Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பரீட்சைக்கு படிக்கலாமா? - ஓர் நினைவூட்டல் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | February 21, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல் தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்காகவும் , மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்.

முஸ்லிம்கள் அன்றும் இன்றும்

ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட சமுதாயம். இந்திய விடுதலைக்காக கடினமாக பாடுபட்ட இஸ்லாமிய சமுதாயம் சிந்திய இரத்தங்கள்தான் எத்தனை. மேலும் விடுதலைக்காக தங்கள் சொத்துக்களை இழந்து, உயிரையும் தியாகம் செய்ததற்கு பரிசாக இன்று தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியும், இந்திய நாட்டில் கொத்தடிமைகளாக வாழும் நிலைக்கும், அரபு நாடுகளிலோ இரண்டாந்தர குடிமக்களைவிட எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவல நிலைக்கு நம்மை தள்ளியது ஒரு கூட்டம்.

அந்த கூட்டங்கள் இந்திய விடுதலைக்காக துரும்பளவு கூட தியாகம் செய்தவர்கள் கிடையாது. ஆனால் தியாகச் செம்மல்கள் என்று தம்மை வரலாற்றில் பதிவு செய்து கொண்ட பொய்யின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து வளங்களையும் தங்களுக்கு சாதகமாக்கி, முஸ்லீம்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தி அரசிலும், நாட்டிலும் எந்த சலுகையும் அனுபவித்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இன்று வரை இருந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் ஆங்கிலேயன் காலத்தில் நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை சுதந்திர இந்தியாவில் அகற்றியும் அன்றும் இன்றும் அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு முஸ்லீம் சமுதாயத்தை மட்டும் எந்த விதத்திலும் முன்னேற விடாமல், அரசுதுறைகளில் நுழைய விடாமல் எல்லா துறைகளிலும் திறமையாக பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டு தன்னை மட்டும் மனித இனம் என்று கூறி தற்பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது கயவர்கள் கூட்டம்.

முஸ்லிம் சமுதாயத்தில் படிப்பறிவு என்பது மிக மிக கீழ் நிலையில் படுபாதாளத்தில் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் விடுதலை பெறுவதற்காக படிப்பை நம் முன்னோர்கள் விட்ட காரணத்தால் இன்று வரை கல்வியில் வீழ்ந்தே கிடக்கிறோம். நம்முடைய தியாகத்திற்கு முதல் பரிசு நமக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறி கொடுத்தது. இரண்டாம் பரிசு தீவிரவாதி என்ற பெயர் - நாம் பெற்ற இந்த இரண்டு பரிசுகளாலும் கல்வியிலும், வாழ்விலும் பின்தங்கிவிட்டோம்.

பெற்றோர்களின் கவனத்திற்கு:

தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல வரும் இறுதித்தேர்வில் எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த இறுதித் தேர்வுக்காக நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி, ஷைத்தானின் மொத்த உருவமான சினிமா, பாடல்கள், மெகா சீரியல்கள் இவை அனைத்திற்கும் விடை கொடுத்து விடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் எந்த நன்மையையும் பெற்றுத்தராதவற்றின் பக்கம் நெருங்கலாமா? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் மேலும் வல்ல அல்லாஹ் கூறுவதைப்பாருங்கள்:

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3).

பரீட்சைக்கு நாம் எப்படி தயாராவது:

திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்ய முடியும். வெளியூருக்கு போகுமுன் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஊரில் செல்லும் இடங்களை முன் கூட்டியே திட்டமிட்டு விடுகிறோம். அந்த ஊரில் போய் திட்டமிடுவதில்லை. அதுபோல் ஒவ்வொரு தேர்வின் பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஒரு அட்டவணை தயார் செய்து அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாக பிரித்து படித்து முடித்து விடுங்கள். மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கு பரீட்சையில் கைகொடுத்து உங்களுக்கு வெற்றியை கிடைக்கச் செய்யும். இதை தவிர வெறும் மனப்பாடம் எந்த வகையிலும் பயன் அளிக்காது. படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.

நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

படிக்கும் நேரங்கள்:

பெற்றோர்களே பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று தொல்லை கொடுக்காதீர்கள். கண் விழித்து படிப்பதால் உடலில் தொந்தரவுகளும், மனச்சோர்வும்தான் ஏற்படும். அப்படி படித்தாலும் மனதில் அதிக நாட்களுக்கு படித்தது ஞாபகம் இருக்காது. அதனால் இரவு 10 அல்லது 10:30க்குள் படித்து முடித்து விட்டு உறங்கச் சொல்லுங்கள். விடியற்காலை 3:30 அல்லது 4 மணிக்கு எழுந்த வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு 2 ரக்காஅத் நபில் தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும். அதோடு ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் தொழுது விட்டு தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள். காலையில் ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரத்தில் 3 மணி நேரம் படிப்பதற்கு சமம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பதை அவரவர் வசதிக்கு தக்கவாறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். பள்ளி நாட்களில் 7 முதல் 8 மணி நேரமும் விடுமுறை நாட்களில் 10 முதல் 13 மணி நேரம் என்று தனித்தனியாக நேரங்களை பிரித்து அந்த நேரங்களில் படிக்கலாம்.

உடல் ஆரோக்கியம்:

உடலுக்கு தூக்கம் அவசியமான ஒன்று. இரவில் 5 மணி நேரம் தூங்குங்கள். மதியம் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுங்கள். இது தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அதனால் எண்ணெய் பொருட்களை மிக குறைவாக சாப்பிடுங்கள். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள், இதனால் சுறுசுறுப்பு ஏற்படும். அதே நேரத்தில் உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான பால் குடிப்பது சிறந்தது. பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள் அவரவர் வசதிக்கேற்றவாறு குடிக்கலாம். நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில் நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.

நினைவாற்றல் பெருக:

மனிதர்களின் மூளை சிறியது இது முன்னூறு கோடி நரம்பு செல்களை கொண்டது. நமது மூளையில் உள்ள 'கார்டெக்ஸ்' என்ற பகுதி நாம் கேட்கும் ஒலி, பார்க்கும் ஒளி, நுகரும் மணம், நாவின் சுவை இவைகளை ஆய்வு செய்த பின் நம்மை உணரச் செய்கிறது. தேவையானால் பதிவு செய்தும் வைத்துக்கொள்கிறது. இப்படி பார்க்கும், கேட்கும், உணரும், அறியும் விஷயங்களை ஒன்று சேர்த்து மூளையில் பதிவு செய்வதுதான் 'நினைவாற்றல்' என்பது. வகுப்பில் ஆசிரியர் பாடங்கள் நடத்தும்போது அதிக கவனம் செலுத்தி நம் மனதில் தேவையற்ற கவனச்சிதறல்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டு உன்னிப்பாக கவனித்து மனதில் உள்வாங்கிக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் அளிக்கும். இப்படி பாடங்களை மனதில் பதிய வைத்து மீண்டும், மீண்டும் பாடங்களை படிக்கும்பொழுது நம் மனதில் மறந்து போகாத அளவுக்கு பதிந்து விடும்.

நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களே! நீங்கள் படிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் கவனித்து நீங்கள் என்னவாக வர வேண்டும் என்பதை டாக்டர், இன்ஜீனியர், ஆசிரியர், வக்கீல் இப்படி எந்த துறையை விரும்புகிறீர்களோ அதை அடிக்கடி மனதில் நினைத்து மிக ஆர்வத்துடன் படிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். நீர்தான் உலகில் உயிர் வாழ முக்கியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீர் அதிகம் தேவை. உடல் குளிர்ச்சியாய் இருக்கும்பொழுது கவனம் மிக சுலபமாகி விடும்.

நினைவாற்றலுக்கு கை கொடுக்கும் உணவு

மூளை நரம்பில் நியூரான் என்ற செல் உள்ளது. இந்த செல்தான் கேட்பது, பார்ப்பது, உணர்வது போன்றவற்றை ஒருங்கிணைக்கும். இதற்கு பி1 வைட்டமின் தேவை. இதில் உள்ள தியாமின் என்ற புரதம் நினைவாற்றல் பெருக உதவி செய்கிறது. தியாமின் குறைபாடு ஏற்பட்டால் நினைவாற்றலில் குறை ஏற்படும். அதனால் தியாமின் அதிகமுள்ள கோதுமை, கடலை, தானியங்கள், பச்சைபட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவு சாப்பிட வேண்டும்.(எங்க உம்மாவே காய்கறி சாப்பிடமாட்டார்கள் எனக்கு எப்படி இதையெல்லாம் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம் - உம்மாவிடம் அவசியத்தை எடுத்து கூறுங்கள்). உணவுதான் இயற்கை மருந்து முடிந்தளவு அவரவர் வசதிக்கேற்றவாறு தியாமின் உணவுகளை சாப்பிட முயற்சித்தால் மூளையின் சக்தி குறையாது. நினைவாற்றலும் பெருகும். தங்களால் முடிந்தவரை பின்பற்றுங்கள்.
(வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வாணிபனிடம் (அரிசி,மளிகைபொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பவர்)கொண்டு போய் கொடுத்து ஆரோக்கியமாக இருங்கள் என்பது பழமொழி).

மேலும் : ‘‘ ரப்பி ஜித்னி இல்மா ’’ ‘‘இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! ’’ (அல்குர்ஆன் : 20:114) என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து வாருங்கள்.

மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்:

மாணவ மாணவியரின் மனது ஷைத்தானின் ஆதிக்கமான தொலைக்காட்சியின் மீது ஒன்றி விட்டது. இந்த தொலைக்காட்சிகள் சமூக நலனில் அக்கரை கொண்டு செயல்படவில்லை. பணத்தை குறிக்கோளாக கொண்டு தன்னை, தன் குடும்பத்தை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே என்று செயல்படுகிறது. அதனால் இதன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுங்கள். கடந்த காலங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் பெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்டபொழுது படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம் என்றார்கள். மேலும் 9ஆம் வகுப்பு முதல் எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறந்த முறையில் படித்து முன்னேற்றம் அடைவதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதோடு தாங்களும் தன்னிறைவு பெற்று இந்த சமுதாயத்தில் வீழ்ந்து கிடப்பவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். கல்வி பலவிதங்களிலும் எட்டாத சமுதாயத்தில் இருக்கிறோம். நாம் சிறப்பான முறையில் படித்து வெளி வந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள். எக்காரணத்தை கொண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள். எனக்கு மறதி இருக்கிறதே என்று கலங்கி நின்று விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோடு இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டாது. என்னால் முடியும் எனக்கு இறைவன் உதவி செய்வான் என்ற தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். இறைவனின் உதவி கிடைக்க தினமும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். மேலும் படிப்பின் மேல் தாங்கள் செலுத்தும் ஆர்வமும், கவனமும் கைகொடுக்கும்.

பரீட்சைக்கு செல்வதற்கு முன்:

பரீட்சைக்கு முன் தினம் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம். விடியல் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு அன்றைய தினத்தின் பரீட்சைக்கான பாடத்தை மீண்டும் படியுங்கள். மிதமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் வரும். வீட்டை விட்டு கிளம்பும் முன் 2 ரக்காஅத் தொழுது பிரார்த்தனை செய்து விட்டு கிளம்புங்கள். சுத்தமான உடை அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு அரைமணி நேரம் முன்னதாக சென்று விடுங்கள். இது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காது. பேனா, பென்சில், ரப்பர் எவையெல்லாம் தேவையோ அவைகளை ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்திருப்பது நல்லது. மேலும் பரீட்சை ஹால் நுழைவுச் சீட்டு, பரீட்சைக்கான அனைத்து பொருட்களையும், தங்களின் ட்ரெஸ்ஸையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரீட்சைக்கு புறப்படும் நேரத்தில் பொருள்களை காணவில்லை என்று தேடிக் கொண்டு இருந்தால் டென்ஷனாகி வீட்டில் பெற்றோரிடமும் திட்டு வாங்கி பரீட்சையில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.

பரீட்சை ஹாலில்:

பரீட்சை பேப்பர் வாங்கியவுடன் முதலில் தேர்வின் எண், பெயர், பாடம், நாள் இவைகளை தெளிவாக பேப்பரில் எழுதி விடுங்கள். பிறகு கேள்வித்தாளை வாங்கியவுடன் பதற்றபடாமல் விடை தெரிந்த கேள்விகளை டிக் செய்து கொள்ளுங்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் தெரிந்த கேள்விகளுக்கு கேள்வித்தாளில் உள்ள எண்களை கவனமாக பேப்பரில் எழுதி கையெழுத்து அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகான முறையில் பதிலை எழுதுங்கள். பிறகு தெரியாத கேள்விகளை யோசித்து எழுதுங்கள். எல்லாம் எழுதி முடித்த பிறகு அண்டர்லைன் இட வேண்டிய இடங்களில் அண்டர்லைன் போடுங்கள். பெல் அடிக்கும் வரை ஹாலில் இருந்து மீண்டும் மீண்டும் கேள்வித்தாளையும் எழுதிய பேப்பரையும் படித்து பாருங்கள். விட்ட கேள்விகளுக்கும் பதில் ஞாபகம் வரும். தவறாக எழுதி இருந்தால் திருத்திக் கொள்ளலாம். பெல் அடிப்பதற்கு முன் பேப்பரை கொடுத்து விடாதீர்கள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் விடுபட்ட போன கேள்விகளுக்கு பதில் ஞாபகம் வந்து எழுதாமல் போய் விட்டோமே என்ற கவலை தங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் கவலையை தூர எறிந்து விட்டு வல்ல அல்லாஹ் போதுமானவன் என்ற நினைப்புடன் அடுத்த பரீட்சைக்கு தங்களை தயார்படுத்துங்கள்.

பெற்றோர்களின் உதவி:

தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டின் சூழ்நிலைகளை அமைதியாக்கிக்கொடுங்கள். தாங்கள் செய்ய வேண்டிய உதவிகள் அதிக அளவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை வல்ல அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதனால் வல்ல அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் படித்தோமா? நம் பிள்ளை படிப்பதற்கு என்று சும்மா இருந்து விடாமல் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் வல்ல அல்லாஹ் மேல் பொறுப்பு சாட்ட வேண்டும்.

எழுத்துப்பயிற்சி:

மாணவ, மாணவியர்களே! நீங்கள் எழுத்துப்பயிற்சியில்தான் கவனக்குறைவாக இருக்கிறீர்கள். அதனால் மீண்டும் உங்களை வலியுறுத்துகிறேன். நாம் மனப்பாடம் செய்வதை தேர்வில் ஒப்பிக்க போவதில்லை. பேப்பரில்தான் எழுதுகிறோம். ஆகையால் படிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் அதிகமாக எழுதி பார்ப்பதற்கு கொடுக்க வேண்டும். அதனால் படித்ததை எழுதிப் பார்ப்பதுதான் சிறந்தது. எழுதுவது வீண் வேலை என்று இருந்து விடாதீர்கள். எழுத அவசியம் முயற்சி செய்யுங்கள். (ஆரம்பத்தில் சிரமமாகத்தோன்றும், பிறகு சுலபமாகிவிடும்). நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள். எழுதியதை வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கொடுத்து திருத்தச்சொல்லுங்கள். யாரும் கிடைக்காத நேரத்தில் தாங்களே திருத்திக்கொள்ளுங்கள். மாணவ, மாணவியரே வல்ல அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 58:11)

- S.அலாவுதீன்


குறிப்பு : சென்ற வருடம் நான்கு பக்கத்தில் தரமான காகித்தில் அச்சடித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பள்ளி, மற்றும் வீடுகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அதேபோல் இவ்வருடமும் இதனை பிரசுரமாக வினியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

19 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

// சென்ற வருடம் நான்கு பக்கத்தில் தரமான காகித்தில் அச்சடித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பள்ளி, மற்றும் வீடுகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அதேபோல் இவ்வருடமும் இதனை பிரசுரமாக வினியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//

கண்டிப்பாக செய்யவேண்டியவை !

சேக்கனா M. நிஜாம் said...

பெறுநர் : அதிரை நெறியாளர்

“மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு” என தலைப்பிட்டு அதிரை நிருபர் குழுவில் உள்ள அனைவரும் தலா ஓரு கட்டுரை வீதம் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஒரு புத்தகமாக தொகுத்து இலவசமாக வெளியீட ஏற்பாடு செய்யலாமே ?

Anonymous said...

சகோதரர் சேக்கனா M.நிஜாம் அவர்களுக்கு

தங்களின் கருத்திற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

//“மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு”// மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டல் என்ற தூய எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்டு செயலில் இருக்கும் "அதிரை கல்விச் சேவையகம்" Adirai Educational Mission - AEM சிறப்புடன் செய்து வருகிறது அதன் பணி தொடரும் இன்ஷா அல்லாஹ்...

பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று தனது சுய விருப்பு வெறுப்புகளையெல்லாம் தியாகம் செய்தவர்களும் இதனை வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள், அந்த தியகத்தின் உள்ளளர்ந்த கவலையை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இப்போதைக்கு, கண் விழித்து படிப்பதை விட, விழித்திருக்கும்போதே படிப்பது சாலச் சிறந்தது...

-நெறியாளர்
www.adirainirubar.in

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தரமான பதிவு!

// கண் விழித்து படிப்பதை விட, விழித்திருக்கும்போதே படிப்பது சாலச் சிறந்தது//

சரியான வார்த்தை!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அலாவுதீன் காக்காவின் நினைவூட்டல்.பெற்றோர்களாகிய எங்கள் சிந்தையை நனைக்கிறது.

/முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள்.//

அதிரை மண்ணை ஆட்சி செய்யும் தாய்மார்கள் தானே பிள்ளைகளை கண்காணிக்கிறார்கள்.இத்துடன் பெண்கள் சக பெண்களோடு சேர்ந்து வீண் பேச்சுகள் பேசி நேரத்தை வீணடிப்பதையும் தவிர்த்தால்.பிள்ளைகளிடம் முழு கவனத்தையும் செலுத்தி படிப்பில் பரிதவிக்கும் அவர்களை கரை சேர்க்கலாம்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள நண்பர் எஸ்.அலாவுதீன் அவர்களின் கட்டுரையின் ஒவ்வொரு வரியும் அருமை.

முத்தாய்ப்பாக குறிப்பில் குறிப்பிட்டுள்ள தகவல் வரவேற்புக்குரியது, பாராட்டுதலுக்குரியது.

முயற்சிகள் தொடர துஆசெய்கிறோம்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பெற்றோர்களின் உதவி:

தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டின் சூழ்நிலைகளை அமைதியாக்கிக் கொடுங்கள். தாங்கள் செய்ய வேண்டிய உதவிகள் அதிக அளவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை வல்ல அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதனால் வல்ல அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் படித்தோமா? நம் பிள்ளை படிப்பதற்கு என்று சும்மா இருந்து விடாமல் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் வல்ல அல்லாஹ் மேல் பொறுப்பு சாட்ட வேண்டும்.//

வீட்டிலுள்ளவர்களின் ஒத்துழைப்பின் அவசியத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

மீள் பதிவாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்வுக்கு முன்னர் பெற்றோர்கள் இதை படித்தால் தம் பிள்ளைகளுக்கு அறிவுரையுடன் சேர்ந்து உதவியும் செய்ய தூண்டும்.

//வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.//

இந்த அறிவுரை மாணவமணிகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Masha-Allah,

Alavudeen kaka, really your above article must be added in a portion of the social/study subject and the compulsory question to be asked from the above article with lump-sum marks in order to pass easily.

"ஒவ்வொரு பூக்களுமே" a film song has already been added in the text book but unfortunately they (Govt.) forgot to add this fine article in the text book of the students to teach them moral studies.

May Allah show the right path to our community even though lot of disturbances coming from all directions of the world. Aameen...

Keep posting this kind of articles to harvest lot of educated from our society.

Thanks a lot and wassalaam.

MSM Naina Mohamed.

அப்துல்மாலிக் said...

குட் அட்வைஸ், நிச்சயம் நோட்டீஸாக விணீயோகிக்க வழிவகை செய்ய வேண்டும், ஜஸாக்கல்லாஹ்...

ZAKIR HUSSAIN said...

படிக்க வசதியில்லாமல் போன மாணவர்களை பார்க்கும்போது மனதுக்குள் ஒரு கவலை வரும்....படிக்க வசதியிருந்தும் படிக்காமல் 'தள்ளிப்போடும்' மனம் உள்ள மாணவர்கள் உடன் உன் அறிவுரையை பின்பற்றினால் நல்ல மார்க் எடுக்க முடியும்.

ZAKIR HUSSAIN said...

//வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள்//

இது இந்தியாவுக்கு பொருத்தமாக இருக்கும். இங்கு [ மலேசியாவில் ] நடக்கும் அனைத்து பள்ளிக்கூட அரசு தேர்வுகளுக்கும் பயிற்சியளிப்பது டெலிவிசனில்தான். There is a special channel for that. [ Finally they know how to use TV for a good cause]

அதனால் இப்போது விளம்பரம் போடுகிறார்கள். டெலிவிசன் பார்க்க மறக்காதே என்று ஒரு தாய் தன் பிள்ளையிடம் சொல்வதாக.

sabeer.abushahruk said...

தெளிவான வழிகாட்டுதல்கள். இவ்வருடமும் துண்டுப் பிரசுரங்களாக வெளியிடுவதில் மகிழ்ச்சி.

அலாவுதீனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

Ahamed irshad said...

புரியும்ப‌டியான‌ வ‌ழிகாட்ட‌ல்..எல்லோரும் சொல்வ‌து துண்டு பிர‌சுர‌மாக‌ விநியோகிக்க‌லாம்..

Ahamed irshad said...

எல்லோரும் சொல்வ‌து துண்டு பிர‌சுர‌மாக‌ விநியோகிக்க‌லாம்..//

இதில் எல்லோரும் சொல்வ‌து 'போல்' என்று ப‌டித்து கொள்ளுங்க‌ள்..

KALAM SHAICK ABDUL KADER said...

விடை தெரிந்தும் வெற்றி அடைய வினா அறியாமல் படித்தும் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில்,

”வெற்றிக்கான வினாவும்-விடையும்” அறிவிக்கப்பட்டும் படிக்காமலும்; உணர்வே இன்றியும் உள்ளோம்! ஆம். அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கள் நினைவூட்டிய அல்-குர் ஆன் வசனம்:

//காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3).//

“வெற்றி” எனபது என்ன? என்ற வினாவினையும் கொடுத்து, அவ்வினாவின் விடையும் கொடுத்து இருந்தும் இன்னும் உணராமல் உள்ளோம்.

இறைநம்பிக்கை+தன்னம்பிக்கை= வெற்றி என்ற சமன்பாடும் கவனத்தில் கொள்க மாணவர்காள்!

Noor Mohamed said...

மொத்தமும் முத்தான ஆக்கப் பூர்வமான அறிவுரைகளைத் தந்துள்ளார் சகோதரர் அலாவுதீன். தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவியர்கள் கண்டிப்பாக படிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

நமதூரைப் பொறுத்தவரை இப்போது சராசரியாக இன்டர்நெட் வசதியுள்ள வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வசதியை ஆன்லைன், சேட்டிங், மின்சாரம் இல்லாத நேரத்தில் விடுபட்டுள்ள சீரியல்களைப் பார்ப்பது, மற்றும் ஆகாத போகாத பொழுது போக்குகள் இவைகளுக்குத்தான் அதிகமானோர் உபயோகப் படுத்துகின்றனர். இதுபோன்ற பயனுள்ள தளங்கள் இருப்பது படித்தவர்கள் பலருக்குக்கூடத் தெரியாது.

இந்த தளத்தை முதலில் ஊரில் முறையாக படிப்பவர்கள் மூலம் பிறருக்கு அறிமுகப்படுத்தி, இதுபோன்ற இன்றியமையாத காலத்திற்கேற்ற கட்டுரைகளை காலம் தவறாமல் ஒருவர் படித்து பலருக்கு எத்திவைத்தால், பாதி அளவாவது நம் நோக்கங்கள் நிறைவேறும்.

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

//// குறிப்பு : சென்ற வருடம் நான்கு பக்கத்தில் தரமான காகித்தில் அச்சடித்து அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும், பள்ளி, மற்றும் வீடுகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது அதேபோல் இவ்வருடமும் இதனை பிரசுரமாக வினியோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.///

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!தங்களின் பணிக்கு வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை வழங்கி அருள் புரியட்டும்!
*********************************************************************

கருத்திட்ட அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
*********************************************************************

குறிப்பு : அ.நிக்கு ஓர் விண்ணப்பம் : கோடை கால விடுமுறையில் ஊரில் நிறைய திருமணங்கள் நடக்க இருக்கிறது. அப்படியே வரதட்சனை சம்பந்தமான அனைத்து கட்டுரைகளையும் பரீட்சை விடுமுறை ஆரம்பித்தவுடன் மீள் பதிவு செய்யவும்.

Yasir said...

படித்து கொண்டு இருக்கும் செல்வங்களுக்கு ஒரு பக்குவமான ஆக்கம்...வாழ்த்துக்கள் காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு