Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2013 | , ,

தொடர் : 27 [நிறைவுறுகிறது]

அல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்!

நீதித்திருநாளின் நிலையான பெருந்தலைவன், நிகரற்ற அன்புடையோன்  அல்லாஹ் (ஜல்) அருள்கின்றான்:

நிச்சயமாக, நல்லவர்கள் அந்நாளில் சுவர்க்கத்தின் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள். உயர்ந்த கட்டில்கள் மீது சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களுடைய சுகவாசத்தின் செழிப்பை நபியே நீர் கண்டறிவீர். முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். போட்டியிட்டு ஆசைகொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். அதில் "தஸ்னீம்" என்ற வடிகட்டிய பானமும் கலந்திருக்கும். அது ஓர் அற்புதமான  நீரூற்று ஆகும். அல்லாஹ்வுக்குச்  நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மதுவை அருந்துவார்கள். (01) 

ஆள்பவனும் ஆற்றல் மிக்கவனுமாகிய அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா மேலும் சொல்கின்றான்: 

தங்கத்தட்டுகளும் கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றிவந்து கொண்டிருக்கும். மனம் விரும்பக் கூடிய, கண்களுக்கு இன்பம் அளிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும். அவர்களிடம் 'இங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தில் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் காரணத்தால், இந்த சுவனத்திற்கு வாரிசாக நீங்கள் ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் மகிழ்வுடன் உண்பீர்களாக!' என்று கூறப்படும். (02)

இறைவனின் சிரிப்பில் எளியவனின் ஈடேற்றம்:

அல்லாஹ் (ஜல்)வால் ஆசீர்வதிக்கப்பட்ட அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவர்க்கவாசியின் நிலை குறித்து நவின்றார்கள்:

நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறி  சுவர்க்கவாசிகளில் இறுதியாகச் சுவர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து கை கால்களால் தவழ்ந்தவராக  வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர்! அவரிடம் அல்லாஹ் (ஜல்) 'நீ போய் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!' என்பான். அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப்போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பிவந்து "என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்' என்று கூறுவார். அதற்கு, அல்லாஹ்(ஜல்) இல்லை.  'நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!' என்று மீண்டும் சொல்வான்.

அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்றே மறுபடியும் அவருக்குத் தோன்றும்! ஆகவே, அவர் திரும்பிவந்து 'என் இறைவா! அது நிரம்பியிருப்பதாகவே காண்கின்றேனே?' என்று கூறுவார். அதற்கு வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் கருணையாளன்  'நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில்,உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு  இடம் சுவர்க்கத்தில் உனக்கு உண்டு!' என்று சொல்வான்.

அதற்கு அம்மனிதர், 'அரசருக்கெல்லாம் அரசன், பேரரசன் ஆகிய  நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைக்  கண்டு  சிரிக்கின்றாயா?' என்று கேட்பார், என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே கூறினார்கள்.

இதை எங்களுக்குக் கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் கண்டேன்'.

'இவரே சுவர்க்கவாசிகளில் தகுதியால் மிகவும்  குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார்' என்று கூறப்பட்டு வந்தது. (03) 

உலகமெலாம் காக்கின்ற ஒப்பற்ற உயர்தலைவன் அல்லாஹ்வின் இத்தகைய எல்லை கடந்த கருணை குறித்து, கனிவுநிறைந்த கண்ணியத் தூதர்(ஸல்)  அவர்கள் ஹுனைன் யுத்தம் நிகழ்ந்த பொழுதினில் இவ்வாறு கூறினார்கள்:

போரில் பிடிபட்டவர்களுள் ஒரு தாய்மை நிறைந்த பெண்மணியின் மார்பில் இருந்து தாய்ப்பால் ஒழுகிக் கொண்டிருந்தது. எனவே, கண்ணில் காணும் குழந்தைகளை எல்லாம் தூக்கி தம் மார்போடு அணைத்து அவர்களுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த பேரறிஞர் பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தப் பெண், அந்தக் குழந்தைகளைத் தூக்கி நெருப்பில் போட்டுவிடுவாள்' என்று நம்புகிறீர்களா? என்று நபித்தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு ஒரு ஸஹாபி எழுந்து, 'அவளுக்கு அத்தகைய  ஒரு வாய்ப்பு கிடைத்தால்கூட ஒருக்காலும் அப்படி அவள் செய்யமாட்டாள் யா ரசூலல்லாஹ்' என்று பதிலளித்தார்.

ஞானமிகு தூதர்  (ஸல்) சொன்னார்கள்: அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பெண்ணின் அன்பைவிட, உங்களின் இறைவன் பன்மடங்கு தன்  அடியார்கள் மீது இரக்கம்  கொண்டவன். (04)

இதுபோன்ற இன்னொரு சமயத்தில்தான், 'அல்லாஹ்வின் தூதரே, நான் சுவர்க்கத்தில் நுழைவேனா?' என்று கேட்டு நின்ற ஒரு மூதாட்டியின் சுவனம் பற்றிய கேள்விக்கு;

'கிழவிகள் சுவனம் புகுவதில்லை!' என்ற அதிர்ச்சியான ஒரு பதிலை அவருக்கு அளித்தார்கள் அண்ணலார்! அது கேட்டு மிகுந்த மனவருத்தத்தோடு போய்க் கொண்டிருந்த அவரைத் திரும்ப வரவழைத்து,

'நீர் ஒரு கிழவியாக சுவனம் புகமாட்டீர்! ஓர் எழில்மிக்க இளநங்கையாகவே சுவர்க்கத்தின்  சிங்காரச் சோலைகளில், அதன் வண்ண மலர்க்கூட்டங்களில் நீர் மகிழ்ச்சியுடன் நுழைந்து செல்வீர்!' என்று அவரை மனம் குளிரச்  சிரிக்க வைத்தார்கள் வாய்மையின் அழைப்பாளர் வாஞ்சை நபி நாயகம் (ஸல்) அவர்கள். 

அத்துடன் அவருக்கு இந்த அருள்மறை கூறும் அழகிய வாக்கியங்களை ஓதிக்காட்டினார்கள்:

"நிச்சயமாக, சுவர்க்கத்தின் பெண்களாகிய அவர்களை புதிய ஓர் அமைப்பில் நாம் உருவாக்கியுள்ளோம். அவர்களை நாம் கன்னிகளாகவும் தன் கணவனையே காதலிப்பவர்களாகவும் மேலும், சமவயது உடையவர்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம். (05) 

பொன்மனச்செம்மல் (ஸல்) அவர்களின் பூத்துக்குலுங்கும் புன்சிரிப்பைப் பற்றி; 

"வாளேந்தி வன்சமர் புரிந்தெல்லாம் சாதிக்கமுடியாத சாதனைகளைக் கூட சீர்திருத்தவாதிகளில் எல்லாம் சிரேஷ்டமானவராகிய நபிகள் நாயகத்தின் இனிய சொல்லும் புன்சிரிப்பும் சாதித்தது" என்ற வலிய உண்மையை ஓங்கி உரைத்தார் பகுத்தறிவுத் தமிழறிஞர் அண்ணாத்துரை. 

"இங்கிலாந்து மட்டுமல்ல! இந்த ஐரோப்பா முழுவதையும் அடுத்த நூறு ஆண்டுகளில் ஏதாவது ஒரு மதம் ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்றால், நிச்சயமாக அது இஸ்லாம்'தான்" என்பதை ஆராய்ந்து முடிவாக எழுதினார் ஆங்கிலேய சிந்தனைச்சிற்பி ஜார்ஜ் பெர்னார்ட்ஷா.

மனிதகுலத்தின் மாணிக்கமாகிய மாண்பு நபி (ஸல்) அவர்கள், எப்போது 'ஓதுவீராக' என்ற விண்ணகத்திலிருந்த வந்த அந்த 'அசரீரி' யைக் கேட்டார்களோ, அப்போதிருந்தே தன் உயிர்காற்றின் ஒவ்வொரு சுவாசத்தையும் ஒப்பற்ற ஓரிறைக் கொள்கையாகவே வெளியிட்டார்கள்!

இந்த உம்மத்திலிருந்து வந்த தனியொரு மனிதனின் நேர்வழி என்பது, தனக்குக் கிட்டிய ஈடேற்றமாகவே உணர்ந்து அதைப் புளகாங்கிதம் கொண்டு வரவேற்று மகிழ்ந்தார்கள் நமக்கு இன்பநிலை பெற்றுத் தந்த அன்புநபி  (ஸல்) அவர்கள். இந்த ஒரே நோக்கத்திற்காகவே, தன் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய சிறிய தந்தை மாவீரன் ஹம்ஸா (ரலி) வை, மறைந்திருந்து கொன்ற வஹ்ஸீயையும் கூட மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள் அருள்வடிவான அண்ணல்  நபி (ஸல்) அவர்கள்.

இதன்விளைவாக, 'வீழ்ந்தவருக்குச் சுவர்க்கமும் வாழ்பவருக்கு வெற்றியும்' அந்த உத்தமத் திருநபியால் உறுதியானது! அகிலத்தின் வரலாற்றில் இதற்கு ஈடான இன்னொரு காட்சியை நாம் காணவே முடியாது! மனித சமூகத்தின் மீட்சியின்மீது இந்த அளவிற்குக் கருணையும் கனிவையும் வெளிப்படுத்தி நின்ற உயர்ந்த இலக்கணத்திற்கு உரியவரான இந்த மாமனிதரின் கால் தூசிக்குக்கூட மனித குலத்தின் வரலாறு படைத்தோர் என்ற வரிசையில் நிற்கும் வேறெந்த மனிதனும் நெருங்கி நிற்க முடியாது! (06)

ஏந்தல் நபி (ஸல்) அவர்களுக்கு, இரண்டாவதாக வந்த 'வஹீ'யில் 'எழுந்து நிற்பீர்! எச்சரிப்பீர்!' என்ற மேலோன் அல்லாஹ்வின் கட்டளையைக் கண்ட அந்தக் கணத்தில் எழுந்து நின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக் குரல் 'பாலைகளிலும் சோலைகளிலும் பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும் மேடுகளிலும் அதையும் தாண்டி நிற்கும் தீவுகளிலும்' தடையில்லாமல் தன் இலட்சியவாழ்வின் இறுதி நேரம்வரை மக்களை நல்வழிப்படுத்திய வண்ணம் ஒலித்துக் கொண்டே இருந்தது! இறுதிவரை இவ்வுலகில் சாதிக்க வந்த ஆதிக்க நாயகராகவே வரலாற்றில் மிளிர்ந்து நின்றார்கள் மணிமொழிபேசும் மன்னர் நபி (ஸல்) அவர்கள்! 

அந்த ஒப்பற்ற ஒரே இறைவனை மட்டுமே வணங்கி வழிபடும் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் அரும் பணியில், தம் உன்னதமான அழைப்புப் பணியின் இறுதி இலக்கான 'ஏகத்துவம்' என்ற வெற்றிக் கனியை அந்த 23 ஆண்டுகளில் தம் கண்களாலேயே கண்டு, தம் கைகளாலேயே பறித்து, அதைப் பொக்கிஷமான ஒரு பரிசாக நமக்கு அளித்துச் சென்றார்கள் நம் சமுதாயக் காவலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். இந்த அரிய முயற்சியில் மூழ்கி நின்ற களப்பணிகளில் அண்ணல் அவர்கள் அடைந்த இன்னல்களை அவர்களே பின்வருமாறு கூறுகின்றார்கள்:

"அல்லாஹ்வுக்காக வேறு எவரும் பயமுறுத்தப்படாத அளவுக்கு நான் பயமுறுத்தப்பட்டேன்! அல்லாஹ்வுக்காக வேறு எவரும் துன்புறுத்தப்படாத அளவுக்கு நான் துன்புறுத்தப்பட்டேன்! இந்த உலகில் வேறு எந்த உயிர்ப்பிராணியும் தின்ன விரும்பாத, 'பிலால்' தனது அக்குளில் மறைத்து வைத்திருந்த உணவைக்கொண்டு முப்பது நாட்கள் தொடர்ச்சியாய்க் கழிந்திருக்கின்றன!" (07) 

இவ்வாறு தம் வாழ்வாதாரங்களை நமக்காகவே சுருக்கிக்கொண்டவராக, ஏழ்மையில் தூய்மையும் எளிமையில் இனிமையும் கண்டவராக, தியாகத் தலைவர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு இடரும் அல்லாஹ்வின் இத்தூய மார்க்கத்தை வளரச் செய்ததே தவிர, ஒருபோதும் அதைத் தளரச் செய்யவேயில்லை! 

வான்மறையை ஏந்தி வந்த வண்ண ஒளியாக, தேன் சுரக்கும் திருமறையாகவே வாழ்ந்து காட்டிய திருத்தூதராக, உள்ளங்களையே  ஊடுருவிச் சென்று தன் தோழமையால் தொட்டு வந்தவராக, உண்மையின் உணர்வலைகளை உசுப்பி எழுப்பியவராக, அறிவின் செறிவையே அடையாளம் கண்டவராக, அரிய குணங்களின் நிறைகுடமாய் நிமிர்ந்து நின்றவராக, ஆழ்ந்த ஞானத்தின் வெளிப்பாடாக ஒளிவீசி வந்தவராக, இனிய பண்புகளின் முழுமையானவராக, தன் இறுதி மூச்சுவரை தனது உம்மத்துகளைப் பற்றியே அக்கறையில் ஆழ்ந்திருந்தவராக, ஒரு கட்டுக் கோப்பான மாபெரும் சமுதாயத்தையே உருவாக்கிய மகத்தான சரித்திரத்தின் தலை நாயகராக, இவ்வாறான வேறு எந்த மனிதரோடும் ஒப்பிடமுடியாத இத்தகைய சத்திய சீலராக வாழ்ந்து காட்டிய, சாந்த நபியின் தனிப்பெரும் ஒப்பற்ற தியாகங்களைப் பற்றி எல்லாம்,

சற்றே 'நம் வாழ்வின், இரவின் இருள்களிலும் தனிமையின் வெறுமைகளிலும் பயணங்களின் ஓட்டங்களிலும் காத்திருப்புகளின் கண நேரங்களிலும் வசதிகளின் உச்சங்களிலும் கேளிக்கைகளின் கொண்டாட்டங்களிலும் கொஞ்சமாவது அல்லது ஒருநாளின் சில மணித்துளியிலாவது நாம் சிந்தனைக்குக் கொண்டுவந்து அவர்களின் 'அழகிய முன்மாதிரி' யை ஆராய்ந்து பார்த்து இருக்கின்றோமா? அல்லது ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் 10 முறையாவது அவர்கள் மீது அன்புடன் 'ஸலவாத்' சொல்லியாவது நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா என்பதையும் சற்றே உணர்ந்து நாள்தோறும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டியது இன்றைய சூழலும் இன்னும் இறுதிக் காலம் வரையிலும் அது ஒரு கட்டாயமும் நம் கடமையுமாகும்!

"நீங்கள் உண்மையாகவே உங்களைப் படைத்த அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால், என்னை முழுமையாகப் பின்பற்றுங்கள். அப்படியானால்தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான்" (08) 

என்று நமக்கு அறிவுறுத்துமாறு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்), 'அகிலத்தின் அருட்கொடையாகிய' தன் தூதரின் மூலம் பிரகடனப் படுத்துகின்றான். அவ்வாறு அழகிய முன்மாதிரியாக பின்பற்றக் கூடிய எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இறைத் தூதரின் அபூர்வமான குணங்களுக்கும் அற்புதமான நன்னடத்தைகளுக்கும் அழகிய சாட்சியங்களாக சரித்திரத்தை அலங்கரிக்கின்றன.

உலகில் தோன்றிய அத்தனைத் தலைவர்களும் மதவாதிகளும் தங்களைப் பின்பற்றியவர்களை 'தொண்டர்கள்' என்றும் 'சீடர்கள்' என்றும் பெயரிட்டு அழைத்தபோது, மானமிகு தூதர் (ஸல்) அவர்கள் மட்டுமே அவர்களுக்குச் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்து, சமத்துவம் வழங்கி சகோதர வாஞ்சையுடன் 'தோழர்கள்' என அழைத்தார்கள். ஆண்டான், அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் நம்மில் கிடையாது என 'தோழமையுடன்' முழங்கினார்கள். இன்றைய கம்யூனிஸ்டுகள் "தோழரே" என்ற, பேச்சுக்கு மட்டும் பிரயோகிக்கும் அந்த வார்த்தையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி தன்மான வாழ்வுக்கு இலக்கணம் வகுத்து, அதை  நடைமுறையில் அமுலாக்கம் செய்தவர் இறைவனின் தூதாய் வந்த நம் இனிய நபிகள்'தாம்!

எனது சகோதரர் ஹுஸைன் (ரலி) எங்களின் தந்தை அலீய் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களிடம் நானிலம் போற்றிடும் நாயகம் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுடன் நடந்து கொள்ளும் முறை யாது?  என்று வினவியபோது, அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:

ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எப்போதும் புன்சிரிப்போடும் நற்குணத்தோடும் எளிமையான சுபாவத்தோடும் இருப்பார்கள். கடுகடுத்தவர்களாகவோ இறுகிய மனம் படைத்தவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. கூச்சலிடுதல், கெட்ட செயல் புரிதல், அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடித்தல், அடுத்தவர்களை வரம்புமீறிப் புகழ்தல், மனம் நோகும்படி கிண்டல் செய்தல், கஞ்சத்தனம் போன்ற எந்த வித இழிவான குணங்களும் அவர்களிடம் இருந்ததே இல்லை. அவர்களுக்கு விருப்பமில்லாத பேச்சுக்களை பிறர் பேசும்போது  அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். வேந்தர் நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை மற்றரொருவர் பெற விரும்பினால் ,அதை அவர் பெறுவதைவிட்டும் நிராசை அடைந்து விட மாட்டார். அதைத் தருவதாக வாய்மை நபி (ஸல்) அவர்கள் வீணான வாக்களிக்கவும் மாட்டார்கள். சண்டையிடுதல், பெருமையடித்தல், வீண் பேச்சுப் பேசுதல் இவற்றை விட்டும் தன்னைத் தடுத்துக் கொள்வார்கள். அதைப் போன்று இத்தீய குணங்களை விட்டும் பிறரையும் நீங்கிக்கொள்ளச் செய்வார்கள். யாரையும் இழிவாகப் பேசமாட்டார்கள். பிறரைப் பற்றிப் புறம்பேச மாட்டார்கள். அடுத்தவர்களின் குறைகளைத் தேடித்திரிய மாட்டார்கள். நன்மை தரும் விஷயங்களைத் தவிர  வேறு எதையும் பேச மாட்டார்கள்!

பேரன்பாளர் பெருமானார் (ஸல்) அவர்கள் பேசினால், அவர்களின் தோழர்கள் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்பது போன்று ஆடாமல் அசையாமல் அமைதியாய் கவனிப்பார்கள். சுவர்க்கத்தின் சொல்லழகர் (ஸல்) ஒன்றை சொல்லிமுடித்து அமைதியான பின்பே தங்களுக்குள் மெதுவாகப் பேசத் துவங்குவர்! சத்தியத் தூதர்(ஸல்) முன் தோழர்கள் யாரும் சண்டையிட்டுக் கொள்ளமாட்டார்கள்! 

மடமை நீக்கிய மாண்பு  நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் யாரும் பேசத்தொடங்கினால், இனிய நபியவர்கள் இடையே குறுக்கிடாமல்,  அவர் முடிக்கும் வரை அங்கே அமைதி காப்பார்கள். முந்தியவர் பேசியதைத் தொடர்ந்து அடுத்தவர் பேசினாலும் அதையும் அமைதியுடன் கவனித்துக் கேட்பார்கள். உரையாடல்களுக்கிடையே தோழர்கள் சிரிப்பை வெளிப் படுத்தினால், நகைச்சுவையை ரசிக்கும் நம் நபிமணியும் சேர்ந்து சிரிப்பார்கள். அவர்கள் ஆச்சர்யப்பட்டால், அவர்களுடன் சேர்ந்து வேந்தர் நபியும் தம் வியப்பை வெளிப்படுத்துவார்கள்!

முற்றிலும் அந்நியர்கள் வந்து அவர்கள் சபையில் பேசும் கடுகடுப்பான வார்த்தைகளையும் இங்கிதமில்லாத கேள்விகளையும் பொறுத்துக் கொள்வார்கள். சமயங்களில் இத்தகைய இங்கிதமற்றவர்களைக்கூட நபித்தோழர்கள் கூட்டிவந்து விடுவார்கள்.அப்போதும்கூட பெருமான் நபியவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். 

தேவை வேண்டி நிற்பவர்களைக் கண்டால், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும்படிக் கூறுவார்கள். எவரும் தம்மை நன்றி தெரிவிக்கும் வகையில் அல்லாமல் அவர்களை அளவுக்கு மீறிப் புகழ்ந்து முகஸ்துதி செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வரம்பு மீறி யாரும் பேசினால் அதைத் தடுப்பார்கள்  அல்லது எழுந்து விடுவார்கள்' என்று ஒரு சித்திரம் வடித்ததைப் போல் நம் முத்திரைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அண்ணலின் இதயக்கனியாகிய அன்புப் பேரன் அழகின் அரசன் ஹஸன் இப்னு அலீய் (ரலி) அவர்கள் உரைத்தார்கள். (09)

அந்த அன்பும் மென்மையும் கனிவும் கண்ணியமும் ஊக்கமும் உத்வேகமும் பொறுமையும் நிலைகுலையாத உறுதியும் வலிமையும் எளிமையும் அல்லாஹ்வின் அருள்மீது அளவு கடந்த நம்பிக்கையும் கொண்ட அபூர்வமான அந்த மாமனிதரைத் தவிர  வேறு எந்த  மனிதன் மீதும்  அந்த வானம் இதுவரைக்கும் இறங்கிவந்து நிழலிட்டதில்லை!  இந்த பூமியும் இதுவரைத் தன் வழிமீது விழிகளைத் திறந்து விரிப்பாக்கி வைக்கவுமில்லை! அத்தனை கோடி மனிதர்களில் இருந்தெல்லாம் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமனிதர்! கருணையின் திறவுகோல்! சுவனத்தின் வழிகாட்டி! சத்தியத்தின் சான்று! அல்லாஹ்வின் மகிழ்வு! நம் ஆனந்தப் பெருவாழ்வின் ஆதார சுருதி! தரணி எல்லாம் போற்றிடும் எம் தங்கத் தலைவர்! இந்த உடம்பிலே ஒட்டி இருக்கும் உயிரென்ன? இந்த உயிரை விட மேலான வேறு ஏதாவது ஒன்று இருக்குமாயின் அதையும்விட நமக்கு மேலானவர்!

நிலவு போன்ற வட்ட முகமும், மென்மை தவழும் மென்னகைசிரிப்பும், அகலமான விரிந்த நெற்றியும், இரவின் இருளிலும் பிரகாசிக்கும் சௌந்தர்யமும், தலையின் மீது கறுப்புத் தலைப்பாகையும், காதுமடல் வரைத் தொங்கும் சுருட்டைமுடியும், கண்களா அவை காந்தங்களா என வியக்க வைக்கும் ஈர்ப்பு விழிகளும், அன்பில் இழைத்த மென்மைக் கன்னங்களும், கருவில்லைப்போல் நீண்ட இமைகளும், புன்னகை வாசம் பொழுதெல்லாம் வீசும் இதழ்களும், என்றுமே நிலைத்திருக்கும் அந்தக் கருணையின் வடிவமானவரை இப்போதே  காணக் கண்கள் தேடுகின்றன! 

அது சாத்தியமில்லை! எனினும், 'அண்ணல் நபியின் அழகிய முன்மாதிரி' நம் கண்முன்னே அற்புத வரலாறாக அவர்களின் ஒவ்வொரு அசைவுகளோடும் உயிரோடு நிற்கிறது! அந்தப் பன்முகத்திறன் கொண்ட பண்பாளர் நடந்து காட்டிய வழித் தடங்களின் சுவடுகளை நோக்கி நாம் நடக்கத் துவங்கி விட்டால், நபிமொழி ஒவ்வொன்றையும் நம் மனத்தினில் ஆழமாகப் பதித்துக் கொண்டால், அவற்றை நடைமுறைப்படுத்தி வாழத் துவங்கி விட்டால், நிச்சயமாக, மறுமையில் அந்த மாண்பாளர் நபியின் தோழமையை மகிழ்ச்சியோடு நாம் பெறலாம்!

"நம்முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவர்களுக்கு நாம் இவ்வேத நூலை உரிமைப் படுத்துகின்றோம் (10) 

என்ற தன் அன்புநேசராகிய அண்ணலாருக்கு அளவுகடந்த அருளாளன் அல்லாஹ் (ஜல்) அருள்மறை வசனத்தை இவ்வாறு அருளியபோது;

"இந்த மாநிலத்தின் முத்துக்களாகிய மக்களே, நற்செய்தி பெறுங்கள்! நீங்கள்தான் இந்த ஒட்டுமொத்த உலகத்தின் உன்னத பிரஜைகள்! முதன்முதலில் சுவர்க்கம் புகும் கூட்டத்தினர் நீங்களாகவே இருப்பீர்கள்!  ஓரிறைவன் என்ற தத்துவத்தில் உறுதியாய் நில்லுங்கள். திருக்குர்ஆனை உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்க் கொள்ளுங்கள். என் வழிமுறைகளையும்  நெறிமுறைகளையும் வழுவாது பின்பற்றுங்கள். இன்ஷா அல்லாஹ், சுலபமாகச் சுவர்க்கம் புகுவீர்கள்" என்றார்கள் அமைதி நயமெங்கும் அழகுபடப் பொங்கும் அண்ணல் நபி (ஸல்)  அவர்கள்.

மேலும் 'எனக்குப் பிறகு நீங்கள் துன்பங்களையும் தொல்லைகளையும் அனுபவிக்க நேரலாம். உங்களைவிட உவப்பானவர்களாக மற்றவர்கள் கருதப்படலாம். எனினும், என்னை சுவர்க்கத்தின் நீரோடை அருகே சந்திக்கும்வரை பொறுமை காத்திடுங்கள்' என்றார்கள். 

சுவர்க்கத்தின் நீரோடை (அல்கவ்ஸர்): 

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுடன் இருந்தபோது, திடீரென உறங்கிவிட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின் சிரித்தவர்களாக, தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், "யா ரசூலல்லாஹ்! தாங்கள் சிரிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டோம். 

அதற்கவர்கள், 'சற்றுமுன் எனக்கு அத்தியாயம் ஒன்று அருளப்பட்டது' என்று தொடர்ந்து எங்களுக்கு அதை ஓதிக்காட்டினார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

   إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ  فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ   إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

(நபியே, நிச்சயமாக, உமக்கு 'அல்கவ்ஸரை' வழங்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத்  தொழுது பலிப்பிராணியும் அறுத்து 'குர்பானி' கொடுப்பீராக! நிச்சயமாக, உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்!) (11)

பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அல்கவ்ஸர்' என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்' என்று பதிலளித்தோம்.


'அது ஒரு சுவர்க்க நதி! என் இறைவன் மறுமைநாளில் அதைத் தருவதாக எனக்கு வாக்களித்துள்ளான்! அதன் மகிழ்ச்சியினால்தான் நான் சிரித்தேன். அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன.  அது ஒரு நீர்த்தடாகம்! மறுமை நாளில் எனது உம்மத்தினர் தண்ணீர் அருந்துவதற்காக, அதை நோக்கி வருவர். அதன் குவளைகள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்றவை! 

அப்போது அவர்களில் ஓர் அடியார் நீர் அருந்தவிடாமல் தடுக்கப்படுவார். உடனே நான், 'யா அல்லாஹ்! அவர் என் உம்மத்துகளில் ஒருவரல்லவா?' என்பேன். அதற்கு, அனைத்தும் அறிந்தவனாகிய அல்லாஹ் (ஜல்) 'உமது சமுதாயம் உமக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கி விட்டதை எல்லாம் நீர் அறிய மாட்டீர்!' என்று கூறுவான். (12)

அடக்கி ஆளும் அரசாங்கத்தின் அதிபதியாகிய வல்லமை நிறைந்த அல்லாஹ் (ஜல்) வின் வரவை எதிர் நோக்கி எல்லோரும் நிற்பது மட்டும் 500 ஆண்டுகள் போலான அந்த மகத்தான நீதித்திருநாளின் நெருக்கடியில்! பெரும்பெரும் நபிமார்களும் இறைநேசர்களும் தங்களின் முடிவு என்னவாகுமோ என்று தவித்துக்கொண்டும் அந்தப் பெரும் அமளிதுமளிகளில் அங்குமிங்கும் தத்தளித்துத் தடுமாறியும் திரியும் சூழ்நிலையில்! ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாக்களைப் பற்றியே பரிதவித்து நிற்கும் வேளையில்! 

அந்த ஒரே 'ஓர் ஒளிபொருந்திய மனிதர்' மட்டும் 'தம் சமுதாய மக்களை'ப் பற்றிய கழிவிரக்கத்துடன் கவலைப்பட்டுக் காத்துநிற்கும் காட்சியை, அந்த அறிவெனும் சுடர் தாரகையை, அமைதியின் தனி ஜோதியை அங்கே நாம் காணலாம்!

பிரம்மாண்டமான அத்தனை மனிதக் கூட்டங்களுக்கும் மத்தியில், தொழுகைக்கு முன்னர்    'உலூ' எனும் அங்க சுத்தி செய்துகொண்ட காரணத்தால்,  தனியாக ஒளிவீசும் முகங்களை வைத்தே தன் உம்மத்துகளில் ஒவ்வொரு முஸ்லிமையும் சேயைக்கண்ட தாயைப்போல அடையாளம் கண்டு அழைக்கும் பேரன்பின் பிறப்பிடமாய்ப் பிறந்து வந்த எங்கள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே நிற்பதைப்  பார்க்கலாம்!

தாகத்தில் தவித்துத் தன் தலைவனை நோக்கி ஓடிவரும் தன் உம்மத்தின் ஒவ்வொரு முஃமினையும் ஒரு தாய் போல அழைத்து, தாகம் தணித்து, ஆறுதல் அளித்து, அவனுக்கு மன்னிப்பும் வழங்குமாறு மாண்பாளன் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டு, நல்லவர்களின் நந்தவனத்திற்குப் பரிந்துரையும் செய்யும் பண்பாளர் எங்கள் பெருமானார்(ஸல்) அவர்கள், விண்மீன்களுக்கு இடையே ஒரு வெண்ணிலவைப் போல அங்கே சுடர்விட்டுத் தெரிவதை நாம் காணலாம்!

ஆம்! அது ஓர் உன்னத சந்திப்பு...பொங்கிப் பிரவாகம் எடுத்து வரும் தடாகத்தின் நீர்க்கரையில்..பாலை விட வெண்மையான பளிங்கு வண்ண நிறத்தில் ஓடிவரும் ... தேனைவிட இனிமையான தெள்ளிய நீர்ச்சுவையில்... நட்சத்திரங்கள் போன்று மின்னும் தண்ணீர்க் குவளைகள் அருகில்... அந்த சலசலத்து ஓடும் அமுத நதிக்கரையில்... கஸ்தூரியைவிட நறுமணம் வீசிவரும் வசீகர வேளையில்.... அதே மாறாத இனிய மென்புன்னகையுடன் நமக்காகவே காத்திருக்கும் ...மகிமையும் மாட்சிமையும் நிறைந்த மங்காப் புகழ்பெற்ற நமது தங்கத்தலைவரின் பறந்து விரிந்து நிற்கும் நேசச் சிறகின் நிழலினில்… அவர்களை அன்புடன் நேசிக்கும் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்.... இன்ஷா அல்லாஹ்!

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
பரிபூரணமான இந்த அழைப்பின் இரட்சகனாகிய அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! எங்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு 'வஸீலா' என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு 'புகழுக்குரிய இடத்தில்' அவர்களை எழுப்புவாயாக!

(இந்தப் பிரார்த்தனையை எவர் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைத்து விடுகின்றது). (13) 

 o o o 0 o o o 

(01) அல்குர்ஆன் 83:22
(02) அல்குர்ஆன் 43:68
(03) புஹாரி 6571: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
(04) புஹாரி 5999: உமர் ஃபாரூக் (ரலி)
(05) அல்குர்ஆன் 56:35
(06) ரஸூலே அஹ்மத் பக்கம் 152: அபுல்கலாம் ஆஸாத்
(07) ஷமாயில் திர்மிதீ 376: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(08) அல்குர்ஆன் 3:31
(09) ஷமாயில் திர்மிதீ 350: ஹஸன் (ரலி)
(10) அல்குர்ஆன் 35:32
(11) அல்குர்ஆன் 108:1
(12) முஸ்லிம் 670: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(13) புஹாரி 614: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இக்பால் M.ஸாலிஹ்

23 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Iqbal M. Saleh,

A rhetoric narrations and an excellent collection of events in the time of Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam and Sahabaas Ralillahu Anhum. Thanks a lot for sharing with us.

We came to know about few events from your writings which were unknown before to our knowledge.

May Allah reward you for this writing to our community. Jazzakallah Khairan.

Similar to Prophet Muhammad Sallallahu Alaihiwasallam and noble Sahabas Ralillahu Anhum and good muslims, if we are in God Consciousness in each and every moment and emulate the model of excellence and follow our AnNabi Sallallahu Alaihiwasallam, then there is an assurance of excellent life here and hearafter inshaAllah.

Thanks and best regards,B. Ahamed Ameen from Dubai.

http://www.dubaibuyer.blogspot.com


ZAKIR HUSSAIN said...

Dear Iqbal,
நீ கற்ற கல்வியை வைத்து மிகப்பெரிய ஆக்கத்தை கொடுத்திருக்கிறாய். இறைவன் உனக்கு எல்லா நன்மைகளையும் தர து ஆ செய்கிறோம்.

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் அவர்களுக்கு,

மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் !

வழக்கமாக வியாழன் மட்டுமே இந்தப்பகம் வரும் எனக்கு முதல் வேலையாக உங்களின் கட்டுரையை வாசித்த பின்னர் தான் அடுத்து அந்த வாரம் முழுவதும் வெளியான கட்டுரைகளையும் கருத்துக்களையும் படிப்பேன்.

இனிமையான வியாழன் பொழுது நபிமணியும் நகைச்சுவையும் தொடரை வாசிக்கும்போது கிடைத்த சந்தோஷம்... இன்றோடு நிறைவுறுகிறது என்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், இதனை சற்றே இளைப்பாற எடுத்துக் கொண்ட கால அவகாசமாக எடுத்துக் கொண்டு இனி மற்றுமொரு அழகு தமிழில் வசந்தங்கள் கூட்டும் கட்டுரைகள் தொடராக தாருங்கள் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன் சகோதரரே.

உங்கள் சகோதரி.

Unknown said...

சகோதரர் இக்பால் அவர்களுக்கு, ஜஸாகல்லாஹு கைர், தொடர்ந்து தங்கள் பணிகள் நடக்க அல்லாஹ் துணை செய்வானாகவும், ஆமீன்....!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிறைவுறுகிறது என்பதை காணும்போது ரமலானில் இறுதியில் "சங்கைமிக்க ரமலான் மாதமே உன் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக" என்று உருக்ககமாக சொல்வது போல் உள்ளது.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் . அன்புத் தம்பி!

படிப்பவர்களை பரவசமூட்டியதுடன் பல நேரங்களில் கண்களைப் பனிக்க வைத்த இந்தத் தொடர் நிறைவுர்ராலும் இந்த இக்பால் தமிழ் இன்னும் பல வரலாற்று வரிகளோடு வேறொரு தொடராக தொடங்க இருக்கும் நிம்மதியில் இந்த த் தொடருக்கு விடை கொடுக்கிறோம்.

தம்பி இக்பாலை ஒரு அருமையான எழுத்தாளர்களில் ஒருவராக தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அடையாளம் காட்டிய பெரும் பேறு பெற்றது இந்தத் தொடர்.

விருந்தின் நிறைவில் இனிப்புக் கொடுத்து நிறைவு செய்வதுபோல் நிறைவுப்பகுதி இனிமையிலும் இனிமை.

இறைவனிடம் தங்களின் நலத்துக்கு வேண்டியவனாக வஸ்ஸலாம்.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் அவர்களுக்கு,

மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் !

ஒவ்வொரு வரியிலும் உள்ளம் நெகிழ கண்கள் நனைகின்றன.

என்கள் இறைவனே!
உன்னுடைய இறுதித் தூதரின் இனிய பன்புகளைப் பற்றி அழகிய தமிழில் அறியத்தந்த எங்கள் அன்புச் சகோதரரின் செயலைப் பொருந்திக்கொள்வாயாக! மேலும் இதன் பலா பலனை இம்மையிலும் மறுமையிலும் நிறைவாக வழங்குவாயாக!
மேலும், எனகள் அனைவரையும் பொருந்திக்கொள்வாயாக!
நல்லோர்களின் கூட்டத்திலே என்களை ஒன்றிணைப்பாயாக!
தம் உம்மத்துகளுடை மீட்சியையே ஓயாமல் சிந்தித்த அந்த உத்தம நபியோடு எங்களையும் ஜன்னத்துல் பிர்தௌஸில் ஒன்று சேர்ப்பாயாக!

sabeer.abushahruk said...

நபிமணியும் நகைச்சுவையும்:

கற்கண்டு மொழியில்
சொற்கொண்டு வடித்த
பூச்செண்டு.

கண்மணி நபி(ஸல்)யின்
தன்மைகளைச் சொல்லி
புனிதப்பட்டு நிற்கிறது
பைந்தமிழ்

புன்னகை மன்னராம்
பொன்னெழில் மேனியர்
என் நபி(ஸல்) நினைந்து
புல்லரிக்கின்றது உடல்
புத்துணர்வாகின்றது உயிர்

கூரான உளிகொண்டு
சிலை வடிப்பர்
கூரான மொழிகொண்ட
கலை படைப்பு

காவியங்களும் காப்பியங்களும்
தமிழுக்கு மகுடமெனில்
அதில்
நபிமணியும் நகைச்சுவையும்
வைரமென ஜொலிக்கும்.

வாழ்த்துகள், நண்பா!

(ஏப்ரலில் அடுத்த ப்ரொஜெக்ட்டைப்பற்றி கலந்துரையாட ஏதுவாய், ஆசிரியர் எங்களை தமது உம்ரா பயணத்திற்குப் பிறகு துபையில் சந்திக்கவிருக்கிறார்(ன்).

இக்பாலின் உம்ரா கபூலாகவும் அவன் பயணன் பாதுகாப்பாக அமையவும் து ஆச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்ததாக எந்த தலைப்பில் எழுதச்சொல்லாம்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

முதல் அத்தியாயம் தொட்டு நிறைவு வரை ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வாறு செதுக்குனீர்கள் என்பதற்கு நானும் சாட்சி என்று சொல்வதில் உளம் மகிழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்!

தாங்கள் செய்யவிருக்கும் உம்ரா கபூலாகவும் பயணம் பாதுகாப்பாகவும் அமைய துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

ஒவ்வொரு அத்தியாயமும் கவிதையாக இருந்ததை உணர்வுபூர்வமாக உணர்ந்த எங்களுக்கு, நிறைவில் கவிக் காக்கா படைத்திருக்கும் கவிதைக் கருத்து ஒரு virtual பரிசு !

Yasir said...

அல்லாஹூ அக்பர், மாஷா அல்லாஹ்..கண்ணியத்திற்க்குரிய இக்பால் காக்கா அவர்களின் இத்தொடர் நாங்கள் அறிந்திராத பலவிசயங்களை அழகுத்தமிழில் அறியத்தந்தது...ஒவ்வொரு தொடரும் கண்ணீரை மட்டுமல்ல சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்ற சிந்தனையை உள்ளத்தில் ஊடுறுவி பாய்ச்சியது...மேன்மைமிக்க நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் முறைகளை படித்தது மனதை பண்படுத்தியது......இதன் முழுக்கூலியையும் அல்லாஹ் உங்களுக்கு தருவான்....உங்கள் உம்ராவை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக அமீன்...உங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல நலத்தையும் கொடுத்து உங்களின் எழுத்து மூலம் எங்கள் மன நலங்களை பேணிக்கொள்ளும் வாய்ப்பை மீண்டும் தந்தருள்வானாக ஆமீன்

Yasir said...

கவிக்காக்காவின் “ கற்கண்டு” கவிதை பொருத்தமான பரிசு..நன்றி கவிக்காக்கா

//அடுத்ததாக எந்த தலைப்பில் எழுதச்சொல்லாம்// கவிக்காக்கா
உலக ஆசையில் முழ்கி போய்க் கிடக்கும்,மறுமையைப் பற்றி எண்ணாமல் இம்மைப் பற்றியே சிந்தித்து கறைப்படிந்து கிடக்கும் மனமும்,மூளையும் புத்துயுர் பெற்று,புதுப்பொலிவுடன் திகழும் வகையில் செய்யும் ஒரு ஆக்கம் தேவை இக்கனம்..இதைப்பற்றி எழுதலாம்

Adirai pasanga😎 said...

அதிரை நிருபரில் இரு தொடர்களுக்கு நான் பெரும்பாலும் பின்னூட்டமிடத்தவறியதில்லை. ஒன்று சகோதரர் அலாவுதீன் அவர்களின் அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து. இரண்டு தங்களின் இந்த நபிமணியும் நகைச்சுவையும் தொடர். இவை இரண்டுமே நம் வாழ்விற்க்கு அடிப்படைத்தேவையானவைகள். அறியாமைக்காலத்தினை வென்று அறிவுச்சுடர் பிரகாசிக்க காரணமானவற்றைப்பற்றி சொன்னதால் இவை இரண்டும் மதிக்கத்தக்க தொடராக நான் காண்கிறேன். தொடரட்டும் உங்கள் நல் எழுத்துப் பணி.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
Dear brother Sabeer, whenever I read the episodes, I sincerely thank Allah and think about your yeomen service to AN by inspiring, instigating and motivating our brother Iqbal to write this work. Jazakkallah Khairan.
The talent of our brother Iqbal is known just to a small inner circle of few people who know him personally. But you made his talent to be exposed to the entire Islamic Tamil World.
Iqbal, I think this is your master piece and I hope this may be your lifetime achievement. Whatever you write after this, we would be expecting better than this and we as a common reader would like to compare your future works with this master piece.
In my opinion you have set up an indelible mark on your wisdom and knowledge of Islam, your flawless, lucid and poetic style of writing. And beyond doubt it will be remembered by all the people who come across your work.
May Allah bless you.
Wassalam.
N.A.Shahul Hameed

عبد الرحيم بن جميل said...

அஸ்ஸலாமு அலைக்கும்!!

நமது ரஸூலுல்லாஹ் நம் மீது வைத்திருக்கும் அன்பின் உச்சத்தை இக்கட்டுரை உணர்த்துகிறது! பிடித்த வாசகங்களை பின்னூட்டத்தில் இடலாம் என நினைத்தேன்,என்னால் எதனையும் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை..அத்தனையும் அருமை,உடலும் உள்ளமும் சிலிர்த்துவிட்டது...நம் நாயகத்தை அழகழகாக வர்ணித்துள்ளீர்...மிக்க நன்றி சின்னவாப்பா!!

KALAM SHAICK ABDUL KADER said...

கணினி என்னும்
காணியில்
மணிமணியாய்
மாநபி(ஸல்)வாழ்வியல்
விதைகளைக்
கவிதைகளாய்த் தூவினீர்கள்!

எழுதும் பணியென்னும்
உழுதலில் எங்கட்கு
நல்லமல்களும்; ஸலவாத்தும்
நல்ல மகசூல்களாய்
மொத்தமாய் இருதயப்
பத்தாயத்தில் நிரம்பின!

வரலாறு கூறும்
வள்ளல் நபி(ஸல்) வாழ்வா?
வள்ளல் நபி(ஸல்) கூறும்
வாழ்வியல் வரலாறா?
பின்னிப் பிணைந்ததை
எண்ணிப் பார்த்தேன்;
இன்னும் வராதா
மின்னும் புன்னகை
மன்னரின் காவியம்;
“சின்னவரின்” எழுத்தோவியம்!

KALAM SHAICK ABDUL KADER said...

(”சின்னவர்”= அப்துற்றஹீமின் சின்ன வாப்பா)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நபிகளாரின் அன்பின் பண்புகளைப் பற்றி தாய் மொழித்தமிழில் தொடராய் வியாழன் விருந்தாய் தந்தமைக்கு மிக்க நன்றி.

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

உம்ரா பயணம் இறைவனுக்கு உகந்ததாகவும், உடல் நலம் உங்களுக்கு உகந்ததாகவும் இருக்க துஆ!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இக்பால் காக்கா, நீங்கள் மிகப்பெரும் ஒரு மார்க்க பணியை செய்துள்ளீர்கள், அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரிவானாக. நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக..

பிரம்மாண்டமான அத்தனை மனிதக் கூட்டங்களுக்கும் மத்தியில், தொழுகைக்கு முன்னர் 'உலூ' எனும் அங்க சுத்தி செய்துகொண்ட காரணத்தால், தனியாக ஒளிவீசும் முகங்களை வைத்தே தன் உம்மத்துகளில் ஒவ்வொரு முஸ்லிமையும் சேயைக்கண்ட தாயைப்போல அடையாளம் கண்டு அழைக்கும் பேரன்பின் பிறப்பிடமாய்ப் பிறந்து வந்த எங்கள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே நிற்பதைப் பார்க்கலாம்!

தாகத்தில் தவித்துத் தன் தலைவனை நோக்கி ஓடிவரும் தன் உம்மத்தின் ஒவ்வொரு முஃமினையும் ஒரு தாய் போல அழைத்து, தாகம் தணித்து, ஆறுதல் அளித்து, அவனுக்கு மன்னிப்பும் வழங்குமாறு மாண்பாளன் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டு, நல்லவர்களின் நந்தவனத்திற்குப் பரிந்துரையும் செய்யும் பண்பாளர் எங்கள் பெருமானார்(ஸல்) அவர்கள், விண்மீன்களுக்கு இடையே ஒரு வெண்ணிலவைப் போல அங்கே சுடர்விட்டுத் தெரிவதை நாம் காணலாம்!

ஆம்! அது ஓர் உன்னத சந்திப்பு...பொங்கிப் பிரவாகம் எடுத்து வரும் தடாகத்தின் நீர்க்கரையில்..பாலை விட வெண்மையான பளிங்கு வண்ண நிறத்தில் ஓடிவரும் ... தேனைவிட இனிமையான தெள்ளிய நீர்ச்சுவையில்... நட்சத்திரங்கள் போன்று மின்னும் தண்ணீர்க் குவளைகள் அருகில்... அந்த சலசலத்து ஓடும் அமுத நதிக்கரையில்... கஸ்தூரியைவிட நறுமணம் வீசிவரும் வசீகர வேளையில்.... அதே மாறாத இனிய மென்புன்னகையுடன் நமக்காகவே காத்திருக்கும் ...மகிமையும் மாட்சிமையும் நிறைந்த மங்காப் புகழ்பெற்ற நமது தங்கத்தலைவரின் பறந்து விரிந்து நிற்கும் நேசச் சிறகின் நிழலினில்… அவர்களை அன்புடன் நேசிக்கும் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்.... இன்ஷா அல்லாஹ்!


இதை திரும்ப திரும்ப படிக்கும் போதும் கற்பனை செய்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நபிகளாருடன் ஒன்றாக இருக்கும் அந்த சந்தர்பத்திர்க்காக, நாம் எல்லோரும் இவ்வுலகில் எல்லாப் பாவமான காரியங்களில் இருந்து பரிபூரணமாக விலகி, நன்மையின் பக்கம் மட்டுமே இருக்க முயற்சிப்போமாக. அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக.

பரிபூரணமான இந்த அழைப்பின் இரட்சகனாகிய அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! எங்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு 'வஸீலா' என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு 'புகழுக்குரிய இடத்தில்' அவர்களை எழுப்புவாயாக!

அலாவுதீன்.S. said...

சகோ. இக்பால் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ஈருலகத்தலைவர் நபி(ஸல்) அவர்களின் பண்புகளை அழகிய தமிழில் எளிமையாக வழங்கிய தங்களுக்கு வாழ்த்துகள்! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

ஆரம்பம் முதல் இறுதி வரை கண்மனி நாயகம் முஹம்மத் நபி(ஸல்) அவர்களைப்பற்றிய எண்ணிலடங்கா பண்புகளைப் பற்றி எண்ணிப்பார்த்திராத அளவில் அழகிய தமிழில் மனதிற்கு மகிழ்வைத் தரும் வகையிலும், படித்து கண்ணீர் வரும் வகையிலும் நபி(ஸல்) அவர்களின் அருகில் இருந்த உணர்வையும், நாம் அருகில் இருந்திருக்கக் கூடாதா? என்ற ஏக்கத்தையும் அதிகம் நினைக்க வைத்த தொடர்.

மறுமையில்; நபி(ஸல்) அவர்களின் கையால் கவ்ஸர் தடாகத்தின் நீர் பெற்று அருந்தக் கூடிய பாக்கியத்தையும, நபி(ஸல்)அவர்களின் சிபாரிசை பெறும் பாக்கியத்தையும் நம் (மூமின்கள்) அனைவருக்கும் வல்ல அல்லாஹ் தந்தருள் புரியட்டும்.

பரிபூரணமான இந்த அழைப்பின் இரட்சகனாகிய அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! எங்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு 'வஸீலா' என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு 'புகழுக்குரிய இடத்தில்' அவர்களை எழுப்புவாயாக!

Iqbal M. Salih said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

'நபிமணியும் நகைச்சுவையும்' நான் எழுதப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது! இதுபோல் இணையத்தில் எழுதி எல்லாம் எனக்குப் பழக்கமுமில்லை! அதற்கான அவகாசமும் இருந்ததில்லை!

சென்னை விமான நிலையத்தில் அன்று அதிகாலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் முக்கால் மணி நேரம் தாமதம் என்ற அறிவிப்பைக் கேட்டதிலிருந்தே நான் ரொம்ப 'அப்செட் மூட்'ல் இருந்தேன்.
காரணமும் இருந்தது! மிகமுக்கியமான 'கார்ப்பொரேட் மீட்டிங்' அது. அன்று மாலை 'சாக்ரமெண்டோ ஹயாத் ரீஜன்ஸி ஈவென்ட் 'ல் நான் இருந்தே ஆக வேண்டும் என்பது முந்திய மாதமே தீர்மானிக்கப்பட்டிருந்தது!

துபைக்கு தாமதமாகப் போய் இறங்கியதில் 'கனெக்டிங் ஃபிளைட்' போய் விட்டதால், ஏர்லைன்ஸில் மிகுந்த வருத்தம் தெரிவித்து, ஏர்போர்ட் ஹோட்டல்'லேயே ரூம் தந்தார்கள். நண்பன் சபீருக்கு ஃபோன் செய்ததும் தாமதமின்றி வந்து விட்டான். கூடவே, அ.நி.யின் நெறியாளர் அபுஇப்ராஹீமும் துணைக்கு வந்திருந்தார்.

சபீரின் வீட்டுக்குப் போனதும் 'மேலாண் இயக்குநருக்கு' சூழ்நிலையை விளக்கி உடனே ஈமெயில் அனுப்பியாகிவிட்டது. அபுஇப்ராஹீம் ஃபோனிலிருந்து 'அக்கௌண்ட்ஸ் மேனேஜர்'க்கு மெஸ்சேஜ்' கூட வைத்தாகிவிட்டது. அதன்பிறகும் அதே யோசனையில் இருந்த என்னை சிரிக்க வைக்கும் முயற்சியில் இருந்தான் சபீர்.உரையாடல் பலவிஷயங்களையும் தொட்டு இறுதியில் எங்களின் 'ஃபேவரைட் சப்ஜெக்ட்' ஆன நகைச்சுவை'யில் வந்து நின்றது. அப்போது 'நபிமணி (ஸல்) அவர்கள் எத்தகைய ஒரு நகைச்சுவை உணர்வு' உள்ளவர்கள் என்பதை சில ஹதீஸ்களில் இருந்து நான் சொல்லிக் காட்டியவுடனே, அதை ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டு 'டெடே டேய். இதெல்லாம் எழுதித் தாடா! உனக்கு டைம் இல்லாட்டி ஃபோன் லேயாவது சொல்லு. நீ சொல்லச் சொல்ல நான் எழுதிக்கிறேன்' என்று விடாக்கொண்டனாக நின்று என்னைப் பிடித்துக் கொண்டான் சபீர். அதையே ஆமோதித்து நின்ற நெறியாளர் அபுஇப்ராஹீமும் உடனே தலைப்புகளை சொல்லிப்பார்க்கத் துவங்கிவிட்டார்! அப்போது விழுந்த விதைதான் சில வாரங்களில் துளிர் விட்ட செடியாய் எழுந்து நின்று வாரந்தோறும் செம்மல் நபியின் சிரிப்பு மலர்களைப் பூக்கத்துவங்கிய 'நபிமணியும் நகைச்சுவையும்'.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் ரப்பில் ஆலமீன் தான் நாடுவதை நிறைவேற்றிக்கொள்ள, தான் நாடியவர்களை கருவியாக்கிக் கொள்கின்றான்!

'அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹ்!

அண்ணன் N.A .S. சொல்லியிருப்பதைபோல், இத்தனைப் பணிகளுக்கிடையே நான் எழுதுவதில் எனக்கு ஒருவகையில் 'ஓர் உந்துசக்தி' யாகவே இருந்தான் என் பால்யசிநேகிதனும் எனக்கு மாமனும் ஆகிய சபீர் அபுஷாருக்!

நிற்க, ஒவ்வொரு வாரமும் நான் எழுதிஅனுப்பிவிட்டு நானே மாற்றச் சொல்வதும் கடைசி நிமிடத்தில் கூட திருத்திவிட்டு வேறு எழுதி சேர்க்கச் சொல்வதும், தொடர்ந்தாலும் அதிலெல்லாம் கொஞ்சம்கூட சலித்து அலுத்துக் கொள்ளாமல் மிகுந்த பொறுமையையும் அடக்கத்தையும் சகிப்புத் தன்மையையும் வெளிப்படுத்திய அன்புத் தம்பி அபுஇப்ராஹீம் அவர்களை மனம் நிறைந்து பாராட்டுகின்றேன். ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்!

பின்னூட்டத்தில் பாராட்டிய, எனக்காக துஆவும் செய்த சகோதரி, சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நிச்சயமாக, உங்கள் அனைவருக்காகவும் மேலும், திட்டம் போட்டு ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் 'என் உன்னதமான சமுதாயத்தின் எழுச்சிக்காகவும்' நான் உம்ராவில் துஆச் செய்து வருவேன், இன்ஷா அல்லாஹ்!

Yasir said...

//இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் ரப்பில் ஆலமீன் தான் நாடுவதை நிறைவேற்றிக்கொள்ள, தான் நாடியவர்களை கருவியாக்கிக் கொள்கின்றான்!/// 1000% true....seen many examples...May Allah accept your UMRAH...pray for us too Kakka

Unknown said...

என் அருமை நண்பன் இக்பாலிடம் இத்தனை திறமைகளா
இவ்வவளவு காலம் எங்கே ஒளிந்திருந்தது இந்த வார்த்தை ஜாலங்கள்.

அவன் நிறைவுத்தொடரே இப்படி இருந்ததென்றால், அதற்க்கு முன்புள்ள
தொடர்கள் எப்படி மனதை தொட்டிருக்கும் .

நண்பன் சபீர் சொல்லியே நான் இதைப்படித்ததினால் , சபீருக்கு ஒரு சொட்டு
இக்பாலுக்கு ரெண்டு சொட்டு.

அன்புடன்,
காதர்,
அபு ஆசிப்,
ரியாத், சவுதி அரேபியா.

Iqbal M. Salih said...

வெல்கம் அப்துல்காதர். நலமாக இருக்கின்றாயா?

அறிஞர் அன்சாரி காக்கா, கவியன்பர் சகோ.கலாம் அவர்கள், அலாவுதீன் மேலும் நண்பன் ஜாகிர், பாசத்திற்குரிய தம்பிகள் யாசிர், ஜஃபர் ஸாதிக்,அத்துடன் சபீரின் கவிதைகளையும் நேரம் கிடைக்கும்போது 'பங்களிப்பாளர்' சென்று பார்த்துக்கொள்! அத்தோடு நின்றுவிடாமல் நீயும் எழுத முயற்சிசெய்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு