நீங்கள் உங்கள் மனைவிக்கு ஆடையாகவும்,அவள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கவேண்டும் என்ற இறைவசனத்திற்கு ஏற்ப ஒருவர் மற்றவரின் மானத்திற்கு காப்பாளராக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் வாழ்வு சிறக்கும்.
அன்பு- இந்த வார்த்தைக்குத்தான் இன்று உலகம் ஏங்கி கிடக்கின்றது, பரபரப்பான இக்கால வாழ்க்கையில் இதனை நாம் செலுத்த தவறுவோமேயானால்,நாம் நடை பிணங்களாக வாழ்வதற்குச் சமம், குறைந்தளவிற்காவது நம் கணவனுக்கும் / மனைவிக்கும்,குழந்தைகளுக்கும் கொடுப்பது காலத்தின் கட்டாயம் இக்காலத் திருமணங்கள் உடைவதற்கு காரணமே, ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ளாமையும், அன்பை வளர்க்காமையும், விட்டுக்கொடுத்தல் குறைந்து போனதும்தான் காரணம் எனலாம்.
திருமணம் ஆகாதவள்/வன் ஒழுக்கக் கேட்டில் ஈடுபடுகிறாள்/ன் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாதெனினும் வயதைக்காட்டி நியாயப்படுத்தி ஒரு சாரார் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம் ஆனால் திருமணமான, பிள்ளைகள் பெற்றவள்/ன் ஒழுக்கம் தவறுகிறாள்/ன் என்றால் அதற்குக் காரணம் அவள்/ன் எதிர்பார்த்தது அவர்கள் வாழ்வில் கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது, என்றார் வள்ளுவர்.
கணவன் / மனைவிக்கிடையே எவ்வாறு நல்லுறவு பேணலாம் என்று என் சிற்றறிவுக்கு எட்டியதை இங்கு பகிரலாம் என்று விழைகின்றேன் இப்ப எல்லாம் ஸ்கூல் நினைப்பிலயே இருப்பதால், பாலூட்டிகளுக்கும்,முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் விலங்கினங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்து என்ற நோக்கில் எழுதி இருக்கின்றேன்
மனைவி | கணவன் |
உங்களின் துவா உடனடியாக பலனை ஏற்படுத்தவில்லையே என்ற ஏக்கமிருந்தாலும், அது நாட்டு மருந்துபோல் நாட்கள் கடந்து சிறுக சிறுக நல்ல பலன்களை தானாக அளிக்கும் இன்ஷா அல்லாஹ்!. ஆகவே, உங்களின் திருமண வழ்க்கை என்றும் வளமுடனும், சிறப்புடனும் அமைந்திட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள். | உங்களின் துவா உடனடியாக பலனை ஏற்படுத்தவில்லையே என்ற ஏக்கமிருந்தாலும், அது நாட்டு மருந்துபோல் நாட்கள் கடந்து சிறுக சிறுக நல்ல பலன்களை தானாக அளிக்கும் இன்ஷா அல்லாஹ்!. ஆகவே, உங்களின் திருமண வழ்க்கை என்றும் வளமுடனும், சிறப்புடனும் அமைந்திட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள். |
கணவனின் சொல் கேட்டு அவன் விருப்பு வெறுப்புகளின் படி நடங்கள், உணர்வுகளோடு ஒன்றோடு ஒன்றாக ஒட்டி உறவாடி நாட்கள் செல்லச் செல்ல அவரின் ‘கைப்புள்ள’யாகி உங்கள் அன்புக்கும், பாசத்துக்கும், அவர் சொல்வதை கேட்டு நடக்கும் பாங்கிற்கும் உரித்தவர்களாகி நீங்கள்தான் அவருக்கு எல்லாமே என்ற நிலைக்கு தானாக அவரை வென்றெடுக்க முடியும். | நம் சொற்பேச்சுகள் கேட்டு நம்மவள் நடக்கிறாளே என்று மனைவியை ஏளனமாக எண்ணி தவறான உதாரணங்களை ஏற்படுத்தி விடாதீர்கள். ஒருவேளை சில சந்தர்ப்பங்களில் மனைவி உங்களை கேட்காமல் அவர் விரும்பிய அல்லது நல்லதே என்று நினைத்து செய்த காரியங்களாக இருந்தாலும் கடுமை காட்டாமல் பெருந்தன்மையுடனும் அன்பாகவும், அவரால் ஜீரனித்துக் கொள்ளக்கூடிய அளவிற்கான சிறிது கண்டிப்புடனும் கூறுங்கள். ஹிட்லர் போல முடிவெடுத்தால் வாழ்க்கை ஜெர்மனியின் போர்க்களம் ஆகிவிடும். |
கணவனை நெருங்கியிருக்கும் சந்தர்ப்பங்கள் எல்லா வகையில் சந்தோசத்துடன் வைத்திருக்க முயலுங்கள், உங்கள் எண்ணங்களால், வசீகரத்தால், வார்த்தைகளால், சுவையான சமையலால், நகைச்சுவைகளால் - கணவன் உங்களுடைய சந்தோஷத்திற்கான திறவுகோல் என்பதை மறந்து விடாதீர்கள். | மனைவியின் மந்திரச் சொற்களுக்கு காது கொடுங்கள், மனைவியின் அழகை ரசியுங்கள், அவர் சமைத்த சமையலோடு வேறு சாப்பாட்டை ஒப்பீடு செய்யாமல் அதனை மனதார பாராட்டுங்கள், அந்த பாராட்டு உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வருவதையும் உணரவையுங்கள் ,நல்ல வார்த்தைகளைக் கூறினால் பாராட்டுங்கள், அழகிய பரிசுப் பொருட்களை பரிசளியுங்கள் (அவைகள் அவர் விரும்பும் சாயலைக் கண்டறிந்தே செய்யுங்கள்), அவ்வாறு செய்வதனால் அவர்களுக்கு அதிரையில் ஒரு மனைக்கட்டு வாங்கி இரண்டு வீடு கட்டிக் கொடுத்த சந்தோஷத்தில் இருப்பார்கள். |
சூடான விவாதங்களை முடிந்த அளவிற்கு தவிர்க்க முயலுங்கள். எந்த ஒரு சூடான பொருளும் நம் உடல் மீது கொட்டினால் துடிதுடித்து பதறுவதை உணர்ந்தவர்கள்தானே நாம், அந்த பாதிப்புகள் ஏற்படுத்துவதுபோல். சூடான விவாதமும் உங்கள் உறவில் ஒரு கரும்புள்ளியை உண்டாக்கிவிடும். தவறு கணவருடையதாக இருக்கும் பட்சத்திலும் ஒரு கொஞ்சும் முகத்துடன் ஓர் மன்னிப்பைk கோருங்கள். அதைவிடுத்து மாறாக சண்டையிட்டால் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகிவிடும்,எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறுங்கள். | மனைவி சூடான விவாதங்களை ஆரம்பிக்கும் போது, அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயலுங்கள், அதாவது அதன் பின்ன்னியை அறிந்து கொள்ள முயற்சியுங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது எப்போதும் பாராங்கல்லில் ஊற்றிய நீராக சிதறிவிடும். மனைவிக்கு அந்த விவாத்திற்கான விளக்கங்களை நிதானமாக கூறுங்கள். அதைவிடுத்து நான் தான் தலைவன் என்று தலைக்கனமாகதான் பேசுவேன் என்று தலைகீழாக நிற்காதீர்கள். அது வாழ்க்கையை தாறுமாறக்கிவிடும். உங்கள் பக்கம் தவறுகள் இருப்பின் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள் (அது வெளியில் தெரியாது, நல்ல மனைவி என்றும் உங்களை விட்டுக் கொடுக்கமாட்டார் யாரிடமும் காட்டிக் கொடுக்கவும் மாட்டார்) அதற்கு ஈகோ முன்னுக்கு நிற்கத் தேவையில்லை |
அவனளிக்கும் பாரட்டுக்களுக்கு நன்றி சொல்லுங்கள் | அவளளிக்கும் பாரட்டுக்களுக்கு நன்றி சொல்லுங்கள் |
உங்களுக்கும் உங்களின் கணவனுக்கும் எவ்வித ஒழிவுமறைவுகள் இல்லை அது நம் மார்க்கம் அனுமதித்த வரம்பிற்க்குள் உங்களை அங்கீகரித்து கொள்ளுங்கள், அழகிய ஆடைகள், சக்திக்கு ஏற்ற ஆபரணங்கள், சுண்டியிழுக்கும் நறுமணங்கள் கணவனுக்காக மட்டுமே என்ற இல்லற மரபாக அதனை இட்டுக்கொள்வதில் தப்பில்லை. அழுது வடியும் முகத்தை காண எந்த கணவனும் விரும்பமாட்டான், சபுராளிகளுக்கு “மாப்பிள்ளை வந்த பொண்ணு” என்ற சொல்லே அழகுதானே. | மனைவி உடுத்தியிருக்கும் எந்தவொரு நல்ல ஆடையானாலும் அதன் நேர்த்தியை பாராட்டுங்கள். பதனி குடித்த ஆடுபோல் நிற்காமல் மனைவியின் ஆடை அலங்காரங்களை ரசியுங்கள், அதன் அழகை மெச்சுங்கள், அன்பாக ஐஸ்கீரிமில் வைக்கப்பட்டு தரும் சாக்லெட டிப்ஸ்யைபோல் கொஞ்சம் அதிகமாக டீயூன் ஏத்தி அவளை மெச்சுங்கள்.. அது அவளை உங்களை நோக்கி வசப்படுத்தும், ஒவ்வொரு பெண்ணும் எதோ ஒரு வகையில் அழகானவளே. மாறாக அலங்காரத்தை கந்தூரி கூடு என்று கிண்டலிக்க முயற்சிக்காதீர்கள் |
கணவன் வெளியில் இருந்து வரும்போது இன்முகம் காட்டுங்கள், அவனுக்காக ஒரு காஃபி அல்லது டீ அல்லது வழக்கமாக விரும்பும் பதார்த்தங்களைத் தயாரித்து வைத்து காத்திருங்கள், கணவன் உங்கள் மேல் ‘தீ’யாய் பாசத்தைப் பொழிவான். | அவள் தயாரித்து கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அதனை அருந்திவிட்டு மெச்சாமல் இருந்தாலும் பரவாயில்லை, துச்சமாக எண்ணாதீர்கள், அவளின் அந்த உழைப்பிற்கு பின்னால் உள்ள அன்பையும், காதலையும்தான் மனசுல ஓட்டிப் பாருங்கள் நீங்கள்தான் மிகப்பெரிய ரசிகன், மனைவி தயாரித்து கொடுத்ததின் டேஸ்டை அல்ல (அப்படியென்றால் நீங்கள் சாப்பாட்டுப் பிரியர் மனைவி பிரியராக இருக்க மாட்டீர்கள்). |
ஒழுக்கத்துடனும்,மார்க்க பேணுதலுடனும், தங்கள் கணவனுக்கும் / குழந்தைகளுக்கும் வேண்டிய தொடர் கடமைகளைச் செய்யுங்கள், அதன் பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். | ஒழுக்கம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான், மனதளவிலும் மனைவிக்கு துரோகம் எண்ண வேண்டாம் – அது அல்லாஹ்வுக்கும் பிடிக்காத செயல். இல்லாள் செய்யும் வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் உங்களின் பங்கை உறுதி செய்யுங்கள் அதற்காக முடிந்த உதவிகளைச் செய்து பாருங்கள். அந்த உதவிக்கும் வேலைக்கும் நிறைய இன்க்ரிமெண்டோடு அளவு கடந்த அன்பிற்கும் நிச்சயம் பலன் உண்டு (உத்திரவாதம்). |
-முஹம்மது யாசிர்
31 Responses So Far:
திருமணம் பலருக்குச் சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்துவிடுவதை நம்மால் எண்ணிப் பார்க்காமலும், வருந்தாமலும் இருக்க முடியவில்லை.
‘தாயார், தகப்பனார் முகத்தில் நீ விழித்தால் நான் உன்னோடு வாழ மாட்டேன்’ என்று சபதமிட்டு, சபதத்தை நிறைவேற்றிய பெண்களும் உண்டு. இதனால் 'பெற்றோர்களை பேணி நடத்துங்கள்' என்ற அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே தூக்கி எறிந்து விடுகிறான் கணவன். அங்கேதான் இல்லாள், துணையால் என்றெல்லாம் வர்ணிக்கும் மனைவி சொல்லே மந்திரமாகி விடுகிறது. எத்தனைபேர்கள் தங்கள் பெற்றோர்களைப் பேணிப் பாதுகாக்கின்றனர்?... அதற்கேற்ப தங்கள் மனைவியை எப்படிப் பக்குவப் படுத்துகின்றனர்?...
கணவன் பொருள் தேடுகின்றான். மனைவி குடும்பத்தையும், குழந்தைகளையும் பராமரிக்கின்றாள். கணவனும் மனைவியும் மாறுபட்ட திசைகளில் வேறுபட்டவர்களாகப் போய்க் கொண்டு இருக்கின்றார்கள். இந்நிலையில் கணவனும் மனைவியும் எல்லா விஷயங்கலையும் ஒளிவு மறைவின்றி பேசிக்கொள்வது நல்லதா? இல்லையா? என்பதே பலரின் வாழ்க்கையில் கேள்விக்குறிகள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ. யாசிர் உங்களின் அட்டவணை புரிந்துக்கொள்ளாத ஜென்மங்களுக்கு நல்ல ஒரு வரைப்படம்.
// ஹிட்லர் போல முடிவெடுத்தால் வாழ்க்கை ஜெர்மனியின் போர்க்களம் ஆகிவிடும்.//
வெற்றி யாருக்கு? என்று சொல்ல மறந்துட்டியலே!
அவள் அன்பை அதிகப்படுத்த அருமையான சாக்லேட் அட்டவணை!
எம்.ஹெச்.ஜே.
// அவள் அன்பை அதிகப்படுத்த அருமையான சாக்லேட் அட்டவணை! //
உண்மையில் சகோ யாசிர் தந்த (சாக்) லேட்டுதான்.
Well done Yasir
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கணவன் - மனைவிக்கு நல்லதொரு ஆலோசனை!
இரு வேறு திசையில் இருந்து வந்தவர்கள்!
ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுத்து,
ஈகோவை தூற எறிந்து
வாழ்வதில் நிறைய நிம்மதியும்,
மகிழ்ச்சியும் இருக்கிறது.
//அப்படியென்றால் நீங்கள் சாப்பாட்டுப் பிரியர்//
அதிரையின் கனாக்காலம்...
ஒருவர் - சாப்பிட்டு முடித்ததும் அந்த சாப்பாட்டு தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாராம்... அப்போ அவரோடு வூட்டுக்கரவோ கேட்டாஹலாம்.. "என்னங்க சாப்ட தட்டையே உத்துப் பாத்துகிட்டு ஈக்கீஹ"ன்னு !
அதுக்கு அவரு... "அது ஒன்னுமில்லை நான் சாப்பிட்ட கஷ்டத்தைதானே இந்த தட்டுதானே பட்டிருக்கும்" என்றாராம்....
வூட்டுக்கரவொலும் சாதாரனமான ஆள் இல்லை "ஆமாங்க... இவ்வ்ளோ நால்லா ஆக்கிப் போட்டு இவருக்கு போய் இந்த மனுசி கொடுக்கிறாளேன்னு சொன்னது காதுல உலுவலையா ?" ன்னு கேட்டதும்..
எழுந்து ஓடினாராம் கை கழுவ !
இதனை சொல்லிக் காட்டியவர் சைலண்டாக பார்த்துக் கொண்டிருந்தால் நான் பொறுப்பல்ல....
தம்பி யாசி(ரு): தலைப்புக்கு நான் ரெடி நீங்க ரெடியா !?
//அவ்வாறு செய்வதனால் அவர்களின் அதிரையில் ஒரு மனைக்கட்டு வாங்கி இரண்டு வீடு கட்டிக் கொடுத்த சந்தோஷத்தில் அவர்கள் இருப்பார்கள்.//
தம்பி யாசிர்,
இந்த சந்தோஷமான உவமையின் தற்கால அதிரையின் குறைந்த மதிப்பீடு ஒரு கோடி ரூபாய்.
சகோ. யாசிரின் கட்டுரையை இன்னும் படிக்கவில்லை, இருப்பினும் என் ஆழமான கருத்தாக இங்கு இதை பதிய நினைக்கிறேன். "வாப்பா, உம்மா நல்லவங்களோ? கெட்டவங்களோ? ஆனால் உன்னை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி பேராக்கி, திருமணம் முறையே செய்து வைத்து வாழ்வில் பல இன்னல்களையும் தாண்டி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் அவர்களை பேணாத, பரிவுடன் பணிவிடை செய்யாத எந்த ஒரு ஆணும், பெண்ணும் நீர்க்குமிழி போல் அழிந்து போகும் இவ்வுலக வாழ்வில் தற்காலிகமாக மின்னலாம், ஜொலிக்கலாம் (நீர்க்குமிழி அது உடையும் முன் பல வண்ணத்தில் ஜொலிப்பதை நாமே பலமுறை கண்டிருக்கிறோம்) ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் இறைவன் பிள்ளைகள் மூலமோ அல்லது வீட்டிற்கு வரும் பரதேசி பண்ணாடை மருமகன் மூலமோ உடலாலோ அல்லது உள்ளத்தாலோ மெல்ல,மெல்ல சித்ரவதை செய்யப்பட்டு கேவலமாக சாவடிக்கப்படுவார்கள். மரணத்திற்குப்பின் கப்ரில் இறைவனுடைய வேதனைகள் அது தனி அத்தியாயம்.....இது வாழ்வில் கண்டுகொண்டிருக்கும் நிசர்சனம்.
பெத்தவங்களை மதிக்காமல் அவர்களை எதாவது ஒரு வகையில் சித்ரவதை செய்து வரும் எவர்க்கும் நாசம் உண்டாகட்டும், நாசம் உண்டாகட்டும், நாசம் உண்டாகட்டும். இப்படி எத்தனை பேர் அன்றாடம் பத்வா செய்து கொண்டிருக்கிறார்கள். இதையும் தாண்டி நீர் வாழ்வில் சந்தோசமாக, குதூகலத்துடன் கூடிக்குழாவ முடியுமா?
உம்மா வீட்டையும், பொண்டாட்டி வீட்டையும் இரு கண்கள் போல் பேணிப்பாதுகாக்க வேண்டும். ஒரு கண் மட்டும் போதும் இன்னொரு கண் தேவையில்லை என்று எண்ணி மற்றொரு கண்ணை தானே குருடாக்கிக்கொள்பவர்கள் பலபேர் உண்டு நம் ஊரில்.
சபை ஒழுங்கை கடைப்பிடித்து தாய்,தந்தையரை மதிக்காத மூடர்கள் மீது பீரங்கி போல் உள் மனதிலிருந்து வெளியாகும் பல கேடுகெட்ட இழிசொற்களையும், வசை சொற்களையும் கடுகாய் மென்று விழுங்கி இங்கே மெளனமாகின்றேன்....
அன்பு மருமக்களே!
கண்ணால் பார்த்தவன், பழகியவன் என்ற முறையில் நீங்கள் எழுதிய எல்லா வழிகாட்டுதல்களும்- நீங்கள் வாழ்வதை அடுத்தவர்களுக்கும் கடைப்பிடித்து வாழச்சொல்லி இருக்கிறீர்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
இறைவன் மேலும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் மற்றவர்க்கு உதாரணமாகவும் வாழ பெரும் கருணை செய்வனாகவும்.
எளிய எழுத்துநடைக்கு பாராட்டுக்கள்.
-இபுராஹீம் அன்சாரி
சமயங்களில் வீட்டுக்கு வந்த மருமகள் மாமியார்/மாமனாரை மதிக்காத சூழ்நிலை வரும்போது அந்த பெண்ணின் கணவனுக்கு மிகப்பெரிய ரோல் இருக்கிறது. பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்க....
இதில் துரதிஸ்டம் என்னவெனில் சம்பந்தப்பட்டவன் Always Missing.
யாசிர்...இன்னும் ஒரு முக்கியமான பாயின்ட். மனைவியிடம் சண்டை போடும் கணவன் ..தன் மகன்களை தனக்கு தெரியாமல் சண்டைக்காரனாகவே வளர்க்கிறார்கள்
சூப்பர் மிக அருமையாக அனுபவத்துடன் கோர்க்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்....யாசிர்
இந்த அட்டவணையை நகல் (நோட்டீஸ்) எடுத்து நம்மூரில் பல பெண்களின் கவனத்திற்க்கு எடுத்துச் செல்லலாமே?....
யாசிரு இப்பொ தான் முழுசாப்படிச்சேன் உங்கள் கட்டுரையை.
'சமையலுக்காக கீரை கட்டுகளை கொஞ்சம் வாங்கி கொடுத்து அதை நம் வீட்டுப்பெண்மணிகள் நல்ல கீரை, பூச்சிக்கீரை, காம்பு என தனித்தனியாக பிரித்தெடுத்து வேண்டியதை மட்டும் முறையே சுத்தம் செய்து நல்ல தேங்காய்ப்பூ/பால் இட்டு கமகமக்கும் நறுமணத்தில் சுடச்சுட சமைத்து பரிமாறியது' போல் இருக்கிறது உங்களின் மேற்கண்ட பாசத்திற்காக பிரித்து மேயும் அட்டவணை.
நிச்சயம் இதை பக்குவமாக வாழ்வில் கையாண்டால் வாழ்க்கை தத்தளிக்காது வசந்தமே வீசும் வாழ்நாட்கள் முழுவதும்.
சிலர் தன் பெற்றோர்கள் தனக்கு தீங்கு செய்து விட்டார்கள்/ துரோகம் செய்து விட்டார்கள் என்று எதை எதையோ காரணம் சொல்லி தானாகவோ அல்லது மனைவி சொல் கேட்டோ அவர்களை வாழ்வில் முற்றிலும் புறக்கணித்து அவர்களுக்கு வேண்டிய கடமைகளையும், பொறுப்புகளையும் செய்யாமல் தனியே கைவிட்டு விடுகின்றனர். அப்படி அவர்கள் (துரோகம்)செய்வதற்கு காரணம் என்ன? என யோசிக்க மறந்து விடுகிறான்/ள். அவர்களுக்கு இவனோ அல்லது இவனது மனைவியோ ஏதெனும் ஒரு வகையில்/வழியில் தீங்கிழைத்திருக்க வேண்டும். அதுவே அவர்களின் இந்த கடின முடிவுக்கு காரணமாக அமைந்திருக்கலாம். சும்மா யாரும் உனக்கு தீங்கிழைத்து விட மாட்டார்கள்.
'உலகில் நீ குதூகலமாக அதிராம்பட்டினத்தில் இருந்தாலும் சரி, அண்டார்ட்டிக்காவில் இருந்தாலும் சரி உனக்கு உலகை காட்ட காரணமாக இருந்த உன் பெற்றோர்களை மறந்து விடாதே. அருகில் இருந்து தான் அவர்களை உபசரிக்க முடியவில்லை. அவர்களின் அன்றாட வாழ்க்கைச்சக்கரம் சிக்கலின்றி நகர தேவையான செலவீனங்களுக்கு போதிய பணங்காசுகள் அனுப்பி வைக்க மறந்து விடாதே. 'என் புள்ளெ எங்கிருந்தாலும் நல்லா இருந்து அவனுக்கு ஆயிசப்போட்டு வக்கட்டும்' என்று அவர்கள் கேட்கும் து'ஆ உன் காதுகளுக்கு வந்தடையாமல் இருக்கலாம். அதற்கு உயரிய தகவல், தொடர்பு சாதனங்கள் தேவைப்படலாம். ஆனால் படைத்த இறைவனுக்கு இது எதுவும் தேவையில்லை. பாறைக்குள் இருக்கும் தேரைக்கு கூட தன் கருணையால் உணவளிக்கக்கூடியவனாக இருக்கின்றான் அவன்.
எனவே உலகை மதிப்பதற்கு முன் பெத்தவங்களை மதிக்க கத்துக்கிடனும். அப்பொழுது தான் வாழ்க்கை செக்கிழுப்பது போல் சங்கடமாக இல்லாமல் செழுமையாக நகரும்.....
'வாங்கய்யா நல்லபடியா பழவலாம்....நம்ம வாப்பா, உம்மாட்டெ' (பொண்டாட்டி ஒன்னும் டைவர்சு பண்ணிட மாட்டாய்யா பயப்புடாதிங்கைய்யா....)
அருமை சகோ. நூர் முஹம்மது அவர்கள் 'பெற்றோர்களை பேண' வேண்டி நல்ல தொரு கட்டுரை எழுதச்சொல்வார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் தாய், தந்தையரைப்பெற்றுள்ள ஒவ்வொருவரின் உள்ளத்திலிருந்து இயற்கையாகவே உருவாக வேண்டும். அல்லாஹ் அவர்களுக்கும், அவர்களின் பிள்ளைகளான நமக்கும் நல்லருள் புரிய வேண்டும்.
"நிறைய பேர் நம் ஊரில் பொண்டாட்டி வீட்டிற்கு கொட்டிக்கொடுத்து விட்டு உம்மா வீட்டிற்கு எதோ 2.5% ஏழை வரியான ஜக்காத் கொடுப்பது போல் கணக்கிட்டு மனைவி மூலமாகவோ அல்லது தானாகவோ சென்று வாப்பா, உம்மாவிற்கு கொடுத்து வருகிறார்கள்".
இவர்கள் பிறந்து வளர்ந்து நாளை பெற்றோர்களாகிய நமக்கு வேதனை செய்வார்கள் என்று முன்னரே அவர்கள் அறிந்திருந்தால் குழந்தை பிறந்த உடன் 'தொட்டில் குழந்தை' திட்டத்தின் மூலம் ஏதேனும் ஒரு தொட்டிலில் கட்டித்தொங்க விட்டு சென்றிருக்கலாம் அல்லது கருவிலேயே கலைத்திருக்கலாம் அல்லது பிறந்ததும் எதேனும் ஒரு குப்பை மேட்டில் யாருமறியா வண்ணம் இட்டுச்சென்றிருக்கலாம் அல்லது அதையும் தாண்டி 'பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தையின் சடலம் சாக்கடையில் கடந்த பரிதாபம்' என செய்தித்தாள்களில் கொட்டை எழுத்தில் வர வைத்திருக்கலாம். தூய பிள்ளைப்பாசத்தில் அப்படி எல்லாம் செய்யாத பெற்றோர்களை இன்று எப்படி எல்லாம் பிள்ளைகள் துன்புறத்த மனம் வருகிறதோ?
இங்கு தலைப்பிற்கும் என் கருத்திற்கும் சம்மந்தமே இல்லாததாக படிப்பவருக்கு தெரியலாம். ஆனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு மேற்கண்ட வரிகள் உள்ளத்தை உலுக்காமல் இருக்கப்போவதில்லை. ஊருக்கு சம்மந்தமான ஒன்றைத்தான் இப்படி அடிக்கடி வரிந்து கட்டிக்கொண்டு இங்கு எழுத வேண்டியுள்ளது.
யா! அல்லாஹ் என்னுடைய இறுதி எப்படி இருக்குமென்று எனக்கு தெரியவில்லை. என் பெற்றொர்கள் எவ்வித சிரமமின்றி இவ்வுலக வாழ்க்கையை நல்லபடி கழித்து சந்தோசமாக உன்னிடத்தில் வந்தடைய வேனும் இறுதியில். ஆமீன்......
யாசிரின் ஆக்கங்களிலேயே ரொம்ப ஆழமாக ஆராய்ந்தது இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு தேர்ந்த மனோதத்துவ நிபுணரின் எண்ணங்களைக் காண முடிகிறது. அத்துடன் அனுபவமும் சேர்ந்து விட்டபடியால் ஆக்கம் ஒரு முழுமையானதாகவேப் படுகிறது.
உளவியல் விடயங்களை ஆராய்ந்து நல்லது கெட்டதுவைச் சொல்வது ஒரு தலையாய சமூகச் சேவையாகும். எவ்வாறெனில், வீடு சிறந்தாலே நாடு சிறக்கும்.
வாழ்த்துகள் யாசிர். தொடர்ந்து எழுதுங்கள்.
//மனைவி மூலமாகவோ அல்லது தானாகவோ சென்று வாப்பா, உம்மாவிற்கு கொடுத்து வருகிறார்கள்//
ஒரு ரூபாயாக இருந்தாலும் உம்மாவுக்கு நேரிலோ நேரிடையாகவோக் கொடுப்பது மட்டுமே சிறந்தது. மனைவி மூலம் கொடுப்பதை வாங்கித்திண்ண எந்த உம்மாவும் விரும்புவதில்லை.
நெய்னாவின் சாட்டை நியாயமானது.
'பதனி குடிச்ச ஆடு' கற்பனை செய்து பார்த்தால் வெடிச்சிரிப்பு வருது.
படத்தில் காணும் பறவைகள் கவிதை.
யாசிர் மிக அருமையாக எழுதியிருக்கிறார் இந்த விசையம் எல்லாம் அதிரை மக்களுக்கு பொருந்தும். கணவன்,மனைவிக்கு உள்ள ஒற்றுமை பற்றி விளக்கம் தந்துள்ளீர்கள். ஆனால் ஒன்று தாய்,தகப்பனை யாரும் மதிப்பதில்லை கல்யாணம் பண்ணினால் எல்லாமே மனைவி தான் என்றல்லாம் எண்ணியுள்ளார்கள்.
மகனை பெற்ற தாய்,தகப்பன் எப்படி எல்லாம் கஷ்ட்டப்பட்டு வளர்த்தார்கள் என்றல்லாம் உணர்வதில்லை. கல்யாணம் முடித்து விட்டாலே மனைவிதான் என்று எண்ணி பெற்ற தாயும்,தகப்பனும் கிடையாது என்று ரொம்ப பேர் ஒதுங்கி விடுகிறார்கள். மனைவி என்பவள் கல்யாணம் முடித்த பிறகு வந்தவள். எந்த ஒரு பெண்ணை முடித்தாலும் மனைவி ஆகிவிடுவால் தாய்,தகப்பன் அப்படி கிடையாது எந்த மருமகள் வந்தாலும் கணவனுடைய தாய்,தகப்பன் ஏற்றுக்கொள்வார்கள்.
பெற்ற மகன் தாயையும்,தகப்பனையும் மறந்து விட்டு மனைவியோடு போகிறானே அவனே என்ன சொல்வது. கல்யாணம் பண்ணுனா அவனுக்கு தாயைவிட மனைவிதான் உயர்ந்தவள் என்று எண்ணுகிறான். அப்படி உள்ளவன் பெற்ற தாயையும்,தகப்பனையும் அறியாதவனாகவும்,புரியாதவனதாகவும் இருப்பான். எவ்வளவு பண்ணுனாலும் தாயையும்,தகப்பனையும் குறை கூறிக்கொண்டுதான் இருப்பான் மனைவிக்கு வக்காலத்து வாங்கி தாய்,தகப்பனை பெற்ற மகன் திட்டுவான்.
மனைவியோட சந்தோசமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருங்கள் எப்போவும் தாய்,தகப்பனை மறந்து விடாதீர்கள்.
ஒரு சில பேர் உம்மாவிற்கு பணம் அனுப்புவதில்லை கட்டின மனைவிக்கே அனுப்பி விட்டு மகனை பெற்ற தாய்க்கு கொடுக்க சொல்கிறார்கள். இதில் எந்த விதத்தில் ஞாயம் உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். அதிலும் பெற்ற தாய்,தகப்பனுக்கு கணக்கு பார்த்து கொடுக்கிறார்கள் நாம் சற்று சிந்திக்க வேண்டும்.
இதிலே பொறந்த வீடா,புகுந்த வீடா என்று யாசிர் அவர்கள் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
பட்டியல் சொல்வதோ எப்படி நடந்து கொள்வது, வாழ்வின் எதிர்போராட்டங்களை எப்படி வெல்வது என்பதே....!
அதனையொட்டி தாய் தந்தையரை முன்னிருத்தி எழும் பிரச்சினைகளை கருத்தாய்வில் MSM(n) மற்றும் நூர் முஹம்மது காக்கா அவர்கள் இருவரின் கருத்துக்கள் குழம்பியிருக்கும் ஆண்/பெண் மக்கள் மீது பாய்ந்த ஏவுகனைகள் !
தனி மின்னஞ்சலில் மாற்றுமத சகோதரி ஒருவர் எடுத்துச் சொன்னது, சம்பாதிக்கும் ஆண்மக்களை மட்டுமே முன்னிருத்தி சாடல்கள் தொடர்கிறது இங்கே... ஏன் பெண்கள் தங்களது தாய் தந்தையரை உதாசீனப்படுத்துவதில்லையா ? அவர்களும் இதில் உள்ளடக்கம்தான் என்ற வாதத்தையும் வைத்திருக்கிறார். இந்தப் பதிவு எல்லோருக்கும் பொதுவானது அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் என்றும் அவரின் கருத்தினை பதிந்து இருக்கிறார்.
கருத்துக்கள் உற்சாகமளிக்கின்றன..thanks அதே சமயம் நான் தாய் தந்தையரை குறிப்பிடாமல் விட்டதுபோல் ஒரு உணர்வை இக்கருத்துக்கள் எனக்கு ஏற்படுத்துக்கின்றன...இங்கு எழுத விழைந்தது கணவன் - மனைவி எப்படி வாழலாம் என்பதை பற்றிதான்...நபிஆதமும் ஹவ்வாவும் கணவன் -மனைவியாகத்தான் உலகத்திற்க்கு அனுப்பட்டார்கள் தவிர வாப்பா-உம்மாவாக இல்லை..முதல் கோணலை சரிசெய்தால் எல்லாமே தானாக சரியாகும் என்ற வகையில் எழுதப்பட்டதுதான் இக்கட்டுரை.முதலில் வாப்பாவும் உம்மாவும் கணவன் மனைவிதான் அப்பறம்தான் அவர்கள் வாப்பா-உம்மா ஆவது அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து சந்ததிகளை வளர்த்தால்தான்,அப்பிள்ளைகள் பெரும்பேறுபெற்று சிறப்புடன் வாழ்ந்து,பெற்றோரையும் பேணும் அவர்களின் தேவைகளை குறிப்பறிந்து செய்யும்…அதனை விடுத்து கணவன் மனைவியாகிய வாப்பா உம்மா டெய்லி சத்தம் போட்டுக்கொண்டு அன்பை காதலை மறந்து அடிக்கடி காட்டுகத்து கத்திக்கொண்டே வாழ்ந்துவந்தால்….பிள்ளை கடல்கத்து கத்துவனாக வளருவான்/ள்…..சுரைக்கா விதையை முளைக்க போட்டுவிட்டு ஆப்பிள் காய்க்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது ஆட்டிசம் (அல்லாஹ் நம் சந்ததிகளை பாதுகாப்பனாக) பாதித்த குழந்தைகளுக்கு கூட தெரியும்
//பொறந்த வீடா,புகுந்த வீடா என்று// நான் எழுத ரெடி நீங்க படிக்க ரெடியா
//வெற்றி யாருக்கு? என்று சொல்ல மறந்துட்டியலே!// சகோதரே...சண்டை எந்த நேரத்தில் (பகல்/இரவு) என்று சொன்னால் நான் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஈசியாக சொல்லிவிடுவேன் ( no string attached ):)
//Noor Mohamed சொன்னது…// உங்களைபோன்ற மேதைகள என் கட்டுரையை படிப்பதே...எனக்கு அவார்ட் கிடைத்தது போன்றது காக்கா...
//இந்த சந்தோஷமான உவமையின் தற்கால அதிரையின் குறைந்த மதிப்பீடு ஒரு கோடி ரூபாய்.// இதுதான் நம்மூரின் அவலம்....வெர்ச்சுவல் மனைதானே காக்கா...பிசிக்கலி இல்லை :)
//...நபிஆதமும் ஹவ்வாவும் கணவன் -மனைவியாகத்தான் உலகத்திற்க்கு அனுப்பட்டார்கள் தவிர வாப்பா-உம்மாவாக இல்லை///
சிறப்பான ஏற்புரை. பகல்ல எழுதியிருக்க வாய்ப்பில்லை. ஐ மீன், இப்பதானே எழுதியிருக்கீங்க அதான் சொல்றேன்.
-இப்படிக்கும் தோற்பவன்
பெற்றோர்களை குறிப்பாக தாயை பற்றி எழதவேண்டும்..ஆனால் அது கொஞ்சம் சென்சிடிவ்வான தலைப்பு...தாயின் காலடியில் சொர்க்கம் தாயின் அன்பையும்,பாசத்தையும் எழுத முயலும் நாம் சில தாய்களின் விதாண்டவிதமான நடத்தைகளையும் வீண்பிடிவாதம் செய்வதும் எழுதப்பட வேண்டும்....
சிறு தவறு செய்து காலில் விழாத குறையாக மகன்/ள் மன்னிக்க கெஞ்சியும்...வரட்டு கவுரவத்தால் மனதை கல்லாக்கி கொண்டு தாய் என்ற சொல்லுக்கே இழுக்காய் வாழும் தாய்களையும் குறிப்பிட வேண்டும்....
மன்னிப்பவர்தான் உயர்ந்தவர் என்ற இறைவாக்கை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்
தன் பெற்ற ஒருவரிடம் இருந்து பொருள் பறித்து தன் பெற்ற இன்னொருவருக்கு சேர்க்க நினைக்கும் அவலம் உரித்துக்காடடப்படவேண்டும்
மனைவி கையைப்பார்ப்பாள் ,அம்மா வயிற்றை பார்ப்பாள் என்ற திப்பு சுல்தான் காலத்து வசனங்கள் பொய்யாகிகொண்டு வருக்கின்றதோ என்ற மாயை விளக்கபடவேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
//சகோதரே...சண்டை எந்த நேரத்தில் (பகல்/இரவு) என்று சொன்னால் நான் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஈசியாக சொல்லிவிடுவேன் ( no string attached ):) //
சகோ.யாசிர் இரவு 12 :59.க்கோ அல்லது நடு நிசி 1:00.மணிக்கோ ஜெர்மனியின் போர்க்களம் ஆனால் அங்கே ஜெய்ப்பது கூடவே இருந்து குழி பறிக்கக் கூடிய சைத்தான்.
//வெற்றி யாருக்கு? என்று சொல்ல மறந்துட்டியலே!// சகோதரே...சண்டை எந்த நேரத்தில் (பகல்/இரவு) என்று சொன்னால் நான் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஈசியாக சொல்லிவிடுவேன் ( no string attached ):)
அனுபவத்தை ரசித்தேன்......well done brother.
எல்ளோரும் படிக்க வேன்டிய ஆக்கம்
Post a Comment