Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம். 10

அதிரைநிருபர் | December 03, 2010 | , ,

அன்றாட நம்மூர் நிகழ்வுகளில் அண்மைக்காலமாக நம் சமுதாய மக்களிடம் சில அர்த்தமுள்ள, பல அர்த்தமற்ற காரணங்களால் பெருகி வரும் விவாகரத்துக்கள்(வார்த்தை சொல்லுதல்)எப்படி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பங்களுக்கு பேரிடியாகவும், விவாகரத்துக்கு முன் இல்லற வாழ்வில் ஈன்றெடுத்த பாசக்குழந்தைகளின் எதிர்காலம் தன்னை ஈன்றெடுத்த தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவரை நிரந்தரமாக எதற்கென்றே ஒன்றும் புரியாமல் பிரிவதால் கேள்விக்குறியாக்கப்பட்டு உண்மையான தாய், தந்தையரின் பாசத்திற்கும் நேசத்திற்கும் ஏங்கும் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் பல சொல்ல இயலா துன்பங்களையும், துயரங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் விவரிக்கும் ஒரு சிறு கட்டுரை தான் இது.

ஒரு காலத்தில் பெரும் பிரச்சினைகள் வந்து பிரச்சினையான இரு குடும்பங்களுக்கும் பல நாட்கள் தெரு சங்கங்களாலோ அல்லது சமுதாயப்பெரியவர்களாலோ அவகாசம் கொடுக்கப்பட்ட(முடிந்தவரை இரு குடும்பத்தையும் பரஸ்பரம் பேசி சுமூக உறவு ஏற்பட, இல்லற வாழ்க்கை பிரச்சினையின்றி இனிதே தொடர வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட) பின்னரே இதற்கு மேலும்

சரிப்பட்டு வராது என இருசாரரும் தீர்க்கமான முடிவு எடுத்த பின்னரே பிரச்சினையான தம்பதிகள் தலாக் மூலம் பிரிக்கப்பட்டனர். காலப்போக்கில் அவர்களுக்கேற்ற வாழ்க்கைத்துணையும் இறைவன் நாட்டப்படி அமைந்து போனது.

சிலர் இப்படிக்கூறி புலம்புவதுண்டு "பொறந்த ஊடும் சரியில்லை; புகுந்த ஊடும் சரியில்லை" தன்னுடன் வாழவந்தவனோ அல்லது வந்தவளோ பிரச்சினை இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் விவாகரத்து ஒரு நல்ல தீர்வாகாது. பிறந்த வீடு அல்லது புகுந்த வீடு தனக்கு சந்தோசத்தை தரவில்லை என்பதற்காக வாழவந்தவனையோ அல்லது வாழவந்தவளையோ வேண்டாமென்று ஒதுக்கித்தள்ளுவது நிச்சயம் ஒரு முட்டாள்தனமான முடிவாகத்தான் இருக்கும்.

இது போன்ற சூழ்நிலைகள் சிலர் வாழ்வில் உருவாகும்பட்சத்தில் தனிவீடு (அது வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ) அமைத்து கணவன், மனைவி மற்றும் பாசக்குழந்தைகளுடம் சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப்போனால் யாருக்கும் நஷ்டமும் இல்லை எவ்வித கஷ்டமும் இல்லை.

ஒரு காலத்தில் நம்மூரில் திருமணமாகி ஒரு சில வருடங்களிலேயே இறைவன் நாட்டத்தில் கணவனை மரணத்தால் இழக்க நேரிடும் பொழுது அவனுடன் வாழ்ந்த அந்த காலங்களை எண்ணி உள்ளுக்குள் சந்தோசமடைந்தவர்களாக நம் மார்க்கம் மறுமணத்தை அழகுற அனுமதித்திருந்தும் அதைக்கூட விரும்பாதவர்களாய் (இந்த இடத்தில் மார்க்கத்தை அவர்கள் அவமதித்ததாக பொருள் கொள்ளக்கூடாது) பெற்ற பிள்ளைகளுடன் வாழ்ந்தால் போதும் என தன் வாழ்நாளைக் கடத்திய எத்தனையோ பெண்மணிகள் இருந்தார்கள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் நம்மூரில்.

ஆனால் இன்றோ சிறு,சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எவ்வித காரணமும்மின்றி மார்க்கத்தை தாண்டி ஏதோ பழைய சட்டையை கழற்றி விட்டு புதிய சட்டையை மாற்றிக்கொள்வது போல் முறையே ஊர் கூடி பெரும் விருந்து கொடுத்து நடத்தி முடித்த திருமணங்கள் கூட விவாகரத்தில் முடிந்து பிறகு ஆளுக்கொரு புதிய துணையை தேடிக்கொள்வதும் முன்னால் கணவன்/மனைவிக்கு பிறந்த குழந்தைகளை பெற்ற தாய், தந்தையர் உயிருடன் இருந்தும் அவர்களை அநாதைகளாக்குவதும் அதிகரித்து வருவது வேதனையான விசயமேத்தவிர வேறொன்றும் இல்லை.

ஒரு வேதனையான விசயத்தை பாதிக்கப்பட்ட ஒருவர் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். "நம்மூரில் தேவையற்ற விவாகரத்தால் உயிருடன் இருந்தும் தனனை ஈன்றெடுத்த தாய், தந்தையரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கென்றே ஒரு தனி பள்ளிக்கூடம் (தாய், தந்தையர்களால் கை விடப்பட்ட மாணவர்கள்)ஆரம்பிக்க வேண்டும் போல் இருக்கிறது இன்றைய நம்ம ஊர் சூழ்நிலை" என்று மன வேதனையின் வெளிப்பாடாக கூறினார்.

தன்னை ஈன்றெடுத்த தாய் சூழ்நிலையால் மறுமணம் செய்து கொண்டு வேறொரு கணவனுடன் வாழ்ந்து வந்தாலும் தன்னைப்பெற்ற தந்தையைப்போல் பாசத்துடன் அவன் கவனித்துக்கொண்டாலும் மார்க்கப்படி அவனை "வாப்பா" (தகப்பன்) என்று சொல்லக்கூடாது அல்லது தன் தந்தை மறுமணம் செய்து கொண்டு வேறொரு மனைவியுடன் வாழும் பொழுது அவள் எத்தனை பாசத்தைக்காட்டினால் அவளை "தாய்" என்று பிள்ளைகள் சொல்லக்கூடாது. பெற்றவர்களைத்தவிர தாய், தந்தையரின் அந்தஸ்த்தை யாரும் பெற்று விட முடியாது அல்லது கொடுக்கவும் கூடாது என ஒரு ஹதீஸில் நான் படித்திருக்கின்றேன். (மார்க்க விளக்கம் உள்ளவர்கள் தவறு இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்ளப்படும்.)

மறுமணம் செய்து கொள்ளும் ஒருவன் மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு முன்னால் கணவனால் பிறந்த குழந்தைகளை தான் பெற்ற பிள்ளையைப்போல் அக்கறையுடன் கவனிக்கமாட்டான். அல்லது மறுமணம் செய்து கொள்ளும் ஒருவள் தன் கணவனுக்கு முன்னால் மனைவியின் மூலம் பெற்ற பிள்ளைகளை அந்தளவுக்கு அக்கறையுடனும், பாசத்துடனும் கவனிக்கமாட்டாள். இறுதியில் ஏதாவது ஒரு வகையில் அப்பிஞ்சுகள் சொல்லாத்துயரை அடைந்து விடுகின்றன பாசத்திற்கு ஏங்கி நிற்கின்றன. காலப்போக்கில் தன் தாயையோ அல்லது தந்தையையோ இப்படி திட்டித்தீர்த்துவிடுவர் "உனக்கென்னெ வாப்பாவை வேண்டாமென்று சொல்லி வேறொருவருடன் வாழ்ந்து வருகிறாய். வாப்பாவுக்கென்ன உம்மாவை வேண்டாமென்று சொல்லி வேறொருத்தியுடன் ராஜா மாதிரி வாழ்ந்து வருகிறார் கடைசியில் பாதிக்கப்பட்டு அநாதைகள் போல் நடுத்தெருவில் நிற்பது நானும் என் தம்பி, தங்கைகளுமே" உங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை மன உலைச்சல்களும் இல்லை. என்று ஏதாவது பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும் பொழுது இந்த வார்த்தைகள் வந்து விழும் நிச்சயம்.

வெளிநாட்டில் தன்னைப்பிரிந்து தனக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவன் உழைக்கிறானே என்று கொஞ்சமும் பொறுப்பில்லாமல் மனைவி ஊரைச்சுற்றி வருவதும் அதன் மூலம் பல தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாகிப்போவதும், ஆசாபாசங்களுக்கு அடிமையாகிப்போவதும், மனைவி, மக்கள் தான் அருகில் இல்லையே என எண்ணி எவ்வித குடும்ப பொறுப்புமின்றி கணவன் பல தவறான பழக்க,வழக்கங்களுக்கு ஆளாகிப்போவதும் இறுதியில் அவனே/அவளே தன் வாழ்வில் பெரும் வேட்டு வைத்து கடைசியில் விவாகரத்தில் முடிந்து விடுகிறது. அவர்களின் இல்லற வாழ்க்கை முற்றுப்பெற்று விடலாம் ஆனால் அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியில் தான் முடியும்.

பிஞ்சுகள் மனதில் அன்பான உம்மாவிற்காகவும், ஆசையான வாப்பாவிற்காகவும் கட்டி வைத்திருக்கும் விலையால் மதிப்பிட முடியாத மாளிகையை ஏதோ ஒரு சிறு காரணத்திற்காக கணவன், மனைவி இருவரும் நிரந்தரமாக பிரிந்து இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிள்ளைகளின் மனக்கோட்டையை எளிதில் இடித்துத்தள்ளி விடாதீர்கள். இதற்காக நீதி மன்றம் சென்றால் அங்கு பாபர் மசூதி தீர்ப்பு போல் பாரபட்சமுள்ள தீர்ப்பு தான் வருமே ஒழிய பரிசுத்தமான பாசம் அங்கு மலர்ந்து விடாது.

இல்லற வாழ்க்கை என்பது கழற்றி, மாட்டும் அல்லது காணாமல் போகும் செருப்பு போன்றதல்ல. அன்பு, பண்பும், பாசமும், நேசமும், ஒற்றுமையும் பிண்னிப்பிணைந்த ஒரு சக்தி வாய்ந்த கயிறு போன்றதாகும். அதை எளிதில் அறுத்து அதை வைத்தே பிறந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முயல்வது எவ்விதத்தில் நியாயமாகவும், தர்மமாகவும் இருக்க முடியும்?

விவாகரத்திற்குப்பின் பிள்ளைகளை கணவன் தான் வைத்துப்பராமரிப்பான் அல்லது மனைவி தான் வைத்து பராமரிப்பாள் என்ற பெரும் பிரச்சினை உருவாகி அது இரு அணிகளாக நின்று ஒரு மாபெறும் கயிறு இழுக்கும் போட்டி போல் நடக்கின்றது. இதில் கயிறு பலத்தால் அறுபடுகிறதோ, இல்லையோ? ஆனால் இல்லற வாழ்க்கையுடன் பிள்ளைகளின் எதிர்காலம் அறுபடுவது உறுதி.

விவாகரத்திற்குப்பின் மறுமணம் செய்து வாழும் தாயின் அரவணைப்பில்/பராமரிப்பில் பிள்ளைகள் இருந்து வந்தாலும் அவர்கள் வளர்ந்து ஆளாகி அவர்களை பள்ளியிலோ, கல்லூரியிலோ, அல்லது வாக்காளர் அடையாள அட்டை எடுக்கவோ, குடும்ப அட்டை எடுக்கவோ, பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கவோ, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கும்பொழுதும் அல்லது இறுதியில் மரணிக்கும் பொழுது கூட மரண அறிவிப்பிற்கு பெற்ற தகப்பனின் பெயரும் விலாசமும் அவசியம் தேவைப்படுகிறது. கணவன் தான் பிரிந்து சென்று விட்டானே என்று எண்ணி புதுக்கணவனின் பெயரை அல்லது விலாசத்தையோ முன்னால் கணவனின் பிள்ளைகளுக்கு பயன் படுத்தமுடியுமோ?

எனவே தக்க காரணமின்றி மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்திற்காக துடிக்கும் பொறுப்பற்ற கணவன் அல்லது மனைவிமார்கள் சற்று பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றியும் அதனால் அவர்கள் சந்திக்க இருக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் மிகவும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

பிள்ளைகள் தன் பெற்றோரிடம் காட்டும் பாசத்தில் எவ்வித போலியும் இல்லை வேசம் போட்ட நேசமும் இல்லை. நிச்சயம் பரிசுத்தமான அன்பு இருக்கும் நீங்கள் அவர்களுக்காக எல்லாப்பிரச்சினைகளையும் ஓரங்கட்டி விட்டு வாழும் காலம் வரை.

பாதிக்கப்பட்ட பிஞ்சுகள் பெரியவர்களாகி இதுபோன்ற கட்டுரைகள் இதை விட தெளிவாக எழுதலாம். நாம் அன்றாட வாழ்வில் தாய், தந்தையரை பிரிந்து வாழ்வதால் அவர்கள் படும் கஷ்ட, நஷ்டங்களை ஏதோ நம் அறிவுக்கு எட்டியதை இங்கு உங்களின் மேலான பார்வைக்காகவும், கருத்திற்காகவும் வழங்குகின்றேன். தொடருங்கள் உங்களின் பின்னூட்டம் மூலம் இன்ஷா அல்லாஹ்.... மானுடம் வசந்தம் பெற ஒரு நல்ல மார்க்கமுண்டு அதுவே இஸ்லாம் எனும் இனிய மார்க்கம்.

மீண்டும் சந்திப்போம்...


--மு.செ.மு. நெய்னா முஹம்மது.

10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): நீங்கள் அதிரைப்பட்டினத்திற்கு மட்டுமல்ல நம் சமுதாயச் சூழலின் அவசியம் அறிந்து அடிக்கப்பட எச்சரிக்கை ஒலி இது !

இவ்வுலகில் எதனையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் பெற்ற தாய் தந்தையர்களைத் தவிர..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

விவாகரத்திற்குப்பின் மறுமணம் செய்து வாழும் தாயின் அரவணைப்பில்/பராமரிப்பில் பிள்ளைகள் இருந்து வந்தாலும் அவர்கள் வளர்ந்து ஆளாகி அவர்களை பள்ளியிலோ, கல்லூரியிலோ, அல்லது வாக்காளர் அடையாள அட்டை எடுக்கவோ, குடும்ப அட்டை எடுக்கவோ, பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கவோ, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கும்பொழுதும் அல்லது இறுதியில் மரணிக்கும் பொழுது கூட மரண அறிவிப்பிற்கு பெற்ற தகப்பனின் பெயரும் விலாசமும் அவசியம் தேவைப்படுகிறது. கணவன் தான் பிரிந்து சென்று விட்டானே என்று எண்ணி புதுக்கணவனின் பெயரை அல்லது விலாசத்தையோ முன்னால் கணவனின் பிள்ளைகளுக்கு பயன் படுத்தமுடியுமோ?



எனவே தக்க காரணமின்றி மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்திற்காக‌ துடிக்கும் பொறுப்பற்ற கணவன் அல்லது மனைவிமார்கள் சற்று பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றியும் அதனால் அவர்கள் சந்திக்க இருக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் மிகவும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
MSM இன் இந்த கட்டுரை நம் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தலாக் விசயத்தில் அனைவரும் அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளவேண்டும்.

chinnakaka said...

தலாக் என்பது இறைவனால் அனுமதிக்கப்பட்டது என்றாலும் அவன் அதனை வெறுக்கின்றான்
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான் 4:35

Yasir said...

மிக நேர்த்தியான நடையில்...சமுதாயத்தில் நடந்து வரும் அநியாயச்செயலை தெள்ளத்ததெளிவாக காட்டி இருக்கிறீர்கள் சகோதர் அவர்களே...காரணமில்லாமல்..சின்ன சின்ன விசயங்களுக்காகவும் விவகாரத்து கோரி பெறுகிறார்கள் நம்மூர் ஆண்களும் பெண்களும் எந்த ஒரு சிந்தனை இல்லாமல்....அதற்க்கு பிள்ளைகளை பெற்றோரும் காரணம்..மணமான புதிதில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது இயல்பே...அதை பெற்றோரிடம் வந்து சொல்லும் போது..ஊதிப்பெரிது படுத்தாமல் ஊதி அணைத்து அறிவுரை சொல்லி அனுப்பவேண்டும்.அல்லாஹ் நாம் அனைவரையும் அவன் வெறுக்க கூடிய செயல்களில் இருந்து பாதுகாப்பானக

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர் : எங்கே வருகைப் பதிவில் attendance குறைவன மாதிரித் தெரியுது...

ZAKIR HUSSAIN said...

இப்போது விவாகரத்து செய்யும் ஆண்கள் அதிகம் மார்க்கம் பேச தெரிந்து கொண்டார்கள். இவர்களுக்கு மட்டும் எப்படி சாதகமான ஹதீஸ்கள் கண்ணுக்கு படுகிறது என தெரியவில்லை.

அதே சமயத்தில் மற்ற கடமைகளை பற்றி இவர்களிடம் கேட்டால் அப்போது அடிக்கும் பல்டி உலக சாதனைகளை தாண்டி விடும்.

நாளடைவில் சுனாமியால் பாதிக்கப்பட்டு அனாதைகளான குழந்தைகள் மாதிரி விவாகரத்தால் பாதிக்கப்பட்டு அனாதயான குழந்தைகள் அதிகமாகும். ஒரு 20 வருட இடைவெளியில் இப்படி வீம்பு விவாகரத்து செய்யும்போது அதிகம் வசனம் பேசியவர்கள் மவுனமாகி மற்றவ்ரகளிடமும் பேச முடியாமல் தனது பிள்ளைகளாலேயே கேவலப்படுத்த படலாம்.


Well done bro MSM Naina Mohamed for your wonderful article.

Yasir said...

//தம்பி யாசிர் : எங்கே வருகைப் பதிவில் attendance குறைவன மாதிரித் தெரியுது..// ஆமா காக்கா கொஞ்சம் பிஸி...அடுத்த ஆண்டு (இன்ஷா அல்லாஹ்) வியாபரம்/கணக்கு/வழக்கு பற்றிய திட்டங்களை பற்றி கம்மெனி நிர்வாகம் ப்ளான் கொடுக்க சொல்லிவிட்டதால்...அதிலயே நேரம் எல்லாம் போய்க்கொண்டு இருக்கிறது...attendanc குறைவுக்காக பெயில் ஆக்கி விடாதீர்கள் :)...மீண்டும் வருவோம்

ஜலீல் நெய்னா said...

"தலாக்" தற்பொழுது அதிகரித்து வருவதர்க்கு கார‌ணம்
மார்க்க சிந்தனையோடு அனுகவது இல்லாததுதான்.
கண்டதற்கெல்லாம் எடுத்தேன் கவிள்தேன் என்று
முடிவு பன்ன கூடாது.
ஒரு சின்ன சந்தேகத்திர்க்கு இடம் கொடுத்ததால், பின்
இவர்கள் வழ்கையே சிதைந்து போக இவர்களே
காரணமாக இருந்து விடுகிரார்கள்.
கணவன் மனைவியினிடை ஒற்றுமைக்கு உலை வைப்பதில்
முக்கிய இடத்தை பெறுவது "ஷைத்தான்"
ஆக, எங்கு ஒற்றுமைக்கு இடையூராக பிரச்சனை
ஏற்படுகிரதோ உடனே நாம் இந்த முடிவுக்கு வந்து
விடவேண்டும் "ஷைத்தான்" வந்துவிட்டான் என்று.
இன்னும் விளக்கம் ஏராளம் இருக்கிறது எங்கே...
பின்னூட்டம் கட்டுறையாக...போயிடுமோ என்ற.....
தயக்கம் தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் : jaleelsa சொன்னது…

// இன்னும் விளக்கம் ஏராளம் இருக்கிறது எங்கே...
பின்னூட்டம் கட்டுறையாக...போயிடுமோ என்ற.....
தயக்கம் தான். //

தயங்க வேண்டாம் பின்னுட்டமே ஒவ்வொரு கட்டுரைக்கும் ஊன்று கோல் அதுவே ஆக்கமாகவும் இருந்தாலும் நல்லதே, தயங்க வேண்டம் எழுதித் தாருங்கள் நம் சமுதயாச் சிக்கலில் இருக்கும் இளைஞர்களுக்கு எத்தி வைக்க வேண்டியவைகள் ஏராளம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு