Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 07, 2013 | ,

தொடர் : 24
அறிஞர் அபூஹுரைரா (ரலி)

இஸ்லாமிய வரலாற்றின் முதல் பாடசாலையும் பல்கலைக் கழகமும் ஆன 'திண்ணையில்' பயின்ற  தோழர்களில் அதிமுக்கியமானவர்  அபூஹுரைரா (ரலி).

துவக்கத்தில் இங்கே சஹாபி உபாதா இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்தான் தோழர்களுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் ஆக இருந்தார். அதன்பின்னர், திண்ணைத் தோழர்களின் தலைவராக அபூஹுரைராவை அண்ணலார் நியமித்தார்கள். ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட தோழர்களின் இந்தக் குழுவில் குறைஷிகளின் ஸஅத் இப்னு அப்பாஸ் (ரலி), ஈரானின் சல்மான் ஃபார்ஸி (ரலி), ரோமாபுரியின் சுஹைப் பின் ஸினான் (ரலி), அபிசீனியாவின் கறுப்புக்குயில் பிலால் பின் ரபாஹ் (ரலி), கிஃபாரி கோத்திரத்தின் உன்னதப் பண்பாளர் அபூதர் (ரலி),  இவர்களுடன் நாடோடிகளான தவ்ஸ் குலத்தைச் சார்ந்த அபூஹுரைரா (ரலி) அவர்களையும் சேர்த்து அந்த ஒப்பற்ற ஓரிறைக் கொள்கை எனும் நறுமண மலர்  மாலையில்தான் இந்தப் பல்வேறு குல, இன, நிற மக்களும் அழகாகக் கோர்க்கப்பட்டிருந்தார்கள். முஸ்லிம் மாணவர்கள் தங்கி கல்வி கற்பதற்காக  சரித்திரச் சாலையில் முன்னுதாரணமாக உருவான முதல் 'தங்கும் விடுதியும்' இதுதான்!

இந்த அற்புதமான பல்கலைக் கழகத்திலிருந்துதான் நெறிமிகுந்த ஆட்சியாளர்களும் அநீதிகளை எதிர்த்துப் போராடும் அறப்போர் வீர்களும் வெற்றியை மட்டுமே விளைநிலமாக்கும் தானைத்தளபதிகளும் கல்விக்கடலில் முத்தெடுத்து வந்த அறிஞர் பெருமக்களும் நேர்மையான தீர்ப்பு வழங்கும் சட்டமேதைகளும் தன்னலத்தைத் துறந்துப் பொதுப்பணி புரியும் அருந்தொண்டர்களும் உருவாகி வந்தனர். வரலாற்றில் அழியாப் புகழ் பெற்று நிலைத்து நின்றனர்!

அப்போது மதீனாவில் கைபர் யுத்தம் நிகழ்ந்து  கொண்டிருந்தது! மதீனா நகரில் நபி (ஸல்) அவர்களைக் காணாததால், நேராகப் போர்க்களத்திற்கே சென்று மனித நேயர் மாண்பு நபி (ஸல்)யின் கரங்களில் பைஅத் செய்து இஸ்லாத்தில் நுழைந்தார் அபூஹுரைரா (ரலி). அன்றைய நாளிலிருந்து அண்ணலாரின்  இறுதிக் காலம் வரை, உள்ளூரில் தங்கி இருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அண்ணலாரை அண்மியே வாழ்ந்து வந்தார் நம் அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஏறக்குறைய நான்காண்டுகள் அண்ணலாரின் அருகிலேயே இருந்து அவர் கற்றுக்கொண்ட நபிமொழிகள் மொத்தம் 5374 ஆகும்.

"என்னுடைய முஹாஜிர் தோழர்கள் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். என் அன்சாரி நண்பர்களோ வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு வீடோ வேலையோ இன்றி அண்ணலாரை நிழல் போலத் தொடர்ந்து கொண்டிருந்தேன். அண்ணலார் உதிர்த்த பொன்மொழிகள் அனைத்தையும் நினைவில் பதிந்து கொண்டேன்" என்கின்றார் அபூஹுரைரா (ரலி).

தொழுகையின் முதல்வரிசையில் எப்போதும் அபூஹுரைரா (ரலி)அவர்களைக் காணலாம். சில சமயங்களில் பசி தாளாமல் அவர்கள் மயங்கிவிழுந்து விடுவதும் உண்டு! புதிதாக அவர்களைப் பார்ப்பவர்கள் 'பைத்தியமோ' என்று கூட நினைப்பார்கள்! ஒரு  முழுமையான ஆடை கூடக் கிடையாது. ஒரே ஒருபோர்வை. கழுத்திலிருந்து அதைக் கட்டிக் கொள்வார்!

அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்:

எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன்  வேறெவனுமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பசிக்கொடுமையால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், கடும்பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு.

ஒரு நாள், நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் பள்ளிவாசலுக்குச்செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூபக்ரு (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே அது குறித்து அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; என் பசி நீங்க எதுவும் அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே அது குறித்து அவர்களிடம் கேட்டேன். அவர்களும் என் பசியைப் போக்க ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். 

பிறகு அன்புள்ளம்கொண்ட அபுல்காசிம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள கடும்பசி நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்து கொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'யா அபூஹிர்!  என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'என்னைப் பின்தொடர்ந்து வாரும்!' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்.

இனிய நபி(ஸல்) அவர்கள் தம் இல்லத்தில் நுழைந்தார்கள். நான் உள்ளே செல்ல அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது வீட்டில் ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே தம் துணைவியாரிடம் 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்' என்றார்கள். எங்கள் நபி(ஸல்) அவர்கள் 'அபூஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்கள் அனைவரையும்  அழைத்து வாரும்' என்றார்கள். 

திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். அவர்கள் வந்தவுடன் அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். 

இப்போது நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளை அழைத்துவரச் சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. 'இருப்பதோ சிறிதளவு பால். திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி  என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணைவாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு இறுதியில் எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது' என மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். 

பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் அழைப்பை ஏற்று வந்து வீட்டுக்குள் நுழைய அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுப்பீராக' என்றார்கள்.

நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் பசியும் தாகமும்  தணிந்திருந்தினர்.

வேத நபி நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்தபிறகு சிரித்தார்கள்.

பின்னர்,  'அபூஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீயும்  மட்டும் தான் எஞ்சியுள்ளோம், அப்படித்தானே?' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! ஆம். உண்மைதான்' என்றேன். பாசமிகுந்த பண்பாளர்  (ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து இதைப் பருகுவீராக' என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். 'இன்னும் பருகுவீராக' என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'இன்னும் பருகுவீராக' என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன்.

இறுதியில் 'இல்லை; சத்திய மார்க்கத்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த இறைவன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை' என்றேன். தங்க நபி(ஸல்) அவர்கள் 'சரி. அதை எனக்குக் காட்டுவீராக' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய திருப்பெயர் கூறி எஞ்சிய பாலைப் பருகினார்கள். (1)

இந்த சம்பவம் திண்ணைத் தோழர்களின் வறுமை நிலையை மட்டுமல்ல. தன் அடியார்களுக்கு அற்புதமாக உணவளிப்பதில் அல்லாஹ் எத்தகைய சிறப்பானவன் என்பதைக் காட்டுகிறது!

பூனை மீது அதிகம் பிரியம் கொண்டிருந்ததால் பெருமானார்  (ஸல்) அவர்கள், இவரைப் பூனைத்  தோழன் (அபூஹிர்) என்று செல்லமாக அழைத்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள்,  பஞ்சை ஏழைகளின் பங்காளர் நபிகளார்  (ஸல்) அவர்கள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பொன்முகத்தைப் பார்த்து ரசிப்பதிலேயே பூரிப்படைவார்கள். 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

'அறம் காத்த போதகர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தைவிட தெளிவான, அழகான வேறு முகம் எதையும் நான் இதுவரை கண்டதேயில்லை! சூரியனின் ஒளிக்கதிர்கள் அவர்கள் முகத்தில் ஓடுவது போல அவர்களது முகம் எப்போதும் இலங்கிக் கொண்டேயிருக்கும்'.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள், ஒரு கிராமவாசி மஸ்ஜித் நபவீக்கு வந்தார். பள்ளியில் அல்லாஹ்வின் தூதரும் தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது கிராமவாசி தன்  தொழுகையை முடித்தார். பின்னர், துஆ செய்யத்தொடங்கினார்.

'இறைவா! எனக்கும் முஹம்மதுவுக்கும் மட்டும் மன்னிப்பளிப்பாயாக! எங்களுடன் வேறு யாரையும் மன்னிக்க வேண்டாம்' என்று பிரார்த்தித்தார்!

இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்து விட்டார்கள். பின்னர், அவரை அருகே அழைத்தார்கள்.

'விசாலமான மகத்துவமும் வல்லமையும் மிக்க அருளாளன் அல்லாஹ்வின் அருளானதைத் தடுத்து நீர் சுருக்கிவிட்டீரே!' என்றார்கள்.(2)

ஒருமுறை, மாநிலத்தின் மணிவிளக்கு மாண்பு நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) யைக் கடந்து சென்றார்கள். பார்த்தால், அபூஹுரைரா (ரலி) அவர்கள் மரக்கன்று  ஒன்றை பள்ளம் தோண்டி நட்டுக் கொண்டிருந்தார்கள். 'யா அபூஹிர்! என்ன செய்கிறீர்?' அதற்கு 'செடி ஒன்றை நடுகிறேன், யா ரசூலல்லாஹ்!' 

நல்லது! இதைவிட சிறந்த மரம்  ஒன்றை நடுவதை நான் சொல்லித்தருகிறேன். அது என்ன தெரியுமா? அதுதான்:

"சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" 

'இந்த ஒப்பற்ற வாசகத்தை ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அதைச் சொன்னவருக்காக சுவனத்தில் மரம் ஒன்று நடப்படுகின்றது' என்றார்கள். (3) 

அபூஹுரைரா (ரலி),  அருளாளன் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டார்: 

'அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தவறு செய்ய நினைக்கிறான். ஆனால், தவறு செய்யவில்லை. அது குற்றமா?'

அதற்கு அண்ணல் எங்கள் ஆருயிர்  நபி (ஸல்) அவர்கள், 'என் அடிமை தீய செயல் ஒன்றைச் செய்ய நினைத்தால், அதை அவன் செய்யாதவரை அவனை மன்னித்து விடுகிறேன். அதைச் செய்து விட்டான் என்றால், அவன் கணக்கில் ஒரு தீமையாகவே எழுதிக் கொள்கிறேன்' என்று அளவற்ற அருளாளன் அல்லாஹ் சொல்கிறான்.

 மேலும், "என் அடிமை நன்மை செய்ய எண்ணும்போதே, அந்த ஒரு நன்மையைப் பதிவேட்டில் எழுதிக்கொள்கிறேன். அவன் உண்மையிலேயே நன்மை செய்து முடித்து விட்டால், அதனைப் பத்து மடங்காக எழுதி விடுகிறேன்" என்று கருணை நிறைந்த ரஹ்மான் கூறுகின்றான் என்ற பிறகு,

'என்னுடைய உம்மத்தினரின் உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்கள், தவறான எண்ணங்கள் போன்றவற்றை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். அதை அந்த அடியான் வாயைத் திறந்து சொல்லாதவரை, செயலால் செய்யாதவரை' என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

ஒரு கிராமவாசி மஸ்ஜித் நபவீக்கு புதிதாக  வந்தவர், என்ன காரியம் செய்தார் என்றால், விறுவிறுவென்று சென்று மஸ்ஜித் உடைய எல்லைக்குள்ளேயே சிறுநீர் கழிக்கத் துவங்கிவிட்டார். தோழர்கள் கடுங்கோபம் கொண்டு அவர் மீது பாய விரைந்தார்கள். உடனே, இருலோகம் போற்றும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள், தோழர்களைத் தடுத்தார்கள். அவர் முழுவதும் சிறுநீர் கழித்து முடிக்கும்வரை காத்திருந்து விட்டு, அவர் எழுந்ததும் அவரை அருகே அழைத்தார்கள்.

"நண்பரே! இது அல்லாஹ்வின் இல்லம். அவனை மட்டுமே வணங்குவதற்காக இருக்கும் புனிதமான  இடம். இந்தத் தூய்மையான இடத்தில் சிறுநீர் கழிக்கக் கூடாது" என்று அன்பாக அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரை வரவழைத்து அவர்களின் திருக்கரங்களாலேயே நீரை ஊற்றி அந்த இடத்தை முழுவதும் சுத்தம் செய்தார்கள். இந்த இனிய அணுகுமுறையைக் கண்ட அந்த கிராமவாசி, நெகிழ்ந்துபோய், அண்ணலே! எனது இந்த தீய செயலுக்காக என்னை நீங்கள் ஏசவும் இல்லை! என்னைத்  தாங்கள் அடிக்கவும் இல்லை! தரணி போற்றுகின்ற பெருமானே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும் என்றார். (4)

இன்னும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் வந்தார். ' யா ரசூலல்லாஹ். பிரார்த்தனைகளுள் சிறந்தது எது?' என்று கேட்டார்.

அவரிடம் அருமைத் தூதர் (ஸல்) அவர்கள், 'இறைவா! முஹம்மது உடைய உம்மத்தினர் மீது உன் கருணையைப்  பொழிவாயாக!' என்று பொதுவாகக் கேட்குமாறு கூறினார்கள்.(5)

பெற்றோரை மதிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார் அபூஹுரைரா (ரலி). ஒரு தடவை, ஓர் இளைஞனும் முதியவரும் நடந்து சென்றதைக்  கண்டவர், அந்த இளைஞனிடம் 'இவர் யார்?' என்றார். 'என் தந்தை' என்று பதிலளித்த இளைஞனிடம், 

அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'அவரது பெயரைச் சொல்லாதே! அவருக்கு முன்னால் நடக்காதே! அவர் சபையில் அமருமுன்பு நீ அமராதே!' என்று அந்த இளைஞனுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

மிஃராஜ் இரவின் அற்புத நிகழ்வுகளைப் பற்றி ஆர்வமுடன் கேட்ட அபூஹுரைராவிடம் 'சித்ரத்துல் முன்தஹா' வைக் கண்டு வந்த செம்மல்  நபி (ஸல்) அவர்கள்:

"அந்த மகத்தான இரவில் நான் ஏழாம் வானத்தை அடைந்தேன்.அப்போது, எனக்கு மேலாக அச்சந்தரும் இடியின் சப்தத்தையும் கண்களைக் கூசவைக்கும் மின்னலின் ஒளிக்கீற்றையும் கண்டேன். சில மனிதர்களின் வயிறு மட்டும் ஒரு வீட்டைப் போன்று பெரிதாக இருந்தது. அந்த வயிற்றில் பாம்புகள் நெளிந்த கொண்டிருந்ததை வெளியிலிருந்தே என் கண்களால் காண இயன்றது! 'யார் இவர்கள்?' என விசாரித்தபோது, 'இவர்கள்தாம்  வட்டியை சாப்பிட்டவர்கள். வட்டி வாங்கித் தின்றவர்கள்' என்றார் ஜிப்ரீல்!

பிறகு, அதிலிருந்து கீழே இறங்கி, இந்த பூமிக்கு மேல் உள்ள வானத்தை அடைந்தேன். எனக்குக் கீழாக புகை மண்டலத்தையும் புழுதியையும் சப்தங்களையும் கேட்டேன். 'ஜிப்ரீலே! இவை என்ன?" என்று வினவியதற்கு,

'அவை ஷைத்தான்கள். மனிதர்களைச் சுற்றிச்  சுற்றி வருகிறார்கள். வானங்கள், பூமியின் இயக்கம் மற்றும் அதன் கட்டுப்பாட்டை குறித்து மனிதர்களை யோசிக்கவிடாமல் தடுக்கிறார்கள். இந்த விஷயம் மட்டும் இல்லையென்றால், மனிதர்கள் இயற்கையின் அற்புத அதிசயங்களைக் காண்பார்கள்' என்று பதிலளித்தார் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்.

அப்துர்ரஹ்மான் இப்னு ஸஃகர் அதாவது அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் அண்ணலின் பண்பு நலன்களைப் பற்றிக் கேட்கப்பட்டது:

"நன்மையின் நாயகர் நபிகளார் அவர்களை விட அழகிய உருவம் உடையவரை, தோற்றத்தில் கவர்ச்சியானவரை இதுவரை நான் கண்டதே கிடையாது. அவர்களின் முகத்தில் கதிரொளி வீசுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அண்ணல் நபியைவிடவும் விரைவாக நடப்பவரை நான் கண்டதே இல்லை! அண்ணலாரின் கால்களுக்குக் கீழே இந்த பூமி வேகமாகச் சுருட்டப் படுகிறதோ என்று தோன்றும். நாம் நம்மை நாமே கஷ்டத்தில் ஆக்கிக் கொள்கிறோம். ஆனால், அண்ணலார் இவ்வாறு செய்ய மாட்டார்கள்" என்றார் அபூஹுரைரா (ரலி). (6)

இறைவனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையைத் தமக்குக் கற்றுக்கொடுத்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

'இறைவா! எங்களால் கட்டுப் படுத்த இயலாத, உன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடிகின்ற எங்களின் உள்ளத்தைப் பற்றி உன்னிடம் யாசிக்கின்றோம். இறைவா. நீ திருப்தி அடைகின்ற விஷயங்களைப் பற்றி மட்டுமே அது செய்ய வேண்டும். அதனையே நாங்கள் கோருகின்றோம்'. (7)  

மேலும்,

'இறைவா! எல்லாக் கஷ்டங்களையும் எளிதாக்கித் தந்து என் மீது அருள்வாயாக! அது எத்தகைய கஷ்டமானாலும் அதை எளிதாக்குவது உன்னைப் பொருத்தவரை மிகச் சாதாரண காரியமே! இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் எளிதானதையும் உன் பேரருளையும்தான் உன்னிடமிருந்து நான் யாசிக்கிறேன். (8)

முஆவியா (ரலி) கிலாபத்தின்போது, இவர் சிறிது காலம் மதீனாவின் ஆளுநராக இருந்தார். அப்பொழுது தம் வீட்டிற்கான விறகுக் கட்டைகளை, இவரே தெருவில் சுமந்து செல்வார். செல்லும் வழியில் நெரிசல் அதிகமாக இருந்தால், மக்களைப் பார்த்து 'உங்களின் ஊழியனுக்கு வழிவிடுங்கள்' என்று நமது அபூஹுரைரா (ரலி) கூறுவார்.

இத்தகைய குறிப்பிடத்தக்க தியாகத்தின் வழியில் இலட்சிய வாழ்வு வாழ்ந்து காட்டிய அபூஹுரைரா (ரலி) அவர்கள், தம் 78 ஆம் வயதில் ஹிஜ்ரீ 59ல் இறப்பெய்தி என்றும் அழியாத பேருலகை நோக்கி விடைபெற்றுச் சென்றார்.

இன்றுவரை, அவர் மனனம் செய்து அறிவித்த ஆயிரக்கணக்கான நபிமொழிகள் பல்லாயிரக்கணக்கான மக்களால் பயின்றறியப்பட்டும் படித்துணரப்பட்டும் நடமுறைப்படுத்தப்பட்டும் நிலையான நன்மைகளைப் பன்மடங்கில்  வாரி வழங்கி வருகின்றன! ரலியல்லாஹு அன்ஹு.

o o o 0 o o o
(1) புஹாரி: 6452
(2) இப்னு மாஜா 522
(3) இப்னு மாஜா 
(4) முஸ்னத் அஹ்மத் 10155
(5) அல்ஹாக்கிம் தாஃரீக்
(6) முஸ்னத் அஹ்மத்
(7) இப்னு அபீஷைபா
(8) தப்ரானி அல்அவ்ஸர்

இக்பால் M.ஸாலிஹ்

18 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ்!

இந்தப் பதிவின் ஆரம்பமே அமர்க்களம்.

தொடர் இன்னும் இன்னும் நீண்டு கொண்டே இருக்க வேண்டும், இது என் விருப்பம் இன்ஷா அல்லாஹ்.

Abu Easa said...

மா ஷா அல்லாஹ்!

அல்லாஹ்வுக்காக அவர்கள் எல்லா சிரமங்களையும் பொறுத்துக்கொன்டார்கள். ஆனால் நமக்கு இமாம் ஒரு பெரிய சூராவை ஓத ஆரம்பித்துவிட்டாலோ, ருகூஹ், சுஜூதில் தாமதித்துவிட்டாலோ வியர்த்துவிடுகிறது.

அல்லாஹ் நம்மையும் பொருந்தி வெற்றியாளர்களில் ஆக்குவானாக!

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி ! நகைச்சுவை என்று தலைப்பிட்டு கண்கலங்க வைக்கும் தொடர் . உணர்வு பூர்வமான செய்திகள். பால்குடித்த சம்பவத்தைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வை சொல்கிறேன்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அபு ஹுரைரா(ரலி) அவர்களை உள்ளடக்கிய இந்த அத்தியாயத்தை அதி விரைவா வாசிக்க ஏதுவாய் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறாய்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா-டா.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு அமைதியான பாலைவன மையப்பகுதியில் வார விடுமுறை அமைதியாய் ஆரம்பிக்கும் இவ்வேளையில் பணியாளர்கள் அங்கொன்றும், இன்கொன்றுமாய் இருக்கும் சூழலில் தனிமையில் இந்த ஹதீஸ்களின் கோர்வையை அழகு தமிழில் படித்து சப்தமின்றி அழவே முடிந்தது.

நாட்களில் பெரும் பகுதி உலக அலுவல், ஆசாபாசங்களிலும், சில நேரம் இது போன்ற ஆஹிர சிந்தனையிலும் எம் வாழ்க்கை ஆரவாரமின்றி அமைதியுடனே கழிந்து கொண்டிருக்கிறது. பெரும் பேரிடர்களின்றி பொழுதுகள் எம்மை விட்டு நகர்வதே அல்லாஹ் எமக்கருளிய பேருபகாரமே ஆகும். அல்ஹம்துலில்லாஹ்....

சகோ. இக்பால் எம். சாலிஹ் அவர்களின் சீரிய இவ்வெழுத்துப்பணி சீரும் சிறப்புமாய் தொடர்ந்து எம்மை செம்மைப்படுத்தட்டும்......இன்ஷா அல்லாஹ்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எம்பெருமானார் கண்மணி நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்.) அவர்களும், அவர்களின் உற்ற தோழர்களாய் இருந்த‌ சத்ய சஹாபாக்களும் வாழ்ந்த இப்புனித மதீனத்து பூமியில் நான்காண்டு காலம் சுற்றித்திரிந்து அப்பக்கம் வானுயர தன் ஒளிக்கீற்றை பீறிட்டு வீசச்செய்யும் புனித ஹரம் ரவ்ளா ஷரீஃபும், இப்பக்கம் பேரீத்த மரங்கள் சூழ்ந்த தோட்டப்பகுதியில் நான் வேலை செய்த நிறுவனமும் இவ்விரண்டிருக்கும் மத்தியில் அழகிய செந்நிற மதிலாய், பெரும் போர்க்களமாய் அன்று திகழ்ந்த உஹத் மலையும் இருந்த வந்த அந்த அழகிய சிறு வயது நாட்களுக்கே என்னை அள்ளிச்சென்று விட்டது உங்களின் இந்த அற்புத எழுத்து நடை. மாஷா அல்லாஹ்......

Ebrahim Ansari said...

//எம்பெருமானார் கண்மணி நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்.) அவர்களும், அவர்களின் உற்ற தோழர்களாய் இருந்த‌ சத்ய சஹாபாக்களும் வாழ்ந்த இப்புனித மதீனத்து பூமியில் நான்காண்டு காலம் சுற்றித்திரிந்து அப்பக்கம் வானுயர தன் ஒளிக்கீற்றை பீறிட்டு வீசச்செய்யும் புனித ஹரம் ரவ்ளா ஷரீஃபும், இப்பக்கம் பேரீத்த மரங்கள் சூழ்ந்த தோட்டப்பகுதியில் நான் வேலை செய்த நிறுவனமும் இவ்விரண்டிருக்கும் மத்தியில் அழகிய செந்நிற மதிலாய், பெரும் போர்க்களமாய் அன்று திகழ்ந்த உஹத் மலையும் இருந்த வந்த அந்த அழகிய சிறு வயது நாட்களுக்கே என்னை அள்ளிச்சென்று விட்டது// தம்பி நெய்னா அவர்களே! ஒரு புறம உங்கள் மேல பொறாமையாக இருக்கிறது. மறு புறம் அல்லாஹ் உங்களுக்கு அளித்த கருணையான வாய்ப்பை நினைத்து மகிழ்வாக இருக்கிறது. இன்னொரு புறம் ஏக்கமாக இருக்கிறது.
உம்ரா போயிருந்தபோது கண்ட உஹது போர்க்களம் மனக்கண்ணில் வந்து போகிறது.

Yasir said...

அல்லாஹூ அக்பர்..காக்கா உங்களின் தரமிக்க எழுத்தில் எழுதப்பட்டு, இவ்வாக்கத்தில் சொல்லப்பட்ட தன்னிகரற்ற கருணை நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையும்,சகாபாக்களின் வரலாறுகளையும் படித்துவுடன் மறுமைநாளைப்பற்றி பயமும், இவ்வுலக வாழ்வில் கண்ணியமாக வாழ வேண்டும் என்ற கடமைவுணர்ச்சியையும் உள்ளத்தில் உறைய வைக்கின்றது...துவாக்கள் காக்கா

Unknown said...

மாஷா அல்லாஹ்,
திண்ணை தோழர்களைப்பற்றி தெளிவான விளக்கங்களுடன் அழகு தமிழில் சொல்லும் நபிமணியும் நகைசுவையும் தொடர வல்ல ரஹ்மான் அருள் புரியட்டும்
-------------------
இம்ரான்.M.யூஸுப்

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

உத்தமத்தூதரும் அவர்தம் சத்தியத்தோழர்களும் குறித்த சம்பவங்கள் ஆழ்ந்து படிக்கும்போது நம் மனம் பரவசத்தில் மூழ்கி நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும். அதுபோல் தான் இதுவும்.

//பின்னர், 'அபூஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீயும் மட்டும் தான் எஞ்சியுள்ளோம், அப்படித்தானே?' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! ஆம். உண்மைதான்' என்றேன். பாசமிகுந்த பண்பாளர் (ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து இதைப் பருகுவீராக' என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். 'இன்னும் பருகுவீராக' என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'இன்னும் பருகுவீராக' என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன்.

இறுதியில் 'இல்லை; சத்திய மார்க்கத்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த இறைவன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை' என்றேன். தங்க நபி(ஸல்) அவர்கள் 'சரி. அதை எனக்குக் காட்டுவீராக' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய திருப்பெயர் கூறி எஞ்சிய பாலைப் பருகினார்கள். (1)///

இதனை படிக்கும்போதே என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது

///இந்த சம்பவம் திண்ணைத் தோழர்களின் வறுமை நிலையை மட்டுமல்ல. தன் அடியார்களுக்கு அற்புதமாக உணவளிப்பதில் அல்லாஹ் எத்தகைய சிறப்பானவன் என்பதைக் காட்டுகிறது///

அல்ஹம்துலில்லாஹ்!

Unknown said...

// தவ்ஸ் குலத்தைச் சார்ந்த அபூஹுரைரா (ரலி) அவர்களையும் சேர்த்து அந்த ஒப்பற்ற ஓரிறைக் கொள்கை எனும் நறுமண மலர் மாலையில்தான் இந்தப் பல்வேறு குல, இன, நிற மக்களும் அழகாகக் கோர்க்கப்பட்டிருந்தார்கள்.// மாஷா அல்லாஹ்! அருமை சகோதரர் இக்பால் அவர்களுக்கு, ஜசாகல்லாஹு கைரன். தொடக்கமே நறுமணம் கமழ, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வரலாற்றினை நினைவூட்டியுள்ளீர்கள். தங்களின் இப்பணி தொடர வல்ல ரஹ்மான் துணை செய்வானாகவும்,ஆமீன்..

//"சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்"

'இந்த ஒப்பற்ற வாசகத்தை ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அதைச் சொன்னவருக்காக சுவனத்தில் மரம் ஒன்று நடப்படுகின்றது' என்றார்கள்//
இதுபோன்று நம் வீடுகளில் ஒரு நேரத்தை ஒதுக்கி, சஹாபாக்களின் வரலாறு, குர் ஆனின் சிறப்பு, திக்ரின் சிறப்புகள் இவற்றை நம் மனைவி, பிள்ளைகள் அனைவரும் அமர்ந்து படித்து வந்தால், இன்ஷா அல்லாஹ், டி.வி.பார்ப்பது, மற்றும் பல அனாச்சாரங்கள் தானாக அழிந்துவிடும்...நம் வீடுகள் இவ்வுலகிலேயே சொர்க்கப்பூஞ் சோலையாகிவிடும்...அல்லாஹ் அதன்படி ஆக்கித்தருவானாகவும்,,ஆமீன்...யாரப்பல் ஆலமீன்...

அலாவுதீன்.S. said...


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மாஷா அல்லாஹ்!
அபூஹுரைரா(ரலி) அவர்களின் ஏழ்மையும், அவர்கள் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களை நேசித்த விதமும் மெய் சிலிர்க்க வைத்து கண்களை கலங்கச் செய்கிறது.

நம்மை சுயபரிசோதனை செய்துக் கொள்ள மனம் நாடுகிறது.

அழகுத் தமிழிலல் உத்தமத் தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்வியலை படிப்பதற்கு மனம் மகிழ்வைத் தருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

வாழ்த்துக்கள் சகோ. இக்பால்!

KALAM SHAICK ABDUL KADER said...

செந்தமிழ்த் தேனில் சிறந்த மருந்தென
தந்தவுன் ஆற்றல் தழைத்து

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தூதர் நபிகளார் வாழ்க்கை பற்றிய
தூய தமிழில் வழக்கமான எழுத்து மழை!

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

Anonymous said...

Honestly speaking I cried myself on reading ur narration of our Holy Prophet distributing milk to the Ashabus Suffa. Alhamdhu lillah Allah blessed me to pray in the suffah during this Umrah.

May Allah bless us and forgive all our sins.

Wassalam
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சரசரவென்று ஓடும் அழகு தமிழின் எழுத்தோடையின் வேகத்தோடு என் விழியோரம் சொட்டிய நீருக்கும் ஊற்றாக இருந்தது இந்த அத்தியாயம்... !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் இக்பால் காக்கா,

எத்தனை முறை படித்தாலும் கண் கலங்க வைக்கும் பதிவு.

பிலால் (ரழி) அபூ ஹுரைரா (ரழி) அபூ பக்கர் (ரழி) உஸ்மான் (ரழி) உமர் (ரழ்), அனஸ் (ரழி) அலி (ரழி) என்று அனைத்து ஸஹாப்பாக்களின் வாழ்வின் எந்த சம்பவங்களை படித்து முடித்தவுடன் ஒரு புத்துணர்வு ஏற்படும், தங்களின் தமிழ் வர்ணனையில் ஒவ்வொரு வரியையும் படிக்கும் போதே புத்துணர்வு ஏற்படுகிறது.

ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

அல்லாஹ் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக.

Iqbal M. Salih said...

இந்தப் பதிவுக்குக் கருத்துக்கள் தெரிவித்த சகோதரி ஆமினா அவர்களுக்கும் டாக்டர் அன்சாரி காக்கா அவர்களுக்கும்

சகோதரர்கள் அபுஇப்ராஹீம், அபுஈஸா, அலாவுதீன், கவியரசர் அபுல்கலாம் அவர்கள், இம்ரான் கரீம், இப்ன் அப்துல்வாஹித், மண்வாசனை மணக்க எழுதும் எழுத்தாளர் MSM நெய்னா முஹம்மத், முஹம்மத் இப்ராஹீம், என் உடன்பிறவா அண்ணன் NAS, நண்பன் சபீர், தம்பிகள் தாஜுத்தீன், ஜஃபர் ஸாதிக், யாசிர் ஆகியோருக்கும் மிக்க நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு