Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்... தொடர் - 5 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 26, 2013 | , ,

தொடர் : ஐந்து
மதங்களும் பொருளாதார இயலும் (தொடர்ச்சி)...

இந்தத் தொடரில் புத்த மதம், ஜைன மதம், கிருத்துவ மதம் ஆகிய மதங்கள் கூறும் பொருளாதாரக் கோட்பாடுகளைப் பார்த்த பின்பு தொடர்ந்து மேலும் சில மதங்கள் மற்றும் மதங்கள் சாராத “இசங்கள் “ என்னவெல்லாம் கூறுகின்றன அவற்றுள் என்னவெல்லாம் நடந்தன என்பவைகளையும் தொடர்ந்து பார்க்கலாம். 

இந்து மதம்:-

இந்து மதம் உலகின் புராதான மதங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. இந்த மதத்தின்   கடவுள் பற்றிய கொள்கைகளை ஆராய்வது நமது குறிக்கோள் அல்ல. பொருளாதாரம் பற்றி என்ன சொல்கிறது என்பதே நமது நோக்கம். ஆனாலும் பொருளாதாரம் பற்றிய நமது ஆய்வுக்காக இதன்  கடவுள்கள் மற்றும் மகான்கள்  என்று கருதப்படுவோர்களும் உபதேசித்த வேதங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், போதனைகள்  ஆகியவைகளில்  கூறப்படுபவைகளை  நாம் துரதிஷ்டவசமாக தொட்டே செல்ல வேண்டி வரும். 

முதலாவதாக சில  வரலாற்று உண்மைகளைச்  சொல்லவேண்டும்.  முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றி கொள்வதற்கு முன்பாக இந்து எனும் இந்த வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ, வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதங்கள் மற்றும் வேதங்கள் பற்றிய கலைக் களஞ்சியங்கள் (Encyclopedia ) உறுதி செய்கின்றன. 

மேலும் பண்டித ஜவர்ஹர்லால் நேரு தமது நூலாகிய (Discovery of India) டிஸ்கவரி ஆஃப் இந்தியா –வில்  “  ஒரு மதம் சாராத  ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தையே இந்து என்பது” என்று கூறுகிறார். இந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது அரசியல் மற்றும் சமூக சதிகளின்  காரணங்களுக்காக ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுதந்திரம் தருகின்ற சூழ்நிலையில் இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எல்லைக்குள்  வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம், கிருத்துவ, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி ஆகிய மதங்களைச் சார்ந்தோர் தவிர மற்ற அனைவருமே  இந்துக்கள் என்று அறிவித்ததன்  விளைவாக இந்து மதம் ஒரு பெரும்பானமையான மக்கள் பின்பற்றும் மதம் என்று சட்டப்படி ஆகி இருக்கிறது.  (Encyclopedia  Britanica  20:581). எனவே இது ஒரு சமைக்கப்பட்ட மதம்.  

நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நம்புவான்; தொழுவான். ஒரு கிருத்துவன் இயேசுவை நம்புவான்; துதிப்பான். ஒரு புத்தன் புத்தரை  நம்புவான் வணங்குவான். ஆனால் இந்து மதத்தில் இருக்கிறவர்களில் பலர்  அந்த இந்து  மதத்தில் சொல்லப்படும் பல கடவுள்களை வணங்கினாலும் அல்லது  எந்தக் கடவுளையும் நம்பாவிட்டாலும் , வணங்காவிட்டாலும் கூட அவர்கள்  புள்ளி விபரப்படி அரசுகளின் ஆவணங்களின்படி  இந்துவே ஆவார்கள்.  அந்த வகையில் சுதந்திரம் கிடைத்த சமயத்தில் உயர்பதவி வகித்த சில உயர் சாதிக்காரர்களால் புகுத்தப் பட்ட வார்த்தைதான் இந்து மதம் என்பது.

மொத்தத்தில் சைவ மதம், வைணவ மதம், புத்தமதத்தில் இருந்தும் ஜைன மதத்தில் இருந்தும் மதம் மாறிவந்தவர்கள் , தாழ்த்தப் பட்டோர், மத நம்பிக்கை அற்றோர்  ஆகியவற்றின் கூட்டே இந்துமதம் ஆகும்.  ஏனெனில் ஒரே கலாச்சாரம் மத நம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக  இந்துமத தத்துவங்கள்  உள்ளன. இதற்கு என சொந்தமாக எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ வரலாற்றில்  இல்லை. 

எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. சைவர்களுக்கென்றும் வைணவர்களுக்கென்றும் உயர்சாதியினருக்கென்றும் தாழ்த்தபபட்டவர்களுக்கென்றும் தனித்தனியான வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் உள்ளன. பல்வேறு கடவுள்களையும் பல்வேறு சடங்குகளையும் வழிபடும் முறைகளையுமே கடைப்பிடிக்கின்றனர்.  உதாரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் வணங்கும் கருப்பண்ண சாமி, மாயன், மாடன், காளி  ஆகிய கடவுள்களை பிராமணர்கள் வழிபடுவது இல்லை.    இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எண்ணற்ற கடவுள்களில் எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும். அதுவும் போக அந்த மதத்தின் சடங்குகள்  என்று கூறப்படுபவைகளை எதிர்த்தும் விமர்சித்தும்  பொது  மேடைகளிலும் ஊடகங்களிலும் பேசுபவர்களும் எழுதுபவர்களும்  கணிசமாக இருககிறார்கள் இவர்கள் நாத்திகர்கள் என்று அழைக்கப் பட்டாலும் அரசின் ஆவணங்களில்  அவர்களும் இந்துக்களின் எண்ணிக்கையில்தான் சேர்க்கப்படுகிறார்கள். 

எனக்குத்தெரிந்து ஒரு ஊரில் ஒரு பெரிய குடும்பம் இருந்தது. மிகத் திரண்ட சொத்தும் இருந்தது. அந்தக் குடும்பத்தலைவருக்கு ஐந்து  மனைவிகள்; முப்பது  சகோதர சகோதரிகள்;  மொத்தத்தில் அவருக்கு எழுபத்தாறு  பிள்ளைகள். பேரன் பேத்திகள்  மற்றும் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளும் சேர்ந்து தலைகளை எண்ண இயலாத   அளவுக்கு எண்ணிக்கை உள்ள குடும்பம். இறுதியில் குடும்பத்தலைவர் இறந்துவிட்டார். இருந்த சொத்துக்களை பங்கிட்ட போது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்து தென்னை மரங்களும் இரண்டு பனை மரங்களுமே ஒதுங்கின. இதே நிலைமைதான் இந்து மதத்தின் எல்லா சதி , உள் சாதி, இன, குலப் பிரிவுகளை சட்ட பூர்வமாகப்   பிரித்தாலும்  ஏற்படும் .அதன் மெஜாரிட்டி நிலையும் கேள்விக்குறியாகிவிடும்.     

 பொதுவான பல   இந்து  அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம்  சாதாரண நடைமுறை  தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நின்று கொண்டிருக்கும் தொன்மையான வேத தர்மங்களைக் கூறுவது என அறிகிறோம். . இந்து மதத்தை உருவாக்கியவர் என்று ஒருவரையும் வரலாறு சுட்டிக்காட்டவில்லை.   பல அவதாரங்கள் எடுத்த கடவுள்களில் ராமர் மற்றும்  கிருஷணர் என்கிற அவதாரங்களை  முன்னிலைப் படுத்துகிறது.  ஆயினும்  ராமர் உடைய வாழ்வின் வரலாறு அல்லது கதை என்கிற வடிவத்தைத் தவிர போதனைகளாக எதையும் தொகுத்துக்  கூறவில்லை. ராமர் உடைய வரலாறும் பல மொழிகளில் பலவாறாகப் படைக்கப்பட்டு இருக்கின்றன.  ஆனால் கிருஷ்ணர் வழங்கியதாக பகவத் கீதை என்கிற உபதேசங்களை வழங்குகிறது. இவை போக நான்கு வகை வேதங்களைக் கூறுகிறது . நான்கும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. அனைத்து இந்துக்களும் இவற்றை கடைப்பிடிப்பதில்லை. சகிப்புத்தன்மை நிறைந்த இந்த மதத்தில் பல தன்னலமற்ற  துறவிகள்  தோன்றி நல்லவைகளை உபதேசித்தனர். அவர்களில் வீரத்துறவி என்று போற்றப்படும்  விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர். இந்த மதத்தில் ஆணிவேராக மனுநீதியால் காட்டப்பட்டு   இருந்த இருக்கிற சாதி இனப் பாகுபாடுகளைக் களைய தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்சர், ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் பல இயக்கங்கள் கண்டு கல்வி, மருத்துவம், சமரசம், சாதி ஒழிப்பு ஆகியவைகளை போதித்தார்கள். ஆனால் இந்த மதத்தைப் பின்பற்றுகிற மக்களின் தொகையின் அளவுக்கு அவை அவர்களிடம் சென்று சேரவில்லை என்பதே வருந்தக் கூடிய செய்தியாகும்.   அப்படிப்பட்ட பல மகான்களின் கருத்துக்களின் போதனையின் அடிப்படையில்  இந்துவாகப் பிறப்பவர்கள் நம்ப வேண்டிய கொள்கை கர்மா என்பதாகும்.

ஒரு மனிதன் இந்த உலகில் தனக்கு வித்திக்கப்பட்ட கடைமைகளைச் செய்ய முனையும்போது, சில செயல்களை செய்ய நேரிடுகிறது. அதைத்தான் கர்மா என்று சொல்கிறார்கள். இந்த கர்மாவின் விளைவுகளே பாவமாகவோ புண்ணியமாகவோ மாறுகிறது. நாம் இறந்த பிறகும் இந்தப் பாவமும் புண்ணியமும் நம்மைத் தொடர்வதாகவும் அவற்றை பல பிறவிகள் எடுத்து அனுபவித்து கழிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்கள் இதைப் பிறவிப் பிணி என்று சொன்னார்கள். ஆகவே பிறப்பதே பிணி. திருவள்ளுவர் கூட பிறவிப் பெருங்கடல் என்றார்.  

ஒருவர் உண்மையான இந்துவா என்பது அவரின் சமூகப் பொருளாதார பின்பற்றுதலின்படி அமைவது அல்ல.  அவர் செய்யும் கர்மா என்கிற காரியங்களைப் பொறுத்து இறைவனே படைத்து இருப்பதாகக் கூறப்படும் இனத்தில் அல்லது குலத்தில் பிறப்பார். உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் நேரடியாக மோட்சம் என்கிற இறைவனின் அன்பைப் பெற்று உயர்வார்கள். மற்ற இழி குலத்தில் பிறந்தவர்கள் ஏழு பிறவிகள் பிறந்து நல்ல காரியங்களைச் செய்து கடவுளின் அன்பைப் பெற்று மோட்சம் பெற முடியும்.    அதாவது ஒருவரது உயர்வும் தாழ்வும் அவர் செய்யும் காரியத்தை வைத்து கணிக்கப்படாது. அவர் பிறந்த குலத்தைவைத்தே கணிக்கப்படும். ஒரு பிறவியே பிணி என்று இருக்கும் போது ஏழு பிறவிகள் பிறந்தாக வேண்டுமென்பதை  அவர்களில் பலரே  விமர்சனம் செய்தார்கள்.  மேலும் நமது செயல்களின் மூலம் நம்முடைய அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் உருவாகிறது. நமது முற்பிறவி கர்மாக்களை அனுசரித்து நாம் அனுபவிக்க வேண்டியதை நாம் பிறப்புக்கு முன்பே  நிர்ணயம் செய்யப்பட்டுக் கொண்டு பிறக்கிறோம். இதுவே ப்ரராப்த கர்மா என்று கூறப்படுகிறது. 

ஒவ்வொருவரின் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை அவர் பிறக்கும்  முன்பே கடவுள் நிர்ணயித்துவிடுகிறார். இதுவே தலை விதி என்று கூறப்படுகிறது. அந்த விதியின் ரேகைகள் அவர்களின் கரங்களில் பதியப்படுகின்றன.  திருமணங்கள் கூட சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன எனப்படும்  வாசகங்கள் இந்துக்களைப் பொருத்தவரை வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல.  “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே  தேவன்  அன்று” என்று பாடுகிறார்கள். “ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று ஆடுகிறார்கள். நல்லநிலையில் இருப்பவனை அதிர்ஷ்டக்காரன் என்றும் துன்பத்தில் உழல்பவனை ராசி இல்லாதவன் என்றும் நம்புகிறார்கள். இன்று பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட அவர்களின் வாழ்வு எப்படி அமையுமென்று என்றோ ஓலைச்சுவடிகளில் கணிக்கப்பட்டு வைத்தீஸ்வரன் கோயிலில் பத்திரமாக இருப்பதாக நம்புகிறார்கள்.  

சாதி வர்ணப் பாகுபாடுகளால் சமுதாயம் பிளந்து கிடந்தது.  புரையோடிப்போன இந்தப் பிளவுகளால் மேன்மையான மனித வளம் என்கிற  பொருளாதார மூல வளம் முழுதுமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.   மேன்மை அடைய உழைக்க வேண்டிய ஆண் வர்க்கம் சாதி குலத் தொழில்களால் சமத்துவமின்றி பிரிந்து கிடந்தது. பெண் வர்க்கம் ஆண்களின் ஆதிக்கத்துக்கு அடிமையாக  வாழ்ந்தது. பொருளாதார வளர்ச்சியின் தூண்களில் ஒன்றான மனித வளம் இனம் மற்றும் குலங்களால் பிளவு பட்டு "இவன் இதுக்கு  இலாயக்குப் பட்டு வர மாட்டான்” என்று ஒதுக்கி வைக்கப்பட்டனர். “ நான் எதுக்குடா இலாயக்குப்ப்பட மாட்டேன்?” என்று கேள்வி கேட்டுக்கொண்டே ஒரு சமுதாயம் விடை இன்றி அலைந்தது.  

இப்படி இருந்த நிலையில் தான் ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டது. சமயங்களை சாஸ்திரங்களில் இருந்து சட்ட வடிவாக மாற்ற இந்து சாஸ்திரங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து பல சட்டங்கள் இயற்ற அடிக்கல் நாட்டப் பட்டது. அதன் பிறகு சுதந்திரத்துக்குப் பிறகு சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கார் தனது பதவியைப் பயன்படுத்தி பல சமுதாய மறுமலர்ச்சிக்கான சட்டங்களை அமுல படுத்தத் தொடங்கினார். ஆனால் உயர்சாதியினரின் எதிர்ப்பால் அவர் பதவி விலக நேரிட்டது.  இதனால்தான் டாக்டர் அம்பேத்கார் “இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல; அது ஒரு சட்ட விதிகள். சட்டத்திற்கு மதம் என்று தவறாக பெயர் சூட்டப்பட்டுள்ளது" என்றார். அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியல் சட்டத்தை எழுதியவன் என்று தன்னை எல்லோரும் புகழ்வதாகவும் அந்தப் பெருமைக்குத் தான் மகிழ்ச்சி அடையவில்லை என்றும், தானே எழுதிய இந்திய அரசியல்   சட்டத்தை தீ வைத்துக் கொளுத்துவதாக இருந்தால் தானே அதன் முதல் ஆளாக இருப்பேன் என்றும் பாராளுமன்றத்தில் மனம் நொந்து  கூறினார்.  இதற்குக் காரணம் சட்ட அமைச்சர் என்ற முறையில் மனசாட்சிப்படி அவரால் பதவியின் பொறுப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. 

ஆனாலும் இந்து மத வேத , உபநிஷதங்கள்,சாஸ்திரங்களின் அடிப்படையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.  இந்து மதத்தில் வாழ்ந்த மக்களின் பொருளாதாரம் தொடர்புடையவைகளை    அத்தகைய சட்டங்கள் ஒழுங்கு படுத்தின . அவை:- 
  • இந்து திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான இந்து திருமண சட்டம். (Hindu  Marriages Act )
  • இந்து இறங்குரிமை சட்டம் ( Interstate Succession Act )
  • இந்து இளவர் மற்றும் இரட்சணை சட்டம் ( Minorities and Guardianship Act)
  • இந்து சுவீகாரம் மற்றும் ஜீவனாம்ச சட்டம் (Adoptions  and Maintenance Act)
  • இந்து உயில்வழி இறங்குரிமை சட்டம் (Testamentary Succession Act )
  • இந்து இறங்குரிமை சட்டம் (Indian Succession Act ).
  • இந்து கூட்டுக் குடும்ப சட்டம் ( Joint Family Act )

இவைகளைத் தவிர முஸ்லிம், கிருத்துவ, சீக்கியர்களுக்கென மத சம்பிரதாயங்களை  உள்ளடக்கிய தனி சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்து மதத்துக்கென்று நாடு முழுதுக்குமான  பொது  சட்டங்களும் மேலே கண்ட சிறப்பு சட்டங்களும் இயற்றப்பட்டன.  

ஆகவே இங்கு நாம் சொல்ல வருவது துறவறத்தையும் ஆசையறுத்தலையும் சகிப்புத்தன்மையையும் பொதுவான ஒழுக்கத்தையும்  வற்புறுத்தியதைத் தவிர இந்து மதப் பொருளாதாரக் கோட்பாடுகள் என்று சிறப்பான குறிப்புகள் அந்த மதத்தின் வேதங்களில் காணப்படவில்லை. நாட்டுக்குப் பொதுவான சட்டங்களே பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்ணயித்தன. மக்களும் பின்பற்றினர்; விமர்சித்தனர் அல்லது ஏற்றுக்கொண்டனர்.  அதே நேரம் ஒரு மிகப் பெரும் பொருளாதார முடக்கம் அல்லது உற்பத்தியற்ற செல்வ முடக்கம்  இந்து மதத்தின் மக்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கை என்கிற  பெயரால் ஏற்பட்டதை குறிப்பிட்டே ஆகவேண்டும். 

நாட்டின் செல்வம் ஒரு சில குறிப்பிட்ட பணக்காரர்களிடம் குவிந்து போய் இருக்கிறது என்று கூச்சல் போடப்படுகிறது. டாடா , பிர்லா , அம்பானி , கோயங்கா, இந்துஜா, மிட்டல்  என்று பெரும்பனக்காரகளின்  பட்டியல் வெளியாகிறது. இந்தப் பணக்காரர்கள் எல்லாம் தங்களிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தைவைத்துப் பல தொழில்கள் செய்கிறார்கள். பலருக்கு வேலை கொடுக்கிறார்கள். பொருளாதார சுழற்சி , புதிய தொழிற்சாலைகள் உண்டாக்கப்படுகின்றன. ஆனால் இந்து கடவுள்கள் என்று கூறப்படும் திருப்பதி வெங்கடாசலபதிக்கும், அனந்த பத்மனாபசாமிக்கும் கணக்கிடவே முடியாத அளவு தங்கமும் வைர வைடூரிய  நகைகளும் பணமும் குவிந்து கிடக்கின்றன. 

திருவனந்தபுரம் அனந்த பத்மனாபசாமி கோயிலில் அண்மையில் தோண்டி எடுக்கப் பட்ட புதையலில் கண்டெடுக்கப்பட்ட வைர வைடூரிய தங்க நகைகளின் மதிப்பு நூறு ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிட்டு இருககிறார்கள். திருப்பதி கோயிலின் சொத்துக்கள் பல  லட்சம் கோடி பெறுமானம் உள்ளவை. 4,200 ஏக்கர நிலமும்  12,000 கிலோ தங்கமும்  11,000 கிலோ வெள்ளியும் தற்போது திருப்பதி கோயிலுக்கு சொந்தமானவை. இந்தக் கோயிலில் எண்ண முடியாமல் இருக்கும் நாணயங்கள் மட்டும் பத்து டன் எடை இருக்குமென்று 3/4/2012- ஆம் தேதி கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த செல்வங்கள் கடவுல்களுக்குச் சொந்தமானவை. ஆனால் உற்பத்திக்கு உதவாமல் முடக்கப்பட்டு மூலையில் கிடக்கின்றன.    இந்த திரண்ட சொத்துக்களும் செல்வமும்  நாட்டுக்கு நலனுக்கு அந்த கடவுள்களின் பெயராலேயே உபயோகப்படுத்தப் பட்டால் அடிக்கடி எரி பொருள் விலைகளைக் கூட்ட அவசியம் இருக்காது. குடிநீருக்காக மக்கள் குடத்துடன் அலைய வேண்டிய நிலை  ஏற்படாது. நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அந்த செல்வங்களை பறிமுதல் செய்யவேண்டுமென்று கூறவரவில்லை ( சிவன் சொத்து குல நாசம் என்று அதற்கு ஒரு பழமொழி வைத்து இருக்கிறார்கள்) .மாறாக  உலகவங்கியில் அந்த சொத்துக்களை பிணையாகக் காட்டி பெரும் மக்கள் நல  உதவிகள் பெறலாமே!  இந்த மாதிரியான துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கும் வண்ணம் புத்திசாலித்தனமாக யோசிக்கும் அரசுகள் அமையாதது நாட்டின் துரதிஷ்டமே.  மதவாதிகளும் இப்படி பெரும் செல்வம் முடங்கிப் போய் கிடப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். 

இவை மட்டுமல்லாமல் பிள்ளைகளோ சொந்தங்களோ இல்லாவிட்டால் அல்லது கோபத்தின் காரணமாக  சொத்துக்களை கோயில்களுக்கு  எழுதிவைக்கும் கலாச்சாரம் காசியிலிருந்து இராமேஸ்வரம் வரை நாடு முழுதும் பரவிக் கிடக்கிறது. அப்படி எழுதி வைக்கப்பட்ட சொத்துக்கள் சில செல்வாக்குடைய தனி நபர்களிடம் சிக்கி சீரழிகிறது. பல ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் நாடெங்கும் தரிசாகக் கிடக்கின்றன. இந்தக் கோயில்கள் பணக்காரக் கோயில்களாக இருப்பதைப் பற்றி நமக்குப் பொறாமையோ கருத்து மாறுபாடோ இல்லை. பொருளாதார ரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரு நாட்டின் பெரும் அளவு செல்வம் எவ்விதப் பயனும் இன்றி முடங்கிக் கிடக்கிறதே என்பதுதான் நமது ஆதங்கம். உற்பத்திக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவவேண்டிய பிரம்மாண்டமான மதிப்புடைய (Capital)  முதல்,  புதையல் உருவில் பூமியில் புதைந்து கிடக்கிறதே என்பதுதான் ஒரு பொருளியல் வாதியின் கவலையாக இருக்க முடியும். Idle Capital என்பது வேறு;  Ideal Capital என்பது வேறு.

பொருளாதாரம் தொடர்புடைய இன்னும் சில இந்து மதக் கொள்கைகள், இந்து கூட்டுக் குடும்ப சட்டம், வாரிசுரிமை, பெண்களின் சொத்துரிமை, விதவைப் பெண்களின் சொத்துரிமை,   துறவறம் ஆகிய  இந்து மதம் குறிப்பிடும் இன்னும்  பல விபரங்களை   அடுத்த  அத்தியாயத்தில்  சொல்லலாம். (இப்பவே கண்ணைக் கட்டுதே).
தொடர்ந்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்
இபுராஹீம் அன்சாரி

11 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கசடுகள் நிறைந்த அன்னியம்!

தொடர்ந்து அடுத்தடுத்து ஆவலுடன்!

வாழ்த்தும் தொடர்ந்த துஆவும். இன்சா அல்லாஹ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இ.ம. எப்படி உருவெடுத்தது என்று தீர்க்கமாக சொல்லியிருக்கிறீர்கள் காக்கா !

//இதனால்தான் டாக்டர் அம்பேத்கார் “இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல; அது ஒரு சட்ட விதிகள். சட்டத்திற்கு மதம் என்று தவறாக பெயர் சூட்டப்பட்டுள்ளது" என்றார்.//

மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் டாக்டர் அம்பேத்கார்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம். அந்த சட்ட விதிகள் என்னவென்று சொல்ல விட்டுவிட்டேன். அவை வேறு ஒன்றுமல்ல நாம் கட்டிய - நம்ம பழைய கட்டுச்சோறுதான் - மனு நீதி சட்டங்கள்.

ZAKIR HUSSAIN said...

Your analysis is good in comprehension. If it is known to more public, it may attract best reception.

sabeer.abushahruk said...

எங்கெங்கோ சுற்றி சர்ரென்று பேசுபொருளோடு தொடர்பு படுத்திய யுக்தி சிறப்பாயிருக்கிறது.

காக்கா,

பிட் நோட்டீஸ்ல சொல்ல வேண்டிய செய்திகளெல்லாமா வேதம் என்று ஆகும்? 

மிகவும் நேர்த்தியாகவும் அடிப்படையிலிருந்தும் சொல்லுவதால் தொடரில் ஆர்வம் விஷ்வரூபம் எடுக்கிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

இப்னு அப்துல் ரஜாக் said...

உண்மைகளை உரத்து சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் காக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கள்
பொருளாதாரப் பேராசிரியராக-
சட்ட நுணுக்கங்கள் தெரிந்த வழக்கறிஞராக-
எழுத்துக்களால் இருதயங்களை ஈர்க்கும் ஓர் எழுத்தாளராக-
“சகல கலா வல்லவராக” எனக்குத் தென்படுகின்றார்கள்!

மாஷா அல்லாஹ்! அவர்களின் ஆயுளின் நீட்டிப்புக்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும், வளமான செல்வத்துக்கும் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.
குறுவிடுப்பில் அவர்களைக் காணும் வாய்ப்புக் கிட்டாமற் போனது இன்னமும் என் மனத்தினில் வருத்தமாகவே உள்ளது.

sabeer.abushahruk said...

//நமது முற்பிறவி கர்மாக்களை அனுசரித்து நாம் அனுபவிக்க வேண்டியதை நாம் பிறப்புக்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்டுக் கொண்டு பிறக்கிறோம். இதுவே ப்ரராப்த கர்மா என்று கூறப்படுகிறது. //

ஹய்யோ ஹய்யோ.

யாரும் கேட்டா சொல்லிப்பிடாதிய...அடிச்சுக் கேட்டாலும் சொல்லாதிய!

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இபுராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் தொடரை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு அருமை.
நம் நாட்டு நலனில் அக்கரையுள்ள ஆட்சியாளர்கள் நாட்டுப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நீங்கள் கூறும் யோசனைகள் கவனிக்கத்தக்கது. அதாவது

///திருவனந்தபுரம் அனந்த பத்மனாபசாமி கோயிலில் அண்மையில் தோண்டி எடுக்கப் பட்ட புதையலில் கண்டெடுக்கப்பட்ட வைர வைடூரிய தங்க நகைகளின் மதிப்பு நூறு ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிட்டு இருககிறார்கள். திருப்பதி கோயிலின் சொத்துக்கள் பல லட்சம் கோடி பெறுமானம் உள்ளவை. 4,200 ஏக்கர நிலமும் 12,000 கிலோ தங்கமும் 11,000 கிலோ வெள்ளியும் தற்போது திருப்பதி கோயிலுக்கு சொந்தமானவை. இந்தக் கோயிலில் எண்ண முடியாமல் இருக்கும் நாணயங்கள் மட்டும் பத்து டன் எடை இருக்குமென்று 3/4/2012- ஆம் தேதி கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த செல்வங்கள் கடவுல்களுக்குச் சொந்தமானவை. ஆனால் உற்பத்திக்கு உதவாமல் முடக்கப்பட்டு மூலையில் கிடக்கின்றன. இந்த திரண்ட சொத்துக்களும் செல்வமும் நாட்டுக்கு நலனுக்கு அந்த கடவுள்களின் பெயராலேயே உபயோகப்படுத்தப் பட்டால் அடிக்கடி எரி பொருள் விலைகளைக் கூட்ட அவசியம் இருக்காது. குடிநீருக்காக மக்கள் குடத்துடன் அலைய வேண்டிய நிலை ஏற்படாது. நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அந்த செல்வங்களை பறிமுதல் செய்யவேண்டுமென்று கூறவரவில்லை ( சிவன் சொத்து குல நாசம் என்று அதற்கு ஒரு பழமொழி வைத்து இருக்கிறார்கள்) .மாறாக உலகவங்கியில் அந்த சொத்துக்களை பிணையாகக் காட்டி பெரும் மக்கள் நல உதவிகள் பெறலாமே! இந்த மாதிரியான துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கும் வண்ணம் புத்திசாலித்தனமாக யோசிக்கும் அரசுகள் அமையாதது நாட்டின் துரதிஷ்டமே. மதவாதிகளும் இப்படி பெரும் செல்வம் முடங்கிப் போய் கிடப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.///

எந்த அரசியல் கட்சிக்காவது மேற்சொன்னவாறு செய்வேன் என்று தேர்தல் அறிக்கைவிட தைரியம் இருக்கிறதா?

Yasir said...

மாஷா அல்லாஹ்..கண்ணைக்கட்டவில்லை..கண்ணைத்திறந்து உள்ளது பல கட்டுக்களை அவிழ்த்து இந்த அரிய பொக்கிஷத்தை தந்து இருக்கின்றீர்கள்...பாரட்ட வார்த்தைகள் இல்லை....விசயங்களும் அதனை விவரிக்கும் முறைகளும் அருமையோ அருமை..சூப்பர் மாமா...ஜாஹீர் காக்கா சொன்னதுபோல் இது பல பேரிடம் சென்றடைய வேண்டும்

Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி.

கவியன்பன் அவர்களைக் கண்டு உரையாட முடியாத சூழ்நிலைகள். மிகவும் வருந்துகிறேன். அடிக்கடி அலைபேசியில் உரையாடிக்கொண்டது ஆறுதலாக இருந்தது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு