நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 24
சிந்தனைப் பரிணாம வளர்ச்சி, சிலருக்குச் சில நிமிடங்களில் நிகழ்ந்து விடுவதுண்டு. ஆனால், நாம் சந்திக்கப் போகும் இந்தப் பேறு பெற்ற பெண்மணிக்கோ அது ஒரு வாழ்க்கைப் போராட்டமாகவே அமைந்து, அவரது மூன்றாண்டு வாழ்க்கையையே ஆட்கொண்டுவிட்டது!
1991, செப்டம்பர்-20. அதுதான் அந்தப் பரிணாம வளர்ச்சியின் பயன்மிகு நாள்!
“அதற்கு ஐந்தாண்டுகள் முன்பு யாராவது, ‘நீ இஸ்லாத்தை தழுவுவாய்’ என்று என்னிடம் கூறியிருந்தால், நான், ‘உனக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது?’ என்று கேட்டிருப்பேன்” என்று தனது நற்சிந்தனைப் பரிணாம வளர்ச்சியின் தொடக்கம் பற்றி நமக்குக் கூறத் தொடங்குகின்றார் கரீமா ராஜி.
மூன்றாண்டுகள் நீடித்த அந்தப் பயணமும், அதற்கான முன்னேற்பாடுகளும் கடினமானவை; களைப்படையச் செய்பவை. தன்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் தான் எண்ணிக்கொண்டிருந்தது, ஒரு நாடகக் காட்சி போல் மாறிற்று என்று நினைவுகூர்கின்றார் இந்த ஆங்கிலேயப் பெண்.
“நான் பெண்ணியவாதிகளுள் ஒருத்தி. என் இளமை முதல், பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்துவந்தவள். அதே வேளை, எம்மதமும் சம்மதம் என்ற மானுடத் தன்மையைப் பேணவேண்டிய பக்குவத்தில் வளர்க்கப்பட்டவள். சிறு வயது முதற்கொண்டே இது பற்றிய நீதி போதனைகள் என் பெற்றோரால் வழங்கப்பெற்றன. ஆனாலும், எனது நாட்டில் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் கிருஸ்தவ மதம், மக்களை ஒரு குற்ற உணர்வோடு வாழத் தூண்டுவதாக என் மனத்தினுள் ஓர் உறுத்தல். அதுவே, மற்ற மதங்களைப் பற்றி ஆய்வு செய்யும் உணர்வைத் தூண்டிற்று” என்கிறார் கரீமா.
உலக மதங்களுள் இரண்டாவது இடத்தை வகிக்கும் இஸ்லாம் பற்றிய சிந்தனை இவருக்குள் எழுந்தபோது, பல மனப் போராட்டங்கள்! பெண்களை அடிமைப் படுத்தக்கூடிய மதமல்லவா அது என்ற உறுத்தல்! இஸ்லாத்தின் பல நடைமுறைகள் இவரை அச்சுறுத்தின! தன்னையே இழந்துவிட வேண்டி வருமோ என்ற எண்ணம்கூட வந்ததுண்டு!
“எனது குடும்பம், அன்பினால் பிணைக்கப்பட்ட ஒன்றாகும். அரவணைக்கும் பெற்றோர், உதவியும் ஒற்றுமையும் கொண்ட தோழிகள், பல்கலைக் கழகப் படிப்பில் அடுத்தடுத்த வெற்றிகள்! என்றாலும், அமைதியற்ற ஒரு விதமான குற்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. முழுமையான திருப்தி அடைய முடியாத வெற்றிடம் ஒன்று என்னைச் சூழ்ந்துகொண்டது. பாசப் பிணைப்போ, படிப்பு முன்னேற்றமோ அவ்வெற்றிடத்தை நிரப்ப முடியாது.
“அந்த நேரத்தில்தான், இஸ்லாத்தால் நான் கவரப் பெற்றேன் என்று எப்படிக் கூற முடியும்? முடியாது! ஆனால், அந்த நிலைதான், ஓர் அறிவார்ந்த தேட்டத்தின் தொடக்கம்! அது எனது கல்வி முன்னேற்றத்திற்கு உடன்பட்டதாகவே இருந்தது” என்று கூறும் இப்பெண், இஸ்லாத்தில் பெண்கள் நிலை பற்றி முதலில் ஆய்வு செய்வதில் இறங்கினார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்றும், உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடி மறைக்க வேண்டும் என்றும், ‘ஹிஜாப்’ என்பது பெண்கள் மீது ஆண்களால் திணிக்கப்பட்ட ஒன்று என்றும்தான் இப்பெண் எண்ணியிருந்தார். ஆனால், தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்த உண்மையானது, தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறுகின்றார் இவர்.
“பெண்களை இஸ்லாம் அடிமைப் படுத்தவில்லை என்பது மட்டுமன்றி, உண்மையிலேயே அம்மார்க்கம் அவர்களுக்கு விடுதலையையும் உரிமையையும் வழங்குகின்றது என்பதை நான் உணர்ந்தேன். இந்த நாட்டில், இந்த நூற்றாண்டில் வழங்கப்பட்ட பெண்ணுரிமையை, இஸ்லாம் 6ஆம் நூற்றாண்டிலேயே அவர்களுக்கு வழங்கிவிட்டது என்ற வியப்பிற்குரிய உண்மை, என்னை நின்று நிதானித்துச் சிந்திக்க வைத்தது!” எனக் கூறும் கரீமா, முஸ்லிம் பெண்கள் ஒன்றுகூடும் Women’s Studies Courseஇல் சேர்ந்து, இன்னும் கூடுதலாகப் படிக்க ஆர்வம் கொண்டார்.
இப்பெண்ணைத் தோண்டித் துளைத்த இன்னொரு கேள்வி, ‘இஸ்லாத்தில் பலதார மணம் ஏன்?’ என்பதாகும். இதற்கான விடை, மிக விரைவில் கிடைத்ததாகக் கூறும் கரீமா, “குர்ஆனியக் கூற்றுப்படி, இது ஆர்வம் குன்றுமாறு அனுமதிக்கப்பட்ட ( Discouraged ) ஒன்றுதானே! வரலாற்றில் போர் நடந்து முடிந்த காலங்களில், ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை கூடும்போது, ஆர்வமூட்டப்பட்ட ஒன்றாகும் பலதார மணம். ஆனால் மேலை நாடுகளான இங்கோ, ஆண்கள் திருமண பந்தமின்றி, ( Living Mistresses ) என்ற பெயரில் எத்தனை எத்தனைச் சட்ட விரோதத் தொடர்புகள்!?” என்று வியந்து கேட்கிறார் கரீமா.
இங்கிலாந்தில் முஸ்லிம்கள் பலரைச் சந்தித்தது, கரீமாவை இஸ்லாமிய அறிவை இன்னும் அதிகமாகப் பெறத் தூண்டிற்று.
அது 1987 ஆம் ஆண்டின் முற்பகுதி. அப்போதுதான், கரீமா படித்துக்கொண்டிருந்த இஸ்லாமிய வகுப்பிற்குப் போதகராக ஷரீ•ப் என்ற முதியவர் வந்து சேர்ந்தார். அவர் ஊதியத்திற்காக வெளியில் எங்கோ சொற்பமான சம்பளத்தில் வேலை செய்துவிட்டு, எஞ்சிய நேரத்தை ‘தஅவா’ப் பணிக்காகக் கரீமா படித்துக் கொண்டிருந்த பிரிவிற்குப் போதகராக வந்து சேர்ந்தவர். வெளியில் செய்த பணியில் தமக்குப் போதுமான வருமாணம் கிட்டாதிருந்தும், ‘தஅவா’ப் பணி செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதியவர். அவருடைய பேச்சில் நளினம், நடத்தையில் நேர்மை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை போன்ற நற்குணங்கள் வகுப்பிலிருந்த அனைவரையும் கவர்ந்தன. “அவருடைய பேச்சைவிட,
அவருடைய தோற்றமும் நடத்தையும்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தன! ‘இவருடைய வயதை நான் அடையும்போது, இவரிடம் இருக்கும் அமைதியான வாழ்வு எனக்கும் கிட்ட வேண்டுமே’ என்று அப்போது நான் ஏங்கியதுண்டு” என்று நினைவு கூர்கின்றார் கரீமா.
முஸ்லிம் வட்டாரத்தில் இன்னும் பலரைச் சந்தித்தார் இப்பெண். ‘முஸ்லிம்கள் கொடுமையானவர்கள்; சிற்றின்ப விரும்பிகள்’ என்றெல்லாம் கேள்வியுற்றிருந்த கரீமா, தனது ஆங்கிலேயச் சமுதாயத்தில், உள்ளார்ந்த நிம்மதியாளர்களாகவும், தாம் கொண்ட நெறியில் உறுதியுள்ளவர்களாகவும், அமைதியும் சாந்தமும் உடையவர்களாகவும் அவர்களைக் கண்டபோது, வியந்து நின்றார்! அந்த அமைதியான ஆழ்கடலில் மூழ்கியபோதுதான், அவருக்கு முத்தாகக் கிடத்தார் இம்ரான்!
“என் அண்ணனின் உற்ற நண்பரான இம்ரானைச் சந்தித்தபோதுதான், ‘இவரைப் போன்ற ஒருவர்தான் என் வருங்காலக் கணவராக அமையவேண்டும்’ என்று நான் ஆசைப் பட்டதில் வியப்பொன்றுமில்லை. இம்ரான் அறிவுக் கூர்மையுள்ளவர்; நேர்மையானவர்; தனித்துவமுள்ளவர்; தனது அப்போதைய வாழ்க்கையால் நிம்மதியடைந்தவர். இந்தத் தன்மைகளையுடையவர் என் வாழ்க்கைத் துணைவராக அமைவது நான் பெறும் பேறல்லவா? அதைவிடப் பெரும் பேறு, அவர் சார்ந்திருக்கும் வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது அன்றோ?!” என்று தன் நற்சிந்தனை ஓட்டத்தை நம் இதயங்களில் பதிய வைக்கும் கரீமா, இம்ரானைச் சந்தித்த நாள் முதல் இஸ்லாத்தை ஆழமாகப் படிக்கத் தொடங்கினார்.
“முன்பு நான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக, அமைதி பெற்ற இஸ்லாமிய ஆன்மக்களின் பக்கம் நான் ஈர்க்கப்பட்டேன். அந்த அமைதிச் சூழல் என்னுள் இல்லாத குற்ற உணர்வு ஏற்பட்டது. முழுமையாகத் திருப்தி அடையாத ஒரு வெற்றிடம் என்னுள் இடம் பிடித்துக்கொண்டது. கல்வி முன்னேற்றமோ, மனிதத் தொடர்புகளோ அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. இந்நிலையில்தான் ஓர் அறிவார்ந்த தேட்டம் என்னுள் எழுந்தது” என்று கூறும் கரீமா, தன் இதயங்கவர்ந்த இம்ரானைக் கணவராகப் பெற்றார்! ஆனால், இஸ்லாத்தைத் தழுவவில்லை!
இன்னும் படிக்க வேண்டும் என்ற உணர்வே எழுச்சி பெற்றிருந்தது கரீமாவிடம். அடுத்த ஆண்டு (1988) அவருக்குள் ஏற்பட்ட மனப் போராட்டம், ஒரு சுழல் காற்றாகவே உருவெடுத்தது! ஒவ்வொரு நாளும் புதுப் புதுக் கதைகள்! முஸ்லிம் ஆண்களால் பெண்கள் ஆட்டிப் படைக்கப்படுவது! ‘இத்தகைய சமூகத்தில் இவள் மணமுடித்திருக்கிறாளா?’ என்ற முணுமுணுப்பு! வியப்பால் விரியும் கண்கள்! பரிதாப உணர்ச்சிகள்! ஒரு சில மாதங்களிலேயே தனது 24 வருட வாழ்க்கை தலைகீழாக மாறிப் போனது போல் கரீமா உணர்ந்தார்.
அதற்கு அடுத்த ஆண்டு (1989) இளவேனில் காலத்தில் கரீமாவின் சிந்தனையோட்டத்தில் ஒரு விசித்திரமான வேட்கை! Latin American Studies என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து, அதில் எம்.ஏ. படிப்பது! ஒருவாறு அந்தப் படிப்பும் முடிந்து,
ஆசிரியப் பணி புரிவதில் நாட்டம் கொண்டார். அந்த நாட்களில் ஏற்பட்ட சிந்தனைப் போராட்டங்களும் கரீமாவின் வாழ்க்கையை நிலை கொள்ளாமல் ஆட்டிப் படைத்தன. “மதமென்பது, நொண்டிக்கு ஓர் ஊன்றுகோல் போன்றதே என்று எப்போதும் நான் எண்ணியிருந்தேன். அதுவே உண்மையாய் இருக்கக் கூடுமா? மதத்தால் எத்தனைப் போர்கள் உலகில் நடந்துள்ளன! அழிவு நாசங்களை உண்டாக்கும் மதத்தைப் பின்பற்றாவிட்டால் என்ன? நான் எது சரி, எது தவறு என்று அறிய முடியாத நிலைக்குள் ஆனேன்! ஆனால், ஏதோ ஒன்று என் வாழ்க்கையைத் தொடரச் செய்தது. அது, இம்ரானுடம் நான் கொண்ட இல்லற வாழ்வைவிட உயர்ந்ததா?! எந்த நிமிடமும் நான் என் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்றுவிடக்கூடும் என்ற நிலையிலிருந்த என்னை, என் முஸ்லிம் சகோதர சகோதரிகள் கைவிடவில்லை! ஆரத் தழுவினார்கள்; அணைத்துப் பிடித்தார்கள்!” என்று தன் மனப் போராட்டத்தின் வேறுபட்ட நிலைகளை விளக்குகின்றார் கரீமா.
அந்த நேரங்களில், இஸ்லாத்தைப் பற்றிப் படிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. நிறையப் படித்தார்; குறிப்பெடுத்தார்; தனக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை இம்ரானிடம் கேட்டுத் தீர்வு பெற்றுக்கொண்டார். இஸ்லாத்தில் பெண்களின் உயர் நிலை பற்றிய புரிந்துணர்வு கிடைத்த பின்னர், ஆழமாகக் குர்ஆனையும் நபி வரலாற்றையும் படிக்கத் தொடங்கினார். தன் பிள்ளைகளை முஸ்லிம்களாகத்தான் வளர்க்கவேண்டும் என்று இம்ரான் உறுதியாகக் கூறி இருந்ததால், கரீமா பிள்ளைகளின் எதிர்காலத்தையும் தன் சொந்த வாழ்வின் தேட்டத்தையும் மனத்துட்கொண்டு, இன்னும் ஆழமாக இஸ்லாத்தைப் படிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.
“சாதகமற்ற சூழலில் பொறுமையும், மகத்தான வெற்றிகளின்போது தாழ்மையும், எதிர் காலத்தின் மீது ஆழ்ந்த அகப்பார்வையும் கொண்டிருந்த நபியின் வாழ்க்கையைப் படித்தபோது நான் நெகிழ்ந்து போனேன். ‘நபியின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது’ என்று அவரின் மனைவி ஆயிஷா கூறியது, எத்துணை உண்மையானது என உணரத் தொடங்கினேன். குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் என்னுடன் பேசத் தொடங்கிற்று. அப்போது, என் இதயத்தில் இருந்த பெருஞ்சுமை, கீழ்க்கண்ட மறை வசனத்தால் இறக்கி வைக்கப்பட்டது: “ஒவ்வோர் ஆத்மாவையும் அதனதன் சக்திக்குத் தக்கவாறன்றி, அல்லாஹ் துன்பத்தைச் சுமக்கச் செய்வதில்லை.” (2:286)
“அதற்குள் இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன! குர்ஆன் முழுவதையும் படித்து முடித்தேன். அமைப்பால் ஆணும் பெண்ணும் வேறுபட்டிருந்தாலும், இருவரும் சம உரிமை பெற்றவர்களே என்ற உண்மையினைக் குர்ஆன் உரத்துக் கூறிற்று. குர்ஆனைப் படித்து, அதன் பிரதிபளிப்பான நபி வரலாற்றையும் படித்து, அதன் பின்னரும் முஸ்லிமாகவில்லையா என்ற குற்ற உணர்வு என்னை வாட்டியெடுத்தது. இரண்டு முறைகள் ‘ஷஹாதா’ மொழியத் தீர்மாணித்து, நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போட்டேன். என் இயலாமையை எண்ணித் தரையில் தலையை வைத்து (சுஜூது செய்து) அழுது மன்றாடினேன். அந்த நிலையில் கிடைத்த ஆத்மீக அமைதியின் விளைவாகத் திறந்த மனத்துடன் ‘ஷஹாதா’ மொழிந்தேன். அந்த நாள்தான் செப்டம்பர் 20, 1991.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
அதிரை அஹ்மது
3 Responses So Far:
செப்டம்பர் 20 போல நன்னாள் இன்னும் பலருக்கு கிடைக்கட்டும்,
கரீமா, இம்ரான் வாழ்க்கை இவ்வுலகுக்கு படிப்பினை தரட்டும்,
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!
---------------------------------------------
ரபிய்யுள் அவ்வல் பிறை 2 ஹிஜ்ரி 1434
அற்புத நிகழ்வு நடந்த காலம் 1991 வருடம் என்றென்னும்போது அதே காலகட்டத்தில் எங்களுக்கும் இதே போன்ற அனுபவம் இருக்கிறது... எங்களது நண்பன் யாஸீன் சுஃபியானினோடு (அல்லாஹ் ரஹ்மகும்) தீவிர முயற்சியால் இருவரை ஷாஹாதா கலிமா சொல்ல வைத்த வருடம் ! அல்லாஹ் அக்பர் !
அல்லாஹ் அக்பர் !
Post a Comment