Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2013 | ,

தொடர் : 19
கன்னத்தில் முத்தமிட்டால்!

அன்பின்   வெளிப்பாடு முத்தம்! 

அன்பு, பாசம், நேசம், எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான, இனிமையான வழிமுறை 'முத்தம்!'

முத்தம் நமக்கு மனமகிழ்வளிக்கிறது.

மகிழ்ச்சி என்பது சிரிப்புடன் சேர்ந்து வருகின்றது!

எப்போதும் மலர்ச்சியான முகத்துடன் இருப்பதுதான் மகத்துவம் நிறைந்த மங்காத ஞானச்சுடர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. ஒருவரின் வீட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த வீட்டுக்கு உரியவர், நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டுமானால், நாம் முதலில் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டுமல்லவா!

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் மௌனமாக வந்தார்கள். நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அருகில் அவர்கள் வந்ததும், மாதர் திலகம்  ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். "இங்கே அந்த சின்னப்பையன் இருக்கிறானா?" என்று கேட்டார்கள். 

அண்ணலாரின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) தம் மகனை சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். சற்று நேரத்தில்  ஃபாத்திமா(ரலி) அவர்களின் மகன் ஹஸன் இரு கைவிரித்து ஓடிவந்தார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.

 'இறைவா! இவனை நீ நேசிப்பாயாக! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள் (1)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தம் பேரன் ஹஸன் இப்னு அலீய்  (ரலி)யை முத்தமிட்டதைப்  பார்த்த, அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமி (ரலி), "எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை" என்றார்.

அவரை ஏறெடுத்துப் பார்த்த கருணையும் கனிவும் நிறைந்த கண்ணியத்தூதர் (ஸல்) அவர்கள் "அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்" என்று கூறினார்கள். (2)

துன்பங்களைத் தூக்கி எறிவதற்கு இறைவன், மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய அருட்கொடை சிரிப்பு!

ஆம்! சிரிப்பு அற்புதமான ஒரு செரிமான மாத்திரை!  பசியெடுக்க வைக்கும் பண்பு கொண்டது! மனதையும் உடலையும் தெம்பாக வைத்திருக்க உதவும் அருமையான ஒரு புத்துணர்வு  மிக்க டானிக்! சிரிக்கும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சுவாசம் சீராகி வேகம் பெறுகிறது. மனம் முழுதும் இளகி நெகிழ்கின்றது. இதனால், இயல்பாகவே உடல் ஆரோக்கியம் அடைகின்றது. 

நிச்சயமாக, எத்தனை பிரச்னைகளில் நாம் இருந்தாலும் எவ்வளவு கவலைகள் நம்மை ஆட்கொண்டிருந்தாலும் ஒரு சின்னக் குழந்தை புன்முறுவலுடன் நம் அருகில் வந்து விளையாடத் தொடங்கினால், நம்மை அறியாமலேயே நம் உள்ளம் மகிழ்ச்சியால் மலர்கிறது! அதுவே, நம் முகத்தில் புன்னகையாய்ப் பூக்கின்றது!

அபுபக்ரு சித்தீக்  (ரலி) அன்று அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மஸ்ஜித் நபவீ யிலிருந்து   நடந்தார்கள். அப்போது அழகின் அரசன் ஹஸன் அவர்களைக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே, ஹஸன் அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக் கொண்டு, "என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ தோற்றத்தில் உன் பாட்டனார்  பெருமானார் நபி(ஸல்) அவர்களைப் போலவே  இருக்கிறாய்; உன் தந்தை அலீய்  அவர்களை நீ தோற்றத்தில் ஒத்திருக்கவில்லை " என்று கூறினார்கள். அப்போது  அபுபக்ரு  சித்தீக் ( ரலி) அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு அலீய் இப்னு அபீதாலிப் (ரலி)  அவர்கள்  சிரித்துக் கொண்டிருந்தார்கள். (3)

அப்படி எத்தகைய தோற்றத்தில் 'அகிலத்தின் அருட்கொடை' யான  அண்ணல் நபி இருந்தார்கள் என்பதைச்  சுருக்கமாய்க் காண்போம்:

'இயல்பாகவே ஒளி  வீசும் முகம்; ஒருமுறை பார்த்தால், மீண்டும் மறுமுறையும் நம்மைப் பார்க்கத் தூண்டி எவரையும் ஈர்க்கும் வசீகரம்!

உடல் பெருத்தவரோ அல்லது ஒல்லிக்குச்சியோ அல்லர்; சீரான உடல்வாகு; கருகருவென கருத்து நீண்ட வில்லைப் போன்ற புருவம்; களங்கமற்ற கருவிழிகள்; சுருண்டு தொங்கும் தலைமுடி; அடர்த்தியான தாடி; உயர்ந்த கழுத்து; அவர் பேசாமல் இருந்தால் கம்பீரமான அமைதி; பேசினால் அளந்து தெளிவாகப் பேசினார்; அவரது பேச்சில் நாவன்மை மிளிர்ந்தது; உயரத்தில் நெடியவருமல்லர்; குட்டையானவருமல்லர்; எட்டத்தில் பார்க்கும்போது வசீகரமானவராகவும் அருகில் சென்று பழகினால் இனிமையானவராகவும் திகழ்ந்தார்; இருவருடன் சேர்ந்து இருக்கும்போது, பழுத்த ஈச்சந்தோகைகள்  இரண்டின் நடுவே புதிதாகத் தோன்றிய இலந்தளிர்தோகைபோல் தெரிந்தார்; அவர் பேசினால் அவருடைய தோழர்கள் மரியாதையுடன் செவி தாழ்த்தினர்; அவர் கட்டளையிட்டால் உடன் கட்டுண்டு சடுதியில் நிறைவேற்றினர். அவர்தம் தோழர்களிடையே கண்ணியம் மிக்கவராகத் திகழ்ந்தார்!'

வகை வகையாய்ப் பூத்திருக்கும் வண்ண வண்ண மலர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒருங்கிணைத்துக் கட்டிய ஒரு பூச்செண்டைப் போல அழகிய நறுமணம் கமழும் ஓர்  அரிய விளக்கமாக அமைந்து சிறப்பாய் நிலைபெற்று விட்டது உம்மு மஅபத் (ரலி) அவர்களின் இந்த இனிய வர்ணனை! 

அருள்   வடிவான அண்ணல் நபி அவர்கள், தம் சொந்தப் பேரனுக்கும் வளர்ப்புப் பேரனுக்கும் இடையே அன்பு செலுத்துவதில் கூட கடுகளவு  ஏற்றத்தாழ்வு காட்டியதே இல்லை.

இதோ அந்த மனிதரில் புனிதரைப் பற்றிய,  அவர் வளர்ப்புப் பேரன் உஸாமா பின் ஸைத் (ரலி)யின் வாக்குமூலம் வாசிப்போம்: 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் தம் சொந்தப் பேரரான ஹஸன் இப்னு அலீய்(ரலி) அவர்களைப் பிடித்துத் தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, "இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!" என்று  கூறினார்கள் . (4)

அன்பு என்ற வளமான பெருவெளியிலிருந்தே சிரிப்பு என்ற செழுமையான நீரூற்று மலர்ந்து வேகமாக வெளியாகின்றது. சிரிப்பு வேகமாகத் தொற்றிக் கொள்ளக்கூடியது. அதை யாரும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது! யாசித்துப் பெறவும்  முடியாது. திருடவும் முடியாது. அதே நேரத்தில், சிரிப்பை நாம் பிறருக்கு வழங்குவது மூலம், நாம் எதையும் இழக்கப்போவதில்லை! நம்மால் அதிகம் கொடுக்க முடிந்தது சிரிப்பு ஒன்றுதான்!  அதுவும், எதையும் இழக்காமல் பிறருக்கு நம்மால் அளிக்க முடிந்ததும்  சிரிப்பு ஒன்றுதான்!

ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று இரக்கமும் ஈகைக் குணமும் கொண்ட ஏந்தல்  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (5) 

உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் ஒரு சம்பவம் அறிவிப்பதாவது:

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என்றும், 

"ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம்" என்றும் அறிவித்தார்கள் முஃமின்களின் அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்கள். (6)   

சாந்தி நபி (ஸல்) அவர்கள் சகிப்புத்தன்மை மிகுந்தவராக, சமாதானத்தை நேசிப்பவராக, சகோதரத்தை நிலைநாட்டியவராக, எதிர்வந்த அனைத்து சோதனைகளையும் இழப்புகளையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட பொறுமையாளராக, பொறுப்பாளராக எங்ஙனம் திகழ்ந்தார்கள் என்பதைப் பார்ப்போம்: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். 

மற்றொரு முறை நாங்கள் அந்த வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்" என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன.  உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக்கவலைப்படுகிறோம்" என்றார்கள். (7)

அண்ணலாரின் அணுக்கத்தோழர் அபுபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் தம் அருமை மகள் மீது எத்தகைய பிரியம் வைத்திருந்தார்கள் என்றால்; நான் அபுபக்ரு சித்தீக்  (ரலி) அவர்களுடன் அவர்களின் வீட்டாரிடம் சென்றேன். அப்போது அவர்களின் மகளான மங்கையர்க்கரசி ஆயிஷா(ரலி), காய்ச்சல் கண்டு படுக்கையில் படுத்திருந்தார்கள். அவரின் தந்தையான அபுபக்ரு சித்தீக்  (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி)யின்  கன்னத்தில் பாசத்தோடு முத்தமிட்டு, 'எப்படியிருக்கிறாய்  என்  அருமை மகளே?" என்று கேட்டதை நான்  கண்டேன்.  (8)

உண்மையைத்தேடும்  ஒவ்வொருவருக்கும் வள்ளல் நபியின் வாழ்க்கை ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் மங்காத ஒரு மணி விளக்காகும். தன் உம்மத்தில் ஒவ்வொரு தனி மனிதரிடமும் அதிக அக்கறை கொண்டவர்களாகவே அண்ணலார் அனுதினமும் காணப்பட்டார்கள். அருள்மழை பொழியும் அல்லாஹ் (ஜல்)வின் மன்னிக்கும் மாண்பை நினைத்து அவர்கள் நன்றி செலுத்தவும் அவனின் மட்டற்ற கருணையை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடையவும் மறந்ததேயில்லை! 

ஒருமுறை, தனிமைச் சூழலில் வாழும் ஓர் அந்நியப்பெண்மணி சில பொருட்கள் வாங்குவதற்காக ஓர் அங்காடிக்குத் தனிமையில் சென்றபோது… கடைக்காரன் கண்ணில் அவள் கவர்ச்சியாய்த் தோன்றினாள்! அவள் கேட்ட பொருள் உள்ளே சேமிப்பறையில் இருப்பதாய் அவன்  சொன்னதும் அவள் அங்கு செல்லவே, பின் தொடர்ந்த கடைக்காரன், எதிர்பாராமல் அவள் மேனியை ஸ்பரிசித்தான்! அது மட்டுமின்றி, அவளை முத்தமிட்டான்!

அவளோ அதிர்ச்சியில்  'அட உன் கை சேதமே! உனக்கு என்ன நேர்ந்தது? நான் தனித்து வாழும் ஓர் அந்நியப்பெண் என்பதை நீ அறியமாட்டாயா?" என்றாள். 

கடைக்காரருக்கு அப்போதுதான், தான் செய்தது பெரிய தவறு என்று உரைத்தது! மனம் வருந்தியவர், நேராக உமர் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் சென்று விபரம் கூறி விடை கேட்டு நின்றார். 'அட உனக்கு நேர்ந்த சோகமே! நீ அபுபக்ரு சித்தீக் (ரலி) அவர்களிடம் செல். ஒருவேளை, உனக்கு அவர்களிடம் உதவி கிடைக்கலாம் என்றார். கடைக்காரர் அபுபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று விபரம்  சொல்லவே, அவர்களும் 'அவள் தனிமையில் வசிக்கும் பெண்ணா?' என்றார்கள்.

'ஆம்' என்றதும் 'நீ அல்லாஹ்வின் தூதரிடம் செல்' என்று அவரை அனுப்பிவிட்டு, அபுபக்ரு சித்தீக் (ரலி) அவர்களும் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களும் அண்ணல் நபியைக் காணச் சென்றார்கள். 

இரக்கக் குணம் நிறைந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்த  விவரத்தை இவ்வாறு  கூறினார்:

'எங்கள் நபியே; திங்கள் நிலவே!
கண்கள் இருந்தும் நான்  குருடானேன் 
நல் நெஞ்சமிருந்தும் ஒரு விலங்கானேன் 
அந்நியப் பெண்ணை நான் முத்தமிட்டேன் 
என் கண்ணியத்தையே காற்றில் விட்டேன் 
பரிகாரம் தேடி விரைந்து வந்தேன் - என் 
பாவங்கள் நீங்க உயர் வகை உரைப்பீர்!

என்று கெஞ்சியே அவர் வருந்தி நின்றார் வள்ளல் நபியின் நல் வார்த்தைக்காக:

அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமானார்கள்.  இது விஷயத்தில், அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள்போல் தோன்றியது. அப்போது அண்ணலாருக்கு வழக்கம்போல் வஹீ என்ற அல்லாஹ்வின் அருள் பொழியத் துவங்கியது.

بسم الله الرحمن الرحيم

 وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ ۚ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ

பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக . நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும். (அல்லாஹ்வை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும் எனும்  இறைவசனம் அருளப்பட்டது. (9)

அதைப் பெற்றுப் புளகாங்கிதம் கொண்ட கடைக்காரர்  'இது எனக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா?' என்று கேட்டதற்கு, அருகே இருந்த உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் 'இந்த வசனம்  உனக்கு மட்டுமே பிரத்தியேகமானதாக இருக்கும்படி நீ விரும்பினால், உனக்கு அது செல்லுபடி ஆகாது!   இந்த அருட்கொடை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்தான்! என்று பதிலளித்தார்கள்.  அருகில் இருந்த அண்ணல்   நபி(ஸல்) அவர்கள், 'உமர் உண்மையே உரைத்தார் ' என்று சொல்லிச் சிரித்தார்கள். (10)

சிரிப்பு ஓர் ஆரோக்கியமான தொற்று நோய்! மன உளைச்சல்களுக்கு நிரந்தர நிவாரணி சிரிப்புதான்.

ஒரு மோசமான செய்தியோ, அதிர்ச்சியான சம்பவமோ நம் மன நலத்தைப் பாதித்தாலும் மனம் நிறைந்த சிரிப்பு இழந்த நலத்தை மீட்டுத் தந்துவிடுகின்றது!

அனைத்திற்கும் மேலாக அண்ணலுக்கு அருளப்பட்ட அழகிய வஹீ, கடைக்காரரின் கவலையை களைந்தெறிந்து அல்லாஹ்வின் அருள் வசனம் நிம்மதியாய் அவர் நெஞ்சில் நிறைந்தது. அவர் இன்னல் மறைந்தது.
o o o 0 o o o 
ஆதாரங்கள்:
(01) புஹாரி 2122 அபூ ஹுரைரா (ரலி)
(02) புஹாரி 5997 அபூ ஹுரைரா (ரலி)
(03) புஹாரி 3542 உக்பா இப்னு ஹாரிஸ் (ரலி) 
(04) புஹாரி 6003 சுலைமான் பின் தர்கான் அத்தைமீ(ரஹ்)
(05) புஹாரி 6011  நுஃமான் இப்னு பஷீர்(ரலி)
(06) புஹாரி 322  உம்மு ஸலமா (ரலி)
(07) புஹாரி 1303 அனஸ் பின் மாலிக் (ரலி) 
(08) புஹாரி 3918 பராஉ(ரலி)
(09) அல் குர்ஆன்: அத்தியாயம் 11:114 
(10) முஸ்னத் அஹ்மத் 2426 இப்னு அப்பாஸ்
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

11 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ்!

இந்த தொடர் புத்தகமாக வெளியானதும் தமிழ் இலக்கியங்களில் முன்னிலையில் வைக்கப்பட வேண்டிய அற்புதமான தொடர்.

இன்ஷா அல்லாஹ்!

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ், அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களை நேற்று நேரில்-ஊரில் கண்டது முதல் எனக்குள் அமைதியும் குடிகொண்டது.
காரணம்: உங்களின் சிரித்த முகம் என்பதை இக்கட்டுரையின் வழியே விடைக் கிடைத்து விட்டது. “இடுக்கண் வருங்கால் நகுக” என்பதை இனிமேல் இன்ஷா அல்லாஹ் என் வாழ்வில் ஒரு படிப்பினையாக அமைத்துப் பயிற்சி பெற வைத்த உங்களின் ஊக்கமூட்டும் இவ்வாக்கம் படைத்தமைக்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்!

உங்களின் பயணம் இனிதாக அமைய அவாவும் துஆவும்!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ்! மிக அருமையான எழுத்து கோர்வை நெடுன்தொடராக தொடர வாழ்த்துக்கள்

ஜசக்கல்லாஹ் ஹைர்


தமீம் said...

இதுவரை தெரியாத நல்ல பல வரலாற்று தொடர், தொடரட்டும். வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

புதுமைகள் நிறைந்த அரிய அற்புத தொடராக உள்ளது. ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

ZAKIR HUSSAIN said...

சில வரலாற்றுக்குறிப்புகள் இதுவரை நாம் படிக்காதது. உன் முயற்சியில் இங்கு பதியப்படும்போது உன்னை நினைத்து பெருமையடைகிறேன்.

நம் 12 வயதில் ஒரு ஹஜ் பெருநாளின் விடுமுறைக்கு மனோராவுக்கு சைக்கிளில் சென்று திரும்பும்போது உலகில் மக்களால் உருவாக்கப்பட்ட மூடத்தனங்களையும் வழிபாட்டையும் அதன் தாக்கத்தையும் விரிவாக பேசிக்கொண்டே வரும்போது எனக்கு தெரியாது, பிற்காலத்தில் நம் மார்க்கத்தலைவர் , கண்மனி நாயகம் இறைத்தூதரின் வாழ்வில் நடந்த விசயங்களை இந்த அளவுக்கு எளிதாக எழுதி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பாய் என்று....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொடரை எழுதிவரும் உங்களுக்கே இந்த அத்தியாயத்தின் தலைப்பை கீழே பதிகிறேன்...

கன்னத்தில் முத்தமிட்டால் !

பிரளயமேற்படுத்தும் சொல் உயிரினும் மேலான பிரியத்துக்குரிய நபியவர்களின் வாழ்வோடு.... !

அருமை காக்கா !

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி! அஸ்ஸலாமு அலைக்கும் .

தொடர் விருந்து. திகட்டாத இன்சுவை விருந்து இந்த எழுத்து விருந்து .

அறிய வேண்டிய அரிய செய்திகள் அழகுத்தமிழில். அன்புடன் வாழ்த்துகிறேன்.

sabeer.abushahruk said...

இயல் இசை நாடகமெனும் முத்தமிழின் சுவையையும் விஞ்சி நிற்கின்றது இத்தொடரில் நீ கையாளும் இஸ்லாமியத்தமிழ்.

இந்தப் புதுதமிழ் மார்க்கத்தைப் புரிய வைப்பதில் எளிமையாகவும் நோக்கத்தை நிறைவேற்றுவதில் வலிமையாகவும் திகழ்கிறது.

எழுத்துகளை இயந்திரங்களாக்கி நீ செதுக்கும் இந்தத் தொடர் மனநிறைவைத் தருவதுபோல் நீயும் மகத்தான வாழ்வு வாழ என் துஆ, நண்பா.

இப்னு அப்துல் ரஜாக் said...


இதுவரை தெரியாத நல்ல பல வரலாற்று தொடர், தொடரட்டும். வாழ்த்துக்கள்

Iqbal M. Salih said...

அன்பிற்குரிய சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்கள் அனைவரின் அன்பான கருத்துக்களுக்காக

என் நன்றியும் வாழ்த்துக்களும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு