Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொடிசுகளின் தலை நோன்பு! 34

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2012 | , , ,


அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு சிலிர்க்கும் சுவாரசியம் கூடிய தகவலை நான் இங்கே பகிர்ந்துகொள்ள விழைகிறேன் அதுவும் சின்னதாய் செல்ல கவிதைவரிகளுடன்!. 

நகைச்சுவையாக சொல்ல நினைத்தேன், நேற்று 22-ஜூலை-2012 எனது மூன்றாவது மகளும், என் மூத்த காக்காவின் மூன்றாவது மகளும் (இருவரும் ஒரே வயது 6) நோன்பு இருக்க ஆசைப்பட்டு நோன்பு(ம்) பிடித்தார்கள்.

நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம், அவர்களை கட்டாயப்படுத்தாமல் அவர்களின் போக்கில் முழுதாக நிறைவு செய்தால் நல்லது, இல்லையென்றால் பரவாயில்லை என்கிற முடிவில் நிறைவில் அல்லாஹ்வின் கிருபையினால் நல்ல முறையில் நிறைவு செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!!.

இதற்குள், அவர்களை சோர்வு தாக்காதிருக்க எனது மனைவியும், என் காக்காவின் துணைவியார் (மச்சியும்) மற்றும் சகோதரர்கள் எங்கள் இருவரின் குழந்தைகளும் எப்படியெல்லாம் எங்கள் சின்னஞ்சிறு மொட்டுக்களை கவனித்து கொண்டார்கள் என்பது சுவாரசியமகவும். சிலிர்ப்பாகவும் நடந்தேறியது அன்றைய பொழுது. 

நேற்று எங்கள் பகுதியில் வெயில் உக்கிரமாக இருந்தது 107டிகிரி. ஆனாலும் இரு பிள்ளைகளும் செய்த சேட்டைகள் யாவும் குளிர்ச்சியாக அமைந்தது. எல்லாம் நல்ல படியாக முடிந்ததும் பின்னர் எனது மகள் "வாப்பா! இன்னைக்கும் நான் நோன்பு பிடிப்பேன் சஹருக்கு எழுப்புங்க" என்று சொன்னதும்.

எனக்குள் எழுந்தது இந்த சின்ன சுவாரசிய கவிதை!!?

செல்லமே!

கேட்பதெல்லாம் சரிதான்
கேட்பதும் நல் முறைதான்!
அல்லாஹ் சொன்ன கடமையை
இத்துணைச் சிறு வயதில்
கடைபிடித்த சிறுமி என் செல்லம்தான்!

கட்டாயம் உனக்கு இது
கடமை இல்லை செல்லமே!
நீ கேட்ட  ஒருமுறை
நாமும்தான் சம்மதித்தோம்!
மறுபடியும் நோன்பிருக்க
மரிக்கொழுந்தே கேட்கின்றாய்!

இனி ஒருமுறை
நீ(ங்கள்) நோன்பிருக்க
உங்களுக்குத் தெம்பிருக்கும்
வீட்டில் உள்ள
எங்கள் உடல் தாங்காது!

இப்படி நகைச்சுவையாய்???? முடித்தேன் காரணம் இந்த இரு வாண்டும் நோன்பிருக்க அடித்த லூட்டி, அலுச்சாட்டியம். அவர்கள் கேட்டு வைத்த ப(பா)ல நூறு கேள்விகள் அப்பப்பா!!! மறுபடியும் எங்க உடம்பு தாங்காது!!!!!

CROWN

34 Responses So Far:

Anonymous said...

மகுடத்தின் மருக்கொழுந்து மகள்கள்

மருவில்லாக் கொழுந்துகள்
பிடித்த முதல் நோன்பு
வலைதளத்தில் செய்தியாய்
வாசிப்போருக்கு மகிழ்ச்சியாய்

பல கேள்விகள் கேட்டார்களாம் – அவ்வளவும்
பலா கேள்விகளாம்
பிள்ளைகள் களைக்கவில்லை
நோன்பை தொடர சளைக்கவில்லை

அழகின் சின்னங்கள் பற்றிய
அருமையான செய்தி.
மருக்கொழுந்துகளே – நீங்கள்
தழைத்து வளருங்களேன்.

வாழ்த்துக்கள்- துஆக்கள்.

(சபீர் அவர்கள் கட்டுரை எழுத ஆரம்பித்தால் நானெல்லாம் கவிதை எழுத ஆரம்பித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.)

Ebrahim Ansari

sabeer.abushahruk said...

பொடுசுகள் வைத்த நோன்பில் பெருசு பெருசா நன்மை இருக்கும். கிரவுனின் சந்தோஷத்தில் கிலோகிலோவாய் இனிப்பிருக்கு.

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள நம்மைச் சுற்றி ஆட்கள் வேண்டும்; நல்லதமிழ் மொழியும் வேண்டும்.

ஆட்களுக்கு நாங்களுண்டு; மொழிக்கு நான் சொல்லவா வேண்டும்?

பொடுசுகளுக்கு முத்தமும் து ஆவும்; பெருசுகளுக்கு து ஆக்கள் மட்டும்.

அடுத்த பின்னூட்டத்தில் ஈனா ஆனா காக்காவுக்கு "ச்செக்"

யாராவது "அன்புடன்" அல்லது "அன்பன்" வந்து "ச்செக்" மாற்றட்டும்.

sabeer.abushahruk said...

விடாதே பிடி!


தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு ...
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!


மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் தலைநோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
ஒத்துவராத் தேட்டங்கள்!

வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார்
சொன்னதைக் கேளோம்!

சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரம்வரை
பசிதாகம் பொறுத்தோம்!

உச்சி வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்

அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்
நன்னாரி சர்பத்தும்
முன்னாலே இருக்கும்
தலைநோன்பு திறக்கவென!

படைத்தவன் பெரியவன்
எனும் பாங்கின்
அழைப்போசை கேட்குமுன்
அமுதமாய்க் காதில்விழும்
அடிக்கும் நகராவோசை!

மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!

-சபீர்.அபுஷாருக்
நன்றி: சத்ய மார்க்கம் டாட் காம்.

sabeer.abushahruk said...

(சபீர் அவர்கள் கட்டுரை எழுத ஆரம்பித்தால் நானெல்லாம் கவிதை எழுத ஆரம்பித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.)

//பல கேள்விகள்
பலா கேள்விகளாம்//

பல கேள்விகள்;பலா கேள்விகள்...
உங்கள் கவிதை எனக்கு எச்சரிக்கையா? சரிதான், இனிமேல் நான் கவனமாக எழுதாவிடில்!

பழகிப்பார்க்கிறேன் உங்களைப்போன்ற சொல் விளையாட்டில்

சிலசில கேள்விகளில்
நிலா வெளிவரும்
தலா இருமுறை
உலா அதுவரும்

பல கேள்விகள்
பலாச் சுளையென
பலா முசீபத்
எலாம் விளகிடும்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

பல கேள்விகள்
பலாச் சுளையென
பலா முசீபத்
எலாம் விளகிடும்
---------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். பலா"ன"கேள்விக்கே பலாமுசீபத் வரும் இது பலா கேள்வி !எல்லாம் இனியவையே! இன்னும் கேட்க ஆசை கவிஞரே தொடருங்களே உங்கள் பலாச்சு(வைளைக் கவிதைகளை!

Ebrahim Ansari said...

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது பார்த்திருக்கிறோம்.

பெண் மக்கள் தலை நோன்பு பிடித்தால் அவர்களுக்கு அசருக்குப் பிறகு பட்டுப்பாவாடை - முக்காடு உடுத்தி நிறைய நகைகளைப் போட்டு - கைகளில் மருதாணி இட்டு வைத்து இருப்பார்கள். இதைப் பார்க்கும் அடுத்தடுத்த வீட்டு பெண் மக்கள் தாங்களும் நோன்பு பிடிக்க வேண்டும் நகை போடவேண்டும் என்று அழுது அடம பிடிப்பார்கள்.

ஆண் குழந்தைகள் தலை நோன்பு பிடிக்கும்போது கழுத்தில் சங்கிலி போடுவதைப் பார்த்து இருக்கிறேன். ( அது தவறு என்று தெரியாமல் போடுவார்கள்)

நோன்பு காலத்தில் பள்ளிகளில் ஓதும் மாணவர்கள் மாணவிகள் உற்சாகமாக " அர் - ரகுமான் என்று கைகோர்த்து நடந்து " ஆமீனல்லாஹ்" என்று கோஷமாக வீட்டுக்கு வீடு போய் ஓதுவார்கள். பள்ளி ஒஸ்தாருக்கு காசு திரட்டிக் கொடுப்போம்.

கடற்கரைத்தெரு பெரிய புளியமரத்தின் அருகேதான் வாடாக்கடை. கஞ்சி காய்ச்ச கமிட்டி எல்லாம் அமைப்பதுண்டு. அந்த மல்லாக் கஞ்சியை மனது மறக்கவில்லை. சில பெரிய விலாசங்களின் வீட்டுக் கஞ்சி காய்ச்சப்படும் அன்று கூட்டம் அதிகம் இருக்கும்.

தம்பி சபீர் ச்சும்மா உங்களுடன் ஒரு செல்லச்சீண்டல் ... செக்கெல்லாம் வேண்டாம் எனது எல்லாக் காய்களையும் இழந்து நான் சரண்டர்.

Unknown said...

மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் மொட்டுக்களுக்கு..... குழந்தைகள் சாலிஹான குழந்தைகளாக வளர வாழ்த்துக்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

//"வாப்பா! இன்னைக்கும் நான் நோன்பு பிடிப்பேன் சஹருக்கு எழுப்புங்க" //

வாப்பாவின் வர்ண
வார்த்தை வித்தைகளை
வாஞ்சை மிகு மகளாரின்
நெஞ்சைப் பிழிய
கண்ணீர் வழிய
வைத்துவிட்ட;
தைத்துவிட்ட கவிதை
ஆம்@ குழந்தை ஒரு கவிதை

KALAM SHAICK ABDUL KADER said...

//மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!//

குழந்தையுடன் குழந்தையாய் உருமாறி எம்மையெல்லாம் உருகிடச் செய்யும் குழந்தை மனம் கொண்ட கவிவேந்தே! உன்றன் குழந்தை நோன்பு தின குதூகலத்தில் எங்களை (மூத்தோரையும்) குழந்தை காலம் நோக்கிப் பயணிக்க வைத்திருப்பதுவே உங்களின் சாதுரியம்.

பின்னூட்டத்திற்குப் பின்னூட்டம்; மறுமொழிக்கு உடன் மடல் இடல் கடன் என்ற பழக்கம் முகநூலில் முகம்புதைத்த காலம் மற்றும் என் சொந்த வலைத்தளத்தில் புகுந்த காலம் முதலாய் “பழக்க தோசம்” என்றானது; எனவே உங்களைச் “செக்” வைக்கவோ “செக்” பண்ணவோ கிஞ்சிற்றும் அடியேனுக்கு விருப்பமில்லை; மூத்த சகோ. இ.அ.காக்கா அவர்களைப் போலவே நானும் காய்களின்றி அவுட் ஆகிவிட்டேன்!

இனி, இன்ஷா அல்லாஹ் அ.நி. வழக்கப்படி என் கவிதையின் முடிவாக “ஏற்புரை வழங்கி விட்டால் சரிதானே” ஏற்பீராக!

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்காவும் கவியன்பனும் "எல்லாக் காய்களையும் இழந்து நிற்பதாக"ச் சொல்லியிருப்பதில் யாரும் சிக்கிக்கொள்ளவேண்டம் சிப்பாய்களே.

எல்லாக் காய்களையும் இழந்தாலும் நிற்பது யாராம்?

ராஜாவன்றோ என் ராஜாக்களே :)

Ebrahim Ansari said...

மறந்து போகாத ரமளான் காலங்கள்..
----------------------------------------------------
(இது ரமளான் பற்றியதல்ல…)

கப்ப வரும் முன் காகிதம் வரும்

வாப்பா! வரும்!
நோன்புப் பெருநாளுக்கு
ஹஜ்ஜிப்பெருநாள் கழிந்துதான்
பயணம்

சீங்கப்பூர் சாமானின் மணம்
அரேபிய பெட்டிகளில் இல்லை..
தகர டப்பாவில மூன்று அறைகளில்
பெரிசுமுதல் சிறிசுவரை
அல்மொண்ட் சாக்லெட்டுகள்
அதன் சுவையை என் பிள்ளைகள்
அரேபிய சாக்லெட்டுகளில் இன்னும்
அனுபவத்தில்லை...

டப்பாவின் மூடியில்
அச்சடித்த படங்களில் மட்டுமே
பார்த்த அல்மோண்ட்
பரிச்சயமாயிற்று பின்னாளில்
கல்ப் கடைகளில்…

ரெடிமேட் அறிமுகமாகாத காலமது
பிட் பிட்டாய் பழபழக்கும் துணிகள்..
வலியஅண்ணன் முதல் நான் வரை
அடிக்கக் கொடுக்கும் கடை
டவரின் கீழ்பாகம்
அன்று கோட்டு தைக்கத்தெரிந்த ஒரே டெய்லர்
செவிடன் செய்மகண்ணு….
ஒரு முறைகூட அலையவிடாமல்
அடிக்கக் கொடுத்தை தந்ததில்லை..
ஆனாலும் அவரிடமே அடிக்கக் கொடுக்கும்
அந்த ரகசியம் இன்னும் பிடிபடாத அதிசயம்

அத்தாளம் முடிந்து
நண்பர்கள் குழுமம்
நடுக்கடை டீ கடையில்
புட்டும் பயறும் டீயும் குடிக்கும்...
யார்! பணம் கொடுத்தார்?
ஞாபகமில்லை…
நான் ஒரு நாளும் கொடுத்ததில்லை
வீட்டில் வக்கணையாய்
உண்டாலும் இன்னும் வேண்டும்
என்றால் ஆம்! சொல்லும் வயிறு
அன்றைய வயிறு….

மாலையில் துவங்கி மஹ்ரிப் வரை
சிறுவர்முதல் பெரியவர்வரை
மகிழ்ந்து விளையாடும்
நெரிசல் குளங்கள்….

மஹ்ரிபுக்கு மட்டும்
கதவு பக்கம் நின்று தொழ
அடம்பிடிக்கும் நண்பர்களும் நானும்
தொழுகை முடிந்ததும்
முதல் ஆளாய் ஓடிப்போய்
அதிகம் கிழங்கிருக்கும்
கஞ்சிச் சட்டிக்கு அடி போட...

தராவிஹ் தொழுகை நடக்க...
கபடி விளையாடும் கூட்டம்
அவ்வப்போது
தொழுகை இடைவேளைகளில்
ஓடிவந்து ஒச்சை வைத்து விரட்டும்
ஊர் பெரிதுகள்…
ஒரு நிமிட ஒதுங்கல்களூக்கு பின்
மீண்டும் தொடரும் கபடி..

தரவிஹ் தொழுகைக்கு பின் கிடைக்கும்
இன்று நின்று போன..
சுக்கு காப்பியும் முறுக்கும்.
அப்போது...
அதிகம் சண்டைகளும், தர்கங்களும்
நடக்கும் அந்த ஹவ்து கரையின் இரவுகள்...

சுப்ஹீ தொழுதுவிட்டு
பள்ளியில் தூங்கினால்
வரும் பயங்கர கனவுகள்…
பள்ளிக் கூடம் இல்லா நாட்களில்
ளுஹர் வரை கதை போசும்
பள்ளித்திண்ணை..

பெருநாள் இரவுகளில்
கடைசி பஸ்ஸில் வரும்
நண்பர்கள் முதல் விடுமுறையில்
ஹாஸ்டல் விட்டு வீடுவந்த நண்பர்கள் வரை
அப்ஸரா ஸலூனில்
கூட்டம் போட்டு கதை சொல்லும்…

பெருநாள் வந்து விட்டதை
உறுதி செய்யிம்
நாகூர் அனிபா பாட்டுகளுடன்
வாடகை டியூப் லைட் கட்டும்
இறச்சிக் கடை.

சங்கு மார்க் லுங்கிகள்
இல்லாமல் பெருநாள் காலைகளில்லை
இண்டிமெட்டும், சார்லியும்
பள்ளியின் பேஃன் காற்றில்
மூச்சு முட்டும்…
(இண்டிமெட்டுக்கு சவுதியில் தடை)

தக்பீர் முழக்கம் கேட்கும் வரை
ஓயாத குளக்கரை கூட்டங்கள்…
நிராழியில் கடைசியாய் குளிக்கும்
காக்கா வரும் வரை தொடரும் தக்பீர்..

தொடர்கிறது நினைவுகள்…
பொருளாதாரம் தேடி சிதறிப்போன
என் நண்பர்கள்! பலரின் அன்றைய முகவரி
மறந்து போகவில்லை….
ஆனால் தொலைந்து போனது அவர்களின்
இன்றைய முகவரி.

அன்புடன்
B M SAINUDDIN

ZAKIR HUSSAIN said...

to Bro Crown,

பிள்ளைகளின் நோன்பு அனுபவம் படித்து ' வாழ்க்கை பிள்ளை பருவமாகவே இருந்திருக்க கூடாதா? " என நினைக்க வைத்து விட்டது.

KALAM SHAICK ABDUL KADER said...

யாருங்க செய்னுத்தின்? கலக்கிட்டார் போங்க!

அதரும் கிளித்தட்டு மறந்து போச்சா?
பதுரு படை மறந்து போச்சா?

மொத்தமாக “ஆமின்” கூறவும்;
அத்தஹிய்யாத்தில் கை நீட்டவும்
சத்தமாய் பக்கத்தில் தொழுபவரின்
வித்தகம் யாவும் “காப்பி”அடித்தது மறக்கலேயே

குறிப்பு: என் தாய்த்தெருவின் (என்றைக்கும்)புதுப்பள்ளியான இன்றைய புதிய கட்டிடத்தில் உள்ள புதுப்பள்ளியில் ஷ அ பானில் தொழுத போழ்து பழைய கால குழந்தைப் பருவ நோன்பு தின கொண்டாட்டம் என் மனதில் நினைவில் ஆடின; இப்பொழுது கவிவேந்தரும் அவருக்குப் போட்டியாக முளைத்துள்ள மூத்த பாவலரும் அழகாகப் பாடினதால் என்னால் மேற்சொன்ன விடயங்கள் மட்டும் இப்பொழுதுச் சுட்டிக் காட்ட வேண்டியாகி விட்டது.

sabeer.abushahruk said...

சகோதரர் சைனுத்தீனின் பால்ய நினைவுகள்தான் எத்துணை சுவாரஸ்யமானவை!!!

இத்தனை நிகழ்வுகளிலும் உடன் இருந்த தோழர்கள் குழாமும் கொடுத்து வைத்தவர்களே!!!

ஜாயிரு, நமக்கு மட்டுமல்ல, இன்னும் நிறைய பேர்களுக்கு இருக்கிறது இனிப்பான நெனெப்புகள்!

சகோ சைனுத்தீனின் மொத்த நினைவலைகளையும் அதிரை நிருபரில் கொட்டித்தீர்க்க அவர்களை அழைத்து வரும் பொருப்பை இ. அன்சாரி காக்கா ஏற்பார்களா?

Ebrahim Ansari said...

//சகோ சைனுத்தீனின் மொத்த நினைவலைகளையும் அதிரை நிருபரில் கொட்டித்தீர்க்க அவர்களை அழைத்து வரும் பொருப்பை இ. அன்சாரி காக்கா ஏற்பார்களா?//

இன்பமுடன் ஏற்பேன். இன்ஷா அல்லாஹ்.

ஏற்கனவே அபூ ஹஷிமாவை அழைத்துவந்தேன். சவுதியிலிருந்து சைனுத்தீனையும் இன்ஷா அல்லாஹ் அழைத்தால் போகிறது.

Ebrahim Ansari said...

//யாருங்க செய்னுத்தின்? கலக்கிட்டார் போங்க!//

நண்பர் சைனுத்தீன் - ஐ.டி மேலாளராக சவூதி அரேபியாவில் மனியார்ரும் நமக்கு நெருக்கமான கவிமணி கா. அப்துல் கபூர் பிறந்த திருவுதாங்கோட்டை சேர்ந்தவர். இப்போது இது போதும். மற்றவை அவரே சொல்வார். இன்ஷா அல்லாஹ்.

அறிவு ஜீவிகளை வரவேற்கும் அதிரை நிருபரின் அழகுக்கு அழகு சேர்க்க விரைவில் வருவார் ஒரு நிறைவான ஆக்கம் தருவார்.

Ebrahim Ansari said...

//மனியார்ரும் // பணியாற்றும் என்று படிக்க வேண்டுகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நான் மட்டும் தான் கவிதை(யே) எழுதவில்லை !

:)

சின்னஞ்சிறு மொட்டுக்களின்
சிலிரிக்கும் உணர்வுபூர்வமான
சூழலை சுருக்கமாக சொன்ன கவிதை !

அருமை !

மருமக்களுக்கு வாழ்த்துக்கள் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இன்பமுடன் ஏற்பேன். இன்ஷா அல்லாஹ்.

ஏற்கனவே அபூ ஹஷிமாவை அழைத்துவந்தேன். சவுதியிலிருந்து சைனுத்தீனையும் இன்ஷா அல்லாஹ் அழைத்தால் போகிறது.//

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் தஸ்தகீர்,

சிறு பருவத்தில் நோன்பு நோற்ற காலம் இன்று வராதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.

நோன்பு எப்படி பிடிக்கவேண்டும் என்று உங்கள் வீட்டு சிறுசுகளுக்கு கவிதையில் அநி மூலம் சொல்லிகொடுக்கலாமே (உங்கள் ஸ்டைலில்).

சபீர் காக்கா அடுத்த கிரவுன் கவிதை ரெடி..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மூன்றாம்
இருவருக்கும்
முதன்மை உணர்வின்
உண்மைக் கவிதை.

வாழ்த்துக்கள் பொடுசுகளுக்கு!

அதிரை சித்திக் said...

தல ...வீட்டில ..
தல நோன்பு கலாட்டா .
அரும்புகளின் குறும்பு ..
என்றுமே அலாதி தான் ..
நோன்பு வைத்துக்கொண்டு ..
செய்த குறும்பு எதுவும் உண்டா ..

Yasir said...

அல்லாஹ் இக்குழந்தைகளுக்கு அவன் அருளை வாரி வழங்குவானாக...

KALAM SHAICK ABDUL KADER said...

//ஏற்கனவே அபூ ஹஷிமாவை அழைத்துவந்தேன். சவுதியிலிருந்து சைனுத்தீனையும் இன்ஷா அல்லாஹ் அழைத்தால் போகிறது.//

இலக்கியத்தரம் மற்றும் தணிக்கை - நெறிமுறைகளில் அதிரை நிருபர்க்கு ஈடு இணையில்லை; எனவே, தங்களின் பேராதரவுடன் அறிவு ஜீவிகள் உலா வரும் அற்புத தளமாக அமையட்டும்; சைனுத்தீன் வரவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தமிழ் ஆர்வலர்களில் அடியேனும் ஒருத்தனாக இருக்கிறேன்; இப்பெயரில் எனக்கு புகுமுக வகுப்பில் தோழனாய் அறிமுகமாகி இன்று வரை ஆருயிர்த் தோழனாக இருக்கின்றவர் பெயரை இவரும் பெற்றிருப்பதும் கூடுதல் மகிழ்ச்சி!

இப்னு அப்துல் ரஜாக் said...

சிறுசுகள் ஆனாலும்
பெரிசுகள் கடமையை செய்து
அல்லாஹ்வின் அருளை
அள்ளப் போகும் இவர்கள்
எனக்கும் மகள்களே

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
எனக்கு பதிலாக கவிவேந்தர் சபீர்காக்கா அவர்களை ஏற்புரை ஏற்க அழைக்கிறேன்.அன்புடன் இசையும் படி கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு
கிரவுனின் குடும்பத்தினர்.

sabeer.abushahruk said...

கிரவுன் கேட்டா மறுப்பேது!

கலிஃபோர்னிய சிறுமிகளின் தல நோன்பு கலாட்டாக்கள் எம்மட ஊட்லேயும் நாலு முறை நடந்ததால் ஏற்புரை எழுதுவது எளிதுதான். அதற்கு முன்,

தல நோன்பு பிடிக்க வேண்டுமெனில் முதலில் வீம்பு பிடிக்க வேண்டும். அப்படி ஒத்துக்கொண்டபின் ச்சின்ன சபீருக்கு சொல்லித்தரப்பட்ட நிய்யத்

"நிய்யத் ஃபாத்திஹா ஹப்லாக்கு
நீ(ர்)ச்சோத்து பானையை நினைவாக்கு"

கலிஃப்போர்னியாவில் ஊருணியோ, ஒதுக்குப்புறமான அறையில் மண்பானைத் தண்ணியோ இருந்திருந்தால் 'இளகுவாக நோன்பு பிடிப்பது எப்படி' என்று பிள்ளைகளுக்கு ஒரு பாடமே எடுத்திருப்பேன்.

எப்படியோ, தல நோன்பு கதாநாயகிகளுக்கு முதலில் ஒரு "ஓ"!!!

sabeer.abushahruk said...

ச்சின்னஞ்சிறுசுகளின் நோன்பு என்றதும் அதே வயதை ஒத்த இபுராஹிம் அன்சாரி காக்காவுக்கு கவிதை பொங்கி வந்ததில் ஆச்சரியம் இல்லை. பல; பலா என்ற சொல் விளையாட்டு நோன்பின் களைப்பைச் சற்றே இலேசாக்கியது. ஜஸாக்கல்லா க்ஹைர் காக்கா.

ஈனா ஆனா காக்காவோடு சேர்ந்து பதிவைக் கலகலப்பாக்கிய சபீர் காக்காவுக்கும் சைனுதீன் சகோதரருக்கும் நன்றி.

//வாழ்க்கை பிள்ளை பருவமாகவே இருந்திருக்க கூடாதா?// "அசத்தல் காக்கா, கடவாய்ல ஜொல்லு ஊத்துது தொடச்சிக்கிஙக. கனவு ரொம்பத்தான் பின்னோக்கி போவுது. பிள்ளையென மாறி மடிதேடி அலையாம, நோன்பு நேரத்தில தஸ்பீஹ் சொன்னமா மஃரிபை ஆவலுடன் எதிர்பார்த்தமான்னு இருக்காம பிள்ளைப்பருவம் வேனுமாமே.

sabeer.abushahruk said...

//வாப்பாவின் வர்ண
வார்த்தை வித்தைகளை//

கலாம் காக்கா, உங்களை விடவா வார்த்தைகள் வாகாக வாய்த்துவிடப்போகிறது? பேரனோ பேத்தியோ தல நோன்புக்கு தயாரா? நன்றி காக்கா.

எம் ஹெச் ஜே:
//மூன்றாம்
இருவருக்கும்
முதன்மை உணர்வின்
உண்மைக் கவிதை.//

சம்பள நாளா? மூன்று இரண்டு முதல்(ஒன்று) என்று கணக்கு பின்னி எடுக்கிறீங்க?

மேலும் வாழ்த்திய ஒரிஜினல் காக்காவுக்கும் (அர அல) ஜாஃபர், யாசிர், தம்பி தாஜுதீன், சகோ அதிரை சித்திக் மற்றும் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் அபு இபுறாகிம் தோஸ்த்துக்கும் நன்றி.

வஸ்ஸலாம்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

இரு மூன்றாம் பிறையும்
தலை பிறையாய் நோன்பிருந்து
அல்லாஹ்வின் அருள்கிடைத்து
வளர் பிறையாய் இருந்திடவே
வாழ்த்துகிறேன்.

சாச்சா
அ.ர.ஹி

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். நன்றி! சபீர்காக்கா ஆனாலும் கடைசியா வந்த என் தம்பி அ.ர.ஹிதாயத்துல்லாவுக்கு என்ன சொல்ல போறிங்க?

Ebrahim Ansari said...

//ச்சின்னஞ்சிறுசுகளின் நோன்பு என்றதும்
அதே வயதை ஒத்த இபுராஹிம் அன்சாரி காக்காவுக்கு கவிதை பொங்கி வந்ததில் ஆச்சரியம் இல்லை. //

இதற்கு நான் அல்லவா நன்றி சொல்லவேண்டும்? தம்பி சபீர் ! நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேனோ? அதிலும் அந்த அதே வயதை ஒத்த என்றதுக்கு இரட்டை நன்றி. ஒன்றை மறக்காமல் கிரவுன் அவர்களிடம் கொடுத்து விடவேண்டியது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நண்பர் தஸ்தகீருக்கு,

என் தாமதமான பின்னூட்டத்திற்கு கோவிச்சிக்கிடாதியே,

உங்கள் க்யூட்டான குழந்தைகளின் தலை நோன்பு லூட்டி
எங்கிருந்தோ படிக்கும் எமக்கு பியூட்டியாக இருக்கிறது. அல்லாஹ் அதுஹ‌ளுக்கு சதுர சுகத்தைப்போட்டு வெக்கட்டும்.......ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு