Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முஹர்ரம் 12

அதிரைநிருபர் | December 07, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

வல்ல அல்லாஹ்வின் பேரருளால் ஹிஜ்ரி வருடம் 1431 முடிந்து ஹிஜ்ரி 1432ல் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தில் நாம் இருக்கிறோம். இந்த மாதத்தின் சிறப்புகளை பார்ப்பதற்கு முன் இந்த உலகத்தின் புத்தாண்டு தினங்களின் கொண்டாட்டத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு மதத்திற்கும், நாட்டிற்கும் கொண்டாடும் முறைகள் மாறுபட்டிருக்கும். ஆனால் எல்லா கொண்டாட்டங்களிலும் ஒட்டு மொத்தமாக மூட நம்பிக்கையின் பிறப்பிடமாக இவர்களின் புத்தாண்டு ஆரம்பிப்பதை தெளிவாக பார்க்கலாம்.

புதிய ஆண்டு பிறப்பதற்கு முதல் நாளும், இரவும், புதிய ஆண்டின் துவக்க நாளும் இந்த உலகத்தில் உள்ளவர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், வரவேற்கும் முறைகளைப்பார்த்தால் பகுத்தறிவுக்கு பொருந்தாமல் இருப்பதை நன்கு அறிய முடியும். கேளிக்கையும், வான வேடிக்கையும், அநாச்சாரமான காரியங்களும், மூட நம்பிக்கைகளும் சேர்ந்த கலவையாக இவர்களின் புத்தாண்டு வரவேற்பு இருக்கும். இந்த நாளில் மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதுபோன்ற பலவிதமான மூட பழக்கங்களை காணலாம். மேலும் இந்நாளில் இவர்கள் பயன்படுத்தும் பொருள்களால் காற்று மாசுபடுவதோடு பயன்படுத்தும் தண்ணீரையும் மாசுபடுத்தி தெருவெங்கும் குப்பைக்காடாக மாற்றிவிடுவார்கள்.

வல்ல அல்லாஹ்வின் தூய மார்க்கமான இஸ்லாத்தில் எந்தவிதமான அநாச்சாரங்கள், ஆராவாரம், மூட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் அழகான முறையில் ஹிஜ்ரி ஆரம்பிப்பதே தனிச்சிறப்பாகவே இருக்கிறது. (முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்யும் பழக்கங்களை கணக்கில் சேர்க்க வேண்டாம். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை தரட்டும்). ஆங்கில மாதங்களின் பெயர்கள் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் நமது இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் அதிகம் பேருக்கு ஞாபகத்தில் இருக்காது.

இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்:
முஹர்ரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்-கயிதா, துல்-ஹஜ்.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். (அல்குர்ஆன் 9:36)

நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது - புனிதமிக்கது என்று பொருள். இதன் புனிதத்திற்குச் சான்றாக பின்வரும் நபிமொழிகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

ரமளானுக்குப் பின் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்ளான (கடமையான) தொழுகைக்குப் பின் மிக்க சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபுஹூரைரா(ரலி), நூல்: முஸ்லிம், அஹமது)

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா(பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன? என்று கேட்டார்கள். யூதர்கள் : இது ஒரு புனிதமான நாள். இன்றுதான் மூஸா(அலை) அவர்களையும், அவரது சமூகத்தினரையும் காப்பாற்றி (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரையும் அல்லாஹ் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கிறோம். அதற்கு நபி(ஸல்)அவர்கள் மூஸா(அலை) அவர்களின் விஷயத்தில் உங்களைவிட நானே அதிகம் உரிமையும், கடமையுணர்வும், தகுதியும் உடையவன் எனக் கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி,முஸ்லிம்,அஹ்மத்).

இந்த நபிமொழி மூலம் முஹர்ரம் ஆஷுரா(பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பது கட்டயாக் கடமை போலத் தெரியலாம். ஆனால் இது கட்டயாக் கடமையல்ல. காரணம் நபி(ஸல்)அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில் ரமலானின் கட்டாய (ஃபர்ளான) நோன்பு கடமையாக்கப்படாத போது நிகழ்ந்த நிகழ்ச்சியாகும் இது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு இந்த ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. இதனைக் கீழ்காணும் நபிமொழி தெளிவுபடுத்துவதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தின் நோன்பு நோற்கக் கட்டளையிட்டிருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபின், விரும்பியவர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆவியா(ரலி) மற்றும் ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத்-அஹ்மத்).

ஆஷுரா (பத்தாம்)தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறிய போது, அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மது).

இந்த நபிமொழியின் மூலம் நாம் முஹரம் மாதம் 9,10 நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி(சுன்னத்) என்பதை அறியலாம். இவையன்றி வேறு ஏதும் விஷேஷ வணக்கங்களிலிருப்பதாக நாம் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ காண முடியவில்லை. திருக்குர்ஆனின் ஆணைப்படி நோன்பு நோற்பதே நாம் ஹிஜ்ரி வருடத்தை வரவேற்கும் விதமாகும். முஹர்ரம் மாதத்தின் வணக்கங்களாகும்.

ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

முஹர்ரம் ஆஷுரா(பத்தாம்) நாளன்று தான் நபி(ஸல்)அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு சோகமான சரித்திர நிகழ்ச்சியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களில் ஒரு சாரர் முஹர்ரம் முதல் பத்து நாட்களோ அல்லது (ஆஷுரா) பத்தாம் நாளோ ஹுஸைன்(ரலி) அவர்களின் மரணத்தை நினைவுப்படுத்தி ஒப்பாரி வைப்பது, மாரடித்துக் கொள்வது, பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, ஊர்வலங்கள் நடத்துவது, மௌலூது ஓதுவது போன்ற அநாச்சாரங்களைச் செய்து வருகின்றனர். இது நபி(ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ செய்யாத அநாச்சாரங்களாகும். இஸ்லாம் அங்கீகரிக்காத செயலாகும்.

கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளக் கிழித்துக் கொண்டு, அறியாமைக் காலத்து (ஒப்பாரி)க் கூப்பாடு போடுபவன் என்னைச் சார்ந்தவனல்லன். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரலி), நூல்: புகாரி,முஸ்லிம்,திர்மிதி,இப்னுமாஜா,அஹ்மத்).

(நமது)சோகத்தைக் கண்களாலும், உள்ளத்தாலும் வெளிப்படுத்துவது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். அல்லாஹ்வின் அருளுக்குரியதாகும். கையாலும், நாவினாலும் வெளிப்படுத்துவது ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: முஸ்னத்- அஹ்மத்).

(துன்பம்,துக்கம் ஏற்படும் போது) தலையை மழித்துக் கொள்பவனையும், ஒப்பாரி வைப்பவனையும், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டும் நான் விலகிக் கொண்டேன். (அறிவிப்பாளர்: அபூமூஸா அல் அஷ்அரி(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

எனவே கர்பலா நிகழ்ச்சியை ஆதாரமாகக்கொண்டு ஹுஸைன்(ரலி) அவர்களின் மரணத்திற்காக ஒப்பாரி, மாரடித்தல், தீ மிதித்தல், பஞ்சா எடுத்தல், ஊர்வலம் நடத்துதல், மௌலூது ஓதுதல் போன்ற செயல்கள் இஸ்லாத்தில் இல்லாத செயல்களாகும்.

வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் ஸஹாபா பெருமக்கள் (ரலி) சத்திய இஸ்லாத்தின் நெறியை கட்டிக்காப்பதற்கு தியாகங்கள் பல செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு 1431 வருடங்கள் சென்றுவிட்டது. 1432-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் நமது மார்க்கத்தை நாமும் தூய்மையான வழியில் பின்பற்றி பிற மக்களுக்கும் எடுத்துச் சொல்வதற்கு (அழைப்பு பணியில் ஈடுபட) திறமையை வளர்த்துக்கொள்ளவும், நமது பாதையில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை எதிர்கொள்ளவும் தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்.

- அலாவுதீன்

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் அலாவுதீன்:

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

தக்க சமயத்தில் எங்களின் உணர்வுக்குள் ஊடுருவச் செய்த அருமையான ஆக்கம்.. தங்களின் அழகிய செயல்கள் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்...

sabeer.abushahruk said...

அலாவுதீன்,

சரியான நேரத்தில் பதிந்திருக்கிறாய். 

//அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்//

என்கிற உன் வாசகத்திற்கு ஹதீஸ்களிலிருந்து திடமான சான்று ஒன்றைக்கொடேன்.  ஏன் கேட்கிறேன் என்றால் "யூதர்களுக்கு மாற்றமாக" என்றுமட்டும் விளங்கிக்கொண்டு நான் இது நாள்வரை 9 - 10 என்வோ 10 - 11 எனவோதான் நோன்பு நோற்று வந்திருக்கிறேன்.

9 வது நாளை மட்டும் அஷராவோடு மாற்றுக்காகப் பிடிக்க வேண்டும் என விளங்கிக்கொண்டதில்லை.11ஐப் பிடித்தாலும் மாற்றாகத்தானே வருகிறது

சற்று விளக்கிச் சொல்லேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.முஹர்ரம் பற்றிய அழகிய ஆக்கம்.பிற(ர்)மாதம் பற்றி தெரின்ந்த நமக்கு, நம் மதம்(மார்கம்)சொன்ன மாதத்தின் விபரம் தெரியவில்லை அதை சகோதரர் பிரமாதமாய் எழுதிவிட்டார்.

sabeer.abushahruk said...

Alaudeen, i found this in wikipedia:

//According to Hadith record in Sahih Bukhari, Ashura was already known as a commemorative day during which some Meccans used to observe customary fasting. In hijrah event when Muhammad led his followers to Medina, he found the Jews of that area likewise observing fasts on the day of Ashura. At this, Muhammad affirmed the Islamic claim to the fast, and from then the Muslims have fasted on combinations of two or three consecutive days including the 10th of Muharram (e.g. 9th and 10th or 10th and 11th)[2][3].//

pls tell me if this is correct. Thanks

ஜலீல் நெய்னா said...

அலாவுதீன் தம்பி அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த மாதிரி ஆக்கங்களை தந்து நன்மைகளை கொள்ளை அடிக்கிறீர்கள்
நல்லா கொள்ளை அடிங்கள்,எங்களுக்கும் கொஞ்சம் தந்து உதவுங்கலேன்.

ஓ...அது தான் இந்த ஆக்கமோ..சந்தோஷம்

சபீர்...
நான் பலமுறை பயான் கேட்டிருக்கிறேன் அதாவது: 9.10 வைக்க வேண்டும்
அப்படி 9 ஐ வைக்கத் தவறினால் 11 ல் சேர்த்து வைக்கலாம் என்று...
இதற்கு நானும் ஆதாரத்தை தேடிக்கொன்டுதான் இருக்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

நல்ல விசயங்களை பகிர்ந்துள்ளீர்கள்.இறைவன் அனைவருக்கும் தக்வாவையும்.தவ்ஃபீக்கையும். தந்தருள்வானாக.

அலாவுதீன்.S. said...

/// sabeer சொன்னது… நான் இது நாள்வரை 9 - 10 என்வோ 10 - 11 எனவோதான் நோன்பு நோற்று வந்திருக்கிறேன். 9 வது நாளை மட்டும் அஷராவோடு மாற்றுக்காகப் பிடிக்க வேண்டும் என விளங்கிக்கொண்டதில்லை.11ஐப் பிடித்தாலும் மாற்றாகத்தானே வருகிறதுசற்று விளக்கிச் சொல்லேன். ///
/// jaleelsa சொன்னது… சபீர்...நான் பலமுறை பயான் கேட்டிருக்கிறேன் அதாவது: 9.10 வைக்க வேண்டும்அப்படி 9 ஐ வைக்கத் தவறினால் 11 ல் சேர்த்து வைக்கலாம் என்று...
இதற்கு நானும் ஆதாரத்தை தேடிக்கொன்டுதான் இருக்கிறேன். ///

சகோ.சபீர், சகோ. jaleelsa: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்:
அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)

ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோர்க்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸ் மூலம் ஒன்பதாவது நாள்தான் சேர்த்து வைப்பதற்கு உரிய நாளாகிறது. 11ம் நாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை.

Yasir said...

தெள்ளத்தெளிவாக,எந்த ஒரு பிசிறும் எழுத்தில் இல்லாமல்...நன்மையான விசயங்களை அழகாக அள்ளி தரும் அலாவுதீன் காக்கா அவர்களுக்கு அல்லாஹ் அவன் அருளை பொழிவானக...

சபீர்காக்காவிற்கு...எதற்க்கு நபி(ஸல்)அவர்கள் 9 பதை சொல்லி இருப்பார்கள் என்றால்...எதிலும் தம்முடைய சமுதாயம் முதலில் நன்மையான விசயங்களை செய்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்க்காக இருக்கலாம்..எதையும் மற்றவர்கள் செய்தபின் செய்வது..அவர்களை பார்த்து நாம் காப்பி அடிப்பதை போன்றாகிவிடும்...யூதர்களை நாம் ஃபாலோ செய்வது போல் ஆகும் அதனால் “மாற்றாக” முற்படுத்தி இருக்கலாம் -இது என்னுடைய அனுமானம்...அல்லாஹ் நன்கறிந்தவன்

அலாவுதீன்.S. said...

ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)


இந்த ஹதீஸ் மேற்கூறப்பட்ட நூல்களிலும் இன்னும் பல நூல்களிலும் பதியப்பட்டிருந்தாலும் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான என்பவர் இடம் பெற்றிருக்கின்றார் இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.


இன்னும் தாவூத் இப்னு அலி என்பவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்றார் அவரை தஹபி இமாம் அவர்கள் இவருடைய ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறுகின்றார்கள்.
ஆகவே ஆதாரப்பூர்வமான ”எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே சிறந்த முறையாகும். அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.


முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது மாத்திரமே நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையாகும்.


ஆகவே நபி(ஸல்) அவர்கள் தெளிவாக ஒன்பதாம் நாள் என்று சொன்னதை எடுத்துக்கொண்டு தெளிவற்ற 11ஆம் நாளை விட்டு விடுவது நன்மை பயக்கும். மேலும் சில பேர் 10ஆம் நாள் மட்டும் வைப்பார்கள் இதுவும் சுன்னத்திற்கு மாற்றமாகும். 9ஆம் நாள் விடுபட்டால் 11ஆம் நாள் நோன்பு வைக்கிறேன் என்பதும் சுன்னத்திற்கு மாற்றமானதாகும்.


முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது மாத்திரமே நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழிமுறையாகும். அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.

அலாவுதீன்.S. said...

சகோ. அபுஇபுறாஹிம், சபீர், தஸ்தகீர், ஜலீல்சா, யாசிர்

மற்றும் சகோதரி மலிக்கா அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

sabeer.abushahruk said...

அலாவுதீன்,
நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். இனிமே 9 - 10 மட்டும் பிடிக்கிறேன்.

தம்பி யாசிர், உங்க அனுமானம் பிரில்லியன்ட் (10 லாப்டாப் வாங்க வருபவங்களிடம் 100 பீஸ் விற்கிறவங்களாச்சே).

எனினும் சகோதரர்களே...

//இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்//

என்கிற இந்த மூன்றெழுத்து ஆயுதம் நம் சமூகத்தையே இயக்கங்களாகப் பிரித்துப் போட்டிருக்கும் அவலம் என்று தீரும்?

Shameed said...

அஸ்ஸலமு அழைக்கும்
சகோதரர் அலாவுதீன் குரான் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி மிக நேர்த்தியாக உள்ளது உங்கள் ஆக்கம் ,எடுத்துக்கொண்ட விஷயம் மிக அருமை சரியான நேரம்
அதற்கான பின்னுட்டங்கள் அற்ப்புதம்.
எல்லாம் சரி நாளைக்கு வியாழக்கிழமை
ஆச்சே!
எல்லோரும் எதிர் பார்ப்புடன் உள்ளோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு