குறைந்து அமைதி தவழ்ந்த
அந்த புதிய பொழுதுகளின் போது
தன் ஆளுமையை அழுத்தமாக
அனைத்திலும் பதித்தது சூரியன்...!
ஆனால் ஒன்றை தவிர...
அன்றுதான் அதற்கும்
சூரியனுக்கும் முதல் பரிச்சியம் !
அது ?....
கோபம் தனந்த சூரியன்
உக்கிரமாக உதித்தது
அது மட்டும்
பணியவில்லை ! திமிறியது !
சூரியனின் உக்கிரம் உச்சத்தை தொட
அது கருகியதே அன்றி தன்
இயல்பை தொலைக்கவில்லை !
சூரியன் மேகத்தை
தூதிற்கு அழைத்தது
மேகத்தினூடே மெலிதாய்
நுழைந்து தன் ஜாலத்தை
அதனிடம் காட்டியது !
அந்தோ ! பரிதாபம் அதற்கும்
மயங்கவில்லை ! அதன்
இயல்பை தொலைக்கவில்லை !
தளராத சூரியன்
துணைக்கு மரம்
செடிகளின் இலைகளை
இணைத்துக்கொண்டு
அதன் மீது
மென்மையாய் படர்ந்தது !
ஆவலாய் சூரியன் காத்திருக்க
அதுவோ
அன்புடன் நிராகரித்தது !
மனம் வெதும்பி சூரியன்
நகர ஆரம்பிக்க
உடன் பிறப்பான
நிலா சோகத்தின் காரணம் விசாரித்தது !
சூரியன் தன் முயற்சியை
எடுத்துரைக்க ஆவலாய்
நிலா கேட்டது !
நிலா சூரியனிடம் சொன்னது
நீ சென்று வா
நான் உன் அன்பை அதனிடம்
சேர்கிறேன் என கூறி
சூரியனின் ஒளி எனும்
அன்பை பெற்று
புதிதாய் ஒரு
வெண்கலப் பொழுதை
பாய்ச்சியது
அட்டகாசமாய்
மொட்டு வெடித்து
சிதறி இதழ்களை
விரித்து சிரித்தது
தாமரை !!!!!!!
-Harmys
9 Responses So Far:
சூரியனின் அன்பைப் பெற்று சிரிக்கும் மலராய் சிறக்கும் உன் கவிகள்!
சரி ஏன் சூரியனாய் தினமும் இங்கு வருவதில்லையே?
------------------------------------------------------------------------------------------------------
ரபியுள் ஆகிர் 21 / 1434
வல்ல இறையோனின் ஆணைக்கிணங்க தன் சிறு முயற்சியால் புதியதோர் துணைக்கோள் வருகைக்காக சூரியன் இப்பக்கம் வராமல் இருந்திருக்கலாமல்லவா?
அப்துல் ரஹ்மான் நீண்ட நாட்களுக்குப்பின் எம் உள்ளத்தை குளிர வைக்கும் உன் சுடாத சூரியக்கவிதைகள். வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
அற்புதமான கவிதை. ஒவ்வொரு வரியிலும் எது அது என எண்ணிப் பார்க்க வைத்தது.
கடைசி வரியில் தாமரை என்றதும் எனக்கு ஒரு சந்தேகம் நிலாவைப் பார்த்ததும் மலர்வது அல்லி அலல்வா? சூரியனைக் கண்டதும் மலர்வது தாமரை தானே?
Wassalam
N.A.Shahul Hameed
அழகான கற்பனை; அதைச் சிதைக்காத எழுத்து!
யதார்த்தமான காட்சிகளின்மீது மாறுபட்ட கோணத்தில் பார்வை;
நவீன வடிவத்து கவிதைகளைத் தைரியமாக இங்கு பதியலாம். வாசிக்க ரசனை மிக்க கூட்டம் உண்டு.
என் ஏ எஸ் சாரின் சந்தேகத்தை இதைப் பதிவதற்குமுன் விளக்கச்சொல்லி கேட்டபொழுது அப்துர்ரஹ்மான் தந்த பதிலை நெறியாளர் இங்கு பதியவும்.
harmys சொன்னது...
தாமரை எனபது ஒரு பொதுவான பெயராகும். அதில் பல பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று பிரம்ம தாமரை இரவில் மட்டுமே மலரும்.
அதன் அறிவியல் பெயர் : Saussurea obvallata
http://www.youtube.com/watch?v=Gq2vwS80b4A
தாமரைக்கு பதிலாக அல்லி என்று மாற்றினாலும் சம்மதமே :)
கன்னிப் பொழுது என்கிற தலைப்பே ஒரு கவிதையாகிவிட்டதை உணர்கிறேன்.
சூரியனைக்கண்ட தாமரை என்பதும் , இரவில் மலரும் அல்லிப்பூ( என்றும் மணக்கும் முல்லைப்பூ ) என்பதும் படித்தவை கேட்டவை.
சூரியனின் அன்பு, நிலவு மூலம் அனுப்பப்பட்டு சென்று சேர்வதற்குள் தாமரை அல்லியாகி மறு உருவம் எடுத்துவிட்டது என்று வைத்துக் கொள்ளலாமா?
அற்புதமான கற்பனைக் கவிதை.
சூரியன் இவ்வளவு பில்டப் கொடுத்தும் தாமரை மயங்கவில்லையே....மெல்லிய உணர்வுகளை உள்ளத்தில் மென்மையாக செலுத்தும் அழகுக் கவிதை. வாழ்த்துக்கள் சகோ.அப்துல் ரஹ்மான்
முன்பெல்லாம் குமுதத்தில் வரும் ஒரு பக்க கதை [ சஸ்பென்ஸ் உடன் ] படித்த அனுபவம்.
இந்த தாமரை / அல்லி மலரும் சமாச்சாரம் ...இது போல் பல விசயங்கள் தமிழ் நாட்டு பாட நூல் நிறுவனத்தில் அப்டேட் ஆகாமல் இருக்கிறது.
Post a Comment