Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதி(ரை)காலை! 29

அதிரைநிருபர் | May 03, 2011 | , , ,

அதிரை விடிகிறது
அழகாய் விழிக்கிறது
எத்தனைத் துலக்கமாய்
அத்தினத் துவக்கம்!

எங்கும் ஒலிக்கிறது
எனக்குள் ஒளிர்கிறது
இறையைத் தொழ வேண்டி
இனிதாய் அழைக்கிறது!

குப்பாய முக்காட்டில்
குளிர்நிலவாய் உம்மா
கையில் தஸ்பீஹ் மணி
வாயில் இறை வசனம்!

தொழுகைப் பாயோடு
பொழுதைத் துவக்கும்
அன்னை அகமகிழ்வாள்
பிள்ளைத் தொழப்போக!

சுல்லென்ற வெயிலோ
சில்லென்று சுடுகிறது
கல்விதேடி சிறார்களும்
செல்கின்றார் பள்ளிநோக்கி!

வயல்வெளி காட்டுக்குள்ளே
ரயில்போகும் சப்தத்தோடு
நயில்நதியின் ஓட்டம்போல
வெயில் காயும் வீதியெங்கும்!

குதிரை வண்டி காலந்தொட்டே
அதிரை வேண்டி விரும்புவர்
கதிரவனின் உதயத்தால்
முதியவரும் இளைஞராவர்!

பாசி வழுக்கும் படித்துறை
பனி படர்ந்த புல்தரை
பாதம் பதிந்த மண்பாதை
பாசம் பொதிந்த தலைமுறை!

அண்ணன் தம்பி வம்சாவழி
மாமன் மச்சான் வகையறா
மரம் செடி மாடு கன்று
பரம்பரையாய் ஒண்ணுக்குளொண்ணு!

நல்லெண்ண அழைப்பு தோறும்
அவ்வண்ணமே கோரும்
சுற்றமும் நட்பு மென
சூழ்ந்த தெங்கள் அதிரை!

காலைக் கதிரவனையும்
கம்பனிலே கொண்டுவரும்
எங்களூரைச் எரிக்கின்றன
கம்பனில்லா உதயங்கள்!

அடுத்தடுத்த அஸ்தமனங்கள்
அடிமேலடி அடித்தாலும்
அதிரைக்கென்று ஒரு நாள்
அதி விரைவில் விடியும்!!!

--சபீர்
Sabeer abuShahruk

29 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா, இதைப படித்தவுடனே ஒரு மணி நேரம் அமீரகத்தில் இருந்த உணர்வே இல்லை.

//பாசி வழுக்கும் படித்துறை
பனி படர்ந்த புல்தரை
பாதம் பதிந்த மண்பாதை
பாசம் பொதிந்த தலைமுறை!//

சூப்பர் காக்கா... இது இப்போது கிடைக்குமா அதிரையில்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதி(ரை)காலை
அதின்று காணலை
அதின்றி ஏங்குது மாலை
அதில்லாமல் இனிக்குமா நாளை?

அதிரையை அழகாய் அச்செடுத்த சபீர் காக்கா அருமை.

ZAKIR HUSSAIN said...

//பாசி வழுக்கும் படித்துறை
பனி படர்ந்த புல்தரை....//

இந்த இரண்டையும் பயன்படுத்திய காலம் நமது சின்ன வயது..அல்லது நம்மைப்போல் எல்லோருக்கும் வசந்த காலம். செடியன் குளத்தில் ஒரு மரத்தின் [ பாதி வெட்டிய மரக்கட்டை ...கறுப்பு நிறமாய்போயிருக்கும் ] அதில் துணிக்கு சோப்பு போட பயன்படுத்துவோம்....இன்னும் அது இருந்தால் அதிராம்பட்டினத்துக்கு என மியூசியம் வைத்தால் நிச்சயம் இருக்க வேண்டிய பொருள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவிக்காக்காவுக்கு,

உங்கள் கவி சாம்ராஜ்யத்தில் அடைக்கலம் புகுந்த அதிரையே!

உனக்கு அடைக்கலமல்ல படைக்கலமே தந்திடுவோம்

காலைக்கதிரவனை கம்பனிலே கொண்டு வருமுன்

கொக்கரக்கோ சேவல் இறைப்புகழ் கூவி நிற்கும்.

செடியன்குளக்கரை மரஇலை சவுக்காரமாய் நுரைக்கும்.

உடைக்கு ம‌ட்டுமின்றி உள்ள‌த்திற்கும் சோப்பு போடும்.

வேட்டி முட்டை ஆழ‌த்திற்கு சென்றதும் சில‌ ச‌ம‌ய‌ம் வேட்டு வைக்கும்.

காலை வேளை எல்லாக்குள‌க்க‌ரையும் கொண்டாட்ட‌மாய் க‌ழியும்.

சில‌ ச‌ம‌ய‌ம் ச‌ளி பிடிக்கும் ம‌றுதின‌ம் குள‌க்க‌ரைக்கே செல்வோம்.


ப‌ழைய‌ நினைவு என்னும் திட‌லில் உள்ள‌க்குதிரை ஆன‌ந்த‌ ச‌வாரி செய்து எல்லை இன்றி ஓடித்திரியும் அந்த‌ கால‌ம் இனி எந்த‌ கால‌த்தில் வ‌ரும்? எம்மை உற்சாக‌ப்ப‌டுத்தும்?

இடையிடையே இது போன்ற‌ நினைவுக‌ள் ந‌ல்ல‌ லேகிய‌ம் சாப்பிடுவ‌து போல் ம‌ன‌திற்கு தெம்பாக‌ உள்ள‌து. க‌விக்காக்கா உங்க‌ள் வைத்திய‌ம் தொட‌ர‌ட்டும் எம‌க்கு சிகிச்சை இல‌வ‌ச‌மாய் ஆக‌ட்டும்.

வாழ்த்துக்க‌ள் து'ஆவுட‌ன்.

உள்ளூரிலேயே வ‌ள்ளுவ‌ன் முத‌ல் வைர‌முத்து (உவமைக்காக மட்டும்) வ‌ரை புதைந்து கிட‌க்கும் புல‌வ‌ர்க‌ளையும், க‌விஞ‌ர்க‌ளையும் வெளிக்கொண்டு வ‌ரும் அதிரை நிருபரின் முயற்சிக்கு என்ன‌ விருது கொடுக்க‌லாம் என்று யோசிக்கிறேன்.

தொட‌ர‌ட்டும் தொய்வின்றி உம் ப‌ணி.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//குப்பாய முக்காட்டில்
குளிர்நிலவாய் உம்மா
கையில் தஸ்பீஹ் மணி
வாயில் இறை வசனம்!

தொழுகைப் பாயோடு
பொழுதைத் துவக்கும்
அன்னை அகமகிழ்வாள்
பிள்ளைத் தொழப்போக!//

பிடித்த வரிகள் மட்டுமல்ல கண்களில் கசிவு கண்டேன் !

உங்கள் வரிகள் அனைத்து அப்படியே எங்களை வாரி அனைக்கிறது !

உம்மாவின் நினைவுகளோடு உணர்வுகள் !

crown said...

அதிரை விடிகிறது
அழகாய் விழிக்கிறது
எத்தனைத் துலக்கமாய்
அத்தினத் துவக்கம்!
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எத்தனை அழகான விடியலுக்கான வருனனை!எத்தனைதுலக்கமாய் அத்தனை விளக்கம்.துவக்கமே பளிச்,பளிச் கதிரவனின் உதயம் ஊரெல்லாம் நிறைந்திருப்பதுபோல் இதமெல்லாம் நிரைந்த கவிதை வரிகள்.

crown said...

எங்கும் ஒலிக்கிறது
எனக்குள் ஒளிர்கிறது
இறையைத் தொழ வேண்டி
இனிதாய் அழைக்கிறது!

குப்பாய முக்காட்டில்
குளிர்நிலவாய் உம்மா
கையில் தஸ்பீஹ் மணி
வாயில் இறை வசனம்!

தொழுகைப் பாயோடு
பொழுதைத் துவக்கும்
அன்னை அகமகிழ்வாள்
பிள்ளைத் தொழப்போக.
--------------------------------------------------------------------
எவ்வளவு இயல்பான நடப்புகளை கவி நயத்தால் சுவையாக்கி தரும் வித்தை!
படிக்க,படிக்க நடந்தவைகளை மருமடியும் ,மருபடியும் அசைபோடவும்,அள்ளி
உண்ணவும் செய்கிறது. அன்னை அவள் சந்தோசம் அவள் பிள்ளை பள்ளிச்சென்று இறைவனை வணங்குவதில்தான் உள்ளது என்பதை எடுத்துச்சொல்லி தொழுகையை நிலைனாட்ட வலியுறுத்தும் வரிகளுக்குச் வரிச்சலுகையாய் தொழுகையை தூன்டிய கர்மத்திற்கு
நற்கூலி கிடைக்கும்.

crown said...

சுல்லென்ற வெயிலோ
சில்லென்று சுடுகிறது
கல்விதேடி சிறார்களும்
செல்கின்றார் பள்ளிநோக்கி!

வயல்வெளி காட்டுக்குள்ளே
ரயில்போகும் சப்தத்தோடு
நயில்நதியின் ஓட்டம்போல
வெயில் காயும் வீதியெங்கும்!

குதிரை வண்டி காலந்தொட்டே
அதிரை வேண்டி விரும்புவர்
கதிரவனின் உதயத்தால்
முதியவரும் இளைஞராவர்!
----------------------------------------------------------

சுல்லென்று சுடும் வெயில் மேனியில் படும் அந்த இளச்சூட்டின் சுகம்.கவிதைவழி படிக்கையில் இளச்சூடு உதிரத்தில் ஓடுவதுபோல் ஓர் பிரமை. கண்முன்னே
காட்சியாய் விரியும் இளச்சிட்டுகள் கல்வி தேன் தேடி ஊர்வலம் போன காட்சியும், அதன் மாட்சியும்.வயல் வெளிக்காட்டுக்குள்ளே ரயில் போகும் சத்தத்தோடு நெயில் நதி ஓட்டம்போல வெயில் காயும் வீதியெல்லாம்.அப்பாடா வெயில் எல்லாம் வெள்ளீ காசாய் வீதியெங்கும் ஜொலிக்கும் ஓடையாய்..... நல்லதொடு சொல்லாடல்.அந்த உதய நேரத்தில் முதுமை ஓடி இளமை வந்து ஒட்டிக்கொள்ளும் உற்சாக மூட்டும்
வெளிச்சம் ஓர் ஊட்டு சத்து. அனுபவம் ஒவ்வொரு வரிகளிலும் நையப்பட்ட
நல்லதொரு கவிதைத்தரி.

அதிரை என்.ஷஃபாத் said...

கவிதை அருமை... சுப்ஹு தொழுதுவிட்டு, சூடாய் ஒரு டீ குடித்தது போன்று இதமாய் இருந்தது கவிதை..!!

crown said...

பாசி வழுக்கும் படித்துறை
பனி படர்ந்த புல்தரை
பாதம் பதிந்த மண்பாதை
பாசம் பொதிந்த தலைமுறை!
-------------------------------------
நல்லதொரு உருவகம். பாசிபடர்ந்த படித்துறை!
வழுக்கும். ஆனாலும் பாசி என்பதும் பாசம் என்ற பொருள்தரும் அனால் வழுக்காகாத வலுவான பந்தம்.
பனி படர்ந்த புல்தரையும்,பாதம் பதிந்த மண்பாதையும் வாழ்வில் கடந்த,ஒரு இடம் விட்டு மருஇடம் நகர்ந்து செல்ல பயன்படுத்திய ஒரு கருவி! அதுபோலவே
வாழ்வில் கடந்த பொழுதில் கடந்த பந்தம் ,சொந்தம் , நட்பு எனும் பாசம் நிறைந்த தலைமுறையும். இங்கே அழகாய், கடந்த பாதையும், வாழ்கை வாழ்ந்த பாதையும்
அதில் வழுக்கும் பாசியும்,வழுக்கா பாசமும் நல்ல தொரு உவமானம்.கபிலன்]
என்னும் புலவன் கையாளும் சங்கதியை நம்ம ஊர் புலவன் கையாண்டுள்ளார்.

crown said...

அண்ணன் தம்பி வம்சாவழி
மாமன் மச்சான் வகையறா
மரம் செடி மாடு கன்று
பரம்பரையாய் ஒண்ணுக்குளொண்ணு!

நல்லெண்ண அழைப்பு தோறும்
அவ்வண்ணமே கோரும்
சுற்றமும் நட்பு மென
சூழ்ந்த தெங்கள் அதிரை.
------------------------------------------------------------------
எவ்வாறு இயற்கை என்பது ஒன்றோடு ,ஒன்று சார்ந்ததோ அதுபோலவே நம் சொந்தபந்தம் மிக இயல் பாய் ஒன்றோடு,ஓன்று பின்னிபடர்ந்தது என்ற பதம்
இங்கே மிக அருமையாக கையாளப்பட்டிருப்பது கவிஞரின் கற்பனைத்திறனுக்கு ஓர் எடுத்துகாட்டு. அல்லாஹ் மிகப்பெரியவன்.

crown said...

காலைக் கதிரவனையும்
கம்பனிலே கொண்டுவரும்
எங்களூரைச் எரிக்கின்றன
கம்பனில்லா உதயங்கள்!

அடுத்தடுத்த அஸ்தமனங்கள்
அடிமேலடி அடித்தாலும்
அதிரைக்கென்று ஒரு நாள்
அதி விரைவில் விடியும்!!!
----------------------------------------------------------------
புகைவண்டி காற்றின் முகத்தில் கரிபூசும் காலம் கண்டோம் அது கடந்தோடும் பாதையெங்கும். ஆனால் நம் ஊரின் முகத்தில் அது ஓடாமலே கரி பூசும் அவலம் கான்கிறோம். அஸ்தமனமே வாடிக்கையாய் ஆன பொழுது ஒருனாள் விடியும் என்னும் நம்பிக்கை உதயம் இன்சா அல்லாஹ் நிச்சயமாய் ஒருனாள் நல்லதும் உதயமாகி இதயமெல்லம் சந்தோசம் (சன் தோசம் விலகும்) நிறம்பும் ஆமின்.

Meerashah Rafia said...

துக்கம்

"காலைக் கதிரவனையும்
கம்பனிலே கொண்டுவரும்
எங்களூரைச் எரிக்கின்றன
கம்பனில்லா உதயங்கள்!"


msm(mr)

Yasir said...

கடந்த காலங்களை அமைதியாக அசைபோடுவதே ஒரு சுகம்தான்...அதிலும் கவிக்காக்கா அதை செதுக்கினால் சொல்லவும் வேண்டுமா....காலையில் இக்கவிதையை படித்ததும் மனம் ஒருவித விவரிக்கமுடியாத இன்பத்தால் துள்ளியது...சூப்பர்காக்கா

//குப்பாய முக்காட்டில்
குளிர்நிலவாய் உம்மா
கையில் தஸ்பீஹ் மணி
வாயில் இறை வசனம்!///

எல்லாருக்கும் அவரவர் உம்மாவை கண்ணுக்குள் கொண்டுவரும் வரிகள்

Shameed said...

சத்தமாக படிக்கவேண்டும்
இந்த கவிதையை
பால் வெளியில்.

சுத்துகின்றதா சத்தம்
பூமி உடன் சேர்ந்து
என்று சுற்றும் முற்றும்
பார்க்கவேண்டும்

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரையின் விடியலை அழகான ஓவியமாய் தீட்டியிருக்கிறீர்கள் உங்கள் கவிதை வரிகளால்.

அடுத்தடுத்த அஸ்தமனங்கள்
அடிமேலடி அடித்தாலும்
அதிரைக்கென்று ஒரு நாள்
அதி விரைவில் விடியும்!!!
விடியும்..விடியும்..இன்ஷாஅல்லாஹ்

அப்துல்மாலிக் said...

அதிகாலை, குப்பாயம், தஸ்பீஹ்மனீ, பாசித்தரை, குதிரைவண்டி, செருப்பில்லா செம்மண் ரோடு இவைகளினூடே கம்பனில்லா ஏக்கத்தை கம்பனின் கவிதையாய் வடித்தவிதம் அருமை, ஊருக்கு மனசை அள்ளிச்சென்றன

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிகாலை என்பதனால் ஆராவாரமிருந்ததால் "மாலை"க்குள் வருவதற்கு தயங்க வேண்டாம் மாலையும் மனசை மயக்கும் எங்கள் அதிரையின் இளம் மஞ்சள் பொழுது !

sabeer.abushahruk said...

//இது இப்போது கிடைக்குமா அதிரையில்?//

நிச்சயம் கிடைக்கும் உங்களுக்கல்ல உங்கள் மகன்களுக்கு இன்ஷா அல்லாஹ்


//அதி(ரை)காலை
அதின்று காணலை 
அதின்றி ஏங்குது மாலை
அதில்லாமல் இனிக்குமா நாளை?//

அ. நி.: அபு இபுறாஹீம், சபீர், கிரவுன், அப்துர்ரஹ்மான், ஷஃபாத் வரிசையில் சேர்க்க ஆளை விடாதீர்கள் பிடியுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அ. நி.: சபீர், கிரவுன், அப்துர்ரஹ்மான், ஷஃபாத் வரிசையில் சேர்க்க ஆளை விடாதீர்கள் பிடியுங்கள். //

அதிரையின் அச்சு - இவர்கள்
அதனால்தான் ஆர்பரிக்கிறது
அன்றுதானே என்றில்லாமல்
அனைத்தையும் அசைபோடும்
அற்புதமான அதிரைக் குயில்கள் !

அன்புடன் அழைக்கிறோம்
அதிரையின் மற்றுமொரு
அசலாய் கவி எழுதிட தம்பி ஜஹபரையும்...

வருக ! வருக ! வருக ! ...

sabeer.abushahruk said...

// நம்மைப்போல் எல்லோருக்கும் வசந்த காலம். //

யு மீன் "வசந்த்" காலம்?

//பிடித்த வரிகள் மட்டுமல்ல கண்களில் கசிவு கண்டேன் !//

நானும்தான் அபு இபுறாஹீம், எழுதி முடித்து முதல் முறை வாசிக்கும்போது நானும்தான் உங்களைப்போன்ற உணர்வைப்பெற்றேன்.

//சுப்ஹு தொழுதுவிட்டு, சூடாய் ஒரு டீ குடித்தது போன்று இதமாய் இருந்தது கவிதை..!!//

நல்ல ரசனையான வெளிப்பாடு. சந்தோஷம் தரும் விமரிசனம். நன்றி

sabeer.abushahruk said...

//வேட்டி முட்டை ஆழ‌த்திற்கு சென்றதும் சில‌ ச‌ம‌ய‌ம் வேட்டு வைக்கும்.//

சகோதரர் நெய்னா தூண்டிவிட்டால் பயமறியாத இளங்கன்று பிராயத்து நினைவுகள் ததும்பும். 

ஊர் விஷயங்களை நெய்னா எழுதுவதாக இருந்தால் நான் துட்டு கொடுத்துக்கூட வாங்கி படிக்க தயார்.

வேட்டி முட்டை
கட்டிக் கொண்டு
போட்டி போட்டு குளிச்சது...
நட்டநடு குளத்திலே
முட்டை உடைந்து போனது...
முட்டிமோதி தப்படிச்சு
படித்துரைக்கு வந்தபின்
மற்றுமொரு முட்டைகட்ட
வேட்டி மடிச்சு நின்னது!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// ஊர் விஷயங்களை நெய்னா எழுதுவதாக இருந்தால் நான் (கவித்)துட்டு கொடுத்துக்கூட வாங்கி படிக்க தயார்.

வேட்டி முட்டை
கட்டிக் கொண்டு
போட்டி போட்டு குளிச்சது...
நட்டநடு குளத்திலே
முட்டை உடைந்து போனது...
முட்டிமோதி தப்படிச்சு
படித்துரைக்கு வந்தபின்
மற்றுமொரு முட்டைகட்ட
வேட்டி மடிச்சு நின்னது! ///

சூப்பரூ..........

sabeer.abushahruk said...

கிரவுன் வந்துவிட்டுப் போனாலே ஏதோ ஃபார்ம்ல இருக்கிற மெயின் பேட்ஸ்மேன் வந்து விலாசித்தள்ளிட்டுப்போன ஐ பி எல் டீமின் கேப்டனைப் போல வெற்றி கிடைத்த மாதிரி ஃபீல் பன்றேன்.

உடனே நன்றியுரையயும் எழுதத்துவங்கிவிடுகிறேன். 

இவர் விமரிசித்ததுமே உச்சி குளிர்ந்துபோச்சு. ஃபோனில் வேறு பாராட்டு! 

வாழ்க கிரவுனார் தமிழுரை! 

ஜஸாக்கல்லா ஹைர் கிரவுன்!

கிரவுனார் தமிழுரையில் நான் பொறுக்கியது:

//எத்தனை துலக்கமாய் 
அத்தனை விளக்கம்//

//வலியுறுத்தும் வரிகளுக்குச் வரிச்சலுகையாய் தொழுகையை//

 //வெயில் எல்லாம் வெ
ள்ளீ காசாய் 
வீதியெங்கும் ஜொலிக்கும் ஓடையாய்.....//

//வழுக்கும் பாசியும்,
வழுக்கா பாசமும் //

//ஊரின் முகத்தில் 
அது 
ஓடாமலே 
கரி பூசும் 
அவலம் கான்கிறோம். //

sabeer.abushahruk said...

//துக்கம்//

கச்சிதம்! நன்றி ச்சோட்டூ!

தூக்கம் கலைவோம்
துவக்கம் காண்போம்
துக்கம் 
நம் 
பக்கம் வராது.

//எல்லாருக்கும் அவரவர் உம்மாவை கண்ணுக்குள்//

சரியாகச் சொன்னீர்கள்.

உம்மாதான் எல்லாம்!

கண்ணுக்குள் மட்டுமல்ல
உம்மாவுடன் என்றால்
குழிக்குள்ளும் 
வசிக்க சம்மதமே!

thanks yasir.

//சத்தமாக படிக்கவேண்டும்
இந்த கவிதையை
பால் வெளியில். //

அதற்கு சேட்டிலைட்டாகவல்லவா பிறக்க வேண்டும். பிறந்து உங்க ராக்கெட்ல ஏறி பால் வீதியில் வீசப்பட்டு... பெரிய வேலையாகவல்லவா தோன்றுகிறது?

நன்றி யா அஹி!


//விடியும்..விடியும்..
இன்ஷாஅல்லாஹ்//
விடியும்போது நம்மாலும் 
முடியும் முடியும் சாதிக்க! thanks abu aathil

// ஊருக்கு மனசை அள்ளிச்சென்றன//
நோக்கமும் அதுதான் அப்துல் மாலிக். நன்றி!

வாசித்த அனைவருக்கும் என் நன்றி!

Unknown said...

மனதிற்கு மிக நெருக்கமான கவிதை ............
தொடரட்டும் உங்கள் பணி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அன்புடன் அழைக்கிறோம்
அதிரையின் மற்றுமொரு
அசலாய் கவி எழுதிட தம்பி ஜஹபரையும்.
வருக ! வருக ! வருக ! ...//

அஸ்ஸலாமு அலைக்கும், அன்பு நெ, காக்கா & ச.காக்கா, இன்ஷா அல்லாஹ் உங்க வேண்டுகோளுக்கு வருகிறேன்! தருகிறேன்!!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னும் இரண்டே மாதங்கள் தான் இடையில் உள்ளன புனித் ரமழான் ஆரம்பம் ஆகுவதற்கு...

எனவே நம் சிறுபிராயத்தில் "நம்மூரில் நாம் கண்ட நோன்பு காலம்" என்ற தலைப்பில் கட்டுரைகள் அல்லது கவிதைகளை படைக்க இன்றே நாம் முயற்சி செய்வோம்". அள்ள‌,அள்ள‌ வ‌ரும் ஒரு அமுத‌சுர‌பி தான் ந‌ம் ப‌ழைய‌ கால‌த்து நினைவுக‌ள்.

க‌விக்காக்கா ஒட்டுமொத்த‌ ஊரின் நினைவுக‌ள் உங்க‌ள் க‌விதையில் அடைக்க‌ல‌ம் புகுந்திருக்க‌ அதில் நானும் ஒரு "அசைல‌ம் சீக்கர்" தான்.

சவுதியில் குடும்பத்துடன் இருக்கும் ஒரு ந‌ண்ப‌ரிட‌ம் வேலை,வெட்டிக‌ள் எப்ப‌டி போய்க்கொண்டிருக்கின்ற‌ன? என‌க்கேட்டேன். அத‌ற்கு அவ‌ர் போர் அடிப்ப‌தாக‌ சொன்னார். அத‌ற்கு நான் சொன்னேன் 'போர‌டித்து, போர‌டித்து ப‌ழ‌கிப்போன‌தால் ஜாலியாக‌ இருக்கும் ச‌ம‌ய‌ம் வ‌ந்தால் ச‌ட‌ப்பாக‌ இருப்ப‌தாக‌ சொன்னேன். இதை கேட்ட‌தும் சிரித்து விட்டார்...

சும்மா ஒரு த‌மாசு.....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Riyaz Ahamed said...

சலாம்
அதிகாலை சுபுஹு தொழுதவருக்கு அதிரை அழகு, அழகா சொல்லிடீங்க பெரியண்ணா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு