Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்... தொடர் - 3 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 12, 2013 | , ,


தொடர் - மூன்று 
மதங்களும் பொருளாதார இயலும் . ( தொடர்கிறது...) 

மனிதன் தன்னை வழி நடத்துவதாக நம்பும் மதங்கள் அல்லது மார்க்கங்கள் தன்னகத்தே மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களையும் கூறி வழி நடத்துவதால் மனிதனின் பொருளாதார நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் அவன் கடைப்பிடிக்கிற மதக்  கோட்பாடுகளைச்  சார்ந்தே இருக்கும் என்பது கண்கூடு. ஆகவே மதக் கோட்பாடுகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் நெருங்கிய அன்றாடத் தொடர்பு பின்னிப் பிணைந்து வருவதை அறியலாம். அந்தவகையில் இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனைகளைப் பற்றி சிந்திக்கும் நாம் இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகளைப் பற்றிய ஆக்கம் தந்த பொருளாதார வல்லுனர்களைப் பற்றி முதலில் காணலாம். 

ஹிஜ்ரி இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய சட்ட மேதைகள் என்று புகழப்பட்டவர்கள் தங்களின் பிக்ஹ் எனப்படுகிற Islamic Jurisprudence அதாவது இஸ்லாமிய சட்ட சம்பந்தமான பதிவுகளில் பொருளாதாரம் தொடர்பான கருத்துக்களையும்  குறிப்பிட்டு இருககிறார்கள். ஆனாலும் அதற்கும் முன்னரே சில தனிப்பட்ட அறிஞர்கள்  பொருளாதாரம் தொடர்பான சில விளக்கங்களை  அளித்து இருக்கிறார்கள். அதாவது பிக்ஹ் –ல் குறிப்பிடப்படும் முன்பே  பொருளாதார சிந்தனைகளை மட்டுமே விதைத்த சிலர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் என்று பட்டியல் இட்டால் 

அபூ யூசுப் என்கிற மேதை (Abu Yusuf - Hijri 182/ 798 C.E) தந்த அல்- கராஜ் ( Al- Kharaj_ Land Revenues) என்கிற  இந்த நூல் அப்பாசியா காலத்து கலீபா ஹாரூன் அல் ரஷித் அவர்களுக்கு  நிலத்திலிருந்து வரும் வருமானங்களை பெறுவது பற்றிய கொள்கைகளை வகுத்துக் கொடுத்தது எனலாம்.

முஹம்மத் பின் அல் ஹசன் ( Muhammad bin Al Hassan  Hijri 189/ 805 C.E. ) எனப்படும் மற்றொரு அறிஞர்  தனது Iktisab fi al Rizk al Mustatab ( Earning Desired Income) என்கிற தலைப்புடைய நூலில், வணிகர்கள் தங்களின் வருமானத்திற்கான வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் தேடிக் கொள்வது பற்றிய  ஆலோசனைகளைத் தந்தார்.   

அபூ உபைத் அல் காசிம் பின் ஸலாம்  ( Abu Ubaid al Qasim bin Sallam – Hijri 224/839 C.E. )  தனது Al Amwaal – The Wealth    என்கிற தலைப்பிட்ட  நூலில் செல்வங்களைத் தேடிக் கொள்வது பற்றிய முறைகளை வரையறுத்தார். 

மேற்கண்ட இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்கள் தங்களின் கோட்பாடுகளை வெளியிட்டு வந்த அதே வரலாற்றின் காலங்களில் ஐரோப்பாவில் பொருளாதாரக் கோட்பாடுகளை தந்து கொண்டிருந்தவர்கள் புனித அகஸ்டின் ( St. Augustine 430 C.E. )   , தாமஸ் அகினாஸ் ( Thomas Aquinas 1274 C.E.)  போன்ற கிருத்துவ திருச்சபையின் துறவிகள் மட்டுமே ஆவார்கள்.

கிருத்துவத் துறவிகள் தந்த கோட்பாடுகள் பைபிளைத் தழுவிய போதங்களாக திகழ்ந்தன. துறவிகளின் பெயர்களில் வந்த கோட்பாடுகள்   மக்களை  பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட்டும் தடுத்தன; அச்சுறுத்தின.  

ஏசுநாதர் செல்வத்தையும் செல்வத்துக்காக உழைப்பதையும் வெறுத்தார் என்றும் பணக்காரர்களை கொடுமைக்காரர்கள் மற்றும் பாவிகள் என்று ஜெரோம் என்கிற பாதிரியார் பரப்புரை செய்ததாகக் கூறியது. மேற்கோளாக,  புதிய ஏற்பாடு மாத்தியு Mathew   19: 24 அதிகாரத்தில்  ( Jesus is reported to have said: “ And Again I say unto you: It is easier for camel to go through the eye of a needle than for a rich man to enter into the Kingdom of God” ) ஏசுநாதர்  “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் ஒரு பணம் படைத்தவன் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் ஒருக்காலும் நுழையமுடியாது” என்று கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வியாபாரம் செய்வதும் விலக்கப்பட்ட செயல் என்று தேர்டுல்லியன் என்பவர் சொன்னதாக மக்களை திருச்சபை நம்பச் செய்தது. யூஜின்ஸ் என்கிற போப்பாண்டவர் வியாபாரம் செய்வது இறைவனை அடையும் வழிகளை அடைத்துவிடும் என அச்சுறுத்தினாராம். 

ஆனால் பரிதாபமாக, மக்களின் இயல்புக்கு மாறான இந்த மாதிரியான மதக்  கொள்கைகள் கடைப்பிடிக்க நாதியின்றி தோல்வியடைந்தன. திருச்சபைகள் சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டன.   இதன் விளைவாக,  மேற்கத்திய ஆய்வாளர்கள் மதக்  கோட்பாடுகளின் அடிப்படையில் பொருளியல் கோட்பாடுகளையும் அமைப்பதில் ஆர்வம காட்டாமல் அவைகளுக்கு  எதிரிடையான நிலைகளை மேம்படுத்த ஆரம்பித்ததால் அவர்களின் இந்த மனப்பான்மை ஓரளவுக்கு இறை நம்பிக்கைக்கே  எதிராகவும் நாத்திகக் கருத்து நிலைபாட்டை ஐரோப்பாவில்  ஊக்குவித்தன.  அத்துடன் பிரெஞ்சுப் புரட்சியும், தொழில் புரட்சியும் ஏற்பட்டு திருச்சபைகளின் வாயை அடைத்தன. 

இஸ்லாமிய பொருளாதார வரலாற்றில் இப்னு கால்துன் ( Ibn Khaldhun  Hijri 808/ 1404 C.E. ) என்றழைக்கப்படுகிற ஒரு அறிஞர் எழுதிய அல் முகத்தமா ( Al Muqaddima )– அறிமுகம் என்று பொருள் தரும் நூல் பன் முகம் கொண்ட நூல்.  வரலாற்று ஆசிரியர்களாலும், பொருளாதார வல்லுனர்களாலும் மிகவும் புகழப்படும் நூலாகும். 1377 ஆம் ஆண்டு வெளியான இவரது இந்த நூல் மிகப் பெருமளவில் இஸ்லாமிய பொருளாதார அடிப்படைகளை  விவாதிக்கிறது. இந்த நூலை ஒரு வரலாற்று நூலாகவும், சமூக அறிவியல் மற்றும் அரசியல் சார்ந்த  நூலாகவும் வரலாறு, பொருளாதாரம்  மற்றும் அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். இப்னு கால்துன் அவர்கள் சமூக இயலை உலகில் அறிமுகம் செய்தவர். அவர் கண்ட சமூக இயலை அவர் குறிப்பிட்ட பொருளாதாரக் கருத்துக்கள் தூண்களாகத் தாங்கி நிற்கின்றன.  ஐந்தாம் அத்தியாயத்தில் பொருளாதாரக் கருத்துக்களை சுட்டிக் காட்டும் இவரது அல்- முகாத்திமா ஏழு பகுதிகளைக் கொண்டது. மனித இனத்தின் தோற்றம் முதல் கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றை விவரிக்கிறார். அத்துடன் பல நாடுகளின் எழுச்சிக்கும்  வீழ்ச்சிக்கும்  அந்நாடுகள் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கை ஒரு காரணியாக இருந்ததை பல ஆதாரங்களுடன் வரலாறாக சுட்டிக் காட்டுகிறார்.அவர் ஒரு நீதிபதியைப் போலவும், வரலாற்றாசிரியர் போலவும் இறையச்சத்துடன் தான் ஊன்றிக் கவனித்த உலக நடப்புகளுடன் சுட்டிக் காட்டுகிறார். இவற்றை நாம் காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.    

இங்கு நான் குறிப்பிட விரும்புவது, இஸ்லாமிய வரலாற்றின்  வண்ணமிகு ஏடுகள் ,  பல துறைகளிலும் மறைக்கப்பட்டு இருக்கின்றன. உலக அளவில் முஸ்லிம்கள் செய்த  சாதனைகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன; சான்றுகள்  அழிக்கப்பட்டிருக்கின்றன.  பல்கலைக் கழகங்களில் பொருளாதாரத்தில் உயர்ந்த பட்டம் பெற்றவர்கள் கூட மேலே நான் குறிப்பிட்டுள்ள சில இஸ்லாமிய பொருளாதார வல்லுனர்களின் பெயர்களைக் கேள்விகூடப்பட்டிருக்க மாட்டார்கள் என்கிற வலுவான சந்தேகம் இருக்கிறது. சில பேராசிரியர்களிடம் பேசியபோது இதனை உறுதி செய்தனர். நாம் படிப்பதெல்லாம் ஆடம்  ஸ்மித்,     ஆல்பிரெட் மார்ஷல், லயனல் ராபின்ஸ் , ஹார்வி  போன்ற வெள்ளை தோல் படைத்தவர்களைப்  பற்றி மட்டும்தான் . ஆனால் நம்முடைய இந்த ஆய்வில்  திருமறை மற்றும் நபிமொழியின் அடிப்படையில் இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளைத் தந்த மேலை நாட்டு வரலாற்றாசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட  பல  அறிஞர்களைப்     பற்றியும் தோண்டியெடுத்து எடுத்து நிறைய  சொல்வோம். இன்ஷா அல்லாஹ்.    

 திருச்சபைகள் மக்களின் இயல்புக்கு எதிராக பரப்பிய கருத்துக்களின் வீரியத்தை மீறி கிளர்ந்தெழுந்த பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்திப் பெருக்கம், புதிய கண்டுபிடிப்புகள் , வணிக சந்தைகளின் விரிவாக்கம், நாடுகளைத் தேடல் , காலணி ஆதிக்கம், அடிமை முறை  என்றெல்லாம் விரிவுபட்டன.  அதன்பின்னர்  ஒரு புதிய தலைமுறை பொருளாதார வல்லுனர்கள் வீறுகொண்ட பொருளாதார வளர்ச்சியிலும் ஒரு ஒழுங்கும் கண்ணியமும் தேவை என்பதை உணர்ந்து அதற்காக எழுப்பிய குரலால்   வளர்ச்சியின் ஆதிக்கத்துடன்   மதக்  கோட்பாடுகள்,  நன்னெறிகள் ஆகியவற்றின் ஆதிக்கமும்   அலட்சியப்படுத்திவிட முடியாதபடி மீண்டும்  சேர்ந்தே வளரத் தொடங்கின என்பதையும் மறுக்க முடியாது. இவற்றை திருச்சபைகளால் தடை செய்ய முடியவில்லை. அவை நவீனப் பொருளாதாரம் மற்றும் அதனைச்சார்ந்த துறைகளில் சில வரைமுறைகளையும் ஒழுங்குபடுத்தும் உபாயங்களையும் போதித்தன.  ஆகவே மதங்களும் பொருளாதார இயலும் வெட்டிப்  பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் ஆயின.   அந்தந்த மதங்கள் மற்றும் மக்களின் இயல்புகளுக்கேற்ப கொள்கைகள் வெளிப்படலாயின.

அத்தகைய கொள்கைகள் யாவை? இஸ்லாமிய பொருளாதாரம் அவற்றுள் எந்த வகைகளில் தனித்தன்மை வாய்ந்தவை?  உயர்ந்தவை? 

இன்ஷா அல்லாஹ்  தொடரும். 
இபுராஹீம் அன்சாரி


11 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மிகவும் அருமையான ஆக்கம் ஜசக்கல்லாஹ் ஹைர் இ.அ. காக்கா

நாம் இன்று மேலைத்தேய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம். சுதந்திர வர்த்தக நடைமுறைகள் (free trade), உலக நிதி நிறுவனம் (IMF) பின்பற்றும் கொள்கைகள் (இது அடிப்படை தேவைகளில் நிறைவற்ற தன்மையை உருவாக்கும்), இன்றைய முஸ்லிம் நாடுகளில் சுரண்டல் ஆகியவற்றால் அல்லாஹ் தன் அருளால் வழங்கிய வளம் வீணாகி உபயோகமற்றதாகிவிடுகிறது. தெளிவான ஒரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள, குர்ஆன் மற்றும் சுன்னாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையான கிலைஃபா முறைக்கு திரும்புவதற்கு இதுவே தக்க தருணமாகும்.

முஸ்லிம்களின் நோக்கம் அல்லாஹ்வின் மார்கத்தை அமுல்படுத்தி, இதனை முழு மனித சமுதாயத்திற்கும் சென்றடைய செய்வதாகும். இஸ்லாமிய பொருளாதார கொள்கையானது இயந்திரமயமாக்கல் மூலம் வல்லரசாகி தஆவா, ஜிஹாத் மூலம் இஸ்லாத்தை மற்றையோருக்கு சென்றடைய செய்வதுடன் தன் குடிமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகும். அமெரிக்கா, பிரிட்டிஷ் (முதலாளித்தும்), ரஷ்ய (கம்யூனிஸம்) மற்றும் ஏனைய முஸ்லிம் அல்லாதோர்தளின் கொள்கையை பின்பற்றும் அதிகாரத்தை மீட்பதன் மூலமே நம் இலக்குகளை நாம் அடையமுடியும்.

மேலும், (நபியே !) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர் அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர். அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்த்தில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பீராக. (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அப்போது அல்லாஹ் (சுபு) நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.

இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனித சமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும். இஸ்லாமியர்களின் பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும் நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின் படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

அ. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு என இஸ்லாம் கருதுகிறது.
ஆ. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம் கருதுகிறது.
இ. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும், இறைவனின் வழங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம் கருதுகிறது.
ஈ. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும் இஸ்லாம் நிர்வகிக்கிறது.

Unknown said...

மிகவும் அருமையான ஆக்கம் எதிர்பார்த்த அத்தியாயம் இஸ்லாமிய பொருளாதாரமும் அதனால் ஏற்பட்ட மக்களின் வாழ்வியல் மாற்றத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன்.தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. ஜசக்கல்லாஹ் ஹைர்
-------------------------
இம்ரான்.M.யூஸுப்

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பினுக்கினிய டாக்டர் இ.அ. காக்கா என்னும் ஆசான் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!

மதம் மனிதனைச் சம்பாதிப்பதை விட்டும் தடுப்பதாக மேற்குலகில் மேற்சொன்னக் கோட்பாட்டினாற்றான் “மதம் வேறு: அரசியல் வேறு” என்ற நிலையில் அமெரிக்காவில் அவர்களின் மதத்தை 100 விழுக்காடுப் பின்பற்றுவதிலை என்றறிகிறேன்; ஆயினும் “டாலர்” என்னும் அந்நாட்டின் நாணயத்தில் மட்டும் WE TRUST IN GOD என்று எழுதியிருக்கின்றார்கள்!

இரட்டை வேடும் போடுவதில் இவர்கட்கு இணையாக உலகில் யாருண்டு?

துறவறத்தை உடைத்து (பாதிரிகளாய் ஆகாமல்) இல்லறம், பொருளாதாரம், அரசியல் என்ற அனைத்துத் துறைக்கும் வழிகாட்டியாக உத்தம நபி(ஸல்) அவர்களை உலக மக்கட்கு முன்மாதிரியாகவும் ஏற்படுத்தி வைத்த அல்லாஹ்வின் இயற்கை மார்க்கத்தில் இயற்கையாக நாம் பிறந்து வளரச் செய்தானே , அந்த அல்ல்லாஹ்வுக்கு நன்றி கூறுவோமாக; அல்ஹம்துலில்லாஹ்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

புதைக்கப்பட்ட உண்மைகளை தளிர்விடச் செய்யும் நல்ல பொதுவான தொடர். ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.
------------------------------------------------------------------------

ஹிஜ்ரி 1434 ஸபர் 29

sabeer.abushahruk said...

பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவற்றோடு பொருளாதாரக் கொள்கைகளும் மதக் கோட்பாடுகளை ஒட்டியே வகுக்கப்படும்பொழுது பாவங்களற்ற வாழ்க்கையை வாழ மனிதனுக்குச் சாத்தியப்படும்.

அப்படி வகுக்கப்பட்டவற்றைப் பின்பற்றியவன் வாழ்க்கையில் தோற்றால் அவன் பின்பற்றும் மதக் கோட்பாடுகளில் கோளாறு இருப்பதாகவே கொள்ளப்படும்.

இந்த அத்தியாயத்திலிருந்து மேற்சொன்ன பாடத்தைக் கற்றுக்கொண்டாயிற்று.

தொடரட்டும் தங்களின் தொண்டு

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

//ஆனால் நம்முடைய இந்த ஆய்வில் திருமறை மற்றும் நபிமொழியின் அடிப்படையில் இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளைத் தந்த மேலை நாட்டு வரலாற்றாசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல அறிஞர்களைப் பற்றியும் தோண்டியெடுத்து எடுத்து நிறைய சொல்வோம். இன்ஷா அல்லாஹ். //

இன்ஷா அல்லாஹ் !

KALAM SHAICK ABDUL KADER said...

//இருட்டடிப்பு செய்யப்பட்ட பல அறிஞர்களைப் பற்றியும் தோண்டியெடுத்து எடுத்து நிறைய //

ஆய்வறிஞர் டாக்டர் அவர்கள் அறிவுச் சுரங்கத்தின் உள்ளே நுழைந்து விட்டார்கள்; இனி இன்ஷா அல்லாஹ் தங்கங்களாய் வெளிவரலாம்!

Iqbal M. Salih said...

ஆய்வறிஞர் டாக்டர் அவர்கள் அறிவுச் சுரங்கத்தின் உள்ளே நுழைந்து விட்டார்கள்; இனி இன்ஷா அல்லாஹ் தங்கங்களாய் வெளிவரலாம்!

அதிரை சித்திக் said...

மிகவும் அருமையான ஆக்கம் ஜசக்கல்லாஹ் ஹைர் இ.அ. காக்கா

இப்னு அப்துல் ரஜாக் said...

மனிதனை மனிதன் எப்படி சுரண்டுவது என போதிப்பது மதம்,மனிதனை நன் மக்களாய் வாழ போதிப்பது மார்க்கம் ,இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம்.இனி இன்ஷா அல்லாஹ் அறிவு முத்துக்கள் சிதறும் அதை பெறுவோம் டாக்டர் ஐயா இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்கள் இஸ்லாமியக் கடலில் முத்துக் குளிக்க இறங்கிவிட்டார்கள்.

Yasir said...

அன்சாரி மாமாவின் கடின உழைப்பு இக்கட்டுரையில் தெரிகின்றன...இவ்வளவு ஆதாரங்களுடன் கட்டுரை எழுதுவது சிரமமான வேலை..அதனை எங்களுக்காக தரும் உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் சுகத்தினையும் தருவானாக ஆமீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு