Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோன்பாளிகளே - 1 - மீள்பதிவு ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 20, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

வல்ல அல்லாஹ்வின் அருளால் நோன்பு மாதத்தை அடைந்து நோன்பு வைத்தவர்களாக நாம் இருக்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே! (அல்ஹம்துலில்லாஹ்!) நாம் நோன்பிலும், பொதுவாகவும் கடைபிடிக்கும் காரியங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்ஆன்:
ரமலானின் தனிச்சிறப்பே இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதுதான். அதனால் தினமும் குர்ஆனை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஓதி வாருங்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் அவசியம் ஓதுங்கள்.

முதல் நோன்பு தொழுகை:
முதல் நோன்பு ஆரம்ப தொழுகையில் பள்ளி முழுவதும் நிரம்பி வழிந்த தொழுகையாளிகளை காண்பதற்கு மனதிற்கு நிறைவாக இருந்தது. தினமும் தொடர்ந்து வருபவர்களுக்கு இடம் இல்லாமல் பல சப்கள் கடந்து நிற்கும் அளவுக்கு இஷா தொழுகை, இரவுத்தொழுகை, பஜ்ர் தொழுகைகளுக்கு வந்த மக்களை பார்க்கும்பொழுது ஜூம்ஆவின் ஞாபகம் வந்தது. இத்தனை கூட்டமும் மற்ற நேரங்களில் எங்கு போனார்கள். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் வழங்கட்டும்.

ஆடை அலங்காரம்:
நம் சகோதரர்கள் ஒரு விருந்துக்கு செல்வதென்றாலும், ஆபிஸ்க்கு செல்வதென்றாலும் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு நல்ல ஆடைகளை அணிந்து செல்கிறார்கள்.

ஜூம்ஆ தினத்தன்று சாதாரண ஆடைகளையோ, கசங்கி போனதையோ அணிந்து வருகிறார்கள்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்.   (அல்குர்ஆன் : 7:31)

வல்ல அல்லாஹ் ஆடைகளால் உங்களை அழகாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறான். அதனால் வல்ல அல்லாஹ்வின் முன் தொழுகையில் நிற்கும்பொழுது சிறந்த ஆடைகளை அணிந்து நல்ல வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு வருவது சிறந்தது.

கொட்டாவி :
தொழும்பொழுது சிலர் வாயை பிளந்து ஆவென கொட்டாவி விடுவதை பார்த்திருக்கிறேன்.  (நீங்கள் தொழும்பொழுது பக்கத்தில் உள்ளவர்களை எப்படி பார்த்தீர்கள் என்று நினைக்கவேண்டாம். நான் தொழுது விட்டு வரும்பொழுது சுன்னத் மற்றும் 2வது ஜமாத் தொழுபவர்களை கவனிக்க நேரிடுகிறது).  (தொழுகையில் நம்மை படைத்த வல்ல அல்லாஹ்வுக்கு முன் நிற்கிறோம் என்ற உள்ளச்சம் இருக்க வேண்டும்) சிலர் சத்தத்துடனும் கொட்டாவி விடுவார்கள். இது நல்ல பண்பாக தெரியவில்லை. தொழும்பொழுதும் மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் நேரங்களிலும், தனியாக இருக்கும் நேரங்களிலும் கொட்டாவி வந்தால் வாயை ஆவென பிளக்காமல் சத்தம் இல்லாமல் கொட்டாவி நம்மை விட்டு அகலும்வரை நமது கையை கொண்டு வாயில் மூடிக்கொண்டு இருப்பது நல்ல பண்பாக இருக்கும். (கொட்டாவி நம்மோடு எல்லா காலங்களிலும் இருப்பது, அதனால் நாமும் கவனமாக இருக்க வேண்டும்).

சாக்ஸ் அணிபவர்களுக்கு:
ஊரில் பள்ளிக்கு சாக்ஸ் அணிந்து வருபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். வளைகுடா நாடுகளில் சாக்ஸ் அணிந்து தொழ வருபவர்கள் அதிகம் பேர். தொழும்பொழுது சுஜூதுக்கு சென்றால் கார்பெட்டில் உள்ள சாக்ஸ் வாடை நம்மை சிரமப்படுத்தும். சாக்ஸ் பயன்படுத்துபவர்கள் வேலை செய்யும் இடங்களில் குறிப்பாக ஆபிஸ்களில் வேலை செய்பவர்கள் ஷூவிலிருந்து காலை வெளியில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஷூவிற்குள் காற்று போக வாய்ப்பு இல்லாத காரணத்தால் காலில் உள்ள வேர்வை சாக்ஸிலிருந்து பள்ளியில் உள்ள கார்பெட்டில் ஈர்த்துவிடுகிறது.

சாக்ஸ் வாடை நம்மால் பள்ளிக்கு செல்வதிலிருந்து தடுப்பதற்கு தினமும் ஒரு சாக்ஸ் அணியலாம். ஒளு எடுத்த பிறகு மீண்டும் வேர்வை சாக்ஸை அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். சாக்ஸை பள்ளிக்கு வெளியில் வைத்து விட்டு வருவது நலம் அளிக்கும். நிறைய பேர் சாக்ஸ் வாடையை பற்றி கண்டுகொள்வதில்லை.

பல்துலக்குவது:
நோன்பு வைத்திருக்கும் நேரத்தில் வாயை சுத்தம் செய்வது பற்றி சிலர் சந்தேகத்தில் இருப்பார்கள். மற்ற காலங்களை விட நோன்புக் காலங்களில் அதிகம் வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நோன்புக் காலங்களில் நாம் சாப்பிடாமல் இருப்பதால் வாயிலிருந்து வாடை அதிகமாக வரும். நம் வாயிலிருந்து வரும் வாடை நம் அருகில் உள்ள மனிதர்களை சிரமமப்படுத்துவதோடு, மலக்குமார்களையும் சிரமமப்படுத்தும். அதனால் ஸஹருக்கு எழுந்திருக்கும்பொழுதும், பின் தூங்கி எழுந்திருக்கும்பொழுதும், அஸருக்குப் பிறகு தூங்கி எழும்பொழுதும் நோன்பு திறப்பதற்கு முன்பாகவும் பல் துலக்குங்கள். தூங்கி எழுந்திருக்கும் நேரத்தில் பேஸ்ட் கொண்டும் மற்ற நேரங்களில் கை விரல் அல்லது மிஸ்வாக் குச்சி கொண்டு பல் துலக்கி வாயை மிகச் சுத்தமாக வைத்திருக்கலாம். (ஒரு சிறு துளி அளவு பேஸ்ட் எடுத்து நேரம் இருந்தால் எல்லா நேரங்களிலும் உபயோகப்படுத்தலாம்).

சில சகோதரர்கள் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்கும்பொழுது வாயை மட்டும் கொப்பளித்து விட்டு தொழுச் செல்கிறார்கள். காரணம் தூக்கம் போய்விடுமாம். தூங்கி எழுந்தவுடன் வாய் வாடை போகும் அளவுக்கு பல் துலக்குவதுதான் சிறப்பு.

பல்துலக்குவதை பற்றி கீழ்க்கண்ட நபிமொழிகள் விளக்குவதை கவனியுங்கள்

என் சமுதாய மக்களுக்கு சிரமமாக இருக்கும் என நான் பயப்படவில்லையானால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல்துலக்கும்படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஹுரைரா(ரலி) அவர்கள். நூல்: புகாரி,முஸ்லிம் - ரியாளுஸ்ஸாலிஹீன்).

நபி(ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால், பல்துலக்கும் குச்சியால் பல் துலக்குவார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள். நூல்: புகாரி,முஸ்லிம் - ரியாளுஸ்ஸாலிஹீன்).

(நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்தால் முதலில் என்ன செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''பல்துலக்குவார்கள்' என்று அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷுரைஹ் இப்னு ஹானீ(ரஹ்)அவர்கள். நூல்: முஸ்லிம் ரியாளுஸ்ஸாலிஹீன்).

பல் துலக்குவது, வாயை சுத்தப்படுத்தும். இறைவனை திருப்தி படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: நஸயீ, ரியாளுஸ்ஸாலிஹீன்).

எச்சில்(உமிழ்நீர்):
எச்சிலை சிலர் துப்பிக்கொண்டே இருப்பார்கள். எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது. வாயில் உள்ள உமிழ்நீர் காய்ந்துவிட்டால் வாய் வரண்டு போய் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அதனால் உமிழ்நீரை(எச்சில்) துப்ப வேண்டியதில்லை. சளியைத்தான் துப்ப வேண்டும்.

வாசனை திரவியங்கள்:
நோன்பு வைத்திருக்கும் நேரங்களில் வாசனை திரவியங்கள் சிலர் பயன்படுத்த கூடாது என்று சொல்லி வருகிறார்கள். ஆல்ஹகால் கலக்காத அத்தர் வகைகளை பயன்படுத்தலாம், பவுடர், எண்ணெய், சோப்பு இவைகளை தாரளமாக பயன்படுத்தலாம்.  தாராளமாக வாசனை சோப்பு போட்டு குளிக்கலாம்.

இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில் மற்ற விஷயங்களை பார்ப்போம்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்!
S.அலாவுதீன்


வலைச்சுவடி (கருத்துக் கோர்வைகள்)

அபுஇபுறாஹீம் சொன்னது…
அன்பின் அலாவுதீன் காக்கா, அருமையான வழிகாட்டல்...

அன்றாட நடைமுறைகளில் கண்டும் உண்ர்ந்தும் வரும் செயல்களை சுட்டிக் காட்டி அதற்கான அறிவுரைகள் !

ஜஸாகல்லாஹ் !
Reply Tuesday, August 02, 2011 6:07:00 AM  

 M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
பொதுவான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள்.ஜஷாகல்லாஹ் ஹைர்.
Reply Tuesday, August 02, 2011 7:24:00 AM  

ZAKIR HUSSAIN சொன்னது…
இன்று அதிரையில் முதல் நோன்பு பிடித்து எழுதும் .....
இப்பவும் இங்கு யாவரும் சுகம். அங்கு நலம் அறிய ஆவல். 

பள்ளிவாசல் எல்லாம் நிரம்பி நிரம்பி வழிவது கண்டு சந்தோசம்.
ஆனால் Bass & Treble இரண்டையும் adjust செய்யத்தெரியாதவர்கள் இங்கு நிறைய இருக்கிறார்கள்.

பள்ளிவாசளில் ஓதும் பல விசயங்கள் இங்கு 10 மீட்டரில் கூட தெளிவாக கேட்க முடியவில்லை.

ஊரின் மிகப்பெரிய தடை "குப்பை & சாக்கடை, அத்துடன் வீசப்படும் பாலிதீன் பைகள்."

அதிராம்பட்டினத்தில் எல்லோரிடமும் ஒரு 'மெடிக்கல் ரிப்பொர்ட் ஃபைல் இருக்க வேண்டும்"
Reply Tuesday, August 02, 2011 10:21:00 AM  

Ameena A. சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சகோதரர் S.அலாவுதீன் அவர்கள் நடைமுறை செயல்களை கூர்ந்து கவனித்து நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள்...

இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடரிலும் பொண்களுக்கும் பயனுள்ளதை சொல்ல வேண்டும், எனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வலைத்தளத்தினை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்.
Reply Tuesday, August 02, 2011 10:46:00 AM  

நெறியாளர் சொன்னது…
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அன்பின் சகோதரி ஆமினா அவர்களுக்கு:

தங்களின் வழமையான பங்களிப்பிற்கும் அதனைத் தொடர்ந்து செய்யும் பரிந்துரைக்கும் - ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

தொடர்ந்து உங்களின் நல் ஆலோசனைகளயும் பங்களிப்பையும் வழங்கிடுங்கள்.

இப்புனித ரமளான் மாதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் செய்திடும் நல்லமல்கள் அனைத்தையும் அங்கீகரித்து நல்லருள் புரிவானாக !

சகோதரன்...

நெறியாளர்
www.adirainirubar.in
Reply Tuesday, August 02, 2011 11:05:00 AM  

அபுஇபுறாஹீம் சொன்னது…
// பள்ளிவாசளில் ஓதும் பல விசயங்கள் இங்கு 10 மீட்டரில் கூட தெளிவாக கேட்க முடியவில்லை. //

அன்று மைக் இல்லாத காலங்களில் கடைசி வரிசை வரை இமாம் ஓதுவது காதுகளுக்கு எட்டியது ஆனால் இன்றோ மைக் இருப்பதனால் சப்தம் குறைவாக ஓதுகின்றனர்... (நீங்கள் சொன்ன மாதிரி Bass & Treble இரண்டையும் adjust செய்யத் தெரிந்தவர்கள் அங்கிருக்கத்தான் வேண்டும்)

காது கொடுத்து கேட்ட தகவல்(கள்) !
Reply Tuesday, August 02, 2011 11:51:00 AM  

அதிரை-நிருபர்-குழு சொன்னது…

மின்னஞ்சல் வழி கருத்து...
----------------------------------------------
sabeer.abushahruk சொன்னது…

//அதிராம்பட்டினத்தில் எல்லோரிடமும் ஒரு 'மெடிக்கல் ரிப்பொர்ட் ஃபைல் இருக்க வேண்டும்//

இருக்கிறது
இருப்பவரிடம்
இருக்கிறது.

இல்லாதோரிடம்
இருப்பதில்லை

இனிப்பு
இருப்பவரிடமும்
இதயப் பிரச்சினை
இருப்பவரிடமும்
இர்க்கிறது

இல்லாதோரிடம்
இவ்வுலகில் செல்வம்
இல்லாதோரிடம்
இருப்பதில்லை
இனிப்பும்
இதயப் பிரச்சனையும்
இங்கிலீஷில் ரிப்பொர்ட்டும்

இங்கு
இப்பொழுது
இல்லாமல்
இம்மையைத் துறந்து
இறந்தவரின் ரிப்பொர்ட்கூட
இன்னும்
இருக்கிறது சில
இருப்பவர்
இல்லங்களில்

(நோன்பு இங்கு ரொம்ப சூடா இருக்கும்பி)

சபீர்
Reply Tuesday, August 02, 2011 1:27:00 PM  

Yasir சொன்னது…
அலாவுதீன் காக்காவின் அறிவுரைகள் அருமை அவசியமானதும் கூட
Reply Tuesday, August 02, 2011 2:08:00 PM  

அபுஇபுறாஹீம் சொன்னது…
!கவிக் காக்கா : ஊரில் 'இ'க்கு பதில் 'ஈ'க்கள் அதிகம் நோன்பு திறக்கு நேரத்தில் அவைகளும் போட்டி போடும்தானே நாம் திறக்கு முன்னர்,...

'இ'போட்டு 'இ'தயத்தை 'இ'டம் போட்டுட்டீங்க !

கலக்கல்தான்...
Reply Tuesday, August 02, 2011 2:08:00 PM  

Yasir சொன்னது…
ஜாஹிர் காக்கா.....ஆக.12ந்தேதி ஊர் வருகிறேன் ...அதுவரை நீங்கள் அதிரையில் இருப்பீர்களா ? உங்களை சந்திப்பதில் மிக மகிழ்ச்சியாக இருக்கும்
Reply Tuesday, August 02, 2011 2:10:00 PM  

sabeer.abushahruk சொன்னது…
அன்பிற்குரிய அலாவுதீன்,

மிக்க நன்றி. ஜஸாக்கல்லாஹ் ஃகைரா!

நீ குறிப்பிடும் சிறுபிள்ளைத்தனமான தவறுகளை மக்கள் இப்பவும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். உன் விளக்கங்களை விளங்கியாவது நம் மக்கள் சரியான வழியைப் பின்பற்றட்டும். மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலமும் சரியான சமயத்தில் எடுத்துறைப்பதன் மூலமும் மட்டுமே மாற்றம் வரும்.

நீ அதைச் சிறப்பாகச் செய்கிறாய். தொடர்ந்து செய்.

டேக் கேர்!
Reply Tuesday, August 02, 2011 3:20:00 PM  

தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

நன்னெறிகளை கற்றுத்தரும் உங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

சிறிய தவறே என்றாலும், ஒழுக்கம் ஒரு மனிதனுக்கு முழுமையாக வரவேண்டுமென்றால் சிறிய தவறுகளையும் தவிர்த்துக்கொள்வது நல்லது. 

தொடருங்கள் தங்களின் தாவாவை.
Reply Tuesday, August 02, 2011 8:09:00 PM  

அலாவுதீன்.S. சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் : அபுஇபுறாஹீம், 
M.H. ஜஹபர் சாதிக், ஜாகிர், யாசிர், சபீர், தாஜுதீன்
அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Reply Tuesday, August 02, 2011 11:47:00 PM  

அலாவுதீன்.S. சொன்னது…
///Ameena A. சொன்னது… இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடரிலும் பெண்களுக்கும் பயனுள்ளதை சொல்ல வேண்டும். /// 

சகோதரி ஆமினா அவர்களுக்கு: வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)
சகோதரியே! என்ற தனித் தொடர் எழுதுவதற்கு முயற்சி செய்து வருகிறேன். இன்ஷாஅல்லாஹ் தொடராக வெளிவரும்.

அதனால் இந்த தொடரில் சுருக்கமாக (நேரம் குறைவாக இருப்பதால்)பெண்களுக்கு நோன்பு காலங்களில் பயன் தரும் விஷயங்களை சொல்ல முயற்சி செய்கிறேன். இன்ஷாஅல்லாஹ்.

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Reply Wednesday, August 03, 2011 12:04:00 AM  

ZAKIR HUSSAIN சொன்னது…
Sorry Brother Yasir... now i am back to Kuala Lumpur
Reply Thursday, August 04, 2011 7:24:00 PM  

9 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயனுள்ள நினைவூட்டல்!
ஜஸாக்கல்லாஹ் ஹ்ஹைர்.

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லா க்ஹைர்

(தவிர, ஒரு பதிவை மீள் பதிவு செய்யும்போது அதற்கான முதல் பதிப்பின் பின்னூட்டங்களையும் மீள்பதிவது மரபு என்றொரு ஓலைச்சுவடியில் கண்ட ஞாபகம்)

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவருக்கும் அன்பான புனித ரமழான் நல் வாழ்த்துக்கள். து ஆக்கள்.

சகோதரர் அலாவுதீன் அவர்களின் பதிவை முன்பு படிக்கவில்லை. இப்போது படித்தேன். நன்றி. பாராட்டுக்கள்.

கவிஞர் சபீர் அவர்கள் குறிப்பிட்டபடி முன்புள்ள பின்னூட்டங்களையும் தந்திருந்தால் நன்றாகவே இருந்து இருக்கும்.

Unknown said...

அன்புச் சகோதர்களே,

எனக்கு நோண்பு தொடர்பாக ஒரு சிறு ஐயம் இருக்கிறது.

மெக்காவில் நோண்பு என்பது 14 மணி நேரத்திலிருந்து 16 மணி நேரம் வரை நீடிக்கலாம். ஆனால் நார்வே ஐஸ்லாண்ட் அலாஸ்கா கனடா போன்ற நாடுகளில் நோண்பு என்பது 21 மணி நேரம் வரை நீடிக்கும்.

அப்படி 21 மணி நேரம் நோண்பு வைப்பது சரியா? தவறா?

அன்புடன் புகாரி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோ.அன்புடன் புஹாரி. சொன்னதிலிருந்து.....

//21 மணி நேர நோன்பு//

நோம்புக்கு அடிப்படை மெக்கா அல்ல.

பிறை பார்கனும். இரவின் கருவானம் வெளுக்க துவங்குவதற்குள் நேரமாக இருக்கனும்.அதுவே ஸஹர் நேரம்.அது போல சூரியன் மறைய வேண்டும் அதுவே மஃரிபுடைய (இப்தார்)நேரம்.
(சுருக்கமாக பகல் காலங்களில் நோன்பிருக்கனும்)

வெயில் காலங்களில் அதிக நேரமாக இருக்கும். குளிர்காலங்களில் குறைந்த நேரமாக இருக்கும்.
இந்த வெயில், குளிர் கால நேர வித்தியாசம் பூமியின் மேற்பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அதிகமாக காணப்படும்.

KALAM SHAICK ABDUL KADER said...

//தினமும் தொடர்ந்து வருபவர்களுக்கு இடம் இல்லாமல் பல சப்கள் கடந்து நிற்கும் அளவுக்கு இஷா தொழுகை, இரவுத்தொழுகை, பஜ்ர் தொழுகைகளுக்கு வந்த மக்களை பார்க்கும்பொழுது ஜூம்ஆவின் ஞாபகம் வந்தது. இத்தனை கூட்டமும் மற்ற நேரங்களில் எங்கு போனார்கள். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் வழங்கட்டும்.//

அதானே! ஷைத்தானை விலங்கிலிட்டதாற்றானே இவ்வதிசயம்!!
எப்பொழுதும் நோன்பாக இருந்தால்... இப்படித்தான் மஸ்ஜித்கள் நிரம்பி வழியும்!!

அன்புடன் புகாரி said...

அன்புச் சகோ ஜகபர் சாதிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>>நோம்புக்கு அடிப்படை மெக்கா அல்ல.<<<<<

நான் நோண்புக்கு அடிப்படை மெக்கா என்று கூறுவதற்காக
மெக்காவின் நோண்பு நேரத்தைக் கொடுக்கவில்லை.

நேர அடிப்படையில் அதிக வித்தியாசம் காட்டும்
உலகின் இரண்டு இடங்களைசு சுட்டிக்காட்டி
என் ஐயத்தைக் கேட்கவே மெக்காவின்
நோண்பு நேரத்தை இட்டேன்.

அதே வேளை நோண்பு தொடங்கியது மெக்காவில்தான்
என்று நினைக்கிறேன். இதையும் ஊர்ஜிதம் செய்யவேண்டும்.
மதினாவாகவும் இருக்கலாம்.

>>>>>>>பிறை பார்கனும். இரவின் கருவானம் வெளுக்க துவங்குவதற்குள் நேரமாக இருக்கனும்.அதுவே ஸஹர் நேரம்.அது போல சூரியன் மறைய வேண்டும் அதுவே மஃரிபுடைய (இப்தார்)நேரம். (சுருக்கமாக பகல் காலங்களில் நோன்பிருக்கனும்)<<<<<<

இந்த விபரங்கள் எல்லாம் மிக நன்றாகவே எனக்குத் தெரியும்.
எனக்குள்ள் ஐயம் என்னவென்றால்

நோண்பு என்பது எத்தனை மணி நேரங்களுக்கு
அதிகப்படியாய் நீடிக்கலாம்?

எத்தனை மணி நேரங்களுக்கு குறைந்ததாய் இருக்கலாம்?

இதற்கு ஏதேனும் சட்டங்கள் குர்-ஆனிலோ ஹதீசிலோ உண்டா?

>>>>>>வெயில் காலங்களில் அதிக நேரமாக இருக்கும். குளிர்காலங்களில் குறைந்த நேரமாக இருக்கும்.
இந்த வெயில், குளிர் கால நேர வித்தியாசம் பூமியின் மேற்பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அதிகமாக காணப்படும்.<<<<

உண்மை.
அப்படி மாறும்போது நாம் நோண்பு வைக்கும் காலம்
மிகவும் குறைவாகவும் செல்கிறது
வெகு அதிகமாகவும் செல்கிறது.

குழந்தைகளெல்லாம் நோண்பு வைக்கும்போது
வெயில் காலத்தில் வெகு அதிக நேரம் நீடிப்பதால்
நீர் அருந்தாமல் இருப்பது அவர்களுக்குச் சிரமாக இருக்கிறது

ஆகவே இதற்காக ஏதேனும் விலக்கு உண்டா?
அல்லது அந்த நாட்டின் சூரிய சந்திர மாற்றங்கள்தான் முக்கியமா?

அன்புடன் புகாரி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்புடன் புஹாரி அவர்களுக்கு
வ அலைக்கு முஸ்ஸலாம்.

மேலும் தொடரும் ஐயங்களுக்கு ஜமீல் காக்கா மற்றும் அஹமது காக்கா போன்றோர்களிடம் தான் இன்சா அல்லாஹ் விளக்கம் பெறனும்.

அன்புடன் புகாரி said...

>>>>>>>
மேலும் தொடரும் ஐயங்களுக்கு ஜமீல் காக்கா மற்றும் அஹமது காக்கா போன்றோர்களிடம் தான் இன்சா அல்லாஹ் விளக்கம் பெறனும்.<<<<<<

நன்றி சகோ ஜ.சாதிக். அதுதான் என்னுடைய நோக்கமும். அறிந்தவர் எவராவது இச்சபையில் இருக்கக்கூடும். அறியத்தந்தால் அது பயனுள்ளதாய் இருக்கும் அனைவருக்கும்.

சில இடங்களில் சூரியன் மறைவதே இல்லை. ஆறு மாதம் இரவு, ஆறுமாதம் பகல் என்றும் துருவ நாடுகள் இருக்கின்றன.

அதோடு, இன்று மனிதன் சந்திர மண்டலம், செவ்வாய்க் கோள் என்று பயணப்பட்டுவிட்டான். இந்த நிலையில் ஒரு கால அளவை தொழுகைக்கும் நோண்புக்கும் வகுத்துக்கொள்வது தவறாகாது அல்லவா? அப்படி வகுத்துக்கொண்டால், அது இறைகுற்றமாகாது அல்லவா? அதுதான் என் ஐயம், என் கேள்வி!

இறைவன் கருணை மிக்கவன் அவன் மனிதர்களுக்குள் வாழும் இடம் காரணமாக ஏற்ற இறக்கங்களைத் தரமாட்டான் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

நோண்புக்கு என்று சூரியன் சந்திரன் நிலைகளைத் தாண்டி ஒரு திட்டமிட்ட காலவரையறை இருத்தல் அவசியம் என்பதே என் கருத்து.

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு