Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் அழகிய மழைக்காலம் 14

அதிரைநிருபர் | December 08, 2010 | ,












ஆண்டவனின் அருளினது சாட்சி- நம்
அதிரையிலே அடைமழையின் ஆட்சி- பல
வேண்டுதலின் வினைப்பயனாய் வந்திருக்கும் வான்மழையே
வருக-வளம்-தருக.

கார்மேகம் நீர்முடிச்சு அவிழ்க்கும்-அந்த
கடல்முழுதும் கொண்டுவந்து கவிழ்க்கும்-நம்
ஊர்மேலும் வளம் பெறவே ஊற்றுக்கள் நீர்பெறவே
பெய்யும்-மழை-செய்யும்.

வீட்டின்முன் சாலைகளில் தேங்கும்-நீரால்
விரல்நடுவே சேற்றுப்புண் வீங்கும்-பெரும்
காட்டாற்று வெள்ளமென கரைபுறண்டு ஓடிவரும்
தண்ணீர்-மேக-கண்ணீர்.

அன்றாடம் காய்ச்சிகளுக்கு அல்லல்-மழையைக்
கொண்டாடும் குழந்தைகளுக்கோ துள்ளல்-சோலை
வண்டாடும் மலர்செடிக்கும், வாடி நிற்கும் மரத்திற்கும்
வரமாம்-உதவிக்-கரமாம்.

கத்தியுடன் கப்பலென்று சொல்வான் - தம்பி
கடல் எனவே மழைநீரைக் கொள்வான்- பல
உத்தியுடன் செய்துவந்து உவகையுடன் அதைநீரில்
விடுவான்-சந்தோசப்-படுவான்.

இயல்புநிலை பாதிக்கும் காலம்-இங்கு
இலைநுனியில் நீர்சொட்டும் கோலம்-வீசும்
புயல்மழையின் தாக்கத்தில் புழுபோலே தேகம்
சுருங்கும்-போர்வையும்-உறங்கும்.

படகுவழி படையெடுப்பும் இல்லை-கடல்
வலைவிரிப்பும் மீன்பிடிப்பும் இல்லை-நம்
கடைத்தெருவில் ஈயாடும், கறிக்கடையும் வெறிச்சோடிப்
போகும்-கருவாடு-வீட்டில்வேகும்.

மழைவருகை எதிர்பார்த்து அன்றே-வடகம்
முதல் வற்றல்வரை என்றே- வெயில்
தலைபிளக்கும் நாட்களிலே தயாரிப்பு செய்திட்ட
முறுக்கும்-வீட்டில்-இருக்கும்.

செக்கடியும் ஆலடியும் ததும்பும்-அந்த
செடியனிலும் மழைநீரே ஒதுங்கும்-என்றாலும்
அக்குளம் முழுவதிலும் அள்ளிவந்த குப்பைகளின்
கதம்பம்-மனம்-வெதும்பும்.

இப்படி நாம் எழுதிடலாம் நிறைய-ஊரில்
இருந்திட்ட நாட்கள்தான் குறைய-ஆம்
எப்படியோ நான்ரசித்த நல்மழையை நானிங்கு
பகிர்ந்தேன்-உள்ளம்-மகிழ்ந்தேன்...

-- அதிரை என்.ஷஃபாத்

14 Responses So Far:

அதிரைநிருபர் said...

அதிரைநிருபருக்கு தன் கவிதை ஆக்கத்தை அனுப்பிவைத்த தம்பி ஷஃபாத் அவர்களுக்கு நன்றி மற்றும் அன்புடன் வரவேற்கிறோம்.

இளம் எழுத்து திறமைசாலிகளை நம் அதிரைநிருபர் என்றும் ஊக்கப்படுத்தும் என்பது அதிரைநிருபர் வாசகர் வட்டம் நன்கு அறிந்ததே.

தம்பி ஷஃபாத் உங்களைப்போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

Yasir said...

வருக இளம்கவியே...நாங்கள் சிறுவயதில் கண்டதை,செய்ததை அப்படியே..கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள்...நீங்கள் வயதில்தான் இளையவர் என்று நினைக்கிறேன்...கவிதையில் முதுமை தெரிகிறது...
//கடைத்தெருவில் ஈயாடும், கறிக்கடையும் வெறிச்சோடிப்
போகும்-கருவாடு-வீட்டில்வேகும்.// கருவாடு எனக்கு பிடிக்காவிட்டாலும்....மிளகு தண்ணி வாசனையை முக்கு முன் கொண்டுவந்தது உங்கள் கவிதை...வாழ்த்துக்கள் சகோதரே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புது வரவு அதுவும் அருமையான சாரலோடு விழும் மழையாக அதிரைப்பட்டினத்தின் மழைக்கால கவிதை !

தொடருங்கள் வாருங்கள் ஒன்றாக நனையலாம்...

Unknown said...

இளசுகளோடு நானும் சேர்ந்து வாழ்த்துகின்றேன், பேரப்பிள்ளையை.

Unknown said...

பொருத்தமான படத்தைத் தத்ரூபமாகப் போட்டதற்காக அதிரை நிருபரையும் வாழ்த்துகின்றேன்.

sabeer.abushahruk said...

கன்றுக்குட்டியின் துள்ளலான எழுத்து நடை வாசிக்க சுகமாக இருக்கிறது. வாழ்த்துகள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி ஷஃபாத் கொடுத்து வைத்தவங்க நீங்க ! மரபுக் கவிதையே வந்து வாழ்த்திருக்கிறது... நாங்களும் தான் கவிதைன்னு எழுதினோம் ஒரு நள் கூட அந்தப் பாக்கம் வரவேயில்லை எங்கள் மாமா ! :)

வாழ்த்துக்கள் !

அலாவுதீன்.S. said...

சகோ.என்.ஷஃபாத் - அதிரை நிருபருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நல்ல மழைக்கவிதை வரைந்து மழையில் நனைய வைத்த சகோ. என்.ஷஃபாத்திற்கு வாழ்த்துக்கள்!

மழை பெய்து கொண்டு இருக்கும் அழகிய படத்தை (ரசிக்கும்படி) வெளியிட்ட அதிரை நிருபருக்கும் வாழ்த்துக்கள்!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.மழையில்Bath(ஷஃபாத்) எடுத்ததால் மேனியெல்லாம் நனைந்து சில்,சில்.மேலும் நெஞ்சிலும் குளுமை!இளமை தந்த மகிமை,ஒவ்வொருவரியும் மிக அருமை.இங்கு இளம் கவிக்கு தாகம் வந்து கவிமழையாய் பொழிந்தது. ஒவ்வொரு வரியும்
சுவைதரும் கற்கண்டு,இப்படி பல சொற்கொண்டு,படைக்க நீயும் வாழனும் பல்லாண்டு
என அன்புடன் வாழ்துகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தம்பி ஷஃபாத், வாருங்கள், மழைக்கவிதையில் ஆரம்பித்துள்ள உங்கள் முதல் ஆக்கம் அருமை.

எல்லோருடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

நல்ல பேச்சாற்றல் மிக்க நீங்கள், கவிதையும் எழுதுவீர்கள் என்பது இப்பதிவில் எல்லோருக்கும் வெளிகாட்டி இருக்கிறீர்கள்

ZAKIR HUSSAIN said...

வாழ்த்துக்கள் அதிரை என்.ஷஃபாத், முதல் பதிப்பே அழகாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். போட்டோவில் உள்ள மாதிரி அதிரை சுத்தமாக இருந்தால் நல்லா இருக்கும்ல.....ஹ்ம்ம்..அந்த காலம் எப்போது வருமோ தெரியவில்லை.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ஷஃபாத்தின் கவிதை மழை அதிரையை பிரிந்து வாழும் அனைவரையும் (கவிதை) மழையில் நனைத்து விட்டது

புகை படம் ரொம்ப ஜோர்.

அதிரை என்.ஷஃபாத் said...

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வெளியிட்ட அதிரை நிருபர் குழுவுக்கும் நன்றிகள்.

Unknown said...

தம்பி சபாத் உன் பேச்சு திறமையை கேட்டு இருக்கிறேன் .....
உன் எழுத்தும் அருமைதான் .....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.