பெண்களுள் பேரறிஞர்
‘பேறு பெற்ற பெண்மணிகள்’ என்ற இத்தொடரில், பேறும் புகழும் பெற்ற புனிதவதி ஒருவரைப் பற்றிக் கூறாவிட்டால்,இத்தொடர் முழுமை பெற்றதாகாது! அவர் யார் தெரியுமா?
மர்யம் ஜமீலா!
பத்து வயதுச் சிறுமியாக நியூயார்க்கில் தன் யூத மதப் பெற்றோருடன் வசித்துவந்த மார்கரெட் மார்கஸ், யூதர்களின் ஞாயிற்றுக் கிழமைப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தபோது, தான் பிறந்த யூத மதத்திற்கும் அரபுகளின் இஸ்லாம் மதத்திற்கும் இடையில் இருந்த ஒற்றுமையால் கவரப்பெற்றாள்.
பின்னர், யூத இளையோர் இயக்கமான ‘மிஸ்ராகி ஹட்ஸாய்ர்’ (Mizrachi Hatzair) என்பதில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாகப் பாடுபட்டார் மார்கரெட். அதில் ஈடுபட்டு உழைத்தபோது, அமெரிக்க யூதர்களின் ‘சியோனிஸம்’ (Zionism) எனும் தீவிரவாதப் போக்கு, கொடிய அரபு-வெறுப்பைக் கொண்டிருந்ததை உணர்ந்தார். எனினும், அமெரிக்க யூதர்கள் சியோனிஸத்தின் இரும்புப் பிடியில் அகப்பட்டிருந்ததால், சிலபோது அவர்களுக்கு இயைபாகவே செயல்பட வேண்டியதாயிருந்தது. யூதர்களின் அரபு வெறுப்பு அளவுக்கு மீறிப் போனதால், மார்கரெட் சில மாதங்களிலேயே அதை விட்டு வெளியேறினார்.
மார்கரெட் தனது இருபதாவது வயதில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பயின்றுகொண்டிருந்தபோது, அதன் ஹீப்ரூ மொழித் துறைத் தலைவரான பேராசிரியர் ரப்பி ஆப்ரஹாம் கட்ஷ், யூத மதத்திலிருந்தே இஸ்லாம் மதம் தோன்றியதென்றும், அதனால், இஸ்லாத்தைவிட யூத மதம்தான் உயர்ந்தது என்றும் அழுத்தமாக வாதாடினார். ஆனால் மார்கரெட்டோ, அந்த இனவாத வலையில் விழவில்லை. மாறாக, ‘சியோனிஸம்’ என்பது, யூத மதத்தின் பூர்வீகக் குடிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இனவாத இயக்கமே என்பதைக் கண்டுபிடித்தார்!
“பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களான அரபுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி, அமெரிக்காவின் சியோனிஸ யூதர்கள் கிஞ்சிற்றும் அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை! அதனால், நான் யூத மததைச் சேர்ந்தவள் என்று கூறிக்கொள்ள என் இதயம் இடம் கொடுக்கவில்லை” என்று பிற்காலத்தில் தனது உள்ளுணர்வை வெளிப்படுத்தினார் மர்யம் ஜமீலாவாக மாறிய மார்கரெட்.
பெற்றோரின் வற்புறுத்தலாலோ, அக்காலத்தின் போக்கு (Trend) என்பதாலோ, மார்கரெட் தனது கல்லூரிப் படிப்பின்போது யூதப் பேராசிரியர் கட்ஷின் சிறப்பு வகுப்பில் தொடர்ந்து பயின்றுவந்தார். அவ்வகுப்பில் நிகழ்ந்த அற்புதப் பிணைப்பு, தன் வாழ்வின் புரட்சி மிக்க மாற்றத்திற்குக் காரணமாயிற்று என்று நினைவுகூர்கின்றார். அது என்ன?
அந்த வகுப்பில் சேர்ந்த முதல் நாள், வகுப்பினுள் நுழைந்த மார்கரெட், அங்கே மாணவர்கள் மட்டுமே அமர்ந்திருக்கக் கண்டார். அவர்களும், யூத மத அடையாளமான தலைத் தொப்பி (Skul cap) அணிந்திருந்தனர். ஆண்கள் மட்டுமே இருந்த அறையில் அஞ்சியஞ்சி நுழைந்து, காலியாக இருந்த ஓரிடத்தில் அமர்ந்தார். சற்று நேரம் சென்ற பின், மாணவி ஒருத்தி வந்து அருகில் அமர்ந்தாள். அவள் அழகான, ஒல்லியான, உயரமான, வெளுத்த தோற்றத்திலும், பொன்னிறத் தலை முடியுடனும் இருந்து மார்கரெட்டின் மனத்தைக் கவர்ந்தாள். தோற்றத்தில், சிரியா அல்லது துருக்கி நாட்டைச் சேர்ந்தவள் போல் இருந்தாள்.
வகுப்பு முடிந்ததும், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொண்டனர். அவள் பெயர் ஜெனித்தா லீபர்மேன் (Zenita Liebermann) என்றும், அவளுடைய பெற்றோர் ரஷ்யப் புரட்சிக்கு முன் (1917) அங்கிருந்து தப்பி வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் என்றும், தன் தந்தையின் வற்புறுத்தலால் ஹீப்ரூ மொழியைக் கற்று, அந்தச் சிறப்பு வகுப்பில் வந்து சேர்ந்ததாகவும் கூறினாள் அப்பெண். பின்னர் ஒரு சில நாட்களே வகுப்பிற்கு வந்த ஜெனித்தா, முன்னறிவிப்பு எதுவுமின்றித் திடீரென்று வகுப்பிற்கு வராமல் நின்றுவிட்டாள்!
“பல மாதங்கள் கடந்தன. நான் ஜெனித்தாவை மறந்துவிட்டேன். திடீரென்று ஒரு நாள் அவள் என்னைத் தொடர்பு கொண்டாள்! பல மாதங்கள் தொடர்பற்றுப் போனது பற்றி வருத்தம் தெரிவித்தாள். அன்று மாலை, தன்னை நியூயார்க்கின் ‘மெட்ரோபாலிட்டன்’ அருங்காட்சியகத்தில் வந்து சந்திக்குமாறு அன்புடன் அழைத்தாள். நானும் அதை ஏற்று, அங்கே சென்றேன். அங்கே அரபு மொழியின் அழகிய வண்ணக் கையெழுத்துகளும், புராதனமான குர்ஆன் பிரதிகளும் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருந்தன. எனது ஆர்வத்தையும் அக்கண்காட்சி தூண்டிவிட்டது. (பிரிந்தோர் கூடினால், பேசவும் வேண்டுமோ?) நாங்கள் இருவரும் ஆரத் தழுவிக்கொண்டோம்!” என்று தனது தோழியை மறுபடியும் சந்தித்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கின்றார் மர்யம் ஜமீலா.
தோழியைச் சென்று கண்டபோது, முதன்முதலாக அவள் கூறிய செய்தி, அதிர்ச்சியளித்தது மார்கரெட்டுக்கு! ஜெனித்தா இஸ்லாத்தைத் தழுவிவிட்டாளாம்! எப்படியென்று கேட்டபோது அவள் கூறினாள்: “எனது இரண்டு கிட்னிகளும் பழுதாகிப் போய், நான் படுத்த படுக்கையிலானேன். எவ்வளவோ மருத்துவங்கள் செய்தும், நோய் குணமாகவில்லை. அதனால், டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலைக்காகி, மறையப் போகும் நாட்களை எண்ணிக்கொண்டு ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். அப்போது யாரோ, முஸ்லிம்களின் வேதமான குர் ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தார்கள். அது அப்துல்லாஹ் யூசுப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பும் விளக்கக் குறிப்புகளும் கொண்டது. அதனைத் திறந்து படிக்கத் தொடங்கினேன். படிக்கப் படிக்க, என் இதயம் அதன்பால் ஈர்க்கப்பட்டு, நான் அழத் தொடங்கினேன். அந்நிலையில், எனக்குள் ஓர் உணர்வு, நாம் குணமாகிவிடுவோம் என்று! அடுத்த நிமிடமே என் தோழிகளுள் இருவரைக் கூப்பிட்டு வைத்து, அவர்களின் சாட்சியுடன் ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானேன்.”
மறுபடியும் இருவரின் நட்பு தொடர்ந்தது. அரபு உணவு வகைகளின் மீது ஆவல் கொண்டிருந்த அவ்விருவரும் அவற்றைத் தேடிச் சென்று ஒன்றாக இருந்து உண்பார்களாம். அத்தோழியின் மூலமே மார்கரெட்டுக்குக் குர்ஆனின் நெருக்கம் கூடிற்று. கல்லூரியில் பேராசிரியர் கட்ஷ் யூத வேதமான தல்மூதிலிருந்தும் பழைய ஏற்பாட்டிலிருந்தும் போதித்த யூத மதம், மார்கரெட் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் படித்ததற்கும் மாறுபட்டதாக இருந்தது.
ஜெனித்தாவின் தோழமை புதுப்பிக்கப்பட்டதாலும், அவள் எடுத்த சரியான முடிவின் தாக்கத்தாலும், மார்கரெட்டுக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் கூடிற்று. மேலும் பல ஆய்வுகள் மேற்கொண்டும், கருத்துப் பரிமாற்றங்கள் செய்தும், இறையருளால், 1961 ஆம் ஆண்டில் மார்கரெட் இஸ்லாத்தைத் தழுவி, மர்யம் ஜமீலாவானார்!
அவரது மத மாற்றம் இலேசாக ஓரிரு வரிகளில் கூறும் விதத்தில், ஓரிரவு மாற்றமாக (overnight change) நிகழ்ந்துவிடவில்லை. அதன் பின்னணியில் ஒரு பெரும் போராட்டமும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் இருந்தன என்று கூறின், அது மிகையாகாது.
முதலில், சிறு வயது முதல் அவருக்கு இருந்த அரபிப் பாடல் ஆர்வம், அதன் பின்னர் குர்ஆன் வசனங்களை இனிய ஓசையில் ஓதும் காரிகளின் ஓதல்கள் அனைத்தும் சேர்ந்து, குர்ஆனின் மீது மர்யமுக்குப் பற்றையும் பாசத்தையும் ஏற்படுத்திற்று. குர்ஆனின் ஒலி நாடாக்களை வாங்கி வந்து, வீட்டில் போட்டுக் கேட்பார். அதனால், பெற்றோரின் வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தார். மகள் குர்ஆன் ஓதலைக் கேட்கும்போதெல்லாம், பெற்றோர் அவளின் அறைக் கதவை ஆத்திரத்துடன் சாத்திவிடுவார்கள்!
மர்யம் சேர்ந்திருந்த யூத சியோனிசப் பிரிவினர் கொதித்தெழுந்தனர்! “நமது மதத்தை மிக மோசமான விதத்தில் இவள் காட்டிக் கொடுத்துவிட்டாள்” என்று திட்டித் தீர்த்தனர்! அவரது பரம்பரைக்கே இழுக்கான செயல் என்றும், மற்ற யூதர்கள் அவர் மீது ஆத்திரப் பட்டுத் தாக்கத் தொடங்குவதற்கு இம்மத மாற்றம் காரணமாகும் என்றும் ஏசினர்! அது மட்டுமா? அவரது யூத மதத் தொடர்பினால், முஸ்லிம்கள்கூட அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், “மதம் மாறிப் போன மாபாதகச் செயலைச் செய்ததால் நீ நரகத்துக்கே போவாய்!” என்றும் சாபமிட்டனர்!
1954 ஆம் ஆண்டிலேயே இஸ்லாத்தின் மீது காதல் கொள்ளத் தொடங்கிய திருமதி மர்யம் ஜமீலா, எல்லாவற்றையும்விடப் பெற்றோரின் எதிர்ப்பே வன்மையாக இருந்ததாகக் கூறுகின்றார்! அப்படியானால், என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஓரளவு நாம் கற்பனை செய்துகொள்ளலாம்!
யூத கிருஸ்தவ மதங்கள் அமெரிக்காவுக்குப் பழக்கப்பட்ட மதங்களாம்! இஸ்லாமோ, அரபு நாட்டு மதமாம்! பெற்றோரின் மிரட்டல்கள், துன்புறுத்தல்களால் மர்யம் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையிலானார்! 1957 முதல் 59 வரை மருத்துவ
மனைகளில் மாறி மாறிச் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்! அப்போதெல்லாம், ‘நான் ஒரு வேளை நற்சுகம் பெற்று வெளிவந்தால், கட்டாயம் இஸ்லாத்தைத் தழுவுவேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டாராம் மர்யம் ஜமீலா!
அல்லாஹ்வின் அருட்பேற்றால், நற்சுகம் பெற்று மருத்துவ மனையிலிருந்து வெளிவந்த மர்யம், தனது ஓய்வு நேரங்களை நியூயார்க்கின் அரசு நூலகத்தில் செலவிட்டார். அங்கு ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ என்ற நபிமொழித் தொகுப்பு நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கி, தான் படித்த குர்ஆன் வசனங்களின் சரியான விளக்கத்தை அறிந்து மகிழ்ந்தார்.
மார்கரெட்டாயிருந்து மர்யம் ஜமீலாவான இப்பெண்மணி, இஸ்லாத்தை ஓரிரு சான்றுகளைக் கொண்டு மட்டும் ஏற்றுக்கொண்டதாகக் கூற முடியாது. இவரோ பெண்களுள் பேரறிஞர்! இயல்பான ஆங்கில மொழியறிவிற்கு மேல், பிரெஞ்சு, ஸ்பானிஷ், லத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளையும், அமெரிக்க-ஐரோப்பிய வரலாறுகள், அரபு-யூத வரலாறுகள், அறிவியலின் பல பிரிவுகள், நுண்கலைகள் அனைத்தையும் கற்று அறிவாளியாகத் திகழ்ந்தவர்!
இத்தகைய தகுதிகளுக்கும் பின்னர், இவரது விவேகமான இதயத்தில் எழுந்த புதுமையான ஐயங்களையும் நியாயமான உணர்வுகளையும் அமெரிக்காவிலிருந்து கடிதம் மூலம் எழுதி, இருபதாம் நூற்றாண்டின் எழுச்சி மிக்க பேரறிஞராகிய மவ்லானா மவ்தூதி (ரஹ்) அவர்களுக்கு அனுப்பினார். அதற்கு அம்மாமேதை சலிப்படையாமல் உரிய மறுமொழிகளை எழுதினார்கள். அதன் பின்னர் மார்கரெட், மர்யம் ஜமீலாவாக மாறினார்.
தனது இஸ்லாமிய வாழ்க்கைக்கு, அறுபதுகளில் அமெரிக்காவில் இருந்த சூழ்நிலை சாதகமற்றதாக இருந்ததால், மவ்லானா மவ்தூதி அவர்களின் பரிந்துரையின் பேரில் பாக்கிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார் மர்யம் ஜமீலா. அங்குத் தனியாக முஸ்லிம் பெண் ஒருவர் -மஹ்ரமில்லாமல்- வாழக் கூடாது என்பதால், மவ்லானாவின் பரிந்துரையின்படியே, மனைவியை இழந்த ஜமாஅத் ஊழியர் முஹம்மத் அஷ்ரஃப் அவர்களை மணம் செய்து, தம் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார் இந்தப் பெண் பேரறிஞர். பாக்கிஸ்தானைத் தம் தாயகமாகக் கொண்டு, இன்னும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார்!
இவரது பேரறிவுப் பெட்டகத்திலிருந்து வெளிவந்த எழுத்தோவியங்கள் ஏராளம். அவற்றுள் சில:
Islam versus the West
Islam and Modernism
Islam and Orientalism
Islam and the Muslim women Today
Islam and Social Habits
Islamic Culture in theory and Practice
Modern Technology and the Dehumanization of Man
Islam and Modern Man
உட்பட இன்னும் ஏராளமான நூல்கள்...!
தொடரும்...
அதிரை அஹ்மது