Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அடிப்படை தேவைகளுக்கு ஆலாய்பறக்கும் அவலம்... 31

அதிரைநிருபர் பதிப்பகம் | February 16, 2012 | , , , , ,


அதிராம்பட்டினம் பேரூராட்சி ( பேருக்கு ஊராட்சி?) அறிவிப்பு என்று ஒரு அறிவிப்பை வலைதளத்தில் படிக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டது. அதன்படி மின்சார வெட்டின் காரணமாக இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அதன்படி ஊரார் தங்களது தேவைகளை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ சொல்லத்துடிக்குதடா நெஞ்சம் –வெறும் சோத்துக்கும் வந்ததிந்த பஞ்சம் “ – என்று எங்கோ யாரோ பாடியதை கேட்டு இருக்கிறோம். இன்றோ “ கூறத்துடிக்குதடா நெஞ்சம் இந்த குடிநீருக்கும் வந்ததடா பஞ்சம்” என்றுதான் பாடவேண்டி இருக்கிறது.

என்ன குறை?

தண்ணீருக்கும்,மின்சாரத்துக்கும் அல்லாடவேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தது.?

"காவிரி தென்பெண்ணை பாலாறு –தமிழ்
கண்டதோர் வைகை பொதிகை நதி – என
மேவிய ஆறுகள் பல ஓட –திரு
மேனி செழித்த தமிழ்நாடு “

என்று திருவாளர்கள் சிங்காரம்பிள்ளையும், தாமஸ், இராமதாஸ் ஆகிய தமிழ் ஆசிரியர்களும் பாடம் நடத்தி படித்து இருக்கிறோமே அப்படி எல்லாம் வளங்கள் இருந்தும் அவைகள் வகையாய் நிர்வகிக்கப்படாமல்தானே  (RESOURCES MANAGEMENT) இப்படி அவலநிலைகள் ஏற்படுகின்றன என்று மனநிலை சரியில்லாதவர் கூட கேட்பார். 

ஏன் இந்த நிலை? இதுதான் கதை.

சமீபத்தில் தமிழக அரசு புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக 5995 கோடி ஒதுக்கி அறிவித்தது. அதன் பிறகு இதுவரை மின் உற்பத்தியில் இருந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தங்களது மின் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால் இழப்பு 988 மெகாவாட் மின்சாரமாகும். சொல்லப்பட்ட காரணம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை தராமல் புதிய திட்டங்களுக்கு பணம் ஒதுக்கியதை கண்டித்து என்பதாகும். தனியார் ஒன்று கூடி அரசை நிர்ப்பந்தப்படுத்த எடுத்த ஆயுதம்.

இதன்படி ஜி. எம். ஆர் 196 மெகாவாட், பிள்ளைப்பெருமாள் நல்லூர் 330 மெகாவாட், மதுரை பவர் 106 மெகாவாட், சாமல்பட்டி 105  மெகாவாட் ஆகியவை உற்பத்தியை நிறுத்திவிட்டு பழைய மளிகை பாக்கியை தந்தால்தான் மீண்டும் உற்பத்தி தொடங்க முடியும் என்று அலியார் காக்கா கடை ஸ்டைலில் (இப்போதும் இருக்கிறதா?) அடம் பிடித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்துமே அரசியல் செல்வாக்கு உடையவர்களுடையதுதான். கடந்த ஆண்டுகளில் இதன் மூலம் 250 கோடி ரூபாய் வரை இலாபம் பார்த்தவைகள்தான்.  நெய்வேலியில் இருந்து மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. கூடங்குளம் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறது. அரசுகளின் திட்டமிடலுக்கு ஏற்பட்ட அண்மைக்கால அவமானம் தரும் உதாரணம்.

அதுமட்டுமல்ல,

தமிழ்நாட்டில் உள்ள 14 அணைகளில் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சரிவர தூர்வாரப்பட்டால் அதன்பின் அதிகரிக்கும் நீர் கொள்ளளவை வைத்து 2000  மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இன்றோ வெறும் 800  மெகாவாட் மட்டுமே தயாரிக்க முடிகிறது. ஆகவே இருக்கிற மூலவளங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமை (LACK OF PROPER UTILIZATION OF RESOURCES) யும் அரசுத்தரப்பை நோக்கி நம் விரலை நீட்டச்செய்கின்றது.

அத்துடன் மூலவளங்களை பயன்படுத்துவதில் முன்னுரிமை அளிப்பது. நம்மிடம் 100 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நமது கடையில் சில சாமான்கள் வாங்கிப்போட வேண்டும், பசிக்கிறது-  சாப்பிடவேண்டும், தையல் கடையில் தைக்ககொடுத்த துணி தயாராக இருக்கிறது அதை வாங்க வேண்டும், ஒரு சர்கஸ் பார்க்க வேண்டும் என்று ரெம்ப நாளாக ஆசை இன்றுடன் அந்த சர்கஸ் கடைசி என்று வேறு போட்டிருக்கிறான். நாம் என்ன செய்வோம்? எந்த செலவுக்கு முக்கியத்துவம் தருவோம்? இருப்பதோ 100 ரூபாய்தான். இதைத்தான் நிர்வாகத்தில் PRIORITIZE  - முன்னுரிமைப்படுத்துதல் என்று சொல்வார்கள். இருக்கிற மின்சாரத்தை தொழில்சாலைகளுக்கு, விவசாயத்துக்கு, சமுதாய வாழ்வுக்கு, பொழுதுபோக்குக்கு என்று பயன்படுத்துவதில் முன்னுரிமைப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (PRIORITIZE THE UTILIZATION OF RESOURCES).

அப்படியானால் என்ன செய்யலாம் . பொழுதுபோக்கு தலையில் கைவைக்க வேண்டியதுதான்.

இன்று தமிழகம் முழுதும் ஏறக்குறைய 2 கோடி தொலைக்காட்சிப்பெட்டிகள் இருப்பதாக ஒரு கணக்கு. இந்த தொலைக்காட்சிப்பெட்டிகள் ஒன்றுக்கு 100 வாட் மின்சாரம் என்று வைத்துக்கொண்டாலும் 2000 மெகாவாட் செலவாகிறது. மின்சார நிலை சீர்பெறுகிறவரை தொலைக்காட்சிப்பெட்டிகளை குறிப்பிட்ட நேரங்களுக்காவது  பயன்படுத்தக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு விதிப்பதைப்பற்றி அரசு பரிசீலிக்கலாம்.  குடிக்கவே தண்ணீர் இல்லை படுக்க பஞ்சு மெத்தை வேண்டுமா? அரசு அப்படி கட்டுப்பாடு விதிக்குமா ? ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி, உளுத்த கட்சி, பாசகட்சி, படுத்தகட்சி, தளர்ந்த கட்சி, தள்ளாடும் கட்சி இப்படி எல்லாகட்சிகளுமே தங்களுக்கென்று தனி தொலைக்காட்சிகளை (தொல்லைக்காட்சிகளை?) வைத்து விளம்பரத்தில் இலாபம் சம்பாதிக்கும் நிலையில் இது நடக்குமா? இதை அமுல்படுத்த யாருக்கும் தைரியம் உண்டா?

“அடிக்கிற தண்ணிக்கு அங்கங்கே கடை இருக்கு
குடிக்கிற தண்ணிக்கோ குடமெல்லாம் தவமிருக்கு”

என்று ஒரு கவிஞன் புலம்புகிறான். இன்று குடிநீரை முறை வைத்து விடவேண்டுமென்று திட்டம் தீட்டுபவர்கள், ஊர் முழுதும் பரவிக்கிடக்கும் மதுக்கடைகளையும், அத்துடன் இணைந்த பார்களையும், இரவு களியாட்டங்கள் நடத்தும் விடுதிகளையும், சூதாட்ட விடுதிகளையும் குறைந்தபட்சம் இரண்டாவது காட்சி திரைப்படத்தையும் மின்சாரநிலையை காரணம் காட்டி மூடுவார்களா?   

வளைகுடா நாடுகளில் காவிரியோ, தென்பெண்ணையோ, பாலாறோ, வைகையோ ஓடவில்லை. ஆனாலும் அடிப்படைதேவைகளான தண்ணீருக்கும் ,மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு என்பதே தெரியாமல் மூலவளங்களின் நிர்வாகம் கோலோச்சுகிறது. பாலைவனத்தில் இல்லாத பஞ்சம் பாலாறு ஓடும நாடுகளில், வற்றாத ஜீவனதிகள் பாயும் நாடுகளில் வரக்காரணம் மிக மிக மோசமான நிர்வாகம்தான். (LACK OF RESOURCES MANAGEMENT). என்பதை அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் கூட ஒப்புக்கொள்வார்கள்.

நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் மக்களின் அடிப்படை இன்றியமையா தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்சாட்டுகளை ஏவிவிட்டு, இருக்கும் மூலவளங்களையும்  காலி செய்கிறோம். மண்ணில் இருக்கிறவன் குடிக்க தண்ணீர் இல்லாமலும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க மின்சாரம் இல்லாமலும் சாகக்கிடக்கிறான் சந்திரனுக்கு ஆள் அனுப்புவது அவசியமா? “கும்பி உருகுது! குடல் கருகுது! குளு குளு ஊட்டி ஒரு கேடா?” என்று அறுபதுகளில் ஒரு ஆட்சித்தலைவரைப்பார்த்து ஒரு அரசியல் தலைவர் கேட்டார். இன்றுவரை இதற்கு மாற்றம் உண்டா? குறைந்தபட்ச தேவையான குடிதண்ணீர் கூட தரமுடியாத அரசுகள் வேறு என்ன தந்துவிடும்? விளக்கெரிக்க மின்சாரம் இல்லை வெறும் வார்த்தைகள் வல்லரசு ஆக்கிவிடுமா?

-இபுராஹீம் அன்சாரி

31 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா, அழுத்தமான ஆதங்கம், ஒவ்வொருவரின் உணர்வுகளை சமுதாய அக்கறையுடன் வடிக்கப்பட்ட வார்ப்பு / பட்டவனுக்கு இது ஈட்டி !

மாஷா அல்லாஹ் !

அரசியல் செய்றவய்ங்களுக்கு புரியனுமே...

ஏனுங்கடா.. அம்மாவையோ, தாத்தாவையோ, ஐயாவையோ, மருத்துவரையோ, கேப்டனையோ எவனாவது விமர்சிச்சா கல்லெறியிறீங்க, ஆளையே காலி செய்றீங்க.. இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யவிடாம ஒரு கூட்டத்திற்கு பய்ந்துகிட்டு, கிடைக்கிறதையும் கிடைக்காம கெடக்கே இதுக்கு ஏதாவது செய்தாதால் என்னவாம் ?

அந்த அரசியல் செய்ய ஒரு கட்சி வரனுமா ?

என்ன வளம் இல்லை இந்தியத் திருநாட்டில்...
எல்லா அவலமும் அருகில் இருந்து புதைக்கிறது.. அவைகளை !

தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுத்து அந்த மினாசாரத்தை கொண்டு தண்ணீர் பெற முடியாத அவலம் !

N. Fath huddeen said...

“அடிக்கிற தண்ணிக்கு அங்கங்கே கடை இருக்கு
குடிக்கிற தண்ணிக்கோ குடமெல்லாம் தவமிருக்கு”

உண்மை உரைத்தீர்!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// வளைகுடா நாடுகளில் காவிரியோ, தென்பெண்ணையோ, பாலாறோ, வைகையோ ஓடவில்லை. ஆனாலும் அடிப்படைதேவைகளான தண்ணீருக்கும் ,மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு என்பதே தெரியாமல் மூலவளங்களின் நிர்வாகம் கோலோச்சுகிறது. பாலைவனத்தில் இல்லாத பஞ்சம் பாலாறு ஓடும நாடுகளில், வற்றாத ஜீவனதிகள் பாயும் நாடுகளில் வரக்காரணம் மிக மிக மோசமான நிர்வாகம்தான். (LACK OF RESOURCES MANAGEMENT). என்பதை அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் கூட ஒப்புக்கொள்வார்கள்.//

இபுராஹீம் அன்சாரி காக்கா உங்களுடைய வார்த்தை சாக் 2500மெகாவாட் க்கு சமம். அரசியல் வாதிகளுக்கு ஒலி(அடி)க்குமா ?

ZAKIR HUSSAIN said...

Please forward this article to Tamilnadu Secretariat in Chennai. This can help some of the planning officers [ I A S ] to help them in future planning of Tamilnadu developments.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மரியாதைகுறிய இப்றாஹிம் அன்சாரி காக்கா,

காலத்திற்கேற்ற அற்புதமான பதிவு,

//“அடிக்கிற தண்ணிக்கு அங்கங்கே கடை இருக்கு
குடிக்கிற தண்ணிக்கோ குடமெல்லாம் தவமிருக்கு”//

ஆட்சி நடத்துபவர்களே தண்ணி அடித்தவன் போல் நடப்பதால் என்னத்த காக்க சொல்றது.

எலக்சன் நேரத்துல சாய்ந்த பக்கம் சாய்கிற செம்மெறி ஆட்டுக்கூட்டமாகவே உள்ளனர் நம் மக்கள் என்பது மட்டும் என்னவோ உண்மைதானே காக்கா..

சினிமாகார திராவிட அரசியல் என்று மாறுமோ அன்று தான் தமிழகம் உருப்பட வாய்ப்பிருக்கும் போல் தெரிகிறது.

உங்கள் வேதனையில் நானும் பங்குபோடுகிறேன் காக்கா..

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தெளிவான, எளிமையானா பதிவு!

ஆனால் இதெல்லாம் தெறியாமலா இருக்கின்றது அரசாங்கத்திற்கு? எங்கு நோக்கின்டினும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்! நேர்மையற்ற ஆட்சியாளர்கள்! எச்சிச் சோறு இலவசங்களுக்காய் ஏங்கிக்கிடக்கும் மக்கள்!
திருடன் கையில் சாவியைக் கொடுத்துவிட்டு அதைக் கண்கானிக்க திருடனை நியமித்தால் என்ன நிலையோ அதே நிலைதான் இன்று ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் உள்ள நிலை!
புரட்சிகர மாற்றம் ஒன்றே தீர்வாய் அமையும்.
அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!

உங்களின் இப்பதிவு அனைவரின் உள்ளங்களையும் திறக்க இறைவனிடன் பிராத்தித்தவனாக..

அபு ஈசா

Yasir said...

அழுத்தம் திருத்தமான பதிவு..கவலையளிக்கும் செய்திகள் அதற்க்கான தீர்வுகள்....ஜாஹிர் காக்கா சொல்வதுபோல்....அரசுக்கு அவசியம் அனுப்பவேண்டிய பதிவு....

ஊரில் 1 அல்லது 2 மணிநேரம்தான் கரெண்ட் உள்ளதாம்..

இதனால் ஒரே ஒரு நன்மை மாமா..சிரியல் பார்க்கும் கூட்டத்தின் பொளப்புதான் சிரிப்பா சிரிக்கிறதாம்..நிறையபேர் சிரியல் பார்க்க முடியாமல் மனச்சிதைவுக்கு ஆளாகுவதாவும் கேள்வி

சேக்கனா M. நிஜாம் said...

விழிப்புணர்வு பதிவு ! வாழ்த்துகள் சகோ. இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு,

அதிரைப்பட்டினத்தில் ஏறக்குறைய 250 மின்கம்பங்கள் உள்ளன. ஒரு மின்கம்பத்திற்கு தினமும் தேவைப்படும் மின்சார அளவு 32KV, என்றால் ஆகக்கூடுதல் 8000 KV நாள் ஒன்றுக்கு தேவையாக உள்ளது.

நமதூரில் தினமும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை குறையாமல் அறிவிக்கப்படாத மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வுகள் எழுதத் தயாராகும் மாணவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, குழந்தைகளுக்கு, வயோதியர்களுக்கு, தொழிற்நிறுவனங்களுக்கு, வணிகர்களுக்கு, கல்லூரி, பள்ளிகள், மஸ்ஜித்கள், மதரஸாக்கள் போன்றவைகளுக்கு பாதிப்புகள் ஏராளம்.

இது மிகவும் வேதனைக்குரியது.......................கண்டிக்கத்தக்கது.................................

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Yasir சொன்னது…
இதனால் ஒரே ஒரு நன்மை மாமா..சிரியல் பார்க்கும் கூட்டத்தின் பொளப்புதான் சிரிப்பா சிரிக்கிறதாம்..நிறையபேர் சிரியல் பார்க்க முடியாமல் மனச்சிதைவுக்கு ஆளாகுவதாவும் கேள்வி //


கரண்ட் இல்லை என்பது வேதனை...

மனச்சிதைக்கு ஆளாகிறார்கள் என்பது மிகவும் வேதனை...

ஏதோ நன்மை நடந்தால் சரி என்று சொல்லாமல் இருக்கமுடியவில்லை யாசிரே...

Unknown said...

தேர்வு நெருங்கும் நேரத்தில் கரண்ட் கட் மாணவர்களை மிகவும் பாதித்துள்ளதாக கூறப் படுகிறது. மாணவர்கள் வெகுண்டெழுந்தால் தாங்காது என்பது இவர்களுக்கு தெரியவில்லை....

சிறு வயதில் அரிக்கன் லைட்டை ஈ பி ஆஃபீசுக்கு எடுத்து சென்று போராடி வெற்றி பெற்றோம். அதுபோல் தற்போது மாணவர்கள் என்ன செய்வதாக உத்தேசம்.

Noor Mohamed said...

//“கும்பி உருகுது! குடல் கருகுது! குளு குளு ஊட்டி ஒரு கேடா?” என்று அறுபதுகளில் ஒரு ஆட்சித்தலைவரைப்பார்த்து ஒரு அரசியல் தலைவர் கேட்டார். இன்றுவரை இதற்கு மாற்றம் உண்டா?//

காக்கா, இதற்கு மாற்றம் தேவை என்றுதானே அன்றே 67 ல் ஆட்சியையே மாற்றி அமைத்தோம். ஏழைப் பங்காளனுக்கு எங்கள் ஒட்டு என்று சினிமாக்காரனை காட்டி ஓட்டு வாங்கி ஒய்யாரத்தில் அமர்த்தினோம். அன்றைக்கு பிடித்த சனியன் இன்று வரை தொலையவில்லையே!

மாற்று அணி தேவை எனத் தேடினால், அதுவும் சினிமாக்காரன் தலைமையில்தான் அமைகிறது. இது தமிழகத்திற்கு கிடைத்த சாபக்கேடு!!

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களின் அடிப்படைத்தேவைக்கு ஆலாய் பறக்கும் அவலம் உண்மையில் வேதனையின் உச்சகட்டம்.

1) பன்னாட்டு கம்பெனிகளுக்கும், அனைத்து விஐபிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறதாம்.

2) மக்களைப் பற்றி கவலைப்படாதவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம்.

3) ///மின்சாரத்தை தொழில்சாலைகளுக்கு, விவசாயத்துக்கு, சமுதாய வாழ்வுக்கு, பொழுதுபோக்குக்கு என்று பயன்படுத்துவதில் முன்னுரிமைப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (PRIORITIZE THE UTILIZATION OF RESOURCES).//// இப்படியும் வரிசைப்படுத்தலாம்.

4)ஒவ்வொரு ஊரிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மக்கள் மின்சார நிலையத்தை முற்றுகையிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

5) என் நண்பர் ஒருவர் சொன்னது அவர் ஊரில் (முன்பு நடந்தது) மின் வெட்டு தொடர்ந்து இருந்து வந்ததால் ஊர் மக்கள் அனைவரும் மின்சார நிலையத்தின் மரங்களில் தங்களின் பிள்ளைகளுக்கு தொட்டிலை கட்டி வீடுகளில் மின்சாரம் இல்லாததால் எங்களால் அவர்களை தூங்க வைக்க முடியவில்லை. அதனால் மின்சார நிலைய ஊழியர்களே பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு போய்விட்டார்களாம். பிள்ளைகளின் அலறல் சத்தம் கலெக்டர் வரை சென்று சமாதானம் கிடைத்து மின்வெட்டும் வாபஸாம்.

6) அதிரையில் இன்னும் போராட்டம் ஆரம்பிக்கவில்லை.

7) குடும்பத்தை நிர்வாகம் செய்யத்தெரியாத தலைவர் இருந்தால் குடும்பம் உருப்படாது.

8) மக்களின் அத்தியாவசத் தேவைகளை பூர்த்தி செய்ய நிர்வாகம் செய்யத்தெரியாதவர்கள் உண்மையில் ஓய்வு எடுத்துக் கொள்வதே நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் நல்ல காரியமாக இருக்கும்.

9) கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ///எல்லாம் வளங்கள் இருந்தும் அவைகள் வகையாய் நிர்வகிக்கப்படாமல்தானே (RESOURCES MANAGEMENT) இப்படி அவலநிலைகள் ஏற்படுகின்றன)./// உண்மை - உண்மை - உண்மை.

10) மக்களின் சேவகர்கள் நாம் என்பதை அனைத்து அதிகார வர்க்கங்களும் உணரும் நாள் எந்நாளோ?

11) அல்லாஹ்வை அஞ்சக்கூடிய நிர்வாகிகள் பதவிக்கு வர பிரார்த்தனை செய்வோம். நம் உரிமைகளை போராடி பெறுவதற்கு உண்டான வழிகளும் வேண்டும். மாற்றத்தை வல்ல அல்லாஹ் தரவேண்டும்.

அலாவுதீன்.S. said...

///// நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் மக்களின் அடிப்படை இன்றியமையா தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்சாட்டுகளை ஏவிவிட்டு, இருக்கும் மூலவளங்களையும் காலி செய்கிறோம். மண்ணில் இருக்கிறவன் குடிக்க தண்ணீர் இல்லாமலும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க மின்சாரம் இல்லாமலும் சாகக்கிடக்கிறான் சந்திரனுக்கு ஆள் அனுப்புவது அவசியமா? “கும்பி உருகுது! குடல் கருகுது! குளு குளு ஊட்டி ஒரு கேடா?” என்று அறுபதுகளில் ஒரு ஆட்சித்தலைவரைப்பார்த்து ஒரு அரசியல் தலைவர் கேட்டார். இன்றுவரை இதற்கு மாற்றம் உண்டா? குறைந்தபட்ச தேவையான குடிதண்ணீர் கூட தரமுடியாத அரசுகள் வேறு என்ன தந்துவிடும்? விளக்கெரிக்க மின்சாரம் இல்லை வெறும் வார்த்தைகள் வல்லரசு ஆக்கிவிடுமா? ////
**************************************************************************************************************************************************************************

உண்மை - உண்மை - உண்மை - 100 சதவீத உண்மையான சாட்டையடி கேள்விகள் : தூங்குவது போல் இருக்கும் ஆட்சியாளர்களின் செவியை மேற்கண்ட வார்த்தைகள் இடிபோல் தட்டி எழுப்பவேண்டும்.

sabeer.abushahruk said...

நடிகர்களின் கைகளில் ஆட்சியைக் கொடுத்தால் நடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்; கொள்ளையர் கைகளில் ஆட்சியைக்கொடுத்தால் கொள்ளை அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

தேவைகளுக்குப் போராடுவதுதான் தீர்வு என்பதை சமீப காலமாகக் கண்டு வருகிறோம். காக்காவைப்போல் மேலும் மேலும் உசுப்பேற்றினால் மட்டுமே மாற்றம் நிகழும்.

நன்றி காக்கா.

Anonymous said...

தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருது என்று சொன்னவுடனே அலறி அடித்துக்கொண்டு பேரூராட்சி வாசலில் காலி குடத்துடன் நின்று போராட்டம் செய்தனர்.

மின்சாரம் அடிக்கடி அமர்ந்து போகுது அதற்கு யாரும் அரிக்கன்விளக்கோ,முட்டவிளக்கோ அல்லது மிளகுதிறியோ மின்சார அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வில்லை. இதற்கு மட்டும் யாரும் போராட்டமோ அல்லது மறியலோ செய்ய வில்லை.

மின்சாரம் ஒழுங்காக வந்தால் தானே தண்ணீரும் ஒழுங்காக வரும். மின்சாரம் கட்டணம் உயரவும் போகுது. இதை எல்லாம் யார் கேட்கிறது ஒட்டு போட்டவர்கள் எல்லாம் இப்போ சிந்திக்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் திட்டவும் செய்கிறார்கள், சிந்திக்கவும் செய்கிறார்கள், வருத்தமும் படுகிறார்கள். ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று கேட்டவர்களுக்கு மின்சாரத்திலும் மற்றும் எல்லா வற்றியிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

படிக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு மாற்றம் தான் ஒரு நாளைக்கு 8 to 10 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் போகுது அதற்கு யாரும் எதுவும் கேட்பதில்லை. மின்சாரம் கட்டணம் பாதி கட்டுகிறேன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? சற்று சிந்திக்க வேண்டிய விசையம்.

Saleem said...

பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்து போராடலாம்.இந்த ஆட்சியில் தடையில்லா மின்சாரத்திற்கு பதில் தடையுள்ள மின்சாரம்தானா??

KALAM SHAICK ABDUL KADER said...

ISLAM is only salvation for all people who are suffering now. Islamic ruler(Khalifa)UMER(RA)was afraid to take even salary advance from 'KHAZANA' (Govt.treasury) whereas present rulers are corrupting public money. Even MR.Gandhi liked KHALIFA UMER(RA)

As Bro. Zahir suggested, this article must be translated and sent to PLANNING COMMISSION right now.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விளக்கொளி குறைபற்றி விளக்கமும் விழிப்புணர்வூட்டலும்!

அன்சாரியாக்காவின் அறிவுரை
அதிகாரியினத்துக்கு உரைக்கணும்!

KALAM SHAICK ABDUL KADER said...

விடியலைத் தேடும் விடிவெள்ளி யான
குடிமக்கள் கெட்டுக் “குடிமக னாக”
மடியினிற்ச் சேர்க்க மகிழ்வுடன் சூழ்ச்சி
அடிகோலும் திட்ட மகற்று.

விலைவாசி யேற்றம் விளைவிக்கும் மாற்றம்
நிலைமாறி போகும் நிலைகளை யெண்ணித்
தலைவர்கள் கூடித் தடுக்க முயன்றால்
மலைபோ லுறுதி மகிழ்ந்து.

ஊழலை நீக்கி வுலகினில் நற்பேரை
ஆழமாகப் போற்றியே ஆவலா யொற்றுமை
வாழும் முறையில் வளம்பெறு மிந்நாடு
கூழு முழைத்துக் குடி.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்புக்கினியவர்களே!

தலைப்பில் கண்ட பதிவினை பாராட்டி பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர்.

தம்பி ஜாகிர் அவர்கள் தந்த பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் அளிக்க விருப்ம்புகிறேன். மற்றவை பாராட்டுக்கள் அவர்களுக்கு மீண்டும் எனது மகிழ்வை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆக்கத்தை தமிழக தலைமை செயலகத்துக்கு முன்னூட்ட சொல்லி இருந்த தம்பி ஜாகீர் அவர்களே!

ஒரு விஷயம். இதில் கண்டிருக்கிற புள்ளி விவர தகவல்கள் தமிழக மின்துறை தகவல் அறிக்கை மற்றும் அரசிதழ் அன்று கூறப்படும் கெஜெட்டில் வந்தவையே. ஆட்சியாளர்களுக்கு தெரியாத தகவல்கள் அல்ல. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

பொதுவாக நாட்டில் நிலவும் பிரச்னைகளை கவனித்து வருபவர்கள் ஒன்றை உணர்வார்கள். இந்தியாவில் எந்த பிரச்னையையும் முழுதுமாக தீர்க்கவே முடியாது. அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் தீர்க்கவே விடமாட்டார்கள். நீண்டகாலமாக இருக்கும் எந்த பிரச்னையும் தீர்ந்து இருக்கிறதா? காஷ்மீர் பிரச்சினையில் இருந்து, காவிரி பிரச்னை வரை , மகளிர் இட ஒதுக்கீடு முதல் சிறுபான்மையோர் இட ஒதுக்கீடுவரை, கச்சதீவு பிரச்னை முதல் ஒகேனக்கல் தண்ணீர் பிரச்னை வரை, பாலாறு அணை கட்டும் பிரச்னை முதல் வங்கதேச நீர் பங்கீடு பிரச்னை வரை, அந்நிய முதலீட்டை அனுமதிப்பது முதல், அணுசக்தி ஒப்பந்தம் வரை எல்லோரும் ஏற்கும் வண்ணம் எந்த பிரச்னையும் தீர்ந்த வரலாறு இல்லை. அதேபோல்தான் இந்த மின்சார பிரச்னையும் . தீர்க்க மாட்டார்கள். இந்த பிரச்னைகள் தீர்ந்துவிட்டால் இவர்களுக்கு அரசியல் நடத்த பிரச்னைகள் இருக்காது,

இந்த பிரச்னைகள் யாவும் தீர்ந்துவிட்டால் இவர்களும் தீர்ந்துவிடுவார்கள்.

அடைப்புக்குறிக்குள் பேருக்கு ஊராட்சியா என்று போட்டதை அன்புடன் கண்டித்து இரு அன்பு நண்பர்கள் தொலைபேசியில் பேசினார்கள். யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். எனது நோக்கம் ஒரு ஹூமருக்காகவே தவிர மற்றபடி அதிரை பேரூராட்சியையும் அதன் தலைமையும் குற்றப்படுத்துவதற்காக அல்ல. தமிழகம் தழுவிய பிரச்னை . அதிரை பேரூராட்சி நிர்வாகம் மட்டும் தனியாகவா மின்சார உற்பத்தி நிலையம் வைத்து இருக்கிறது?

நல்லதே நடக்க து ஆச்செய்வோம்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"அரண்டவன் கண்ணுக்கு, மின்சாரம் இல்லாத இடத்திலெல்லாம் சம்சாரம் நிற்பதுபோல் தோன்றுமாம்" - அட இதென்ன புதுசா இருக்கேன்னு பார்க்கிறீங்களா ?

வேற என்னத்த சொல்லறது பழசையே சொல்லிகிட்டு இருக்கிறது, அதுபோல்தான் பேருக்கு கூட பேரூராட்சின்னு சொன்னதை குற்றம் கானுவது !

எனது தனிப்பட்ட கருத்து இதுவே...

ஏனுங்க இதற்கு முன்னர் / இவ்வளவு நாள் மின்சாரமில்லாமல் இருக்கு அப்பொவெல்லாம் எழும்பாத எழுச்சி ஊரில் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒரு நாள் என்று அறிவிப்பை வெளியிட்டதும் கொஞ்சமாவது சூடு பட்ட!!?? துபோல் உணர்வு வந்துச்சா இல்லையா அந்த உணர்வை எழுப்பி விட்டது நம்ம அதிரை பேரூராட்சி மன்றத்தின் அறிவுப்புதானே... அதனைத்தானே இந்தக் கட்டுரையில் (எடுத்துக்)காட்டாய் இ.அ.காக்கா குறிப்பிட்டிருந்தார்கள்.

அதில் எந்தவித தவறும் இல்லை, ஏன் புண்படவேண்டும்... பண்பட்ட உள்ளங்கள் சொல்வதை கொஞ்சம் மாற்றி யோசித்து ஏதாவது ஆக்கபூர்வமாக செய்ய முடியுமான்னு சிந்தித்தால் இந்தக் கட்டுரைக்கு ஒரு வெற்றியே (அதிரையைப் பெறுத்தவரையில் இன்ஷா அல்லாஹ்)...

ZAKIR HUSSAIN said...

//இந்த பிரச்னைகள் தீர்ந்துவிட்டால் இவர்களுக்கு அரசியல் நடத்த பிரச்னைகள் இருக்காது, இந்த பிரச்னைகள் யாவும் தீர்ந்துவிட்டால் இவர்களும் தீர்ந்துவிடுவார்கள்.//

To Bro Ebrahim Ansari,

100 % உண்மையான வார்த்தைகள். நான் செக்ரட்டேரியட்டுக்கு இ-மெயில் செய்ய சொன்ன காரணம் ..ஏதோ முன்பு பசுவின் கம்ப்லைன்ட் மணி ஒலி கேட்டு அரசன் வந்து தீர்ப்பு சொன்னானாமே...அது மாதிரி யாராவது இருப்பார்கள் என்ற நப்பாசைதான்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///100 % உண்மையான வார்த்தைகள். நான் செக்ரட்டேரியட்டுக்கு இ-மெயில் செய்ய சொன்ன காரணம் ..ஏதோ முன்பு பசுவின் கம்ப்லைன்ட் மணி ஒலி கேட்டு அரசன் வந்து தீர்ப்பு சொன்னானாமே...அது மாதிரி யாராவது இருப்பார்கள் என்ற நப்பாசைதான்... ///

ஆமா, ஆமா, கவிஞர்களும், தமிழ் அறிஞர்களும், நாவலர்களும் இருக்கும் சபைபோல் அ.நி. உங்களுக்கு தோனுவதால் இப்படி சிந்திக்க வைத்து விட்டது அசத்தல் காக்கா.. !

ரசித்தேன் உங்களின் கருத்தை !

Yasir said...

//பேருக்கு ஊராட்சியா என்று போட்டதை அன்புடன் கண்டித்து//
ஜனநாயக நாட்டில் வரையறைக்கு உட்பட்டு எதனையும் விமர்சிப்பதில் தவறு இல்லை..பேரூராட்சி யார் வீட்டு தனிப்பட்ட சொத்தும் கிடையாது.அதனை விமர்சித்தால் அதனை யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள கூடாது.....விமர்சனங்கள் உங்கள் பணிகளை மேம்படுத்த சொல்லப்பட்ட அறிவுரையாக எடுத்துக்கொள்ளவேண்டுமே....தவிர பிராக்கெட் போட்டதற்க்கெல்லாம் ராக்கெட் விட்டு தாக்ககூடாது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த ஆட்சியில் தடையில்லா மின்சாரத்திற்கு பதில் தடையுள்ள மின்சாரம்தானா?? //

ஓட்டுக் கேட்டு வரும்போது...

"இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா ?" - சத்தம் போட்டது

ஆட்சியில் அமர்ந்ததும்...

"இந்த தடை போதுமா? இன்னும் கொஞ்சம் வேனுமா? - யுத்தம் செய்வது...

இரண்டுமே மக்களுக்கு இம்சைதான்...

ZAEISA said...

.அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான,,மிகவும் விளக்கமானப் பதிவு.சகோ.,ஜாகிர் ஹுசைனின்
யோசனைப்படி அரசு மற்றும் I .A .S அதிகாரிகள் பார்வைக்கு அனுப்பினால்
நல்லது. என்ன செய்யிறது ........என்னைக்கி இடுப்புல கட்டுறத்துணியை
தோலுலப்போடானுவளோ .......மத்தவங்க எல்லாரும் தலைல துணியைப்
போடனுமாப்போச்சு........ஹூம்..

Noor Mohamed said...

வெள்ளைக்காரன் இன்றைய கொள்ளைக்காரர்களுக்கு தோதாக நம் நாட்டை அன்றே கொடுத்து விட்டு போய்விட்டான். இன்றைய இந்தியாவின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வைத்துள்ள கறுப்புப் பணம் வெளிவருமானால், இத்திய குடிமகன் அத்துனைபேரும் பணம் படைத்தவர்களே!

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நின்று கொண்டு சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் பிரதமரும், ஜனாதிபதியும் பெயரளவில் பேசுவதால் என்ன பயன்?

அதுதான் //பிரச்னைகள் யாவும் தீர்ந்துவிட்டால் இவர்களும் தீர்ந்துவிடுவார்கள்//

KALAM SHAICK ABDUL KADER said...

அரசியல் வியாதிகளின் அடிப்படைக் கொள்கைகள்:

1) மொழி,சாதி,மத ரீதியான துவேசத்தைத் தூண்டுதல்

2) எதிரிக்கு எதிரி நண்பன் என்ற “வெற்றிச் சூத்திரம்” என்று வெற்றுச் சூத்திரம் வைத்துக் கொண்டு நயவஞ்சக நாடகம் போடுதல்

3)இலவயங்கள், இலஞ்சம் கொடுத்து மக்களை அடிமைகளாகவும் ஊமைகளாகவும் வைத்திருத்தல்

4) எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்லாமியர்கள் அதிகமாக அரசியற்துறைகளில் இருந்து விட்டால் “தூய்மை” வேண்டும் “வாய்மை” வேண்டும் என்று இந்த அரசியலார்கட்கு இடையூறு செய்து விடுவார்கள் என்ற ஒரே நோக்கத்தில் , முஸ்லிம் கட்சிகளை ஓரங்கட்டுதல் அல்லது அடிமைப்படுத்தி வைத்தல்

5) உலகில் நடைபெறும் கலகங்கள், குழப்பங்கள் யாவற்றுக்கும் அல்லாஹ்வின் சோதனைகளும் உள்ளடக்கியவைகள்; காரணம், அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து, நற்கருமங்கள் செய்து, ஒருவருக்கொருவர் உண்மையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் போத்திக்காத வரையில், நஷ்டவாளிகள் தானே!

6) இதற்கு நாம் அனைவரும் “தாஃவா” எனும் அழைப்புப் பணியினைச் செய்து வருவோம்

TRY AGAIN AGAIN AND AGAIN UNTIL YOU GET SUCCESS

அன்புச் சகோதரர் அ.நி.நெறியாளர் அபூ இப்றாஹிம் அவர்களிடம் “நகைச்சுவை” நிரம்பி வழிகின்றது; அவர்கள் பக்கத்தில் இருந்தால் அதன் கதிர்களால் எமக்கும் இளமை திரும்பும்!

//"அரண்டவன் கண்ணுக்கு, மின்சாரம் இல்லாத இடத்திலெல்லாம் சம்சாரம் நிற்பதுபோல் தோன்றுமாம்" -// என்ற வரிகளைப் படித்துச் சிரித்து விட்ட உடன் எனக்கே ஓர் புத்துணர்வு உண்டானது

//ஆமா, ஆமா, கவிஞர்களும், தமிழ் அறிஞர்களும், நாவலர்களும் இருக்கும் சபைபோல் அ.நி. உங்களுக்கு தோனுவதால் இப்படி சிந்திக்க வைத்து விட்டது அசத்தல் காக்கா.. !

ரசித்தேன் உங்களின் கருத்தை ! //

அடியேனும் இரசித்தேன்; ஆம். ஆஸ்தானக் கவிஞர், மொழியியல் மற்றும் மார்க்க அறிஞர், பொருளாதார நிபுணர், காமிராக் கலைஞர், நாவலர், விமர்சன வித்தகர்கள் என்று “பல்கலைக்கழகமாய்”ப் பரிணமிக்கும் அதிரை நிருபரைக் காணாமல் கண் துஞ்சுவதில்லை.

Muhammad abubacker ( LMS ) said...

நூர் முஹம்மது காக்கா சொன்னது.

// வெள்ளைக்காரன் இன்றைய கொள்ளைக்காரர்களுக்கு தோதாக நம் நாட்டை அன்றே கொடுத்து விட்டு போய்விட்டான்.//

கொள்ளைக்காரங்க திருடிகிற கோடி கோடியான பணமெல்லாம் நம்ம நாட்டு வங்கிக்குத்தான் வந்து சேருமென்று நினைத்து விட்டுவிட்டு போயிருக்கலாம்.

அப்துல்மாலிக் said...

காக்கா தாங்கள் பதிவு மிகச்சிந்திக்க வைக்கும் பதிவு, மின்சாரம் சம்பந்தமாக அரசுக்கு என் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு ராக்கெட் விடட்டும், கப்பல் விடட்டும்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அரசியல் வா(ந்)திகளுக்கு ஆணி அறைந்தாற்போல் ஒரு ஆதங்கமான சமுதாய அக்கறையுடன் கூடிய பதிவு.....மிக தெளிவான விளக்கம் மின் உற்பத்தியை பற்றி நானும் இதன் மூலம் குறை/கதை தெரியவந்தமைக்கு நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு