Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-7 7

அதிரைநிருபர் பதிப்பகம் | February 19, 2012 | , , ,

மக்காவிலிருந்து மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்து வந்து சேர்ந்த சில மாதங்களுக்குப் பின், மக்காவாசிகளான ‘முஹாஜிர்’களைக் கொள்ளை நோயொன்று தாக்கிற்று மதீனாவில்! மக்காவின் வரட்சியான பருவ நிலைக்கு மாறான மதீனாவின் குளிர்-வரட்சி என்று மாறி வரும் பருவ நிலையால் பாதிக்கப்பட்டனர் மக்கத்திலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரையும் அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டாரையும் மதீனாவுக்கு அழைத்துவரச் செய்திருந்த புதிது அது.  கொள்ளை நோயால் பாதிப்படைந்தவர்களுள் அருமைத் தோழர்கள் அபூபக்ர் (ரலி), பிலால் (ரலி), ஆமிர் (ரலி) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பூப்படைந்து, அண்ணலார் (ஸல்) அவர்களுடன் இல்லறத்தில் இணைந்த தொடக்க நாட்கள் அவை.  அந்த மகிழ்ச்சியான சூழலில், அருமைத் தோழர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தது, அண்ணலாரை வாட்டியது.  எனவே, தம் மனைவியும் அபூபக்ரின் மகளுமான ஆயிஷாவைத் தோழர்களின் நிலையினை அறிந்து வருமாறு அனுப்பிவைத்தார்கள்.

விரைந்து சென்ற ஆயிஷா, தம் தந்தையிடம் சென்று, “எப்படி இருக்கிறீர்கள் என் தந்தையே?” என்று வினவியபோது, நோயின் கடுமையால் அவர்களின் மறுமொழி கீழ்க்காணும் கவிதையடிகளாக வெளிவந்தது:

كل امرى مصبح  في أهله
والموت أدنى من شراك نعله


இதன் தமிழ்க் கவியாக்கம் :

காலை வாழ்த்தில் உறவின ரோடு 
                கண்விழித் தெழுவோர் எல்லாரும் 
காலின் செருப்பு வாரினும் நெருங்கக்   
             காலன் இருப்பதை அறிவாரோ?

தந்தையாரின் மறுமொழியை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, அடுத்துக் கிடந்த அன்புத் தோழர் பிலாலின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார் ஆயிஷா. பிலாலோ, சற்றே நோயின் கடுமை தணிந்து, கவிதை பாடித் தம் இயலாமையைக் கூறிக் கொண்டிருந்தார்:

ألا ليت شعري  هل  أبيتن ليلة
بواد و حولي إذخر و جليل  
وهل أردن يوما مياه مجنة
وهل يبدون لي شامة و طفيل 

இதன் தமிழ்க் கவியாக்கம்:

கவிபாடும் என்திறமை எங்கே? என்றன்
               கண்ணயரும் நற்பேறும் உண்டோ அந்தக் 
கவினான மலைச்சாரல் புற்பூண் டின்மேல்? 
                    கனியின்பத் தெளிநீரைக் குடிப்பே னோயான்?
தவறாமல் மஜன்னாவைக் காண்பே னோயான்?
              சஅமாவும் தஃபீலென்னும் குன்றும் சேர்ந்து 
குவிகின்ற கணவாயில் நடப்பே னோயான்?
                        கொடுநோயின் வேதனையை என்னென் பேனே!
                                                                                                           (சஹீஹுல் புகாரீ – 3926)

செய்வதறியாமல் நின்றிருந்த ஆயிஷா (ரலி), அடுத்து ஒருவரில் அபயக் குரலைக் கேட்டு, அவர் பக்கம் திரும்பினார்.  அவர் ஆமிர் (ரலி) எனும் நபித்தோழர்.  அவரும்,

நுகரும் முன்னர் சாவுக்குள்
நுழைந்து விட்டேன் பாருங்கள்!
இகத்தை விரும்பும் கோழைக்கும்
இறப்பே உண்டு தலைமேலே!
மிகவும் வலிய எருதுகளும்
மீண்டே தொழுவம் நுழைதல்போல்
நிகழும் உலகின் மாந்தரெலாம்
நிலத்துள் ஒருநாள் நுழைவாரே!

என்று பாடினார்.
- முவத்தா இமாம் மாலிக், ஃபத்ஹுல் பாரீ, இப்னு இஸ்ஹாக் 

கவிதை என்பது உந்தி எழும் உணர்வின் வெளிப்பாடு.  அவ்வுணர்வு  மகிழ்வாகவோ, வியப்புக்குரியதாகவோ, வேதனையின் வெளிப்பாடாகவோ இருக்கலாம். இஸ்லாமிய வரலாற்றில் இதற்கான எடுத்துக்காட்டுகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் ஒரு சிறு துளிதான் இத்தொடரில் பதிவாகும் தகவல்கள்.


(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

-அதிரை அஹ்மது


7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//கவிதை என்பது உந்தி எழும் உணர்வின் வெளிப்பாடு.//
என்பது தான் மிகச்சரி. இதில் கசடு காண்பதெல்லாம் அறியாமை.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வேதனையால் வேர் ஊன்றிய கவிதைகள்.அஹமத் அப்பாவின்.(எ.க) கண்களை கலங்க செய்கின்றன.

sabeer.abushahruk said...

//மிகவும் வலிய எருதுகளும்
மீண்டே தொழுவம் நுழைதல்போல்//

எத்தனைத் தரமான உவமாணம்!!!

கவிதை எழுதுவதைவிட நல்ல கவிதைகளை வாசிப்பதுவே மிகவும் சுகமானது. நம் ரசூலுக்குப் பிடித்தவர்களும் அவர்களைச் சுற்றி இருந்தவர்களும்கூட கவிதை எழுதியிருக்கிறார்கள் என்பதும் அவை ஆதரபூர்வமானதாகக் கருதப்படும் கிதாபுகளில் பதிவாகியிருக்கிறது என்பதுவும் இஸ்லாத்தில் கவிதைகள் அனுமதிக்கப்படுள்ளன என வலிமையாகச் சொல்லிக்காட்டுகின்றன.

ஆராய்ச்சி தொடர, ஆரயும் காக்காவுக்காக என் து ஆ.

sabeer.abushahruk said...

//கவிதை என்பது உந்தி எழும் உணர்வின் வெளிப்பாடு.  அவ்வுணர்வு  மகிழ்வாகவோ, வியப்புக்குரியதாகவோ, வேதனையின் வெளிப்பாடாகவோ இருக்கலாம்.//

சரியாகச் சொன்னீர்கள் காக்கா.

தவிர, அத்தகைய நுட்பமான உணர்வுகளை கவிதையைத் தவிர மொழியின் வேறெந்த வடிவமும் என் போன்றவர்களுக்குத் தரவே முடியாது. கவிதையில் மட்டும்தான் சொல்ல வந்ததைச் சட்டென சொல்லி முடிக்கலாம். கவிதை வளவளக்காது, காகிதம் உண்ணாது, ஊர் சுற்றாது, அனுமானிக்கவும் ஆசுவாசப்படுத்தவும் நேரம் தராது.

எல்லாம் வேகம் வேகம் என்று மாறிப்போன காலத்தின் கட்டாயத்தில் கவிதைகள் மட்டுமே முழுதாக வாசிக்கப் படுகின்றன. மற்றவை நேரமில்லாததால் வாசிக்கப் படுவதில்லை அல்லது பத்திகளைத் தாவித் தாவி பார்த்து முடிக்கப்படுகின்றன.

மேலே சொன்னவை என் கருத்துகள். ஆதாரம் யாரும் கேடு விடாதீர்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

அறபு மொழியில் பாடப்பட்ட அக்கவிதைகட்கு உரையாகச் சொல்லாம்; எனினும், அக்கவிதைகளின் பொருட் சிதறாமல் அப்படியே உள்வாங்கி அடிபிறழா யாப்பிலக்கணம் தழுவி மரபுப்பாக்களாய் வடிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை அவ்வண்ணம் வடிப்பவர்கட்கே அனுபவ பூர்வமாக உணர முடியும். அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆசான் அஹ்மத் காக்கா அல்லாஹ்வின் பேரருளால் அத்தகு ஆற்றல் பெற்றிருப்பதும் அதன் மூலம் அவர்கள் உணரும் “சுகானுபவம்” எப்படிப் பட்டது என்றும் அடியேன் உணர்கின்றேன்; அவ்வழியில் ஈடுபாடு உடையோனாதலால், தேன் எப்படி இனிக்கும் என்றுத் தேனைக் குடித்தால் மட்டுமே உணர முடியும் என்பது போல்.

அஹ்மத் காக்கா அவர்களின் அறிவினால் நாம் பயன்பெறும் வண்ணம், அல்லாஹ் அருளால் நீண்ட ஆயுளும்; ஆரோக்யமும் கிடைக்கட்டுமாக(ஆமீன்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆய்வு இன்னும் தொடரனும், இன்ஷா அல்லாஹ்... !

KALAM SHAICK ABDUL KADER said...

ஆய்வுக் கட்டுரை முடிந்ததும் முழு நூலாக வெளியிட்டால் நாங்கள் படித்தும் பாதுகாத்தும் வைத்துக் கொள்வோம். எங்களின் கவிதையெனும் கப்பல் கரை சேர கலங்கரை விளக்கமாகும் இவ்விளக்கமான ஆய்வுக் கட்டுரை நூலுருவில் கையில் வைத்திருக்கும் காலம் வரைக்கும், இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு