Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

2013- 2014 ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை ஒரு –அலசல்! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 04, 2013 | ,



ஏழைக்கும்  எட்டுமா எட்டாவது பட்ஜெட்?

மத்திய நிதியமைச்சர் - வேட்டி கட்டிய தமிழர் பழனியப்பன் சிதம்பரம் அவர்கள் வரும் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பாராளு  மன்றத்தில் சமர்ப்பிக்கும் சடங்கு நிறைவேறியுள்ளது.  இப்போது திரு. சிதம்பரம் அவர்கள் சமர்ப்பித்த பட்ஜெட் அவர் சமர்ப்பிக்கும் எட்டாவது பட்ஜெட் ஆகும் . இதற்குமுன் மொரார்ஜி தேசாய் அவர்கள்தான் எட்டுமுறை பட்ஜெட்டை சமர்ப்பித்து இருந்தார். எட்டாவது பட்ஜெட் என்பதால் “அஷ்டமத்தில் சனி” என்று ஆருடம் சொன்னவர்கள் அனேகம் பேர்.   எட்டு            பட்ஜெட் டுகளை தாக்கல் செய்த மொரார்ஜிக்கு அதுவே கடைசியாக இருந்தது.  அதேபோல் சிதம்பரத்துக்கும் இதுவே கடைசி  பட்ஜெட் ஆக இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுபவர்களும் பலர் இருக்கவே செய்கிறார்கள். 


கடைசியாக 2008ல் அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பிறகு, 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை வாசித்து முடிக்கும் நிலையில், 

‘கலங்காது கண்ட வினைக்கன் துலங்கத்து தூக்காங்கடிந்துசெயல்’ என்ற திருக்குறளைக்  கூறினார். ‘மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலை தடுமாறாமல், தாமதிக்காமல் செய்க’ என்பது  இதன் பொருள்.  அதோடு இந்த முறை, ‘எல்லா பலமும், நீங்கள் விரும்பும் படையும் உங்களுக்குள்தான் இருக்கின்றன. அதை வைத்து உங்கள் எதிர்காலத்தை உருவாக்கிக்  கொள்ளுங்கள்’ என்ற துறவி  விவேகானந்தாவின் கருத்தையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார். ( இப்போது விவேகாந்தர் சீசன்).

பட்ஜெட்டை அலசுகிறேன் என்று சொல்லிவிட்டு ஏதோ உபன்யாசம் செய்கிறேன் என்று படிப்பவர்கள் எண்ணிவிடக்கூடாது. மிகவும் புகழ்ந்து கூறும்படியோ அல்லது மிகவும் தாக்கி அல்லது வருத்தப் பட்டு எழுதும்படியோ இந்த பட்ஜெட்டில் சிறப்பாக எதுவுமில்லை என்பதே பெரும்பான்மையானவர்களின் கருத்து. அதனால்தான் இந்த விமர்சனமும் ஒரு உபன்யாசம் போல் தோன்றுகிறது. ஆயினும் சில சொல்ல வேண்டியவைகள் , நம்ப வேண்டியவைகள், கவனப்படுத்த வேண்டியவைகள் இருப்பதால் எழுதியாக வேண்டி இருக்கிறது. 

விமர்சனத்துக்குள்ளே நுழையும் முன்பாக இன்றைய இந்தியப் பொருளாதாரத்தைப் பிடித்திருக்கிற மூன்று முக்கிய வியாதிகளைப் பற்றி கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். அவை நிதிப் பற்றாகுறை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஆகிய மூன்று வியாதிகளாகும். இவற்றை முறையே ஆங்கிலத்தில் Fiscal Deficit, Current  Account Deficit & Inflation என்று கூறலாம்.  இத்தகைய வியாதிகள் பொருளாதார முன்னேற்றத்தின் தடைக்கற்களாக இருப்பவை. இந்த சூழ்நிலையில் இந்த பட்ஜெட் போடப்பட்டிருப்பது ஒரு கம்பி மேல நடக்கும் வித்தைதான். அதில் விழுந்துவிடாமல்  சிதம்பரம் நடந்து காட்டி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பட்ஜெட்டுக்குப் பிறகு பல அறிவிப்புகள் வரக்கூடும் என்று சூசகமாக சொல்லி இருப்பது இனியும் இவர் விழுவாரா அல்லது எழுவாரா என்பதை மெய்ப்பிக்கும். 

பற்றாக்குறை பட்ஜெட்டுக்கு முக்கிய காரணமாக இருப்பது அரசு தரும் மான்யங்கள். பட்ஜெட்டுக்கு முன்பான பொருளாதார ஆய்வு அறிக்கையில் மான்யங்களின் அளவைக் குறைக்க வேண்டுமென்ற ஒரு கருத்து புல்லின் நுனி போல் தலை  காட்டியது. ஆனால் முழு பட்ஜெட் போடப்படும்போது இந்த முளை விட்ட புல்லின் நுனியை எந்த ஆடோ மேய்ந்துவிட்டது.   

ஏழைகளை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் புதிய வரிகள் இல்லை என்பது ஒரு சிறப்பான அம்சம் ஆனாலும் இதன் பின் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை  மனதில் வைத்து இப்படி செய்து இருக்கலாம். தேர்தலில் வென்ற பிறகு முதுகில் ஏறி சவாரி செய்ய முடியும் என்பதே ஒரு வசதியான வழி முறை. இதுவரை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மட்டுமே பயன் அடைந்துவந்த “பீமா யோஜனா” இன்சூரன்ஸ் திட்டத்தை கை மற்றும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுபவர்கள் மற்றும் தெருக்களில் ஒரு சாக்கைத்தோளில் மாட்டிக்கொண்டு பின்னால் நான்கு நாய்கள் குலைத்துக்கொண்டே வாழ்த்துப்பா பாடி வர காகிதம் பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பொறுக்குவார்களே அவர்களுக்கும் விரிவு படுத்தி இருப்பது  சற்று கவனத்தைக் கவருகிறது. அவர்களுக்கும் ஓட்டு உண்டு. 

மகளிர் மேம்பாட்டுக்காக இதுவரை இல்லாத வகையில் நூறு கோடி ரூபாய் மூலதனத்தில் பொதுத்துறையில் ஒரு தனி வங்கி அமைப்பு ஏற்படுத்தப் படும் என்ற அறிவிப்பு மட்டும்  மகிழத்தக்கதும் பாராட்டத்தக்கதும் ஆகும். அதே போல் மகளிர் பாதுகாப்புக்காக , உரிமைகளுக்காக  “ நிர்பயா நிதி “ என்ற ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில்  ஒரு புது நிதி ஒதுக்கீடு. இதன்மூலம், பெண்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும். இது பெண்களால் வரவேற்கப்படும்  அதே நேரம் பெண்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்தே உள்நோக்கத்தோடு  இவை ஏற்படுத்தப் பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தை தள்ளிவிட இயலாது.    அண்மையில் தேர்தல் வராவிட்டால் இந்த அறிவிப்புகள் கூட வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். 

வெளிநாட்டிலிருந்து வரும்போது கொண்டுவரப்படும் தங்கத்திற்கு ஆண்களுக்கு ரூ. 50,000 மதிப்பு வரையும், பெண்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பு வரையும் சுங்கத் தீர்வை கிடையாது என்பதும் கூட, வாக்கு வங்கியை மனதில் கொண்ட அறிவிப்புதான். ஆனால் இந்த அறிவிப்பு இன்றைய தங்கத்தின் விலைவாசி நிலவரத்தில் யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுத்த மாதிரிதான். வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்களால் இந்த நாட்டுக்கு பலவகையில் பொருளாதார உதவிகள் கிடைக்கின்றன. இங்கிருந்து எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பதிலாக தாங்கள் பல தியாகங்கள் செய்து தேடிய பொருள்களை முதலீடுகளாக இந்த நாட்டுக்குள் கொண்டுவர அரசிடமிருந்து சில  சலுகைகளை மட்டுமே எதிர் நோக்குகிறார்கள். விடுமுறையில் வரும்போது மட்டுமே இங்கு விளையும் உணவுப் பொருள்களையும் குடிநீரையும் பயன்படுத்துகிறார்கள். இப்போது ஏதோ பெரிய சலுகை செய்கிறேன் என்று ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள தங்கம்  கொண்டுவரலாமென்று அறிவித்து இருப்பது நிதியமைச்சருக்கே தங்கம் ஒரு பவுன்  என்ன விலை விற்கிறது – ஒரு நெக்லஸ் செய்வதாக இருந்தால் கூட எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்கிற அடிப்படைத்  தகவல் கூட தெரியவில்லையோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நிதி அமைச்சரின் குடும்பத்தைப் போல் ஒரு பவுன் ஆறாணாவுக்கு விற்றபோது தங்கம் வாங்கி வருபவர்களல்ல இன்றைய என். ஆர். ஐக்கள். தயவு செய்து தங்கத்தின் இன்றைய சந்தை விலையை நிதியமைச்சருக்கு கடகடகட வென்ற கட்டுத்தந்திகள் மூலம் தெரிவித்தால் நலமாக இருக்கும். 

அருகாமையில் இருக்கும் இந்தியாவை விட ஏழை நாடுகள் கூட தங்களது நாட்டின் தேசிய விமான சேவையை (National Carrier) பயன்படுத்துவோருக்குப் போதிய கட்டண சலுகைகள்  தருகிறார்கள். ஆனால் கட்டணமுன் அதிகம், சுரண்டலும் அதிகம், நம்பி பயணம் செய்தால் நடுவழியில் நிற்க நேரிடும் என்கிற நிலை  இந்திய விமான நிறுவனங்களுக்கு ஆண்டாண்டுகளாக சொந்தமாகிப் போன சுரணையற்ற நிலை. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் படும் வேதனைகள் நீங்க இந்த பட்ஜெட்டில் எந்த வழியும் சொல்லப்படவில்லை. கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காகவே இருக்கின்றன.  

வருமானவரியின் உச்சவரம்பு உயர்த்தப்படுமென்று கிரெடிட் கார்டு மற்றும் செல்போன் வைத்து பிச்சை எடுப்பவர்கள் கூட எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு பட்டை நாமம் சாத்தி ஒரு கோவிந்தா  போட்டுவிட்டார் நிதியமைச்சர்.  இதனால் சம்பளம் பெறும் இடத்திலேயே வருமானவரி பிடித்தம் செய்யப்படும் ( Deduction at Source)  பல அரசு ஊழியர்கள் பாதிக்கப் படுவார்கள். இன்றைய விலைவாசியின் உயர்வில் மிச்சப் படும் வருமானம் என்பது மிகவும் குறைவாக இருக்கும். இந்த நிலையில் வருமானவரியின் உச்சவரம்பை அதிகரிக்காமல் இருப்பது அதிர்ச்சியான செய்தி. ஆனாலும் கசப்பு மருந்தை தேன் கலந்து ஊட்டுவதுபோல் இரண்டு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம்வரை வரி கட்டுவோருக்கு Rs. 2000/=  ரூபாய் வரிச்சலுகை அதுகூட வரியை வரவில் வைப்பது என்கிற முறையில் ( Tax Credit ) அளிக்கப்படும் என்பது தேள் கடித்த இடத்தில் விஷத்தை இறக்க ஊசி போடாமல் சுண்ணாம்பு தடவுவது போன்றது. 

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் பெரும் பணக்காரர்கள் (Super Rich ), ரூ.10 கோடிக்கு அதிகமாக வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 10% கூடுதல் வரி (Surcharge ) விதிப்பதன் மூலமும், உயர்குடியினர் பயன்பாட்டுப் பொருள்களுக்கு வரி உயர்வும் பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தருவதாக இருக்குமா என்பது சந்தேகம்தான். பத்து லட்சம் சம்பாதிப்பவனுக்கும், பத்து கோடி சம்பாதிப்பவனுக்கும் வரிவிகிதம் ஒன்றுபோல தோன்றுவது ஒரு முரணாகத் தெரிகிறது. 

ஒருவருடைய பரம்பரை சொத்துக்களை தானமாக வழங்கினால் அதற்கு வரியில்லை என்று அறிவித்து இருப்பது ஒரு சிறப்பம்சமாகவே தென்படுகிறது. ஆனாலும் யாருக்கு தானமாக வழங்க வேண்டுமென்ற வழிகாட்டுதல் வேண்டும். இதனால் பினாமிகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. 50 லட்சத்திற்கு மேல், எந்த ஒரு அசையாச் சொத்தை ஒருவர் விற்பனை செய்தாலும், இனி, 1 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பில், விவசாயம் சார்ந்த விளை நிலங்களுக்கு மட்டும், விதி விலக்கு உண்டு.  இது ஒன்றே விவசாயத்துக்காக மத்திய அரசு செய்த கடப்பாடு. 

தூத்துக்குடி வெளிப்புற துறைமுகம் ரூ.7,500 கோடியில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்தை சூழ்ச்சியால் இழந்து நிற்கும் மக்களுக்கு  மகிழ்ச்சி தந்தாலும், இதனை அரசு - தனியார் பங்கேற்பு (பிபிபி) மூலம் நிறைவேறும் திட்டம் என்கிற அறிவிப்பையும் பார்க்கிற போது ஏனோ கட்டுச்சோற்றுக்குள் எலியையும் கூடவே வைத்துக் கட்டும் கதை நினைவுக்கு வருகிறது.   தனியார்  நிர்ணயிக்கப்போகும் மிகையான கட்டணமும், பயன்பெறப்போகும் "பினாமி'களும் கண்முன்னே தோன்றி அந்த மகிழ்ச்சியில் திகிலை கலக்கிறது. நமதூர் மொழியில் சொன்னால் ஈரக்குலை நடுங்குகிறது. 

கல்விக்கு ஒதுக்கப்படும் ரூ.65,867 கோடியில்  அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்காக ரூ.27,258 கோடியும், தொடர்கல்வித் திட்டத்துக்காக ரூ.3,983 கோடியும் ஒதுக்கப்படுகிறது. இப்படி ஒதுக்கப்படுகிறது என்கிற பட்ஜெட்டின் வார்த்தைகளுக்கு உண்மையில் வேறு அர்த்தம் இருக்குமென்று ஆணித்தரமாக நம்பலாம். கல்விக்கான சேவை வரி 3% இன்னும் ஓராண்டுக்கு மட்டும் தொடரும் என்கிற அறிவிப்பு கல்வி வணிகக் கொள்ளையர் வயிற்றிலேயே பால் வார்க்கும். பெற்றோர்களுக்கு இதனால் பெரும்பயன் வரப்போவது இல்லை. இளைஞர்களுக்காக, 1,000 கோடி ரூபாயில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திறமைகளை மேம்படுத்தும் வகையில், 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, முடிவில், தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்கிற அறிவிப்பு நலம் பயக்குமென்று நம்ப வேண்டிய அறிவிப்பு. செயல்படுவதைப் பொறுத்து இதை விமர்சிக்கலாம். 

பொதுமருத்துவத்தின் முக்கியத்துவம் கருதி, ரூ.37,300 கோடி (24.3% அதிகம்) ஒதுக்கினாலும், இதில் மருத்துவக் கல்வி, பயிற்சிக்காக ரூ.4,727 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மருத்துவர்களை அதிகம் உருவாக்க வேண்டிய நிலையில், அதற்குக் குறைவாக நிதிஒதுக்கி இருக்கிறாரே, என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. செட்டிநாடு மெடிகல் மிஷின், எஸ். ஆர்.எம். மீனாட்சி, அப்பல்லோ, மலர் , எஸ்கார்ட் நிறுவனங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் முதல் போட்டு கொள்ளையடிக்க வேறு என்னதான் வழி ?

புதிதாக நெல் உற்பத்தி செய்வதன்  மூலம்   அசாம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரிசி உற்பத்தி மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது  அரிசி விளைவித்துக் கொண்டிருக்கிற , ஆனால் தண்ணீர் முதலிய காரணங்களால்    உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிற  தமிழகம் உட்பட்ட மாநிலங்களில்  ("ஒரிஜினல் கிரீன் ரெவல்யூஷன் ஸ்டேட்') விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடிக்காக ரூ.500 கோடி ஒதுக்கி இருக்கிறார். அதாவது காவிரி டெல்டாவில் இருக்கும் விவசாயிகளை காவிரி நீரை எதிர்பார்க்காமல் மாற்றுப் பயிருக்கு மாறிவிடுங்கள் என்று மறைமுகமாக சொல்வதாகவே இது அமைகிறது. அதாவது அரிசி விளைவிக்க புதிய மாநிலங்கள் எற்கனவே அரிசி விளைவிக்கும் மாநிலங்களுக்கு மாற்றுப் பயிர் கோஷம். இனி நமது  விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக  கஞ்சா செடி பயிரிடலாமா ? என்றுதான் கேட்கவேண்டும். ‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போரடித்த நாடு’ என்றும், ‘சோழ நாடு சோறுடைத்து’ என்றும் பேசிய பெருமைகள் இனி பழங்கதையாகிவிடும். நெல் விளைவித்த பெருமை மிக்க மாநிலங்களுக்கு தண்ணீரைப் பெற்றுத்தர அரசியல் நந்திகளுக்கு விவசாயத்தை பலி கொடுக்கச் சொல்லும்  அரசை என்ன சொல்ல?

அதே நேரம் விவியாசாயிகளின் கடன்  வசதிகளை மேம்படுத்த ரூ.  7000 கோடிகளை ஒதுக்கி இருப்பது ஒரு நல்ல அம்சம்தான். ஒதுக்கீடு மட்டுமல்ல பங்கீடும்  நாம் முக்கியம் கவனம் செலுத்த வேண்டியதாகும். இடைத்தரகர்களை ஒழித்து நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசியாமல் பார்ப்பது அரசு நிர்வாகங்களின் தலையாயப்   பணி.  விவசாய நாட்டில் விவசாயிகள் தற்கொலை! விபரம் தெரிந்தவர்கள் இதைப் பார்க்கிறார்கள் வேடிக்கை! 

நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கிகளுக்கு இன்னும் அதிக நிதி கொடுத்து அவைகளை ஊக்கப்படுத்தும் முறையும் அறிவிக்கப் பட்டு இருக்கிறது. இதை வரவேற்கிற நேரத்தில் வங்கிப் பணிகள் செயல்பட முடியாத குக்கிராமங்களில் அஞ்சல் அலுவலகங்களை ஓரளவுக்கேனும் வங்கிகளின் சேவைகளை செய்யும் வண்ணம் மாற்றி அமைப்பது கிராமியப் பொருளாதாரம் வளர உதவும் என்பது சில வல்லுனர்களின் கருத்து.  இதற்காக ஒரு சிந்தனையும் கொஞ்சம்  நிதியும் ஒதுக்கி இருந்தால் நலமாக இருந்து இருக்கும். நாட்டின் அனைத்து வங்கிகளிலும் ATM வசதிகள் கட்டாயமாக செய்து தரப்படுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசதியை சில குறிப்பிட்ட ஊர்களில் அல்லது பகுதிகளில் பெண்களுக்கு மட்டும் என்றும்  அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.   

இராணுவத்துக்கு வழக்கம் போல் கூடுதலாக நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்பது கடந்த ஆண்டை விட 14% அதிகம். ஹெலிகாப்டர்கள் எல்லாம் இத்தாலியில் இருந்து வாங்கிய விவகாரத்தில் பாதுகாப்புத்துறை  சிக்கி இருக்கும்போது ஒரு வருடம் இராணுவத்துக்குரிய நிதி  ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டு நதிகளை  இணைப்பதற்கு அந்தப் பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினால் தலை போய்விடாது. இராணுவத்துக்கு ஒதுக்கும் பணத்தில் பெரும்பகுதி பல புதிய பணக்காரர்களை உருவாக்குகிறது என்பது தலை நகரில் ஊர் அறிந்த ரகசியம். 

அன்னிய நிறுவன முதலீடு (எப்.ஐ.ஐ.) அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) என்றால் என்ன என்பதற்கு இந்த பட்ஜெட் வரையறை செய்திருக்கிறது. பத்து விழுக்காட்டுக்கும் அதிகமான முதலீடு இருந்தால் அதை அன்னிய நேரடி முதலீடு என்று சொல்ல வேண்டும் என்கிறார் திரு. சிதம்பரம். ஆனால்,  இந்த வரையறை, இவர்கள் இடும் முதலீட்டுக்குத்தான். பெரும்  சலுகைகளை இந்த அறிவிப்பு  இன்னும்  வரையறுக்கவில்லை.  இதைப் பற்றி எந்த திட்டமும் கட்டுப்பாடும் சொல்லப்படவில்லை. ஒருவேளை, தட்டச்சு செய்யும்போது விட்டுப் போய்விட்டதோ?

புதிய முதலீடுகளை ஊக்குவிக்க வரிச்சலுகைகள் , அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்கு SEBI  என்கிற பங்குச் சந்தை சட்டங்கள் திருத்தப்படும் என்பவை அந்நிய  முதலீட்டை ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள். உண்மையில் அந்நியப் பணம் வந்தால் மகிழ்ச்சியே. அதற்கு மாறாக ஊழலில் திரட்டிய பணம் முதலீட்டு முகமூடி போட்டு நாட்டின் உள்ளே வந்தால் பரி நரியான கதையாகிவிடும்.  

மேலும் சிறு குறு  தொழில்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் படுமென்றும் இவைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பான வரிச்சலுகைகள் வழங்கப் படுமென்றும் சிதம்பரம் சொல்லி இருக்கிறார். தொழில்கள் செய்வதற்குத் தேவையான மின்சாரம் பற்றி வாய் திறக்கவில்லை. தொழிற்சாலை என்று போர்டு மாட்டி மின்சாரம் இல்லாவிட்டால் இவர்கள் தரும் சிறப்புச் சலுகைகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? 

நாடெங்கும் 294 பேரூர்களில் பண்பலை வானொலி நிலையங்கள்( FM Radio Stations) அமைப்பதற்கு தனியார் துறைக்கு அனுமதி அளிக்கப் படுமென்ற அறிவிப்பு வந்துள்ளது. இதனால் என்ன பெரும் பயன்  வந்துவிடப் போகிறது என்று புரியவில்லை. ஊடகவழி தில்லுமுல்லுகள்,  இருப்பதை இல்லை என்பது , ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்கும் ஊடக போதையையே இது அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பண்பலை நிலையங்கள் அமைப்பதற்கு பதிலாக பண்பாட்டு அலை பரவும் முயற்சியில் நாடெங்கும்  ஓட்டு மொத்தமாக மதுக்கடைகளை ஒழித்தால் உண்மையிலேயே பண்பாட்டுக்கு உதவியதாக இருந்து இருக்கும்.   

உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக 55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. தவிரவும் தனியார் முதலீடுகளை உள்கட்டமைப்பு வசதிக்காக  47% வரை பெறவும் திட்டமிட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இது வளர்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும். அதே நேரம் உள் கட்டமைப்பு வசதிகள் என்பதை முதலில் ஆரம்ப சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதில் ஆரம்பிக்க வேண்டும். மக்கள் அதிகம் நடமாடும் புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளும் பயன் படுத்தும் வகையில் முதலில் கழிப்பபிடங்களைக் கட்டுவதற்கு செயல் திட்டம் வேண்டும்.  எத்தனை பட்ஜெட் போட்டாலும் எத்தனை கோடிகளைக் கொட்டினாலும் பட்டுக்கோட்டை போன்ற பெருநகர பேருந்து நிலையங்களில்  பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு அருகில் திறந்த வெளியில் வரிசையாக நின்று கொண்டே சிறு நீர் கழிக்கும் முறைக்கு ஒரு சீர் திருத்தம் வராமல் கட்டமைப்பு வசதிகள்- தனியார் முதலீடு – கோடிகள் ஒதுக்கீடு என்பதெல்லாம் சொரிந்தால் கிடைக்கக் கூடிய சுகம். சொரியச்சொரிய புண் ஆகிப் போகும் ரணம்.  

இவை எல்லாம் போக, புகையிலைப் பொருட்கள், கார்களின் உற்பத்தி வரி உயர்வு, செல் போன்களில் ரூபாய் 2000/= க்கு மேல் விலை உள்ளவைகளின் உற்பத்திவரி ஏற்றம் ஆகியவை அவற்றின்  விலைகளை உயர்த்தும். குளிர் பதனம் செய்யப்பட்டுள்ள உணவகங்களில் ஆறு சதவீதம் சேவை வரி இனி புதிதாக விதிக்கப்படும். இத்தகைய உணவகங்களில் ஏற்கனவே இரண்டு இட்லி ரூபாய் 25/= க்கு விற்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவை வரியும் சேர்ந்தால் இந்த உணவகங்களில் இட்லி சாப்பிடுபவன் சட்னியாகிவிடுவான். 

பட்ஜெட் என்பது ஒரு வருடத்தின் வரவுக்கும் செலவுக்கும் உள்ள கணக்கு மட்டுமே. இந்தக் கணக்கில் அரசும் நிதியமைச்சரும் மூல வளங்களை எப்படி பங்குவைத்து எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகிக்கப் போகிறார்கள் என்ற அறிவுப்புகளின் தொகுப்பே . அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் சில வானவேடிக்கைகள் காட்டப் பட்டு இருக்கின்றன. தேர்தலை மனதில் வைத்து சில பட்டாசுகளையும்   ப.சிதம்பரம் வெடித்து இருக்கிறார். ஆனால் பணவீக்கம், விலைவாசி உயர்வு, எண்ணை விலையில் எதிர்பாராத நள்ளிரவு உயர்வுகள், வேலை  வாய்ப்பு, புதிய முதலீடுகள், நாட்டின் சொத்துக்களின் சூறையாடலை ஒழிக்கும் திட்டங்கள், விவசாயத்தின் மறுமலர்ச்சி, தொழில்களை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றிற்கு உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. பட்ஜெட் டை பார்த்த உடன் மக்கள் மனம் மகிழும்படியான அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து சபாஷ் ! பேஷ்! பேஷ் ! ரெம்ப நன்னா இருக்கு என்று சொல்லும்படியாகவோ ஒன்றுமில்லை. 

இந்த பட்ஜெட்டில் நதிநீர் இணைப்புக்கு ஒதுக்கீடு இருந்திருந்தால், மின்சாரத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு இருந்திருந்தால், ரியல் எஸ்டேட்டில் வளைத்துப் போடப்பட்ட விதவை நிலங்களுக்கு வாழ்வளித்து இருந்தால், மேம்படுத்தப் பட்ட  சுகாதார வசதிகளுக்கான அறிவிப்புகள் இருந்திருந்தால்,     வேலை வாய்ப்புக்களுக்கு வழிவகைகள் செய்யப்பட்டிருந்தால், அரசு கடன் வாங்கும் அளவுக்குப் போகாமல்  கையாண்டிருந்தால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும்போது அவர்களுக்கு உதவ ஒரு நல்ல திட்டம் அறிவித்து இருந்தால், அந்நிய செலாவணியின் கையிருப்பை அதிகப்படுத்த ஒரு திட்டம் தந்து இருந்தால்  நிச்சயமற்ற எண்ணெய் விலையை  நிலை நிறுத்தும் திட்டமொன்றை முன்னுரிமை கொடுத்து அறிவித்து இருந்தால் என்ன இருந்தாலும் செட்டியார் வீட்டுப் பிள்ளை அதிலும் படிச்ச பிள்ளை என்று பாராட்டி இருக்கலாம். துரதிஷ்டவசமாக அப்படி ஒன்றும் இல்லை. இது வேதனை. இந்த நாட்டுக்கு இன்னும் தொடரும் சோதனை.    சடங்கு முடிந்தது. ஆனால் சவால்கள் முடியவில்லை. 

இபுராஹீம் அன்சாரி

20 Responses So Far:

அகமது அஸ்லம் said...

உண்மையில் மானியங்கள்தான் பொருளதார சீர்குலைவுக்கு காரணமா?....

http://www.vinavu.com/2013/01/15/hike-for-people-concession-to-corporates/

http://www.vinavu.com/2012/12/19/corporate-tax-evasion/

ஒரு பானை சோற்றுக்கு ஒரு கரண்டி சோறு பதம்!!!!!

அலாவுதீன்.S. said...

பட்ஜெட்டை அலசிய விதத்தையும், தங்களின் ஆதங்கத்தையும் வரவேற்கிறேன்!
செட்டி வீட்டுப் பிள்ளை கெட்டிக்காரப் பிள்ளை! பிறந்தது முதல் இன்று வரை வறுமை என்றால் என்னவென்று தெரியாதவரால் போடப்பட்ட பட்ஜெட்! கொள்ளையடிப்பவனுக்கும் - பண முதலைகளுக்கும் உதவுக்கூடிய பட்ஜெட்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சரியா எடை போட்டிருக்கீங்க!

நெல் விளையத் தகுதியான ஒரிஜினல் பொன்பூமியை வேறு மாநிலத்திற்கு மாற்றும் முயற்சி மிகவும் கண்டிக்கத் தக்கது.

தங்கக் கட்டுப்பாடுகளால் அரசுக்கு பலனில்லை. மாறாக ஏர்போட் சுங்க ஊழியர்களுக்கு தரும் ரகசிய போனஸ்!

அலாவுதீன்.S. said...

நிதி அமைச்சரின் பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்.
1) முதலில் மந்திரிகளுக்கு கொடுத்து வரும் அனைத்து வித சலுகைகளிலும் ஒரு வெட்டு (எல்லா சலுகைகளும் செலவுகளும் குறைக்கப்படும்)
2) ராணுவத்திற்கு ஒரு 5000 ஆயிரம் கோடி .
3) கல்விக்கு 1லட்சத்து ஜம்பது ஆயிரம் கோடி.
4) பிரதமர் முதல், ஜனாதிபதி வரை வெளிநாடு செல்லும் செலவில் ஒரு வெட்டு (இவர்கள் வெளிநாடு செல்வதால் இந்தியாவிற்கு வருமானம் எதுவும் வந்து விடப்போவதில்லை)
5) மானிய விலையில் வருடத்திற்கு 15 சிலிண்டர்
6) ஒருவரின் வருட வருமானம் 5லட்சம் வரைக்கும் வரி செலுத்த வேண்டாம்
7) மருத்துவத்திற்கு 1லட்சத்து ஜம்பது ஆயிரம் கோடி
8) குற்றவாளிகள் அதிக காலம் சிறையில் தங்கி மக்களின் வரிப்பணம் பாழாவதால் குறைந்த பட்சம் 6 மாத காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு இவ்வினங்களுக்கு வழங்கப்படும் பணம் சேமிக்கப்படும்.
9) ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படும்
10) ஆதார் அட்டை நீக்கப்படும், வங்கியில் பணம் வழங்குவதால் எந்தப் பயனும் இல்லை.

அலாவுதீன்.S. said...

11) உலக வங்கியில் இந்த வருடம் முதல் கடன் வாங்குவது நிறுத்தப்படும். மலேசியா கடன் வாங்காமல் எல்லா வகையிலும் முன்னேறிய நாடக வளர்ந்து கொண்டு இருக்கிறது - இந்த நாட்டை முன்னுதாரணமாக கொண்டு இனிமேல் இந்தியா எந்தப் பிச்சைக்கார பயலிடமும - பிச்சை வாங்காது என்று நெஞ்சை நிமிர்த்தி (உப்பு போட்டு சோறு திண்பதால்) சொல்லிக் கொள்கிறேன்.
12) அனைத்து நதிகளும் (இரும்புக்கரம் கொண்டு) தேசியமயமாக்கப்படும்.
13) நாம் யாருக்கும் அநியாயம் இழைக்காமல் இருப்பதால் நம்மை யாரும் துன்புறுத்த வாய்பில்லை என்பதால் இராணுவத்திற்கான செலவை இந்த வருடம் முதல் குறைத்துக் கொள்கிறேன்.
14) விரைவில் சிறைகள் அனைத்தும் தொழில் பூங்காவாக மாற்றப்படும் (தீர்ப்புகள் உடனுக்குடன் வழங்கப்படுவதால் குற்றங்கள் குறைந்து விடும்)
15) பெரும் முதலைகள் இந்திய மண்ணின் வளங்களை சூறையாடி வருவதால் அரசுக்கு சொந்தமான துறைகளை தனியாரிடம் கொடுத்திருந்தோம். அவைகள் அனைத்தையும் திரும்ப பெறுகிறோம்.
16) நாடு முழுவதும் மது விலக்கை அமல் படுத்துகிறோம்.
17) ஊடக, தொலைக்காட்சி, சின்னத்திரை இவை அனைத்தையும் கருப்பு கண்ணாடி போட்டு இவர்களின் தவறுகளை களையெடுப்போம்.
18) அனைத்து கலை சம்பந்தமான வகைகளுக்கு இனி வரிச் சலுகை கிடையாது
19) குடி தண்ணீர், நதி நீர் இவை அனைத்தையும் அரசாங்கமே வைத்துக் கொள்ளும். தாயும் விற்பதற்கல்ல – எங்களின் பூமித் தண்ணீரும் விற்பதற்கல்ல என்ற கொள்கையை இந்த வருடம் முதல் நாங்கள் எடுத்துள்ளோம்.
20) அனைத்து பொதுத்துறையும் நவீனப்படுத்தி அரசின் கைகளிலேயே வைத்திருப்பது. எங்கள் மண் எங்களுக்கு! எங்கள் வளம் எங்களுக்கு! எங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு! எந்த அந்நியனுக்கும் இல்லை! உள் நாட்டு கொள்ளைக்காரனுக்கும் இல்லை என்று முடிவை எடுத்து விட்டோம்

அலாவுதீன்.S. said...

21)போக்குவரத்துத் துறை, இரயில்வே துறை , விமான துறை , மருத்துவத் துறை, கல்வித்துறை – மக்களுக்கு சேவை செய்யும் அனைத்து துறைகளும் இனி அரசாங்கத்தின் கையில்தான் இருக்கும்.
22)ஆன்லைன் சூதாட்ட வியாபாரம் அனைத்தும் தடை செய்யப்படுகிறது.
23) ஆனைத்அனைத்து சேவை வரிகளும் விலக்கிக் கொள்ளப்படுகிறது.
24) முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை இனி ஏறாது – தனியாரிடம் இருந்து இந்த வருடம் முதல் அரசாங்கமே எடுத்து விலை நிர்ணயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்.
25)அந்நிய முதலீடு இங்கு இனி தேவையில்லை.
26) மக்களுக்கான : மருத்துவம், கல்வி, அனைத்து போக்குவரத்து துறைகளும் , வங்கி, தொலைத்தொடர்பு, மின்சாரத்துறை, மற்ற சேவை துறைகள் அனைத்தும் இனி அரசாங்கத்தின் கையில்தான் இருக்கும். இந்த துறைகள் அனைத்தையும் நவீனப்படுத்தி இந்திய இளைஞர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்கி வேலை அளிக்கப்படும்.
27 கறுப்பு பணம் மீட்கப்பட்டு – சோம்பேறிச் சாமியார்களின் சொத்துக்கள் அனைத்தும் மீட்கப்பட்டு இந்தப் பணத்தை வைத்து அரசாங்கம் நடைபெறப்போவதால் பற்றாக்குறை ஏற்படாது அதனால் வருகின்ற 5வருடத்திற்கு வரியில்லா ஆட்சியே நடக்கும்.

மன்றம் அதிர – அந்த பெஞ்ச அதிர ஆண்மைத்தனமான பட்ஜெட் ! இந்தியாவின் நலம் காத்த பட்ஜெட்! மனம் குளிர்ந்த பட்ஜெட் என்ற வாழ்த்துக்களுடன் - வெளி வந்தார் நிதிஅமைச்சர்!

Ebrahim Ansari said...

//மன்றம் அதிர – அந்த பெஞ்ச அதிர ஆண்மைத்தனமான பட்ஜெட் ! இந்தியாவின் நலம் காத்த பட்ஜெட்! மனம் குளிர்ந்த பட்ஜெட் என்ற வாழ்த்துக்களுடன் - வெளி வந்தார் நிதிஅமைச்சர்!//

சகோதரர் அலாவுதீன்! அஸ்ஸலாமு அலைக்கும். உங்களின் கனவு பட்ஜெட் கவின் மிகு பட்ஜெட். இன்ஷா அல்லாஹ். அப்படியும் ஒரு காலம் வருமா?

Unknown said...

அன்சாரி காக்காவின் அலசல் மூலம் நடப்பு பட்ஜெட்டை சுருக்கமாக அறிந்து கொன்டோம். ஜசாகல்லாஹ் காக்கா...! சகோதரர் அலாவுத்தீன் அவர்கள், இந்த முன் மாதிரி பட்ஜெட்டை, அமைச்சர் சிதம்பரத்திற்கு முன்பே அனுப்பி வைத்திருந்தால்,அவர் சற்று யோசித்திருப்பார். இன்ஷா அல்லாஹ் அடுத்த பட்ஜெட்டுக்கு முன்பதாவது கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது....உண்மையிலேயே நாட்டு நலனில் அக்கறை இருந்தால் இதன்படி செய்யலாம்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொலைக்காட்சி(யில்) பார்க்க, இன்னும் பிற செய்தித் தாள்களில் வாசிக்க நேரம் அமையாத என்னைப் போன்றோர்க்கு இந்த அலசல் நிரம்பவே சொல்லிக் காட்டுகிறது... ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

அது என்னமோ தெரியலை இந்த வரவு செலவு திட்டத்தின் அலசலில் எனக்கு சிக்கியது...

//எட்டு பட்ஜெட் டுகளை தாக்கல் செய்த மொரார்ஜிக்கு அதுவே கடைசியாக இருந்தது. அதேபோல் சிதம்பரத்துக்கும் இதுவே கடைசி பட்ஜெட் ஆக இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுபவர்களும் பலர் இருக்கவே செய்கிறார்கள். //

//சிதம்பரம் சுட்டிக்காட்டினார். ( இப்போது விவேகாந்தர் சீசன்).//

//ஆனால் முழு பட்ஜெட் போடப்படும்போது இந்த முளை விட்ட புல்லின் நுனியை எந்த ஆடோ மேய்ந்துவிட்டது//

// தயவு செய்து தங்கத்தின் இன்றைய சந்தை விலையை நிதியமைச்சருக்கு கடகடகட வென்ற கட்டுத்தந்திகள் மூலம் தெரிவித்தால் நலமாக இருக்கும். // - எங்கூர்ல தங்கமென்றால் பெண் என்று பொருள் கொள்ளப்படும் வழக்கும் இருக்கிறதே ! :)

//தேள் கடித்த இடத்தில் விஷத்தை இறக்க ஊசி போடாமல் சுண்ணாம்பு தடவுவது போன்றது. //

//அதற்கு மாறாக ஊழலில் திரட்டிய பணம் முதலீட்டு முகமூடி போட்டு நாட்டின் உள்ளே வந்தால் பரி நரியான கதையாகிவிடும். //

//பண்பலை நிலையங்கள் அமைப்பதற்கு பதிலாக பண்பாட்டு அலை பரவும் முயற்சியில் நாடெங்கும் ஓட்டு மொத்தமாக மதுக்கடைகளை ஒழித்தால் உண்மையிலேயே பண்பாட்டுக்கு உதவியதாக இருந்து இருக்கும். //

//ஒதுக்கீடு என்பதெல்லாம் சொரிந்தால் கிடைக்கக் கூடிய சுகம். சொரியச்சொரிய புண் ஆகிப் போகும் ரணம்.//

//ஏற்கனவே இரண்டு இட்லி ரூபாய் 25/= க்கு விற்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவை வரியும் சேர்ந்தால் இந்த உணவகங்களில் இட்லி சாப்பிடுபவன் சட்னியாகிவிடுவான்.//

//செட்டியார் வீட்டுப் பிள்ளை அதிலும் படிச்ச பிள்ளை என்று பாராட்டி இருக்கலாம். துரதிஷ்டவசமாக அப்படி ஒன்றும் இல்லை. இது வேதனை. இந்த நாட்டுக்கு இன்னும் தொடரும் சோதனை. சடங்கு முடிந்தது. ஆனால் சவால்கள் முடியவில்லை//

எண்ணி பதினொன்றே மாதத்தில் அடுத்த சடங்கு ஆரம்பித்து விடும் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்!

அன்பிற்குரிய மூத்த சகோதரரும், மருத்துவருமான இபுறாஹீம் அன்சாரி(காக்கா) அவர்களின் நமது நாட்டின் சமீபத்திய பொது பட்ஜெட் மீதான இவ்வாக்கம் தமிழகம் மற்றும் தமிழகம் தாண்டிய அனைத்து பத்திரிக்கைகளிலும் முகப்பு பக்கத்தில் வர வேண்டிய முத்தான கட்டுரை.

நிச்சயம் உங்களுக்கெல்லாம் தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகளில் நாட்டின் இன்றைய பொருளாதார சிந்தனைகள் என்ற சிறப்பு தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டு அதில் இ.அ. காக்கா ஒரு முக்கிய அழைப்பாளராக கலந்து கொண்டு மேற்கண்ட முத்தான கருத்துக்களை நல்லா மொஹரையில அறையிர மாதிரி ஆணித்தரமாக பதிய வேண்டும் என்பதே என் விருப்பம். அல்லாஹ் நாடினால் அத‌ற்கும் ந‌ல்ல‌தொரு வாய்ப்பை ஏற்ப‌டுத்தித்த‌ருவான்.

யாருடைய‌ அழுத்த‌த்தாலோ மற்றும் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காகவோ இன்னும் முழுவ‌தும் தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌டாத‌ நிலையிலும், அவருக்கு முன் தண்டணை பெற‌ பல குற்றவாளிகள் வரிசைப்பிரகாரம் இருந்து வந்த நிலையிலும் அவ‌சர,அவ‌ச‌ர‌மாக‌ க‌ருணை ம‌னு நிராக‌ரிக்க‌ப்ப‌ட்டு குடும்பத்திற்கு கூட முறையே தெரிவிக்காமல் ஸ்பீட் போஸ்ட் என்று ஒன்று உள்ளதை மக்களுக்கு நினைவுப்படுத்தும் வண்ணம் அதில் கடிதம் அனுப்பி அப்ச‌ல் குருவை சுப‌ஹோட தூக்கிலிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது நடுநிலையாக இருந்து மனித நேயம் பேசும் அனைத்து தரப்பு மக்களும் முகம் சுளிக்கும் வ‌ண்ண‌ம் ம‌த்திய‌ அர‌சு ந‌ட‌ந்து கொண்ட‌து. எவ்வ‌ளவோ பல ஆண்டுகள் ம‌த்திய‌ ம‌ற்றும் மூன்று மாநில‌ அர‌சுக‌ளுக்கு ப‌ல‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ள் ந‌ஷ்ட‌த்தை ஏற்ப‌டுத்தி, ப‌ல‌ காவ‌ல்துறையின‌ரின் உயிரையும் ப‌றிக்க‌ கார‌ண‌மாக‌ இருந்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்த‌ வீர‌ப்பன் இறுதியில் எண்க‌வுண்ட‌ர் செய்ய‌ப்பட்டு பின்னர் அவன் உட‌ல் கூட‌ இறுதியில் பிரேத பரிசோதனைக்குப்பின் முறையே அவ‌ர் குடும்ப‌த்திற்கு ஈமச்சடங்குகளுக்காக‌ ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் அப்ச‌ல் குருவின் உடலை தோண்டி எடுத்து அவ‌ர் குடும்ப‌த்திற்கு கொடுக்கால‌மா? வேண்டாமா? என்று இன்று பாராளும‌ன்ற‌த்தில் விவாத‌ம் ந‌ட‌க்கிற‌து.

மத்திய அரசின் இச்செயலால் அகம்,புறம் சுளித்துள்ள‌‌ சிறுபாண்மை ச‌மூக‌த்தை கொஞ்ச‌ம் ஆசுவாச‌ப்ப‌டுத்தி குஷிப்ப‌டுத்தினால் அவ‌ர்க‌ள் வ‌ரும் பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் ஏதோ நமக்கு கொஞ்சம் பாத்து போடுவார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையில் இச்ச‌மூக‌த்தின் மேம்பாட்டிற்கும் கொஞ்ச‌ம் கூடுத‌ல் நிதி ஒதுக்க‌ப்பட்டுள்ள‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌தே? அது ப‌ற்றி ஏதேனும் த‌க‌வ‌லுண்டா இ.அ. காக்கா.......

sabeer.abushahruk said...

பட்ஜெட் பற்றிய இந்தக் கட்டுரை அலசல் மட்டுமல்ல. விலாசலும்கூட, சுளீர் சுளீர் என்பதால்.

எப்படிப்பட்ட பட்ஜெட் இது என்பதையும் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையும் அதற்கான காரணிகளையும் புட்டுப்புட்டு வைத்திருப்பது தங்களின் பொருளாதார/வணிக/அரசியல் அறிவைக் காட்டுகிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இதையெல்லாம் வைத்து காமெடி நடிகர் வடிவேலு ஒரு படம் "இம்சை அரசன் 23 1/2ம் புலிகேசி" என்ற தலைப்பில் எடுத்து அதில் ஒரு காட்சியில் அமைச்சர் மன்னரை நோக்கி மன்னா! நம் நாட்டின் பொது நிதி நிலை அறிக்கையை தங்கள் முன் படித்து காட்டி பரிசில் பெற்றுச்செல்ல‌ புலவர் "யாரு பெத்த புள்ளையோ" வந்திருக்கிறார் என சொல்ல அதை கேட்ட மன்னர் புலவரை அவமதிப்பதற்காக கால் மேல் கால் போட்டு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு "அந்த கருமத்தை படித்து தொலையும்" ஏளனமாக புலவரை பார்த்து சொன்னால் எப்படி இருக்கும்? என சும்மா லைட்டா நினைத்து மனசுக்குள் சிரித்துக்கொண்டேன் காக்கா........

Iqbal M. Salih said...

அடேயப்பா! சுப்புடுவின் படு காரமான சங்கீதக் கச்சேரி விமர்சனம் போல அல்லவா இந்த 'பட்ஜட் அலசல்' விளாசித் தள்ளப்பட்டு இருக்கிறது!

மனம் திறந்த பாராட்டுக்கள் அறிஞர் அன்சாரி காக்கா அவர்களே!

Ebrahim Ansari said...

தம்பி நெய்னா அவர்களுக்கு,

//மத்திய அரசின் இச்செயலால் அகம்,புறம் சுளித்துள்ள‌‌ சிறுபாண்மை ச‌மூக‌த்தை கொஞ்ச‌ம் ஆசுவாச‌ப்ப‌டுத்தி குஷிப்ப‌டுத்தினால் அவ‌ர்க‌ள் வ‌ரும் பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் ஏதோ நமக்கு கொஞ்சம் பாத்து போடுவார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையில் இச்ச‌மூக‌த்தின் மேம்பாட்டிற்கும் கொஞ்ச‌ம் கூடுத‌ல் நிதி ஒதுக்க‌ப்பட்டுள்ள‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌தே? அது ப‌ற்றி ஏதேனும் த‌க‌வ‌லுண்டா இ.அ. காக்கா.......//



இது பற்றி குறிப்பிடத் தவறியது குறையே. குறிப்புகள் சிதறிவிட்டன. எனவே இந்த தவறு நிகழ்ந்து விட்டது. இதோ உங்களுக்குரிய விபரமான பதில்.

Finance Minister P. Chidambaram has allocated Rs. 3,511 crore to the Minorities Affairs Ministry, an increase of 12 per cent over the last fiscal. The enhanced amount was allocated in spite of the Ministry failing to utilise the funds provided to it in last year’s budget.
Under the Minority Affairs Ministry, the Maulana Azad Education Foundation, which is the main vehicle to implement educational schemes and channelize funds to NGOs for the minorities, was allocated Rs. 160 crore, which will add to its present corpus of Rs. 750 crore.

Accepting the proposal by the foundation to initiate medical aid, Mr. Chidambaram allocated Rs. 100 crore to launch the initiative.

Experts such as the former member of the National Advisory Council Harsh Mander talked about the need for larger allocation of funds for minorities, especially after the government “acknowledged the development deficit of the minorities through the Sachar Committee report.”

He argued that the minority schemes were not necessarily designed to effectively target minority households and settlements, while adding the need for universal scholarships, as opposed to present provision of limited scholarships, in order to boost their educational prospect.

KALAM SHAICK ABDUL KADER said...

\\நிச்சயம் உங்களுக்கெல்லாம் தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகளில் நாட்டின் இன்றைய பொருளாதார சிந்தனைகள் என்ற சிறப்பு தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டு அதில் இ.அ. காக்கா ஒரு முக்கிய அழைப்பாளராக கலந்து கொண்டு மேற்கண்ட முத்தான கருத்துக்களை நல்லா மொஹரையில அறையிர மாதிரி ஆணித்தரமாக பதிய வேண்டும் என்பதே என் விருப்பம். அல்லாஹ் நாடினால் அத‌ற்கும் ந‌ல்ல‌தொரு வாய்ப்பை ஏற்ப‌டுத்தித்த‌ருவான்.//



என் மனத்தினில் ஓடிய எண்ணங்களை அப்படியே வடித்துவிட்டீர்கள் அன்புச் சகோதரர் நெய்நா. ஜஸாக்கல்லாஹ் கைரன். இன்ஷா அல்லாஹ் நாம் எதிர்பார்க்கும் அக்காட்சி நடக்கும்; முனைவர் அறிஞர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் உற்ற நண்பராய் இருக்கும் என் பேராசான் அவர்கட்குத் தொலைக்காட்சித் துறையில் இருக்கும் தொடர்பினைப் பயன்படுத்தி இவ்வரிய வாய்ப்பை அடையலாம். நம் எண்ணத்திரையில் உள்ள இக்காட்சி இன்ஷா அல்லாஹ் சின்னத்திரையில் மிளிரும்;இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் அறிவாற்றல் அகிலமெலாம் ஒளிரும்!

Unknown said...

Assalamu Alaikkum

Good article which is analytical with expectations.

Actually people whoever come to public service should have true public service intention at their core and should have God consciousness. Otherwise for their selfish agenda, their mind can lead to thinking of their own benefits. Hence there won't be fairness. And considerations for right allocation of financials will be a mirage.

Thanks and best regards,

B. Ahamed Ameen
from Dubai.

Adirai pasanga😎 said...

///மத்திய நிதியமைச்சர் - வேட்டி கட்டிய தமிழர் பழனியப்பன் சிதம்பரம் அவர்கள் வரும் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கும் சடங்கு நிறைவேறியுள்ளது. ///

ஆம் - சடங்குதான் நிறைவேறியுள்ளது.

அருமையான அலசல், வாழ்த்துக்கள் காக்கா.

Ebrahim Ansari said...

இந்தக் கட்டுரையில் பின்னூட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ள சகோதரர் அகமது அஸ்லம் அவர்களுக்கு நன்றி. நான் அறிந்தவரை இது அவர்களின் முதல் பின்னுட்டம் என நினைக்கிறேன். ஆனால் சிறப்பான கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

//உண்மையில் மானியங்கள்தான் பொருளதார சீர்குலைவுக்கு காரணமா?....//
இதற்கு பதில் சொல்வதென்றால் இல்லை. மானியங்கள் என்று அறிவிப்பவை பொருளாதார சீர்குலைவுக்கு காரணமில்லை. நான் சொல்வதானால் இரண்டு விஷயங்களை சொல்ல வேண்டும்.

ஒன்று அரசு அறிவிக்கும் மானியங்கள் எழைகளுக்கென்றும், வறுமையில் உள்ளவர்களுக்கென்றும்தான் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் இவற்றின் பங்கீடு முறையாக நடப்பதில்லை. விவசாயிகளின் பெயர் சொல்லி உள்ளூர் அரசியல்வாதிகள் அடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். அத்துடன் மானியங்கள் கொடுப்பதில் சில வகைகளை அரசு தேர்வு செய்ய வேண்டும். இலவசமாக சில அத்தியாவசியப் பொருள்களை தருவதால் உழைக்க வேண்டுமென்ற எண்ணம மக்களிடம் அருகி வருகிறது. இலவச அரிசி உழைத்து சாப்பிட வேண்டுமென்ற சாதாரண மக்களை உழைப்பை அலட்சியப் படுத்தவைத்து வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மனித உழைப்பு நாட்கள் மரத்தடியில் கழிகின்றன. அதற்கு பதிலாக வாழ்க்கை வசதிகளை மேம்ம்படுத்த அந்த தொகைகளை பயன்படுத்தினால் பயனாக இருக்கும் என்பது என் கருத்து. உதாரணமாக குடி தண்ணீர் பஞ்சம் போக்க, வீட்டு வசதிகளை மேம்படுத்த, போக்குவரத்துதுறையில் வசதிகளை ஏற்படுத்த, பொது சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்த ஆகியவை. ஆனாலும் ஏழைகளுக்கு மானியத்தை ஒட்டு அரசியலில் ஒதுக்கிவிட முடியாது. இதை ஓரளவு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். Acceptable Tolerance என்ற வகையில் விழலுக்கு இறைக்காமல் மானியமாகவாவது ஏழைகளுக்கு வழங்கப் படுவதை ஒரேயடியாக குறை சொல்ல முடியாது.

இரண்டாவது, மானியமாக வழங்கப்படும் தொகைக்கு மேல் பல மடங்கு பெரும் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியாது என்று கை விரிக்கப்பட்ட தொகைகள் வராக்கடன் என்று ( BAD DEBTS )விடப்பட்டு இருக்கின்றன. இவைகள் முறையாக வசூலிக்கப்பட்டால் பல நலத்திட்டங்களை அரசு செய்ய முடியும்.

ஆகவே மானியங்கள் வழங்கப்படும் துறைகள் மற்றும் முறைகள் மாற்றப்படவேண்டுமென்பதும் வெளியில் தெரியாத பெரும் தொகைகளை விழுங்கி ஏப்பம் விடும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு ஏலம் விடப்பட்டு மக்கள் நல நிதியில் சேர்க்கப்பட வேண்டுமென்பதே எனது கருத்து.

தங்களின் அன்பான கேள்விக்கு நன்றி. இது போல் அடிக்கடி தாங்கள் வருகை தரவேண்டுமென்று கோருகிறேன்.

அகமது அஸ்லம் said...

சகோ. இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு,

கற்றுக் குட்டியாகிய என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.

எந்த அளவுக்கு மானியங்கள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டியவையோ, அதே அளவுக்கு முறையின்றி பெரு முதலாளிகளுக்கு (முதலைகளுக்கு) வழங்கப்படும் வரி சலுகைகளும் முறைப்படுத்தப் பட வேண்டும் (Not only bad debts).

Yasir said...

பட்ஜெட் பற்றிய இந்தக் கட்டுரை அலசல் மட்டுமல்ல. விலாசலும்கூட, சுளீர் சுளீர் என்பதால்.

எப்படிப்பட்ட பட்ஜெட் இது என்பதையும் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையும் அதற்கான காரணிகளையும் புட்டுப்புட்டு வைத்திருப்பது தங்களின் பொருளாதார/வணிக/அரசியல் அறிவைக் காட்டுகிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு