Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 15 27

அதிரைநிருபர் | March 17, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! இதுவரை கடன் கொடுக்கல் வாங்கல், வருமானத்திட்டம், சேமிப்பு  வரை அனைத்தையும் பார்த்தோம். இனி நமக்கு நாமே என்ற திட்டத்தில் வட்டியில்லா கடன் திட்டத்தைப்பற்றி பார்ப்போம்.

வட்டியில்லா கடன் திட்டம்:

சீட்டு நடத்துவது போல்தான் இந்த திட்டம், எப்படி நடத்துவது ஏலச்சீட்டு நடத்துவதை பற்றி முன்பு ஒரு தொடரில் கூறியிருந்தேன். ஏலச்சீட்டு (ஏலச்சீட்டு வட்டியின் அடிப்படையில் உள்ளது) போல் இது கிடையாது. இந்த திட்டத்தில் குறைந்தது 10 பேர் வரை (அதிகமாகவும்) சேர்க்கலாம். குறைந்தது ஒரு நபருக்கு 3000ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். மொத்தம் 30ஆயிரம் வருகிறது. முதல் மாதத்தில் அனைவரின் பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி குலுக்கி ஒவ்வொன்றாக எடுத்து உதாரணத்திற்கு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் பெயர், மே மாதத்தில் ஒருவர் பெயர் என்று சீட்டை ஆரம்பிக்கும் தினத்திலேயே குறித்து வைத்துக்கொண்டு மாதாமாதம் யார் பெயர் குறித்து வைத்திருக்கிறீர்களோ  அதன்படி கொடுத்துவிடலாம். மாதா மாதம் பெயர் குலுக்கல் தேவையில்லை. முதல் மாதத்திலேயே பெயர் சீட்டை குலுக்கி வரிசைப்படி எடுத்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். (இதில் சீட்டை நடத்துபவரும் ஒரு உறுப்பினர். சீட்டை நடத்துபவர்  முதல் சீட்டை எடுத்துக்கொள்ளலாம், விட்டும் கொடுக்கலாம்).


இந்த முறையில் நடத்தும்பொழுது நடத்துபவரும், உறுப்பினர்களும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும். இருவரும் ஏமாற்றுப்பேர்வழிகளாக இருக்கக் கூடாது. இது கடன் வாங்குவதுபோல்தான். வட்டி என்ற பேச்சுக்கே இந்த திட்டத்தில் இடமில்லை.

வளைகுடா சகோதரர்கள் தங்கள் ரூமில் உள்ளவர்கள் தெரிந்தவர்கள் என்று சேர்த்து 500திர்ஹம் முதல் 1000திர்ஹம் வரை இதுபோல் சீட்டு சேர்த்து நடத்தலாம். இதன்மூலம் நமது தேவைகள் நிறைவேறும். இங்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டியதில்லை. 10பேரின் பணம் சுழற்சி முறையில் அவர் அவர் பணம் அவர்களுக்கே போய்ச்சேர்கிறது. குறைந்த கால அளவு 6 மாதம் அல்லது 12 மாதம் வைத்து நடத்தலாம். இதற்கு மேல் நீடிப்பது நல்லதில்லை. நடத்துபவரும், உறுப்பினர்களும் நம்பிக்கையானவர்களாக இருக்கவேண்டும். வல்ல அல்லாஹ்வை நம்பி இதனை செயல்படுத்தி பாருங்கள். அவசரத்தேவைகளுக்கு கடன் வாங்காமல் சமாளிக்கலாம்.

பைத்துல்மால்:

பைத்துல்மால்கள் மூலம் செல்வந்தர்களின் உதவியுடன் கஷ்டப்படும் நம் சமுதாயத்தவர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் பொருள்கள் வாங்கிக் கொண்டும், பொருள்கள் எதுவும் இல்லாதவர்களுக்கு சாட்சிகள் வைத்துக்கொண்டும் கடன்கள் வழங்கலாம். நிறைய ஊர்களில் இத்திட்டம் நடந்து வருகிறது. இருந்தாலும் இன்னும் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. முழுக்க முழுக்க பைத்துல்மால்கள் செயல்படும் நேரத்தில் பிறமதக்காரர்களின் வட்டிக்கடைகள் முஸ்லிம்கள் பகுதியை விட்டு வெளியேறும்.

பொருளாதார சுனாமி

தற்பொழுது ஜப்பானில் சுனாமியும், நில நடுக்கமும் வந்து பலவிதமான இழப்புகளை ஏற்படுத்தியது. (வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் கோபத்தால் உருவாகும் அனைத்துவிதமான ஆபத்துகளிலிருந்து நம் அனைவரையும் பாதுகாக்க தினமும் துஆச் செய்து வருவோம்). கடந்த வருடங்களில் ஒரு பொருளாதார சுனாமி வந்து உலகையே குலுக்கி எடுத்ததை மறந்து இருக்க மாட்டீர்கள். இதில் நமக்கும் படிப்பினைகள் இருக்கிறது. பல பேர் வேலை இழந்தனர். ஐடி துறையும், ரியல் எஸ்டேட்  என்ற துறையும் மேலோங்கி இருந்தது. இந்த துறையில் உள்ளவர்கள் வானத்திற்கும்  பூமிற்கும் குதித்து கொண்டு இருந்தார்கள்.

வல்ல அல்லாஹ் அனுப்பி வைத்த இந்த பொருளாதார சுனாமி பல பேர்களை தெருவுக்கு அனுப்பி பல சோதனைகளை ஏற்படுத்தியது. மன்னர்கள் கண்ட கனவு கனவாகவே போய்விட்டது. இதில் பெரிய பெரிய பண முதலைகளின் பேராசையினால்  மக்களையும் பேராசைப்பட வைத்து, அமெரிக்க மக்களில் பல பேரை தெருவுக்கு கொண்டு வந்து சேர்த்தது, பல வங்கிகளும் திவாலாகியது. வளைகுடா நாடுகளில் நிறைய பேருக்கு வேலைகள் பறிபோனது.

பொருளாதார சுனாமி வந்த நேரத்தில் ஒருவரின் பேட்டியை படித்தேன்: அவர் சொன்னது நான் வேலை இழந்து விட்டேன் என்னுடைய கவலையெல்லாம் இதுநாள்வரை மிக ஆடம்பரமாக என் பிள்ளைகளுக்கு பிட்சா போன்ற உணவுகளை வாங்கி கொடுத்தேன். இனி அவர்களுக்கு ரசம் சோறு கொடுக்க கூடிய நிலைக்கு வந்து விட்டேன் என்பதை நினைக்கும்பொழுது கண்ணீர் வடிக்கிறேன் என்றார். (ரசம் சோறு அவருக்கு கேவலமாக தெரிகிறது - இது கூட இல்லாமல் உலகில் நிறைய பேர் பட்டினி கிடக்கிறார்கள் என்பது தெரியவில்லை இந்த நவீன மனிதருக்கு).

வட்டியின் அடிப்படையில் கொண்ட பேராசை வியாபாரங்கள், எந்த தொழிலையும் வட்டியின் அடிப்படையில் தொடங்குவது, பங்கு சந்தை என்ற பெயரில் வெளிப்படையாக நடக்கும் மிகப்பெரிய சூதாட்டங்கள், எந்த தகுதியும், திருப்பி அடைக்க வழியும் இல்லாதவர்களுக்கு வங்கிகள் கடன்கள் கொடுத்தது, தன் நலம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அப்பாவி மக்களின் செல்வங்களை சுரண்டி வாழும் கூட்டங்கள், இன்னும் இது போன்ற பல காரணங்களால் பொருளாதார சுனாமி மூலம் மக்களுக்கு சோதனைகள் வந்து சேர்ந்தது. ஏன் நல்லவர்களுக்கு வேலை போக வேண்டும் என்று நினைக்கலாம். நல்லவர்கள், தீயவர்கள் என்று எல்லோருக்கும் குறிப்பிட்ட காலம் நலம், குறிப்பிட்ட காலம் சோதனை என்று வல்ல அல்லாஹ்விடமிருந்து மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் நாம் உயிருடன் இருக்கும்வரை.

இந்தியாவில் உள்ள வங்கிகளும், வளைகுடாவில் உள்ள ஷரியத்தை கடைபிடித்த வங்கிகளும் தப்பித்துக்கொண்டன. இந்தியா பாதிப்படையாமல் இருந்தது பற்றி ஆய்வாளர்கள் கூறும்பொழுது இந்தியர்களின் சேமிக்கும் பழக்கமே காரணம் என்றார்கள். ஷரியத் வங்கிகள் திவாலாகமல் இருப்பதை பார்த்த மேலை நாட்டு வங்கிகள். தற்பொழுது ஷரியத்படி செயல்படுத்த முயற்சிகள் செய்து சில வங்கிகளும் செயல்பட்டு வருகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு 50பேர் இருந்த கம்பெனியில் 25பேரை ஊருக்கு கேன்சலில் அனுப்பி விட்டு 50பேர் வேலையையும் 25பேர் தலையில் வைத்துவிட்டார்கள். நாமும் வேறு வழி இல்லாமல் வேலையில் தொடர்ந்து இருந்து வருகிறோம். கடலில் ஏற்பட்ட சுனாமி கடலோரத்தில் இருந்த நாடுகளில் நடந்த அநாச்சாரங்களை ஒட்டு மொத்தமாக துடைத்தெறிந்து விட்டுச் சென்றது. பொருளாதார சுனாமியும் பல படிப்பினைகளை விட்டுச்சென்றுள்ளது. நாம் நடந்து முடிந்த பொருளாதார சுனாமியால் பாடம் படித்தோமா?

இல்லை நாம் பாடம் படிக்கவில்லை. வட்டியின் அடிப்படையில் உள்ள எந்தவொரு வியாபாரமும், கொடுக்கல் வாங்கலும் வல்ல
அல்லாஹ்வின் பார்வையில் தண்டனைக்குரியதே. நாம் இந்த வட்டி என்ற கொடும் நெருப்பில் இருந்து தவிர்ந்து வாழ முயற்சி செய்தோமா? இல்லை. . . இல்லை. . . இல்லை . . . என்றுதான் கூறமுடியும்.

நாம் என்ன செய்கிறோம்:

வீடு கட்டுவதற்கு, கடைகள் கட்டுவதற்கு, வீடு கட்டி வாடகைக்கு விடுவதற்கு என்று   தைரியமாக வங்கியில் கடன் வாங்குகிறோம். நகைகளை கொண்டுபோய் வங்கியில் வைக்கிறோம். கடன் அட்டையில் கடன் வாங்குகிறோம். ஏன் இவ்வாறு மீண்டும் மீண்டும் வங்கியில் வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டால், தவிர்ந்து வாழ முடியவில்லை என்ற பதில்தான்  நம்மவர்களிடம் இருந்து வருகிறது.

ஒரு சகோதரர் இன்ஷூரன்ஸில் கடன் வாங்க முயற்சி செய்தார். இவர் ஏழை இல்லை வசதிகள் இருக்கிறது. வாடகைக்கு விடுவதற்கு வீடு கட்ட வேண்டுமாம். என்னிடம் கடன் பத்திரத்தை கொடுத்து சாட்சி கையெழுத்து போடுங்கள் என்றார். நான் அவரிடம் சொன்னது: நான் வாழ்நாள் இன்ஷூரன்ஸ் செய்திருந்தேன், உயிருக்கு அல்லாஹ்தான் பொறுப்பு இன்ஷூரன்ஸ் பொறுப்பாகாது. மேலும் இன்ஷூரன்ஸ் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்குத்தவிர ஹராம் என்று அறிந்த பிறகு அதிலிருந்து விலகி கொண்டேன், அதனால் உங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டு வட்டிக்கு துணை செய்ய முடியாது என்று சொல்லி விட்டேன். அவருக்கு என்மேல் வருத்தம். அவர் என்னிடம் சொன்னது ஆச்சிரியப்பட வைத்தது. என்ன பாய் செய்வது ஷைத்தான் வலையிலிருந்து மீள முடியவில்லை என்று சொன்னார். என்னமோ ஷைத்தான் நீ வட்டிக்கு கடன் வாங்கவில்லை என்றால் உன்னை வாழவிடமாட்டேன் என்று அவரை மிரட்டி விட்டு போனான் என்பது போல் உள்ளது அவர் வார்த்தை.

சகோதர சகோதரிகளே! வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டுவதிலிருந்தும், கடன் அட்டையில் வட்டிக்கு கடன் வாங்குவதிருந்தும், நகைகளை கொண்டு போய் வட்டிக்கு அடகு வைப்பதிலிருந்தும் இன்னும் எத்தனை வகையான காரியங்களுக்கு வட்டிக்கு வாங்க நினைக்கிறோமோ அவை அனைத்திலிருந்தும் விலகி வாழ்வதோடு, உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வாழ்ந்து வல்ல அல்லாஹ்வின் பொருத்தத்தை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.

இன்றைய செல்வந்தர்களின் நிலை:

நம் சமுதாயத்தில் செல்வம் அதிகமாக உள்ளவர்கள், அவர்கள்  தெருவில் உள்ளவர்களின் கஷ்டங்களையும், உறவினர்களின் கஷ்டங்களையும் கண்டு கொள்வதில்லை, முன்பெல்லாம் 10,20 லட்சங்களில் வீடுகள் கட்டினார்கள். செல்வங்கள் அதிகமான இன்றைய நிலையில் 50 லட்சம், 80 லட்சம், கோடி என்ற செலவில் வீடுகள் கட்டப்படுகிறது.

ஏழைகள் நிறைந்த, கல்வி கற்பதற்கு வசதியில்லாத, பெண்களுக்கு திருமண வயது கடந்தும் விலை கொடுத்து மணமகனை விலைக்கு வாங்க பணமில்லாமல் தவிக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் நாமும் ஒரு முஸ்லிம் அல்லவா என்ற சிறு மன உறுத்தல் கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இன்றைய செல்வந்தர்கள்.

தம் முயற்சியால் வந்த செல்வம் தனக்கு மட்டும்தான் என்று ஆடம்பரமாக வீண் விரயம் செய்தும்,  செல்வம் வரும்பொழுது தலைகால் புரியாமல் நடந்து கொள்கிறார்கள். செல்வம் நிலையானது அல்ல நம்மை சுற்றி உள்ள மனிதர்கள்தான் நிரந்தரமானவர்கள். அவர்களுக்கு நம் சக்திக்கு உட்பட்டு உதவிகள் செய்து வாழ்வதுதான் நன்மைகளை பெற்றுத்தரும் சிறந்த வாழ்க்கை. நமக்கு செல்வம் இல்லாதபொழுதும், நம்மை செல்வம் வந்து சேரும்பொழுதும் நம்முடைய நடவடிக்கை ஒரே மாதிரி இருக்க வேண்டும். செல்வம் சுகமானதுதான், நன்மையானதுதான், ஆனால் அதோடு சோதனைகளும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. (வல்ல அல்லாஹ் நமக்கு தாராளமாக செல்வத்தை தரும்பொழுது நமது தேவைகளுக்குப்போக வீண் விரயம் செய்யாமல் நாமும் தாராளமாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு கடனாக, தருமமாக (ஸதக்கா) கொடுக்க வேண்டும்).

கீழ்க்கண்ட நபிமொழிகள், நமது வாழ்வின் நிலை, செல்வத்தின் நிலை இரண்டையும் தெளிவாக விளக்குகிறது:


''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குச் சோதனை, செல்வம்(பெருகுவது)தான் என்று நபி(ஸல்)அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். '' (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு இயாழ்(ரலி). (நூல்: திர்மிதீ)

''இந்த (அவசியத்) தேவைகளைத் தவிர வேறு எதிலும் எந்த உரிமையும் ஆதமின் மகனுக்கு இல்லை. (அவை) அவன் குடியிருக்கும் வீடு, தன் மறைவுப்பகுதிகளை மறைக்கப்பயன்படும் ஆடை, கெட்டியான ரொட்டி(உணவு), மற்றும் தண்ணீர் (இவைதான் உரிமையாகும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஅம்ரு என்ற உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) நூல்: திர்மிதீ).

''நபி(ஸல்) அவர்கள் என் தோள் பட்டையைப் பிடித்துக் கொண்டு,  ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீர் இந்த உலகில் இருந்து கொள்'' என்று கூறினார்கள். ''நீர் மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல் நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.'' (அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூல்: (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 471))

''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஓலைப்பாயின் மீது படுத்து உறங்கினார்கள். அவர்களின் விலாப்புறத்தில் அதன் தடயம் ஏற்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்காக நாங்கள் ஒரு மெத்தையை ஏற்படுத்தித் தரலாமா?' என்று கேட்டோம். ''எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு பயணி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, பின்பு ஓய்வெடுத்து, அதை விட்டும் செல்வான் அல்லவா! அது போன்றே தவிர நான் இவ்வுலகில் இல்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி)  நூல்: (திர்மிதீ),(ரியாளுஸ்ஸாலிஹீன்: 486) )

''பணக்காரர்களைவிட  ஐநூறு வருடங்களுக்கு முன் ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 487)

 ''ஆதமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும். அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும். தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்பட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு  (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல்:(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 510)

இந்த நபிமொழிகளை நன்றாக மனதில் பதிய வைத்து நமது செல்வத்தின் நிலையையும், வாழ்வின் நிலையையும் சரி செய்து மறுமையில் வெற்றி அடைய முயற்சிகள் செய்யவேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா காரியங்களிலும் நன்மையை தந்து ஹலால், ஹராமை பேணி நடக்கும் நன்மக்களாக நாம் வாழ்வதற்கு  நல்லருள் புரியட்டும்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- அலாவுதீன். S.

கடன் வாங்கலாம் வாங்க-14                                        கடன் வாங்கலாம் வாங்க-15

                                       கடன் வாங்கலாம் வாங்க முகப்பு 

27 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அழகிய கடன்கள் என்று(ம்) இங்கே மாற்றியிருக்கலாமே என்றும் எனக்குத் தோன்றுகிறது.

அருமையான மிக நேர்த்தியாக எடுத்தாண்டு அடுக்கித் தந்திருக்கும் உங்களின் உழைப்பு மட்டுமல்ல திறனாய்வும் அற்புதம்.

மென்மேலும் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

மிக மிக அருமை இந்த பதிவு, காரணம் நீங்கள் இறுதியாக குறிப்பிட்டுள்ள நபிமொழிகள். நபிகளார் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி வாழச்சொன்னார்கள் என்ற ஹதீஸ்களை தேடிப்பிடித்து பதிந்துள்ளீர்கள். மிக்க நன்றி காக்கா..

நாம் என்ன செய்கிறோம் என்பதை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் நீங்கள் சொன்னவைகள் நிச்சயம் நன்மையை மாடும் உணர்த்தும் என்பதில் அய்யமில்லை.

கடன் என்ற கொடிய நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக, நல்ல தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் தங்களுக்காகவும் தங்களின் குடும்பத்திற்காகவும் துஆ செய்கிறேன்.

sabeer.abushahruk said...

அலாவுதீன்,
அற்புதமான இந்தத் தொடரில் ஒரு பொருளாதார நிபுணன் போல எல்லாவற்றையும் ஆராய்ந்து, விளன்க்கி எத்தி வைத்து விட்டாய். இன்னும் இருக்கிறதா? தொடர் நிறைவை நோக்கி நெருங்கும்பட்சத்தில் உன் அடுத்த தொடருக்கான அறிவுப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இதற்கான நற்கூலியை அல்லாஹ் உனக்குத் தரட்டும்.

(சீட்டுக் கணக்கில் 10 பேர் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் பகிர்ந்துகொள்வதெனில்/
/கால அளவு 6 மாதம் அல்லது 12 மாதம் வைத்து நடத்தலாம்// என்பது இடிக்கிறதே. விளக்கு?

அலாவுதீன்.S. said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
மென்மேலும் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...
****************************************************
சகோ. அபுஇபுறாஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இந்த தொடர் இதோடு முடிந்தது, கடன் சம்பந்தமாக அனைத்தையும் அல்லாஹ்வின் அருளால் விளக்கிவிட்டேன். அடுத்த தொடரில் கடன் உருவான விதமும், நன்றியுரையும் வெளிவரும்.

தங்களின் கருத்திற்கு நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் அலாவுதீன் காக்கா: தங்களின் இத்தொடரை மின் இதழலாகவும் அச்சுத் தொகுப்பு புத்தகமாகவும் ஏற்கனவே நான் முதல் தொடரில் தொட்டு வைத்ததற்கினங்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்...

மின் இதழலாகவும் அச்சுக் கோர்வையாகவும் மாற்றியமைப்பதை அதிரைநிருபர் சார்பாக நான் செய்து முடிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.. இதற்காக தங்களின் அனுமதி வேண்டியும் இதனைப் பதிகிறேன்.

அலாவுதீன்.S. said...

/// தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,///

சகோ. தாஜுதீன் : வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)
///கடன் என்ற கொடிய நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக, நல்ல தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் தங்களுக்காகவும் தங்களின் குடும்பத்திற்காகவும் துஆ செய்கிறேன்.///

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

sabeer.abushahruk சொன்னது…
///அற்புதமான இந்தத் தொடரில் ஒரு பொருளாதார நிபுணன் போல எல்லாவற்றையும் ஆராய்ந்து, விளக்கி எத்தி வைத்து விட்டாய். இன்னும் இருக்கிறதா? தொடர் நிறைவை நோக்கி நெருங்கும்பட்சத்தில் உன் அடுத்த தொடருக்கான அறிவுப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.///
***********************************************************************************
சபீர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). கடன் சம்பந்தபட்ட அனைத்தும் வல்ல அல்லாஹ்வின் அருளால் இந்த தொடரோடு முடிந்து விட்டது. அடுத்த தொடாரில் கடன் கட்டுரை உருவான விதம், நன்றியுரை, முடிவுரையோடு வெளிவரும் இன்ஷாஅல்லாஹ்.
அடுத்த தொடருக்கான கட்டுரையை தயார் செய்து விட்டு இன்ஷாஅல்லாஹ் அறிவிக்கிறேன்.
***********************************************************************************
/// இதற்கான நற்கூலியை அல்லாஹ் உனக்குத் தரட்டும். ///

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

***********************************************************************************
//// (சீட்டுக் கணக்கில் 10 பேர் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் பகிர்ந்துகொள்வதெனில்/
/கால அளவு 6 மாதம் அல்லது 12 மாதம் வைத்து நடத்தலாம்// என்பது இடிக்கிறதே. விளக்கு? ////

கால அளவுக்கு தகுந்தாற் போல் மாத அளவும் வரவேண்டும். உன்னுடைய சுட்டிக்காட்டலுக்கு நன்றி!.
6பேர் என்றால் 6மாதம். 10பேர் என்றால் 10மாதம். 12பேர் என்றால் 12மாதம் இப்படித்தான் இந்த திட்டத்தில் செயல்படுத்த வேண்டும். உன்னுடைய கருத்திற்கு நன்றி!.

அபு இஸ்மாயில் said...

சகோ அலாவுதீன் மிகவும் பயனுள்ள தொடர் இதை அனைவரிடம் போய் சேரும்படி சகோ அபு இப்ராஹீம் அச்சு கோர்வை செய்து வெளிஇடவேண்டும் வீட்டுக்கு வீடு கொடுக்கவேண்டும்
// இந்த திட்டத்தில் குறைந்தது 10 பேர் வரை (அதிகமாகவும்) சேர்க்கலாம். குறைந்தது ஒரு நபருக்கு 3000ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். மொத்தம் 30ஆயிரம் வருகிறது. முதல் மாதத்தில் அனைவரின் பெயரையும் ஒவ்வொரு சீட்டில் எழுதி குலுக்கி ஒவ்வொன்றாக எடுத்து உதாரணத்திற்கு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் பெயர், மே மாதத்தில் ஒருவர் பெயர் என்று சீட்டை ஆரம்பிக்கும் தினத்திலேயே குறித்து வைத்துக்கொண்டு மாதாமாதம் யார் பெயர் குறித்து வைத்திருக்கிறீர்களோ அதன்படி கொடுத்துவிடலாம். மாதா மாதம் பெயர் குலுக்கல் தேவையில்லை. முதல் மாதத்திலேயே பெயர் சீட்டை குலுக்கி வரிசைப்படி எடுத்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். (இதில் சீட்டை நடத்துபவரும் ஒரு உறுப்பினர். சீட்டை நடத்துபவர் முதல் சீட்டை எடுத்துக்கொள்ளலாம், விட்டும் கொடுக்கலாம்).//

நீங்கள் கூறிய சீட்டு நமது பெண்களிடம் பலகாலமாக இருந்து வருகிறது அதிலும் குறிப்பாக நமது சகோ தாஜுதீன் அவர்களின் ரத்தம்மா அவர்கள் இதை சிறப்பாக நடத்திவந்தார்கள்
அவர்கள் தற்பொழுது நம்மிடையே இல்லை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் அன்னாருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவனாக ஆமீன்

அலாவுதீன்.S. said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
/// அன்பின் அலாவுதீன் காக்கா: தங்களின் இத்தொடரை மின் இதழலாகவும் அச்சுத் தொகுப்பு புத்தகமாகவும் ஏற்கனவே நான் முதல் தொடரில் தொட்டு வைத்ததற்கினங்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்...

மின் இதழலாகவும் அச்சுக் கோர்வையாகவும் மாற்றியமைப்பதை அதிரைநிருபர் சார்பாக நான் செய்து முடிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.. இதற்காக தங்களின் அனுமதி வேண்டியும் இதனைப் பதிகிறேன்.///
****************************************************************
சகோ. அபுஇபுறாஹீம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கடன் வாங்கலாம் கட்டுரையை மின் இதழாகவோ, புத்தக வடிவத்திலோ, வேறு எந்த வடிவத்திலும் அதிரை நிருபர் வெளியிடுவதற்கு எந்தவித தயக்கமுமின்றி நான் மனப்பூர்வமாக உரிமை அளிக்கிறேன்.

தங்களின் பணியை தொடங்குங்கள். வல்ல அல்லாஹ் இந்தப்பணியை முடிப்பதற்கு எல்லா வகையிலும் உங்களுக்கு உதவி புரிய துஆச் செய்கிறேன் இன்ஷாஅல்லாஹ்.

மக்கள் அனைவரும் இந்த கட்டுரையை படித்து தங்கள் வாழ்வில் விழிப்புணர்வு பெற்று வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொண்டால் அதுவே எனக்கு நன்மையளிக்கும். வல்ல அல்லாஹ்விடமிருந்து நன்மையை மட்டும் எதிர்பார்க்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சகோ தாஜுதீன் அவர்களின் ரத்தம்மா அவர்கள் இதை சிறப்பாக நடத்திவந்தார்கள்
அவர்கள் தற்பொழுது நம்மிடையே இல்லை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் அன்னாருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவனாக ஆமீன் //

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபு இஸ்மாயில் அவர்களின் செய்தி உண்மை. இவர்கள் போன்று மிகத்திறமையுடன் நேர்மையுடன் சீட்டு நடத்திவருகிறார்கள் நம் பெண்கள் பலர். இதில் வாக்குறுதியை காப்பாற்றுபவர்கள் மற்றும் மிக நம்பிக்கையுள்ளவர்கள் 100% சதவீதமே. எனக்கு தெரிந்து இது போன்ற சீட்டு பணம் திட்டத்தில் எந்த குழப்பமும் வந்துள்ளதாக நான் கேள்விபட்டதே இல்லை. ஒவ்வொரு தெருவிலும் இது போல் தான் என்பது நம் நம்பிக்கை.

இந்த கட்டுரையில் எங்கள் ராத்தம்மாவை குறிப்பிட்டு சொன்ன சகோதரர் அபு இஸ்மாயில் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களுடன் சேர்ந்து நாங்களும் துஆ செய்கிறோம். அன்னாருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவனாக. ஆமீன்....

அதிரைநிருபர் said...

//சகோ அலாவுதீன் மிகவும் பயனுள்ள தொடர் இதை அனைவரிடம் போய் சேரும்படி சகோ அபு இப்ராஹீம் அச்சு கோர்வை செய்து வெளிஇடவேண்டும் வீட்டுக்கு வீடு கொடுக்கவேண்டும்.//

புத்தமாக வெளியிடும் திட்டம் நிச்சயம் சகோதரர் அலாவுதீன் அவர்களிடமும், நம் அதிரைநிருபரிடமும் உள்ளது என்பது மேல் உள்ள பின்னூட்டங்களே சாட்சி.

இன்ஷா அல்லாஹ் இந்த தொடர் முடிந்தவுடன் அதற்கான வேலைகள் தொடரப்படும். இறைவன் நாடினால் புத்தகம் வெளியிட்டு நிகழ்வு நடைப்பெறவும் வாய்ப்புகள் உள்ளது. விரைவில் நல்ல அறிவிப்புகள் வெளிவரும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.பொக்கிஷம்.பொக்கிஷம்.பொக்கிஷம்.
அருமையான தொடர்.இடர் வரும் போது இடறிவிழாமல்தாங்கிப்பிடிக்க ஊண்று கோல்.வட்டி யெனும் நெருப்பு வாட்டி எடுப்பதிலிருந்து தப்பிக்க வந்த அருள் மழையாம் திருக்குரானின் எடுத்து காட்டுடன் அமைந்த கருக்குவியம்.("அறிவு, ஆற்றல், அனுபவம், ஆக்கம் ஆகியவற்றை குவியம் ஒன்றாக குவிக்கும்.)வாழ்துக்கள்.

அப்துல்மாலிக் said...

You are Master blaster in this TOPIC...! மிக அருமையான விளக்கம் அதுவும் பொருளாதார சுனாமி மிக ரசித்தேன்

உலகப்பொருளாதார வீழ்ச்சி... ஒரு பார்வை...... உலகம் தினறிய சமயத்தில் நான் எழுதியது..

http://buafsar.blogspot.com/2009/01/blog-post_05.html

அலாவுதீன்.S. said...

அபு இஸ்மாயில் சொன்னது…
/// சகோ அலாவுதீன் மிகவும் பயனுள்ள தொடர் இதை அனைவரிடம் போய் சேரும்படி சகோ அபு இப்ராஹீம் அச்சு கோர்வை செய்து வெளிஇடவேண்டும் வீட்டுக்கு வீடு கொடுக்கவேண்டும்.///

சகோ. அபு இஸ்மாயில் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). தங்கள், சகோ அபு இப்ராஹீம், அதிரை நிருபர், என் விருப்பம், மற்றும் வாசகர்கள் விருப்பப்படி இன்ஷாஅல்லாஹ் புத்தகமாக வெளிவரும். துஆச் செய்யுங்கள். தங்களின் கருத்திற்கு நன்றி!.

///நீங்கள் கூறிய சீட்டு நமது பெண்களிடம் பலகாலமாக இருந்து வருகிறது அதிலும் குறிப்பாக நமது சகோ தாஜுதீன் அவர்களின் ரத்தம்மா அவர்கள் இதை சிறப்பாக நடத்திவந்தார்கள். அவர்கள் தற்பொழுது நம்மிடையே இல்லை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் அன்னாருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவனாக ஆமீன்.///

சகோ. தாஜுதீன் அவர்களின் ராத்தம்மாவுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

அலாவுதீன்.S. said...

crown சொன்னது…
///அஸ்ஸலாமு அலைக்கும்.பொக்கிஷம்.பொக்கிஷம்.
பொக்கிஷம்.அருமையான தொடர்.இடர் வரும் போது இடறிவிழாமல்தாங்கிப்பிடிக்க ஊண்று கோல்.வட்டி யெனும் நெருப்பு வாட்டி எடுப்பதிலிருந்து தப்பிக்க வந்த அருள் மழையாம் திருக்குரானின் எடுத்து காட்டுடன் அமைந்த கருக்குவியம்.("அறிவு, ஆற்றல், அனுபவம், ஆக்கம் ஆகியவற்றை குவியம் ஒன்றாக குவிக்கும்.)வாழ்த்துக்கள்.///
********************************************************************

*******மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! *******

சகோ.தஸ்தகீர் : வ அலைக்கும் ஸலாம்(வரஹ் தங்களின் கருத்திற்கு நன்றி!

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அலாவுதீன்...உங்கள் கட்டுரையில் நிறைய இடங்களில் 'செல்வந்தர்களை வாரி இருக்கிறீர்கள். செல்வந்தர்கள் எல்லோரும் 70 களில் வந்த திரைப்படங்களின் நம்பியார் மாதிரி சித்தரிக்கப்பட்டிருக்கிறதே....ஏதாவது இன்ட்ரஸ்டிங் மேட்டர் உங்கள் வாழ்க்கையில் 'செல்வந்தர்களால் நடந்து இருக்கிறதா?...

அலாவுதீன்.S. said...

அப்துல்மாலிக் சொன்னது…
/// You are Master blaster in this TOPIC...! மிக அருமையான விளக்கம் அதுவும் பொருளாதார சுனாமி மிக ரசித்தேன். ///

******* மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! *******

/// உலகப்பொருளாதார வீழ்ச்சி... ஒரு பார்வை...... உலகம் தினறிய சமயத்தில் நான் எழுதியது.. ///


தங்களின் பிளாக்கிற்கு சென்று உலக பொருளாதார வீழ்ச்சி ஒரு பார்வை படித்தேன். நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!

அலாவுதீன்.S. said...

ZAKIR HUSSAIN சொன்னது…
/// சகோதரர் அலாவுதீன்...உங்கள் கட்டுரையில் நிறைய இடங்களில் 'செல்வந்தர்களை வாரி இருக்கிறீர்கள். செல்வந்தர்கள் எல்லோரும் 70 களில் வந்த திரைப்படங்களின் நம்பியார் மாதிரி சித்தரிக்கப்பட்டிருக்கிறதே....ஏதாவது இன்ட்ரஸ்டிங் மேட்டர் உங்கள் வாழ்க்கையில் 'செல்வந்தர்களால் நடந்து இருக்கிறதா?... ///

சகோ. ஜாகிர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்): செல்வந்தர்களால் நான் எந்த பாதிப்பும் அடையவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!. செல்வந்தர்களை குறை சொல்ல வேண்டும் என்ற நினைப்பில் எழுதவில்லை. வாரி வழங்கும் செல்வந்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் விரல் விட்டும் எண்ணும் அளவுக்குத்தான் இருக்கிறார்கள். ஆடம்பரத்திற்கும், பிறர் பேசப்பட வேண்டும் என்று உதவி செய்பவர்கள், யாருக்கும் தெரியாமல் உதவி செய்பவர்கள் என்று செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.

பல இடங்களில் (ஊர்களில்) தன் நலம் ஒன்றையே குறிக்கேளாக கொண்டு வாழ்பவர்களை நான் பார்த்துள்ளேன். உறவுகளுக்கும் அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள ஏழைகளுக்கும் உதவி செய்வதில்லை. கேட்டது, பார்த்தது இவைகளை வைத்துதான் எழுதியுள்ளேன். எனக்கு தெரிந்த இடங்களில் செல்வ நிலையில் உள்ளவர்கள் தங்கள் உறவில் கஷ்டப்படுவர்களுக்கு உதவமால் இருப்பதை நானே நேரில் கண்டு வருத்தமும் அடைந்துள்ளேன்.

செல்வந்தர்களுக்கு இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து தன்னை மாற்றிக்கொண்டால் வல்ல அல்லாஹ்விடம் நன்மையை பெற்றுக்கொள்ளலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

யாருக்கும் தெரியாமல் தங்களின் செல்வங்களை வாரிவழங்கிவருகிறார்கள் பல செல்வந்தர்கள் நம்மூர்களில்.

தன் சொந்தங்கள் கஷ்டப்படுவதை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் சில செல்வந்தர்கள் நம்மூர்களில்.

சிலர் மார்க்கத்தை தெளிவாக உணர்ந்தும் இவ்வுலக அற்ப வாழ்வுக்காக இறைவனின் கட்டளையை மறந்து சொந்தங்களை புறக்கனிக்கிறார்கள் என்பதே உண்மை.

//செல்வந்தர்களுக்கு இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து தன்னை மாற்றிக்கொண்டால் வல்ல அல்லாஹ்விடம் நன்மையை பெற்றுக்கொள்ளலாம்//

அல்லாஹ் போதுமானவன்..

sabeer.abushahruk said...

மேலே வலது பக்க மூலையில் 'விரைவில்' என்றொரு தித்திப்பான அறிவிப்புத் தெரிகிறதே அது எனக்கு மட்டும்தான் தெரிகிறதா அல்லது...?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மேலே வலது பக்க மூலையில் 'விரைவில்' என்றொரு தித்திப்பான அறிவிப்புத் தெரிகிறதே அது எனக்கு மட்டும்தான் தெரிகிறதா அல்லது...?//

அதானே எனக்கு மட்டும்தான் தெரிகிறது என்றிருந்தேன் அங்கேயுமா !? அப்படின்னா என்னவாக இருக்கும் !

அதிரைநிருபர் said...

//sabeer.abushahruk சொன்னது…
மேலே வலது பக்க மூலையில் 'விரைவில்' என்றொரு தித்திப்பான அறிவிப்புத் தெரிகிறதே அது எனக்கு மட்டும்தான் தெரிகிறதா அல்லது...? //

கடன் வாங்கலாம் வாங்க போன்ற பொக்கிச ஆக்கங்களை பாதுகாத்து வைப்பதற்கான முதல் முயற்சி.

அடுத்த கட்டத்தில் கால் எடுத்து வைத்தாகிவிட்டோம். www.adirainirubar.in தொடர்பாக தனியாக ஒர் பதிவு விரைவில் வெளிவரும் காத்திருங்கள். சகோதரர்களே.

அதிரைநிருபரின் அனைத்து செயல்பாடுகளும், மற்ற சகோதர வலைப்பூக்களின் நல்வளர்ச்சிக்கு ஓர் முன்னுதரனமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.

விரைவில் நிரந்தர இணைய முகவரியுடன்.....

தொடர்ந்து இணைந்திருங்கள்.. :)

sabeer.abushahruk said...

//அதிரைநிருபரின் அனைத்து செயல்பாடுகளும், மற்ற சகோதர வலைப்பூக்களின் நல்வளர்ச்சிக்கு ஓர் முன்னுதரனமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.//

வாவ்!!! கலக்குறீங்கப்பா!

வாழ்த்துகள்ப்பா!!!

அலாவுதீன்.S. said...

அதிரைநிருபர் குழு சொன்னது…
/// அடுத்த கட்டத்தில் கால் எடுத்து வைத்தாகிவிட்டோம். www.adirainirubar.in தொடர்பாக தனியாக ஒர் பதிவு விரைவில் வெளிவரும் காத்திருங்கள். சகோதரர்களே.
அதிரைநிருபரின் அனைத்து செயல்பாடுகளும், மற்ற சகோதர வலைப்பூக்களின் நல்வளர்ச்சிக்கு ஓர் முன்னுதரனமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.
விரைவில் நிரந்தர இணைய முகவரியுடன்.....///
**************************************************************************
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அதிரை நிருபர் புதிய இணையதளமாக வர இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. வரவேற்கிறேன்! வாழ்த்துகிறேன்!.

தங்களின் புதிய முயற்சியில் வெற்றிகளை அடைய, தங்களின் அனைத்து காரியங்களையும் லேசாக்கி அழகான உடல் ஆரோக்கியத்தை தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் தந்து, தங்கள் செல்வத்திலும், நேரத்திலும் பரக்கத்தை வல்ல அல்லாஹ் தந்தருள் புரியட்டும்.

Yasir said...

வழக்கம் போலவே...தீனியாத் வகுப்பில் உட்கார்ந்த உணர்வு...மனம் அப்படியே சுனாமி இழுத்து செல்லும் பொருட்களை போல கட்டுரையை நோக்கி ஆழ்ந்த்து சென்று சிந்திக்க வைக்கிறது...அருமையான ஹதீஸ் உதாரணங்கள் காக்கா...எங்கள் துவாவில் நீங்கள் எப்பொழுதும் காக்கா...

ஹெல்த் இன்சுரன்ஸ் எப்படி காக்கா ஹாரமா ? அல்லது எதுவும் விலக்கு உண்டா ? எங்கள் கம்பெனி எங்களுக்கு வாழ்நாள் சேமிப்பு (saving & life insurance ) இன்சுரன்ஸ் எடுத்து இருக்கிறார்கள்..அந்த இன்சுரன்ஸ் காரர்களிடம் நான் எப்படி என்று கேட்ட போது, அவர்கள் அதை இஸ்லாமிக் பங்குகளில் (sharia complaint ) முதலீடு செய்வதாக சொன்னார்கள் அது எற்றுக்கொள்ளபடுமா ?

அலாவுதீன்.S. said...

சகோ. யாசிர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இந்த கடைசி தொடரில் சகோ. யாசிர், ஹமீது, மீராசா இன்னும் சில சகோதரர்களை காணவில்லையே, தற்பொழுது தள்ளுபடி எதுவும் போடவில்லையே, என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.
/// வழக்கம் போலவே...தீனியாத் வகுப்பில் உட்கார்ந்த உணர்வு...மனம் அப்படியே சுனாமி இழுத்து செல்லும் பொருட்களை போல கட்டுரையை நோக்கி ஆழ்ந்த்து சென்று சிந்திக்க வைக்கிறது...அருமையான ஹதீஸ் உதாரணங்கள் காக்கா...எங்கள் துவாவில் நீங்கள் எப்பொழுதும் காக்கா... ///

சகோ. யாசிர் வந்து விட்டீர்கள். தங்களின் துஆவுக்கு : ஜஸாக்கல்லாஹ் ஹைர்! (தங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்).

///// ஹெல்த் இன்சுரன்ஸ் எப்படி காக்கா ஹாரமா ? அல்லது எதுவும் விலக்கு உண்டா ? எங்கள் கம்பெனி எங்களுக்கு வாழ்நாள் சேமிப்பு (saving & life insurance ) இன்சுரன்ஸ் எடுத்து இருக்கிறார்கள்..அந்த இன்சுரன்ஸ் காரர்களிடம் நான் எப்படி என்று கேட்ட போது, அவர்கள் அதை இஸ்லாமிக் பங்குகளில் (sharia complaint ) முதலீடு செய்வதாக சொன்னார்கள் அது எற்றுக்கொள்ளபடுமா? /////

இங்கு அரபு நாடுகளில் நமக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் கட்டாயமாக இருக்கிறது. இதில் குழப்பம் எதுவும் இல்லை. தங்கள் கம்பெனி எடுத்த வாழ்நாள் சேமிப்பு (saving & life insurance) ஷரியாபடி நடைமுறைப்படுத்தப்பட்டால் வரவேற்கக்கூடியதே. ஆனால் எந்த ஒரு காரியமும் உங்கள் மனதிற்கு உறுத்தலை தந்தால் அதிலிருந்து விலகி விடுங்கள் என்பது நபிமொழி. தங்களுக்கு இந்த வாழ்நாள் சேமிப்பு ஹலால் என்று உறுதியாக தங்கள் மனதிற்கு பட்டால் தொடரலாம் சந்தேகமாக இருந்தால் விலகியும் கொள்ளலாம். நமக்கு ரிஜ்க்கை நிர்ணயம் செய்து வழங்கி கொண்டிருப்பவன் வல்ல அல்லாஹ். வாழ்நாளுக்கும் வல்ல அல்லாஹ்வே நமக்கு பொறுப்பானவன்.

ஊரில்; வாழ்நாள் இன்ஷூரன்ஸ் திட்டம் இருக்கிறது இதிலிருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும். இந்த திட்டத்தில் சேர்ந்தால் 5வருடத்திற்கு ஒருமுறை போனஸ் தருவர்கள். 20வருடம் கழித்தபிறகு தாங்கள் கட்டிய பணத்தோடு வட்டியும் சேர்த்து தங்களுக்கு தருவார்கள். இந்த திட்டத்தில் எனக்கு தெரிந்து ஏராளமான முஸ்லிம்கள் பணம் கட்டி வருகிறார்கள். இது தெளிவான வட்டி, தெளிவான ஹராம்.

ஊரில் எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ், அரபு நாடுகளில் எடுக்கும் இன்ஷூரன்ஸ் ஹலாலனதே இதில் எந்த வட்டியும் இல்லை. வருடத்திற்கு ஒருமுறை பணம் கட்ட வேண்டும். நாம் உபயோகப்படுத்தினாலும், உபயோகப்படுத்தாவிட்டாலும் நாம் கட்டிய பணம் திரும்ப கிடைக்காது. இது ஹலாலான திட்டம்.

வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் தவிர்க்கமுடியாது கட்டாயம் கட்டியே ஆக வேண்டும்.

Yasir said...

தங்கள் விளக்கதிற்க்கு நன்றி காக்கா...அல்லாஹ் உங்களுக்கு மேலும் பல சிறப்புவாய்ந்த ஆக்கங்களை தருவதற்க்கு உதவி செய்வான்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு