தொடர் : 27 [நிறைவுறுகிறது]
அல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்!
நீதித்திருநாளின் நிலையான பெருந்தலைவன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ் (ஜல்) அருள்கின்றான்:
நிச்சயமாக, நல்லவர்கள் அந்நாளில் சுவர்க்கத்தின் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள். உயர்ந்த கட்டில்கள் மீது சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களுடைய சுகவாசத்தின் செழிப்பை நபியே நீர் கண்டறிவீர். முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். போட்டியிட்டு ஆசைகொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். அதில் "தஸ்னீம்" என்ற வடிகட்டிய பானமும் கலந்திருக்கும். அது ஓர் அற்புதமான நீரூற்று ஆகும். அல்லாஹ்வுக்குச் நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மதுவை அருந்துவார்கள். (01)
ஆள்பவனும் ஆற்றல் மிக்கவனுமாகிய அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா மேலும் சொல்கின்றான்:
தங்கத்தட்டுகளும் கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றிவந்து கொண்டிருக்கும். மனம் விரும்பக் கூடிய, கண்களுக்கு இன்பம் அளிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும். அவர்களிடம் 'இங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தில் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் காரணத்தால், இந்த சுவனத்திற்கு வாரிசாக நீங்கள் ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் மகிழ்வுடன் உண்பீர்களாக!' என்று கூறப்படும். (02)
இறைவனின் சிரிப்பில் எளியவனின் ஈடேற்றம்:
அல்லாஹ் (ஜல்)வால் ஆசீர்வதிக்கப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவர்க்கவாசியின் நிலை குறித்து நவின்றார்கள்:
நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறி சுவர்க்கவாசிகளில் இறுதியாகச் சுவர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து கை கால்களால் தவழ்ந்தவராக வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர்! அவரிடம் அல்லாஹ் (ஜல்) 'நீ போய் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!' என்பான். அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப்போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பிவந்து "என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்' என்று கூறுவார். அதற்கு, அல்லாஹ்(ஜல்) இல்லை. 'நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!' என்று மீண்டும் சொல்வான்.
அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்றே மறுபடியும் அவருக்குத் தோன்றும்! ஆகவே, அவர் திரும்பிவந்து 'என் இறைவா! அது நிரம்பியிருப்பதாகவே காண்கின்றேனே?' என்று கூறுவார். அதற்கு வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் கருணையாளன் 'நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில்,உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு இடம் சுவர்க்கத்தில் உனக்கு உண்டு!' என்று சொல்வான்.
அதற்கு அம்மனிதர், 'அரசருக்கெல்லாம் அரசன், பேரரசன் ஆகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைக் கண்டு சிரிக்கின்றாயா?' என்று கேட்பார், என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே கூறினார்கள்.
இதை எங்களுக்குக் கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் கண்டேன்'.
'இவரே சுவர்க்கவாசிகளில் தகுதியால் மிகவும் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார்' என்று கூறப்பட்டு வந்தது. (03)
உலகமெலாம் காக்கின்ற ஒப்பற்ற உயர்தலைவன் அல்லாஹ்வின் இத்தகைய எல்லை கடந்த கருணை குறித்து, கனிவுநிறைந்த கண்ணியத் தூதர்(ஸல்) அவர்கள் ஹுனைன் யுத்தம் நிகழ்ந்த பொழுதினில் இவ்வாறு கூறினார்கள்:
போரில் பிடிபட்டவர்களுள் ஒரு தாய்மை நிறைந்த பெண்மணியின் மார்பில் இருந்து தாய்ப்பால் ஒழுகிக் கொண்டிருந்தது. எனவே, கண்ணில் காணும் குழந்தைகளை எல்லாம் தூக்கி தம் மார்போடு அணைத்து அவர்களுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த பேரறிஞர் பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தப் பெண், அந்தக் குழந்தைகளைத் தூக்கி நெருப்பில் போட்டுவிடுவாள்' என்று நம்புகிறீர்களா? என்று நபித்தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு ஒரு ஸஹாபி எழுந்து, 'அவளுக்கு அத்தகைய ஒரு வாய்ப்பு கிடைத்தால்கூட ஒருக்காலும் அப்படி அவள் செய்யமாட்டாள் யா ரசூலல்லாஹ்' என்று பதிலளித்தார்.
ஞானமிகு தூதர் (ஸல்) சொன்னார்கள்: அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பெண்ணின் அன்பைவிட, உங்களின் இறைவன் பன்மடங்கு தன் அடியார்கள் மீது இரக்கம் கொண்டவன். (04)
இதுபோன்ற இன்னொரு சமயத்தில்தான், 'அல்லாஹ்வின் தூதரே, நான் சுவர்க்கத்தில் நுழைவேனா?' என்று கேட்டு நின்ற ஒரு மூதாட்டியின் சுவனம் பற்றிய கேள்விக்கு;
'கிழவிகள் சுவனம் புகுவதில்லை!' என்ற அதிர்ச்சியான ஒரு பதிலை அவருக்கு அளித்தார்கள் அண்ணலார்! அது கேட்டு மிகுந்த மனவருத்தத்தோடு போய்க் கொண்டிருந்த அவரைத் திரும்ப வரவழைத்து,
'நீர் ஒரு கிழவியாக சுவனம் புகமாட்டீர்! ஓர் எழில்மிக்க இளநங்கையாகவே சுவர்க்கத்தின் சிங்காரச் சோலைகளில், அதன் வண்ண மலர்க்கூட்டங்களில் நீர் மகிழ்ச்சியுடன் நுழைந்து செல்வீர்!' என்று அவரை மனம் குளிரச் சிரிக்க வைத்தார்கள் வாய்மையின் அழைப்பாளர் வாஞ்சை நபி நாயகம் (ஸல்) அவர்கள்.
அத்துடன் அவருக்கு இந்த அருள்மறை கூறும் அழகிய வாக்கியங்களை ஓதிக்காட்டினார்கள்:
"நிச்சயமாக, சுவர்க்கத்தின் பெண்களாகிய அவர்களை புதிய ஓர் அமைப்பில் நாம் உருவாக்கியுள்ளோம். அவர்களை நாம் கன்னிகளாகவும் தன் கணவனையே காதலிப்பவர்களாகவும் மேலும், சமவயது உடையவர்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம். (05)
பொன்மனச்செம்மல் (ஸல்) அவர்களின் பூத்துக்குலுங்கும் புன்சிரிப்பைப் பற்றி;
"வாளேந்தி வன்சமர் புரிந்தெல்லாம் சாதிக்கமுடியாத சாதனைகளைக் கூட சீர்திருத்தவாதிகளில் எல்லாம் சிரேஷ்டமானவராகிய நபிகள் நாயகத்தின் இனிய சொல்லும் புன்சிரிப்பும் சாதித்தது" என்ற வலிய உண்மையை ஓங்கி உரைத்தார் பகுத்தறிவுத் தமிழறிஞர் அண்ணாத்துரை.
"இங்கிலாந்து மட்டுமல்ல! இந்த ஐரோப்பா முழுவதையும் அடுத்த நூறு ஆண்டுகளில் ஏதாவது ஒரு மதம் ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்றால், நிச்சயமாக அது இஸ்லாம்'தான்" என்பதை ஆராய்ந்து முடிவாக எழுதினார் ஆங்கிலேய சிந்தனைச்சிற்பி ஜார்ஜ் பெர்னார்ட்ஷா.
மனிதகுலத்தின் மாணிக்கமாகிய மாண்பு நபி (ஸல்) அவர்கள், எப்போது 'ஓதுவீராக' என்ற விண்ணகத்திலிருந்த வந்த அந்த 'அசரீரி' யைக் கேட்டார்களோ, அப்போதிருந்தே தன் உயிர்காற்றின் ஒவ்வொரு சுவாசத்தையும் ஒப்பற்ற ஓரிறைக் கொள்கையாகவே வெளியிட்டார்கள்!
இந்த உம்மத்திலிருந்து வந்த தனியொரு மனிதனின் நேர்வழி என்பது, தனக்குக் கிட்டிய ஈடேற்றமாகவே உணர்ந்து அதைப் புளகாங்கிதம் கொண்டு வரவேற்று மகிழ்ந்தார்கள் நமக்கு இன்பநிலை பெற்றுத் தந்த அன்புநபி (ஸல்) அவர்கள். இந்த ஒரே நோக்கத்திற்காகவே, தன் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய சிறிய தந்தை மாவீரன் ஹம்ஸா (ரலி) வை, மறைந்திருந்து கொன்ற வஹ்ஸீயையும் கூட மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள் அருள்வடிவான அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
இதன்விளைவாக, 'வீழ்ந்தவருக்குச் சுவர்க்கமும் வாழ்பவருக்கு வெற்றியும்' அந்த உத்தமத் திருநபியால் உறுதியானது! அகிலத்தின் வரலாற்றில் இதற்கு ஈடான இன்னொரு காட்சியை நாம் காணவே முடியாது! மனித சமூகத்தின் மீட்சியின்மீது இந்த அளவிற்குக் கருணையும் கனிவையும் வெளிப்படுத்தி நின்ற உயர்ந்த இலக்கணத்திற்கு உரியவரான இந்த மாமனிதரின் கால் தூசிக்குக்கூட மனித குலத்தின் வரலாறு படைத்தோர் என்ற வரிசையில் நிற்கும் வேறெந்த மனிதனும் நெருங்கி நிற்க முடியாது! (06)
ஏந்தல் நபி (ஸல்) அவர்களுக்கு, இரண்டாவதாக வந்த 'வஹீ'யில் 'எழுந்து நிற்பீர்! எச்சரிப்பீர்!' என்ற மேலோன் அல்லாஹ்வின் கட்டளையைக் கண்ட அந்தக் கணத்தில் எழுந்து நின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக் குரல் 'பாலைகளிலும் சோலைகளிலும் பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும் மேடுகளிலும் அதையும் தாண்டி நிற்கும் தீவுகளிலும்' தடையில்லாமல் தன் இலட்சியவாழ்வின் இறுதி நேரம்வரை மக்களை நல்வழிப்படுத்திய வண்ணம் ஒலித்துக் கொண்டே இருந்தது! இறுதிவரை இவ்வுலகில் சாதிக்க வந்த ஆதிக்க நாயகராகவே வரலாற்றில் மிளிர்ந்து நின்றார்கள் மணிமொழிபேசும் மன்னர் நபி (ஸல்) அவர்கள்!
அந்த ஒப்பற்ற ஒரே இறைவனை மட்டுமே வணங்கி வழிபடும் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் அரும் பணியில், தம் உன்னதமான அழைப்புப் பணியின் இறுதி இலக்கான 'ஏகத்துவம்' என்ற வெற்றிக் கனியை அந்த 23 ஆண்டுகளில் தம் கண்களாலேயே கண்டு, தம் கைகளாலேயே பறித்து, அதைப் பொக்கிஷமான ஒரு பரிசாக நமக்கு அளித்துச் சென்றார்கள் நம் சமுதாயக் காவலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். இந்த அரிய முயற்சியில் மூழ்கி நின்ற களப்பணிகளில் அண்ணல் அவர்கள் அடைந்த இன்னல்களை அவர்களே பின்வருமாறு கூறுகின்றார்கள்:
"அல்லாஹ்வுக்காக வேறு எவரும் பயமுறுத்தப்படாத அளவுக்கு நான் பயமுறுத்தப்பட்டேன்! அல்லாஹ்வுக்காக வேறு எவரும் துன்புறுத்தப்படாத அளவுக்கு நான் துன்புறுத்தப்பட்டேன்! இந்த உலகில் வேறு எந்த உயிர்ப்பிராணியும் தின்ன விரும்பாத, 'பிலால்' தனது அக்குளில் மறைத்து வைத்திருந்த உணவைக்கொண்டு முப்பது நாட்கள் தொடர்ச்சியாய்க் கழிந்திருக்கின்றன!" (07)
இவ்வாறு தம் வாழ்வாதாரங்களை நமக்காகவே சுருக்கிக்கொண்டவராக, ஏழ்மையில் தூய்மையும் எளிமையில் இனிமையும் கண்டவராக, தியாகத் தலைவர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு இடரும் அல்லாஹ்வின் இத்தூய மார்க்கத்தை வளரச் செய்ததே தவிர, ஒருபோதும் அதைத் தளரச் செய்யவேயில்லை!
வான்மறையை ஏந்தி வந்த வண்ண ஒளியாக, தேன் சுரக்கும் திருமறையாகவே வாழ்ந்து காட்டிய திருத்தூதராக, உள்ளங்களையே ஊடுருவிச் சென்று தன் தோழமையால் தொட்டு வந்தவராக, உண்மையின் உணர்வலைகளை உசுப்பி எழுப்பியவராக, அறிவின் செறிவையே அடையாளம் கண்டவராக, அரிய குணங்களின் நிறைகுடமாய் நிமிர்ந்து நின்றவராக, ஆழ்ந்த ஞானத்தின் வெளிப்பாடாக ஒளிவீசி வந்தவராக, இனிய பண்புகளின் முழுமையானவராக, தன் இறுதி மூச்சுவரை தனது உம்மத்துகளைப் பற்றியே அக்கறையில் ஆழ்ந்திருந்தவராக, ஒரு கட்டுக் கோப்பான மாபெரும் சமுதாயத்தையே உருவாக்கிய மகத்தான சரித்திரத்தின் தலை நாயகராக, இவ்வாறான வேறு எந்த மனிதரோடும் ஒப்பிடமுடியாத இத்தகைய சத்திய சீலராக வாழ்ந்து காட்டிய, சாந்த நபியின் தனிப்பெரும் ஒப்பற்ற தியாகங்களைப் பற்றி எல்லாம்,
சற்றே 'நம் வாழ்வின், இரவின் இருள்களிலும் தனிமையின் வெறுமைகளிலும் பயணங்களின் ஓட்டங்களிலும் காத்திருப்புகளின் கண நேரங்களிலும் வசதிகளின் உச்சங்களிலும் கேளிக்கைகளின் கொண்டாட்டங்களிலும் கொஞ்சமாவது அல்லது ஒருநாளின் சில மணித்துளியிலாவது நாம் சிந்தனைக்குக் கொண்டுவந்து அவர்களின் 'அழகிய முன்மாதிரி' யை ஆராய்ந்து பார்த்து இருக்கின்றோமா? அல்லது ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் 10 முறையாவது அவர்கள் மீது அன்புடன் 'ஸலவாத்' சொல்லியாவது நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா என்பதையும் சற்றே உணர்ந்து நாள்தோறும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டியது இன்றைய சூழலும் இன்னும் இறுதிக் காலம் வரையிலும் அது ஒரு கட்டாயமும் நம் கடமையுமாகும்!
"நீங்கள் உண்மையாகவே உங்களைப் படைத்த அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால், என்னை முழுமையாகப் பின்பற்றுங்கள். அப்படியானால்தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான்" (08)
என்று நமக்கு அறிவுறுத்துமாறு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்), 'அகிலத்தின் அருட்கொடையாகிய' தன் தூதரின் மூலம் பிரகடனப் படுத்துகின்றான். அவ்வாறு அழகிய முன்மாதிரியாக பின்பற்றக் கூடிய எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இறைத் தூதரின் அபூர்வமான குணங்களுக்கும் அற்புதமான நன்னடத்தைகளுக்கும் அழகிய சாட்சியங்களாக சரித்திரத்தை அலங்கரிக்கின்றன.
உலகில் தோன்றிய அத்தனைத் தலைவர்களும் மதவாதிகளும் தங்களைப் பின்பற்றியவர்களை 'தொண்டர்கள்' என்றும் 'சீடர்கள்' என்றும் பெயரிட்டு அழைத்தபோது, மானமிகு தூதர் (ஸல்) அவர்கள் மட்டுமே அவர்களுக்குச் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்து, சமத்துவம் வழங்கி சகோதர வாஞ்சையுடன் 'தோழர்கள்' என அழைத்தார்கள். ஆண்டான், அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் நம்மில் கிடையாது என 'தோழமையுடன்' முழங்கினார்கள். இன்றைய கம்யூனிஸ்டுகள் "தோழரே" என்ற, பேச்சுக்கு மட்டும் பிரயோகிக்கும் அந்த வார்த்தையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி தன்மான வாழ்வுக்கு இலக்கணம் வகுத்து, அதை நடைமுறையில் அமுலாக்கம் செய்தவர் இறைவனின் தூதாய் வந்த நம் இனிய நபிகள்'தாம்!
எனது சகோதரர் ஹுஸைன் (ரலி) எங்களின் தந்தை அலீய் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களிடம் நானிலம் போற்றிடும் நாயகம் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுடன் நடந்து கொள்ளும் முறை யாது? என்று வினவியபோது, அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:
ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எப்போதும் புன்சிரிப்போடும் நற்குணத்தோடும் எளிமையான சுபாவத்தோடும் இருப்பார்கள். கடுகடுத்தவர்களாகவோ இறுகிய மனம் படைத்தவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. கூச்சலிடுதல், கெட்ட செயல் புரிதல், அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடித்தல், அடுத்தவர்களை வரம்புமீறிப் புகழ்தல், மனம் நோகும்படி கிண்டல் செய்தல், கஞ்சத்தனம் போன்ற எந்த வித இழிவான குணங்களும் அவர்களிடம் இருந்ததே இல்லை. அவர்களுக்கு விருப்பமில்லாத பேச்சுக்களை பிறர் பேசும்போது அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். வேந்தர் நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை மற்றரொருவர் பெற விரும்பினால் ,அதை அவர் பெறுவதைவிட்டும் நிராசை அடைந்து விட மாட்டார். அதைத் தருவதாக வாய்மை நபி (ஸல்) அவர்கள் வீணான வாக்களிக்கவும் மாட்டார்கள். சண்டையிடுதல், பெருமையடித்தல், வீண் பேச்சுப் பேசுதல் இவற்றை விட்டும் தன்னைத் தடுத்துக் கொள்வார்கள். அதைப் போன்று இத்தீய குணங்களை விட்டும் பிறரையும் நீங்கிக்கொள்ளச் செய்வார்கள். யாரையும் இழிவாகப் பேசமாட்டார்கள். பிறரைப் பற்றிப் புறம்பேச மாட்டார்கள். அடுத்தவர்களின் குறைகளைத் தேடித்திரிய மாட்டார்கள். நன்மை தரும் விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார்கள்!
பேரன்பாளர் பெருமானார் (ஸல்) அவர்கள் பேசினால், அவர்களின் தோழர்கள் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்பது போன்று ஆடாமல் அசையாமல் அமைதியாய் கவனிப்பார்கள். சுவர்க்கத்தின் சொல்லழகர் (ஸல்) ஒன்றை சொல்லிமுடித்து அமைதியான பின்பே தங்களுக்குள் மெதுவாகப் பேசத் துவங்குவர்! சத்தியத் தூதர்(ஸல்) முன் தோழர்கள் யாரும் சண்டையிட்டுக் கொள்ளமாட்டார்கள்!
மடமை நீக்கிய மாண்பு நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் யாரும் பேசத்தொடங்கினால், இனிய நபியவர்கள் இடையே குறுக்கிடாமல், அவர் முடிக்கும் வரை அங்கே அமைதி காப்பார்கள். முந்தியவர் பேசியதைத் தொடர்ந்து அடுத்தவர் பேசினாலும் அதையும் அமைதியுடன் கவனித்துக் கேட்பார்கள். உரையாடல்களுக்கிடையே தோழர்கள் சிரிப்பை வெளிப் படுத்தினால், நகைச்சுவையை ரசிக்கும் நம் நபிமணியும் சேர்ந்து சிரிப்பார்கள். அவர்கள் ஆச்சர்யப்பட்டால், அவர்களுடன் சேர்ந்து வேந்தர் நபியும் தம் வியப்பை வெளிப்படுத்துவார்கள்!
முற்றிலும் அந்நியர்கள் வந்து அவர்கள் சபையில் பேசும் கடுகடுப்பான வார்த்தைகளையும் இங்கிதமில்லாத கேள்விகளையும் பொறுத்துக் கொள்வார்கள். சமயங்களில் இத்தகைய இங்கிதமற்றவர்களைக்கூட நபித்தோழர்கள் கூட்டிவந்து விடுவார்கள்.அப்போதும்கூட பெருமான் நபியவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.
தேவை வேண்டி நிற்பவர்களைக் கண்டால், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும்படிக் கூறுவார்கள். எவரும் தம்மை நன்றி தெரிவிக்கும் வகையில் அல்லாமல் அவர்களை அளவுக்கு மீறிப் புகழ்ந்து முகஸ்துதி செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வரம்பு மீறி யாரும் பேசினால் அதைத் தடுப்பார்கள் அல்லது எழுந்து விடுவார்கள்' என்று ஒரு சித்திரம் வடித்ததைப் போல் நம் முத்திரைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அண்ணலின் இதயக்கனியாகிய அன்புப் பேரன் அழகின் அரசன் ஹஸன் இப்னு அலீய் (ரலி) அவர்கள் உரைத்தார்கள். (09)
அந்த அன்பும் மென்மையும் கனிவும் கண்ணியமும் ஊக்கமும் உத்வேகமும் பொறுமையும் நிலைகுலையாத உறுதியும் வலிமையும் எளிமையும் அல்லாஹ்வின் அருள்மீது அளவு கடந்த நம்பிக்கையும் கொண்ட அபூர்வமான அந்த மாமனிதரைத் தவிர வேறு எந்த மனிதன் மீதும் அந்த வானம் இதுவரைக்கும் இறங்கிவந்து நிழலிட்டதில்லை! இந்த பூமியும் இதுவரைத் தன் வழிமீது விழிகளைத் திறந்து விரிப்பாக்கி வைக்கவுமில்லை! அத்தனை கோடி மனிதர்களில் இருந்தெல்லாம் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமனிதர்! கருணையின் திறவுகோல்! சுவனத்தின் வழிகாட்டி! சத்தியத்தின் சான்று! அல்லாஹ்வின் மகிழ்வு! நம் ஆனந்தப் பெருவாழ்வின் ஆதார சுருதி! தரணி எல்லாம் போற்றிடும் எம் தங்கத் தலைவர்! இந்த உடம்பிலே ஒட்டி இருக்கும் உயிரென்ன? இந்த உயிரை விட மேலான வேறு ஏதாவது ஒன்று இருக்குமாயின் அதையும்விட நமக்கு மேலானவர்!
நிலவு போன்ற வட்ட முகமும், மென்மை தவழும் மென்னகைசிரிப்பும், அகலமான விரிந்த நெற்றியும், இரவின் இருளிலும் பிரகாசிக்கும் சௌந்தர்யமும், தலையின் மீது கறுப்புத் தலைப்பாகையும், காதுமடல் வரைத் தொங்கும் சுருட்டைமுடியும், கண்களா அவை காந்தங்களா என வியக்க வைக்கும் ஈர்ப்பு விழிகளும், அன்பில் இழைத்த மென்மைக் கன்னங்களும், கருவில்லைப்போல் நீண்ட இமைகளும், புன்னகை வாசம் பொழுதெல்லாம் வீசும் இதழ்களும், என்றுமே நிலைத்திருக்கும் அந்தக் கருணையின் வடிவமானவரை இப்போதே காணக் கண்கள் தேடுகின்றன!
அது சாத்தியமில்லை! எனினும், 'அண்ணல் நபியின் அழகிய முன்மாதிரி' நம் கண்முன்னே அற்புத வரலாறாக அவர்களின் ஒவ்வொரு அசைவுகளோடும் உயிரோடு நிற்கிறது! அந்தப் பன்முகத்திறன் கொண்ட பண்பாளர் நடந்து காட்டிய வழித் தடங்களின் சுவடுகளை நோக்கி நாம் நடக்கத் துவங்கி விட்டால், நபிமொழி ஒவ்வொன்றையும் நம் மனத்தினில் ஆழமாகப் பதித்துக் கொண்டால், அவற்றை நடைமுறைப்படுத்தி வாழத் துவங்கி விட்டால், நிச்சயமாக, மறுமையில் அந்த மாண்பாளர் நபியின் தோழமையை மகிழ்ச்சியோடு நாம் பெறலாம்!
"நம்முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவர்களுக்கு நாம் இவ்வேத நூலை உரிமைப் படுத்துகின்றோம் (10)
என்ற தன் அன்புநேசராகிய அண்ணலாருக்கு அளவுகடந்த அருளாளன் அல்லாஹ் (ஜல்) அருள்மறை வசனத்தை இவ்வாறு அருளியபோது;
"இந்த மாநிலத்தின் முத்துக்களாகிய மக்களே, நற்செய்தி பெறுங்கள்! நீங்கள்தான் இந்த ஒட்டுமொத்த உலகத்தின் உன்னத பிரஜைகள்! முதன்முதலில் சுவர்க்கம் புகும் கூட்டத்தினர் நீங்களாகவே இருப்பீர்கள்! ஓரிறைவன் என்ற தத்துவத்தில் உறுதியாய் நில்லுங்கள். திருக்குர்ஆனை உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்க் கொள்ளுங்கள். என் வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வழுவாது பின்பற்றுங்கள். இன்ஷா அல்லாஹ், சுலபமாகச் சுவர்க்கம் புகுவீர்கள்" என்றார்கள் அமைதி நயமெங்கும் அழகுபடப் பொங்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
மேலும் 'எனக்குப் பிறகு நீங்கள் துன்பங்களையும் தொல்லைகளையும் அனுபவிக்க நேரலாம். உங்களைவிட உவப்பானவர்களாக மற்றவர்கள் கருதப்படலாம். எனினும், என்னை சுவர்க்கத்தின் நீரோடை அருகே சந்திக்கும்வரை பொறுமை காத்திடுங்கள்' என்றார்கள்.
சுவர்க்கத்தின் நீரோடை (அல்கவ்ஸர்):
ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுடன் இருந்தபோது, திடீரென உறங்கிவிட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின் சிரித்தவர்களாக, தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், "யா ரசூலல்லாஹ்! தாங்கள் சிரிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டோம்.
அதற்கவர்கள், 'சற்றுமுன் எனக்கு அத்தியாயம் ஒன்று அருளப்பட்டது' என்று தொடர்ந்து எங்களுக்கு அதை ஓதிக்காட்டினார்கள்.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
(நபியே, நிச்சயமாக, உமக்கு 'அல்கவ்ஸரை' வழங்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது பலிப்பிராணியும் அறுத்து 'குர்பானி' கொடுப்பீராக! நிச்சயமாக, உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்!) (11)
பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அல்கவ்ஸர்' என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்' என்று பதிலளித்தோம்.
'அது ஒரு சுவர்க்க நதி! என் இறைவன் மறுமைநாளில் அதைத் தருவதாக எனக்கு வாக்களித்துள்ளான்! அதன் மகிழ்ச்சியினால்தான் நான் சிரித்தேன். அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர்த்தடாகம்! மறுமை நாளில் எனது உம்மத்தினர் தண்ணீர் அருந்துவதற்காக, அதை நோக்கி வருவர். அதன் குவளைகள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்றவை!
அப்போது அவர்களில் ஓர் அடியார் நீர் அருந்தவிடாமல் தடுக்கப்படுவார். உடனே நான், 'யா அல்லாஹ்! அவர் என் உம்மத்துகளில் ஒருவரல்லவா?' என்பேன். அதற்கு, அனைத்தும் அறிந்தவனாகிய அல்லாஹ் (ஜல்) 'உமது சமுதாயம் உமக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கி விட்டதை எல்லாம் நீர் அறிய மாட்டீர்!' என்று கூறுவான். (12)
அடக்கி ஆளும் அரசாங்கத்தின் அதிபதியாகிய வல்லமை நிறைந்த அல்லாஹ் (ஜல்) வின் வரவை எதிர் நோக்கி எல்லோரும் நிற்பது மட்டும் 500 ஆண்டுகள் போலான அந்த மகத்தான நீதித்திருநாளின் நெருக்கடியில்! பெரும்பெரும் நபிமார்களும் இறைநேசர்களும் தங்களின் முடிவு என்னவாகுமோ என்று தவித்துக்கொண்டும் அந்தப் பெரும் அமளிதுமளிகளில் அங்குமிங்கும் தத்தளித்துத் தடுமாறியும் திரியும் சூழ்நிலையில்! ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாக்களைப் பற்றியே பரிதவித்து நிற்கும் வேளையில்!
அந்த ஒரே 'ஓர் ஒளிபொருந்திய மனிதர்' மட்டும் 'தம் சமுதாய மக்களை'ப் பற்றிய கழிவிரக்கத்துடன் கவலைப்பட்டுக் காத்துநிற்கும் காட்சியை, அந்த அறிவெனும் சுடர் தாரகையை, அமைதியின் தனி ஜோதியை அங்கே நாம் காணலாம்!
பிரம்மாண்டமான அத்தனை மனிதக் கூட்டங்களுக்கும் மத்தியில், தொழுகைக்கு முன்னர் 'உலூ' எனும் அங்க சுத்தி செய்துகொண்ட காரணத்தால், தனியாக ஒளிவீசும் முகங்களை வைத்தே தன் உம்மத்துகளில் ஒவ்வொரு முஸ்லிமையும் சேயைக்கண்ட தாயைப்போல அடையாளம் கண்டு அழைக்கும் பேரன்பின் பிறப்பிடமாய்ப் பிறந்து வந்த எங்கள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே நிற்பதைப் பார்க்கலாம்!
தாகத்தில் தவித்துத் தன் தலைவனை நோக்கி ஓடிவரும் தன் உம்மத்தின் ஒவ்வொரு முஃமினையும் ஒரு தாய் போல அழைத்து, தாகம் தணித்து, ஆறுதல் அளித்து, அவனுக்கு மன்னிப்பும் வழங்குமாறு மாண்பாளன் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டு, நல்லவர்களின் நந்தவனத்திற்குப் பரிந்துரையும் செய்யும் பண்பாளர் எங்கள் பெருமானார்(ஸல்) அவர்கள், விண்மீன்களுக்கு இடையே ஒரு வெண்ணிலவைப் போல அங்கே சுடர்விட்டுத் தெரிவதை நாம் காணலாம்!
ஆம்! அது ஓர் உன்னத சந்திப்பு...பொங்கிப் பிரவாகம் எடுத்து வரும் தடாகத்தின் நீர்க்கரையில்..பாலை விட வெண்மையான பளிங்கு வண்ண நிறத்தில் ஓடிவரும் ... தேனைவிட இனிமையான தெள்ளிய நீர்ச்சுவையில்... நட்சத்திரங்கள் போன்று மின்னும் தண்ணீர்க் குவளைகள் அருகில்... அந்த சலசலத்து ஓடும் அமுத நதிக்கரையில்... கஸ்தூரியைவிட நறுமணம் வீசிவரும் வசீகர வேளையில்.... அதே மாறாத இனிய மென்புன்னகையுடன் நமக்காகவே காத்திருக்கும் ...மகிமையும் மாட்சிமையும் நிறைந்த மங்காப் புகழ்பெற்ற நமது தங்கத்தலைவரின் பறந்து விரிந்து நிற்கும் நேசச் சிறகின் நிழலினில்… அவர்களை அன்புடன் நேசிக்கும் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்.... இன்ஷா அல்லாஹ்!
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
பரிபூரணமான இந்த அழைப்பின் இரட்சகனாகிய அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! எங்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு 'வஸீலா' என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு 'புகழுக்குரிய இடத்தில்' அவர்களை எழுப்புவாயாக!
(இந்தப் பிரார்த்தனையை எவர் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைத்து விடுகின்றது). (13)
o o o 0 o o o
(01) அல்குர்ஆன் 83:22
(02) அல்குர்ஆன் 43:68
(03) புஹாரி 6571: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
(04) புஹாரி 5999: உமர் ஃபாரூக் (ரலி)
(05) அல்குர்ஆன் 56:35
(06) ரஸூலே அஹ்மத் பக்கம் 152: அபுல்கலாம் ஆஸாத்
(07) ஷமாயில் திர்மிதீ 376: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(08) அல்குர்ஆன் 3:31
(09) ஷமாயில் திர்மிதீ 350: ஹஸன் (ரலி)
(10) அல்குர்ஆன் 35:32
(11) அல்குர்ஆன் 108:1
(12) முஸ்லிம் 670: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(13) புஹாரி 614: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
இக்பால் M.ஸாலிஹ்