Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 6 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 15, 2012 | , , ,

அலசல் தொடர்: ஆறு

வேதங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், புராணங்கள் பெண்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட சில அவலங்களை இந்த அத்தியாயத்தில் அலசலாம் என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து மனு நீதி சொல்லும் பெண்களுக்கான சிறப்பு சட்டங்களை குறிப்பிடலாம்.   

பிராமண சாஸ்திரங்கள் கிட்டத்தட்ட பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டுமே வைத்து இருந்தன. மொத்த மனித குலத்தை தரம் பிரித்த  சாஸ்திரங்கள், பெண்களை அதுவும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பெண்களை சற்று அதிகமாகவே “கவனித்தன” . ஆண்கள் என்றால் அரவணைப்பு போதும் – பெண்கள் என்றால் போர்த்திக்கொள்ளப் போர்வையும் கொடுக்கவேண்டும் என்பது இஸ்லாம் போன்ற நாகரிகம் படைத்த மாந்தரின்  மார்க்கங்கள் கற்றுத் தந்தவை.   ஆனால் பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல உலக நாகரிகத்துக்கு எதிராக கணவன் இறந்தால் அவனை எரிப்பதற்காக மூட்டப்படும் தீயில் உயிருடன் இருக்கும் மனைவியும் விழுந்து சாகவேண்டும் என்ற நியதியை வைத்திருந்தது இந்த சாஸ்திரங்கள். கணவன் மனைவியை சதி - பதி என்று சொல்வார்கள் . கணவன் இறந்தால் தீயில் விழுந்து மனைவி சாகும் சடங்குக்குப் பெயரும் சதிதான். இது பெண்களுக்கு எதிரான சதியுமாகும். அதுமட்டுமல்ல தேவதாசிகள் என்று ஒரு இனத்தை உருவாக்கி உயர்சாதியினர் நுகர்வதர்காகவே “வைத்து”க்கொள்ளச் சொன்னவை இந்த சாஸ்திரங்கள். 

தேவதாசிகள் என்றால் என்ன? – கடவுளின் பெண் ஊழியர்கள் என்று பொருள். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பெண்கள், கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டு அவர்கள் கோயில்களை கூட்டிபெருக்க, சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுமட்டுமல்ல இந்த பெண்கள், உயர்சாதி எடுப்பாருக்கு கைப்பிள்ளைகள். உயர்வகுப்பாரின் உடல்  இச்சைகளை தேவைப்படும்போது தீர்த்துவைப்பதும் இவர்களுக்கு முக்கிய வேலை. தலை முறைகளாக – வாழையடி வாழையாக இவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடவேண்டும். DEVADASI SYSTEM IS AN  OFFERING OF GIRLS TO THE DEITIES IN BRAHMANIC TEMPLES என்பது வெட்கக்கேடான விளக்கம்.  

10-11-1987 TIMES OF INDIA  வில் வெளிவந்துள்ள ரிப்போர்டின் பிரகாரம் “ The Devadasi system was set up, as a result of a conspiracy between the feudal class and the priests (Brahmins). The latter, with their ideological and religious hold over the peasants and craftsmen, devised a means that gave prostitution their religious sanction. Poor, low-caste girls, initially sold at private auctions, were later dedicated to the temples. They were then initiated into prostitution.

இதன்படி தேவதாசி அமைப்பு முறை என்பது உயர்சாதியினரும், பிராமண குருக்கள் அல்லது சாமியார்களும் சேர்ந்து செய்த சதியின் விளைவாகும். பிராமணர்கள் தங்களுடைய மத சம்பந்தமான கோட்பாடு அல்லது சாஸ்திரம் மற்றும் ஐதீகம் என்ற போர்வையில் உழைக்கும் வர்க்க மக்களின் மேல் ஒரு மத சம்பந்தமான கட்டாயத்தை திணித்து - ஒரு பச்சை விபச்சாரத்துக்கு மத சம்பிரதாயங்களே சாட்சியாகவும் புரவலராகவும் இருந்து  உலவ விட்டதாகும். இதன்படி  ஏழை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் சந்தையிலே கீரைக்கட்டுகள் விற்கப்படுவதுபோல் ஏலம் கூறப்பட்டு  உயர் சாதியினரால் நுகரப்பட்டு-பின்னர் கோயில்களுக்கு மாடுகளை நேர்ந்துவிடுவதுபோல் “பொட்டுக்கட்டி” நேர்ந்துவிடப்பட்டர்கள். மலர்கள் மலரும் முன்பே கசக்கப்பட்டுக் காயப்படுத்தப்பட்டன. மணவாழ்வு மறுக்கப்பட்டது. அவர்களின் இந்த இறைப்பணி என்ற அரிச்சுவடி  விபச்சாரி என்ற முதுகலைப் பட்டதாரிகளாக அவர்களை ஆக்கி முடித்தது. . இது சமூக அவலத்துக்கு கடைக்கால் ஊன்றப்பட்ட மனம் கொதிக்கும்  வரலாறாகும்.  இந்த அகில உலக அட்டூழியத்துக்கு  ஒட்டுமொத்த ஸ்பான்சர்ஸ் : M/S. BRAHMANISM & COMPANY  . 

வரலாற்று ஆசிரியர்கள்  இந்தியாவில் தோன்றி மறைந்த புத்த மதத்தின் அழிவு, தேவதாசி முறையை வளர்த்து உரமிட்டதாக கூறுகின்றனர். புத்த மதம் தழைத்து இருந்தபோது பெண் புத்த துறவிகள் புத்த மடங்களில் வாழ்ந்துவந்தார்கள். புத்த மதம் அழியத்தொடங்கியதும், புத்த மடங்கள்  பிராமணர்களால் கோயில்களாக்கப்பட்டதுடன் அங்கிருந்த பெண் புத்த துறவிகள் தாழ்ந்த சாதிக்கு மாற்றம் செய்யப்பட்டு தேவதாசிகள் என்று முத்திரை இடப்பட்டு  உபயோகப்படுத்தபபட்டனர். இதோ அந்த வரலாற்றுக் குறிப்பு:  It is viewed that the "devadasis" are the Buddhist nuns who were degraded to the level of prostitutes after the temples were taken over by the Brahmins during the times of their resurgence after the fall of Buddhism.

இப்படிப்பட்ட சமூக இழிவைத்தான் பெரியாரும் பிறரும் சாடினார்கள். இவர்களில் மிக முக்கியமானவர் டாக்டர் . முத்து லஷ்மி ரெட்டி ஆவார். இவரைப் பற்றி தனி நூலே எழுதலாம். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பிறந்தவர். ஒரு பிராமணரால்  வளர்க்கப்பட்டவர். ஆனாலும் பிராமண கொள்கைகளை இவர் மணம் ஏற்கவில்லை. பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர்.  ஆண்களின் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவி ; மருத்துவக் கல்லூரியின் முதல் ஹவுஸ் சர்ஜன்; ஆங்கிலேயர் ஆட்சியில் சட்டமன்றத்தில் நுழைந்த முதல் பெண்மணி; சென்னை மாகாணத்தின் சமூக நலனுக்கான ஆலோசனைக்கமிட்டியின் முதல் பெண் தலைவர்; சட்டமன்றத்தின் முதல் பெண் துணைத்தலைவர்; சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தலைவர். இப்படி பல சிறப்புகளுக்கும் முதல்களுக்கும் சொந்தக்காரர். அத்துடன் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை தொடங்க தூணாக நின்றவர். 

டாக்டர் முத்துலஷ்மி ரெட்டி அவர்கள்தான் தமிழக சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை முன் மொழிந்தவர். 1927  ஆம் வருடம் ஆங்கில அரசால் சென்னை சட்டமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்ட முத்து லஷ்மி ரெட்டி அவர்கள் 1929 ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தார்.

இதை அன்றைய காங்கிரஸ் எதிர்த்தது. அன்றைய காங்கிரசின் சட்டமன்ற தலைவர் சொல்லின் செல்வர்- சத்திய மூர்த்தி ( இவர்  பெயரால்தான் தமிழக காங்கிரசின் தலைமை இடம் சத்திய மூர்த்தி பவன் என்று  பெயரிடப்பட்டுள்ளது ). ஒரு பிராமணர். நாட்டில் பெண்களுக்கு ஆதரவாக ஒரு மறுமலர்ச்சி மசோதா  கொண்டுவருவதை தான் சார்ந்த பிராமண  குல பண்புக்கு களங்கம் வராமல் தேவதாசி ஒழிப்பு முறை மசோதாவை தீவிரமாக எதிர்த்துப் பேசினார். இந்த மசோதா நிறைவேறினால் ஐதீகம் கெட்டுவிடும் என்றார். கோயிலில் கூட்டும்  வேலை, பெருக்கும் வேலைகள் எல்லாம் செய்யப்படாமல்  கோயில்கள் நாறிப்போய்விடுமே என்று ரெம்பவும் கவலைப்பட்டார். இதற்கு முத்து லஷ்மி ரெட்டி மிக கூலாக பதில் சொன்னார் “ இவ்வளவு காலம் தாழ்த்தப்பட்ட இனப் பெண்கள்தான் இந்தக் காரியங்களை செய்து கோயில்களை சுத்தமாக வைத்திருந்து இருக்கிறார்கள். இந்த மசோதா நிறைவேறி தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் கோயில்களில்  கூளம், குப்பை  நிறைந்துவிடும் என்ற கவலை சத்திய மூர்த்தி அவர்களுக்கு இருந்தால் இவ்வளவு நாள் தாழ்த்தப்பட்டவர்கள் தேவதாசிகளாக இருந்து பார்த்துவந்த வேலைகளை கொஞ்சம் பிராமணப் பெண்களை பொட்டுக்கட்டிவிட்டு  செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாமே “ என்று சத்திய மூர்த்தி ஐயரின் மூக்கை  உடைத்தார்  என்பது My Experience as a Legislature  என்ற பெயரில் டாக்டர் முத்து லஷ்மி ரெட்டி தானே சுயமாக எழுதிய சென்னை சட்டமன்ற விவாத நூல்களில் காணக்கிடைக்கின்றது. 

இப்படிப்பட்ட பேறு பெற்ற சீர்திருத்தவாதிகள் போராடித்தான் தேவதாசி முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் நாட்டின் பொருளாதாரத் தலைநகரை தன்னகத்தே கொண்டுள்ள மராட்டியத்திலும், நாகரிகம் வளர்ந்த மாநிலம் என்று கூறப்படுகிற கர்நாடகத்திலும் இந்த முறை இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான்  இருக்கிறது. சொல்லப்படும் காரணம் ஐதீகம்- ஆன்மிகம்- சாஸ்திரம் -சம்பிரதாயம். கடவுளின் பெயரைச் சொல்லி நடக்கும் காமக்கூத்துகள். இதனால்தான் மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதிகளும் கர்நாடகத்தில் பிடரி, பத்மாலயா, நித்யானந்தா, சாய்பாபா, கல்கி, ராம் நகரம்  போன்ற ஆசிரமங்களும் நிறைந்து இருக்கின்றனவோ என்ற ஐயப்பாடும் மேலோங்குகின்றது.

இது மட்டுமா? பால்ய விவாகம் என்ற பெயரில் சிறு வயது பெண் மொட்டுகளை மணவாழ்வுக்கு மலரும் முன்பே பலியிடுவதை இந்த நீதி நூல்களும், சாஸ்திர தர்மங்களும் தடுக்கவில்லை; திருத்தவில்லை; கண்டிக்கவில்லை; கடிந்துரைக்கவில்லை. மாறாக, இறைவனின் பெயரால் இவை தப்பில்லை என்று தம்பட்டம் அடிக்கின்றன.

இளம் வயதில் கணவனை இழந்த கைம்பெண்கள் – பறக்கும்போது  அறுந்துபோன பட்டங்கள் – ஆகாயம் இல்லாமலே தரை மீது தள்ளாடும் நிலவுகள்- விதவைகள். இவர்களின் மறுமணவாழ்வை தடைசெய்தன இந்த நீதி நூல்களும், சாஸ்திரங்களும்- ஐதீகங்களும். எந்த வயதில் கணவனை இழந்து இருந்தாலும் அவள் வாழ்வு ஒரு கருகிய மொட்டாகத்தான் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வாதாடினார்கள் மேல்சாதி பண்டிதர்கள். மீறி மறுமணம் செய்தவர்களை சாதியை விட்டும் ஊரை விட்டும் ஒதுக்கி வைத்தார்கள். கல்லால் அடித்து விரட்டினார்கள்- கடும் தண்டனை கொடுத்தார்கள். இஸ்லாம் போன்ற மார்க்கங்களில் விதவைமணம் அனுமதிக்கப்பட்டது  . இறைவனுக்கு விருப்பமான செயலாக கருதப்பட்டது. அண்ணல நபி (ஸ்ல) அவர்கள் , தாங்களே தன்னைவிட வயதில் மூத்த விதவையை மணமுடித்து மறுவாழ்வு கொடுத்தார்கள். தங்களின் தோழர்களை அவ்விதம்  செய்யத் தூண்டினார்கள். 

ஆனால் வேத சாஸ்திரங்களின் பெயரில் விதவை மறுமணக் கருத்து சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல், விதவைகள் உடலளவிலும் மனதளவிலும் சிதைக்கப்பட்டார்கள். ( நிறைய திரைப்படங்களில் ரீ ரிகார்டிங்க் இசையுடன் பொட்டழிப்பதையும் , பூவைப்பிடுங்குவதையும் , வலையல்களை உடைப்பதுமாக கதறக்கதறக் காட்டுவார்களே!) கணவனை இழந்தவர்களின் தலைகள் மொட்டை அடிக்கப்படவேண்டும் என்றார்கள்;  நல்ல ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. நகைகள் அணியக்கூடாது.  வீட்டின் முன்பகுதிகளில் அவர்கள் வசிக்கத்தடை விதிக்கப்பட்டது. திருமணம் போன்ற காரியங்களில், மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் வெளியில் தலைகாட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மீறி வந்தால் ஏளனப்படுத்தப்பட்டார்கள். வெளியில் போகும்போது விதவை எதிரில் வந்தால் போகிற காரியம் விளங்காது என்றார்கள். மீறும் விதவைகளுக்கு குடும்ப சொத்துரிமை மறுக்கப்பட்டது. திருமணம் முடிந்து இல்வாழ்வில் ஈடுபட்டு, குழந்தைகள் பெற்ற விதவைகள் ஆனாலும், பால்ய விவாஹம் புரிந்து திருமண வாழ்வு என்றால் என்னவென்றே தெரியாத சிறுமிகள் கூட கணவனை இழந்துவிட்டாலும் இதே கொடுமைதான்.   இவ்வளவு கொடுமைகளும் விதவைகளை நோக்கி ஏவப்பட்டது ஐதீகம், ஆன்மீகம், சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றின் பெயரால். 

ஆனாலும் 1856  ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த பண்டித  ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற பெருமகனின் முயற்சியால் ஆங்கில ஆட்சியாளர்கள் இந்து விதவை மறுமண சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆயினும் சட்டம் சட்டம் போட்ட சட்டமாகவே இருந்தது. நடைமுறையில் சாஸ்திரங்களே சட்டமாக இருந்தன. பெரும் குடும்பங்களில் கைம்பெண்களின் மறுமணம் பற்றி நினைப்பது குடும்பத்துக்கு அவப்பெயராக கருதப்பட்டது. 

பெண்களுக்கு எதிரான இரு பெரும் கொடுமைகள் ஆங்கில ஆட்சி நடைபெற்ற காலங்களில் சட்டப்படி தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. அதுதான் சட்டப்படி நிறுத்தப்பட்டுவிட்டதே அது பற்றி ஏன் எழுதி பக்கங்களை வீணடிக்கிறேன்? ஏதோ ஆங்கில ஆட்சி இருந்ததால் இந்தக்கொடுமைகள் சட்டப்படி அகற்றப்பட்டன. இந்திய அரசர்கள்- அவர்களது ராஜ ரிஷிகள் – பிராமண பட்டாளம் சூழ  இருந்திருந்தால் இவை நிறைவேறி இருக்காது. அதுமட்டுமல்ல ஆங்கில அரசாலும், சீர்திருத்தவாதிகளாலும் இந்த சட்டங்களை இலகுவாக நிறைவேற்றிட முடியவில்லை. மதவாதிகளின் தீவிர எதிர்ப்புகளைத்தாண்டித்தான் நிறைவேற்றப்பட்டன  என்கின்றன வரலாற்றின் பக்கங்கள். 

அடுத்து, நாட்டின் சட்டத்தில் தடுக்கப்பட்டவை  மனுநீதியில் மற்றும் சாஸ்திரங்களில் இருந்துகொண்டு இருக்க இன்னும் ஏன் அனுமதிக்க வேண்டும் என்பதே என் கேள்வி. இவைகளை ஏன் ஒட்டுமொத்த  தடை செய்து ஒழிக்கக்கூடாது? சட்டத்தின் ஆட்சி என்றால் சாஸ்திரத்தின் ஆட்சி ஏன்? நாட்டில் இன்னும் பலபகுதிகளில் தேவதாசி முறை இருப்பது ஏன்?  -  சட்டத்தால் ஒழிக்கப்பட்ட சாஸ்திரத்தின் வசனங்கள்  கோயில்களில் ஆறு  கால பூஜைகளில் ஆர்ப்பரிக்கப்படுவது ஏன்? நாட்டை ஆளவேண்டியது  சட்டங்களா? சாஸ்திரங்களா? சாராயக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் அவை ஒழிக்கப்பட்டுதானே ஆகவேண்டும்? அதேபோல் விதவைமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்ட பின்பு சாஸ்திரம் ஏன் அதைத்  தடுக்கவேண்டும்?  பால்ய விவாகம், தேவதாசிமுறை ஆகியவை சட்டத்தால் ஒழிக்கப்பட்ட பின்பும் சாஸ்திரத்தில் ஏன் இருக்கவேண்டும்? இந்த சாஸ்திரங்கள் சாராயக்கடைகளைப் போல் ஒழிக்கப்பட வேண்டியவை அல்லவா?

கொஞ்சம் இருங்கள் இந்த சாட்டைக்கு மாஞ்சா போடவேண்டும்.

இன்னும் சுழலும் இந்த சாட்டை ...
இபுராஹீம் அன்சாரி

21 Responses So Far:

Abdul Razik said...

Superstition will place until vanishing of naive people. This is most dangerous; the solution to stop this foolishness by amending strict law and punishment. Hoping this kind of articles may create state of awareness to all people. Well done Mr. Ibrahim Ansari.

Abdul Razik
Dubai

சேக்கனா M. நிஜாம் said...

"சமூக நீதியின் முரசு" மூத்த சகோ. இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு மீண்டும் என் வாழ்த்துகள் !

காக்கா மறந்துடாதிங்கோ ! இறுதியில் புத்தகமா வெளியிடுவதற்கு.....ஆதி திராவிட சகோதரர்கள் கண்டிப்பாக படிக்கக்கூடிய சிந்தனையைத் தூண்டும் ஆக்கம் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பாவம் அந்தப் பெண்கள்.
பலனுண்டு உங்கள் தொடருக்கு!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தலைவர் சொல்லின் செல்வர்- சத்திய மூர்த்தி ( இவர் பெயரால்தான் தமிழக காங்கிரசின் தலைமை இடம் சத்திய மூர்த்தி பவன் என்று பெயரிடப்பட்டுள்ளது ). ஒரு பிராமணர். //

இவரா அவரு !?

நான் என்னமோ சுதந்திர போராட்ட தியாகின்னுல நெனச்சுகிட்டு இருந்தேன் !

சாட்டை சுழலட்டும் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

காக்கா, ஏற்கனவே உங்க சாட்டை ரொம்ப கூர்ப்பா தான் இருக்குது. மாஞ்சா போட்டியன்னா தாங்காது. இதற்கு சென்னையில் தடையும் விதித்து விட்டார்கள். (ஒரு விசயம் ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து கடைசியில் மனுசனைக்கடிக்கும் பொழுது தானே அது பற்றி நம் மக்களுக்கு விழிப்புணர்வே வருகிறது).

இதை தொகுத்து ஒரு புத்த‌க‌மாக‌ வெளியிட்டு உரிய‌வ‌ர்க‌ளுக்கு உரிய‌ நேர‌த்தில் சென்ற‌டைய‌ முய‌ற்சித்தால் ந‌ல‌ம் ப‌ய‌க்கும்.

ZAKIR HUSSAIN said...

//அவர்களின் இந்த இறைப்பணி என்ற அரிச்சுவடி விபச்சாரி என்ற முதுகலைப் பட்டதாரிகளாக அவர்களை ஆக்கி முடித்தது.//

தேவதாசி முறையின் மொத்த செயல்களுமே இந்த இரண்டு வரியில் இருக்கிறது.

சில சமயங்களில் இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை இல்லை என்று இவர்கள் பேசுவதுதான் ஹைலைட் காமெடி.


//மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதிகளும் கர்நாடகத்தில் பிடரி, பத்மாலயா, நித்யானந்தா, சாய்பாபா, கல்கி, ராம் நகரம் போன்ற ஆசிரமங்களும் நிறைந்து இருக்கின்றனவோ என்ற ஐயப்பாடும் மேலோங்குகின்றது.//

மடங்களில் 'தாந்த்ரிக்" சொல்லித்தருகிறேன் என்று பல "நித்தி'கள் இப்போது உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் வக்கிரத்துக்கு ஓசோவின் தத்துவங்கள் எப்போதும் ரெபரன்சின் இருக்கும்.

Yasir said...

பெண்களை அடிமைகளைவிட கீழ்த்தரமாக நடத்திய நடத்திக்கொண்டிருக்கும் இந்த சமுதாயம் எங்கே“ தாயின் காலடியில் சொர்க்கம்,”பெண்களுக்கு அவர்களின் முழு உரிமையையும் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்ன இஸ்லாம் எங்கே...அறிந்திராத பலவிசயங்களை இந்த சாட்டையடி கொண்டு வருக்கின்றது...மாஞ்சா தடவி சுழலட்டும் இச்சாட்டை

Ebrahim Ansari said...

தம்பி சேக்கனா எம் நிஜாம் அவர்கள் சொன்னது

//காக்கா மறந்துடாதிங்கோ ! இறுதியில் புத்தகமா வெளியிடுவதற்கு....//

தம்பி மறந்துடாதீங்கோ ! நீங்கள்தான் இதற்கு உதவ வேண்டுமென்று ஏற்கனவே கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

தம்பி நெய்னா அவர்கள்

//இதை தொகுத்து ஒரு புத்த‌க‌மாக‌ வெளியிட்டு உரிய‌வ‌ர்க‌ளுக்கு உரிய‌ நேர‌த்தில் சென்ற‌டைய‌ முய‌ற்சித்தால் ந‌ல‌ம் ப‌ய‌க்கும்.//

இறைவனின் அருளால் இது நடக்கும் இன்ஷா அல்லாஹ்.

Anonymous said...

ஒரு புத்தகத்தை வெலியிட்டால் மிக பயனுள்ளதாக இருக்கும். எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்யிவானாகவும் ஆமின்.

Ebrahim Ansari said...

Dear Janab. M.S.M. Aboobucker( Amezan).

We will. Insha Allah on completion of the article.

Unknown said...

dr .முத்துலட்சுமி அவர்களின் தீர்மானத்தை எதிர்த்த சத்தியமூர்த்தியின் பெயரை காங்கிரஸ் கொடிதூக்கி பிடிப்பதை ,உண்மை அறிந்த எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் .எல்லோரையும்ப்போல நானும் உங்கள் ஆக்கம் புத்தகமாக வெளிவர விரும்புகிறேன் .

sabeer.abushahruk said...

அந்த தேவதாசி முறையின் விட்டகுறை தொட்டகுறைதான் இன்று இந்த நித்தியானந்தகாண்டமோ!

இப்படி கன்றாவியான கொள்கைகளை வகுத்துக்கொண்டு, நித்தியைக் குறைசொல்தல் இவிங்களுக்கு ஞாயமில்லீங்கோ.

மானத்த வாங்க்றீங்க காக்கா, விடாதீங்க, பிடி இருகட்டும்; அடி தொடரட்டும்.

-Sabeer from Ajman again.

Ebrahim Ansari said...

//Sabeer from Ajman again.//

வரவு நல் வரவு.

இப்னு அப்துல் ரஜாக் said...

கேடு கெட்ட பிராமண பாலிசியில் ஒன்னு தேவதாசி-வேசி முறை.டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியின் மூக்குடைப்பால் உடைந்தது சத்திய மூர்த்தியின் மூக்கு மட்டுமல்ல,இன்றும் பல வழிகளில் பிராமன் சாஸ்திரங்கள் தோலுரிக்கப்பட்டு ராம கோபால ஐயன்,இல.கணேசன் போன்றோரின் மூக்குகலுமே.திருந்துமா பிராமண சமுதாயம்?வருவார்களா சமத்துவம் போற்றும் இஸ்லாம் நோக்கி.

அதிரை சித்திக் said...

பாவம் அந்த பெண்கள் ...

பொட்டுக்கட்டி..வாழ்வை சீரழிக்கும்

இழிவான நிலை இன்னும் இந்தியாவில்

இருக்கிறதா ,மகாராஷ்டிரா ,கர்நாடகாவில் ,

இன்னும் ஒருகூட முத்து லெட்சுமிரெட்டி

பிறக்கவில்லையா ...காக்கா தங்களிம்

எழுத்து அனைத்தும் வைர வரிகள் .....

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அன்புச் சகோதரர் இபுறாஹிம் அன்சாரி அவர்களுக்கு: தங்களின் அழகிய ஆய்வுக் கட்டுரைக்கு வாழ்த்துக்கள்!

///கொஞ்சம் இருங்கள் இந்த சாட்டைக்கு மாஞ்சா போடவேண்டும்.///

காத்திருக்கிறோம்.

Ebrahim Ansari said...

சகோதரர். அலாவுதீன் !

அலைக்குமுஸ்ஸலாம்.
நலமாக இருக்கிறீர்களா?

crown said...

கொஞ்சம் இருங்கள் இந்த சாட்டைக்கு மாஞ்சா போடவேண்டும்.
-------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். அப்படி போட்டு சாஞ்சா, ஓஞ்சா நல்லதுதான் மாஞ்சா!அதுவும் நூலில் போடும் மாஜாவும்,சாஸ்திர நூலில் போட்டு அந்த பக்கங்களை நீக்கினால் சமுதாயத்தில் தாழ்தபட்டவர்களின் வாழ்கையும் உயரும் அந்த தாசி பட்டம் அழிந்து அவர்களின் வாழ்வில் இந்த மாஞ்சானூலின் மூலம் நல்ல தொரு பட்டம் பறக்கட்டும்.சுழலட்டும் உங்கள் மாஞ்சா சாட்டை!அடங்கட்டும் அவாளின் சேட்டை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு