Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – தொடர் - 11 12

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2013 | , ,


தொடர் : பதினொன்று
இஸ்லாமியப் பொருளாதாரத்தின் தனிச் சிறப்புகள்.

அண்மையில் கீழ்க்கண்ட  வரிகளைப் படிக்க நேர்ந்தது. இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளின் அடித்தளம் இந்த வரிகளில் பொதிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.  

Money Says:- "Earn Me, Forget Everything".

Time Says:- "Follow Me, Forget Everything"..

Future Says:- "Struggle For Me, Forget Everything"...

ALLAH Says:- "Remember Me, I'll Give You Everything"....

இஸ்லாமிய பொருளாதார நடவடிக்கைகளை துவக்கிவைப்பது இறைவன் மீதும் அவனது படைப்பினங்களின் மீதும், மறுமையின் மீதும் , இறைவன் அனுப்பிய  தூதர்கள் மற்றும் அவர்களின் மூலம் அனுப்பப்பட்ட வேதங்கள் மீதும் மாறா நம்பிக்கை கொள்வது என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த நம்பிக்கைகள் தான் இறைவனுடன் மனிதனுக்கு  ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மாற்ற முடியாத அம்சங்கள் என்பதையும் கண்டோம். இதையே ஒவ்வொரு முஸ்லிமும்  லா இலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ் உரத்த குரலில் ஓங்கி ஒலித்து அனுதினமும் அறிவிக்கிறோம். இந்த முழக்கம் முழங்கப் படும்போதெல்லாம்  ஐந்து நேரத்தொழுகையில் இதற்கு சாட்சியும் சான்றும் பகர்கிறோம். இதுவே இஸ்லாத்தின் முதல் முழக்கம் ; ஈமான் என்கிற இறை நம்பிக்கையின் அடிப்படை. 

இந்த இறை நம்பிக்கை என்கிற வாக்குறுதியின் சுனைகளிலேயே வாழ்வின் எல்லா நடைமுறைகளும் ஊற்றாகப் பிறக்கின்றன.  நாம் ஒப்புக் கொண்ட இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களும் அண்ணல்  நபிகள் ( ஸல்) அவர்களின் வாழ்வு தந்த போதனைகளும் காட்டும் வழியில் நடைபோடுவதே நமது வாழ்வு முறைகள்.  

அல்லாஹ் தனது அருள் மறையில் கூறுகிறான் :

“இறைத் தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனைவிட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனைவிட்டு விலகி இருங்கள்” (அத்தியாயம் : 59: 10). 

இதுதான் இஸ்லாம் அமைத்துத் தந்த  சமுதாய மரத்தின் ஆணிவேர்.  இந்த சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதனின் நம்பிக்கைகள், நடவடிக்கைகள் , அன்றாட வாழ்வில் கடைப் பிடிக்கும் சட்டதிட்டங்கள் , நெறிமுறைகள்  அல்லாஹ் ஒருவன் அவன் வகுத்த வழியே பின்பற்றப் படவேண்டிய வழி என்பதாகவே அமையும்; அமையவேண்டும். நல்லவை எவை கேட்டவை எவை என்று அந்த இறைவன் வகுத்துத் தந்த வழியை மட்டுமே மேற்கொள்வதே இந்த சமுதாயத்தின் சிறப்பியல்பு. நமது சொந்த இலாபத்துக்காகவோ அல்லது நமது அறிவுக்கு மட்டும் எட்டக் கூடிய முடிவுகளை எடுப்பதோ இந்த சமுதாயத்தில் அனுமதிக்கப்படாதவை. எதைச்செய்தாலும் இதற்கு இறைவனின் ஒப்புதல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மேற்கொள்வதே இந்த சமுதாயத்தின் அடிப்படை. யாரை நம்பி நம்முடைய வாழ்வை ஒப்படைத்து இருக்கிறோமோ அந்த ஏக இறைவனும் அவனின் தூதரும் சொன்னவை நமது ஈருலக வாழ்வையும் ஏற்றம் செய்யத் தக்கவையாகும். வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மனிதன் தன் உயிரைப் பணயம் வைக்கும் பொருள் தேடும் முறைகளுக்கும் இந்தக் கருத்துக்கள் பொருந்தும். 

உலக மார்க்கங்களில் இஸ்லாம் காட்டுகிற பொருளாதார வழிகள் மட்டுமே இஸ்லாத்தின் கொள்கைகளின் ரீதியாகவும் அதன் ஷரியத் எனும் சட்டத்துடனும் தொடர்பு கொண்டவை என்று அறிமுக அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். ஆன்மீகம் என்கிற இறைவணக்கம்,  வழிபாடு ஆகியவைகளுக்கும் மனிதனின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது இஸ்லாம். உதாரணமாக பத்து கோடி ரூபாய் பணம் இருந்தால் பத்து இடங்களில் வீட்டுமனை வாங்கிப்போடு- பலருக்கு வட்டிக்குக் கொடுத்து பணத்தைப் பெருக்கு  என்று மற்ற மார்க்கங்கள் வழி காட்டும்; பேராசை பிடித்த மனமும் சொல்லும்; ஆனால் இஸ்லாமோ பணம் படைத்தவர்கள் பத்து பேர்களுடைய பசியைப் போக்கும் வழியில் செலவிடத் தூண்டும். அந்த நன்மையின் கணக்கு இறைவனிடம் வரவு வைக்கப் படுமென்று எடுத்துக் கூறும். 

இஸ்லாமியக் கொள்கைகளுடன் இஸ்லாமியப் பொருளாதாரம் தொடர்புடையது இணைப்பு ஏற்படுத்தி இருப்பது என்பதற்கு இறைவனே இப்படிச்  சான்று தருகிறான். 

“மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! இன்னும் , அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப் படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும் . மேலும்,  இறுதியில் சேரவேண்டியது உம் இறைவனிடமேயாகும்”. ( அத்தியாயம்  53: 38-39). 

தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் இறைவனால் கண்காணிக்கப் படுகிறது என்று ஒவ்வொரு வினாடியும் நினைத்து நம்பி அடியெடுத்து வைக்க வேண்டியது இஸ்லாம் தரும் எச்சரிக்கை . இது ஒவ்வொரு இஸ்லாமியனும் கடைப் படிக்க வேண்டிய கடப்பாடு. 

இஸ்லாம் என்பதை ஒரு வாழ்க்கைப் பாதை என்று அறுதியிடும்  ஆய்வாளர்கள் இஸ்லாத்தின் கொள்கைகள் யாவையுமே  நடைமுறைக்கு ஏற்றதாய் , கடைப்பிடிக்க இலகுவானதாய் , மனித இயல்புகளுக்கு ஏற்றபடியே இறைவன் கட்டளைகளாக வழங்கி இருப்பதாகக் கூறுகின்றனர். அந்த முறையில் இறைவனின் கட்டளைகளுக்கு இணங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இறைவனை வணங்கும் வழிபாட்டை ஒத்ததாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது நமது பொருளாதார நடவடிக்கைகள் இறைவன் கட்டளை இட்ட ஹராம் ஹலாளைப் பேணி மேற் கொள்ளப் படும்போது  “இபாதத்” என்கிற உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறது. இறைவணக்கத்தையும் பொருளாதார நடவடிக்கைகளையும் இணைத்து வைத்திருக்கிற பெருமை இஸ்லாத்துக்கு உண்டு ; இஸ்லாத்துக்கே உண்டு. சாதாரணமாக அன்றாட உபயோகத்தில் உள்ள பொருள்களை , சாதனங்களை அல்லது பணிகளை ( Utilization of material,  commodities and services) வகைப் படுத்தி அவற்றைப் பயன்படுத்துவதில் மனித இனம் செய்யும் தேர்ச்சி இறைவனின் பொருத்தத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்று சொல்லும் சிறப்புக்கு உரியது இஸ்லாம். இந்தப் பொருத்தம் மனித இனத்தின் மறுமைக்கே மார்க் போட்டு   வழிகாட்டும் என்பதே இஸ்லாம். இஸ்லாமியப் பொருளாதாரத்துக்கு உள்ள இத்தகைய சிறப்புத் தன்மை வேறெந்த சித்தாந்ததுக்கும் இல்லை. மற்றவை எல்லாம் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகவே சொல்கின்றன.  

சில மதங்களைப் பின்பற்றுவோர் பாவசெயல்களில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபட  நேரிட்டால் அந்தப் பாவங்களில் இருந்து தங்களை புனிதப் படுத்திக் கொள்ள ஏதாவது நதி அல்லது குளத்தில் குளித்தால் மட்டும் போதும் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இஸ்லாம்தான் மனிதன் தான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் இறைஞ்சி தொழுது து ஆச செய்து மன்னிப்புக் கோருவதுடன் தனது செல்வத்தில் ஒரு பகுதியை  செலவு செய்து தனது பாவத்துக்கு ஏற்றபடி இத்தனை ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டுமென்றோ,  இவ்வளவு மதிப்புள்ள உணவு தானியங்களை வறியவர்களுக்கு வழங்க வேண்டுமென்றோ , இத்தனை அடிமைகளை விடுதலை செய்ய வேண்டுமென்றோ வரையறுத்துக் கூறுகிறது.

உண்டியலில் பணம் போட்டு விட்டால் ஊரைக் கொள்ளையடிக்கலாம் என்று இஸ்லாம் தடை இல்லாச் சான்றிதழ் வழங்கி வழிவகுத்துக் கொடுக்கவில்லை. சதவீதக் கணக்கு வைத்து சாமிக்குப் படையல் போட்டால் சகலமும் சம்மதம் என்கிற சாத்திரம் இஸ்லாத்தில் இல்லை. அடிக்கிற கொள்ளையில் ஆண்டவனுக்கும் ஒரு  பங்குவைத்துக் கொடுக்கும் பழக்கம் இஸ்லாத்தில் இல்லை. 

இந்ததொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் கீழ்க்கண்ட வரிகளைக் குறிப்பிட்டு இருந்தேன். அவற்றை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். 

"சராசரி மனிதனை ஆசைதான் வாழ்வை நோக்கி இழுத்துச் செல்கிறது." என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த ஆசை,  மனிதனின் எண்ணத்தில் உருவாவதாகும். எண்ணத்தின் தூய்மை மனிதனின் செயல்களில் தூய்மையையும் இறைவனின் பொருத்தத்தையும் கொடுக்கும். 

எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன என்று நபிமொழி கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் எதை எண்ணி செயல்களைத் தொடங்குகிறானோ அதுவே அவனிடம் வந்தடையும். இறைவனுக்காகவும் இறைவனின் தூதருடைய வார்த்தைக்காகவும் யார் ஹிஜ்ரத் செய்கிறார்களோ அவர்களது ஹிஜ்ரத் அவ்வாறே அமையும் என்றும் யார் உலக இலாபங்களுக்காக அல்லது தான் விரும்பிய பெண்ணை மணம் முடிப்பதற்காக இருப்பிடம் துறந்து வெளியேறுகிறாரோ அவரது ஹிஜரத் அதற்கேற்றபடி அதற்காகவே அமையும்  என்றும்  நவிலப்பட்ட  நபி மொழி புகாரி , முஸ்லிமில் காணக்கிடைக்கிறது.   

ஏழைகளுக்கு உணவளிப்பது , இல்லாதோர்க்கு உதவுவது, ஏழைக் குமர்களை திருமணம் முடித்துக் கொடுப்பது, கல்விக்கு உதவுவது, நோயாளிகளைச் சென்று காண்பது, அனாதைகளை அரவணைப்பது  , ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது,   எடை மற்றும் நிறுவைகளில் நேர்மையைக் கடைப்பிடிப்பது, உணவுப் பொருட்களை பதுக்காமல் இருப்பது  போன்ற இன்னோரன்ன நல்ல எண்ணங்களால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக செல்வம் செலவாகலாம். ஆனால் இவை போன்ற  யாவுமே  இறைவனுடைய மாறாத அன்பு என்கிற செலவாகாத  செல்வத்தை  சேர்த்துத் தருபவையாகும். 

அல் கஸல் அத்தியாயத்தில் (28 : 76- 78) ல் இறைவன் சுட்டிக்காட்டும் காரூன் உடைய வரலாறு சமுதாயத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை. செல்வந்தனாக வாழ்ந்த காரூனை அவனது சமூகத்தார் எச்சரித்தார்கள். “நீ பூரித்துவிடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அல்லாஹ் உனக்கு வழங்கி இருக்கிற செல்வத்தின்  மூலம் மறுமையில் உனது வீட்டைப் பெற்றுக் கொள்ள அக்கறை கொள்; அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்திருப்பது போல் நீயும் உபகாரம் செய் . மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சிக்காதே! அராஜகம் விளைவிப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறப்பட்டதை அவன் அலட்சியம் செய்ததன் விளைவாக வசனம் (28 : 81-82)ல் கூறப்பட்டிருப்பது போல் “நாம் அவனையும் அவனுடைய வீட்டையும் பூமியில் புதைத்துவிட்டோம்!" என்றும் “அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான்              நாடுவோர்க்கு வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகிறான்; மேலும் தான் நடுவோர்க்கு அளவோடு கொடுக்கிறான்” என்கிற இறைவனின் வார்த்தைகளை நாம் செவியுற்று எண்ணம் மற்றும்   செயல்களில் தூய்மையான இறைவனின் கட்டளைகளை பேணி நடப்பதே பெரும்கடமை. 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை ; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது திருவள்ளுவர் வாக்கு.  எண்ணத்தில் தூய்மையும் இயக்கத்தில் இறைவனின் பொருத்தமும்  இல்லாவிட்டால் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் பொருளாலும் பயன் இல்லை என்பதே இஸ்லாத்தின் வாக்கும் வழியும்.  
இன்ஷா அல்லாஹ் தொடரும்
இபுராஹீன் அன்சாரி

12 Responses So Far:

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா..


///அண்மையில் கீழ்க்கண்ட வரிகளைப் படிக்க நேர்ந்தது. இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளின் அடித்தளம் இந்த வரிகளில் பொதிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.

Money Says:- "Earn Me, Forget Everything".

Time Says:- "Follow Me, Forget Everything"..

Future Says:- "Struggle For Me, Forget Everything"...

ALLAH Says:- "Remember Me, I'll Give You Everything"....///

இதில் அல்லாஹ் சொன்னதை மட்டுமே இறைத்தூதரும் அவர்தம் தோழரும் அறிந்தும் தெளிந்தும் இருந்ததால் அதனை முன்னிலைப்படுத்தி செயல்படுத்தியதால் அக்காலத்தில் ஜகாத் வாங்குவதற்கு ஆள் இல்லை. அந்த அளவுக்கு இஸ்லாமிய பொருளாதாரம் செழிக்கத்துவங்கியது

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

Special features of Islamic Economics, this episode is strong foundational thoughts, because it stresses the true and genuine intentions are the base for noble actions. God Almighty has given orders and model of Prophet Muhammed Sallallahu Alaihiwasallam are available to humankind to emulate and follow to resolve all life issues and simplify the life.

//ALLAH Says:- "Remember Me, I'll Give You Everything"....//

The above spiritual thought is aligning with my poetic lines in "The Edges"Make your being at limitless edge

Keep Almighty in depth of soul…Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

http://www.dubaibuyer.blogspot.com


அலாவுதீன்.S. said...

சகோ.இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

////எண்ணத்தில் தூய்மையும் இயக்கத்தில் இறைவனின் பொருத்தமும் இல்லாவிட்டால் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் பொருளாலும் பயன் இல்லை என்பதே இஸ்லாத்தின் வாக்கும் வழியும்.///

இஸ்லாமிய பொருளாதாரத்தைப்பற்றி குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தெளிவான விளக்கங்கள். வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாத்தில் பொருளாதாரம் பற்றிய தெளிவான தொகுப்பு!
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

sabeer.abushahruk said...

பல்வேறு பொருளாதாரக் குறிப்புகள், அவற்றில் பல மதங்களின் நிலைபாடு, இஸ்லாத்தின் அஸ்திப்வாரம் என்று அக்குவேறு ஆணி வேறாக சொல்லியாயிற்று.

இவற்றை ஏதோவொரு இடத்தில் வைத்து முடிச்சுப் போடப்போவதற்கான முஸ்தீபு இந்த அத்தியாயம் என்று விளங்குகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காகா.

KALAM SHAICK ABDUL KADER said...

If you thought that the only way you can make money is by inheritance or sheer hard work, think again. Here is a thought that can change the way you think and make you attract money in abundance - give and you shall receive. And what’s more - this is not a fly-by-night scheme that works for only a week or two. In fact, you can attract money for the rest of your life by making a few tweaks in your thought process.
Yes, attracting money is as simple as that.

What you give is what you get. This belief has been inculcated in us, with regard to various aspects of life. When it comes to attracting money, what you give to the universe will be delivered back unto you, multifold. When you hold back, the universe holds back from you. if you are in need of money, don’t think twice about helping a fellow needy being. Instead, give what you have, and give it with love, knowing that you shall be rewarded. As surprising as this sounds, you will find that you will receive back what you gave and much more. It may not be the same person who rewards you in abundance. But the Universe is watching you and will repay you in abundance - somewhere, somehow. The important thing to remember is that when you give, do not give only because the universe promises to give you back in abundance; but open your heart, give out of generosity, love and concern. Be convinced in your heart and in your mind that you have not lost anything by giving.

Meditation is important during this time. When you meditate, imagine money coming to you in various forms. Believe this is really happening. When you change your thought process, the entire universe works along with you. The Universe will shift and make the necessary changes to bring the money to you - because you believe.
Let us light a candle of hope that dispels all the negativeness from our lives.
Hope & Success!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விறுவிறுவென்று படர்கிறது ! இதயக் குடிலில் இருக்கை தேடி !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

Yasir said...

மாஷா அல்லாஹ்...ஒரு விசயத்தைக் கூறிவிட்டால் பத்தாது...அதற்க்கான ஆதாரங்களையும் அடுக்கினாலே சொன்ன விசயம் வலுவாக இருக்கும் என்பதற்கேற்ப...பலச் சான்றுகளை கூறி கட்டுரையின் கருவை வலுப்படுத்தி இருக்கின்றீர்கள் மாமா...துவாக்களும் ,வாழ்த்துக்களும்

عبد الرحيم بن جميل said...

அஸ்ஸலாமு அலைக்கும்!ஜஸாக்கல்லாஹ் ஹைர் ஆசிரியர் அவர்களே!

தக்வா வை புதுப்பித்துக் கொள்வதற்க்கு தங்களின் இக்கட்டுரை தூண்டுதலாக இருக்கின்றது.மிக அழகான முறையில் இஸ்லாம் என்ற நமது புனித மார்க்கத்தை மற்ற மதங்களை விட்டும் வேறுபடுத்தி,"உயர்ந்த,சிறந்த மார்க்கம் நமக்கு அல்லாஹ் சுப்ஹானத் தஆலா வழங்கிய இஸ்லாமே! என்று மிகத் தெளிவாக இக்கட்டுரையின் மூலம் கூறியிருக்கிறீர்கள்....மாற்று மதத்தவர்கள் தங்களின் கட்டுரைகளைப் படித்தால்,இன்ஷா அல்லாஹ் நேர்வழி பெறலாம்!

நான் ரசித்தவை:"“நீ பூரித்துவிடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை"

அப்துல்மாலிக் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பொதுவாக வணக்க வழிபாடுகளுக்கு இஸ்லாமிய ரீதியான அனுகுமுறை பெருளாதாரத்திற்கு நாம் கொடுப்பதில்லை, அருமையான பொருளாதார சிந்தனையை இஸ்லாமிய பார்வையில் எத்திவைக்கப்பட்டுள்ளது.

//
“மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! இன்னும் , அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப் படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும் . மேலும், இறுதியில் சேரவேண்டியது உம் இறைவனிடமேயாகும்”. ( அத்தியாயம் 53: 38-39).

தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் இறைவனால் கண்காணிக்கப் படுகிறது என்று ஒவ்வொரு வினாடியும் நினைத்து நம்பி அடியெடுத்து வைக்க வேண்டியது இஸ்லாம் தரும் எச்சரிக்கை . இது ஒவ்வொரு இஸ்லாமியனும் கடைப் படிக்க வேண்டிய கடப்பாடு.
//

இறைவசனத்தை சுட்டிக்காட்டி தந்த விளக்கம் மிக அருமை. நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு தான் இதில் உள்ள ஆழமான அர்த்தம் புரிகிறது.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இ.அன்சாரி காக்காவின் இந்த ஆக்கம் தொடர்ந்து சிந்தனைகளை மேன்மேலும் தந்துதவும்படி விரும்புகிறேன் இன்ஷா அல்லாஹ்

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட தேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுவதால் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத தேவைகள் உருவாகும் பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.

மனோ இச்சையின் அடிப்படையில் வழியைத் தேர்ந்தெடுத்துத் தீர்வு காணும்போது, அது தவறான எதிர் விளைவுகளை உருவாக்கலாம். அந்த எதிர்விளைவுகள் மீண்டும் பல சிக்கல்களை உருவாக்கலாம்.

அல்லாஹ் ஒருவனென்றும், அவனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டு அவ்விருவரின் வழிகளைப் பின்பற்றுவோருடன் தொடர்புடைய இஸ்லாமியப் பொருளாதாரம்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவைகள் மட்டுமே இஸ்லாமியப் பொருளாதாரத்தில் இடம்பெறும். இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகளுக்கு இஸ்லாமியப் பொருளாதாரத்தில் இடமில்லை. எடுத்துக் காட்டாக மது உற்பத்தி செய்தல், அதனை விற்றல் போன்றவை.

தனிமதினத நலன், சமூக நலன் இரண்டும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. தனிமனித நலனுக்கென சமூக நலன் இழக்கப்படுவதை இஸ்லாமியப் பொருளாதாரம் இடம் கொடாது. உதராணமா வட்டி மற்றும் அதன் தொடர்புடைய வியாபாரங்கள் மற்றும் நடைமுறைகள்.

அல்லாஹ் அளித்துள்ள அரிய வளங்களை மனித சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் முறையில் பயன்படுத்துவதே இஸ்லாமியப் பொருளாதாரத்தின் சாரமாகும்.

ALLAH Says:- "Remember Me, I'll Give You Everything"....

மனிதத்தேவைகளை முழுதும் மன நிறைவுடன் கொடுப்பது ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே, அதேபோல் எந்நேரமும் அவன் நினைவில் இருந்தால் மட்டுமே....ஆக எந்நேரமும் ரப்பை நினைவில் கொள்வோம், அவனிடமே நம்தேவைகளை உரிமையுடன் கோருவோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு