Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாணவர்கள் போராட்டம் இனிக்குமா? கசக்குமா? - அலசல் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2013 | , , , , ,


மாணவர்களின் போராட்டம் பூதாகரமாய்  வெடித்தால் ஆட்சியாளர்களுக்கு அவதி; மக்களுக்கு பரபரப்பான செய்தி; ஊடகங்களுக்கு குதூகலம். 

1965. இந்தியை எதிர்த்து மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஆட்சியில் இருந்தவர்கள் அடையாளம் தெரியாமல் தூக்கி வீசப்பட்டார்கள். அன்றைய மாணவர் போராட்டம் உணர்ச்சி பூர்வமானது. மாணவச் சமுதாயம் தமிழ் மொழிக்காக உயிர் கொடுக்கவும் மனக் குமுறலுடன் பொங்கி எழுந்த மாபெரும் வரலாறு அது. அந்தப் போராட்டத்தில் 80%  நியாயம் இருந்தது; 20% அரசியல் விளையாடியது. திரு . எம். பக்தவத்சலம் முதல்வராக இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளைக் கொண்டு சுமார் இருபது மாணவர்கள் வரை கொன்று குவித்தார்.


இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறத் தொடங்கிய உடனே தமிழ்நாடெங்கும் கல்லூரிகளும்   பள்ளிகளும்  காலவரையின்றி மூடப்பட்டன. இப்போதும் அப்படித்தான் மூடப்பட்டு இருக்கின்றன. கல்வி நிலையங்கள் மூடப்பட்டாலும் போராட்டம் தொய்வின்றி நடந்தது. நாடெங்கும் போராட்டம் பேயாட்டம் ஆடியது. வன்முறைகள் அரங்கேறின.  அர்ச்சுனன் என்கிற காவல்துறை ஆய்வாளர் வாயில்  பெட்ரோல் ஊற்றப்பட்டு வன்முறையாளர்களால் உயிரோடு எரிக்கப்பட்டார். பல இடங்களில் ரயில்கள் நிறுத்தப் பட்டன. எங்கு பார்த்தாலும் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டன.                 

காஷ்மீரைத்தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களின் அமைதி காப்பதில் அதுவரை  ஈடுபடுத்தப்படாத இந்திய  இராணுவம் , முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும் கடிதங்கள் பிரித்துப்  பார்க்கப் பட்டு  தணிக்கை செய்யப்பட்டன. இரயில நிலையங்களும்  அஞ்சல் அலுவலகங்களும், மத்திய அரசின் அலுவலகங்களும் காவல்துறையின் பாதுகாப்பில் இயங்கின. 

மாணவர் தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட சில மாணவர்கள்  தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில்   கைது  செய்யப்பட்டு அவற்றுள் 10 பேர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர்.  ( இவர்களில் பலர் பின்னாளில் அமைச்சர்களாயினர் –இதில் நினைவு கொள்ளத்தக்கவர்கள்  கா. காளிமுத்து, எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோர்). 

வீரியம் நிறைந்த மாணவர்களின் போராட்டத்தின் காரணமாக  ஆட்சி சுக போகத்தை காங்கிரசார் இழந்தனர். அன்றைய அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த தியாகச் செம்மலான திரு. காமராஜர்  அவர்கள் தனது சொந்த ஊரில் சீனிவாசன் என்றழைக்கப் பட்ட ஒரு மாணவர் தலைவரால் பரிதாபமாகத் தோற்கடிக்கப்பட்டார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஆட்டம் காண்பதற்கு அச்சாரமாக இருந்தது அறுபத்தி ஐந்தாம் ஆண்டில் மாணவர்கள் நடத்திய போராட்டம். உலக வரலாற்றை பல உணர்வு மிக்க போராட்டங்கள்தான்  மாற்றியமைத்து இருக்கின்றன. பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சிவரை இதற்கு சான்றுகள் ஏராளம். 

ஆட்சியை இழந்து போகிற  போக்கில் பக்தவத்சலம் புலம்பிவிட்டுப் போன ஒரு பொருத்தமான  வாசகம் இன்றும் பலரால் நினைவு கூறப்படுகிறது. அன்றைக்கு அவர் சொன்னது ஏதோ வயிற்றெரிச்சலில் சொன்னதாகவும் வேடிக்கையாகவுமே எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இன்று அந்த வாசகங்கள் உண்மையிலும் உண்மையாகத் தெரிகின்றன.  

அப்படி என்ன சொன்னார் பக்தவத்சலம்?     

“I accept the verdict of the people. But I am sure ,  virus spread all over Tamilnadu.” 

“மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தமிழகம் முழுதும் விஷக்கிருமிகள் பரவிவிட்டன.” சொல்லப்பட்ட ஆண்டு  1967.  ஒரு சின்னத் திருத்தம் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு இந்தியா என்று திருத்திப் படித்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு இன்றளவும் அந்த வார்த்தைகள் உண்மையாகிவிட்டன. . 

அப்படி ஒரு மாபெரும் சாதனை அந்நாள்  மாணவர்களின் போராட்டத்தால் விளைந்த வரலாற்று சம்பவம். இன்றுவரை அதே நிலை  தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  வேரூன்றி நிலைத்து நின்ற காங்கிரசை வேருடன் பிடுங்கி வீழ்த்திக் காட்டியது அந்தப் போராட்டம்.

இந்தப் போராட்டத்துக்குப் பிறகு மாணவர்கள் உள்ளூர் பிரச்னைகளுக்காக சிறு சிறு போராட்டங்கள் நடத்தி வந்திருக்கலாம். ஆனால் நாட்டு மக்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் அண்மையில் நடந்த ஒரு வரலாற்றில் இடம் பெற்ற மாணவர்களின் போராட்டம் தலை நகர்  டில்லியில் நடைபெற்றது. 

டில்லியில் ஒரு நடு நிசி இரவில் பொதுப்  பேருந்தில் வைத்து ஒரு மாணவி சில மனித மிருகங்களால் கற்பழிக்கப் பட்டு கொடூரமான முறையில்   அவரது இறுதி மூச்சு அடங்கியது. வேதனையிலும் வேதனையான இந்த நிகழ்வைக் கேள்வியுற்ற டில்லியின் மாணவர் கூட்டம் கொதித்தெழுந்தது. ( மாணவர்கள் மட்டும்தானா இல்லை கூலிப்படைகளும் கூட்டத்தில் சேர்ந்தனரா?) நாட்டின் பெண்மையே கற்பழிக்கப் பட்டுவிட்டது போல் உணர்ச்சிக் கொந்தளிப்புகள். பக்கம் பக்கமாகப் படங்கள். தொலைக் காட்சிகள் இருபத்திநாலு மணி நேரமும் நேரலையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. 

குடியரசுத்தலைவரின் மாளிகைக்குள் மாணவர்கள் நுழைய முயற்சி நடந்தது.  காவல்துறையின் பலம் கொண்டு அவை தடுக்கப்பட்டன. நட்ட நடு நிசியில் பிரதமர் வீட்டை விட்டு வெளியே வந்து மாணவர்களை சமாதானப் படுத்த நேரிட்டது. இதே நிலை சோனியா காந்திக்கும் டில்லியின் முதல்வரான ஷீலா தீட்சித்துக்கும் ஏற்பட்டது. சில ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை ஒரு வரிச்  செய்தியாக்கின. அதே நாளில் ஒரு ஹரிஜனப் பெண் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட மற்றொரு செய்தியை வேண்டா வெறுப்புடன் ஒரு மூலையில் எட்டு வரியில் போட்டு பத்திரிகையில் செய்தி வெளியானது. ஆஹா ! என்ன பத்திரிகை     (அ) தர்மம்? இதைப் பற்றி ஒருவரும் மூச்சுவிடவில்லை. காரணம் கற்பழிக்கப் பட்டவள் ஒரு ஹரிஜனப் பெண் என்பதால் என்று ஒரு நீதிபதியே கண்டித்தார்.  

டில்லியில் நடந்த மாணவர்களின் போராட்டத்தில் உணர்ச்சியும் உண்மையும் ஒரு புறம இருந்தாலும் இந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டு அரசியல் இலாபம் பார்க்க சில குறிப்பிட்ட அரசியல் சக்திகள் தூபம் போட்டன என்பதை மறுக்கவோ  மறைக்கவோ  இயலாது. டில்லியில் இதைப் போல முன்பும் பல சம்பவங்கள் நடந்தன. நடந்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அன்று மட்டும் அரங்கேறவில்லை. வாசாத்தியில்,   திருக்கோயிலூரில், உத்திரப் பிரதேசத்தில்,  பீகாரில் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. நாதியற்ற பல மக்களுக்கு உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைத்  தட்டிக் கேட்க ஆள் இல்லை. அப்போதெல்லாம் இல்லாத மாணவர் போராட்டம் இப்போது ஏன் டில்லியில் ஏற்பட்டது? எல்லாம் அப்பட்டமான அரசியல். மாணவர்களைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காயலாம் ஆட்சியைக் கவிழ்ந்து போகும் அளவுக்கு குழப்பம் விளைவிக்கலாம் என்கிற காழ்ப்புணர்வில் விளைந்த தப்புக் கணக்கு. இத்தகைய கயமைத்தனத்தின் கடைசி வரி வரை சென்று விட்டது அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும்.  

இதே அரசியல்தான் இன்று மாணவர்களை போராட்ட வலைக்குள் தள்ளிவிட்டு தவணைமுறையில்  ஆறுதல் சொல்லி அழகு பார்க்கிறது. இதனால் இன்று தமிழகம் முழுதும் மீண்டும் மாணவர்களின் போராட்டக் குரல் இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்திருந்த மாணவர்கள் ஒரே கருத்தால் ஒன்றி இருந்ததுபோல் இன்று நடைபெறும் போராட்டங்கள்  ஒரே மையக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு போராட்டக் களத்தில் இருந்தும் வித்தியாசமான கோரிக்கைகள் வைக்கப் படுகின்றன. 

அமெரிக்கா  கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் 

இந்தியாவே கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் 

தனி  ஈழம்தான் வேண்டும் 

ராஜபக்சேயை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் 

ராஜபக்சேயை தூக்கில் இட வேண்டும் 

தனி ஈழத்துக்காக ஐ, நாவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் 

தனி ஈழத்துக்காக இலங்கையிலேயே வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் 

என்று பல வகையான கோஷங்கள் முன் வைக்கப்படுகின்றன. 

ஒரு பொது வேலைத் திட்டமாக இன்ன இன்ன கோரிக்கைகள் என்று அறுதி செய்யப்பட்டு அனைவராலும் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில்  பொதுவாக வைக்கப் படவில்லை.  அந்த அளவுக்கு மாணவர்களை அரசியல் கட்சிகள் சிந்திக்க விடவில்லை.   மாணவர்கள் ஒரே ரீதியாக சிந்திக்க விடாமல் செய்வது மாறுபட்ட எண்ணிலடங்கா அரசியல் கட்சிகள் மட்டுமல்ல ; சாதி வலையின் பின்னல்களும்தான். இன்று இராமேஸ்வரத்தில் மூட்டப்பட்டிருக்கும் கலவரத்துக்குக் காரணம் சாதி மோதலை உருவாக்கி மாணவர்களின் போராட்டத்தை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டுமென்பதே  என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.    

ஒரு செய்தியை நாம்  சிந்தித்தால் சிரிப்பு வரும். மனித உரிமை மீறல்களை எதிர்த்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல. உலகில் கொலம்பசால் தேடிக் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு  விஷ வித்து ; வேட்டையாடும் மிருகம் ; வட்டமிடும் கழுகு ; வாய் பிளந்து நிற்கும் ஓநாய் . சாத்தான் வேதம் ஓதுகிறதா? நரிக்கு நாட்டாண்மைப் பட்டமா? என்று உலகம் சிரிக்கிறது. நோக்கமே   தவறான இந்த தீர்மானம் இப்போது நிறைவேறி இருந்தாலும் இன்னும் கடுமையான வாசகங்களுடன்  இந்த தீர்மானம் நிறைவேறி இருக்க வேண்டுமென்று மாணவர் சமுதாயம் நினைக்கிறது. ஐ.நா விடம் கையேந்தி நிற்கிறது. 

ஐ. நா மட்டும் நடுநிலையாக எந்தக் காலத்தில் செயல் பட்டது.? ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். ஈராக்கிலே அமெரிக்க படையெடுப்பு நிகழ்த்தப் பட்டபோது அமெரிக்காவால் சொல்லப் பட்ட காரணம், ஈராக்கில்,  உயிரை அழிக்கக் கூடிய ஆயுதங்கள் கிடங்குகளில் குவித்து வைக்கப் பட்டிருப்பதாகவும் அவற்றைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக அமேரிக்கா சொன்னதை நம்பி ,  ஈராக்கின் மீது படையெடுக்க ஐ நா  தீர்மானம் போட்டு அனுமதி அளித்தது. ஆனால் போர் முடிந்து சதாம் உசேன் வீழ்த்தப் பட்ட பிறகு ஈராக்கில் , அமெரிக்கா அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டை போல் எவ்வித உயிர் கொல்லி  ஆயுதங்களும் இல்லை என்று நிரூபணம் ஆனது. இதைப் பற்றி ஐ. நா இதுவரை கேள்வி எழுப்பி இருக்கிறதா? இந்தியா மூச்சு விட்டு இருக்கிறதா? மற்ற நாடுகள் முனங்கிக் கூட உலகம் கேட்கவில்லை. 

சரி அது போகட்டும் அப்படி ஐ. நா தீர்மானத்தால் அனுமதியளிக்கப் பட்டு ஈராக்கில் நுழைந்த அமெரிக்க இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் எவ்வளவு? சிறையில் அடைக்கப் பட்ட இஸ்லாமியக் கைதிகளை செய்த  சித்ரவதை மனித உரிமைகளின் மறு பிறவியா? காஷ்மீரில் மீறப்படும் மனித உரிமைகள் எத்தனை? எத்தனை? லெபனானில், பாலஸ்தீனத்தில் , காசாவில் மனித உரிமைகள் இதே அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரேலால் மீறப் பட்ட போது அமெரிக்கா வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததா? அரபு நாடுகள் கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் போதெல்லாம் தனக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தால் அநியாயங்களுக்கு அங்கீகாரம் வழங்கிய அமெரிக்காவுக்கு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றி பேசும் தைரியம் எப்படி வந்தது? கம்போடியாவிலும் வியட்நாமிலும் அமெரிக்க ராணுவம் கபடி ஆடப் போயிருந்ததா? கபட நாடகத்தின் ஒரு சாட்சியே இந்தக்  காட்சி. 

நல்ல வேளை . இந்தியாவின் திராவிட மற்றும்  தமிழ் தேசிய இயக்கங்கள் கேட்டுக் கொண்ட இன அழிப்பு என்கிற வாசகம் அமெரிக்க தீர்மானத்தில் இடம் பெற்று கலங்கப் பட்டுவிடவில்லை. லெபனானில் நடு நிசியில்  நாடற்ற பாலஸ்தீன அகதிகள் முகாமில் புகுந்து வயிற்றில் இருந்த குழந்தைகள் வரை கொன்று குவித்த இஸ்ரேல் படைகளுக்கு ஆயுதம் வழங்கி வழி அனுப்பி வைத்த அமெரிக்க புண்ணிய புருஷர்கள் போடும் வேஷமே இலங்கைக்கு  எதிரான மனித உரிமை மீறல் தீர்மானம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.  .  

உலகெங்கும் அரசியல் பிரச்னைகளில் அழையாத விருந்தாளியாக மூக்கை நுழைத்து தனது சூப்பர் பவர் அதாரிடியை எப்பாடு பட்டாவது நிலை நாட்டிக் கொள்ள வேண்டுமென்பதே அமெரிக்காவின் நோக்கம். அது ஜார்ஜ் புஷ் ஆக இருந்தாலும் சரி – ஒபாமாவாக இருந்தாலும் சரி என்பதை மாணவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். 

உலகெங்கும் இலட்சக் கணக்கான இளந்தளிர்களின்   உயிர்களை கொன்று குவித்து கும்மாளம் போட்ட ரத்தக் கரை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரனாகிய அமெரிக்க தீர்மானத்துக்கு இத்தனை  கூக்குரல்கள் போடுவது எத்தகைய உலக அரசியல் அறிவு என்று எவருக்கும் புரியவில்லை. உலக ரவுடியிடம் உண்மையின் தத்துவத்தை எதிர்பார்க்கலாமா? இதை ஏன் மாணவர் சமுதாயம் சிந்திக்கத்தவறியது?

மாணவர்களுடைய போராட்டம் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்றா அல்லது ஈழத்தமிழருக்காகவா? அமெரிக்காவுக்கு வெண்சாமரம் வீசுவதற்கு இந்தியாவை ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் போட்டா போட்டி காட்டா  குஸ்தி நடைபெறுகிறது. கடைசியில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் என்ன இருந்தது? அந்தத் தீர்மானம் ஒரு நீர்த்துப்போன நெருப்பு. அது உண்மையான நீராகவே இருந்தாலும் அள்ளிக் குடித்து தாகம் தீர்க்க உதவாத  கடலோரம் தெரியும் கானல் நீர். 

இந்தியாவுக்காக அமெரிக்கா வாக்களித்த அணுசக்தி  தீர்மானம் என்ன ஆனது? அணுசக்தி ஆனது. யுரேனியம் தருவதாக வாக்களித்த அமெரிக்கா அல்வாதானே  கொடுத்தது? இதைக் கேட்பதற்கு இந்திய அரசுக்கு தைரியம் இருந்ததா?

எனவே மாணவச் செல்வங்களே ஈழத்தமிழருக்காக ஆக்க பூர்வமாக எதுவும் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அமெரிக்காவை சார்ந்திருக்கும் போக்கை கைவிடத் தயாராகுங்கள். எதைச் செய்தால் தாய் நாட்டுக்கு மரியாதை  என்று  சிந்தியுங்கள். இப்போது நீங்கள் நடத்தும் போராட்டத்துக்கு அமெரிக்காவைத் துணைக்கு அழைப்பீர்களானால் ஏமாந்து போவீர்கள். உங்களின் சக்தியை தனது அயோக்கியத்தனத்துக்கு ஆதரவாக்கிக் கொள்வதில் அமெரிக்காவுக்குத்தான் இலாபம். தமிழருக்கோ அல்லது ஈழத்தமிழருக்கோ அல்ல. அல்லவே அல்ல. 

இலங்கையில் அழிக்கப் பட்ட இனம் தமிழ் இனம். அதே நேரம் மற்றொன்றை மாணவர்களின் சிந்தனைக்குத் தர விரும்புகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்கள் மூன்று வகையினராக இருக்கிறார்கள். ஒன்று மலையகத் தமிழர்கள் ; இரண்டு இஸ்லாமியத் தமிழர்கள் ; மூன்று யாழ்ப்பாணப் பகுதியிலே வாழும் தமிழர்கள். இப்போது நடை பெற்ற இந்த இன அழிப்பு யாழ்ப்பாணப் பகுதிகளில்தான் பெருமளவு நடை பெற்றது. மற்ற பகுதிகளில் அவ்வளவாக பிரச்னை இல்லை என்று சொல்லப் படுகிறது. அதே நேரம் தமிழ் பேசும் முஸ்லிம்களை யாழ்ப்பாணப் பகுதியில் கோலேச்சிய விடுதலைப் புலிகள் இஸ்ரேலியர்களை விடக் கொடுமையாகக் கொலை செய்த காத்தான்குடி சம்பவத்தையும் ஒதுக்கி மறப்பதற்கில்லை. தமிழ் இனத்தை தமிழ் இனமே அழித்த சம்பவங்கள் எவ்வளவு திரை போட்டு மறைத்தாலும் வெளிவந்தே தீரும். ஆகவே இன்று இலங்கையில் மிச்சம் மீதி வாழ்ந்து கொண்டிருக்கும் மூவகை  தமிழ் சமுதாயத்துக்காக ஆக்க பூர்வமாக - அவர்கள் அமைதியாக வாழ என்ன வழி காணலாம் என்பது மட்டுமே இந்த மாணவர்களின் போராட்டங்களின் நோக்கமாக இருந்தால் அனைவருக்கும் நல்லது. 

கோஷம் போட்டு குதிப்பதைவிட்டு மாணவர்கள் ஒன்று இணைந்து ஆக்க பூர்வ வழிகளை அரசியலை புறந்தள்ளிவிட்டு ஆலோசித்து செயல்பட்டாலே நலம். விலையற்ற மாணவர்களின் எதிர்காலமும் இன்னுயிரும் எடுப்பார் கைப் பிள்ளைகளாக ஆகிவிடக் கூடாது. மாணவச் செல்வங்களின் எதிர்காலம் சிதைந்து விடக்கூடாது. இலங்கையில்  வாழும் நமது அனைத்து சொந்தங்களும் இனியாவது சுதந்திரமாய் வாழ வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டதாக மாணவர்களின் போராட்டம்  இருக்க வேண்டும்.

முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.,

16 Responses So Far:

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நண்பர் பகுருதீன் அவர்களை அதிரை நிருபர் வலை தளத்துக்கு முகமன் கூறி வரவேற்கிறேன்.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் கணிதப் பட்டதாரியான PUC ( 1968-69)B.sc; ( 1969-72) நண்பர் சிறந்த சிந்தனையாளர்; பேச்சாளர். இவரை அறிமுகப் படுத்தியதில் பெருமையுருகிறேன். தனது அளவற்ற உலகம் சுற்றிய அனுபவங்கள் - வாழ்வில் தான் கண்டவைகள்- கற்றவைகள்- பட்டறிவுகள்- ஆகியவற்றை தொடர்ந்து தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Iqbal M. Salih said...

அறிவுபூர்வமான அழகிய கட்டுரை!
சிந்திக்க வைக்கும் சிறப்பான அலசல்கள்.

புதிய சகோதரரை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மூத்த சகோதரர் முத்துப்பேட்டை P. பகுருதீன் அவர்களை வரவேற்கிறோம்...

மாணவர்கள் போராட்டத்தின் வரலாற்றைச் சொல்லும்போதே உங்களின் ஆழமான சிந்தனை, அடிப்படை பிரச்சினைகளை அலச எடுத்துக் கொண்ட அறிவிப்பூர்வமான எழுத்து நடை.. !

உங்களைப் போன்ற சிந்தனையாளர்களின் எழுத்துக்கள் அனைத்தும் ஆவனப்படுத்தப்பட வேண்டும், இன்றைய தகவல், செய்திகள் நாளைய ஆதாரங்கள் !

உண்மையை உறுதியுடன் பதிந்து வைத்தால்தான் அதன் நன்மையை நாளைய சமுதாயம் அறுவடை செய்யும் !

உங்களின் எழுத்துப் பணி தொடர வாழ்த்துகிறோம் !

Abu Easa said...
This comment has been removed by the author.
Abu Easa said...

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லஹ்

மா ஷா அல்லாஹ்!
சகோதரர் முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc., அவர்களை அதிரை நிருபரின் பங்களிப்பாளன் என்ற வகையில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். சகோதரர் அதிரை நிருபருக்கே அறிமுகம், ஆயினும் எழுத்துலகில் தேர்ந்தவர் என்பதை கட்டுரை நெடுகும் சாட்சி சொல்கிறது.

இத்தனை ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள் இருந்தும் நம் சமுதாயம் எழுத்தியலில் பிந்தங்கியிருப்பது வேதனையே.

தாங்கள் நிறைய எழுதவேண்டும். அதன் வெகுமதியை இம்மைக்கும் மறுமைக்கும் உகந்ததாக ஆக்கி எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் பகுருதீன் காக்கா.

நல்வரவு.

இத்தளத்தின் அறிவுப்பசிக்கு ஏற்ற தீணி தங்களிடம் நிரம்ப இருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது இந்த ஆக்கம்.

எழுந்து நிற்கிறது எழுத்துநடை. இருபது வயதிற்கான கோபம் வார்த்தைகளில் வடிக்கப்பட்டிருக்கிறது. புள்ளி விபரங்களிலும் வரலாற்றுக்குறிப்புகளிலும் அனுபவம் பேசுகிறது.

உடல்நலத்தைப் பேணிக்கொண்டு அடிக்கடி எழுதுங்கள், நாங்கள் அறிவுப்பசியாளிகள்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்வரவு!

ஆக்கப்பூர்வமான அலசல்!

ஆசிரியர் சொன்னது போல் இன்று இலங்கையில் மிச்சம் மீதி வாழ்ந்து கொண்டிருக்கும் மூவகை தமிழ் சமுதாயத்துக்காக ஆக்க பூர்வமாக அவர்கள் அமைதியாக வாழ என்ன வழி காணலாம் என்பதில் மட்டுமே இந்த மாணவர்களின் போராட்டம் இருக்க வேண்டும்.

Yasir said...

உண்மையை உரக்க சொல்லியிருக்கும் ஆக்கப்பூர்வமான ஆக்கம்
உங்கள் எழுத்துலக அனுபவம் கட்டுரையில் நிறையவே தெரிகின்றது
வாழ்த்தி வரவேற்க்கின்றோம் அதிரை நிருபர் குடும்பத்திற்க்கு

KALAM SHAICK ABDUL KADER said...

வாய்மையே வெல்லும் என்ற வாக்குச் சொல்லும் வண்ணம் உங்களின் எண்ணம், எழுத்து, வீரியம் கண்டு வியந்து நிற்கிறேன். இன்ஷா அல்லாஹ் உங்களின் தொடர் ஆக்கங்களால் எங்கட்குப் புதிய குருதியைச் செலுத்துவீர்கள்; அதன் வழியாக எங்களிடமும், உண்மை, நேர்மை, துணிவுடைகை, நடுநிலைமை என்னும் தார்மீக அடிப்படைக் குணங்கள் உணர்வின் ஓட்டங்களில் உருவாகலாம்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Bahruddeen,

My hearty welcome to Adirai Nirubar forum. We appreciate and thankful to brother Mr. Ebrahim Ansari for introducing.

Your excellent article makes awareness on key aspect of "what a stuggle for right means" by various historical struggle for rights.

And your advise for students community on contemporary supporting struggle for rights in Sri Lanka shows your concern on our young generation and directing them to right path.

Hope, InshaAllah, people whoever suffer now will be relieved, and Allah will not give burden to any creature, more than its capability to suffer.

JazaakkAllah Khairan,

Thanks and best regards,



B. Ahamed Ameen
from Dubai.

Adirai pasanga😎 said...

சுருக்கமாக சொல்லபோனால் எப்போது இஸ்லாமிய ஆட்சியும் அதற்கு இணங்கிய மக்களும் என்ற மாற்றம் வராதவரை அமைதி நிலவபோவதில்லை என்பது உலக வரலாறு கூறும் உண்மையாகும்.

ZAKIR HUSSAIN said...

சகோதரர் பகுருதீன் அவர்களின் ஆக்கம் சிந்திக்க கூடியவர்களுக்கு உதவி செய்யும்.

தன் இனம் என்றால் ரத்தம் சூடேறுவது தடுக்க முடியாத ஒன்று. எல்லா மக்களின் கஷ்டங்களுக்கும் கண்ணீர் சிந்த / போராட எல்லைகள் இல்லாத அன்பு இருக்க வேண்டும்.


அது எல்லோரிடமும் இருப்பதில்லை. அப்படி அன்பு செலுத்துபவர்களை சமுதாயம் 'சப்பை பார்ட்டி' என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்து விடுகிறது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மாணவர்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றி எழுதவேண்டும் என்று சகோ. இபுறாஹிம் அன்சாரி அவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தேன்.

மாணவர்கள் எப்படி போராட்டம் செய்ய வேண்டும் என்பதை (ஆரம்ப காலம் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகளை) தெளிவான முறையில் விளக்கிச் சொல்லியிருப்பதற்கு சகோ. பகுருதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வரவேற்கிறோம். இன்னும் நிறைய ஆக்கங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ் ஸலாம் (வ ரஹ்மத்துல்லாஹ்)

அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு, தாங்கள் என்னிடம் சொல்லியபடி மாணவர் போராட்டம் பற்றி எழுதலாமென்று இருந்தேன்.

ஒரு அசருக்குப் பிறகு நானும் நண்பர் பகுருதீன் அவர்களும் தேநீர் அருந்த கடைக்குச் சென்று இருந்த போது அவர்களிடம் இது பற்றிக் கூறினேன். உடனே அவர் நான் வேண்டுமானால் எழுதித்தரட்டுமா என்று கேட்டார். அவரது எழுத்தாற்றல் எனக்குத்தெரியும் ஆகவே அவரையே எழுதச்சொல்லி நெறியாளர் அவர்களுக்கு அனுப்பிவைத்து வெளியாகி இருக்கிறது- அதிரை நிருபரில் அவரது கன்னிக் கட்டுரை.

இந்தக் கட்டுரைக்கு நண்பர்கள் தந்துள்ள பாராட்டுதல்களைப் பார்த்துவிட்டு தொடர்ந்து எழுதுவதாக சொல்லி அடுத்தும் ஒரு ஆக்கத்தை எழுதத் தொடங்கிவிட்டார். இன்ஷா அல்லாஹ்.

Abu Easa said...

//இந்தக் கட்டுரைக்கு நண்பர்கள் தந்துள்ள பாராட்டுதல்களைப் பார்த்துவிட்டு தொடர்ந்து எழுதுவதாக சொல்லி அடுத்தும் ஒரு ஆக்கத்தை எழுதத் தொடங்கிவிட்டார். இன்ஷா அல்லாஹ்//

மா ஷா அல்லாஹ்! மகிழ்சி

KALAM SHAICK ABDUL KADER said...

’’ஜெனிவாவில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம்கள் நாடுகள் தேவை. மத்தள விமான நிலையத்தில் முதல் விமானமாக வந்து தரையிரங்குவதற்கு ஹலால் நாட்டு விமானமான எயர் அரேபியா விமானம் தேவை. விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு முஸ்லிம் நாட்டு விமானிகளின் உதவி தேவை. இவ்வாறெல்லாம் முஸ்லிம் நாடுகள் இந்த நாட்டுக்கு உதவுகின்ற போது ஏன் இந்த நாட்டு அரசு முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளிலும்இ ஏனைய அடிப்படை மார்க்க விடயங்களிலும் கை வைக்க வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகம் கேட்கின்றது.”

முகநூலில் ஓர் இலங்கை முஸ்லிம் எழுதியுள்ள அர்த்தமுள்ள- அழுத்தமுள்ள வரிகள்- வலிகள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு