Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொருளாதார வளர்ச்சி ! - சுற்றுச்சூழல் தளர்ச்சி ! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | February 12, 2012 | , ,

நமது ஊர்களை சுற்றிப்பாருங்கள். ஏன் நமது ஊரையே பாருங்கள்.

வீடுகள் பெருகி இருக்கின்றன. கடை, கடைத்தெருக்கள் – புதிது புதிதாக இதுவரை பார்த்திராத வர்த்தக நிலையங்கள் எங்கு பார்த்தாலும் பெருகி இருக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல், அப்பனும் பிள்ளையும் எதிர் எதிரில் போனாலும் கூட பார்த்துக்கொள்ள முடியாத விரைவு, நடந்து போவோரை காண்பது அருகிவருகிறது. இரு சக்கர, மூன்று சக்கர வண்டிகள், வீடுகளில் வகை வகையான கார்கள்., உணவு விடுதிகளில் சொல்லெண்ணாக் கூட்டங்கள், உல்லாச கேளிக்கை விடுதிகள், கல்வி நிலையங்கள், சூப்பர் மற்றும் ஹைபர் மார்க்கெட்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் இப்படி ஏகப்பட்டவை. 

மாபெரும் பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் ஓரளவு பரவலாக அனைவருக்கும் அமையும் வண்ணம் வெளிநாட்டுப்பணமும், அவை செலவாகின்ற விதத்தால் உள்ளூரில், வெளியூர்களில் வளர்ந்துவிட்டன தொழில்களும்.

அதே நேரம் கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். 

ஊர்கள் வளர்ந்த அளவு ஊர்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் வளர்ந்திருக்கிறதா? எங்கு பார்த்தாலும் கழிவு நீர் வாய்க்கால்கள், தேங்கி  கிடக்கும் சாக்கடை குட்டைகள், ஒவ்வொரு தெருக்களின் ஆரம்பத்திலும் கொட்டப்பட்டு நாறிக்கிடக்கும் குப்பை கூளங்கள், எங்கு பார்த்தாலும் காற்றில் பறந்து கலர் கலராய்  பிளாஸ்டிக் கழிவுகள். இரவு நேரங்களில் நம்மை தூக்கிச்செல்ல படை எடுக்கும் கொசுக்கூட்டங்கள்.  அதிரையின். கஸ்டம்ஸ் சாலை முனையிலிருந்து ஜாவியா ரோட்டைப்பாருங்கள்- இருபுறமும் குப்பைகள். சி எம் பி லைனை பாருங்கள்.- மீன்கள் துள்ளிக்குதிக்க சிற்றோடையாக ஓடிக்கொண்டிருந்தது இன்று சாக்கடைகளின் தாயகமாக திகழ்கிறது. தைக்கால் ரோட்டிலிருந்து தரகர் தெரு செல்லும் ரோட்டை பாருங்கள்-எவருக்கும் கவலை இல்லாமல் எல்லோராலும் கொட்டப்படும் குப்பைகள். எல்லா சிறிய, பெரிய ஊர்களிலும் இதே நிலை. மேலோட்டமாக இவைகளை குறிப்பிட்டாலும் இவைகள் ஒரு சிறு சிந்தனைக்கே. ஆனால் விரிவான முறையில் இந்த தலைப்பைபற்றி எழுதவேண்டும் அதன் எல்லைகள் வானளாவியது. உலக பொருளாதார அரங்கில் விவாதப்பொருளானது . இது ஒரு ஹை டோஸ் ஊசி. 

பொருளாதார வளர்ச்சி சுற்று சூழலையும் வளரச்செய்து மேம்படுத்தவேண்டும். (ECONOMY WITH ECOLOGICAL PERSPECTIVE) சுற்று சூழல் உள்ளடக்கிய பொருளியல் என்று கூறுவார்கள். இதைப்பற்றித்தான் எழுதப்போகிறேன். 

சுற்று சூழலையும் சேர்த்து வளர்க்காத பொருளாதார வளர்ச்சி மனிதனின் இரண்டு கால்கள் வெவ்வேறு திசையை நோக்கி நடக்கத்தொடங்குவதற்கு இணையானது. இருகண்கள் இருவேறு திசைகளை பார்ப்பதற்கு ஒப்பானது. 

வாழைப்பழம் வாங்க வசதி இருக்கிறது – இது பொருளாதார வளர்ச்சி என்று வைத்துக்கொள்ளலாம். – ஆனால் அந்த பழத்தை உரித்து உள்ளே தள்ளிவிட்டு  – அதன் தோலை நம் வீட்டு தலைவாசல் படியில் போடுகிறோமே அதுதான் சுற்று சூழலுக்கு கேடு விளைவிப்பது . வழுக்கி விழுந்தால் உடைவது நமது இடுப்பல்லவா? இன்றைய உலக பொருளாதார வளர்ச்சி இதைத்தான் செய்திருக்கிறது. 

வாருங்கள் சப்ஜெக்டுக்கு போவோம். 

குறிப்பாக உலகெங்கும், சிறப்பாக இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னாள் அறிமுகப்படுத்தப்பட்டு ஆக்கிரமித்துள்ள உலகமயமாக்கலும், தனியார் மயமாக்கலும், சந்தை பொருளாதாரமும் சுற்று சூழல்களின் மேல் நிகழ்த்தியுள்ள வெறியாட்டங்கள் , தாக்கங்கள் கணக்கிலடங்காதவையாகும்.  

உலகில் உள்ள பணக்காரர்களை வருடாவருடம் தரவரிசையில் கணக்கெடுத்து வெளியிடும் போர்ப்ஸ் இதழ் இந்தியாவில் 40 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35100 கோடி அமெரிக்க டாலர் என்று கூறுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8  முதல் 9 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்துள்ளது. அதே நேரம் வேளாண்மை வளர்ச்சி விகிதம் 4.9  விழுக்காடாக குறைந்து விட்டது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து விழுக்காடு தவிர மற்றவர்கள் 97.45  கோடி மக்கள் தேவைக்கும், ஆசைக்கும் ஏற்ப வாழ்வதற்கு போராடுகிறார்கள். தொண்டைக்கும் வாய்க்கும் இழுத்துக்கொண்டுதான் போகிறது. ‘காடு விளைஞ்சென்ன மச்சான் கையும் காலும்தானே மிச்சம்’ என்கிற கதைதான். 

உலகமயமாக்கல் தொடங்கியதில் இருந்து 1,66,304  விவசாயிகள் ( 2006  வரை உள்ள புள்ளி) நவீன இரசாயன வேளாண்மையால் விளைச்சல் இன்றி , இடுபொருளின் அடக்க விலைக்கும், உற்பத்தி கண்டு முதலின் விற்பனை விலைக்கும் ஏற்பட்ட மலையளவு வித்தியாசத்தால் கடனாளியாகி தற்கொலை செய்துகொண்டு செத்தார்கள். வறுமையால் செத்தவர்கள் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. வறுமை ஏற்படக்காரணம் திடீரென முளைத்த ஆடம்பர சமாச்சாரங்களும் என்பதை இந்த இடத்தில் நினைத்தும் இணைத்தும் கொள்ளவேண்டும். 

ஓர் இந்தியன் குறைந்தபட்ச வாழ்க்கைதரத்துடன் வாழ மாதம் அவனுக்கு ரூபாய் 2,540/= சராசரியாக தேவைப்படுகிறது. (துபாயிலிருந்து இதைவிட அதிகமாக மாதாமாதம் அனுப்புகிறேனே என்று சுலைமான் காக்கா கூறுவது காதில் விழுகிறது. நீங்கள் அனுப்பும் அதிகப்பணம் பட்டுக்கோட்டை பூம்புகாரிலும், அசோகன் ஆபரண மாளிகையிலும், கல்யாணி கவரிங்கிலும் , வியாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தஞ்சை பாஸ்கர் டாக்டரிடமும் செலவாகிறது காக்கோவ். கண்டித்து வையுங்கள்) இந்த ரூ. 2540/= கூட இல்லாதவர்கள்தான் வறுமையில் உழல்கிறார்கள் அல்லது உயிரைமாய்க்கிறார்கள். 

பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் மாசுபடும் நமது மரபுக்கு இசைந்த சூழல்கள் - அவைகள் சுரண்டப்படுவதை இப்படி பட்டியல் இடலாம். 
  • பசுமை புரட்சி தொடங்கி வைத்த இரசாயனம் சார்ந்த விவசாயம்.
  • பசுமை புரட்சி தொடங்கி வைத்த மரபணு மாற்ற பயிர்கள் படையெடுப்பு.
  • நீர்வள ஆதாரங்களின் சேதாரங்கள்.
  • தோண்டப்படும் கனிம சுரங்கங்கள்.
  • மணல் கொள்ளை.
  • மாற்றப்பட்ட நில பயன்பாட்டு முறை.
  • விளை நிலங்களை முடக்கிப்போடும் வீட்டுமனைகள், ( இது பற்றி எனது வயலும் வாழ்வும் – பதிவு) 
  • விளை நிலங்களை ஆக்ரமித்து அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.
  • விளை நிலங்களை ஆக்ரமித்து அமைக்கப்படும் பலவழி சாலைகள்.
  • அடித்தட்டு மக்களின் நகரங்களை நோக்கிய இடப்பெயர்ச்சி, ( எங்கேப்பா செல்லப்பன் ஆசாரியை காணோம்? அவர் பையன் கம்ப்யூட்டர் படித்து அமெரிக்க போய்விட்டான். சென்னையில் வீடு வாங்கி குடியேறிவிட்டார். அவரது கருவிகள்? பிள்ளைமார் குளத்தில் வீசி எறிந்து விட்டார்.)
  • பாரம்பரிய தொழில்களின் அழிவு.
  • கைவினை தொழில்களின் கையறு நிலை.
  • கட்டுப்படுத்தமுடியாத விலைவாசி உயர்வு.
  • புவி வெப்பமயமாவது.
  • கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள். 
  • உணவு முறை மாற்றங்கள் (கே. எஃப். சி முதல் அருண் ஐஸ்க்ரீம் வரை).
இப்படி பல,

ஒரு புறம் உலக பணக்காரர்களில் நாற்பதுபேர் இந்தியர் என்ற நிலை .

மறுபுறம் 97.45 கோடிப்பேர் நடுத்தர வர்க்கமும் சேர்த்து-வாழவே போராடும் நிலை. இதுவே, உலகமயமாக்கல் என்ற வேண்டாத பிள்ளையை பெற்று அது காண்டாமிருகமாகிய கதை.

முதலாளித்துவத்தால் இன்று உலகமயமாக்கல் நகர்த்தப்படுகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பம், சமூகத்தை மாற்றியமைக்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் உலகமயமாக்கலின் முக்கிய கூட்டணி கட்சிகள். உண்மையில் இவை பொருளாதார உறவுகளை மட்டுமல்லாமல் சூழலியல் பொருளாதார அமைப்புகளையும் பாதிக்கின்றன.

இந்த புள்ளிவிபரங்களைப் பார்க்கலாம். 

இந்த உலகமயமாக்கல் உலகத்தின்மீது காரி உமிழ்ந்த கரியமில வாயுவின் அளவுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அளவில்,

1950 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 110 டன்கள்.
2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 820 டன்கள்.

வெறும் ஐம்பது ஆண்டுகளில் எட்டு மடங்கு கரியமில வாயு இந்த பொருளாதார வளர்ச்சிக்காக போடப்பட்ட திட்டங்களால், பெட்ரோலிய எரிபொருள் உமிழ்வால் உலகை நாறடித்துவிட்டன. இதனால் உலகம் வெப்பமயமாவது ஊக்குவிக்கப்படுகிறது. அணு குண்டை விட, அணு கதிர்வீச்சைவிட புவி வெப்பமயமாவது ஆபத்தானது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். 

சூழலுக்கு எதிரான இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு காரணமாக 2030ஆம் ஆண்டு புவியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதை யாராலும் தடுக்க முடியாது. இது மிக மோசமான காலநிலை மாற்றத்திற்கு உலகை உந்தித் தள்ளும். ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த சட்ட வரையறையை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தினாலும்கூட புவியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வதை தடுக்க முடியாமல் போகும். கோமாளி மீன், எம்பெரர் பென்குவின், ஸ்டாகோர்ன் கோரல் (பவள உயிர்), பெலுகுவா திமிங்கலம், தோனி ஆமை, ரிஸ்சீல், சால்மன் மீன் போன்ற கடல்சார்ந்த உயிரினங்களும், ஆர்டிக் நரி, துருவக் கரடி மற்றும் வறட்சி தாங்காத குயுவர் மரம் போன்ற அரிய உயிரினங்கள் புவி வெப்பமடைவதால் அழிந்துவிடும். இந்த அழிவு, சுற்றுச்சூழல் அழிவின், சூழலியல் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை மட்டுமல்லாமல் உலகின் இறுதி ஊர்வலத்தை அறிவுறுத்தும் சாவுமணிகளாகும்.

உலகமயமாக்களுக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்து வரும் உலக வங்கி, அதை நடைமுறைபடுத்தும் உலக வர்த்தக நிறுவனம், அதன் செல்லப்பிள்ளையான உலக பொருளாதார அமைப்பு (WORLD BANK, WORLD TRADE ORGANIZATION, WORLD ECONOMIC FORUM) ஆகிய சக்திவாய்ந்த சந்தை பொருளாதாரத்தின் சாச்சாக்களும், மாமாக்களும், சுற்றுசூழல் இயல் இணைந்த- அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கேற்ற பொருளாதாரத்தை புறக்கணித்து வருவதால்தான் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இலாப நோக்கங்களோடு ஆன்லைண் வர்த்தகங்கள் மூலமாக ஏற்படுத்தப்படும் செயற்கை பற்றாக்குறை , விலைவாசி உயர்வு இவைகளால் பணக்காரர்கள் மேலும் பணக்கரர்களாகவும் , ஏழைகள் இன்னும் ஏழைகளாகவுமே ஆக்கப்படும் “ யோசனை மன்சவாடு வண்டி சாட சப்பை “ திட்டங்களால் என்ன பயன்?

உலகமயமாக்குதளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் வைக்கும் வாதம் கட்டுப்பாடற்ற பொருளாதாரம் கொண்டுவந்து கொட்டும் அதிக நிதிவளங்கள், புதிய தொழில் நுட்பங்கள் உலகை வளர்ச்சியின்பால் தலைகீழாக மாற்றி உயர வைத்துவிடும் என்பதாகும். ஆனால் உண்மையில்- நடைமுறையில் உடல் கொழுத்து இருக்கும் அதில் உயிர் இல்லை என்ற நிலையும்- மரம் பருத்திருக்கும் ஆனால் பூக்காது, காய்க்காது என்ற நிலையும்- கண்ணிருக்கும் பார்க்கமுடியாது- காதிருக்கும் கேட்க முடியாது- காலிருக்கும் நடக்க முடியாது என்றும் இருந்தால் எவ்வளவு வேடிக்கையோ அப்படித்தான் இருக்கிறது. 

உலகமயமாக்களும், பொருளாதார வளச்சியும் மண்ணின் மரபுகளை அழிக்காமலும், சுற்றுசூழல்களை மாசுபடுத்தாமலும் வளர்ந்தால்- 

கட்டுப்பாடற்ற வர்த்தகம் காசை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் உலக அமைதி , ஒற்றுமை இவைகள் ஓங்கி நிற்க செய்யும்வகையில் மாற்றங்களோடு வருமானால் -

“பழையன கழிதலும் – புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே “ என்ற அடிப்படையில் ஏற்கலாம். 

இத்தகைய குறிக்கோள் இல்லாத வளர்ச்சி 

“ஓதிய மரங்கள் பெருத்து இருந்தாலும் உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது 
விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது 
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது “

என்ற கருத்தைத்தான் நிலைக்கச்செய்யும். உலகமயமாக்களுக்கு உலகில் எதிர்ப்பு மேலோங்கவே செய்யும் . 

-இபுராஹிம் அன்சாரி

26 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்திய அனைத்து மொழிப் பத்திரிக்கைகளிலும் வெளிவர வேண்டிய அற்புதமான ஆய்வுக் கட்டுரை... !

அலசல் அசரவைத்தாலும், அச்சத்தையூட்டுகிறது அசுர வளர்ச்சியும் உலகமயமாக்கலும் அதனில் வீழ்ந்து தவிக்கும் மக்களின் நிலையும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இபுராஹீம் அன்சாரி காக்கா உங்களின் ஆக்கம்.ஒவ்வொரு வார்த்தைகளும் உலகமயமாகி எங்கள் சிந்தையை உஷ்ணப்படுத்துகிறது.

// ஊர்கள் வளர்ந்த அளவு ஊர்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் வளர்ந்திருக்கிறதா?//

சுற்றுச்சூழல் என்றால் என்னவென்று கேட்க்கும் அளவுக்கு நம் மக்களிடம் அறியாமை தான் வளர்ந்திருக்கிறது.

Yasir said...

புள்ளி விவரங்கள் புல்லரிக்கவைக்கின்றன....நம்மூர் எவ்வளவு வளர்ச்சி அடைந்து இருந்தாலும்..இன்னும் ஒப்பன் கக்கூஸ் என்ற கண்றாவியான பழக்கம் மாறவே இல்லை...ஊரை சுத்தம் செய்வதற்க்கு பேருராட்சி மட்டும் போதாது...ஒவ்வொரு எண்ணத்திலும் நம் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் வர வேண்டும்

Anonymous said...

அன்பு சகோதரர் லெ.மு.செ. அபுபக்கர்.

வ அலைக்குமுஸ்ஸலாம். ஜசக்கல்லாஹ் ஹைர்.

எனக்குமட்டுமல்ல இங்கு பதியும் அனைவருக்கும் முதன்முதலாக ஓடிவந்து படித்து பாராட்டு தெரிவிக்கின்ற உங்கள் அன்பு உள்ளம என்றும் வாழ்க.

லெ.மு.செ. என்பதும் மு.செ.மு என்பதும் அதிரையின் புகழுக்குரிய மந்திர விலாசங்களில் குறிப்பிடத்தக்கவைகள்.

அத்தகைய பெரும் வட்டாரத்தில் இருந்து பதிவுகளுக்கு பாராட்டு கிடைப்பது இறைவன் தந்த பாக்கியமாகும்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

Anonymous said...

அன்பு மருமகன் யாஸிர். !

சில நிகழ்ச்சிகளை காண சகிக்கவில்லை. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, வேதாரண்யம், சென்னை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களில் நின்று பர்ர்த்திருக்கிரீர்களா? அந்த பேருந்துகளில் ஏறி இருக்கையில் அமர்ந்து சுவாசித்து இருக்கிறீர்களா?

பாரதியார் பாட்டு நினைவுக்கு வரும்,

“ எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே”- என்ற வரிகள்தான்.

அடிப்படை சுகாதார வசதிகளை அலட்சியம் செய்துவிட்டு ஆண்டுக்கு ஒரு மருத்துவமனை திறந்தால்? பயன் என்ன?

இபுராஹீம் அன்சாரி

Noor Mohamed said...

இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் இந்த ஆக்கத்தை அனைவரும் ஐயம் தெளிய முறையாக படித்துப் புரிந்து கொண்டார்களா என்பதை தெளிவு படுத்த அதிரை நிருபர் ஒரு பரீட்சை நடத்தவேண்டும். அப்போதுதான் படித்தோர் முழுமை பெற முடியும். இது கட்டுரையல்ல! கவனம்!! கவனம்!!! அதாவது ATTENTION FOR ALL.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இபுராஹிம் அன்சாரி காக்கா சொன்னது.

// அத்தகைய பெரும் வட்டாரத்தில் இருந்து பதிவுகளுக்கு பாராட்டு கிடைப்பது இறைவன் தந்த பாக்கியமாகும். //

அத்தகைய பெரும் வட்டாரத்தில் இருந்து குறிப்பிட்ட புள்ளிகளை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கிற எங்களுக்கு வட்டத்திற்கு வெளியே பரந்து விரிந்து சிதறிக்கிடக்கின்ற புள்ளிகளை உங்கள் போன்ற எழுத்தாளர்கள் மூலம் வெள்ளி போன்ற புள்ளிகளை ஓன்று சேர்த்து தருவதற்கு அல்லாஹ் எங்களுக்கு செய்த பேருபகாரம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரைக்கு கிடைத்த அரிய அரசாட்சி பொக்கிசம்.
வாழ்க பல்லாண்டு!.தருக அரிய கருத்துக்களை!

மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர் அறிக்கை.சகோ.இ.அ அவர்களை இ (ந்திய) அ (ரசு) பயன்படுத்தினால் அவர் சொன்ன கனவு இவரால் சாத்தியப்படும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இபுறாகிம் அன்சாரி காக்கா,

நான் சென்ற பதிவில் குறிப்பிட்டது போல் நிச்சயம் 'நமது திட்டக்கமிஷன் தலைவர் மான்டேங் சிங் அலுவாலியாவும், மற்ற‌ பொருளாதார மேதைகளும் தற்சமயம் துபாயில் மையம் கொண்டிருக்கும் (நமதூர் தற்கால அப்பாவிடம்) தங்களிடம் வந்து தட்டந்தரையில் அமர்ந்தேனும் அல்லது சோபாவில் இருந்தேனும் இந்த பாடங்களை கட்டாயம் படித்துச்செல்ல வேண்டியவர்கள்.'

இப்படி எல்லாம் பாடங்கள் பள்ளிகளில் நடத்தப்பட்டால் மாணவர்களிடம் Why this கொலவெறியெல்லாம் காணாமல் போய் விடும் நிச்சயம்.

நமது அதிரை நிருபருக்கு பொருளாதார மேதை தான் இல்லாமல் இருந்தது. மாஷா அல்லாஹ் அது தங்களின் வருகை மூலம் நிவர்த்தியாகி விட்டது.

தொடரட்டும் உங்களின் புள்ளி விவரங்கள்.

Noor Mohamed said...

பூச்சுக் கொல்லி மருந்து கலந்த வெளிநாட்டு பானத்தை 20 ரூபாய் கொடுத்து வாங்கி அதைப் பருகி வியாதியை விலைக்கு வாங்கும் நம் மக்கள், ஆரோக்கியம் தரும் இளநீரை 10 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு இவ்வளவு விலையா?! என்று கேட்பார்கள்.

ஒரு கிலோ உருளைக் கிழங்கு 10 ரூபாய்க்கு வாங்குவதற்கு யோசிக்கும் நம் மக்கள், அதையே சிப்ஸ் ஆக பல பொட்டலங்கள் போட்டு விற்பதை 500 ரூபாய் கொடுத்து வாங்க யோசிக்க மாட்டார்கள்.

இவையெல்லாம் உலகமயமாக்கல் என்பதன் ஒரு பகுதியே

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\சி எம் பி லைனை பாருங்கள்.- மீன்கள் துள்ளிக்குதிக்க சிற்றோடையாக ஓடிக்கொண்டிருந்தது இன்று சாக்கடைகளின் தாயகமாக திகழ்கிறது.//

இவ்விடத்தில் நான் சொல்லியாக வேண்டும் ஏனென்றால் நான் வசிக்குமிடமோ CMP லைன், முன்னே ஆற்றுநீர் பெருக்கெடுத்து எந்ததொரு இடையுருமில்லாமல் சல சல வென்று ஓடும் மௌனமான இரவு நேரங்களில் அச்சத்தின் அழுத்தம் கூடுதாலே ஆனால் இப்பொழுது கொசுக்களின் சொகுசு பங்களாவாக மாறியுள்ளது காரணம் பலவீடினுளிருந்து வரும் சாக்கடை கழிவுநீர் இப்பொழுது மட்டுமல்ல முன்பிருந்தே கழிவு நீர் இந்த ஆற்றில் வந்து பின்பு அது மறைந்து விடும், ஆனால் இப்பொழுது VKM Store முதல் பத்து வீடுகள் வரை அப்பகுதி வீட்டினுள் ரூ 10,000 - ரூ 15,000 வசூல் செய்து சருக்கையாக தரை தழமிட்டு இருக்கிறார்கள் அங்கங்கே தொட்டிப்போல் சாக்கடை தேங்கி கிடைப்பதை காண முடிகிறது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பொருளாதார வளர்ச்சி - சுற்றுச்சூழல் தளர்ச்சி

நல்ல விழிப்புணர்வுடன் கூடிய சிறந்த ஆய்வுக்கட்டுரை!

/// மறுபுறம் 97.45 கோடிப்பேர் நடுத்தர வர்க்கமும் சேர்த்து-வாழவே போராடும் நிலை. இதுவே, உலகமயமாக்கல் என்ற வேண்டாத பிள்ளையை பெற்று அது காண்டாமிருகமாகிய கதை.///

உலகமயமாக்கலால் 97.45 மக்கள் அவதிப்படுவது மிகப்பெரிய வேதனையே. மக்களைப் பற்றியும், சுற்றுச்சூழலை பற்றியும் கவலைப்படாத அரசாங்கம், மனிதர்கள் இருக்கும்வரை இந்த நிலை மாறுமா?

உலகளவில் வாழ்வதற்கான சுதந்திரத்திற்கு போராடும் நிலை வரும்பொழுது இந்த நிலை மாறுமா?

மனிதர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை சூழலும் மாறப்போவதில்லை.

பணம் முதலைகளுக்காக உள்ள பொருளாதாரமயம் ஒருநாள் வீங்கி வெடித்து புரட்சி ஏற்படும் என்பதே நியாயவான்களின் எதிர்பார்ப்பு. .

மக்கள் தன்னிறைவு பெற்று சுகாதாரத்துடன் வாழ வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்

sabeer.abushahruk said...

அருமையான விளக்கமான கட்டுரை. வணிகவியலோ சமூகவியலோ படிக்க விரும்பாமல் அறிவியலில் ஆர்வம் கொண்ட எனக்கேப் புரிகிறதே ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏன் புரிவதில்லை?

நல்ல கட்டுரைக்கு நன்றி காகா.

அபூபக்கர்-அமேஜான் said...

நம் ஊர் எவ்வளவு பெரிதாக காணப்பட்டாலும் சுற்றுச்சூழலில் பெரிதாக காணப்படவில்லை. ஏன்? என்ன காரணம் என்றால் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

ஒவ்வொருவரும் அவங்க அவங்க நினைத்தாலை முடியும் முடியாதது ஒன்றும் இல்லை. பொடுபோக்காக இல்லாமல் ஒவ்வொருவரும் தன்னுடைய செயல்கள் என்று கருத்தில் கொண்டு செய்தால் இந்த ஊரை சுற்றுச்சூழளாக மாற்ற முடியும்.

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் அதிரை பஸ் நிற்குமிடத்தில் மிக பெரிய வாசனையாக இருக்கும். அதை என்ன வாசனை என்றுக்கோட கண்டு பிடிக்க முடியாது.

இதை கேட்பதற்கு ஆட்கள் இல்லை நாம் தான் சுற்றுச் சூழல் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம் அரசு சார்பில் உள்ளவர்கள் இதில் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்கு எதையும் பற்றி கவலையும் இல்லை அந்த அளவுக்கு மக்களை வைத்துயிருக்கிறார்கள்.

நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இந்த ஊர் சுகாதாரமாக ஆகும். நம் ஊர் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கிறவரைக்கும் நாம் சுகாதாரத்தை பார்க்க முடியாது. நாம் பேசிக்கொண்டும்,எழுதிக்கொண்டும் போகலாம் சுகாதாரத்தை பற்றி.

இதற்கு எப்போ விடிவுகாலம் காலம் வரும் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் சுகாதாரத்தை ஆரம்பிக்க வேண்டும். சுகாதாரத்திற்கு முதலில் அடிப்படை காரணமே வீட்டில் உள்ள பெண்மணிகள் தான். ரோட்டில் போகும்போதெல்லாம் நாடு ரோட்டிலையை குப்பையை போட்டுவிட்டு போகிறார்கள். இப்படி இருக்கும் போது ஏன்? கொசு,நோய்கள் வராது எப்படி சுகாதாரத்தை பார்க்க முடியும்.

KALAM SHAICK ABDUL KADER said...

I felt like sitting and hearing in a class-room where ECONOMICS Professor is giving very good lecture. I recalled my olden and golden days of those class periods where we were taught ECONOMICS.

Dear Ibrahim Kaakkaa,

Please translate the whole article and send to English News Papers like Gulf News/ Times of India/ The Hindu/ Indian Express/ Economic Times.

Kindly don't forget to write our town's name beside your name.

YOU CROWN THE TOWN

ABU ISMAIL said...

நாட்டின் பொருளாதாரம் பற்றி நல்ல கட்டுரை.
எல்லாரும் தமிழில் கமென்டு கொடுத்தா தானே எல்லாருக்கும் புரியும்.தயவு செய்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

Unknown said...

சுற்று சூழலையும் சேர்த்து வளர்க்காத பொருளாதார வளர்ச்சி மனிதனின் இரண்டு கால்கள் வெவ்வேறு திசையை நோக்கி நடக்கத்தொடங்குவதற்கு இணையானது. இருகண்கள் இருவேறு திசைகளை பார்ப்பதற்கு ஒப்பானது.

----------------------------------- ------------------------------
power full examples

இப்னு அப்துல் ரஜாக் said...

பொருளாதார வளர்ச்சி !
பயன்படுத்தும் முறை,குரான் தரும் பாடம்.

-30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.

59:7. அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

7422. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, 'என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது' என்று எழுதினான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.60

இப்படி அல்லாஹ்வின் கருணை விஞ்சி இருப்பதால்தான்,இப்படி நாம் நடந்துகொண்டும் (இப்ராஹீம் அன்சாரி காக்காவின் கட்டுரையை முழுதும் படித்து விட்டு,மீண்டும் மேற்கண்ட குரான் வசனங்களை படியுங்கள்).அல்லாஹ் நம்மை காத்து,அருள் புரிந்து வருகிறான்.

இப்னு அப்துல் ரஜாக் said...

மேற்கண்ட விளக்க ஆதாரம் புகாரி
Volume :7 Book :97

http://www.tamililquran.com/bukharisearch.php?s=10&q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பட்டுக்கோட்டைக்கும் தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை.
கார் மேகம் போல் கருமை தவழும் அழகிய தார் சாலை. இரு பக்கமும் பசுமை படுத்துறங்கி சூரியனுக்கும் விடுமுறையளித்த ரம்மியமான மழை கால‌ நல்ல தோர் காலை வேளை. தூவானம் இறைக்கட்டளைப்படி வானிலிருந்து தூவிக்கொண்டே இருந்தது. குருவிகளெல்லாம் மழையில் நனைந்து பொழிவிழந்து காணப்படும் நேரம் அது. மருத்துவ தேவைக்காக குடும்பத்துடன் காரில் தஞ்சை பயணம். பாலைவனத்தையே அதிகம் பார்த்து பழகிய கண்களுக்கு பசுமை நல்லதொரு விருந்தளித்து ரசித்துக்கொண்டு வரும் வழியில் ஊரிலிருந்து வானம் விடுவதாக இல்லை மின்னலும், இடியும் மிரட்டிக்கொண்டே இருந்தன. ஆனால் எது எப்படியோ? அவனும் விடுவதாக இல்லை. யார் அவன்? வரும் வழியில் சாலையோரம் சாலையை நோக்கி வந்து போகும் வாகனங்களை சிறு பிள்ளை போல் வேடிக்கை பார்த்துக்கொண்டு சுவராஸ்யமாய் எவ்வித கூச்சமும், வெட்கமும் இன்றி ஒருவன் கையில் குடையை பிடித்துக்கொண்டு அவனை பார்ப்பவர்கள் தான் வெட்கப்பட்டு தலைகுனிந்து செல்லவேண்டுமென சொல்லாமல் கட்டளையிட்டவனாய் மலம் கழித்துக்கொண்டிருந்தான்.

குடை பிடித்து மழையை தடுத்து மலம் கழிக்கத்தெரிந்தவனுக்கு மானத்தை மறைக்க இயலாமல் மதிகெட்டு போனதேனோ?

மிடுக்கான உடை உடுத்தி பகட்டான நடை நடந்து பொல்லாத ஆங்கிலமும் பேசி பேருந்து நிலைய கூட்டத்தின் நடுவே நின்று கொண்டு எவ்வித சங்கடமுமின்றி சலசலப்புடன் சிறுநீர் கழிக்கும் பல‌ ஆண்களுக்கு வெட்கமும், நாணமும் வருவதில்லை. அவனைக்காண்பவர்களுக்கே வெட்கம் வர வேண்டியுள்ளது நம் நாட்டில்.

தலைநகர மெரினா கடற்கரையே திறந்த வெளிக்கழிப்பிடமாக திகழும் பொழுது மாநிலத்தின் மற்ற பகுதிகள் மட்டும் எப்படி சுகாதாரமாய் இருந்து விட முடியும்?

Anonymous said...

அன்பு சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கொஞ்சம் ஹெவி டோஸ் ஆக எழுதுகிறோமே எல்லோருக்கும் சென்று சேருமா என்ற சந்தேகத்தோடு எழுதப்பட்ட தலைப்பிட்ட ஆக்கத்தை பலரும் வரிக்குவரி படித்துவிட்டு ஊக்கப்படுத்தும் வகையில் பின்நூட்டம் இட்டு இருப்பதைகாண மிக்க மகிழ்வாக இருக்கிறது.

டெஸ்ட் ஊசி ஒத்துக்கொண்டதால் இத்தகைய ஊசிகள் இனி அவ்வப்போது தொடர்ந்து போடலாம் என்ற தைரியம் வந்துள்ளது.

வழக்கம்போல சவூதியிலிருந்து அலைபேசியிலும் அழைத்து ஆர்வமூட்டிய தம்பி நூர் முகம்மது அவர்களுக்கும் மற்றும் ஜனாப்கள். கவி சபீர், கலாம், அர அல, மு.செ.மு. நெய்னா, இர்பான், தாஜுதீன், MHJ, HARMYS, S. அலாவுதீன், அபு சுலைமான், அபுபக்கர் (இரண்டு பேரும்) மற்றும் அதிரை , முத்துப்பேட்டையில் இருந்து அலைபேசியில் அழைத்து ஊக்கமூட்டிய அனைவருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர். என்றைக்கும் உங்களின் அன்புக்கு அருகதையாக வல்ல இறைவன் ஆக்கிவைப்பானாக.

கவி கலாம் அவர்களே நீங்கள்தான் ஒரு மொழிபெயர்ப்பு வல்லுநர். எனக்கு மொழிபெயர்ப்பு ஒரு விழிபெயர்ப்பு. ஆகவே நீங்களே அந்தப்பணியை செய்து வெளியிட்டால் நலமாக இருக்கும் என கருதுகிறேன். IF YOU DON’T MIND.

இந்த ஆக்கத்தில் ஒரு சந்தேகம் நெறியாளர் அவர்கள் மூலம் கேட்கப்பட்டுள்ளது.

அதாவது “யோசனை மன்சவாடு வண்டி சாட சப்பை“ என்றால் என்ன என்று தனி மின் அஞ்சல் மூலம் கேட்டிருக்கிறார்கள்.

அது ஒரு தெலுங்கு கலைச்சொல்.

ஒரு பனை மரத்தை வெட்டி வீழ்த்தி அதை ஒரு வண்டியில் ஏற்றி கொண்டு செல்ல வேண்டும். இது இரண்டுபேருக்கு விதிக்கப்பட்ட பணி.

பனை மரத்தை வெட்டி கீழே தள்ளிவிட்டால் பிறகு அதை வண்டியில் தூக்கி ஏற்ற ஆள் கிடைக்காது என்பதால் ஒரு யோசனை செய்தார்கள்.

அதன்படி வண்டியை மரத்தோடு ஒட்டி நிறுத்துவது , மரம வெட்டப்பட்டு விழும்போது வண்டியில் விழும்–ஏற்ற ஆள் தேவை இன்றி வண்டியை மரத்துடன் ஒட்டி சென்றுவிடலாம் என்பது யோசனை.

மரம் வெட்டப்பட்டது- அப்படியே வண்டியில் விழுந்தது.

ஆனால் பரிதாபம் மரம விழுந்த வேகத்தில் அதன் எடை தாங்காமல் வண்டி சுக்குநூறாக உடைந்து சிதறிவிட்டது.

அப்போதுதான் அந்த யோசனையை சொன்னவன் சொன்னானாம் “யோசனை மன்சவாடு – வண்டி சாடசப்பை” என்று.

அதன் தமிழ் அர்த்தம் "யோசனை நல்ல யோசனை ஆனால் வண்டி உளுத்துப்போய்விட்டது என்பதாகும்.

இப்படித்தான் அரசுகள் திட்டங்கள் போடும்போது அதை நிறைவேற்றும் முறை சரிதானா? வெற்றி கிட்டுமா ? என்பதையும்- அதை தாங்குகிற வல்லமை -ஏற்கிற வல்லமை திட்டம் சென்று சேரும் இடத்துக்கு உள்ளதா என்று ஆராயாமல் திட்டம் போடுவது.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் இ.அ.காக்கா...

//எனக்கு மொழிபெயர்ப்பு ஒரு விழிபெயர்ப்பு.//

இந்த வார்த்தை விளையாட்டுதான் என்றுமே பரபரப்பு !

மொழிபெயர்ப்பு இல்லையேல் வழியடைக்கிறது மேலேச் சொல்ல ! :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கவிக்காக்கா, மருத்துவராக்கா, விஞ்ஞானியாக்கா, ஆலிம்சாக்கா (அதான் நம்ம அலாவுதீன் காக்கா) வரிசையில் அ.நி.ல் இனி நீங்கள் "பொருளாதாரஹாக்கா" என்று செல்லாமாய் அழைக்கப்படுவீர்கள் தேவலைய்யா???

Anonymous said...

//கவிக்காக்கா, மருத்துவராக்கா, விஞ்ஞானியாக்கா, ஆலிம்சாக்கா (அதான் நம்ம அலாவுதீன் காக்கா) வரிசையில் அ.நி.ல் இனி நீங்கள் "பொருளாதாரஹாக்கா" என்று செல்லாமாய் அழைக்கப்படுவீர்கள் தேவலைய்யா??? //

அன்புள்ள தம்பி மு.செ.மு. நெ. அவர்களே!

அன்புடன் தரும் அனைத்துமே தேவலை,

இபுராஹீம் அன்சாரி

அப்துல்மாலிக் said...

உலகப்பொருளாதாரம்... நிச்சயம் ஒவ்வொருவரும் தெரிந்துக்கோள்ளவேண்டிய திறந்த வெளி புத்தம் இந்த பதிவு, மிக்க நன்றி காக்கா பதிவுக்கு. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு