரண்டு பேரும் "டா"போட்டுதான் வாழ்த்தி எழுதுறாங்க...

ஆனால், ஏற்கனவே "ப்" போட்டதனால் கிரவ்னுக்கு வைச்ச "ப்" இங்கேயும் வச்சுப் பார்த்தேன்...

இந்த ஆர்டிகல் 'டா'ப் தான் !

ஜஸகல்லாஹ் ஹைர் காக்கா !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//அய்யா என்று ராமதாஸையும் அழைப்பது பட்டப்பெயரல்ல, மரியாதை நிமித்தம் இட்ட பெயர்.//

அப்போ எனக்கு !!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAKIR HUSSAIN சொன்னது…
பெருமானாரின் வாழ்க்கையில் சில விசயங்களை எடுத்து சொல்லும்போது அந்த மாநபியை பார்க்காத காலத்தில் வாழ்கிறோமே என்ற வருத்தம்தான் வருகிறது. //

100% உண்மை காக்கா...

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///இந்த கணத்திலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் சக மனிதனை அவன் விரும்பாத கெட்டப்பெயர் வைத்து கூவி அழைக்கும் இந்த ஈனச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். அவன்தான் உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த அடிமை. நபியை நேசிக்கும் நல்ல முஸ்லிம்.///

இறையச்சம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம்.

அருமையான தொடர்!

வாழ்த்துக்கள்! சகோ. இக்பால்.

அதிரை சித்திக் said...

நபி நாயகம் (ஸல் ) அழகிய முன் மாதிரி
அவர்களின் தியாக வாழ்வை மட்டுமே
அறிந்த எனக்கு அண்ணலாரின்
நகை சுவை நிகழ்வு பற்றிய தங்களின்
தகவல் அற்புதம் ...!
கவியன்பன் கலாம் காக்கா ..
தனது தந்தை பெயரை சேர்த்து
கொண்டது வரவேற்க தக்கது ..
இனி நானும் என் இனிய
தந்தை பெயரை சேர்த்தே
படைப்புகள் வழங்குவேன் ...!

Meerashah Rafia said...

மீண்டும் ஒரு சபாஷ்.. மனதில் வார்த்தைகளால் தைத்ததற்கு..

சேக்கனா M. நிஜாம் said...

மாஷா அல்லாஹ் !

அருமையான தொடர்...

அன்புச்சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களை ஊரில் நான் சந்தித்து இருந்தாலும்,நமதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அன்புச்சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களின் பேச்சு சிந்தனையைத் தூண்டும் விதமாக அனைவரையும் கவர்ந்ததுபோல் என்னையும் கவர்ந்தன.

பேச்சாற்றலிலும் எழுத்தாற்றிலுலும் ஒருவர் சிறந்து விளங்குவது என்பது பெரியவிஷயம். அவை உங்களிடம் உள்ளன...

இறைவன் நாடினால் ! தொடருங்கள்...

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

இந்த தொடரின் மூன்று பதிவுகளையும் பிரிண்ட் எடுத்து எனது வீட்டின் வரவேற்பறையில் இருக்கு டேபிளில் வைத்திருந்தேன், இன்று வீட்டுக்கு வந்த என் கணவரின் நண்பரின் குடும்பம் வந்திருந்தார்கள்.

எதேச்சையாக அவர்களின் மூத்த மகள் டேபிளில் வைத்திருந்த "நபிமணியும் நகைச்சுவையும்" பதிவு பிரிண்ட் அவுட்டை எடுத்து வாசித்து விட்டு உள்ளேயிருந்த என்னிடம் வந்தார், "தொடர் ரொம்ப இண்டரஸ்டிங்" என்றதும் இறைவனுக்கு நன்றியை என்னையறியாமலே வாய் மொழிந்தேன்.

இதேபோல், உங்கள் வீடுகளிலும் நல்லவைகளை விருந்தினர் கண்களுக்கு படும்படி வைத்து படிக்க தூண்டலாமே !

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத்தம்பி இக்பால் பின் முஹம்மத் சாலிஹ் அவர்களின் எண்ணமும் எழுத்தும் என்னுடைய எண்ணங்களுடன் உடன்படுபவைகளாக உள. இப்பட்டப்பெயர்களைப் பற்றி நான் எண்ணுவதும், பிறரிடம் காட்டுகளாக நான் கூறுவதும் “அபூஹூரைரா(ரலி)”, ”அபூபக்ரு(ரலி)” அவர்கட்கு நம் தலைவர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பயன்படுத்தியதை நான் எப்படி விளக்கம் கொடுத்து வந்தேனோ, அதே விதமாக இக்கட்டுரை ஆசிரியர் அவர்களும் குறிப்பிட்டு விளக்கமாகக் கூறியதும், “நல்ல பட்டங்கள்” ஆகுமானவைகளே என்பதும் என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக உணர்கின்றேன். உதாரணம்: என்பதில் அடியேனின் பெயரைக் கண்டதும், அன்புத்தம்பி இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் அன்பு வெளிப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டேன்: “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

நிற்க. சிலர் திருமணம் முடிந்ததும் தன் மனைவியின் பெயர்க்குப் பின்னால் தன் பெயர் வர வேண்டும் என்று நினைக்கின்றனர்; இக்கருத்தில் அடியேன் முரணடுகின்றேன்;திருமணம் ஆனாலும் நம் மனைவியின் தந்தையின் பெயருடன்எ மனைவியின் பெயர் இணைந்தே அழைக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைபாடு; இஃது இஸ்லாத்தின் முறையும் கூட: காட்டு
ஃபாத்திமா பின்த் முஹம்மத் (ரலி-அன்ஹா) என்று சொல்வதே சரி என்று நினைக்கின்றேன்.

அடியேன், என் மனைவியின் பெயருடன் அவர்களின் தந்தையின் பெயரை இணைத்தே வைத்துள்ளேன். இதற்கு முக்கியக் காரணம்; மேற்சொன்னபடி, திருமணம் ஆகிவிட்டாலும் ஆண்.பெண் , பேதமின்றித் தன் பெயர்க்குப் பின்னால் (இன்னாரின்)மகன்/மகள் என்பதைக் குறிப்பிடுவதற்குத் தந்தையின் பெயர் இணைத்து இருக்க வேண்டும் என்ற என் நிலைபாடே ஆகும்.

KALAM SHAICK ABDUL KADER said...

// அப்போ எனக்கு !!!//

காமிரா கலைஞர் ஷா.ஹமீத்,அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களை நான் அடிக்கடி “சுட்டும் விழிச் சுடர்” என்றே அழைக்க எண்ணினேன்; இன்று நீங்களாக வந்து வலையில் விழுந்து விட்டீர்கள்!

KALAM SHAICK ABDUL KADER said...

//அதிரைநிருபர் வலைப்பூவில் மவுனமாக வாசித்து வந்த என்னையும் கருத்து எழுத தூண்டியிருக்கிறது இந்த பதிவு.//

ஆம். அதிரை நிருபர் வலைப்பூவின் மணம் அகிலமெலாம் வீசிக் கொண்டிருப்பதும், அப்பூவின் “மவுனமான” வளர்ச்சியின் வெளிப்பாடு என்பதும் உங்களைப் போன்று எத்தனையோ பேர் “மவுனமாக” படித்துக் கொண்டும் இடுகையிட வேண்டும் என்று துடித்துக் கொண்டும் இருப்பதும் இன்று வெட்ட வெளிச்சமாகி விட்டது.

அன்பு நெறியாளர் மற்றும் அ.நி. குழுவினர்கட்கு வாழ்த்துகள்: வாழ்க! வளர்க!!

sabeer.abushahruk said...

அன்புச் சகோதர சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்பதிவின் ஆசிரியர் நண்பன் இக்பால் பயண முஸ்தீபுகளாலும் பயணத்தாலும் இந்த அத்தியாயத்திற்கு ஏற்புரை வழங்கவியலாமல் போனதை, கலிஃபோர்னியாவிலிருந்து சென்னை செல்லும் வழியில் துபை ஏர்போர்ட்டிலிருந்து என்னை அலைபேசியில் அழைத்தபோதுச் சொன்னான்.

அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க கீழ்கண்டவாறு தன் நன்றியை சொல்லச் சொன்னான்.

"இப்பதிவை வாசித்து, விரும்பி கருத்திட்ட அத்துணை சகோதரர்களுக்கும் மரியாதைக்குரிய சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்."

கவியன்பன்,
//ஃபாத்திமா பின்த் முஹம்மத் (ரலி-அன்ஹா) என்று சொல்வதே சரி// இந்தக் கருத்தைக் குறித்து மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக உரையாடலாம் என்றும் சொல்லச் சொன்னான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அபு' க்களின் கவிதையைப் பற்றி சொல்ல மறந்துட்டேன்...

ஃபிளைட் கிளம்பிருக்குமோ !

KALAM SHAICK ABDUL KADER said...

"கைக்கு எட்டிக் காதுக்குக் கிட்ட வில்லையே” என்று ஏங்க வைத்தாலும், இன்ஷா அல்லாஹ் நேரில்-ஊரில் அன்புத் தம்பி இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களைக் காணும் வாய்ப்புக் கிட்டுமா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு