கண்மணி குளிரோடு
கணவன் எனும் உன்னவன்
கணினியில் கலந்தாடி
காலந்தள்ளும் கோலமின்று
பனிப் பொழிவின் மிகுதி
பகுதியெங்கும் வெண்மணல்
மிகுதியான உன் நினைவால்
மீதி தள்ளுவதில் வெந்தனல்
இலைகள் கூட தாங்காது
குளிரால் உதிர்ந்தது போல்
இளமைகளில் சில
இழந்து விட்ட உணர்வு
மலரும் கனியுமிலா
மரம்போல உள்ளம் மட்டும்
பரந்து கிடக்கு - நாளை
வரும் நாட்களை எண்ணி
தனிமையெனும் கடும்பிடியில்
இனிமையெனும் எதுவுமற்று
பனிபொழிவு போல வெண்
மனதாய் மட்டும் இருக்கு
உன்னை விட்ட இப்பிரிவு
உறக்கமின்றி கனக்கும் இதயம்
ஏன் இந்தச் சதி வலையில்
அதிரையே அகப்பட்டதோ
காலம் செய்த கோலமிதை
கடத்தச் செய்யும் வினையோ
கஷ்டமான ஒன்றாய் கோடைக்
கதிரவன் சுடுவது போல
கடந்ததை எண்ணிட
கனத்திடும் இதயம்
கனவில் நினைத்திட
கண் விழிப்பில் மனக்காயம்
“உ”. க்கள் மூன்றின் அருமை கருதி
வெற்று மனிதனாய் வருந்தி
வெள்ளந்தியாய் நாட்கடத்தி
வெளியேறிடும் நாளை எண்ணி
ஒன்று மட்டும் தென்படுகிறது
உடல் மட்டும் தொலைவாகி
உள்ளம் மட்டும் நெருக்கமாகி
கள்ளமில்லா எண்ணம் வருகிறது
நெஞ்சை நெகிழும் இப்பிரிவில்
தஞ்சை தரணியைக் கொண்ட நமக்கு
செட்டியா குளக் காட்சி கூட
ஊட்டி விடுகிறது கண்ணுக்கு விருந்தாகி
கடல் கடந்த வாழ்வில்
கப்பலேறிய கடித காலத்தில்
கைபேசி கிடைத்த இத் தருணத்தில்
கைமாறு செய்வது எங்ஙனம்?
M.H,ஜஹபர் சாதிக்
26 Responses So Far:
ஆஹா!
சபீர்காக்கா வின் வரிப்பிடித்து நான் தொடர்ந்ததையும் போட்டாச்சா.
நன்றி.
என்னைப் பற்றி என்ன நினைக்கப் போரியல்வலோ என்பதே இப்ப எனக்கு திக் திக்!
---------------------------------------
ரபியுள் அவ்வல் 10
ஹிஜ்ரி 1434
இலைகள் கூட தாங்காது
குளிரால் உதிர்ந்தது போல்
இளமைகளில் சில
இழந்து விட்ட உணர்வு
உன்னை விட்ட இப்பிரிவு
உறக்கமின்றி கனக்கும் இதயம்
ஏன் இந்தச் சதி வலையில்
அதிரையே அகப்பட்டதோ
நெஞ்சை நெகிழும் இப்பிரிவில்
தஞ்சை தரணியைக் கொண்ட நமக்கு
செட்டியா குளக் காட்சி கூட
ஊட்டி விடுகிறது கண்ணுக்கு விருந்தாகி
____________________________________________
இந்த வரிகள் நெஞ்சை வருடும் அருமை கவி வரிகள்
வைர வரிகள் ..
எண்ணிலடங்கா ..நம்மவர்களின் உள்ளத்தில்
புழுங்கி மடியும் சொற்களை பாக்களாய் தந்த பாவலர்
ஜகபர் சாதிக் ..கவிதையின் வித்தகர் எனலாம்
கடிதங்கள் ஆனாலும் ...கணணி கால ஸ்கைப் அனாலும் சரி
பிரிவின் கொடுமை ..கொடுமைதான் ..
அருமையான அர்த்தமுள்ள கவிதை. ஜாபர்சாதிக்.
பலரின் எண்ணக் குமுறல் இக் கவிதை வரிகள்வாழ்த்துக்களும் துவாவும்
/'/செட்டியா குளக் காட்சி கூட
ஊட்டி விடுகிறது கண்ணுக்கு விருந்தாகி//
நமது தலைநகரம் நாம் பிறந்த ஊர்தான்
ஆண் விதவைகள்
**************************
பேராசிரியர் - கவிமாமணி தி.மு.அப்துல் காதர்
****************************
எரிபொருள் தேசத்தின்
எரிபொருள் இவர்கள் !
***அன்னை தேசம் விட்டு
எண்ணெய் தேசத்திற்கு
ஏன் வருகிறார்கள்?
ஓ!
"பற்றா"க்குறைதான்!
****சொந்த வீட்டு
அடுப்பு அமாவாசை நீக்கி
கலயக் கஞ்சி பவுர்ணமிக்காக
வாலிபம் கருக
இரவாகிறார்கள்!
பாலையில்
விறகாகிறார்கள்!
***சிலர்
பெட்ரோல் எண்ணெயில்
பொரித்த
தினார்-திர்ஹம்-ரியால்
மசால் வடைக்காக
பொறியில் சிக்கும்
எலிகள் !
ஆனால்
வடைகள்
எலிகளைத் தின்று விடுகின்றன!
***கல்யாண வாசம் மாறுமுன்
கப்பல் ஏறிய மாப்பிள்ளைகள் !
காலமெல்லாம்
கண்களில் செஹ்ரா
கட்டிக் கொண்டிருக்கும்
மணப் பெண்கள்!
காலம் தாண்டினாலும்
கணவர்களின்
கூலி தாண்டுவதில்லை
ஆனால் வெள்ளாடுகள்
வேலி தாண்டி விடுகின்றன !
***விரக நரகப்
பிரிவு நெருப்புப்
பிழம்பான இவர்களின்
நிழலும் சுடும் என்பதால்
மண்ணில் கால்பதியாமல்
விண்ணில் நடக்கிறான்
வெப்பச் சூரியன் !
***நல்ல குடும்பம் ஒரு
பல்கலைக் கழகம் என்பதால்
அஞ்சல் வழியில்தான்
அந்தக் குடும்பம் நடக்கிறது!
***தாயகத்தில் இருந்துவரும்
அஞ்சல் கவர் இமை திறக்கையில்
தவறவிட்ட
தாயின் தீதார் !
மடல் பட படக்கையில்
மனையாளின்
முதல் ஸ்பரிச நடுக்கத்தைக்-
கடிகார டிக்டிக்கில்
நோயாளித் தந்தையின்
இதயத் துடிப்பை -
மின்விசிறி சுழல்கையில்
குமுறும் குமர்களின்
பெருமூச்சை -
செல்போன் ஒலிப்பில்
செல்லங்களின் சினுங்கல்களைத் -
தொலைபேசியை தூக்குகையில்
தொப்புள்கொடி அறுபடாத்
துண்டுநிலாக் குழந்தையைச்
சூனியத் தாள்களில்
இமைத் தூரிகையால்
தீட்டுகிறார்கள்!
***
பிறப்பையும் கண்டதில்லை
பிள்ளையின் மழலைச் சொற்கள்
சிறப்பையும் கண்டதில்லை
சிறு மகள் பூத்து நாணும்
மறைப்பையும் கண்டதில்லை
மகனெனத் தன்னைப் பெற்றோர்
இறப்பையும் கண்டதில்லை -
இதற்குமேல் சாவு இல்லை!
படித்தவர்கள் அங்கே
மூளையாயிருக்கிறார்கள்
படியாதவர்கள்
சூளையாயிருக்கிறார்கள்!
ஆயுள் முழுக்க
அயல் நாட்டில் இருக்கும்
அத்தா வாப்பா எல்லாம்
இத்தாவில் இருக்கும்
ஆண் விதவைகள் !
வாழும் நாடு வரை நீளும்
தேவைகளின் பட்டியல்
அதனால் நீளும்
விசாவின் காலம்
வெளிச்சமும் நிழலும் போல !
தாயகம் திரும்பும் பொது
தக்கையாய்க்
காலம் சப்பிப்போட்ட
சக்கையாய்....
அத்தர் வாசத்தோடு
அவர்கள்
பளபளப்பாய் வருகிறார்கள்
ஒரு
கஃபன் துணிபோல !
------நன்றி - நமது முற்றம் மாத இதழ்
உயிரே உருகித் தரையில் ஓடுதோ
உன்றன் உணர்வின் ஓசைதான் பாடுதோ
நமக்கு நாமே இட்டுக் கொண்டச் சிறையிதோ
நாளும் மடிந்து போகும் பாடும் பறவையோ
ஊரே உப்பளம் போல் பனிபடர்ந்திருந்தாலும்
தனிமையில் உள்ளங்களெல்லாம் கொப்புளங்களாய் இருப்பது
நாமே தேடிச்சென்று வாங்கிக்கொண்ட இனிமையாய் தெரியும் ஒரு அடிமைத்தனம்.
மச்சான் ஜஹபர் சாதிக்கின் அருமையான கவிதை நம் அனைவருக்கும் பொருந்தும் தனிமையில் இருந்தாலும், குடும்பத்துடன் இருந்தாலும் தாய்நாடும், தஞ்சமடைந்த நாடும் தனித்தனி நாடு தானே.
கணவன் எனும் உன்னவன்
கணினியில் கலந்தாடி
காலந்தள்ளும் கோலமின்று//////
*கண்தெரியா தாயவளும்
கணினி தெரியா தந்தையும்
என் செய்வர்
---------------
கண்மணி குளிரோடு
பனிப் பொழிவின் மிகுதி
பகுதியெங்கும் வெண்மணல்
மிகுதியான உன் நினைவால்
மீதி தள்ளுவதில் வெந்தனல்/////////////
*பனிப்பொழிவிவை கண்டு களிக்க
குலுமனாலி போவதுண்டு
ஓரிரு நாட்கள்
பணியால்(பனியால்)வாடி
பரிதவிக்கும் நீங்கள்
பாவப்பட்ட ஜெண்மமோ?
---------------------
இலைகள் கூட தாங்காது
குளிரால் உதிர்ந்தது போல்
இளமைகளில் சில
இழந்து விட்ட உணர்வு////////
*நாளை கிடைக்கும் பலாக்காயைவிட
இன்று கிடைக்கும் கலாக்காய் மேல் என்பர்
நம்முன்னோர்கள்
--------------------------------------------
மலரும் கனியுமிலா
மரம்போல உள்ளம் மட்டும்
பரந்து கிடக்கு - நாளை
வரும் நாட்களை எண்ணி//////////////
*பணமும் காசும் சேர்த்து வைத்து
மலரும் கனியும் இல்லா மாரமாய்
ஏங்கி நிர்பதும் ஏனோ?
--------------------------------------
உன்னை விட்ட இப்பிரிவு
உறக்கமின்றி கனக்கும் இதயம்
ஏன் இந்தச் சதி வலையில்
அதிரையே அகப்பட்டதோ/////////
*அதிரை அகப்பட்டது சதி வலையல்ல
ஆசை வலை
------------------------------------------
கடல் கடந்த வாழ்வில்
கப்பலேறிய கடித காலத்தில்
கைபேசி கிடைத்த இத் தருணத்தில்
கைமாறு செய்வது எங்ஙனம்?//////
*கடல் கரையோரம்
கைகோர்த்து துனையோடு நடக்கையிலே
கைபேசி என் செய்ய?
----------------------------------------------------
நல்லகவி பாடியுள்ளீர்
நம்மவர்க்கு
நல்ல முகாரி ராகம்
கடல் கடந்தவர்களுக்கேற்ற காதல் கவிதையாய் இருக்கு அருமை. சகோ, ஜாபர் சாதிக்
அருமையான அர்த்தமுள்ள கவிதை. Brother ஜாபர்சாதிக்.
வென்பணிபோல் மின்னுகின்றது கவிதை..மனதை வருடும் வரிகள்...நாளுக்கு நாள் உங்கள் கவித்திறமை மெருகேறி வருக்கின்றதே எங்ஙனம்..வாழ்த்துக்களும் துவாக்களும்...போர்வையை நல்ல போர்த்திக்கிட்டு தூங்குங்க வேற என்னதான் செய்ய முடியும் :) இந்த நடுங்க வைக்கும் குளிரில்
Assalamu Alaikkum
Reflection of feelings of separation
Initially we could face the separation
There could be an ideal living
Once we put limit for separation
Either you settle in the mother land
Or you settle there in the living land
Whose choice, awaiting for
Someone to decide for you?
//ஒன்று மட்டும் தென்படுகிறது
உடல் மட்டும் தொலைவாகி
உள்ளம் மட்டும் நெருக்கமாகி
கள்ளமில்லா எண்ணம் வருகிறது//
ஆஹா அருமையான வரிகள்
நல்லாருக்கு எம் ஹெச் ஜே,
நேரமின்மையால் விரிவாக பின்னூட்டமிட இயலவில்லை. நிச்சயம் மீண்டும் வருவேன்.
வீட்டின்மேலும்
வீதியெல்லாமும்
துளித்துளியாய் நெய்த
பனித் துப்பட்டி
அமீரகம் அளவுக்கு
அதிரையர் இல்லையா
உஷ்ணக் காற்றில்
உருகியோடி
தேம்ஸ் நதியின்
நீர்மட்டம் கூட்டிட.
கதகதப்பிற்கு
கம்பளிகள் எதற்கு
கரம்பிடித்தவளின்
கனவுகள் போதாதா?
பணி மூப்பெய்வதற்குள்
பனி தேசம் விடவும்
இலைகள் உதிர்வது
மரங்களுக்குத்தான் இயல்பு
இளமை உதிர்வது
மனிதனுக்கு இழப்பு.
தேய்வு கூடி
ஓய்வு நாடி
சாய்வு நாற்காலியில்
தஞ்சம் புகுமுன்
கொஞ்சம் வாழ்க்கையாவது
மிச்சமிருக்கட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
கைப்பிடித்து எழுத வைத்து ஆமோதித்து பதிவுக்குள் வரச் செய்த சபீர் காக்கா, நெறியாளராக்காவுக்கு மிக்க நன்றி!
தம்பி ரபீக்; எனது என்றாலே உடன் தவறாது கருத்திடுவதற்கு மிக்க நன்றி.
அன்புள்ள சித்தீக் காக்கா; எதோ என்னால் முடிந்த கவிகாக்காவின் உந்துதலால் கிடைத்த சொற்களே! நன்றி காக்கா.
ஜாஹிர் காக்கா; நம்ம ஊரு நமக்கு தலைநகர் மட்டுமல்ல தலை சிறந்த நகரமும் தான் . நன்றி காக்கா.
டாக்டர் இப்ராஹிம் அன்சாரி காக்கா; உருக்கமான கவிதையை இங்கு பதிந்து இதற்கு இன்னும் சிறப்பு சேர்த்தமைக்கு மிக்க நன்றி
கவிஞர் கலாம் காக்கா; //நமக்கு நாமே இட்டுக் கொண்டச் சிறையிதோ// முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி, இரத்தத்தில் ஊறச் செய்துவிட்டதாகவே உணர்கிறேன். நன்றி காக்கா.
அன்பின் நெய்னா மச்சான்; //தஞ்சமடைந்த நாடும் தனித்தனி நாடு தானே.// என்னதான் இன்பமாய் வாழ்ந்தாலும் தஞ்சமடைந்த நாட்டு வாழ்க்கை கிணற்றுத் தவளை போல தான். நன்றி மச்சான்.
அன்புள்ள சபீர் மைத்துனர் அவர்களே; //அதிரை அகப்பட்டது சதி வலையல்ல
ஆசை வலை// ஆசை மட்டுமல்ல அவசியமான ஒன்றாகவும் ஆகி விட்டதே! மற்ற கருத்துகளில் 'நான் அவன் இல்லை' பதிவுக்கு நன்றி.
நண்பர் யாசிர்;// மெருகேறி வருகின்றதே எங்ஙனம்..//
நீங்கள் கருப்புக்குள் புகுந்து தமிழை தனிச்சிறப்பாய் கொட்டுவதின் பொறாமையும் கூட! இப்படியும் எழுத வைக்கிறது. நன்றி நண்பா!
சகோ. அமீன்; உங்கள் ஆங்கில கருத்து கவிதை சிந்திக்கக் கூடியதே! தேங்ஸ்.
இன்னும் கருத்திட்ட சம்சுதியாக்கா, அப்துல் வாஹித் அண்ணாவியார் அவர்கள், சகோ. லத்தீப், சகோ . அபூ சுலைமான், விஞ்ஞானி ஹமீதாக்கா,
கிடைக்காத நேரத்திலும் கருத்திட்டு இன்னும் ஒரு அருமை கவிதை தந்த இக்கவியின் மூலம் சபீர் காக்காவுக்கு மீண்டும் நன்றி. இன்னும் நேசித்த யாவருக்கும் மிக்க நன்றி.
---------------------------------------------------------------------------------------------------------------------
ரபியுள் அவ்வல் 11
ஹிஜ்ரி 1434
உள்ளத்தை உரசிச் செல்லும் காதல் நிறைந்த அருமைக் கவிதை. சூப்பர்.
migavum arumaiyaana kavithai vaazthukal.
பின் கருத்திட்ட நண்பர் ஜபருல்லா, சகோ. முகம்மது ஹசன். மிக்க நன்றி.
சபீர் காக்கா
உங்க கவியால் தேம்ஸ் நதி கொஞ்சம் கூடிய மகிழ்வு. அருமை அருமை.
75% பனி கரைந்து விட்டது.
//சாய்வு நாற்காலியில்
தஞ்சம் புகுமுன்
கொஞ்சம் வாழ்க்கையாவது
மிச்சமிருக்கட்டும்.//
ஆமீன்
உங்க பின்னூட்ட கவிக்கு எனக்கு மேலாக 2 பேரிடம் கை தட்டு கிடைத்தது.
ஆமீன்
உங்க பின்னூட்ட கவிக்கு எனக்கு மேலாக 2 பேரிடம் கை தட்டு கிடைத்தது.
பிழைப்புக்காக பிரிவுகளின் அனுபவங்களை சகோ அருமையாக சொல்லி இருக்கிறீர். வாழ்த்துகள்.
பூமியின் கன்னத்தில் பனிப் பொடிகளை அப்பி அழகு பார்க்கிறது ஆகாயம்.சூரியனின் சூடான ஒத்தடத்திற்காகக் காத்திருக்கும் உங்களுக்குச் சில்லென்ற வாழ்த்துகள்!
மிக அருமையாக கவிதை எழிதி இருக்கிறீர். வாழ்த்துக்கள். போட்டோவை பார்த்து நீங்கள் என தெரிகிறது. துபையில் நகை கடையில் ஒன்றாக இருந்தோம். எனது மெயில்abdulkaderhasan@gmail.com. please contact.
நன்றி. சகோ அதிரை ஜலால்.
மகிழ்ச்சி: கவிஞர் கலாம் அவர்களின் சூடான கவிக்கு,
சந்தோசம்:. மறந்த நட்பு புதுப்பித்தமைக்கு.
Post a Comment