Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்... தொடர் - 8 12

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2013 | , ,தொடர் : எட்டு
இசங்களும்  பொருளாதார இயலும்

இந்தத் தொடரில் உலக மதங்களின் பொருளியல் கோட்பாடுகள் பற்றி ஓரளவு விவாதித்தற்கு அடுத்து  உலகின் பல பகுதிகளில் பல தலைவர்களால் போதிக்கப் பட்ட அல்லது புகுத்தப்பட்ட கொள்கைத் தத்துவங்கள் அல்லது இசங்கள் என்பவற்றுள் தலையாய சிலவற்றையும் இனி தொடர்ந்து விவாதிக்கலாம். 

இத்தொடரின் ஆறாம் பகுதியை நிறைவு செய்த போது கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தோம். அவை:-

“இதற்கு மாற்றுப் பொருளாதார  வழிகள்  என்ன? காந்தியப் பொருளாதாரமா? சோசலிஸமா? பாசிசமா? கம்யூநிசமா? கலப்புப் பொருளாதாரமா? சுதந்திர வாதமா? முதலாளித்துவமா? இஸ்லாமா?”  

என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த வரிசைப் படி இதோ :- 

காந்தியப் பொருளாதாரம்:-

இந்திய தேசத்தின் தந்தை என போற்றி வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் தனது பொருளாதாரக் கொள்கைகளாக வலியுறுத்தியவை தொகுப்பாக காந்திஸம் அல்லது காந்தியப் பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது. காந்தியப் பொருளாதாரக் கோட்பாட்டின்  அடிப்படை  கிராமங்களை ஆதாரமாகக் கொண்டவை. தற்சார்பு, தன்னிறைவு, கூட்டு செயற்பாடு, பொது நலம், சமத்துவம் ஆகியவற்றை காந்தியப் பொருளாதாரம் அதிகம் வலியுறுத்திப் பேசி எடுத்துரைக்கும். சுற்றுச்  சூழல் சார்ந்த குடிசைத்தொழில் மற்றும் கைத்தொழில்களின் மேம்பாடு சார்ந்த பொருளாதார அமைப்பை காந்தி வலியுறுத்தினார்.  நாடு தனக்கு தேவைப்படுபவைகளை தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென்பதும், தன்னிடம் உற்பத்தியானவைகளை வைத்தே தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்பதுமே தன்னிறைவு, தற்சார்பு என்று அழைக்கப்படுகின்றன.  

ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடிய பலருக்கு தலைமைப்பொறுப்பேற்ற காந்தியடிகள் தனது சுதந்திரப் போராட்டத் திட்டத்தில் சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், அன்னியத்துணி எரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டார். இவற்றை அவர் வலியுறுத்தக் காரணம் இந்த நாடு விவசாய கிராமங்களைக் கொண்ட நாடு என்பதாலும், இந்நாட்டின் பெரும்பகுதி மக்கள் விவசாயிகள் என்பதாலும் தாங்கள் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து யாரையும் சார்ந்திராமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென்ற கொள்கையை சுதந்திரப் போராட்டத்தின் வழி நெடுக பரப்புரை செய்தார். இந்தியாவை அந்நிய நாட்டார் தங்களுக்கு சந்தையாக பயன்படுத்துவதை எதிர்த்தே போராடிய காந்தி அந்நிய பொருள்களை சாராத வாழ்வு வாழ தனது நாட்டு மக்கள் பழகிக் கொள்ளவேண்டுமென்று உபதேசித்தார். 

தவிரவும் பணத்தைத் தேடுவதைவிட ஆத்மீக மேன்மை("spiritualizing economics") அடைய மக்களைத் தூண்டினார். அரசின் எந்தத் திட்டமும் மக்களை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டுமென்ற கொள்கை உடையவர் காந்தி.   
காந்திய பொருளாதார முறை தொழில் நுட்பத்துக்கு எதிரானது என்ற ஒரு விமர்சனம் உண்டு. எல்லா மனிதரையும் ஒருங்கே உயர்த்திச் செல்லும், சுற்றுச் சூழலியல் விளைவுகளை இயன்றவரை புரிந்து செயற்படும் எளிய தொழில்நுட்பங்களுக்கு காந்திய பொருளாதாரம் எதிரானது அல்ல என்பதே காந்திய சிந்தனையின் சரியான புரிதலாக இருக்கும் . ஒவ்வொரு கிராமமும் அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான பொருள்களை அங்கேயே கைத்தொழில் முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறுவது மொத்தத்தில் நாட்டைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிவிடும் எனக் கருதினார். 

காந்தியப் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறபோது காந்தி நடைமுறைப் படுத்த விரும்பிய தர்மகர்த்தா (trusteeship) முறையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.  இந்த முறைப்படி சொத்துக்கள் அனைத்தையும் கடவுளின் பெயரால் அர்ப்பணித்து விட வேண்டும். பிறகு அவரவர்களின் இன்றியமையாத  தேவைகளின் அளவுக்கு மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.  (everything must be surrendered to God and then out of it one may use only that which is necessary for the service of God's creation, according to one's strict needs.) 

காந்தியின் கருத்துப்படி அவரவர்களின் அன்றாடத்தேவைகளுக்கு மட்டுமே வழங்கப் பட வேண்டுமென்பதால் பதுக்கல், சுரண்டல், யூக வணிகம் ஆகியவை மறைந்துவிடுமென்றும் , உலகத்துக்கே இக் கொள்கையை பரிசாக அளிக்க வேண்டுமென்றும் காந்தி விரும்பினார். (Harijan, 23 February 1947).

பெரும் நிலச்சுவான்தார்களையும், ஜமீந்தார்களையும் தங்களின் சொத்துக்களை இந்த தர்மகர்த்தா முறைக்கு வழங்கிவிட்டு தங்களுக்கு வேண்டியதை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார். இந்த முறைப்படி தேவையற்ற அல்லது தேவைக்கு மீறிய உற்பத்தி செய்து கொட்டிக் குவிக்க முடியாது. தனி  நபர்களின் தொழில் முனைப்பு , தனி நபர்களின் சொத்துடைமை ஆகியவை மறைந்துவிடும் என்பதெல்லாம் இந்த பொருளாதாரக் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள். (K. G. Mashurwala, Gandhi and Marx, Navajivan Trust, Ahmedabad, 1951, p. 79). 

நாடு சுதந்திரம் பெற்றதும் பெருமளவில் தொழில்கள் செய்து செல்வத்தை கொட்டிக் குவிக்கலாமென்று திட்டமிட்டிருந்த அன்றைய செல்வந்தர்களின் ஆதரவு இல்லாமல் இந்த தர்மகர்த்தா முறை தோல்வியே அடைந்தது.  ஆனாலும் ஓரளவு கூட்டுறவு சங்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி இக் கொள்கையை ஒத்தே உருவாக்கப்பட்டன. இதே அடிப்படையில்தான் காந்தியின் சீடரான வினோபா பாவே  பூமிதான இயக்கத்தைத் தொடங்கி , நாடு முழுதும் சுற்றி நிலங்களை தானமாகப் பெற்று நிலமில்லாதவர்களுக்கு வழங்கினார். மேலும் காந்தியின் மற்றொரு  சீடரான ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வோதயா இயக்கத்தைத் தொடங்கினார். இன்று நாடு முழுதும் சிறிய ஊர்களில் கூட சர்வோதய இயக்கத்தின் கடைகள் ஏதாவது ஒரு மூலையில் இருக்கின்றன. அந்தக் கடைகளில் அப்பளம், முறுக்கு, வத்தல், வடாகம் கொலு பொம்மைகள் , பாய்கள் என்று குடிசைத்தொழில்களில் தயாரிக்கப் பட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கைத்தறியையும் கதராடையையும் வற்புறுத்தும் கோட்பாடுகள், ஆடம்பர வாழ்வை நாடிப்போன சமுதாயத்தின்  நவீனம் நாடிய போக்குக்குமுன் மண்டியிட்டன.   

போரோடு மேயத்துடிக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கு பிடுங்கிப் போட்டால் கட்டுப்படியாகுமா? ஆகவே இந்த காந்தியப் பொருளாதாரம் செல்லாத செலாவணியாகிவிட்டது. காந்தியப் பொருளாதார முறைகளின் தோல்வியை காந்தியே கண்ணால் கண்டுவிட்டே மறைந்தார். காரணம் சுதந்திரப் போராட்டத்தில் காந்தியுடன் இணைந்து போராடிய ஜவஹர்லால் போன்ற தலைவர்கள் நாட்டை ஆளும் பொறுப்புக்கும் பதவிக்கும்  வந்த பிறகு காந்தியின் கோட்பாடுகளை முழுதாக அல்லது முழுமனதுடன் நிறைவேற்றுவதில் காந்தி உயிருடன்  இருக்கும் போதே  ஆர்வம்  காட்டவில்லை. 

கலப்புப் பொருளாதாரம் :-

கலப்புப் பொருளாதாரம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதார முறைகளின் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பொருளாதார முறை ஆகும். பொதுவாக  தனியுடைமை மற்றும் அரசுடைமை நிறுவனங்கள் இரண்டையும் கொண்ட அல்லது முதலாளித்துவம், சோசலிசம் ஆகிய இரண்டின் அம்சங்களைக் கூட்டாக்கிக்கொண்ட அல்லது சந்தைப் பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரம் ஆகிய இரண்டின்  கலப்பாக அமைந்த ஒரு பொருளாதாரம் ஆகும்.

கலப்புப் பொருளாதாரம் என்பதற்கு தீர்மானமான ஒரு  வரைவிலக்கணம் கூறமுடியாது. ஆனால் கலப்புப் பொருளாதாரத்தோடு தொடர்புடைய அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.  அரசால் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமிடலுடன் கூடிய ஓரளவு தனியார் முதலீட்டுடனும்  கூடிய பொருளியல் சுதந்திரம். இவ்வகைப் பொருளாதாரக் கோட்பாட்டில்   திட்டமிடல்,  சூழலியம், தேவைப்படும்போது சமுதாய நலம் தொடர்பான அரசின் தலையீடு மற்றும் கட்டுப்படுத்தல்  , சில உற்பத்திச் சாதனங்களை அரசே தன்  உடைமையாக வைத்திருத்தல் என்பவற்றை உள்ளடக்கலாம். குறிப்பிட்ட சில துறைகளை தனியார் இடம் விட்டு அரசும் தன்னிடம் சில துறைகளை வைத்திருப்பதுடன் தனியார் இடம் விடப்பட்ட துறைகளின் மேல் அரசின் ஆதிக்கத்தையும் செலுத்துவது என்றும் இதனை விவரிக்கலாம். சில ஊர்களுக்குப் போனால் மீன் குழம்பில் வெண்டைக்காய் அல்லது கத்தரிக்காயும் போட்டு சமைத்து இருப்பார்கள். அது போல்தான் MIXED ECONOMY என்று அழைக்கப்படும் இந்த கலப்புப் பொருளாதாரமாகும். இந்தியா போன்ற நாடுகள் இதைத் தான் பின்பற்றி வருகின்றன.   இதனால்தான் நாம் சாப்பிட்டது மீன் குழம்பா அல்லது புளிக்குழம்பா என்று சொல்லத்தெரியாமல் குழம்பிப் போய் கிடக்கிறோம்.  குழம்பை அள்ளிப் பரிமாறும்போது சிலருக்குப் பெரிய மீன் துண்டுகளும் பலருக்கு வெண்டைக்காய் மட்டுமே உண்ணக கிடைக்கின்றன. 

முதலாளித்துவம் :-

முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் மற்றும் விநியோகம் ஆகியவை பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறைமையாகும். அத்துடன் இம் முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், மூலதனப் பொருட்கள், கூலி, நிலம் மற்றும் பணம் ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான       தனிப்பட்டவர்களாலும்  சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினாளும் , உரிமைகள் தொடர்புபடுகின்றன.

முதலாளித்துவச் செயற்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.   வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது. குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து உலகின் பிற இடங்களுக்கும் பரவியது. அல்லது பரப்பப்பட்டது . 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும்தொழில் மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக விளங்கியது.

முதலாளித்துவம் ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி இறைக்காது. முதலாளித்துவ சோதிடனின் குடுமி சும்மா ஆடாது.  இலாபமே நோக்கமாக செயல்படும் அமைப்பு. “மக்கள் நலம் மக்கள் நலம் என்றே கூறுவார் தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் நாடுவார்”.   வகையற்ற செயல்களை செய்தாவது வருட இலாபத்தை உயர்த்திக் காட்டும் நோக்கோடும் தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டும் நோக்கோடுமே முதலாளித்துவம் செயல்படும்.  முதலாளித்துவத்தின் சுரண்டல் போக்கு உலகின் சில பகுதிகளில் மக்களின் எழுச்சிக்குக் காரணமாகி முதலாளித்துவத்தை மட்டுமல்ல முதலாளிகளையும் உயிரோடு வெட்டிக் குழிதேண்டிப் புதைத்தது.  

பாசிசம் (fascism) :- 

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய ஆளுமை தொடர்புடையவை  தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகளும்  இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஒட்டு மொத்த எளிய மக்களின் நலனை மேம்படுத்துகிறோம் என்றே இந்தக் கோட்பாடு ஆரம்பித்து சர்வாதிகாரத்தில் முடிந்தவைதான் வரலாறு. ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். இத்தாலியின் முசோலினியும் ஜெர்மனியின் ஹிட்லரும்  பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள்.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்றுதான் பாசிசம் ஆரம்பிக்கும். பின்னர் இந்த பாசிசவாதிகள் இம்சை அரசன் இரண்டாம்  புலிகேசியாக மாறிவிடுவார்கள். 

தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம்.

 தனியுரிமை, முதலாளித்துவம் ஆகியவற்றின் தோல்விகள் காரணமாகவே கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பதே   உண்மை. அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தனிமனித சிந்தனை மற்றும் சுதந்திரம் கேள்விக்குறியாக்கப் பட்டு அடக்குமுறை மற்றும் ஆணவம் மேலோங்கியதால் பாசிசம் இறுதியில் நின்று நிலை பெற இயலவில்லை.  

ஆயினும் ஜனநாயகத்தின் பெயரில் , தாங்கள் நினைத்ததை அல்லது விரும்புவதை செய்துகொள்பவர்கள் , தங்களுக்கு வேண்டியவர்களை கூட வைத்துக் கொண்டு அரசியல் அத்துமீறல்களில் ஈடுபடுவோரும் சரி, தனது வாரிசுகளை உயர்நிலைக்குக் கொண்டுவர அரசு இயந்திரத்தைப் பயன் படுத்துபவர்களும் சரி  பாசிசத்தையே பரிணமிக்கிறார்கள்.   

சுதந்திரவாதம் :-

சுதந்திரவாதம் அல்லது தாராளமயமாக்கள்   (Libertarianism: லிபர்ட்டேரியனிசம்) என்பது மற்றோர் அரசியல் பொருளாதாரக் கொள்கை.  அரசின் பங்கு குறைவாகவும், தனிமனித சுதந்திரம் தடைகளின்றி விரிவாகவும் அமைய வேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. குறிப்பாக அரசின்  அதிகாரத்தை இயன்றவரை கட்டுப்படுத்த இந்தக் கோட்பாடு  பரிந்துரைக்கிறது. தனி மனிதனின் சுதந்திரம் இன்னொரு மனிதனை பாதிக்காத வகையில் அவளுக்கு/அவனுக்கு முழுமையான சுதந்திரத்தை இந்தக் கொள்கை வேண்டுகிறது. எங்கே ஒரு மனிதனின் உரிமைகள் பாதிக்கப்படுகிறதோ, அதைப் பாதுகாக்க மட்டுமே அரசுக்கு வன்முறைக்கான அதிகாரம் உண்டு என்கிறது. எடுத்துக்காட்டாக, விபச்சாரம்,ஆபாசம், அவதூறு  போன்றவற்றில் கூட அரசின் தலையீட்டை அல்லாது  ஒழுங்கு முறையை இந்தக் கோட்பாடு தவிர்க்கச்சொல்கிறது.   

சுதந்திரவாதக் கோட்பாடானது, பொதுவுடமை, சமவுடமை ஆகிய கொள்கைகளை முற்றிலும் எதிர்க்கிறது. மாறாக தனிமனித சுநந்திரத்தை, உரிமைகளை, உடமைகளை இது பாதுகாக்க முனைகிறது. பெரும்பானமையான பொருளாதார செயல்பாடுகள்  திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று வேண்டுகிறது.  கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ஊடகம், கலைத்துறை, நில மேலாண்மை, விவசாயம்,  உட்பட அனேக துறைகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று கருதுகிறது. திறந்த சந்தையே இவற்றை சிறந்த செயல்திறன் மற்றும் நிர்வாகத்துடன் செய்ய முடியும் என்று விவாதிக்கிறது. இராணுவம்,  காவல்துறை, நீதித்துறை, பொதுமக்கள் மருத்துவம் ஆகிய துறைகளை  மட்டுமே அரசுவைத்துக்கொண்டு மற்றவற்றை சுதந்திரமாக திறந்து விட்டுவிடவேண்டுமென்று கூறுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய கோட்பாடுகளை பெருமளவு கடைப்பிடிக்கின்றன. 

அண்மைக்காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் தளர்வும் இந்த சுதந்திர வாதத்தின் மாறான விளைவுகளையும் அழிவுகளின் சாட்சிகளையும்  நமக்கு கண்கூடாகக் காட்டும்.  

இன்னும் சோசலிசம் மற்றும் கம்யூனிசம் பற்றி நாம் விவாதிக்க வேண்டும். அதற்காக ஒரு அத்தியாயம் தேவை. அதன்பின்புதான் இங்கு குறிப்பிடப்பட்ட மத மற்றும் இசங்களோடு இஸ்லாமிய பொருளாதாரக் கோட்ப்பாடுகள் எவ்வாறு மேம்பட்டு நிற்கின்றன என்பதை நாம் நிலை நிறுத்த இயலும். 

ஆகவே இன்ஷா அல்லாஹ் தொடரலாம். 
இபுராஹீம் அன்சாரி

12 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Ebrahim Ansari,

Good and succint explanations on alternative economic principles of world.

Ghandian economic principle based on self sustainability and spiritualized economy seems to be simple and powerful, but its not real God's(- who is all knower), principles and order.

Your explanation on Mixed economy is funny.

//நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்றுதான் பாசிசம் ஆரம்பிக்கும். பின்னர் இந்த பாசிசவாதிகள் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியாக மாறிவிடுவார்கள்.//
Recently I read about Hitler and his private and public agenda, particularly his mesmarizing communicating power(listened few videos with English Subtitles) which is amazing, and end of his life. Your above statement exactly fits for him.

Everyone is able to understand the result of Free Economy or Libertarianism, which is like a chain reaction, even now the crisis is hitting Europe.

Amazingly no powerful countries like America, Europe, Japan, Asian and powerful technologies, and expertise and experience could stop the economic crisis.

Thanks and best regards,B. Ahamed Ameen
from Dubai


sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

பொருளாதாரப் பாடநூலில் வரவேண்டிய பதிவு இது. இப்படி இலகுவாகப் புரிய வைக்க குறைந்தபட்சம் தாங்கள் "நோட்ஸாவது" எழுதலாம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இஸ்லாமிய பொருளாதாரம் தொய்வெல்லாம் அடையாது !

பொறுமையாக நிஜமாகவே (எனக்கு பிடித்த) பாடம் படித்தேன் !

KALAM SHAICK ABDUL KADER said...

பொருளாதார மேதை டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும். என் மனத்தினில் பட்டதையே கவிவேந்தர் அவர்களும் கருத்துரையிட்டுள்ளார்கள். உண்மையில் நீங்கள் பொருளாதாரத் துறையில் பேராசிரியாக இருந்தால் அல்லது அத்துறையில் படிக்கும் மாணவர்கட்கு உதவும் பாடநூலாக உங்கள் ஆக்கங்கள் உருவானால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று தங்களைப் போன்ற பொருளாதார மேதையாக அவர்களும் வெளிவரலாம். அல்லாஹ் நாடினால் எங்கள் விருப்பம் நிறைவேறும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொருளாதாரம் பற்றிய பொக்கிசம். வளரட்டும். துஆ செய்கிறோம்!

Ebrahim Ansari said...

அன்புள்ள அதிரை நிருபர் வலைதளத்தின் கவித் திலகங்கள் தம்பி சபீர் அவர்களுக்கும் கவியன்பன் அவர்களுக்கும் அலைக்குமுஸ்ஸலாம்.

தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

நாம் நினைப்பது ஆசைப்படுவது வேறு இறைவன் நம்மை இட்டுச்செல்வது வேறு. கல்லூரியில் PUC யில் சேர்ந்த போது யாருமே விரும்பி எடுக்காத மூன்றவது குருப் என்கிற History, Economics, Advanced Tamil ஆகிய பாடங்களைக் கொண்ட பிரிவினையே தேர்ந்தெடுத்து சேர்ந்தேன்.

உயர் நிலைப் பள்ளியில் வரலாறு நமக்குப் பாடமாக இருந்தது இருந்தாலும் புகுமுக வகுப்பில் பொருளாதாரம் புதுமையான பாடமாகத் தெரிந்தது. அன்றைய நமது கல்லூரியின் பொருளாதாரத்துறையின் பேராசிரியர்கள் மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களும் தமீம் அன்சாரி அவர்களும் பாடம் நடத்திய விதம இன்றளவும் மனதில் தங்கி அந்தப் பாடத்தில் ஒரு ஈர்ப்பும் லயிப்பும் ஏற்படுத்தின. நாமும் இவர்கள் போல் வரவேண்டுமென்ற ஆசையும் கனவுகளும் இருந்தன. வளர்ந்தன.

அந்த வருடத்தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் D என்கிற கிரேடும் பொருளாதாரத்தில் A+ என்கிற கிரேடும் அட்வான்ஸ் தமிழில் A+ என்கிற கிரேடும் எடுத்து வெற்றி பெற்றேன். அப்போதெல்லாம் மதிப்பெண்கள் இல்லை. தர வரிசைதான். D = distinction. மற்றபடி A, B, C என்பவை ஒன்று இரண்டு மூன்று எனத்தரம் தரும். A.B.C.இவைகளுக்கு அதிகமாக இருந்தால் ஒரு + சேர்த்துத்தருவார்கள்.

அதுவரை வரலாற்றில் நமது கல்லூரியில் D கிரேடு எடுத்தவர்கள் இல்லை என்று அன்றைய வரலாற்றுத்துறை பேராசிரியர் டி. ஜெயராஜ் அவர்கள் கூறினார்கள். ஆனால் தொடர்ந்து நான் இளங்கலையாக வரலாறோ, பொருளாதாரமோ, தமிழோ படிக்காமல் வணிகவியல் படிக்க வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரிக்கு செல்லவைக்கப் பட்டேன். B.Com படித்தால் வங்கிகளில் வேலை கிடைக்கும் என்கிற ஒரு மாய வலை பின்னப்பட்டிருந்த காலம். ஆகவே நான் ஆசைப்பட்டதைப் படிக்காமல் மலேசியாவில் ஒரு தேநீர் விடுதியில் நடைபெற்ற என் தந்தை உட்பட்ட நண்பர்களின் சந்திப்பு என்னை வாணியம்பாடி நோக்கித் தள்ளியது.

வணிகவியலிலும் அரைவாசிப் பாடங்கள் பொருளாதாரம் தொடர்புடையவையாகையால் அந்தப் பாடத்தோடு கூடிய எனது காதல் தொடர்ந்தது. அன்று படித்தவைகளையே இன்று உங்களுடன் எல்லாம் பகிர்ந்து கொள்ள அதிரை நிருபர் மூலம் அல்லாஹ் வழிகாட்டி இருக்கிறான்.

சுய புராணம் என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். நாம் ஆசைப்படுவதைப் படிக்க விடாத சூழ்நிலைகளின் பொம்மலாட்டத்தையே சுட்டிக்காட்டினேன். நான் படிக்க விரும்பியதை என்னைப் படிக்க விட்டு இருந்தால் ஒருவேளை நீங்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல் சில நூல்களை எழுத முடிந்திருக்குமோ? வாழ்க்கை சூறாவளியில் சில படகுகள் திசைமாறி விடும் அதில் ஒரு படகு நான். ஆனாலும் அல்ஹம்துலில்லாஹ். இந்த அன்பு நெஞ்சங்கள் பலவற்றை அல்லாஹ் சொந்தமாக்கி இருக்கிறான்.

இன்னும் இந்தப் பேசு பொருளில் போகவேண்டிய பயணம் நிறைய இருக்கிறது. தாங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் குறிப்பாக கவியன்பன் ஒரு வணிகவியல் படித்தவர் என்பதால் ஆலோசனைகளையும் கோருகிறேன்.

ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

sabeer.abushahruk said...

கற்றோரின் சொல்லும் செயலும் வாழ்வும் அனுபவங்களும் யாவருக்கும் படிப்பினைகள் என்பது நாங்கள் அறியாயதல்ல, காக்கா.

ஞாபகத்தில் வரும் எந்த விஷயத்தையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயங்காதீர்கள், ப்ளீஸ்.

அ.நி.: என் பின்னூட்டங்கள் வெளியாவதில் ஏதோ பிரச்னை ஏற்படுகிறது. இதேப்போல வேறு யாருக்கும்கூட ஏற்படலாம். சரிபார்க்கவும்.

Iqbal M. Salih said...

(1) கைத்தறியையும் கதராடையையும் வற்புறுத்தும் கோட்பாடுகள், ஆடம்பர வாழ்வை நாடிப்போன சமுதாயத்தின் நவீனம் நாடிய போக்குக்குமுன் மண்டியிட்டன.

(2) இதனால்தான் நாம் சாப்பிட்டது மீன் குழம்பா அல்லது புளிக்குழம்பா என்று சொல்லத்தெரியாமல் குழம்பிப் போய் கிடக்கிறோம். குழம்பை அள்ளிப் பரிமாறும்போது சிலருக்குப் பெரிய மீன் துண்டுகளும் பலருக்கு வெண்டைக்காய் மட்டுமே உண்ணக கிடைக்கின்றன

(3) நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்றுதான் பாசிசம் ஆரம்பிக்கும். பின்னர் இந்த பாசிசவாதிகள் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியாக மாறிவிடுவார்கள்.

(4 அண்மைக்காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் தளர்வும் இந்த சுதந்திர வாதத்தின் மாறான விளைவுகளையும் அழிவுகளின் சாட்சிகளையும் நமக்கு கண்கூடாகக் காட்டும்.

- I do admire those above said wonderful lines!


Ebrahim Ansari said...

Dear Brother Mr. Ahamed Ameen,

My thanks are due for your detailed and valid comments.
May Allah bless you our dear intellectual young man.

jasak Allah Hairan.

Yasir said...

மாஷா அல்லாஹ்,உணவகத்தில் உட்கார்ந்தவுடன் சாலட்/சூப் சாப்பிட்டுவிட்டு மெயின் உணவுக்கு செல்வதுபோல் உள்ளது நீங்கள் ஆக்கத்தை கொண்டு செல்லும் முறை..நாங்கள் ஈசியாக படித்துவிட்டாலும்...நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வாக்திற்க்கான தயாரிப்பு வேலைகள் செய்திருப்பீர்கள் என்பதை ஒவ்வொரு எழுத்தும் சொல்கின்றது...அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் வாழ்த்துக்களும் துவாக்களும் மாமா

அப்துல்மாலிக் said...

இப்போது உள்ள காலக்கட்டத்தில் “பொருளாதாரத்தின் பங்கு” மிக முக்கியமாக விளங்குகிறது. வியாபாரமாகட்டும், பரிவர்த்தனையாகட்டும்..

அருமையா விளங்க வைக்குறீங்க காக்கா, நிச்சயம் இந்த தொடரை படிப்பவர்கள் பொருளாதாரத்தில் வினாடிவினா வைத்தாலும் தேரிடுவாங்க நம்ம மக்கள்

அலாவுதீன்.S. said...


அன்புச்சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)!
காந்தியம்! சோசலிஸம்! பாசிசம்! – பொருளதாரத்தைப்பற்றிய பாடங்களை விரிவாக, தெளிவாக விளக்கியதற்கு வாழ்த்துக்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு