Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அப்பா எனும் மந்திரச் சொல் - விவாதக் களம் 41

அதிரைநிருபர் பதிப்பகம் | February 09, 2012 | , , , ,


"அப்பா" இது ஒரு மந்திரச் சொல் ! தமிழகத்தில் அப்பா, அத்தா என்று தந்தையைத்தான் அழைப்பார்கள். இது ஒரு பக்கமிருக்கட்டும், கடற்கரையோர முஸ்லீம்களின் கலாச்சாரம் மண்வாசனையோடு இருப்பதோடு மட்டுமல்லாது அந்த பினைப்பு எங்கேயும் கிடைக்காத ஒன்று.

தந்தையை "வாப்பா" என்றும் தாய் / தந்தை இவர்களின் தந்தையை "அப்பா" என்றும் அழைப்பது அதிரை மண்ணின் மைந்தர்களின் வழக்கம் இந்த வசீகரச் சொல்தான் மண்வாசனை தேடும் அதிரைச் சொந்தங்களால் அசைபோடப்படும் "அப்பாக்களின் நினைவுகள்"

சரி நாம இப்போ விஷயத்திற்கு வருவோம்...

நாம் எல்லோரும் பேரன்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள்... என்று தொடரும் இக்காலச் சூழலில் பெரும்பாலோருக்கும் அவர்களின் பால்யவயது காலங்களின் ரோல்மாடலாக, கதாநாயனாக மனதில் பதிந்து விட்ட அற்புதமான மனிதம் போற்றும் அப்பாக்களை நினைத்துப் பார்க்கும்போது சிலிர்க்கவே செய்யும்.

அவ்வகையில், நம் பால்ய வயது காலத்து அப்பாக்கள், அதோடு இன்றைய பால்ய வயதுகாலச் சிறுவர்களின் அப்பாக்களோடு ஒப்பீடு செய்வதல்ல இதன் நோக்கம்.

அன்றை அப்பா அல்லது இன்றைய அப்பா இரண்டு அணிகளாக விவாதிக்கலாம் வாருங்கள்...

கடன் அன்பை முறிக்கும், கடும் சொல் உள்ளைத்தை குத்தும் ஆதலால் கடும் சொற்களோ, தனிமனித தாக்குதலோ இல்லாமல், நல்லதையே நாடி விவாதிக்கலாம்.

வரம்பை மீறும் பேரன்கள் யாராவது விசமம் செய்தால் தூணில் கட்டி வைத்து மிளகாய் பொடி போடப்படும் அதோடு அவர்களை வைப்ரேஷனில் இருக்க வைத்து ஒரு அறையில் வைத்து பூட்டி வைக்கப்படும் என்று அப்பா சொல்லச் சொன்னார்கள்.

-அதிரைநிருபர் குழு

41 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என் அப்பா !

என்றுமே டாப் அப்பா !

Noor Mohamed said...

அன்றைய அப்பா என்பது என்னுடைய அப்பாமார்கள். இன்றைய அப்பா என்பது நானே ஓர் அப்பாதான்.

என் பேரன் பேத்திகள் ஊரிலிருக்க, நான் அயல் நாட்டில் பணி செய்வதால் ஆன்லைன் அப்பாவாகிவிட்டேன். ஆன்லைனில் தான் பேசிப் பரவசமடைகின்றேன். எனவே, இன்றைய அப்பா உறவு, தூர இருந்தால் சேரவுரவு.

sabeer.abushahruk said...

எனக்கு அப்பா பற்றிய நினைவு அதிகம் கிடையாது. வாப்புச்சா மற்றும் உம்மம்மாதான். என் வாப்புச்சாவைப்பற்றி நான் ஏற்கனவே இப்படி எழுதியிருக்கிறேன்:

வாப்புச்சா:

வேதனை வந்தெனை
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம்!

வட்ட முகத்தில்
வரிவரியாய் ரேகைகள்
வாழ்ந்த வாழ்க்கையின்
விளக்க உரைகளாய்!

வாப்புச்சா வார்த்தைகளில்
வகைவகையாய் அன்பிருக்கும்
வாஞ்சையுடன் வருடும்போது
வாழ்க்கையிலே தெம்பு வரும்

வாப்பா மறுத்த தெல்லாம்
வாப்புச்சா வாங்கித்தரும்
உம்மா அடிக்கவந்தால்
ஒருபார்வையில் தடுக்கும்

சுருக்குப்பை யொன்று
இடுப்பினில் தொங்கும்
இறுக்கிய முடிச்சவிழ்த்து
எனக்கு மட்டும் கொட்டும்

முந்தானை முனையிலெல்லாம் - என்
மூக்கைச் சிந்திவைக்கும்
மொத்தியாகப் போகவேண்டி
முதல்வனிடம் கோரும்

புரைவிழுந்த பார்வைக்கு
பகல்கூட மங்கல்தான்
பாசமான பேரன்மட்டும்
பிரகாச பிம்பம்தான்

சாப்பாட்டை வைத்துக்கொண்டு
காத்திருக்கும் உம்மா
தட்டோடு என்னைத்
தேடிவரும் வாப்புச்சா

தென்னையாய் நினைத்து
எனைவளர்த்த வாப்புச்சா
என்றும் என் நெஞ்சில்
இனிக்கும் இளநீராய்!

sabeer.abushahruk said...

 அத்துடன் இன்னும் அப்பாவாகும் பாக்கியமும் கிட்டாததால் கவனித்த ஓர் அப்பா பேரனைப்பற்றி கீழே:

பரஸ்பரம்
 
 பேரனும் பெரியவரும்
பேசிக்கோண்டே
நடந்துகொண்டிருந்தனர்
 
நானும் நண்பகல் வெயிலும்
கேட்டுக்கோண்டே
தொடர்ந்துகொண்டிருந்தோம்
 
பெரிய கைக்குள்
பிஞ்சுக் கைவிரல்
யாரைத் தாங்கி யாரோ
 
வாப்பாவுக்குத் தெரிந்தால்
அடிப்பார்
என்றவனுக்கு
உனக்கு முன்
எனக்குத் தெரியும்
உன் அப்பனை
என்றார் முதியவர்
 
காரியம் என்னவென்று
கண்டுகொள்ள ஆசை
காதுகள் விடைக்கக்
கேட்டுக்கொண்டிருந்தேன்
 
பெட்டிக்கடை ஒன்றில்
பெரியவர் புக
பேரனும் போக
தாழ்வார நிழலொன்றில்
தஞ்சம் புகுந்தேன்
 
வெளியே வந்த
பெரியவர் தமது
கைவிரல் இடுக்கின்
பிடிக்குள்...சுருட்டு!
பேரனுக்கோ
கையிலும் வாயிலும்
வழியுது,,,கோன் ஐஸ்!
 
 

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜேவின் அப்பா நினைவுகள், சொன்ன விதம் ஒரு ஹைக்கூபோல மெல்லக் கவர்கிறது.

உங்களுக்கும் நெய்னாவுக்கும் ஒரே அப்பாவா?

எங்கே இந்த ஆன்லைன் அப்பாக்களையும் அக்மார்க் அப்பாக்களையும் காணோம்? தலைக்கு டை அடிக்கப் போய்ட்டாங்களா? பேரன்கள் மட்டுமே புழங்குகிறார்கள்?

ஏனோ தெரியவில்லை. எனக்கு அப்பாக்கள் என்றாலே நினைவுக்கு வருவது, ஊதுவர்த்தி, வெல்வெட்டு உரை போட்டு குஞ்சங்கள் தைத்த தலையணைகள், ரெஹையாம்பலகையில் கித்தாபு, மொவ்லாய சல்லிவஸல் லிம்தாயி மன் அபதா, படுவா தொப்பி எங்கேடா?, சுருட்டு, ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர், புளிய மரம், வைஜெந்திமாலா பீன்றவையே.

அக்கால
அப்பா விடம்
அப்பா வித்தனம்
இக்கால
ஆன்லைன் அப்பாக்களிடம்?

Noor Mohamed said...

தம்பி சபீர்,

காலத்தை கணக்கில் கொண்டு சரியான நேரத்தில் 'மொவ்லாய சல்லிவஸல் லிம்தாயி மன் அபதா' மவ்லூது ஓத ஆரம்பித்து விட்டீர்களே? இது 'ரபியுல் அவ்வல்' மாதமல்லவா? எப்போது மவ்லூது முடிக்கும் நாள்? அப்போது விருந்துக்கு வரவா?

sabeer.abushahruk said...

நூவண்ணாக்கா,
இப்பல்லாம் நாங்க உஜாலாவுக்கு மாறி பளிச்சென்று இருக்கோம். நோ மவ்லீது. ஆனா, தங்களுக்கு விருந்து எனில், போன்லெஸ் சிக்கனும் குழைய ஆக்கிய சோறும் புளியானமும் தயார் பண்ணிடவா அல்லது பல்லெல்லாம் கட்டியாச்சா? (நீங்கதான் அப்பா ஆயாச்சுன்னு டிக்ளேர் பண்ணிட்டீங்களே..-))

(குறைந்தபட்சம் ஒன்னரை வருடங்களுக்காவது எனக்கு ச்செக் வைக்க முடியாதாக்கும்)

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்பி கவிஞர் சபீர் அவர்கள் இந்த விவாத அரங்குக்கு வரவேண்டும் என்று என்னையும் தம்பி ஜாகீர் அவர்களையும் மிரட்டி அழைத்தவிதம் கண்டனத்துக்குரியது தலைவர் அவர்களே!

அத்துடன்

//எங்கே இந்த ஆன்லைன் அப்பாக்களையும் அக்மார்க் அப்பாக்களையும் காணோம்? தலைக்கு டை அடிக்கப் போய்ட்டாங்களா?// என்று எங்களின் சுய சுதந்திரத்தில் இன்று வெள்ளிக்கிழமை என்று தெரிந்தும் எள்ளி நகையாடுவது ஏற்புக்குரியதல்ல. இன்றைய அப்பாக்கள் தலைக்கு டை அடிக்கிறார்கள் என்று நேரடியாக அவர் சொல்லாத காரணம் அவர் ஒரு கடந்தகால அப்பாவும் அல்ல நிகழ்கால அப்பாவும் அல்ல இனி எதிகால அப்பாதான். இன்ஷா அல்லாஹ். நான் இந்தகால அப்பா அறுபது சதவீதம் நரைத்து இருந்தாலும் டை அடித்து உண்மையை மறைக்காத எத்தனையோ மாணிக்கங்களில் நானும் ஒருவன் என்பதை அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் முதுமை காரணமாக தாமதமாக அரங்கத்துக்கு வந்திருக்கலாம் அதற்காக டை அடிக்க போய்விட்டார்களா என்று கேட்பது சரியா என்று தலைவர் தீர்ப்புக்கே விடுகிறோம்.

அடுத்து,

//அக்கால
அப்பா விடம்
அப்பா வித்தனம்
இக்கால
ஆன்லைன் அப்பாக்களிடம்?// என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அக்கால அப்பாவுக்கு வாதடுபவர்களின் வாதத்தை உற்று நோக்கினால் அந்தக்கால அப்பாக்களின் காஸ்ட்யூம்களில் தான் கவனம் செலுத்துகிரார்களே தவிர - அந்த பட்டியலை வெளியிடுகிரார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. அப்பாவித்தனத்தில் அந்தக்கால அப்பாக்களுக்கு இந்தக்கால அப்பாக்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல இதற்கு எண்ணற்ற உதராணங்கள் எங்களிடம் உள்ளன என்பதை எதிர் தரப்புக்கு சொல்லி என விவாதத்தை இத்துடன் முடிக்கிறேன். அடுத்து வரும் கேள்விகளுக்கு பதில் நானோ தம்பி நூர் முகமதோ தருவோம். ( சப்போர்ட்டுக்கு ஆள் பிடிக்கிறேன் என்று நினைக்காதீர்கள் தலைவர் அவர்களே!

அரசியலில் இதெல்லாம் சகஜம்.)

-இபுராகிம் அன்சாரி.

sabeer.abushahruk said...

கிழம் கோர்ட்டார் அவர்க...சாரி...கனம் கோர்ட்டார் அவர்களே, 

ஈனா ஆனா காக்காவின் அப்பா தகுதியில் எனக்கு சந்தேகம் எழுகிறது. விவாதத்தில் இளமை மிளிர்கிறதே!!. இருக்கட்டும் இருக்கட்டும்.

ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்கிறேன். இந்த கால அப்பாக்கள் பேரன்களை தன்னோடு முன் சஃபில் நிற்க வைத்து தொழுகிறார்கள். அந்தக் கால அப்பாக்களோ எங்களை கடைசி சஃபில் நிறுத்த பசங்க சுஜூது போகும்போது பிடரியில் பட் பட்டென அடிக்க என் தொப்பி பறந்த சோக நிகழ்வுகள் ஒன்றா இரண்டா?

நரை விஷயத்தில் என் நிலைப்பாட்டை ஏற்கனவே நான் சத்திய மார்க்கத்தில் வாதிட்டுவிட்டேன் . தட்ஸ் ஆள் உவர் ஆனர் (இதுக்கு மேலும் எனக்கு சப்போர்ட்டா பேரன்ஸ் வரலேன்னா 'பினாமி அப்பா' தகுதியில் கட்சி மாறிடுவேன் ஆமா)

வாலிபம், விளிம்பில்

மெல்ல வெளுக்குது
மீசையும் தாடியும்;
மெல்ல மறுக்குது
பற்களும் சொற்களும்!

வெண்மை மறைக்கிற
நரனே! நிறத்தின்
உண்மை மறுப்பது
சரியா அறிவா? 

விடியலும் வெளிச்சமும்
வெண்மையின் பொழுதே
வெள்ளை மனதென்ப
உண்மையின் நிழலே!

வெள்ளையை மறைத்துக்
கருப்புச் சாயம்
வெள்ளி நிலவுக்கு
களங்கக் காயம்!

நரைத்த தாடியும்
நலிந்த நாடியும்
நுரைத்த கரையென
மிகைத்த அழகே!

நாற்றினூடான
களையல்ல நரை
பிடுங்கி எறியவும்
மருந்து அடிக்கவும்

வாலிபம்
வயோதிகத்துடன் கைகுலுக்கி
விடைபெறுகையில்
விட்டுச் சென்றது நரை!

பழம்
பழுத்ததைச் சொல்லும் மணம்
மழை
வலுத்ததைச் சொல்லும் நிலம்
வாழ்ந்து
முடித்ததைச் சொல்லும் நரை!

வயதின் முதுமையை
மட்டு மல்ல
வாழ்வின் முழுமையையும்
பறை சாற்றும்
நரை!!!

Yasir said...

அப்பா,உம்மாம்மா,வாப்பிச்சி போன்ற உறவுகளை நான் கண்டதும் இல்லை அனுபவப்பட்டதும் இல்லை.....ஆனால் என் பக்கத்து வீட்டு அப்பாக்கள் பேரன் களை வெளியில் கூட்டி செல்வதும்.அவர்களுடன் கொஞ்சிவிளையாடுவதை கண்டு ஆசைப்பட்டதுண்டு....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மேலும் எனக்கு சப்போர்ட்டா பேரன்ஸ் வரலேன்னா 'பினாமி அப்பா' தகுதியில் கட்சி மாறிடுவேன் ஆமா///

அதெப்படி.... வாரத்தில ஒருநாள் நல்லா தூங்கனும்னு அப்பா எனக்கு சொல்லியிருக்காங்களே.... :)

அப்பா அன்றும் சரி இன்றும் சரி - அன்பால் வெல்வதில் சலைத்தவர்கள் அல்ல !

நிற்க !

அன்று...!
சாப்பிட அருகில் அமர்ந்து சாப்பிடுவதிலிருந்து அதனை எப்படி கையில் எடுத்து பெருவிரலை மடக்கி கையில் எடுத்த சாப்பாட்டை எப்படி வாயிருக்கருகில் கொண்டு சென்று சிந்தாமல் சாப்பிடுவது என்று விரல் மடித்து படித்துக் கொடுத்ததலாகட்டும்...

பேரனுக்கு பிடிக்காத சாப்பாடு என்று தெரிந்தால் முரண்டு பிடிக்காமல் (அதட்டாமல்) அப்பாவும் சேர்ந்து சாப்பிடாமல் இருப்பதிலாகட்டும்...

அதிகாலை எழுந்து பள்ளிக்கு (துல்கா)தக்வா பள்ளியில் தொழுதுவிட்டு, நேராக வீட்டுக்கு வந்து என்னை அழைத்துக் கொண்டு மரைக்கா பள்ளியில் நடக்கும் தாஜுதீன் ஹஜரத் அவர்களின் அஹ்காமுஸ்ஸாஃபியாவில் விடுவதில் ஆகட்டும்...

மாலை நேரங்களில் அப்பா அவர்களின் கைபிடித்து நடக்கும் சுகந்தமான பொழுதுகளில் அவர்கள் சொல்லித் தரும் ஒவ்வொரு சூராவும், அன்று அல்லது அதற்கு முன்னர் மனப்பாடம் செய்த சூராக்களை அவர்களிடம் ஒப்புவிக்கும் பாடசாலை(தான்) நடுத்தெடு சாலை... :)

வீட்டுக்குள் நுழையும்போது எங்கே செருப்பை கழற்றி வைக்கனும் என்று சொன்னதோடு மட்டுமல்ல ஏற்கனவே விருந்தாளிகள் வந்திருந்தால் அவர்களின் செருப்புகளை ஒதுக்கி விட்டு நம் செருப்பை சொருகக் கூடாது, ஒரு ஓரமாகத்தான் கழற்றி வைக்க வேண்டும் என்று சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள்...

MSN(n) சொல்ல மறந்த சாய்மான நாற்காலி, குடை, எவெரெடி பேட்டரி போட்ட டார்ச் லைட், பச்சைக் கலர் பெல்ட்(வாறு ?) அதிலே இருக்கும் மூன்று அடுக்கு பாக்கெட்.... இவைகளும் கண்ணுக்குள் இருக்கிறதே...

இதெல்லாம் விட, அவர்களின் இறப்பு வரை அவர்கள் எனக்கு கைப்பட எழுதிய கடிதங்கள் நிறைய !

அப்பாக்கள் இன்று எதிலும் சலைத்தவர்கள் அல்ல, அங்கே அவர்களை அவர்களின் மக்கள் (மகன் மகள்) நடத்தும் முறையினாலே அவர்களின் எதிவினை மாறுபடுகிறது அதனால் பாதிக்கப்படுவது பேரன்களே... சிந்திக்கத்தான் வேண்டும் இன்றைய தலைமுறையின் நன்மையை நாடி

அப்பாக்கள் அல்ல - பேரன்களை பென்றெடுத்த தாய் தந்தையர் அவசியம் மாற்றிக் கொள்ள வேண்டும் - நீங்கள் பெற்றோரை மதித்தால்தான் உங்களை உங்கள் பிள்ளைகள் அதைவிட நன்றாக மதிப்பார்கள் அதனை மனதில் கொண்டு வென்றெடுங்கள் உங்கள் பிள்ளைகளின் பாசத்தை, அடுத்தவர்கள் வந்து சொல்லித்தான் அவர்கள் உங்கள் மீது பாசம் காட்ட வைத்திடாதீர்கள்... Please !

இன்னும் இருக்கே... சொல்ல..

Anonymous said...

அன்பு நண்பர்களே!

எதிர கட்சியினரின் இந்த வரிகள் மூலம்

//ஈனா ஆனா காக்காவின் அப்பா தகுதியில் எனக்கு சந்தேகம் எழுகிறது.
விவாதத்தில் இளமை மிளிர்கிறதே!!. //

எங்கள் விவாதத்தை - அதாவது இந்தக்கால அப்பாக்கள் இளமை மிளிர இருககிரார்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

அதேநேரம் விவாதத்தின் போக்கை திசை திருப்பும் வல்லமை படைத்த நரை திரை போன்ற மயக்கம் தரும் மஸ்து கவிதைகளை இவ்வளவு அழகாக எழுதி எங்களை அவர்களின் கவிதை வெள்ளத்தில் மூழ்க அடிக்கும் " மோடி மஸ்தான்" வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று அவையோர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

என்னைப்பொருத்தவரை எனது இரு தரப்பு அப்பாக்களையும் பார்த்த நினைவுகூட இல்லை . ஆனாலும் அவர்களின் உயரிய குணங்களைப்ப்றறி கேள்விப்பட்டதால் - தெருவினர், குடும்பத்தினர் கூறிய புகழ்மொழிகள- அந்த பார்க்காத அப்பாக்கள் மேல் ஒரு ஈர்ப்பு. அத்துடன் அவர்கள் இருவர் பெயருமே இபுராகிம் என்பதால் என்பெயருடன் அவர்கள் பெயரை என்றும் இருக்குமாறு இணைத்து இருக்கிறேன்.

என்னை பேரன் என்ற முறையில் சீராட்டி வளர்த்தவர்கள் எனது பி.சே.அப்பா அவர்கள். ( பேசும்படம் சா. ஹமீது அவர்களின் தந்தை எனது மச்சான் பாரூக் அவர்களின் தந்தை. ) கடற்கரை பள்ளியில் வக்துக்கு தொழ கூட்டிப்போவது - நல்லவிஷயங்களை எடுத்து சொல்வது- விளைக்காரத்தெருவில் பொன்னம்மாவிடம் சர்க்கரை வள்ளி கிழங்கு வாங்கி அதை கழுவிவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்று சொல்லித்தந்தது- சாபு பள்ளியில் ஓதக்கொண்டுபோய்விட்டு
கூட்டிவருவது- பாடம் கேட்பது- கடைத்தெருவுக்கு கூட்டிப்போய் நூர் லாட்ஜில் சமூசா வாங்கித்தருவது- கோனார்கடைப்பக்கம் ( இன்றைய மெயின்ரோடு) மாலைவேளைகளில் கூட்டிப்போவது - முதல் முதலாக நாகூரில் இருந்து பசும பந்து வாங்கித்தந்தது- எல்லாம் அவர்களே. பதிலுக்கு அவர்களுக்கு நான் செய்யும் பணிவிடை முதுகு சொறிந்து விட வேண்டும் வேர்க்குரு சினைப்பை நச் நச் என்று வாலி மாட்டி சிப்பியை வைத்து குத்தி விடவேண்டும் .

இன்றைய அப்பாக்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை என்றாலும். - காலத்துக்கேற்ற பரிமானங்களில் தங்களையும் பேரன்களுக்கு செய்யும் பாசம்பொழியும் செயல்களையும் செய்தே வருகிறார்கள்.
விளைக்காரத்தெருபொன்னம்மா இப்போது இல்லை. pizza hut கூட்டிப்போகிரார்கள். சாபு பள்ளி காணாமல் போய்விட்டது லாரல் ஸ்கூலில் இருசக்கரவண்டியில் கொண்டுபோய் விடுகிறோம். .

என்னங்க குளிக்கலையா தேங்காய்ப்பால் கஞ்சியும் கறிவேப்பிலை தொட்டுக்கரியும் கேட்டுவிட்டு காலையில் இருந்தது அந்த கருப்புப்பெட்டியோடு என்னதான் செய்யுரீங்களோ என்று ஒரு குரல் ஐநூறு கிலோ மீடடர்வேகத்தில் வீசுவதால் விடைபெறுகிறேன்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

ZAKIR HUSSAIN said...

நான் யோசிச்சது....[ யாரும் மணடபத்திலெ எனக்கு எழுதித்தரலெ!!]...

நரை.....

உலகத்தின் மீதான கோபத்தில்
தோற்றுப்போனதற்கான சமாதானக்கொடி!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிங்க ஆலிம்சாயிடம் அப்ப கவிதை படித்துவிட்டு இப்ப Mr.S. உங்களிடம் கவி படிக்கிறேன். உங்களுக்காக!அந்த அப்பா எனக்கு வாப்பாவின் வாப்பா,நெய்னாக்கு உம்மாவின் வாப்பா.MSM நகர் ஆக்கிய அப்பா.எதோ இந்த அளவுக்கு(தபால் எழுதியே) தமிழ் கோர்வை வந்திட வழி வகுத்த அப்பா.

//சூரா அவர்களிடம் ஒப்புவிக்கும் பாடசாலை(தான்) நடுத்தெடு சாலை... :) //
நினைவிடம் சூப்பரு!

sabeer.abushahruk said...

//சிங்க ஆலிம்சாயிடம் அப்ப கவிதை படித்துவிட்டு இப்ப Mr.S. உங்களிடம் கவி படிக்கிறேன்//

அப்ப, இப்ப என்னையும் அப்பா ன்கிறீர்களா? அநியாயம்ப்பா.

ஆனா ஈனா காக்கா, என்ன சேம் சைட் கோல் போட்றிய? நீங்க சிலாகித்து சொன்னதெல்லாம் அந்த காலத்து அப்பாவைப் பற்றியாக்கும்.

//விளைக்காரத்தெருவில் பொன்னம்மாவிடம் சர்க்கரை வள்ளி கிழங்கு வாங்கி அதை கழுவிவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்று சொல்லித்தந்தது-//

கிழங்கைச் சாப்பிட்டுவிட்டு பொன்னாம்மா மேட்டரை வீட்ல போட்டுக்கொடுக்கலேல்ல?

மற்றபடி, சினைப்பு உடைத்த நினைப்பு எல்லாவற்றையும் வர்ணித்திருப்பது...கவிதை காக்கா. தேங்காப்பாலு கஞ்சியும் கரிவேப்பிலை தொட்டுக்கரியுமா? உங்கூடு எந்த பக்கம் இருக்கு?


அபு இபுறாகீமின் அப்பாவை வைத்து ஒரு டாக்குமென்ட்ரி எடுத்து, "அப்பா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று பாடம் நடத்தலாம்.

நானும் இங்கு ஷார்ஜாவில் ஒரு அப்பா-பேரனைக் கவனித்து வருகிறேன். அவர்களின் அன்பைப் பார்க்கையில் (மாஷா அல்லாஹ்) எனக்கும் சீக்கிரம் அப்பாவாகனும்னு ஆசை ஆசையாக வரும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அப்ப, இப்ப என்னையும் அப்பா ன்கிறீர்களா? அநியாயம்ப்பா.//

அப்ப இப்ப நீங்க அப்பான்டெல்லாம் நான் சொல்லலெ!
நீங்க தான் அப்பாவெ பாக்கலெ.
நீங்களாவது அப்பாவாக வேண்டாமா?
வாய்த்தவங்களுக்கும் வாரிசுகளுக்கும் கவிதை எழுதியாச்சு. பேரப்பிள்ளைங்களுக்கும் எழுதனும்லோ!
அநியாம்னு சொல்லாமா?

உம்மாவீட்டு அப்பா சொன்னதிலிருந்து...
(தினக்குளியலுக்கு தடை விதித்த உம்மாயிடம்)செடிக்கு தினமும் தண்ணி ஊத்தினா தான் செழித்து வளரும் அதுபோல தலைக்கு தினமும் குளிச்சா தான் ஆளும் வளர முடியும் அறிவும் வளரும் என காட்டயம் படுத்தி குளிக்கச்செய்வார்கள்.( ஆரோக்கியத்துக்கும் அறிவுக்கும் உள்ள உளவியல் ரீதியான உண்மைகள்)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// வரம்பை மீறும் பேரன்கள் யாராவது விசமம் செய்தால் தூணில் கட்டி வைத்து மிளகாய் பொடி போடப்படும் அதோடு அவர்களை வைப்ரேஷனில் இருக்க வைத்து ஒரு அறையில் வைத்து பூட்டி வைக்கப்படும் என்று அப்பா சொல்லச் சொன்னார்கள்.//

அப்பா நண்டு பிடியை சொல்ல மறந்துட்டாங்களா? அல்லது சொல்ல சொன்னதை எழுத மறந்துட்டிங்களா?

Muhammad abubacker ( LMS ) said...

எம்.ஹெச் .ஜே சொன்னது

// நெய்னா கொந்தளிச்சிடாதே! அப்பொ, அப்பா கல்யாண சாப்பாடு என்றால் நீ போகனும்,ஹத்த சாப்பாடு என்றால் நான் போகனும். இது நம்ம அப்பாவின் அப்போதைய சூத்திரம்.//

நீங்க இரண்டுபேரும் ஊரில் இல்லையே! உங்களுக்கு பதிலாக வேறு யாரையும் நியமித்து இருக்கிறீர்களா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்பாவிடம் அடி வாங்காத பேரப்பிள்ளையொலுவ இருந்த அப்படியே கையை தூக்குங்க.... (நான் ஏற்கனவே தூக்கிட்டேன்...)

பேரப்பிள்ளைங்கள அடிச்சதே இல்லைன்னு சொல்ற அப்பா(க்கள்) கைதூக்கினாலும் பரவாயில்லை ! :)

சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபம் வருகிறதாம் அப்பாக்களுக்கு, அப்பாக்களில் சிலருக்கு (அன்றும் இருந்திருக்கலாம் கேள்விப் பட்டதில்லை இதுவரை) இன்றையச் சூழலில், நேசிக்க மனசு இருக்கு ஆனா வீடுகளில் சுதந்திரமாக அவர்களால் பேரன்களோடு உறவாட முடியாத நிலை அது ஏன் ? என்ன காரணமாக இருக்கும் ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நானும் இங்கு ஷார்ஜாவில் ஒரு அப்பா-பேரனைக் கவனித்து வருகிறேன். அவர்களின் அன்பைப் பார்க்கையில் (மாஷா அல்லாஹ்) எனக்கும் சீக்கிரம் அப்பாவாகனும்னு ஆசை ஆசையாக வரும்.//

யாங்காக்கா ! அவ்வொளையும் இங்கே கூட்டிகிட்டு வந்திருக்கம்ல !

பேரனுவோ தானே நாங்களெல்லாம் ! :)

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
புதிய உணர்வுகள்/கமென்ட்ஸ் பகுதியில் ஒரு அப்பா பெயரைப் பார்த்தேன். ஜானாக்கா.
தோற்தோம்டா என்று நினைத்துப் போய் பார்த்தால்...அவர்கள் புழங்குவது ஜாகிரின் கம்ப்பார்ட்மென்ட்டில்.

தப்பிச்சோம் என்று நினைத்தேன். அவர்கள் இங்கு வந்தால் பெருசுகளோடு சேர்ந்து அந்தக் கால அப்பாக்களைத் தோற்கடித்து விடுவார்கள். ஒன்னும் சொல்ல வேண்டாம். வந்து நின்னாலே நான் ஜகா வாங்கிடுவேன்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//அப்பாவிடம் அடி வாங்காத பேரப்பிள்ளையொலுவ இருந்த அப்படியே கையை தூக்குங்க..//

லெ.மு.செ.இபுராஹிம் மறைக்கா அப்பாவிடம் அடி வாங்கியதாக நினைவு இல்லை.ஆனால் அதட்டு வாங்கி இருக்கிறேன் ஒவ்வொரு அதட்டும் நூறு அடிக்கு சமம்.கையை தூக்கவா அல்லது தூக்கியதை இறக்கவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்பாவிடம் அடி வாங்கியதாக நினைவு இல்லை.ஆனால் அதட்டு வாங்கி இருக்கிறேன் ஒவ்வொரு அதட்டும் நூறு அடிக்கு சமம்.கையை தூக்கவா அல்லது தூக்கியதை இறக்கவா? //

அதுதானே அப்பாவின் ஸ்பெஷாலிட்டியே ! ஓ... தாராளமாக கையைத் தூக்கலாம், யாரையும் அவர்கள் அடித்ததில்லை. ஆனால், அப்துல் ஜப்பார் அப்பா, அப்துல் சமது அப்பா இவர்களிடம் அடி வாங்கியிருந்தால் யோசித்து விட்டு கையை மடக்கிக்கலாம் :)

Noor Mohamed said...

The honorable court is pleased to listen below. It is very important matter.

//வெண்மை மறைக்கிற
நரனே! நிறத்தின்
உண்மை மறுப்பது
சரியா அறிவா? //

கதீப்/சவுதியில் தாடி வைத்துக்கொண்டு ஆஃபீசில் வேலை செய்வது எந்த முதலாளிக்கும் பிடிக்காது. அல்ஹம்துலில்லாஹ், தாடி வைத்து 70% வெள்ளை நரையுடன் ஆன்லைன் அப்பாவாகிய நான் பணி செய்து வருகிறேன்.

அடுத்து, நேற்று கதீப்/சவுதியில், மீலாது நபி மவ்லூது விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வீதிகள் தோறும் தோரணங்கள். ஆங்காங்கே இனிப்புகளும் பால்களும் பரிமாற்றங்கள். அதுமட்டுமா! அங்குமிங்கும் கலைநிகழ்ச்சிகள்.

இன்னும் சொல்லவா! மேடை நாடகங்கள். நம் பள்ளியில் நடத்திய ஹாஜா முஹைதீன் சார் நாடகங்கள், இபுராகிம் அன்சாரி காக்கா நடித்த ரஜாக் சார் நத்திய நாடகங்கள், நம் கந்தூரிக் கடை நாடகங்கள் இவை எல்லாம் விஞ்சும் பின்னணி இசையுடன் கண்கொள்ளா காட்சியுடன் நாடகங்கள். இன்னும் பல.

இவையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் எனில், அன்றைய அப்பாமார்களை இங்கு கதீப்/சவுதிக்கு இழுத்து வந்து இவற்றை எல்லாம்
காண்பித்தால், இதுதானே நம் கலாச்சாரம் என்பார்கள். இல்லையா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இவையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் எனில், அன்றைய அப்பாமார்களை இங்கு கதீப்/சவுதிக்கு இழுத்து வந்து இவற்றை எல்லாம்
காண்பித்தால், இதுதானே நம் கலாச்சாரம் என்பார்கள். இல்லையா? ///

காக்கா, இல்லவேயில்லை...

அதற்கு மாறாக இப்படிச் சொல்லியிருப்பார்கள்

"எங்கள் ஊரில் திருந்திட்டாய்ங்க இங்கு இன்னுமா திருந்தலை இந்த தருதலைங்கன்னு" என்று சொல்லி நம்மளை அந்த ஊருக்கு அனுப்ப மாட்டாங்க அந்தக்கால அப்பாக்கள் இருந்திருந்தால்...

இப்போ உலக வரைபடத்தின் எந்த இடத்தில் அதிரை மண்ணின் மைந்தன் இல்லை என்று கேட்டு ஒரு கோடி பரிசு என்று அறிவித்தாலும் பதில் சொல்லவே தயங்குவர் இன்று.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//அப்துல் ஜப்பார் அப்பா, அப்துல் சமது அப்பா இவர்களிடம் அடி வாங்கியிருந்தால் யோசித்து விட்டு கையை மடக்கிக்கலாம் :)//

அப்துல் சமது அப்பாவிடம் ச்சான்சே இல்லை.அப்துல் ஜப்பார் அப்பா அவர்கள் கடைக்கு பொருள்கள் வாங்க அனுப்பினால்.மதியம் உச்சு நேரத்தில்.வாசலில் அதிக டெம்பரேச்சர் உள்ள திண்ணையில் எச்சிலை துப்பிவிட்டு.இது காய்வதற்க்குள்.பொருளை வாங்கிவிட்டு வரனுமென்று கட்டளை இடுவார்கள்.இல்லை என்றால் கிள்ளுவிழும் .அது போன்று கிள்ளும் வாங்கவில்லை.ஆகையால் தூக்குன கை கடுக்குது சொல்லிவிட்டு இறக்கிக்கொள்கிறேன்.

Anonymous said...

அன்பானவர்களே!

//ஆனா ஈனா காக்கா, என்ன சேம் சைட் கோல் போட்றிய? நீங்க சிலாகித்து சொன்னதெல்லாம் அந்த காலத்து அப்பாவைப் பற்றியாக்கும். //

என்று மாற்றுக்கட்சியை சேர்ந்த கவிஞர் சபீர் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள் ஆனால் உண்மையிலேயே எனது கட்சியின் கோல் போஸ்ட் வரை பந்தை கடத்திக் கொண்டுவந்த நான் யூ டர்ன் எடுத்து அடுத்த பாராவில் இன்றைய அப்பாக்களை ஒப்பிட்டு காட்டியதை தான் வாதாடும் அணிக்கு வசதியாக கவனிக்க விட்டுவிட்டார்.

அன்றைய அப்பாக்களுக்காக வாதாடும் நெறியாளர், உட்பட அனைவரும் பேரன்மார்களாக இருந்த அனுபவத்தை வைத்து விவாதிக்கிறார்கள். நாங்கள் இந்தக்கால அப்பாக்களாகவே இருந்து வாதாடுகிறோம்.

1.. இந்தக்கால அப்பாக்கள் பேரன்மார்களுக்கு உயர் கல்வி விஷயங்களில் ஆலோசனை சொல்ல முடிந்தவர்கள். அது பெரும்பாலும் உலக கல்விதான். ஆனாலும் அதையும் சொல்ல வேண்டுமல்லவா?

2.. இந்தக்கால அப்பாக்கள் பெரும்பாலும் இன்னும் வெளிநாடுகள் போய்வந்து கொண்டு இருக்கிறார்கள். பேரப்பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறார்கள். அந்தக்கால அப்பாக்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிட்டு தோப்பில் தேங்காய் வெட்டுக்கு மட்டும் போகிறவர்கள்./ போனவர்கள்..

3. . இந்தகால அப்பாக்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வேலைபார்த்த அனுபவம் உடையவர்களாகவும் இருப்பார்கள். அந்தக்கால அப்பாக்கள் தீகாளிமா வகையினர். மலேசிய, சிங்கப்பூர்- நாகபட்டினம் -எம்.வி சிதம்பரம் எஸ் எஸ் ரஜோலா வகையினர். வேறுசிலர் மலிபன் பிஸ்கட் -மாசி- தேயிலை -வகையினர்.அதாவது இலங்கை சபூர்.

4. அந்தக்கால அப்பாக்கள் பேரன்களுக்கு பட்டம் விட செய்தும் சொல்லியும் கொடுப்பார்கள். இந்தக்கால அப்பாக்கள் கல்லூரியில் பட்டம் பெற உதவுவார்கள். தான் படித்த படிப்பை பேரப்பிள்ளைகளும் படிக்க நினைப்பார்கள்.

5. . அந்தக்கால அப்பாக்கள் தாங்கள் வேலைபார்த்து ஒய்வு பெற்ற நாட்டில் அல்லது நிறுவனங்களில் தனது வாரிசுகளையும் கொண்டு சேர்க்கும் வாய்ப்புக்கள் வெகு குறைவு. இன்று உள்ள அப்பாக்கள் தாங்கள் வேலை செய்யும் நாடுகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ தனது பேரப்பிள்ளைகளையும் கொண்டு சேர்க்கிறார்கள்..

6. . அந்த கால அப்பாக்கள் பேத்திகள் படிப்பதற்கு இரும்புத்திரையாக / விலங்காக (தடையாக) இருந்தவர்கள். இன்றைய அப்பாக்கள் அவர்களுக்கு சிறகாக இருந்து ஊக்குவிக்கிறார்கள்.

7. அந்தக்கால அப்பாக்கள் பேரன்களுக்கு சொல்லிக்கொடுத்ததும் கற்றுக்கொடுத்ததும் அதிகம். இன்றைய அப்பாக்கள் பேரன்களிடம் கற்றுக்கொள்வது அதிகம். குறிப்பாக இணைய தள, மொபைல் தொலைபேசி தொடர்பாக நமக்கு அவர்கள் நிறைய சொல்லித்தருகிறார்கள்.

8. . அந்தக்கால அப்பாக்கள் ஒரு தலைமுறை இடைவெளியுடன் நடந்து கொண்டார்கள். இந்தக்கால அப்பாக்கள் பேரன்களுடன் நண்பர்கள் போல பழகுகிறார்கள். (நானும் என் பேரனும் அப்படித்தான்.) .

நாங்கள் எடுத்து வைத்திருக்கும் இவ்வளவு விவாதத்துக்கும் எதிர் அணியினர் தரும் பதிலுக்கு பதில் தருவோம்.

வெள்ளிக்கிழமை இனிதே விடைபெற்றது .அ. நி. குழுவுக்கு ஒரு சபாஷ்.

-இபுராகிம் அன்சாரி.

sabeer.abushahruk said...

ச்சான்ஸே இல்ல.

தோல்வியை ஒத்துக்கொள்கிறேன். இந்தக் கால அப்பாக்களும் என்னையும் உள்ளடக்கிய எதிர்கால அப்பாக்களுமே இன்றையத் தலைமுறை பேரர்களுக்கு உதவுவதிலும் அவர்களைச் செம்மையாக உருவாக்குவதிலும் சிறந்தவர்கள் என்னும் தீர்ப்பைத் தாராளமாக வழங்கலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ச்சான்ஸே இல்ல.//

அதெப்படி கவிக் காக்கா, அன்றைய அப்பாக்களால் செதுக்கியவர்கள் இன்றைய பேரன்களாகவும் அதோடு தன் பேரன்களுக்கு சிற்பிகளாக மிளிர்கிறார்கள் என்பதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு, நாளைய (புத்தம் புது) அப்பாக்களாக ஆக இருக்கும் நல்லுள்ளங்களையும் இதேபோல் (எங்களைப் போல்) பேரன்கள் என்றும் நினைவுகூர்வதோடு அவர்களின் ஒவ்வொரு துஆவிலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடக்கூடையவர்களாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக !

என்ன இருந்தாலும் MSM(n) நாளைக்குத்தான் வருவார், காலையில் மீண்டும் கலைகட்டும்... :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அந்தக்கால அப்பாமார்களைப்பற்றி இந்தக்கால பேரன‌ப்பாமார்களும், ஆன்லைன் அப்பாமார்களும் கொஞ்சி விளையாடும் அதிரை நிருபரே!. அன்றைய அப்பாமார்களின் தோற்றமே அலாதியானது தான். ஆனால் இன்றைய அப்பாமார்களெல்லாம் பார்ப்பதற்கு வயசான வாலிபர்களாகத்தான் தெரிகிறார்களே தவிர அந்த அப்பாமார்களை பார்த்த ப்பீலிங் வரமாட்டிக்கிது.....

நேற்று வெள்ளிக்கிழமையாதலால் வெளியூர் (தம்மாம்) சென்று விட்டேன். ஆதலால் கருத்திட முடியவில்லை.

காலை வேலைகளுக்கு என்/ஜஹபர் சாதிக் அப்பா போடும் திட்டங்களுக்கு நாட்டின் திட்டக்கமிஷனே தட்டம்தரையில் அமர்ந்து பாடம் படித்துச்செல்ல வேனும். இது மாதிரி அப்பாக்களிடம் ஆலோசனை பெறாமல் தான் நாட்டின் திட்டங்களெல்லாம் தட்டுத்தடுமாறி இறுதியில் தோல்வியில் முடிந்து விடுகின்றன. எனவே திட்டக்கமிஷ‌ன் தலைவர் மான்டேங்சிங் அலுவாலியாவிடம் சொல்லி அதிரைக்கு வந்து எஞ்சியிருக்கும் அப்பாக்களிடம் தேவையான ஆலோசனை பெற்று செல்லச்சொல்லுங்கள்.

அந்த‌ அப்பாக்க‌ளெல்லாம் இன்றிருந்து இணைய‌த்தினூடே அவ‌ர்க‌ளைப்பற்றிய‌ செய்திக‌ளை ப‌டிக்க‌ நேர்ந்தால் இப்ப‌டித்தான் பின்னூட்ட‌ம் இடுவார்க‌ள் "டேய் ப‌டுவா! இந்த‌ அப்பாவை வ‌ச்சி பெர‌லி,கிர‌லி ப‌ண்ண‌லைய்யே?".

நீங்க‌ என்னெத்த‌ சொன்னாலும் 'அந்த‌ அப்பாமார்க‌ளெல்லாம் ஆன‌ந்த‌ ப‌ந்த‌ம்' தான் என்று சொல்லி 'அப்பாவைப்பத்தி தப்பாப்பேசுனா தெரியுஞ்சேதி' என்று அப்பா தீர்ப்பை சொல்லச்சொன்னார்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//நம் அப்பா போடும் திட்டங்களுக்கு நாட்டின் திட்டக்கமிஷனே தட்டம் தரையில் அமர்ந்து பாடம் படித்துச்செல்ல வேனும்.//
ஆமாம் நெய்னா, மிகச்சரியே!

ZAKIR HUSSAIN said...

Brother MSM நெய்னா முஹம்மதின் கமென்ட்ஸில் மண்வாசனை கலந்த "அப்பாக்களின் நினைவுகள்" இருக்கும் என எதிர்பார்த்தேன்.[ அவர் தமாம் போனது கூட எனக்குதெரியும்னா பார்த்துக்கோங்க]

ஆனால் ஏதோ இந்திய அரசியல் எல்லாம் எழுதியிருந்தது.

NOTE: மண்வாசனை / மண்வாசனை நு எழுதுறீங்கலே மாப்லெ...மண்ணெப்போய் ஏன் மோந்து பார்க்கிறீங்கனு ஒரு "குசும்பு மச்சான்' என் கிட்ட கேட்கிறாப்லெ...பதில் தான் என்ன சொல்றதுனு தெரியலெ

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மண்வாசனை / மண்வாசனை நு எழுதுறீங்கலே மாப்லெ...மண்ணெப்போய் ஏன் மோந்து பார்க்கிறீங்கனு ஒரு "குசும்பு மச்சான்' என் கிட்ட கேட்கிறாப்லெ...பதில் தான் என்ன சொல்றதுனு தெரியலெ//

ஆமா காக்கா, அதை வேனும்னா "மனைகட்டு"வாசனைன்னு மாத்திக்கலாம்னு உங்க குசும்பு மச்சான் கிட்டே சொல்லிடுங்க ! இதுதான் நம்மூருக்கு பொருத்தமா இருக்குமாம் இந்தக் கால அப்பா சொல்லச் சொன்னாங்க !

அபு இஸ்மாயில் said...

என்னுடைய வப்பாவீட்டு அப்பா சிறுபிராயத்தில் எங்களை விட்டு சென்று விட்டார்கள் ஆனால் உம்மா வீட்டு அப்பாவின் செல்லம் சுபுஹு தொழுதால் நூர்லாஜ் கடை ரொட்டியும் டீயும் இன்றும் மறக்க முடியாது காரணம் எங்க அப்பாவை பின்பற்றி நானும் எனது பிள்ளைகளை சுபுஹு தொழுதால் முட்டை மில்க் பிஸ்கட் என்று ஆர்வம் கொடுக்கிறேன்.(யாரோ இப்பவே லஞ்சம் கொடுத்து பழகிவிடுகிர்களே என்று கேட்கிற மாதிரி இருக்கிறது )

அது மட்டுமா தெருவில் உள்ள மாட்டு சாணம் பொருக்குவதற்காக மண்வெட்டியை எடுத்து அப்பா கூட செல்வது.இந்த காலத்தில் எங்கே அதல்லாம்

ஆனால் நான் எனது மகன்களுக்கும் சுத்தத்தை பற்றி சொல்லி செய்ய சொல்லியும் விடுமுறை நாட்களில் ஒன்றாக செய்து வருகிறோம். மீதியை அபு இப்ராஹீம் காகா தொடருவார்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அபுஇஸ்மாயில், உன் வாப்பிச்சா வீட்டு (ஹலீம்) அப்பா அவர்களின் அமைதியான பேச்சு, பொறுமையின் சிகரம்... ! மறக்கவே முடியாது.

அட! நம்ம முஹம்மது அப்துல்லா அப்பா அவர்கள் அதோடா மட்டுமா இருப்பார்கள், இன்னும் என்னோட உம்மா வீட்டு அப்பாவைப் பத்தி எழுதினா... பெரிசா தொடர்ந்திடும், அப்பாக்களுக்கு என்று அடுத்தடுத்த பதிவில் அவைகளில் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்...

அப்துல்மாலிக் said...

ஏனோ எனக்கு அப்பா வின் சுகவாசம் இருந்ததில்லை, எல்லாமே உம்மம்மா/வாப்புச்சிதான் எனவே விவாதிக்குமளவுக்கு விபரமில்லை.... :(

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,


நிறைய கருத்துக்கள் அப்பாக்களை பற்றி பதியப்பட்டுள்ளது, இதில் சரி தவறு வாதிட நான் விரும்பவில்லை.

எந்த ஒரு மனிதனும் யாரும் யாரைவிடவும் அறிவில் மிகைத்தவர்கள் இல்லை என்பதற்கு அப்பா பேரன் உறவுகளில் வெளிபடும் அநேக உரையாடல்களே சாட்சி.

பெரியவர்களின் அனுபவம், ஆலோசனைகள் (மார்க்க வரம்புக்கு உட்பட்டவை) அனைத்துமே இளையோருக்கு கல்வி.

எல்லா அப்பாக்களும் பேரன் பேத்திகளின் வாழ்நாட்களில் மறக்கமுடியாத மனிதர்களாக என்றொரும் வாழ்கிறார்கள் என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நம்மில் முதியவருக்கு மரியாதை செய்யாதவனும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதவனும், நமது (சமுதாய) அறிஞரின் உரிமையை அறிந்திராதவனும் என் உம்மத்தைச் சார்ந்தவன் அல்லன்.'' (ஸுனன் அஹமத், முஃஜமுத் தப்ரானி)

மேற்சொன்ன ஹதீஸை எல்லா அப்பாக்களும் பேரன் பேத்திகளும் எப்போதும் கவனத்தில் வைத்திருப்போம்.

நம்முடைய மறைந்த பாசமிகு பெரியவர்கள் எல்லோரின் மறுமை வாழ்வுக்காகவும், வாழ்ந்துவரும் பாசமுகு பெரியவர்கள் எல்லோருக்காகவும் துஆ செய்வது நம் எல்லோரின் கடமை.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள கவி சபீர் , நெறியாளர், சகோதரர் தாஜுதீன். அனைவருக்கும்
இறைவனின் கருணையும் அருளும் கிட்ட துஆச்செய்கிறேன்.

அருமையான விவாதங்கள் கருத்துக்கள் பதியப்பட்டன. இறுதியில் சகோதரர்
தாஜுதீன் அவர்களின்


//எல்லா அப்பாக்களும் பேரன் பேத்திகளின் வாழ்நாட்களில் மறக்கமுடியாத
மனிதர்களாக என்றொரும் வாழ்கிறார்கள் என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும்
உண்மை// என்ற கருத்து அனைவருக்கும் ஏற்புடையது மட்டுமல்ல கண்ணீரை
வரவழைத்தும் விட்டது.

அத்துடன் அவர்கள் சுட்டிக்காட்டிய

//நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நம்மில் முதியவருக்கு மரியாதை
செய்யாதவனும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதவனும், நமது (சமுதாய)
அறிஞரின் உரிமையை அறிந்திராதவனும் என் உம்மத்தைச் சார்ந்தவன் அல்லன்.''(ஸுனன் அஹமத், முஃஜமுத் தப்ரானி)

மேற்சொன்ன ஹதீஸை எல்லா அப்பாக்களும் பேரன் பேத்திகளும் எப்போதும் கவனத்தில் வைத்திருப்போம்.

நம்முடைய மறைந்த பாசமிகு பெரியவர்கள் எல்லோரின் மறுமை வாழ்வுக்காகவும், வாழ்ந்துவரும் பாசமுகு பெரியவர்கள் எல்லோருக்காகவும் துஆ செய்வது நம் எல்லோரின் கடமை//

அதன்படி அந்தக்கால அப்பாக்களின் , இந்நாளைய அப்பாக்களின் இம்மை மறுமைக்கு அனைவரும் து ஆச்செய்வோமாக.

பின்நூட்டத்தில் ஒரு இடத்தில் தம்பி அபூ இபுராஹிம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

//இப்போ உலக வரைபடத்தின் எந்த இடத்தில் அதிரை மண்ணின் மைந்தன் இல்லை என்று கேட்டு ஒரு கோடி பரிசு என்று அறிவித்தாலும் பதில் சொல்லவே தயங்குவர் இன்று. //

எனக்கு சொல்லுங்கள் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள அங்கோலா என்ற நாட்டின்
தலைநகர் லுவான்டாவில் அதிரையின் மண்ணின் மைந்தர்கள் யாராவது
இருக்கிறார்களா? இருந்தால் எனக்கு தொடர்பு தேவை. காரணம் அடுத்தவாரம் அலுவல் காரணமாக ஐந்து நாள் சென்று வர இருக்கிறேன். அப்படி யாரும் இல்லாவிட்டால் அடுத்தமாதம் முதல் வாரம் முதல் ஒரு ஆறு மாதத்துக்கு என பெயரை அங்கு எழுதி வையுங்கள்.

வஸ்ஸலாம்.

இபுராகிம் அன்சாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இபுறாஹீம் அன்சாரி காக்கா,

தங்களின் பிரார்த்தனைக்கு ஜஸக்க்கல்லாஹ் ஹைர்...

ஒரு இளைஞர் நல்லவனாக (பணம் காசு சம்பாதிப்பதற்கு முன்பும் பின்பும்) இருக்கும் பட்சத்தில் முதலில் மரியாதை நற்சான்று கொடுப்பது வீட்டில் உள்ள அப்பாக்கள் என்பதை மனசாட்சியுள்ள ஒவ்வொரு பேரப்பிள்ளைகளும் அறிவர்.

நல்லவைகளில் சாதனை படைக்கும் நம் வீட்டு பேரப்பிள்ளையை எண்ணி இவன் என் பேரன் என்று ஒரு வினாடி ஆனந்தத்தில் கண்கலங்கும் அனுபவம் உங்களை போன்றவர்களுக்கு இருக்கும் என்பது எங்களை போன்ற பேரப்பிள்ளைகளுக்கு தெரியும்.

அல்லாஹ் போதுமானவன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எனக்கு சொல்லுங்கள் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள அங்கோலா என்ற நாட்டின் தலைநகர் லுவான்டாவில் அதிரையின் மண்ணின் மைந்தர்கள் யாராவது இருக்கிறார்களா?//

காக்கா, நீங்கள் அங்கே இருக்கும் ஒருவார காலத்திற்குள் பதில் சொல்லி விடுகிறேன் :)

sabeer.abushahruk said...

//எனக்கு சொல்லுங்கள் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள அங்கோலா என்ற நாட்டின் தலைநகர் லுவான்டாவில் அதிரையின் மண்ணின் மைந்தர்கள் யாராவது இருக்கிறார்களா?//

காக்கா,
கீழ்கண்ட முகவரிக்குச் சென்று கதவைத்தட்டுங்கள். அங்கு நூற்றுக்கணக்கான நம்மூர்க்காரங்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

www.adirainirubar.in


கொல்லைவாசற் கதவிற்கு: http://adirainirubar.blogspot.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு