Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெந்நீர் ஒத்தடம்! 36

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2011 | ,

வலிக்காத நேரங்களில் எனது வலது முழங்காலை எனக்கு மிகவும் பிடிக்கும். கால்பந்தாட்டத்தின்போது ரைட் அவுட்டிலிருந்து ஜாகிர் பாஸ் செய்த பந்தை ரைட் இன்னிலிருந்து வாங்கி கோலாக்கிய பள்ளிக் காலந்தொட்டு பல்லவனில் படியில் தொங்கி பயணம் செய்தது வரை மிக உதவியாக இருந்தது, இப்பொழுது சில காலமாகத்தான் வலிக்கத் துவங்கியிருக்கிறது.

வலிக்குக் காரணம் வயது தொடர்பான தேய்மானமோ மூட்டின் திரவத்தில் வழவழப்புக் குறைவோ எனில் இந்த கட்டுரைக்கு அவசியமே இருந்திருக்காது. ஆனால், வலிக்குக் காரணம் வேறு.

ஆறு மாதங்களுக்கு முன்பதாக என் ஐந்து வயது மகனோடு மாலை நாலு மணியைப்போல ஒரு மலையும் மலை சார்ந்த பகுதியுமான மேடு பள்ளமான தரையில் ஒற்றைக்கு ஒற்றையென கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, "வேகமா அடி டாடி" என்ற மகனின் உசுப்பேத்தலுக்கு சிலிர்த்து ஓங்கி பந்தை மட்டும் உதைவதற்கு பதிலாக, பார்வையின் ஒளிமுறிவு பிறழ்ந்ததால் பந்தை ஒட்டியிருந்த புற்குண்டையும் சேர்த்து எத்த... ராஜ்கிரண் கடிக்கும் குறுத்தெலும்புக்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு டிஜிட்டல் சப்தமும் தாங்க முடியாத வலியும் முழங்காலில் தெறிக்க நான் காலைத் தூக்கிப் பிடித்துக் கதறினேன்.

டீப் ஹீட், கோடாலித் தைலம் மற்றும் வெண்ணீர் ஒத்தடம் போன்ற சில்லறை சிகிச்சையில் மயங்கி என் பிரியமான வலது முழங்கால் வலி துறந்து வலுவானது! உள்ளுக்குள்ளே வஞ்சம் வைத்துக் காத்திருக்க அது ஒன்னும் தமிழ் வில்லன் நாசமாக்கிய கதாநாயகனின் குடும்பம் அல்ல என்பதால் நானும் முழங்கால் வலியைப் புறக்கணித்தேன்.

சென்றவாரம்வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

ஓர் அரைகுறைத் தூக்கத்தின் அதிகாலை விழிப்பில் லேசான வலியோடு எழுந்த நான் எல்லா நிவாரணிகளையும் பிரயோகித்தும் பயனின்றி வலி உக்கிரம் காட்டியது.

முறையான முன்பதிவு செய்தும் காத்திருப்புகளுக்குப் பிறகு கண்டேன் டாக்டரை. எலும்பு தொடர்பான துறையில் பேராசிரியர் என்ற பெயர்ப் பலகை பதித்த கதவு தள்ளி உள்ளே நுழைந்தேன்.

அந்த டாக்டர் பார்பதற்குச் சிறு வயதில் ஹார்லிக்ஸ் குடிக்காமல் வளர்ந்த குழந்தைபோல் சற்று நோஞ்சானாகத்தான் இருந்தார். நான் என் முழங்காலைத் தொட்டும் தடவியும் என் பிரச்சினையைச் சொல்ல அவர் என் முகத்தைப் பார்த்தே கேட்டுக் கொண்டிருந்துவிட்டு படுத்துக்கச் சொன்னார்.

பரிசோதித்துவிட்டு எக்ஸ்ரே எழுதித்தந்தார். அதையும் பார்த்துவிட்டு, "லிகமென்ட் கட்டான மாதிரி தெரியுது" என்று யூகித்துவிட்டு, இந்தக் கட்டுரையின் நோக்கமான எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கச் சொன்னார்.

எம் ஆர் ஐயின் விரிவாக்கம் தெரிந்து வைக்கும் அளவிற்கு மருத்துவ ஞானமோ முன் அனுபவமோ இல்லாததால் ஸ்கேனிங் என்றவுடன் எனக்கு என் இரண்டாவது குழந்தையைக் கருவுற்றிருந்த மனைவியை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச்சென்றது நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் அல்ட்ரா சவுன்ட் பரிசோதனையை ஸ்கேன் என்றுதான் சொல்வோம்.

பரிசோதனை அறையே கும்மிருட்டாக இருக்க மனைவியின் வயிற்றில் ஜெல் தடவி அல்ட்ரா சவுன்ட் மொவுஸை பரவலாக நகர்த்திக் கருவின் நிலையை அறிவார்கள். எங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் மகவு இருந்ததால் இம்முறை ஆண்குட்டிக்கு ஆசைப்பட்ட என் மனைவி ஸ்கேன்ல "கவனமா ஆணா பெண்ணா என்று பார்த்து வெச்சிக்கிங்க" என்று சொல்லி வைத்திருந்தாள்.

ஆனால், எவ்வளவு முயன்றும் ஸ்கேனில் தெரிவது ஆணா பெண்ணாவென்று எனக்குப் பிடிபடவில்லை. நல்ல சமயற்காரனின் சாம்பார் சட்டி கொதிப்பதை நெகெட்டிவ்வில் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் தெளிவில்லாமல் இருந்தது மானிட்டரில் அந்த ஸ்கேன் பிம்பங்கள்.

இதை இப்ப எதற்குச் சொல்கிறேனென்றால், அப்படி ஒரு ஸ்கேன் அனுபவத்தை எதிர்பார்த்து அந்த ரேடியாலஜி மையத்திற்குச் சென்ற எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

எந்த மருத்துவச் சாயலும் இல்லாமல் ஏதோ சினிமா ஷுட்டிங் ஸ்தலம்போல சுத்தமாக எந்த சப்தமுமின்றி இயங்கிக்கொண்டிருந்தது.

வரவேற்பில் எனது மருத்துவக் காப்பீட்டு அட்டையையும் மருத்துவரின் காகிதக் கட்டையும் வாங்கிக்கொண்டு காத்திருக்கச் சொன்னவன் அலைபேசியிலோ தொலைபேசியிலோ எங்களிடமோ யாரிடமாவது பேசிக்கொண்டே இருந்தான். எப்படித்தான் முடிகிறதோ! டி வி முன்னாலான காத்திருப்பில் அரபு நாடுகளின் மக்கள் புரட்சி செய்திகள் சொல்லிக் கொண்டிருக்க திரையின் மூலையில் ஒரு சிறு கட்டத்தில் வாய் பேசாதோருக்கான சைகை மொழியும் செய்தி சொல்லிக் கொண்டிருந்தது.

என் முறை வர வெகு நேரம் ஆகவில்லை. ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் பணியாளினிடம் என்னை ஒப்படைக்க அவள் முன்னாலே போக நான் பின்னாலே போனேன். சுவிட்ச் இல்லாமல் சென்ஸார் பொருத்தப்பட்ட தானியங்கிக் கண்ணாடிக் கதவுகள் சில கடந்து ஒரு சிற்றறையை காண்பித்து உடை மாற்றிவிட்..சாரி...மாற்றிக்கொள்ளச்சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

எல்லா உடையும் களையப்பட்டு சினிமா கவர்ச்சி நடனிகள்போல் மெல்லிய கவுன் போடச்சொன்னது விதி. நானோ விதியை மதியால் வென்று(?) முட்டிக்காலுக்கும் ஜட்டிக்கும் என்ன சம்மந்தம் என்ற தெளிவிலும் ஓர் அசட்டுத்தனமான பாதுகாப்பு உணர்ச்சியிலும் ஜட்டியைக் கழட்டவில்லை. மற்றபடி நான் போட்டிருந்த கவுனில் என்னை வெட்கம் பிடிங்கித் தின்றது

ஆயிற்று, தொடர்ந்து முழங்காலில் மாவுக்கட்டு போன்றதொரு தயார்நிலை எலெக்ட்ரானிக் சாதனைத்தைப் பொறுத்தி எம் ஆர் ஐ இயந்திரத்தினுள் செலுத்தியபோது மின்சார சுடுகாடு நினைவுக்கு வந்தது ஏன் என்று தெரியவில்லை.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் எம் ஆர் ஐ இயங்க கட்டுப்பாட்டு அறையில் சுலைமானி சாயாவும் அலைபேசியுமாக அரபி ஒருத்தன் கணினித் திறையை கண்கானித்துக்கொண்டிருந்தான்.

இங்கோ கொஞ்சம் கொஞ்சமாக நானும் எந்திரமும் பரிச்சயமாகிப்போக அதன் இயக்கத்தின்போதான சுருதி சற்றும் பிசகாத இயக்க சப்தங்களுக்கு என்னுள் பாட்டெல்லாம் உருவாகியது:

எத்தனையோ பூவிருக்கு
எல்லாத்திலும் பொட்டிருக்கா
பொட்டுவச்ச பூவுன்னைத்
தொட்டு வச்சதாரு சொல்லு

காத்திருக்கு காத்திருக்கு
காடுஞ்செடியும் காத்திருக்கு
கார்மேகம் கரைவதற்கும்
கனமழை பொழிவதற்கும்

என்று கருவேதும் இல்லாமல் நிறைய பாட்டா வந்தது!

ஒவ்வொரு ஐந்து நிமிட டெம்போவுக்கும் இடையே சற்றே நிறுத்தி கை தட்டுவதுபோல் சப்தம் உண்டாக்கி மீண்டும் மீண்டும் தொடர்ந்ததால் கச்சேரி களை கட்டியது! இடையில் ஒரு குட்டித் தூக்கம்கூட போட்டேன்.

இப்படியாக ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அன்றியும், ஒரு லோயர் பெர்த்தில் பயணம் செய்த உணர்வோடு பிரிய மனமில்லாமல் பிரிந்தேன். இனி, கால் தூங்கினாக்கூட எம் ஆர் ஐ கேட்கனும் என்று நினைக்கும் அளவுக்கு இஷ்டமாகிப்போன எந்திரத்திற்கு பிரியாவிடை கொடுத்து வெளியேறினேன்.

ஹார்லிக்ஸை மீண்டும் நினைவுபடுத்திய மருத்துவர் ரிப்போர்ட்டெல்லாம் பர்த்துவிட்டு, " ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை. லிகமென்ட் ஸ்ட்ரெட்ச்சாயிருக்கு. லிகமென்ட் சப்போர்ட்டும் ஃபிஸியோ தெரப்பியும் சில வலி நிவாரணிகளும் ஒரு ஜெல்லும் போதும்" என்ற அந்த கணத்தில்தான், ஃபோனில் உம்மா சொன்னது தெளிவாக நினைவு வந்தது:

"அது ஒன்னுமில்ல சவ்வு அசைஞ்சிருக்கும். வெந்நீர் ஒத்தடம் கொடுத்து காலை நீட்டி நீட்டி மடக்கி, முழங்கால்ல மெல்லிசான துணியக் கட்டி, கொஞ்சம் தென்னைமரக்குடி எண்ணெய் தடவுனா நல்லாப்போயிடும்!"

- சபீர் abuShahruk,
(thanks:thinnai)

36 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு

கவிதை

கலக்கல்

குலுக்கல்

செய்தது

என்னையே !

சிரிக்க

சிரிக்க

சூப்பரு !

//இப்படியாக ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அன்றியும், ஒரு லோயர் பெர்த்தில் பயணம் செய்த உணர்வோடு பிரிய மனமில்லாமல் பிரிந்தேன். இனி, கால் தூங்கினாக்கூட எம் ஆர் ஐ கேட்கனும் என்று நினைக்கும் அளவுக்கு இஷ்டமாகிப்போன எந்திரத்திற்கு பிரியாவிடை கொடுத்து வெளியேறினேன்.//

"இரயில் பயணங்களில்" மறக்க முடியலதானே !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல சுவாராசியமான அலசல். இன்னும் சொல்லனும்,சொல்லனும் என ஏங்க வைத்தது. காலில் வலியிருந்தும் எழுத்தில் வலுவிருந்ததால் இந்த கம்பீர எழுத்து நடை ராஜ நடைபோட்டது. அன்னை சொன்ன எண்ணெய் சமாச்சாரம் ஒத்தடம் கொடுக்கும் முன்பே இதயத்துக்கு ஒத்தடம் கொடுத்ததுபோல் அந்த கரிசனம் இருந்திருக்குமே???? ஒத்தடம் கொடுத்தால் எந்த தடத்திலும் கால் பதிக்கலாம் என்பது அன்னையின் திடம் அது புடம் போட்ட தங்கமாதிரி சொலிக்கும் பின்னே எங்கே வலிக்கும்?. வலிக்கும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

.....கதை சூப்பர் கலைநயம்,
கதையின்கரு (கால்) இப்ப நலமா?

அதிரை என்.ஷஃபாத் said...

சபீர் காக்கா,
உங்களின் வார்த்தைகளின் உந்துதலால், ஒரு கவிதை வார்த்தெடுத்துள்ளேன். விரைவில் வெளியிடுகின்றேன் இன்ஷா அல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

//மற்றபடி நான் போட்டிருந்த கவுனில் என்னை வெட்கம் பிடிங்கித் தின்றது//


அவனா நீ?.......

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.தம்பி ஸபாத் கவிதை எழுதி எனக்கு அனுப்பினார் மிக மிக அருமையான கவிதை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தம்பி ஸபாத் கவிதை எழுதி எனக்கு அனுப்பினார் மிக மிக அருமையான கவிதை. //

கிரவ்ன்(னு): என்ன (வெந்நீர்) ஒத்தடமா !?

sabeer.abushahruk said...

அகம்!

இன்று
வியாழன்...
நேற்றுதான் சென்றது
வெள்ளிக் கிழமை,
எத்தனை
வேகமாய் 
கடக்கிறது 
இந்தியனின் இளமை
அமீரகத்தில்?!

எத்தனை
காலமல்ல 
குடும்ப வாழ்க்கை
எத்தனை 
தடவை 
என்றாகிப்போனதே!

ஊரிலிருந்து
வந்த நண்பன்
உன்
நினைவுகள் மொய்க்கும்
பெட்டியொன்று தந்தான்.

அட்டைப்பெட்டியின் மேல்
எழுதியிருந்த
என் பெயர்
சற்றே அழிந்தது
நீ
அட்டைப் பெட்டி
ஒட்டிக் கட்டுகையில்
பட்டுத் தெறித்த உன்
நெற்றி பொட்டின் வியர்வையா 
சொட்டுக் கண்ணீர் பட்டா?

அக்காள் கையால் செய்த
நார்த்தங்காய் ஊறுகாய்
உம்மா பெருவிரலால்
நசுக்கிக் காய்ந்த அப்பளம்
நூர்லாட்ஜ் பீட்ரூட் அல்வா
விகடன் ஜூ வி
நீ கலந்தரைத்த மசாலாப்பொடி
என
நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன
நீயாக அனுப்பிய
பெருஞ்சோக பெருமூச்சும்
நிலைகுத்தியப் பார்வைகளும்...

-Sabeer.abuShahruk
thanks:www.thinnai.com

Shameed said...

அந்த "கவுனுடன்" போட்டோ போட்டு இருந்தால் எங்களுக்கு எறச்சி ஆனமும் போறோட்டோவும் சாப்பிட்டதுபோல் இருந்திருக்கும்!

Meerashah Rafia said...

சபீர் காக்கா.. கால்ல அடி வாங்கின உடனேயே 'இந்த அடிக்கு ஒரு பதிவு போடணும்டா'ன்னு வைத்தியர் பார்பதற்கு முன்னாடியே உங்களுக்குள்ளயே சொல்லிகிட்டீங்களா? ஏன் கேக்குறேன்னா!?, ஒன்னு விடாம தெள்ள தெளிவா எழுதி இருக்கீகளே அதான் ..

அதிரை முஜீப் said...

நல்ல வேலை!. மருத்துவர் முழங்காலில் ஸ்கேன் செய்து விட்டு, குழந்தை ஆனா பெண்ணா என்று சொல்லாமல் விட்டாரே!.

லாஜிக் நேரம் ! என்ற பதிவை படித்தவுடனே, வெந்நீர் ஒத்தடம்! என்ற இந்த பதிவை படித்தால் வந்த வினை இது!.....

பிறகு ஏன் ஆணாதிக்கம் என்று கம்ப்ளைண்ட் பன்றாங்க!? !

யோசிக்கிறார் யோகராஜ்....(ஷபீர் காக்கா அவர்கள்)!

ரோசனை சொல்லுங்க.. என்று கேட்டு இருந்தார் ஒருவர்!.

வீட்டில் - அம்மா சொன்ன சுடு தண்ணீர் வைத்தியம் கை வசம் இருக்கையில், பிலிப்பைனி - அக்காவை காண வேண்டி, மருத்துவரிடம் விஜயம் செய்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

அம்மா பேச்சை கேட்டு, சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுகாமல், ஆனாதிக்கத்தினால் ஆஸ்பத்திரிக்கு சென்றதின் விளைவோ இது!.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவி காக்கா, நீங்கள் கட்டுரை காக்காவா மாறி மெய்மறக்க வைச்சுட்டியலே.

நானும் மூட்டு வலியால் சில நேரங்களில் அவதிபடுவதுண்டு, வெந்நீர் ஒத்தடத்தில் உள்ள சுகம் வேறு எந்த மருந்தாலும் தரமுடியாது.

இந்த பதிவின் முதல் பத்தியை படிக்கும் போது மூட்டுவலி லேசா வந்தது போல் உணர்வு, வெந்நீர் ஒத்தடம் பற்றி இறுதியில் சொன்னவுடனே வலி உணர்வு போயிடுச்சு.

தங்க்ஸ் காக்கா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அதிரை முஜீப் சொன்னது…

அம்மா பேச்சை கேட்டு, சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுகாமல், ஆனாதிக்கத்தினால் ஆஸ்பத்திரிக்கு சென்றதின் விளைவோ இது!.//

யம்மாடியோவ்... இப்படியும் சொல்லமா ஆணாதிக்கம் பற்றி !!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முஜீப் அவர்களின் வருகையையொட்டி, அம்மா(வின்) அதிரடி மாற்றம் செய்தார் அ.தி.மு.க. தலைமை மதுரைக்கு !

மு.க.(வின்) அலுவலகம் புதுடெல்லிக்கு மாற்றம்...

sabeer.abushahruk said...

//அவனா நீ?.....//
லைட்டை திருப்பாதே லைட்டை திருப்பாதே... திருப்பிட்டான்யா திருப்பிட்டான்யா!

//அந்த "கவுனுடன்" போட்டோ போட்டு இருந்தால் எங்களுக்கு எறச்சி ஆனமும் போறோட்டோவும் சாப்பிட்டதுபோல் இருந்திருக்கும்!//

ஏன் ஏன் ஏன் இந்த கொல வெறி?

sabeer.abushahruk said...

//பிலிப்பைனி - அக்காவை காண வேண்டி,//

நான் உங்களுக்காக ஓட்டு சேகரிச்சிக்கிட்டு இருக்கேன், நீங்க இப்படி போட்டுத் தாக்குவது நீதமா?

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum
சுகமான் வலி. கால் வலியை விளக்கப்போய் எங்கள் உள்ளத்திற்கும் ஒத்தடம் போட்டுவிட்டாய்.
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

//அஸ்ஸலாமு அலைக்கும்.தம்பி ஸபாத் கவிதை எழுதி எனக்கு அனுப்பினார் மிக மிக அருமையான கவிதை.//

எங்கே எங்கே எங்கே?

அப்துல்மாலிக் said...

காசுக்காக
காலை பதம்பார்த்த மருத்துவரும்
உண்மையான பாசத்தோடு
உக்கா மருத்துவம் சொன்ன
உம்மாவும்
வெவ்வேறு
விதத்தில்
வித்தியாசமானவர்களே

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சபீர் காக்காவின் சமூகத்திற்கு. தங்களுக்கு அந்த கவிதையை அனுப்பி வைத்துள்ளேன். என்னிடம் உங்கள் கட்டுரையை பற்றி உரையாடிக்கொண்டே எழுதி முடித்தான் என் தம்பி சபாத். மிக அருமையான சொற்றொடர், வீரியமிக்க வரிகள்.அருத்தம் பொதிந்த விளக்கம். எல்லாருக்கும் பிடிக்கும். படித்து பாருங்கள் உங்கள் கால்வலி(யுடன்)மனசோர்வும் நீக்கும் அரு மருந்து அது.

Yasir said...

ஆஹா ...கால்வலியை காரணம்காட்டி ஒரு அறு சுவை உணவையே அல்லவா அள்ளி தந்து இருக்கிறீர்கள்...கட்டுரை படிக்க படிக்க ஆர்வம் குறையாமல் அழகாக சென்று கொண்டு இருக்கிறது...உம்மா சொன்னா கம்முண்டு செய்யனும் என்பது இப்ப புரியுதா

Yasir said...

/// என் தம்பி சபாத். மிக அருமையான சொற்றொடர், வீரியமிக்க வரிகள்./// ஆத்திரத்தை அடக்கி வைக்கலாம்...ஆர்வத்தை அடக்க முடியாது...கவிக்காக்காவிற்கு ஹால்ஃப் சென்சுரி அடித்தவுடன் உடனே வெளியிடவும்....இப்படிக்கு ஆர்வக்கோளறு சங்கத்தலைவர் அடிபுலி

sabeer.abushahruk said...

//கதையின்கரு (கால்) இப்ப நலமா?//

நீங்க ரசனையோடு காலைக் "கரு" எனக்கொண்டு விசாரிக்க, பின்னாலே நம்ம புரட்சிக்காரர் "கரு" என்றதும் ஆண் குழந்தையா பெண்குழந்தையாவென்றெல்லாம் முழங்காலுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்துவிட்டார் கவனித்தீர்களா?

பேசாம கால் என்றே விசாரித்திருக்கலாமோ?
எனிவே, கால் கொஞ்சம் கொஞ்சமா வலி மறக்க ஆரம்பித்திருக்கிறது. தேங்க்ஸ் ஃபார் ஆஸ்க்கிங்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// தேங்க்ஸ் ஃபார் ஆஸ்க்கிங்! ///

அட ! இங்கே பாருங்கப்பா எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்தா இப்புடியா !?

நன்றி விசாரித்தமைக்கு(ன்னு) சொல்லியிருக்கலாமே !

sabeer.abushahruk said...

//ஏன் கேக்குறேன்னா!?, ஒன்னு விடாம தெள்ள தெளிவா எழுதி இருக்கீகளே அதான் ..//


அப்ப எனக்கும் கட்டுரை எழுத வருதுன்றீங்க. (என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?//

அதானே !

கவிதைக்குத் தெரியாத கட்டுரை வாசனையா ?

(பழ)மொழி மாற்றிடலையே ?

Shameed said...

//பிலிப்பைனி - அக்காவை காண வேண்டி,//

எங்க பெரிய அண்ணனை பார்த்து எப்புடி இப்படி கேட்டுபுட்டிக இங்கு ஜுபைல்லே இருக்குறப்பவே ஒரு பிலிப்பைனி செகரட்ரி "வச்சி இருந்தாக"அவுக நகம் வெட்டும் அழக நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் தலை சீவும் அழகோ தனி. பரடோவும் நம் ஊர் தாளிச்சவும் அந்த செகரட்ரிக்கு ரொம்ப பிடிக்கும் எங்க பெரிய அண்ணன் சபீர் அவர்களுக்கு அந்த செகரட்ரி ரொம்ப பிடிக்கும் அதைவிட எங்களுக்கு அவுகளே ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்ன ஒருவருத்தம்னா அவுக ஒரு அழகான பெண்போலா ஆண்!

sabeer.abushahruk said...

//எங்களுக்கு அவுகளே ரொம்ப ரொம்ப பிடிக்கும்//

இருவத்தி நாலு மணி நேரமும் நீர் ஏன் ஓஃபிஸையே சுத்தி வந்தீர்னு இப்பதாம்ல வெளங்குது.
பெட்ரோநிலோ டிலா க்ரூஸ் இப்ப கலிஃபோர்நியாவிலே இருக்கான். இப்பவும் "என்னய ரொம்ப நல்லவர்"னு சொல்றான்ப்பு.

Shameed said...

//பெட்ரோநிலோ டிலா க்ரூஸ் இப்ப கலிஃபோர்நியாவிலே இருக்கான். இப்பவும் "என்னய ரொம்ப நல்லவர்"னு சொல்றான்ப்பு//


ஆகா இன்னுமா தொடர்பு இருக்குது !!!!

ZAKIR HUSSAIN said...

எச்சரிக்கை....உடனே சகோதரர் ஷஃபாத் கவிதையை வெளியிடவும்..இல்லாவிட்டால் முக்கால்வாசி எழுதி முடித்திருக்கும் எனது ஆரிடிக்கிள் [ வித்தியாசமானவர்கள்- பகுதி 3] வெளியிட்டு உங்களை எல்லாம் இம்சை படுத்த வேண்டிவரும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவிதையை வெளியிடவும்..//

அவர்கள் மின் அஞ்சல் பரிமாற்றத்தினை கதைக்கின்றனர்... ஆதலால் உங்க ரூட் எப்பவுமே இண்டர்நேஷனல் ஹைவே ! பதிவுக்கே முன்பதிவா !?

Ahamed irshad said...

கதைக்கின்றனர்..//

இல‌ங்கை த‌மிழ்தானே இது # ட‌வுட்ங்கோவ்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இது # ட‌வுட்ங்கோவ்.. //

"கதை"க்கிடையே பேசியதால் கதைக்கிறாங்கன்னு சொல்லிட்டேன் தம்பி !

அது சரி எங்கே ஆளையேக் காணோம் !

கண்ணால் கான்பது மட்டும்தானா ?

விரல் விறித்து தட்டி தட்டி கொடுப்பதில்லையா ? ஏன் !

Ahamed irshad said...

வாழ்க்கையின் தேவைக் க‌ருதி (இப்போதைக்கு) க‌வ‌ன‌ம் வேற‌ ஒன்றிலிருக்கிற‌து.. கூடிய‌ விரைவில் இன்ஷா அல்லாஹ் நிறைவேறிடும்.. க‌ண்க‌ள் ப‌ணிக்க‌ க‌ட்டுரை ம‌ன‌சில் இருக்கிற‌து.. நேர‌ம் வ‌ரும்போது எழுத‌ எண்ண‌ம்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தேவைக் க‌ருதி (இப்போதைக்கு) க‌வ‌ன‌ம் //

எண்ணங்கள் யாவும் சிறப்புடன் நிறைவேற வாழ்த்துகிறேன் என்றும் துஆவுடன் இன்ஷா அல்லாஹ்...

//க‌ண்க‌ள் ப‌ணிக்க‌ க‌ட்டுரை ம‌ன‌சில் இருக்கிற‌து.. நேர‌ம் வ‌ரும்போது எழுத‌ எண்ண‌ம்..//

அந்நேரம் நெருங்க்கிடவும் காத்திருக்கிறோம் சரியான தளமிது என்றும் யாவரும் உணர்த்துவர் !

sabeer.abushahruk said...

// N.A.Shahul Hameed சொன்னது…
Assalamu Alaikkum
சுகமான் வலி. கால் வலியை விளக்கப்போய் எங்கள் உள்ளத்திற்கும் ஒத்தடம் போட்டுவிட்டாய்.
N.A.Shahul Hameed //

சார், ஷுக்ரன்.
பல்வலி சம்பந்தமாகவும் ஒரு பதிவு இருக்கிறது. செம காமெடியாகவும் இருக்கும். அ.நி. மனசு வைத்தால் பிறகு பதியலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு