இருபத்திரண்டு ஆண்டு கால அழகிய நாட்களும் அர்த்தமுள்ள வாழ்க்கையும் இரண்டொரு நொடிகளில் மனமெனும் ஞாபகக் கிடங்கிலிருந்தே மறைந்து போனது. துள்ளித் திரிந்த மானொன்று ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு கொடிய உபாதை அது. தாயும் தந்தையும் உயிர் வலிக்க தன்னை தூக்கிச் சுமக்கின்ற போதும் அவர்கள் யாரென்றே அறியாத வேதனைத் தருணம். சரண்யாவிற்கு தேர்வுகள் எழுதி மதிப்பெண்கள் பெற்றுத் தந்த வலதுகை மதிப்பிழந்து செயலற்றுத் தொங்குகிறது.
‘இனியும் உயிர் வாழ்வாளா சரண்யா?’ என அனைவரும் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தபோதுதான் திடீர் ஆச்சரியமாய் சாதனைப் பெண்ணாகவே உருவெடுத்திருக்கிறார்!
‘‘சின்ன வயசுலயிருந்தே ரொம்ப நல்லா படிப்பா. பத்தாவதுல 472 மார்க்! பெரிய அளவில் சாதிக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பா. கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள்னு நிறைய பரிசுகள் வாங்கி இருக்கா.
பன்னிரண்டாவதுலயும் ஆயிரத்து நூத்திப் பதினெட்டு (1118) மார்க் எடுத்தா. ரொம்பவே சந்தோஷப்பட்டோம்.
சரண்யாவோட ஆசை, பி.டெக். தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துலேயே சேர்த்தோம். படிப்புல இன்னும் ஆர்வம் அதிகமாச்சு.
நாலு வருஷம் இப்படியே சந்தோஷமாப் போச்சு. ப்ராஜெக்ட்டுக்காக கல்பாக்கம் போயிருந்த சரண்யா திடீர்னு சோகமா வீட்டுக்கு வந்தா. ‘உயிரே போகுற மாதிரி தலைவலிக்குதுப்பா’ன்னு சொல்லி துடிச்சுப் போயிட்டா. அதுக்கு முன்னாடியும் பல தடவை லேசா வந்துருக்கு. ஆனா அப்பெல்லாம் இந்தளவுக்கு வேதனைப்பட்டதில்லை. பதறிப்போய் டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போனோம். கண்ணுல ஏதோ பிரச்னையா இருக்குமோனுதான் நெனைச்சோம். ஆனா ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு ‘மூளையில கட்டி!’ன்னு டாக்டர் சொன்னாரு. நிலை குலைஞ்சு போனோம். ஒருநாள் கூட தாமதிக்காம உடனே டாக்டர் சொன்ன மாதிரி அறுவை சிகிச்சை செஞ்சோம்.
பழையபடியே ஆரோக்கியமா எங்க மக திரும்பக் கெடைச்சிடுவான்னுதான் நெனைச்சோம்.
வேண்டாத தெய்வமில்லை. அவ கண்ணு முழிச்சுப் பார்த்ததும்தான் எங்களுக்கு நிம்மதியே வந்துச்சு. ஆனா ஒரு நொடி கூட அது நிலைக்கலை. எங்களையே யாருன்னு அவளுக்குத் தெரியலை. பழைய நினைவுகளை எல்லாமே மறந்துட்டா. அதுவே பெரிய அதிர்ச்சி! இதில்வேறு ஒரு கையும் காலும் செயலிழந்து போயிடுச்சுன்னு தெரிஞ்சதும் மேலும் நொறுங்கிப் போயிட்டோம்.
இருபத்திநாலு மணி நேரமும் சிகிச்சைதான். தொடர்ச்சியா பல நாட்கள் இப்படியே போச்சு. கடவுள் புண்ணியத்தால மெல்ல மெல்ல நினைவு மட்டும் திரும்புச்சு. ஆனா கை கால் மட்டும் சரியாகவே இல்லை. படுத்த படுக்கையாகவே கிடந்தா!’’ என தன் மகளின் கண்ணீர் நாட்களை விவரிக்கிறார் தந்தை ரெங்கராஜ்.
இப்படிப்பட்ட சூழலில் படிப்பை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அதே தருணத்தில்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சரண்யா.
‘‘நான் சிகிச்சையில இருந்தப்பவே தேர்வும் வந்துடுச்சு. படிப்பை விட்டுறக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன். என்னோட எண்ணத்தை வெளிப்படுத்துனப்ப ‘நீ நல்லாயிருந்தா அதுவே எங்களுக்குப் போதும்’னு சொல்லிட்டாங்க.
நான் உறுதியா இருந்ததுனால என்னோட ஆசைக்கு அவங்களே ஒத்தாசையா இருந்தாங்க! அம்மா, அப்பா, அக்கா எல்லாருமே என்னை ஊக்கப்படுத்துனாங்க... உடம்பு முடியாம துவண்டு கெடந்த சூழ்நிலையிலும் மனதை உறுதியாக்கிகிட்டு பரீட்சைக்குப் படிச்சேன். நண்பர்கள், பேராசிரியர்கள்னு எல்லாருமே பலவிதங்கள்ல உதவியா இருந்தாங்க. பரீட்சை எழுத என்னைத் தூக்கிக்கிட்டுதான் போவாங்க. அப்ப என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.
கை விழுந்து கிடந்ததால என்னால பரீட்சை எழுத முடியாது. நான் சொல்லச் சொல்ல பல்கலைக்கழகம் ஏற்பாடு செஞ்சி ருந்த ஒருத்தர் தேர்வு எழுதினார்’’ என்கிறார் சரண்யா.
அப்படி சிரமப்பட்டு எழுதிய அந்தத் தேர்விலும் எண்பத்தைந்து விழுக்காட்டில் தேர்ச்சி பெற்று பி.டெக். பட்டத்தை வென்றெடுத்திருக்கிறார் சரண்யா.
சிகிச்சை தொடர்ந்த போதும்... சரண்யாவின் படிப்புத் தேடல் தீரவே இல்லை. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். மாணவி சரண்யா!
ஆக்கம்: கொல்லிமலைச்சாரல் ஆனந்த் பிரசாத்
நன்கு உயர்நிலைக்கல்வி படிக்க வாய்ப்புகள் பல இருந்தும் அதற்கேற்ற நல்ல சூழ்நிலைகள் நம்மை தாலாட்டுபாடி தாய் போல் தாலாட்டினாலும் ஏதேதோ காரணம் பல சொல்லி கழுவும் மீனில் நழுவும் மீனாய் ஆர்வமும், இலட்சியமும் ஏதுமின்றி ஏனோதானோ என்று படித்து வரும் சமுதாய மாணவ, மாணவியர்க்கு இது ஒரு நல்ல பாடம் இலவசமாய் பள்ளிக்கூடம் செல்லாமலேயே.
கல்வி விழிப்புணர்ச்சிக்காக இத்தகவல் வழங்கி மகிழும்.
-- மு.செ.மு. ரஃபியா, ஜித்தாவிலிருந்து...
14 Responses So Far:
தேர்வு அட்டவணைகள் வெளியான சமயத்தில் , தயாராகிக் கொண்டிருக்கும் மாணாக்கர்களுக்கு தங்களின் இலக்கை அடைய, தன்னபிக்கையை தூண்டும் விதமான பதிவு வாழ்த்துக்கள் பதிவாளருக்கும், மாணவச் செல்வங்களுக்கும்.
தன்னம்பிக்கையூட்டும் ஆக்கம் !
என்னதான் கஷ்டங்களை கண்டிருந்தாலும் மாணவர்களுக்கு சுய ஆர்வமும், உத்வேகவும் படிப்பில் இருந்தால் நிச்சயம் அதன் பலனை மாணவர்கள் காண்பார்கள். இதற்கு மிக முக்கியம் பெற்றோர்களின், உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
பிள்ளைகள் மூலம் எதிர்காலத்தின் பிரகாசத்தை எண்ணி அவர்கள் விரும்பியதை எல்லாம் ஆசை,ஆசையாய் வாங்கிக்கொடுத்து இறுதியில் பெற்றோர்கள் விரும்பாததை செய்து விட்டு போகும் பிள்ளைகள் பலர் உள்ள இக்கால சூழ்நிலையில் இப்படியுமா? என பிரம்மிப்பை ஏற்படுத்தி எல்லோரின் விரல்களையும் ஆச்சரியத்தால் தன் மூக்கின் மேல் வைக்க வைத்த சகோதரியை பாராட்டுவோம். இக்கட்டுரை மூலம் மாணவ, மாணவியருக்கு ஒரு ஊக்க டானிக் கொடுத்த சகோ. ரஃபியாவிற்கும் பாராட்டுக்கள் பல இன்னும் இது போன்ற பல கட்டுரைகள் வர வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
நல்ல பதிவு
அஸ்ஸலாமு அழைக்கும்
பரிட்சை நேரத்தில் இது போன்ற கட்டுரைகள் மாணவ மாணவிகளுக்கு நல்ல ஊக்க மருந்து
இதுபோன்று மேலும் காடுரைகள் தந்து மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்துங்கள்.
தன்னம்பிக்கை தொடர் அதுவும் சரியான நேரத்தில்....நன்றி சகோ
பிரச்னைகள்தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்
தன்னம்பிக்கை பதிவு பகிர்வுக்கு டாங்கீஸ்...
Good article in right time..Thanx கொல்லிமலைச்சாரல் ஆனந்த் பிரசாத் & Bro.மு.செ.மு. ரஃபியா
இந்தக் கட்டுரையை சார்ந்தே எனது சொந்தகளின் சிறார்கள் இருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் பரீட்சைக்கு படிப்பது விஷயமாகவும் இவ்வளவு சிரமத்திலும் எப்படி இந்தப் பெண்மனி படித்தார் என்றும் அவர்களும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர் அதில் ஒருத்தன் கேட்டன் "முதல்ல டிவியை வீட்டிலிருந்து எடுங்க அப்பதான் எங்களால அமைதியா படிக்க முடியும்" அடுத்தவன் சும்மயிருக்காமல் "டிவியை எடுத்தா சும்மாவா இருப்பாங்க கம்ப்யூட்டர்லாதான் எல்லா சிரியலும் வருதே" எங்கள் உரையாடலின் ஊடே இவர்களின் இந்த வாதம் தலையில் ஆணி அடித்ததுபோல் இருந்தது ! யார் இதற்கு பொறுப்பு ?
தன்னம்பிக்கையூட்டும் நல்ல பதிவு..
Good article in right time..Thanx கொல்லிமலைச்சாரல் ஆனந்த் பிரசாத் & Bro.மு.செ.மு. ரஃபியா
இது போன்ற நல்ல
ஆர்டிக்கல் நாங்கள் படிக்கும் காலத்தில் கிடைக்க பெறாததை நினைத்து இப்போது வருந்துகிறேன்
பாரூக் நிஜாம்
இப்படிப்பட்ட சூழலில் படிப்பை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அதே தருணத்தில்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சரண்யா.
இது நம் அனைவருக்கும்
நம்பிகை ஊட்டும் நல்ல பதிவு .
அஹ்மத்
Post a Comment