கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 23


அண்மையில் ‘கவிதையின் தேவை’  (وظيفة الشعر) என்ற ஆய்வடிப்படையிலான அரபிக் கட்டுரை ஒன்று என் பார்வைக்குக் கிடைத்தது.  அந்தக் கட்டுரையை வரைந்தவர், அப்துல் அஸீஸ் பின் ஸாலிஹ் அல் -அஸ்கர் என்ற சஊதி அரேபிய அறிஞர் ஆவார்.  கட்டுரையின் தொடக்கம் இவ்வாறு அமைந்தது:

கவிதை என்பது யாது?  அதன் உருவ அமைப்பா?  யாப்பு விதிகளா?  அல்லது அதன் கருப்பொருளா?  அல்லது இவையனைத்தும் சேர்ந்த கலவையா?  இக்கேள்வியானது, இலக்கியவாதிகள், கவிஞர்கள், வாசகர்கள் ஆகிய அனைவரின் உள்ளங்களிலும் எழும் ஒன்றாகும்.

இவ்வாறு கூறிவிட்டு, ‘நபியின் கவிஞர்’ எனப் பெயர் பெற்ற ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்கள் கவிதை பற்றிக் கூறிய ஈரடிப் பாவொன்றை மேற்கோள் காட்டுகின்றார் அவ்வறிஞர்:

وإنما الشعر لب المرء يعرضه   على المجالس إن كيسا وإن حمقا
وإن أشعر بيت أنت قائله     بيت يقال إذا أنشدته : صدقا

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                        மனிதத்தின் கருப்பொருளாம் கவிதை தன்னை  
மன்றத்தில் அறிஞர்க்கும் பாம ரர்க்கும்
புனிதத்தின் துணைகொண்டு பாடும் போது
புரிதலிலே மாற்றங்கள் இருந்த போதும் 
உனதுள்ளத் துணர்வுக்குத் தோன்றும் ஒன்றை 
உண்மையென எடுத்துரைக்கக் கேட்போ ரெல்லாம்
இனிதுற்றுச் செவியேற்றுப் போற்றி நின்றே 
‘ஈதுண்மை ஈதுண்மை’ என்பா ரன்றோ!  

இதைத்தான் நம் தமிழ்க் கவிஞனும்கூட இலகுவான கண்ணிகளில்,

உள்ளத் துள்ளது கவிதை – இன்ப
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை 
தெளிந்து ரைப்பது கவிதை 

என்று கூறினான் போலும்.  ‘Great minds think alike’ என்று இதனைத்தான் கூறுவர். 

அந்த ஆய்வாளர் அடுத்து எடுத்துரைக்கும் சான்று, அரபுலகின் சமகாலக் கவிஞரான உமர்  பஹாவுத்தீன் என்பவருடைய கருத்தாகும். “கவிதை என்பது, அதில் எடுத்தாளப்பெறும் சொல்லாடல், அமைப்பு, அணி மற்றும் யாப்பு போன்ற அனைத்தையும் கடந்த ஒன்றாகும்.  கவிஞனின் உள்ளுணர்வு, அவனது நோக்கம், செயல்பாடு, வரலாற்றுப் பின்னணி போன்ற முழு வாழ்க்கையின் பிரதிபலிப்பே கவிஞனின் கவிதை” என்கிறார் உமர் பஹாவுத்தீன். 

இந்த ஆய்வாளர் நம் சமகால மார்க்க அறிஞரான அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் கமீஸ் என்பவர் கவிதை பற்றிக் கூறிய கருத்தையும் தமது ஆய்வுக்குச் சான்றாகக் கூறுகின்றார்.

أن الشعر سلاح من أسلحة الأمة

(கவிதை என்பது, இந்தச் சமுதாயத்தின் போர்க் கருவிகளுள் ஒன்றாகும்.)

உண்மை!  அதனால்தான் அரபுகள் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்திலும் சரி, இஸ்லாத்தின் எழுச்சிக்குப் பின்னும் சரி, போர்க்களத்தில் ஆயுதமேந்திப் போரிட்டபோது, கவிதையையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.  ஏன்,  அண்ணல் நபி (ஸல்) அவர்கள்கூடப் பலபோது கவியடிகளை மொழிந்துள்ளார்கள்; அவற்றைப் பாடி உணர்வூட்டிய தம் தோழர்களை ஊக்கப் படுத்தியும் உள்ளார்களே!  இவ்வுண்மையை நம் இத்தொடரில் விரிவாகப் படித்துள்ளோம் அல்லவா?

மாற்றம் தேடும் மக்கள் எழுச்சி, மறுமலர்ச்சிப் போராட்டம், உரிமைக்கான எதிர்க்குரல் போன்றவற்றில், உணர்ச்சிப் பெருக்கால் பாமரன்கூடப் பாடத் தொடங்கிவிடுகின்றான் அல்லவா?  அந்த இதய எழுச்சிதான் கவிதை!  உணர்வின் ஊற்றுதான் கவிதை!  உலக அளவில் நாம் கண்டுவரும் அன்றாட எழுச்சிக் குரல்களுள்  அரபு நாடுகள் பலவற்றில் நடக்கும் அராஜகத்தை எதிர்த்து மக்கள் எழுப்பும் குரல்களினூடே கேட்கப்படும் கவிதைக் குரல்கள்!

அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் எனும் அரபுப் பேரறிஞரின் கருத்துப்படி, 

الشعر هو : فيض العواطف 

(கவிதை என்பது, உணர்வுகளின் சிறப்பாகும்.)

ஆம்.  அதனால்தான், உள்ளங்களின் உணர்வுகளில் உள்ளொளியைப் பரப்ப வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வப்போது தாமும் கவிதையடிகளைப் பாடினார்கள்;  தம்  தோழர்கள் பாடக் கேட்டு மகிழவும் செய்தார்கள்!   இதற்கான சான்றுகளை நாம் முந்திய பதிவுகளில் பார்த்து வந்துள்ளோம்.
(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

27 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

தொடரும் ஆதாரங்கள்!

அதிரை அரசியல் நாறிடும் போர்க்களம்.

நானா நீனாயென உனக்குள்
நாறிடும் நிலை போதும்
அதிரை நடப்புகள் அனைத்தும்
அரசியல் சாக்கடை தானென்பதும் அப்பட்டம்

Unknown சொன்னது…

அன்பினிய மூத்தசகோ ஆய்வாளர் அகமது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் தொடர் சுவாரசியம் குன்றாமல் சென்றுகொண்டே இருக்கிறது.

>>>>கவிதை என்பது, அதில் எடுத்தாளப்பெறும் சொல்லாடல், அமைப்பு, அணி மற்றும் யாப்பு போன்ற அனைத்தையும் கடந்த ஒன்றாகும். கவிஞனின் உள்ளுணர்வு, அவனது நோக்கம், செயல்பாடு, வரலாற்றுப் பின்னணி போன்ற முழு வாழ்க்கையின் பிரதிபலிப்பே கவிஞனின் கவிதை<<<<<

எத்தனையோ காலத்துக்கு முன்பே
புதுக்கவிதைக்கு வக்காலத்து வாங்கும்
இந்த வரிகள் கவிதைக்கான நெறிகள்

>>>>>>>>
கவிதை என்பது, இந்தச் சமுதாயத்தின் போர்க் கருவிகளுள் ஒன்றாகும்
மாற்றம் தேடும் மக்கள் எழுச்சி, மறுமலர்ச்சிப் போராட்டம், உரிமைக்கான எதிர்க்குரல் போன்றவற்றில், உணர்ச்சிப் பெருக்கால் பாமரன்கூடப் பாடத் தொடங்கிவிடுகின்றான் அல்லவா?
>>>>>>>

அப்படி வெள்ளைக்காரன் காலத்தில் எழுதப்பட்ட வெற்றிப்பாடல் இதோ. இதை எழுதியவன் பாமரன்தான்

ஊரான் ஊரான் தோட்டத்துல‌
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டான் வெள்ளக்காரன்

அன்புடன் புகாரி

Unknown சொன்னது…

أن الشعر سلاح من أسلحة الأمة

கவிதை என்பது, இந்தச் சமு
தாயத்தின் போர்க் கருவிகளுள் ஒன்றாகும்.

-------------------------------------------------------

1998 வருடம் என்று நினைக்கிறன் ,தினமணி கதிரில் பாரதியாரை ப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகிருந்தது.அதில் பாரதியார் நடத்திய பத்திரிக்கையான ''சுதேச மித்திரன் '' ல் பிரிட்டிஷ் இந்தியாவில் இஸ்லாமிய இலக்கியம் பற்றி ஒரு வாக்கியம் இருந்தது .

அதில் பாரதி சொல்லுகிறான்

''பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டே (அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் நடைமுறையில் இருந்த ) வீரம் செறிந்த இஸ்லாமிய அரபி கவிதைகளையும் ,இலக்கியங்களையும் பள்ளிபாடங்களிலும் ,பத்திரிக்கைகளிலும் தடை செய்து மறைத்தனர் .அதன் காரணம் அந்த அரபி கவிதைகள் மற்றும் இலக்கியங்களில் இருந்த வீரம் செறிந்த பொருளடக்கம் முகம்மதியர்களை மேலும் வேகப்படுத்தி தங்கள் ஆட்சிக்கு எதிராக அவர்கள் முன்னிலைபடுவார்கள் என அன்றைய பிரிட்டிஷ் அரசு பயந்துதான் காரணம் .''

நல்ல கவிதைகள் என்றுமே மிகப்பெரும் தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகேமே இல்லை .

அதிரை சித்திக் சொன்னது…

உணர்வின் ஊற்றுதான் கவிதை...

இதயத்தின் எழுற்சிதான் கவிதை ....

இது கவிதை பற்றிய கட்டுரையை ..

இரு வரியில் விளக்கி விட்டீர்கள் ...

மாஷாஅல்லாஹ் ..காக்கா கருத்துக்களின்

அறிவு சுரங்கம் .....

Unknown சொன்னது…

நல்ல தகவலுக்கு நன்றி சகோ அப்துல் ரகுமான்

sabeer.abushahruk சொன்னது…

//அதனால்தான், உள்ளங்களின் உணர்வுகளில் உள்ளொளியைப் பரப்ப வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வப்போது தாமும் கவிதையடிகளைப் பாடினார்கள்//

அவற்றையும் பதிவீர்கள்தானே காக்கா?

Unknown சொன்னது…

//அவற்றையும் பதிவீர்கள்தானே காக்கா?//

பதிந்துவந்துள்ளோமே, படிக்கவில்லையா?

sabeer.abushahruk சொன்னது…

நபியின் கவிஞர், நபித் தோழர்கள், நபி காலத்து கவிஞர்கள் போன்றோரின் கவிதைகளை வாசிக்கத் தந்ததாய் நினைவு.

நபி(ஸல்) அவர்களே பாடிய கவியடிகளை இவ்வாய்வில் பதிந்ததாய் நினைவில்லை. எனினும், மீண்டும் ஒரு முறை தேடி வாசிக்க முயல்கிறேன்.

ஜஸாகல்லாஹ் க்ஹைர், காக்கா.

sabeer.abushahruk சொன்னது…

ஆய்வில் கொடுக்கப்பட்டுள்ள கவிதைகளோடு எங்க காலத்து கவிதைகளும் ஒத்துப்போகிறதா?

உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!

Unknown சொன்னது…

ஊ..........ம்...!

Yasir சொன்னது…

// ஊ..........ம்...!// like it

Unknown சொன்னது…

இந்த இழை சுவாரசியமாய்ச் செல்கிறது. சின்னதாய் கவிதை பற்றி என் கவிதை ஒன்றை இடலாம் என்று தோன்றிவிட்டது:

எங்கே கவிதை
======================

உந்தும் உணர்வோடு
ஆழ் கடல் மூழ்கி அடிமடி தொட்டு
அகள்விழிச் சல்லடையால் அலசிப் பிடிக்க
அழகு முத்துக்களாய்க் கவிதைகள்

மெல்லிய காற்றாய் கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க் கவிதைகள்

அதிகாலைப் பொழுதில்
விலகியும் விலகா உறக்கத்தில்
இதழ் விரிக்கும் தளிர் உணர்வுகளில்
திட்டுத் திட்டாய்க் கவிதைகள்

உறக்கம் கொண்ட கண்களில்
உறங்காத மன அலைச்சலில்
உடனிருக்கும் அத்தனையும்
உறங்கிப்போன இருள் பொழுதில்
மூச்சுவிட்டு மூச்சுவிட்டு அழைக்கும்
தத்துவார்த்தக் கவிதைகள்

கோபம் வரும் கூடவே
கவிதை வரும்
காதல் வரும் முந்திக்கொண்டு
கவிதை வரும்
சோகம் வரும் அதைச் சொல்லவும்
கவிதை வரும்

எங்கில்லை கவிதை
எப்போதில்லை கவிதை
எதைத்தான் தழுவவில்லை கவிதை

கவிதை எதுவெனக் காண
விழிசொடுக்கி ஞானக்குதிரை விரட்டி
அண்டவெளி பறந்தால்
இதயத்தில் பூக்கிறது
எது கவிதை என்று ஒரு கவிதை

அன்புடன் புகாரி

Unknown சொன்னது…

கவிஞர் சபீர் சொல்வதைப்போல எனக்கும் ரசூலுல்லாவின் கவிதையை வாசித்த நினைவில்லை. அவர் பாராட்டிய கவிதைகளை வாசித்த நினைவுதான் இருக்கிறது. அட ஆழமாக வாசிக்காமல் விட்டுவிட்டேனா என்று சங்கடமாகவும் இருக்கிறது.

sabeer.abushahruk சொன்னது…

சகோ கவி புகாரி,

//கவிதை எதுவெனக் காண
விழிசொடுக்கி ஞானக்குதிரை விரட்டி
அண்டவெளி பறந்தால்
இதயத்தில் பூக்கிறது
எது கவிதை என்று ஒரு கவிதை//

இதுவா அது?


எது கவிதை:

மெல்ல விடிவதை
நல்ல மொழிதனில்
செல்ல வரிகளால்
சொல்ல முடிவதே…கவிதை!

உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!

பாலையில் யாவர்க்கும்
காலையும் மாலையும்
பாலை வார்க்கும்
வேலை பார்க்கும்…கவிதை!

சூரிய கிரணங்கள்
மேவிய தருணங்கள்
கூரிய வார்த்தைகளால்
கூறிய வருணனை…. கவிதை!

நுனுக்க உணர்வுகளையும்
மினுக்கக் கனவுகளையும்
துனுக்குத் தோரணங்களையும்
திணித்துவைத்த அனு...கவிதை!

கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!

உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!

அத்தனை பிள்ளைகளின்மேல்
அன்பிருந்தாலும்
செல்லப் பிள்ளையே….கவிதை!

கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.

கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.

கவிதை…
கதையோ கட்டுரையோவல்ல
வரி வரியாய் வாசிக்க,
வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.

கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்

கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்

வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!

தேசிய கீதமும் கவிதை
நேசிக்கும் பாஷையும் கவிதை
சாரள வெளிச்சமும் கவிதை
சூரியப் பிரவாகமும் கவிதை

மின்மினி வெளிச்சமும் கவிதை
மின்னாத இருளும் கவிதை
சொல்லிய வார்த்தைகளும் கவிதை
சொல்லாத வெற்றிடமும் கவிதை

வட்டத்துக்குள் அடங்க
ஆரமல்ல கவிதை
மாதத்துக்குள் முடிய
வாரமல்ல கவிதை

வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.

எது கவிதை?
கரம் கொண்டு விதைத்தால்
மரம்
கருவிதை விதைத்தால்
கவிதை!!!

-Sabeer abuShahruk,

Unknown சொன்னது…

அன்புச்சகோக்கவி சபீர்,

நான் அதிரை நிருபருக்குள் வந்தது கவிதை ஓர் இஸ்லாமியப்பார்வை என்னை இழுத்ததால்தான். அதற்கான அழைப்பும் அதிரை நிருபரிடமிருந்து என் மின்னஞ்சலுக்கு வந்தது.

ஆனால், அதிரை நிருபரை மேய்ந்தபோது, உங்களின் இந்தக் கவிதையால்தான் மேலும் ஈர்க்கப்பட்டேன். அப்போதே நான் பாராட்டிய வரிகள் இவைதான். நினைவிருக்கிறதா?

>>>>>>>
கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.
>>>>>>>>

நான் மதம் பற்றி ஏதும் எழுதுவதே இல்லை. அது உணர்வுபூர்வமான தலமாகத்தான் பலருக்கும் இருக்கிறது. இறைவன் கூறுவதுபோல் அறிவுப்பூர்வமாகவும் இருப்பதில்லை. பலரும் புரிதலில் சிக்கல் கொள்வார்கள். மனம் நோவார்கள். எதிரிகளாவார்கள். வெறுப்போடு உரையாடுவார்கள்.

ஆனால் என் மதத்தில் உள்ள ஏற்ற இறங்கங்களைக் கண்டு என்னால் வெறுமனே இருக்க முடியவில்லை. இறைவழியில், என் பணியாய், எனக்குக் கிட்டிய ஓர் உந்துதலில் எழுதுகிறேன். அது சிலருக்கு வெறுப்பையும் சிலருக்கு மகிழ்வையும் தருகிறது என்பதையும் அறிவேன்.

”மடமையைக் கொளுத்துவோம்” என்றான் பாரதி.

ஆனால் அது இஸ்லாமில் தெளிவாக பல இடங்களில் நிறைவாக இறைவனால் சொல்லப்பட்ட ஒன்று.

கவிதை பற்றி நான் என் இன்னொரு கவிதையையும் இடச்சொல்கிறது உங்கள் கவிதை. இது என் முதல் நூலில் முதல் கவிதையாய் வந்த கவிதை. அடுத்த மடலில் அது உங்களுக்காக!

உங்கள் கவிதை அருமையிலும் அருமை. என் பாராட்டுக்கள்! என் கவிதை விட்ட இடத்திலிருந்து உங்கள் கவிதை தொடர்வதுபோல் அமைந்தது வெகு சிறப்பு :)

அன்புடன் புகாரி

sabeer.abushahruk சொன்னது…

// இது என் முதல் நூலில் முதல் கவிதையாய் வந்த கவிதை. அடுத்த மடலில் அது உங்களுக்காக!//

சீக்கிரம் பதியுங்கள். ஆய்வின் வாத்தியார் வரும்வரை வகுப்பை நம் வசப்படுத்திக்கொள்வோம்.

Unknown சொன்னது…

வாழப் பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள்
=================================================

கவிதை

உச்சரிக்கும் ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும் கல்லுக்கும்
சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப் புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்
கவிஞன் தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள் மனிதனை இயக்க
பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து
மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும் அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது
கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும் சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும் அழகு தேவதை

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

கவிதை

அன்புடன் புகாரி

sabeer.abushahruk சொன்னது…

//உச்சரிக்கும் ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன //

வொன்டர்ஃபுல்,

இதை எழுதியபோது ஒரு 25 வயதிருக்குமா உங்களுக்கு? அதற்கப்புறம் உங்களுக்கு வயதே கூடியிருக்காதே !(அத்தனை இளமை)

வாசிக்கத்தான் காத்திருந்தேன்...குளிக்கப்போறேம்பா. உடனே பதிந்தமைக்கு நன்றி சகோ.

Unknown சொன்னது…

பாராட்டுக்கு நன்றி சகோ கவி சபீர்

இந்தக் கவிதையை எழுதிய போது என் உடம்பிற்கு வயது 40 ஆயிடுச்சு, ஆனால் என் மனம் தான் 15 ஐ இன்னமும் தாண்டவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

ஆகவே இந்தக் கவிதையை எழுதியபோது என் உணர்வுகளின் வயது 15 :)
உடம்பின் வயதைப்பற்றி நான் எப்போதும் கவலைப்படுவதே இல்லை.

உண்மையிலேயே தன் 15 ஆவது வயதில் என் சகோதரனின் மகள் எழுதிய ஆங்கிலக் கவிதைதான் என்னை அப்படியே அசரடித்துவிட்டது. நானெல்லாம் ஏன் கவிதை எழுதுகிறேன் என்று தோன்றிவிட்டது.

அன்புடன் புகாரி

crown சொன்னது…

உந்தும் உணர்வோடு
ஆழ் கடல் மூழ்கி அடிமடி தொட்டு
அகள்விழிச் சல்லடையால் அலசிப் பிடிக்க
அழகு முத்துக்களாய்க் கவிதைகள்.
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. கவிஞர் அண்ணன் புகாரி அவர்களுக்கு. முதல் நால்வரியே அமர்களம்.வார்த்தையின் ஜொலிப்பில் புருவம் உயந்தது!சில்லுன்னு இருக்கு அடிமனசுல!

crown சொன்னது…

மெல்லிய காற்றாய் கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க் கவிதைகள்
-------------------------------------------
இப்படி நுரைபூக்களையும் பாக்களாக கவிதையில் நார்தொடுத்தது வாசகர் கரையெங்கும் பொங்கும் மகிழ்சி வெள்ளம்.

crown சொன்னது…

கவிதை எதுவெனக் காண
விழிசொடுக்கி ஞானக்குதிரை விரட்டி
அண்டவெளி பறந்தால்
இதயத்தில் பூக்கிறது
எது கவிதை என்று ஒரு கவிதை
--------------------------------------------------------------
இது, இது கவிதை!

crown சொன்னது…

கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். முன்பே கருத்தெழுதியிருந்தாலும். என்றும் எனை ஈர்த்த வரிகளில் இந்த நான்கும் அடங்கும்.

crown சொன்னது…

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை
-----------------------------------------------
அது ஒரு உந்துவிசை! பகையாய் போன உறவு துருவங்களை மருபடியும் அடைய செய்யும் அவ்விசை! கவிதை!

crown சொன்னது…

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்
---------------------------------------------------
ஆமாம். தோழமை!தாய்மை அதன் தூய்மை !இப்படி வாய்மையெல்லாம் சேர்ந்த கலவைதான் அன்பு அந்த அன்பை போல் கவிதை! நல்ல உவமானம். நல்லதொரு சிந்தனை!

Unknown சொன்னது…

கிரீடம் என்று பெயர் சூட்டிக்கொண்டு
கவிதைகளுக்குக் கிரீடம் சூட்டிப் பார்க்கும் பாராட்டுகளுக்குப்
பல்லாயிரம் ராஜ கிரீடங்கள் சூட்டலாம்

அன்புடன் புகாரி

crown சொன்னது…

அன்புடன் புகாரி சொன்னது…

கிரீடம் என்று பெயர் சூட்டிக்கொண்டு
கவிதைகளுக்குக் கிரீடம் சூட்டிப் பார்க்கும் பாராட்டுகளுக்குப்
பல்லாயிரம் ராஜ கிரீடங்கள் சூட்டலாம்

அன்புடன் புகாரி
------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். அன்பிற்கு நன்றி ! ஒருகிரீடமே அதிகம் மேலும் கனம்.கனம் பொருந்திய அண்ணன் நீங்கள் சூட்டச்சொல்லும் பல்லாயிரம் ராஜ கிரீடம் சூட்டினால் கனத்தின் அழுத்தத்தில் நான் பினமாகிவிடுவேன் ,ஜடமாகிவிடுவேன்,அதனால் அடக்கமாய் இருந்து அடங்கும்முன் அன்பில் அடங்கி வாழ்ந்து பின் அடக்கும் போது வெறும் தலையுடன் அடங்கி! அல்லாஹ்வின் சன்னதி சேர்வேன் ஆமீன்.அதற்கு எல்லோரும் தூஆ செய்யுங்கள். இப்பொழுது நீண்ட ஆயுளும் . ஆரோக்கியமும் என்றும் துஆவும் வேண்டும் . இந்த தலைக்கனம் விரும்பாத சகோதரன்.