Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரம் - தொடர்கிறது ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2013 | , , , ,


சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் வரிசையில் அதிரைச் சூழலில் அதிகாலையும் அந்திமாலையும் அசத்தும் பகல் பொழுதும் ஒரே கேமராவில் சிக்கினால் இப்படித்தான் இருக்குமோ !?

கற்பனைக்கு கட்டுகள் இல்லை கற்பனைக்கு எட்டாததை எட்டிப்பிடிக்கும் சாமர்த்தியம், சாயும் பொழுதும் விழித்தெழும் பொழுதும் எப்படியிருந்தாலும் ரசனைக்கு கிடைத்த பரிசாகவே சிந்திக்கத் துணிந்தவர்களுக்குத் தெரியும்.

இனி உங்களின் ரசனைக்கு விட்டு விடுகிறேன்.





அஜ்மான் அழகிய கடற்கரை ஓரமாக அமைதியாக வாக்கிங் தாங்க போனேன் அப்படியே ரூட்டு மீன் மார்க்கெட்டை நோக்கி நடையை மாற்றியது!

வழிநெடுக சிதறிக் கிடந்த மீன்கள் என்னிடம் ஏதோ கேட்பது போன்று தோன்றியது, அது வேற ஒன்னுமில்லை...

"ஆக்குவாங்களா? பொரிப்பாங்களா? இல்லே காயப் போட்டுடுவாங்களா? ன்னு !?


நானும் உங்க கிட்டே விசாரிச்சு சொல்றேன்னு அப்படியே கேமராவில் புடிச்சுகிட்டு வந்துட்டேனுங்க !

ஷஃபி அஹ்மது

13 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

ஒவ்வொன்றும் ஒரு
கவிதை
அருமை சகோ சபி

sabeer.abushahruk said...

//ஒவ்வொன்றும் ஒரு 
கவிதை 
அருமை சகோ சபி//

01)கரை ஒதுங்கியப் படகு:
 
உழைத்து
ஓய்வெடுக்கிறது படகு
 
கடலில்
இடுப்பும் துடுப்பும்
வலிமையாய் வாய்த்தவருக்கே
வாழ்க்கை வசப்படும்
 
படைத்தவனையும்
படகையும் நம்பியே
பயணிக்கிறான் மீனவன்
 
படகு
பயணித்துக் களைத்திருக்கிறதா
பயணிக்கக் காத்திருக்கிறதா
 
எது எப்படியோ
இன்னொரு பயணத்தில்
ஏகும் வரை
கடற்கரைக்கு வாய்த்த
கண்காட்சி…
ஒற்றைப் படகு!
 

sabeer.abushahruk said...

//ஒவ்வொன்றும் ஒரு 
கவிதை 
அருமை சகோ சபி//

02)உதயமா அஸ்தமனமா:
 
எதுவாகவும்
இருந்துவிட்டுப் போகட்டும்
எனினும்
இந்த
எழிலும் ஏகாந்தமும்
வானமும் வர்ணமும்
கதிரவனும் 
நீரில்
உதிர்ந்த பிம்பமும்
பாய்மரமற்றப்
படகுக் கம்பங்களும்
 
மறைவாகவும் தெளிவாகவும்
புரிந்தும் புரியாமலும்
படமாகியிருக்கிறது
இந்த
நவீனக் கவிதை!
 

sabeer.abushahruk said...

//ஒவ்வொன்றும் ஒரு 
கவிதை 
அருமை சகோ சபி//

03)கைவிடப்பட்டவை:
 
உபயோகப் படுத்தியாயிற்று
உளுத்துப் போனது உடம்பு
கடல் வீட்டில் இடமில்லை
கரையை ஒட்டிக் கொஞ்சம்
இடம் தரவும் மனமில்லை
 
நம்பி வந்தவர்கள் யாரையும்
நடுக்கடலில்
தவிக்க விட்டதில்லை
 
கவனமாய்க்
கரை சேர்த்தாயிற்று
 
கடமை முடிந்தது
கரை ஒதுங்கியாயிற்று
 
உடமைக்காரரே
உடைத்துப் போட்டு
புதைத்து விடும்
 
அநாதைப் பினமாக
அவமதித்தல் தர்மமல்ல
 
நான்
ஒற்றைப் படகைச் சொல்கிறேன்
உனக்கோ எனக்கோ வாய்த்த
முதியவரை அல்ல!
 

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முதல் படம் : புது வீட்டு சுவற்றிற்கு டிஸ்டம்பர் பெயிண்ட் அடிச்சி கொஞ்ச நாள்ச்சென்டு மழைகாலத்துல ஊட்டு செவத்துல கொஞ்சம் பச்ச பாசி புடிச்சி போன மாதிரி இருக்குது வானத்தின் சீரற்ற வர்ணம்.

தோனியின் ந‌டுக்க‌ம்புட‌ன் இருப்ப‌க்க‌மும் இழுத்து க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌யிறு சிறு பிள்ளையில் ந‌டுவில் தென்ன‌ங்குச்சியை வைத்து பட்டம் செய்ய‌ இருப‌க்க‌மும் இறுக‌க்க‌ட்டும் நூல் போல் உள்ள‌து.

இர‌ண்டாவ‌து ப‌ட‌ம் : மால‌ம‌தி நேர‌த்துல‌ க‌ர‌ண்டு போயி ஊட்ல‌ அரிக்களாம்பு ஏற்றி வ‌ரும் அந்த‌ ம‌ஞ்ச‌ல் வெளிச்ச‌ம் போல் உள்ள‌து.

மூன்றாவ‌து ப‌ட‌ம் : ஓடும் வ‌ரை ஓட‌ம். ஓடி முடித்த‌தும் அதுவே வாழ்க்கைப்பாட‌ம் என‌ ஓடியாடி குடும்ப‌த்திற்காக உழைத்து சுற்றித்திரிந்து வயோதிகத்தால் இன்று வீட்டின் ஒரு மூலையில் பாயில் முட‌ங்கி கிட‌க்கும் வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளை நினைவுப‌டுத்துகிற‌து.

நான்காவ‌து ப‌ட‌ம் : வான‌த்திலிருந்து ஒளிக்க‌திர் த‌ரை இற‌ங்கி வ‌ந்து அந்த‌ தென்னையிட‌ம் குச‌ல‌ம் விசாரிப்ப‌து போல் உள்ள‌து.

ஐந்தாவ‌து ப‌ட‌ம் : ஒரு கால‌த்தில் வெள்ள‌ரிப்ப‌ழ‌த்தை திண்டு விட்டு அதன் விதையை வீட்டின் சுவ‌ற்றில் அடித்து ஒட்டி வைத்து காய்ந்த‌ பின் அதிலிருந்து ப‌ருப்பெடுத்து திண்கும் அந்த‌ கால‌ நினைப்பை ஞாப‌க‌ப்ப‌டுத்தும் இந்த‌ மீன்க‌ளின் காய‌ல்.

ப‌ட‌ங்க‌ள் எல்லாமே அருமை த‌ம்பி ஷ‌ஃபி அஹ‌ம‌துக்கு வாழ்த்துக்க‌ள்.

sabeer.abushahruk said...

//ஒவ்வொன்றும் ஒரு 
கவிதை 
அருமை சகோ சபி//

04)ஆதாயம்:
 
ஆகாயம்
என்றுதான் தலைப்பிருக்க வேண்டும்
என்றாலும் இது
எழுத்துப் பிழையல்ல
எண்ணதின் நிலை!
ஏனெனில்
ஆகாயம் தரும்
அத்துணையும்
ஆதாயம்தானே
 
நீல வானமும்
நீந்தும் மேகமும்
நாட்படப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்…
 
தென்னையைச் சற்று
தலை நகர்த்தி
மறைக்காதிருக்கச் சொல்லவும்!

sabeer.abushahruk said...

05) விண்மீன்கள்:
 
இவை யென்ன
தார்ச் சாலையில்
வென் மீன்களா
ரா வேளையில்
விண் மீன்களா
 
சிதறிக் கிடக்கின்றனவே
சில்லறை மீன்கள்
 
அசைவத்தில்
எச்சில் ஊறினாலும்
சைவத்தில்
அதிகாலைக் கூந்தலில்
உதிரியாய்த் தங்கிவிட்ட
சந்தண மல்லிகைச் சரத்தின்
எச்சங்கள்!
 
குறிப்பு:
 
தம்பி ஷஃபி,
 
ரசனையான புகைப்படங்களால் சந்தோஷப் படுத்தியமைக்கு நன்றி.  தொடர்ந்து கலக்குங்க.  சீனியர் ஹமீது என்ன ட்டிப்ஸ் சொல்றார்னும் கேளுங்க!
 
 

Yasir said...

”வாவ்” படங்கள்....

Unknown said...

படங்களின் அழகிற்கு மேலும் வர்ணம் பூசிய சபீர் காகா அவர்களுக்கும்,
அதேபோல் அழகான அதிரை மொழியில் வர்ணனை செய்த நைனா காகாவிற்கும், கருத்திட்ட சகோ,அர அல, சகோ,மாலிக், சகோ,யாசிர் மற்றும் அனைவர்க்கும் நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரையிலிருந்து அஜ்மான் வரை....

கவித்துவமான ரசனையும் இருப்பதனாலே ! இப்படியான காட்சிகள் எங்கள் ரசனைக்கும் கிடைக்கிறது பரிசாக !

KALAM SHAICK ABDUL KADER said...

அதிகாலை நேரம் அதிரையின் ஓரம்
சதிராடும் நீரும் சரித்திரம் கூறும்
தனிமையில் வாழும் தமிழரைப் போல
இனிமை யிலாமை இயம்பு



புயலென வீசும் புதிய முறையால்
நயமுள வாழ்க்கை நலிவுறும் இப்படகாய்
வெள்ளம் வருமுன் விரைவாய் அணைகட்டும்
உள்ளம் தருமே உயர்வு



திருநாள் பெருநாள் திகழும் மகிழ்வில்
ஒருநாள் மலர்ந்து ஒருநாள் உதிரும்
மணத்துடன் வாழ்ந்து மறையும் மலரின்
குணத்துடன் ஒப்புண்டா கூறு

Ebrahim Ansari said...

ரசிக்கத்தக்க பாராட்டத்தக்க பதிவு - பாராட்டுக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு