திக்குத் தெரியாத காட்டில் தீர்வற்றுத் திரிந்தாள், 23 வயதே நிரம்பிய அந்த இளம்பெண். திருமணம் புரிவதற்கு முன்பே அவள் இரு குழந்தைகளின் தாய்! கல்லூரி மாணவியாகக் கால் போன போக்கில் நியூயார்க் வீதிகளில் அலைந்து திரிந்து, இரவு விடுதிகளிலும் கேளிக்கைகளிலும்தான் அவளுடைய நேரமும் காலமும் கழிந்தன!.
"நான் ஏன் இப்படிச் சென்று கொண்டிருக்கிறேன் என்று சிந்தித்தேன். ஆனால், வழக்கம்போல் அந்த வாரமும், சனிக்கிழமை இரவன்று முந்தைய போக்கில் தான் சென்றேன். அன்று ஓர் இனம் புரியாத ஏக்கம் கலந்த ஆர்வம் கிளர்ந்து எழுந்து நின்றது என் மனத்தில்" என்று கூறும் 'ஜெஹோவாவின் சாட்சி' எனும் கிறிஸ்தவ மதப் பிரிவைச் சார்ந்த இப்பெண், தனது உண்மை தேடும் ஓயா முயற்சியை நம் சிந்தைக்கு விருந்தாக்குகின்றார்.
இரவு விடுதிகள் என்றால், மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட, ஒழுக்கக் கேடுகளின் ஒட்டுமொத்தமான தோற்றத்தில்தான் இருக்கும் எனப்தை அறிவுடையோர் அனைவரும் அறிவர். வழக்கம் போல், அன்றும் புதிய சிலரின் அறிமுகம் கிடைத்தது இப்பெண்ணுக்கு. அவ்விளைஞர்கள் தம்மை 'ஹிப்ருக்கள்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். 'ஹீப்ரு' என்பது யுதர்களின் வேத மொழியன்றோ?! அதைப் பற்றியும், அவ்விளைஞர்களைப் பற்றியும் அறிய ஆவல் கிளர்ந்து எழுந்தது இப்பெண்ணுக்கு.
'மதவாதிகள் என்றால், இவர்கள் ஏன் இரவு விடுதிக்கு வர வேண்டும்?' சிந்தித்த நம் கதாநாயகிக்கு விடை கிடைப்பது அரிதாயிற்று. இருப்பினும், அவர்களிடம் கேட்டு வைப்போமே என்றெண்ணி, "ஆமாம், மதவாதிகள் என்று கூறிக் கொள்ளும் உங்களுக்கு இரவு விடுதிதான் கிடைத்ததா?" என்று கேட்டு வைத்தா இப்பெண்.
"ஆம்; நாங்கள் கறுப்பு ஹீப்ருக்கள்' (Black Hebrews) எனும் பிரிவினர் ஆவோம்" என்று கூறிய அவர்கள். தம்து மத நம்பிக்கைகள் என்று ஏதேதோ புத்திக்குப் புலப்படாத சிலவற்றை, போதைப் பொருள்களை நுகர்ந்த பாதி மயக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தனர்.
"எனக்கோ, இது முற்றிலும் முரண்பாடானதாகப் பட்டது. வெள்ளை யூதர்களைவிட, இக்கறுப்பு யூதர்களே 'கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்' என்று வாதாடினர். இருப்பினும் நானும் விடவில்லை. அவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கெல்லாம் எதிவாதம் புரிந்து, அவர்களைத் திணறச் செய்தேன்" என்கிறார் இவ்விளம்பெண்.
சிறு வயது முதற்கொண்டு இப்பெண்ணுக்கு மத நம்பிக்கை இருந்தது. ஆனால், பைபிளின் 'ஜெனிசிஸ்' கதைகள் அறிவுக்குப் பொருந்தாதவையாக இருந்ததால், அதனை மேற்கொண்டு படிக்கும் ஆர்வம் இவருக்கு வரவில்லை. இவ்வாருள்ளத்துள் இருந்த கேள்விகள் ஏராளம். கிறிஸ்தவ மதவாதிகள் ஏன் பொய்யுரைக்கின்றனர்? தகாத ஆண் - பெண் புணர்ச்சியில் அவர்கள் ஏன் ஈடுபடுகின்றனர்? மதுவைக் குடித்து மதியை இழப்பது ஏன்? இவ்வாறு இன்னும் பல.
தாய் வழியில் 'ஜெஹோவாவின் சாட்சி' எனும் கிறிஸ்தவப் பிரிவில் சிறுமியாக இருந்தபோது பழக்கப்படிருந்த இப்பெண், பன்னிரண்டு வயதுக்குப் பின் (teenage) கிறிஸ்தவமத நம்பிக்கைகளையும் வெறுத்தொதுக்கினாள். அந்த நிலையில்தான், தனது தாந்தோன்றித்தனமான வாழ்கையினுள் புகுந்தாள். அப்போது மதம், வழிபாடு, நம்பிக்கை என்ற திசையில் வாக்குவாதம் ஏற்பட்ட போது வெறுப்படைந்தாள் இவ்விளம்பெண்.
இரவு விடுதியில் சந்தித்த அந்த black hebrewக்கள், இப்ராஹீம் நபி தம் மகன் இஸ்ஹாக்கை (?) அறுத்துப் பலியிட முன்வந்தது பற்றிக் குறிப்பிட்டார்கள். இன்னும் பல கொள்கைகளைக் குறிப்பிட்டபோது, தானும் தனக்கிருந்த அறிவைக் கொண்டு வாக்குவதாம் புரிந்ததாககக் குறிப்பிடும் நம் கதாநாயகி, அந்தக் கறுப்பர்களுக்கு மறுமொழி கூற முடியாத நிலை ஏற்பட்டபோது சொன்னர் " "நீங்கள் எது பற்றி பேசுகின்றீர்களோ, அது பற்றி உண்மையான அறிவு உங்களுக்குக் கிடையாது என்பதுபோல் உணர்கின்றேன். எனவே, எனக்கு அடுத்த சனிக்கிழமை வரை தவணை கொடுங்கள். நானும் இது பற்றி மேற்கொண்டு படித்துவிட்டு, உண்மை நிலையை உங்களுக்கு விளக்குகின்றேன்."
இவ்வாறு சவால் விட்டு வந்த நம் கதாநாயகி, அடுத்த வாரம் முழுவதும் ஓய்வு நேரங்களை நூலகப் படிகளில் ஏறியிறங்குவதையே பொழுதுபோக்காக கொண்டு பாடுபட்டார். தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கறுப்பர்கள் தம்மை 'தெரிந்தெடுக்கப்பட்ட யூதர்கள் (Chosen Jewish People) எனக் கூறுவதால், யூத மதக் கிரந்தமாகிய 'தோரா'வைத் தேடியெடுப்பதிலே நேரத்தை செலவிட்டார். ஆனால், நிகழந்ததென்ன ?
எந்த நூலகத்திலும் யூத வேதமான 'தோரா' அவளுக்குக் கிடைக்கவில்லை! பைபிளின் ஜெனிசிஸ், பகவத் தீதை போன்ற வேத நூல்களெல்லாம் கிடைத்தன. 'முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆனில் தேடலாமா?' பெறி தட்டிய உணர்வுடன் அதனைத் தேட முயன்றாள், யூத வேதமான 'தோரா' இல்லாததுபோல், முஸ்லிம் வேத நூலான குர்ஆனும் இல்லையா? அப்படியிருக்காது!தெரிந்தவர்களிடம் கேட்கலாமா? இது போன்ற சிந்தனையிலேயே, அடுத்த சனிக்கிழமையும் நெருங்கிவிட்டது! எஞ்சிய நேரமோ கொஞ்சம்தான்! "அந்நிலையில்தான், என் தங்கையின் நண்பர்களுள் ஒருவர் முஸ்லிம் என்பது என் நினைவுக்கு வந்தது. 'அவரிடம் குர்ஆன் கட்டாயம் இருக்கும். அதைக் கேட்டால், அவர் நமக்கு இரவல் தருவார்.' இந்த எண்ணத்துடன் விரைந்து முயன்றபோது, அது எனக்குக் கிடைத்து விட்டது, ஆங்கில மொழிபெயர்ப்புடன்!" என்று தனது அனுபவங்களை நினைவுகூர்கின்றார் இந்தப் பெண்.
"சனிக்கிழமைக்குள் என்னால் எவ்வளவு படிக்க முடியுமோ, அவ்வளவு கூடுதலாகக் குர்ஆனைப் படித்தேன். நான் அதில் மூழ்கிவிட்டேன் என்று கூடக் கூறலாம். எனக்குத் தோன்றிற்று : இதுதான் நான் தேடிய வேதநூல்! 'தோரா' வன்று! பைபிளுமன்று! குர்ஆனின் சில வசனங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தேன். எத்துணை மகத்தான வேதமிது! படிக்கப் படிக்க எனக்கு அழுகை பீறிட்டு வந்தது அருள்மறையைப் படித்து அழுது புலம்பினேன்!"
இவ்வாறு கூறும் அவ்விளம்பெண், தான் எதற்காகக் குர்ஆனை எடுத்து ஆராய முன்வந்தார் எனப்தை மறந்து, அதன் தெவீகத் தன்மையில் மூழ்கிப் போனார்! 'அல்பக்ரா' எனும் அத்தியாத்தின் 122 முதல் 141 வரையுள்ள வசனங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, தான் மறந்ததை நினைவு படுத்திக் கொண்ட்டார்.
"அவ்வாறன்று! 'நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்)... மற்றைய நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கிடைக்கப் பெற்றவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களுள் ஒருவரையும் மற்றவரிடமிருந்து பிரித்து விடமாட்டோம்!" என்று (நபியே!) கூறுவீராக!" (2:135, 136)
மேற்கண்ட வசனங்களைப் படிக்கப் படிக்க, உண்மை கிடைத்து விட்டது என்ற உணர்வால், ஆனந்தக் கண்ணீர் சொரிந்த வண்ணமே இருந்தது அப்பெண்ணுக்கு. 'இந்த வேதத்தைப் பின்பற்றுவோர் இன்னும் பலர் அமெரிக்காவில் இருக்கக் கூடும். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைப்பது யார்?' என்று ஏங்கினார்.
எதிர்பார்த்த சனிக்கிழமையும் வந்தது. அன்றிரவு அவரின் கால்கள் அதே இரவு விடுதியை நோக்கி நடந்தன!. அங்கே ஆடிப் பாடிக் களிப்பதற்கன்று! அறிவை வழங்கிவிட்டு அங்கிருந்து அகன்று விடுவதற்கு!
அந்தக் கறுப்பு யூதர்களிடம், இப்ராஹீம் நபி அறுக்க முன்வந்த மகன் இஸ்ஹாக் அல்லர்; இஸ்மாயில்தாம் என்பதை வேத ஆதாரத்துடன் எடுத்துக் கூறிய போது, அவர்கள் முரண்டு பிடித்தனர்.
"மேற்கொண்டு வாதிட என்னிடம் போதிய அறிவில்லை. அதனால், அத்துடன் நிறுத்திவிட்டு, அந்த இரவு விடுதியை விட்டு இறங்கி வந்துட்டேன். பின்னர் அதன் பக்கம் அடியெடுத்துக் கூட வைக்கவில்லை; திசைமாறித் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!"
முஸ்லிம்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் மிகைத்தது அவருள்ளத்தில். 'முஸ்லிம்கள்' எனக் கூறிக் கொண்டு ஓரிருவர் ஆங்காங்கே நடமாடுவது அவருக்குத் தெரியும். அவர்களுள் ஒருவர் கேக் முதலிய தின்பண்டங்களையும் செய்தித்தாள்களையும் வீட்டுக்கு வீடு விநியோகம் செய்பவர். அவர் மூலம் Nation of Islam என்ற பிரிவில் சேர்ந்து சில நாட்கள் உழைத்த அனுபவமும் இவருக்குண்டு.
நாளடைவில், அவர்கள் 'காதியானி'களைப் போன்று வழிகேட்டைப் போதிப்பவர்கள் என்பதை அறிந்து, அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அந்தக் கறுப்பினத் தலைவர்களான எலிஜா முஹம்மது, வாலேஸ், லூயிஸ் ஃபார்கான் ஆகியோர், 'வெள்ளையன்தான் சாத்தான்' (White man is the devil) என்ற படுமோசமான கொள்கையை உடையவர்கள்.
அந்த வாரம் முடியும் தருவாயில், நம் கதாநாயகியின் வீட்டுக் கதவை ஒருவர் தட்டி, "கேக் வேண்டுமா?" எனக் கேட்டார். அந்த ஆளைப் பார்த்தபோது, Nation of Islam இயக்கத்தைப் பின்பற்றுபவன்போல் இருந்தான். "உன் பெயர் என்ன?" எனக் கேட்டபோது, "இஸ்மாயில்" என்றான். இதோ வந்து விடுகிறேன்; கொஞ்சம் நில்" என்று கூறி வீட்டினுள் சென்ற நம் கதாநாயகி, கையில் ஒரு குர்ஆனுடன் திரும்பி வந்து "இந்தப் புத்தகத்தைதான் - இது கூறும் மார்க்கத்தைதான் நீ பின்பற்றுகிறாயா?" எனக் கேட்டார்.
அதிர்ச்சியைடந்தவன் போல் தோன்றிய இஸ்மாயில், சுதாகரித்துக் கொண்டு, "ஆமாம்" என்றான் "நீ National of Islam வழியைப் பின்பற்றுபவன் இல்லையா?", என்றார் இப்பெண். "மேடம் அது ஒரு காலத்தில். அவ்வழி பழுபட்டது என்று அறிந்த பின், மால்கம் எக்ஸ் (என்ற மாலிக் ஷாஹ்பாஸ்) அவர்கள் பரப்பிய தூய்மையான இஸ்லாத்தை இப்போது பின்பற்றுகிறேன்" என்றான் இஸ்மாயீல்.
இஸ்மாயீலின் உதவியுடன், தூய்மையான இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்களைச் சென்றடைந்து, 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் ஒரு ஞாயிறன்று நியூயார்க்கின் பள்ளிவாயில் ஒன்றில் 'ஷஹாதா' கூறி, சத்திய மார்க்கத்தில் இணைந்து, 'ஹனான்' என்ற அழகிய பெயரைப் பெற்றார் இப்பேறு பெற்ற பெண்மணி!.
"அன்றிலிருந்து, இஸ்லாத்திற்காக உழைப்பது, இஸ்லாமிய அறிவை வளர்ப்பது, கற்றதை நடைமுறைப்படுத்துவது என் கடமை என்றுணர்ந்து வாழ்ந்து வருகின்றேன். முதன் முதலாகப் பாடுபட்டுப் பெற்ற அதே குர்ஆன் பிரதியை இன்றும் என்னிடம் உண்டு! எனது சத்தியப் பயணம் பற்றி அது எனக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றது. மானிட இனத்திற்கு முழுமையான மார்க்கமாக இறைவன் வெகுமதியளித்த இஸ்லாத்தைக் கொண்டு எல்லோரும் பயனடையட்டும்!" என்றார் திருமதி ஹனான் அப்துல் லத்தீஃப்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
-அதிரை அஹ்மது
10 Responses So Far:
கிறிஸ்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அதை கூட பேணாமல்
கிட்டத்தட்ட அதன் மீது நம்பிக்கை இழந்து அடுத்தது என்ன எனபது பற்றி
தெரியாமல் தன் இஷ்டத்துக்கு வாழும் நிறைய மக்களை அமெரிக்க
முழுவதிலும் காணலாம் .
அவர்களுக்கும் மேற்சொன்ன சகோதரிக்கு அமைந்தது போலே,
ஈமான் எனும் வெளிச்சம் அவர்கள் மீதும் ஒளிரட்டுமாக ஆமீன் !
"Darul Islam Family" ஒரு சஞ்சிகையின் சரிதை'யில் "பேறு பெற்ற பெண்மணிகள் புத்தக விமர்சனம்:
அமெரிக்கா, ஆப்பிரிக்கா; இங்கிலாந்து, ஆஸ்திரேலியா; அயர்லாந்து, ஃபின்லாந்து; கனடா, இந்தியா...
விளையாட்டுப் போட்டிகளின் அணிப்பிரிவுகள் அல்ல இவை. பூகோள எல்லைக் கோட்டைத் தாண்டி ஒரு புள்ளியில் வந்து இணைந்து கொண்டிருக்கும் பெண்களின் குடியுரிமைப் பட்டியல்!
பௌத்தம், கிறித்தவம், ஹிந்து மதம், யூத மதம், மத நம்பிக்கையே அற்றவர்கள் என்று பலதரப்பட்ட பெண்கள்; உலகின் பல்வேறுப் பகுதிகளைச் சார்ந்தவர்கள்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினை, கவலை, தேடல், காதல் என்று - அனுபவம், பயணம். அவர்கள் இறுதியில் வந்து சேர்ந்த இலக்கு ‘இஸ்லாம்’.
வந்து சேர்ந்தவர்கள் வாய் திறந்து ஷஹாதா மொழிந்துவிட்டு, தலையைச் சுற்றி முக்காடு இழுத்துவிட்டுக்கொண்டு, வாயாரப் பேசுகிறார்கள் பத்தி பத்தியாய், பக்கம் பக்கமாய் தங்களது பரவசத்தை.
எப்படி இது? என்ன மாயம் இது? என்ன மந்திரம் இது?
ஒவ்வொரு பெண்மணியும் உலக ஆதாயத்திற்காகவோ, உள் நோக்கத்திற்காகவோ வந்து இணைந்ததாய்த் தெரியவில்லை. மாறாய் இந்த இலக்கை எட்டவும், எட்டிய பின்பும் அவர்கள் சந்தித்த, சந்திக்கும் சவால்கள்தான் எக்கச்சக்கம். ஆனால் அந்த வலியைத் தாண்டி உவப்பு பெருகி நிற்கிறது அவர்களது உள்ளங்களில்.
அவர்கள் பாமரர்களாகவும் இல்லை. மிகப் பெரும்பாலானவர்கள் கல்வி அறிவில் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர்கள்! தாங்கள் முன்னர் சார்ந்திருந்த மதங்களில் தென்பட்ட இறைக் கொள்கை; அதன் முரண்பாடுகள்; உலக மாயை ஆகியவற்றுக்கான தீர்வு இந்த இயற்கை மார்க்கமான இஸ்லாமே; வணக்கத்திற்குரியவன் அந்த ஏக இறைவன் ஒருவனே என்று நன்கு ஆய்ந்துணர்ந்து முடிவெடுத்திருக்கிறார்கள் அவர்கள்.
ஏதோ ஓர் தருணம்; எவரோ ஒருவரின் செயல் அல்லது சொல் என்று சடாரென ஒரு தீப்பொறி இவர்களைப் பற்றி, ரசவாத மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இஸ்லாத்தைப் பற்றியும் குறிப்பாய் இஸ்லாத்தின் பெண்ணுரிமை பற்றியும் அவதூறு கிளப்பும் மேற்குலகின் அடுக்களையிலிருந்து வெளிவந்து ஒப்பனை கலைத்து நிற்கிறார்கள் இந்தப் பெண்மணிகள்.
அத்தகைய பெண்மணிகளின் இஸ்லாமியப் பயண அனுபவத்தை அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் அண்ணன் அதிரை அஹ்மது. சமரசம் பத்திரிகையில் தொடராக வெளியான இந்தக் கட்டுரைகளை IFT நிறுவனம் “பேறுபெற்ற பெண்மணிகள்” என்ற தலைப்பில் இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளார்கள்.
தூய மார்க்கம் எது என்ற தேடலில் இருப்பவர்களுக்கு மட்டும், பெண்களுக்கு மட்டும் என்று இந்தப் புத்தகத்தைச் சுருக்கிவிட முடியாது. முஸ்லிமான நம் அனைவருக்குமே அடிநாதமாய் இதில் ஒரு செய்தி ஒளிந்திருக்கிறது –
‘இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாம் வாழ்ந்தே தீர வேண்டும்.’
ஏன்?
பிறக்கும் ஒளி இருக்கிறதே அது தானாய் மற்றவரை பற்றிக் கொள்ளும்.
நூல்:
பேறு பெற்ற பெண்மணிகள் – பாகம் 1 – விலை INR 50.00
பேறு பெற்ற பெண்மணிகள் – பாகம் 2 – விலை INR 65.00
ஆசிரியர்: அதிரை அஹ்மத்
Islamic Foundation Trust (IFT) – Chennai
IFT Complex
138, Perambur High Road, Chennai – 600012.
Ph: 044-26621101
பேறு பெற்ற பெண்மணிகள் வாசிக்க வாசிக்க நம் மார்க்கத்தின் வலிமையை எண்ணி பெருமிதமும் இஸ்லாமியனாக வாழ்வதில் ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது.
சுவாரஸ்யமான நடையில் அசத்துகிறார்கள் காக்கா.
இஸ்லாத்தின் மகிமைக்கு நல்ல சான்று தரும் தொடர்!
ஜப்பானியர்கள் புத்த மதமென்று சொல்லிக்கொண்டு இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் விருப்பம்போல் வாழ்வதை பரவலாக காணலாம்.மேற்படி சகோதரியைப் போல இவர்களுக்கும் "தாவா" சென்றடைந்து ஈமானை பெறட்டுமாக! ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
சரியான வழிதடம் தெரியாமல் பரிதவிக்கும்.இது போன்ற சகோதர,சகோதரிகளுக்கு.வழிக்காட்ட அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் மார்க்க அறிவை தந்தருள்வானாக ஆமீன் ...
மாஷா அல்லாஹ்...
உள்ளத்திற்கு இதமளிக்கும் இது போன்ற உண்மைச்சம்பவக்கட்டுரைகள் தினம்,தினம் வெளியாகி ஏராளமானோர் மார்க்கத்திற்குள் அலைகடலென திரண்டு வந்து ஈருலகிலும் ஏற்றம் பெற வேண்டும்.....யா அல்லாஹ்!!!
அஸ்ஸலாமு அலைக்கும்,
பிறப்பிலும் வளர்ப்பிலும் முஸ்லீமாக இருக்கும் நாம், இஸ்லாத்தில் இணைந்த இது போன்ற சகோதர சகோதரிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்தாவது உணரவேண்டும். தாவாவில் ஆர்வம் செலுத்துவதற்கு இது போன்ற பதிவுகள் ஒரு உத்வேகத்தை தரும் என்று நம்பலாம்.
உண்மையிலேயே பேறு பெற்ற பெண்மணிதான்,அல்லாஹு அக்பர்
They have got ISLAM by choice
We have got ISLAM by chance
Post a Comment