அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரைநிருபர் தளத்தில், ‘அதிரையில் சுழற்றியடித்த காற்றும் இசை இரைச்சலும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானதும், இதன் தொடர்ச்சியாக வந்த பின்னூட்டங்களில், இஸ்லாத்தில் இசை கூடும் என்று அன்பு சகோதரர் ஒருவரால் ஒரு சில வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன. இருப்பினும், அறிவைத் தேடும் முயற்சியில், இசை வெறுக்கப்பட வேண்டியதா? என்ற கேள்வியுடன் மீண்டும் ஒரு முறை என்னுடைய முயற்சியை ஆரம்பித்தேன். கடந்த ஓரு மாதமாக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படியில், முடிந்தவரை திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகள், மற்றும் குர்ஆன் சுன்னாவைப் போதிக்கும் மார்க்க அறிஞர்களின் தொகுப்புகளை ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். மனிதன் என்ற முறையில் இந்தப் பதிவில் தவறு இருப்பின், அதற்குப் பொறுப்பு நானே. இந்த ஆய்வு சரியாக இருந்தால், அதற்குப் போதுமானவன் அல்லாஹ் ஒருவனே.
இக்கட்டுரை, திருகுர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையிலும், குர்ஆன் சுன்னாவை 1400 ஆண்டுகள் முதல் இன்று வரை எடுத்துரைக்கும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் விளக்கங்களின் அடைப்படையிலும் தொகுப்பட்டது என்பதை இதை வாசிக்கும் அன்பு நேசங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். குர்ஆன் மற்றும் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் அல்லாமல் சொந்தக் கருத்தாக ஒரு பெரியார் சொன்னார், ஒரு அறிஞர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எடுத்துவைக்கும் எந்த வாதமும் இஸ்லாமிய சட்டமாகாது என்பதையும் இங்கு நினைவூட்டுகிறேன்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் எதைப் பேசினாலும், அது அவர்களின் சொந்த கருத்தன்று; அவர்கள் ‘வஹி’யின் அடிப்படையிலே பேசுகிறார்கள் என்ற நம்பிக்கை நம்மில் மீண்டும் வரவேண்டும் என்பதை ஞாபகமூட்டும் விதமாகப் பின்வரும் குர்ஆன் வசனங்களைத் தொகுத்தளிக்கிறேன் .
53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
திருக்குர் ஆன் ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)
சரி, தலைப்பு வருகிறேன். மனிதப் படைப்பில் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய அருள்களுள் ஒன்று, குரல். மனிதக் குரலில் இருந்து எழும் ஓசையாக இருந்தாலும், வேறு எந்தச் சாதனத்தின் மூலம் எழுப்படும் ஓசையாக இருந்தாலும், அது மனிதர்களிடம் முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது நம் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
“அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று குர்ஆன் வசனத்தை சாதாரணமாக வாசிப்பதற்கும், அதனை ஒரு ‘கிராஅத்’ வடிவில் வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இதுபோல், அமைதியாக எழும் ஊக்கத்தைவிட, உயர்ந்த குரலில் பேசும் தாக்கம் அதிகம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. மேலும் அமைதியாகப் பேசும்போது, கேட்பவருக்கு இரக்கம் ஏற்படும்; குரலை உயர்த்திப் பேசும்போது, அதனைக் கேட்பவருக்கு பயம் அல்லது கோபம் ஏற்படும். அமைதியாகப் பேசுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. மாறாக, தடித்த குரலில் பேசுவதை இஸ்லாம் தடை செய்கிறது. இன்னும் தகவலுக்காகச் சொல்லுவதென்றால், பெண்கள் பொதுவில் சாதாரணமாகப் பேசுவதற்கு இஸ்லாம் அனுமதித்திருந்தாலும், குழைந்து குழைந்து பேசுவதைத் தடை செய்துள்ளது. இரண்டும் ஓசைகள்தான். ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள தாக்கம் ஏராளம். இப்படி ஓசைகள் தொடர்பாக இஸ்லாம் அக்கு வேறாக ஆணி வேறாகப் பிரித்துச் சட்டம் சொல்லியுள்ளது. இது போல், உள்ளங்களில் எவை எல்லாம் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை (நல்லவை அல்லது தீயவை) இஸ்லாம் விரிவாக வகுத்தும் பிரித்தும் சொல்லியிருக்கிறது. இப்படி மனித ஓசை, மற்ற சாதனங்களின் ஓசைகளை நாம் எப்படிப் பயன்படுத்தக் கூடாது, அல்லது பயன்படுத்த வேண்டும் என்பதை இனிப் பார்ப்போம்.
மனிதனின் குரல் வளத்தின் பரிணாமம்தான் பாடல். மனிதக் குரலின் மூலம் நூற்றுக் கணக்கானவை ஓசையின் வாயிலாக வெளிப்படுவதைப் போல் ஒரு வெளிப்பாடுதான் பாடல் என்றும் சொல்லலாம். இருப்பினும், பாடல் என்றால், 99 சதவீதம் இசைக் கருவிகளின் தாக்கமில்லாமல் இல்லை. அப்படி இசைக் கருவிகளின் தாக்கமில்லாத பாடல்கள் வந்தாலும், ரசனை என்ற அடிப்படையில், அப்பாடல் படிப்பவனையும் கேட்பவனையும் கை தட்டியும் தலையை அசைய விட்டும் இருவரையும் ஆட வைத்துவிடுகிறது என்பது எதார்த்தமான உண்மை. இவற்றில் ஓரிரு பாடல்கள் விதிவிலக்காக இருக்கலாம். இது நாம் கண்டுவரும் அன்றாட நிகழ்வு என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
முன்பு இஸ்லாமியப் பாடல்கள் இசையில்லாமல் வந்தன. EM ஹனீபா போன்றவர்களால் இசைக் கருவிகளின் ஓசைகள் சேர்க்கப்பட்டு வெளிவரத் தொடங்கின. பாடலுக்கு ஒரு குணமுண்டு; இசைக் கருவிகளைத் தன்னுடன் இணைத்துக்கொள்வது. இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலும் ராகம், லயம், தாளம் போன்ற ஓசை வடிவங்களில் பாடல்கள் பாடப்பட்டுகின்றன. இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. நவீன கால இசைக் கலைஞர் இயக்கும் 90 சதவீத இசைக் கருவிகளின் தாக்கம், அவர்கள் தரும் பாடல் வரிகளை முக்கியத்துவமற்றதாகவே தள்ளிவிடுகிறது. இசைக் கருவிகளுடன் இணையாத பாடல்கள் இரண்டாம் தரமாகவே அண்மைக் காலங்களின் கருத்தப்படுகிறது என்பது எதார்த்தமான உண்மை.
இசை, பாடல் இரண்டும் இரண்டறக் கலந்த அம்சமாகும். சில இடங்களிலேயே அவை தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம், அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடை செய்வதை அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவைக் கொண்டு தெளிவு படுத்துகிறது
1) “மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)
குர்ஆனில் நிறைய வசனங்களை ஆராய்ந்தால், வீணான வெட்டிப் பேச்சுக்கள் பேசுவதைத் தடை செய்கிறது என்று திருக்குர்ஆனைப் பொருள் உணர்ந்து படிக்கும் அனைவருக்கும் புரியும். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள ‘வீணான செய்திகள்’ என்று குறிப்பிடுபவைகள் ஏராளமாக இருந்தாலும் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்கல் என்ற வர்ணிப்பிற்கு ஒத்த அம்சம் என்ன என்பதை, இரண்டு நபித் தோழர்களின் விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.
2) “எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ‘வீணான செய்திகள்’ என்பது இசை கலந்த பாடலையே குறிக்கிறது.” என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)
3) “பாடல் போன்றவைகளைப் பற்றியே இவ்வசனம் இறங்கியது.” என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார். (அதபுல் முஃப்ரத்-1265, பைஹகீ-10-221-223)
இசை மூலம் ஷைத்தான் ஒருவனது ஆன்மீகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்பதையும், வழிகேட்டின்பால் இட்டுச் செல்கிறான் என்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள இறைவசனம் தெளிவாக விளக்கப்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்களுடனும், திருக்குர்ஆனுடனும் அதிகத் தொடர்புடைய நபிth தோழர்கள்தான் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும். இவர்களைவிட குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் தகுதியானவர்கள் வேறு யாரும் அண்மைக் காலத்தில் இருக்க முடியாது. இங்குக் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனத்திற்கான விளக்கத்திற்கு முதலில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விளக்கம் தருகிறார்கள் இப்னு மஸ்வூத் (ரழி). மேலும் இது போன்ற நபித்தோழர்களின் விளக்கங்களை வைத்தே நிறைய தப்ஸீர்கள் (குர்ஆன் விளக்க உரைகள்) வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. குர்ஆனில் நேரடியான வார்த்தை இசை என்று இல்லை என்று வாதிடுபவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களை நன்கு புரிந்துகொள்ள நபித்தோழர்களின் விளங்கங்களைப் புரம் தள்ளி, நவீன காலத்தின் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் வாதங்களை வைத்து, நேரடியாக குர்ஆனில் இசை தடை செய்யப்பட்டுள்ளதாக ஒரு வசனம்கூட இல்லை என்று கூறி, இசையை ஹலாலாக்க முற்படுகிறார்கள், இது அறிவுடமையா? என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.
நபித்தோழர்கள் இருவரின் கருத்தை மேலும் சிலரும் (நபி தோழர்களும்), கண்ணியமிக்க இமாம்கள், முஃபஸ்ஸிரீன்கள் (தப்ஸீர் ஆசிரியர்கள்) ஆகியோரும், ’வீணான பேச்சு’ என்பது பாடல், இசை, இசைக் கருவிகள் என்றே தங்களின் கருத்துகளை அவரவர்களின் நூல்களில் பதிந்துள்ளார்கள். ஒரு சிலர் தங்களை மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு, இசையை ’ஹலால்’ என்று தங்களின் மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கமளித்துள்ளார்கள், அவர்களைப் பின்பற்றி வருபவர்களே இசை கூடும் என்று சொல்லும் கூட்டத்தினர்.
மேல் கூறப்பட்ட வசனம் இசை ’ஹராம்’ என்பதற்குப் போதுமானதெனினும், நபிமொழி அறிவிப்புகள் பலவற்றின் மூலமும் இதனை வன்மையான வார்த்தைகளால் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:
4) “விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)
விபச்சாரம், மது போன்றவை ஹராம் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்த நாம், இவைகளை ஹலாலாகக் கருதுவோருடன் இசையைக் ஹலாலாகக் கருதுபவர்களையும் நபியவர்கள் இணைத்துக் கூறுவதிலிருந்து இசையை அவர்கள் எவ்வளவு மோசமான ஒன்றாகக் கருதியுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
5) “இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவையாகும். சந்தோசத்தின் போது கேட்கும் குழல் ஓசை, சோதனையின் போது கேட்கும் ஓலம்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி) ஆதாரம்: பஸ்ஸார் – 1:377-795 பார்க்க: தஹ்ரீமு ஆலாத்தித் தர்ப் – 52)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த காலம் முதல் மரணிக்கும் காலம் வரை அவர்களோடே இருந்த அனஸ்(ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி நமக்குச் சொல்லுவது என்னவென்றால், சந்தோசத்தின் போதுகூட நபியவர்கள் குழல்கள் மூலம் எழுப்பப்படும் ஓசையைத் தடை செய்தது மட்டுமல்லாமல், ஓலமிடும் ஓசையையும் தடை செய்துள்ளார்கள். இந்த நபிமொழியின் மூலம் நாம் அறியும் விசயம் என்னவென்றால், Wind pipe (குழல்) வகை சார்ந்த அனைத்து இசைக் கருவிகளையும் தடை செய்கிறார்கள். பொதுவாக இசைக் கருவிகளைத் தடை செய்தது மாத்திரமின்றி, ஒரு சில கருவிகளின் பெயர்களைக் குறிப்பிட்டும் தடைசெய்தது, நபியவர்கள் இசையை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை எமக்குத் தெளிவாக்குகிறது.
6) “மது, சூதாட்டம், மேளக் கருவிகளை அல்லாஹ் எனக்குத் தடை செய்துவிட்டான். போதை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அபூதாவூத்-3696, பைஹகீ-10-221)
பொதுவாக இசைக் கருவிகளைத் தடை செய்தது போன்று, இந்த அறிவிப்பில் மேளம் போன்ற அனைத்துக் கருவிகளையும் அல்லாஹ் தன்மீது ஹராமாக்கியதாகக் கூறுகிறார்கள். அல்லாஹ் எனக்குத் தடை செய்துள்ளான் என்று சொல்லுமளவுக்கு, இசைக் கருவிகளின் தரம் இஸ்லாத்தின் பார்வையில் தாழ்ந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக அறிவைத் தேடும் மக்களுக்கு நிச்சயம் புரியும்.
7) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு, அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள், ”(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார்கள். அதற்கு நான், ”ஆம்” என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, ”எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்டபோது, அவர்கள் இதைப் போன்று செய்ததை நான் பார்த்தேன்” என்றும் கூறினார்கள். (நூல்: அஹ்மத் – 4307)
குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
8) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ’புஆஸ்’ எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், ”இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் – 1619)
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் அந்தச் சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.
”ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கருத்தை மறுக்கவில்லை. மாறாக, இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால், இன்றைக்கு மட்டும் விட்டுவிடுங்கள் என விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக் கருவிகள் ஷைத்தானுடையன என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால், ”நீர் சொல்வது தவறு; இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள்.
இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
9) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ் உங்களுக்கு மதுவையும் சூதாட்டத்தையும் மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அஹ்மத்: 2494)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் இந்த ஹதீஸில், இசைக் கருவிகளுள் ஒன்றான மத்தளத்தையும் தடை செய்துவிட்டு, போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன என்று, இசைகருவியைப் போதையூட்டும் பொருளாகச் சொல்லப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இப்படி இசைக்குத் தடை விதிக்கப்பட்ட ஏராளமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர் வரிசையில் குறைபாடுள்ள ஹதீஸ்களைக் கணக்கில் எடுத்தால், இசைக்கு எதிராக 80க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என்பதைத் தகவலுக்காக இங்குப் பதிவு செய்கிறேன்.
மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் இசைக் கருவிகளை முழுமையான வடிவிலே தடை செய்வதை அறிவுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
நபிகளாருடைய காலத்தில் காணப்பட்ட எத்தனையோ கருவிகள் இன்று பல வடிவம் பெற்று வளர்ச்சி அடைந்து, ஒரு கலையம்சமாக மாறிவிட்டன. ஹதீஸ்களிலே இடம்பெறும் வார்த்தைகள் நபிகளாருடைய காலத்திலே காணப்பட்ட கருவிகளைக் குறித்துப் பேசினாலும், அதே இசையை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான கருவிகள் இன்று உபயோகத்தில் உள்ளன. அதே நேரம், இசைக் கருவிகள் என்றுள்ள எல்லாமே அடங்கும் வண்ணம் இடம்பெற்றுள்ள வார்த்தை இவையனைத்தையும் முழுமையாகத் தடை செய்கின்றது என்பதை மேல் சொன்ன ஹதீஸ்களின் அரபி மூல வார்த்தைகளை வைத்துப் புரிந்துகொள்ளலாம். பின் வருபவை அவ்வார்த்தைகள்:
01-معازف அனைத்து இசைக் கருவிகளையும் இது குறிக்கும்.
02-الكوبة-الطبل பறை, பேரிகை, மத்தளம், தவுல், தப்பட்டை போன்ற (Drum) வகைகளை இது குறிக்கும்.
03-ارمزم புல்லாங்குழல் போன்ற காற்று வாத்தியங்கள் (Wind Pipe) வகை சார்ந்த அனைத்தையும் இது குறிக்கும்.
04-القنين வீணை போன்ற நரம்பு வாத்தியங்கள் (Daff) அனைத்தையும் இது குறிக்கிறது.
மேல் சொன்ன குர்ஆன் வசனத்தின் மூலமும் பின் சுட்டிக்காட்டப்பட்ட ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ள இசைக் கருவிகளின் பெயர்களை வைத்து அனைத்து விதமான இசைக் கருவிகளும் எல்லா நாட்களிலும் வெறுக்கப்பட வேண்டியவையே என்பதையே அறிவுள்ள அனைவரும் புரிந்துகொள்வார்கள்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸை (இலக்கம் 8) இசைக்கு ஆதாரமாக ஒரு சிலர் எடுத்துக்காட்டுவார்கள். சிறுமிகள் பெண்கள் பாடிக்கொண்டு தப்ஸ் அடித்துகொண்டிருந்தார்கள்; அபூபக்ர் மட்டுமே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்; நபிகளார் அதனைத் தடுக்கவில்லை; மாறாக, ”அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்; இங்கு அபூபக்ருடையை செயலை நாம் எடுப்பதா? நபிகளாருடைய செயலை எடுப்பதா? என்ற நியாமான கேள்வியை வைத்து, இசையை நபிகளார் தடை செய்யவில்லை என்று வாதிடுபவர்களின் வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், பெருநாள் தினத்தில் மட்டும் சிறுமியர் அல்லது பெண்கள் மட்டுமே அத்துஃப் (الدف) என அழைக்கப்படும் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியை உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்வதுதானே அறிவுடமை. இதுவல்லாமல் ஒவ்வொரு நாளும் இசைக் கருவிகளின் தாக்கமுடைய பாடல் ஓசையைக் கேட்பதற்கோ இசைப்பதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை என்பதை அறிவுள்ள முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் புரிந்திருக்கும்.
ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு ஹஸ்ம் (லாஹிரிய்யா மத்ஹப்வாதி), இமாம் கஸ்ஸாலீ, தற்காலத்தில் வாழும் அறிஞர் யூசுஃப் கர்ளாவீ, இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம்தான் என்று தங்களுடை புத்தகங்களில் எழுதிவைத்ததன் மூலம், இவற்றைப் படித்தவர்கள், மற்றும் இவர்களைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாத்தில் இசைக்குத் தடையில்லை என்று ஒரு சில வாதங்களை எடுத்துவைக்கிறார்கள். இது போன்ற மார்க்க அறிஞர்களையும் சூஃபியாக்களையும் பின்பற்றும் கூட்டமே இசைக் கருவிகளை ஹலாலாக்கி வழிகேட்டின் உச்ச நிலைக்குச் சென்றுள்ளார்கள்.
இஸ்லாமியப் புத்தகங்கள் எழுதுபவர்கள் எல்லாம் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் என்று சொல்லுவது அறிவுடைமையாகாது, இஸ்லாமியப் பார்வையில் உண்மையான அறிஞர் தன்னுடைய மனோ இச்சைக்கு இடமளிக்காமல், குர்ஆன் மற்றும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் இவைகளில் ஆதரப் பூர்வமானவைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் மாறு செய்யாத கருத்துகளைத் தெரிவித்தால் மட்டுமே அவர்களை அறிஞர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர, சொந்தக் கருத்துகளை மார்க்கம் என்று சொல்லும் வேறு எவனையும் மார்க்க அறிஞராக எந்த ஒரு அறிவுடைய முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
ஒரே ஒரு தகவலைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோன். தியாகங்கள் பல செய்து வளர்ந்த நம்முடைய மார்க்கத்திற்காக நாம் என்ன செய்கிறோம் என்று சித்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரை நம்முடைய பல சொந்தங்கள் திருக்குர்ஆனின் அர்த்தங்கள் தெரியாமலே இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். நாம் இருக்கும் இக்காலம் அறிவுப் பொக்கிஷங்கள் நிறைந்த காலம். இக்காலத்தில் நம்முடைய அறிவைப் பயன்படுத்தி, தியாகத்தால் வளர்ந்த இந்த மார்க்கத்தைப் பாதுகாப்பதோடு, இதைப் பிற சமூகத்திற்கு எத்திவைக்கும் வேலை செய்யத் தவறுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க்க் கடமைப் பட்டிருக்கிறோம். இறைவன் நமக்குத் தந்துள்ள இந்தப் பொன்னான நேரத்தை நபிகளார் வெறுத்த அனைத்து இசைக் கருவிகளின் ஓசையிலிருந்தும் விடுபட்டு, நம்முடைய அறிவைக் கொண்டு இந்த்த் தூய மார்க்கத்தை அறியாத மக்களுக்கு எத்திவைக்க ஒவ்வொருவரும் இன்று முதல் முயற்சிக்கலாமே.
சைத்தானின் சூழ்ச்சியால் வந்த இசை என்ற ஒன்றுக்கு இன்று ஒவ்வொரு மனிதனும் அடிமையாகியுள்ளான் என்பதை நான் இங்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. இசைக் கருவிகளை நாம் வெறுத்தால், தொடர்ந்து சினிமாப் பாடல்கள், நம் மொழி சினிமா, பிற மொழி சினிமா, சின்னத்திரை, நாடகங்கள் என்று வீணானவற்றிலிருந்து விடுபடுவோம்; நேர்வழி பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.
எனவே அல்லாஹ்வுடையவும் அவன் தூதருடையவும் எச்சரிக்கைகளைத் தெளிவாக அறிந்த பின், இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இசை கலந்த அனைத்து அம்சங்களையும் வெறுத்துத் தவிர்த்து, அல்லாஹ்விடத்திலே கூலியைப் பெற்றவர்களாக மாறுவோமாக.
இசைக் கருவிகளும் அதனைச் சார்ந்துள்ள பாடல்களும் வெறுக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை இதைப் படிக்கும் அன்பு நேசங்களான நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
திணிக்கப்படும் இசையோசைகளை எப்படித் தவிர்ப்பது என்பது பற்றி வேறொரு பதிவில் மிகச் சுருக்கமாகத் தருகிறேன். இன்ஷா அல்லாஹ்.
-தாஜுதீன்
குறிப்பு: இங்கு இசையற்ற பாடல், அதாவது கவிதைகளைக் குறிப்பிடவில்லை. ’கவிதை - ஓர் இஸ்லாமியப் பார்வை’ என்ற தலைப்பில் அதிரை அஹ்மது அவர்களின் ஆய்வுத் தொடர் அதிரைநிருபரில் வெளிவருவதால், தீர்வு என்னவென்பதை அந்த ஆய்வின் இறுதியில் தெரியும் என்பதால், இங்கு நான் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
என்னுடைய இந்தத் தொகுப்புக்கு உதவியவை:
208 Responses So Far:
«Oldest ‹Older 201 – 208 of 208 Newer› Newest»======================================
அன்புள்ள ஜமீல் காக்கா அவர்களுக்கு,
=======================================
அஸ்ஸலாமு அலைக்கும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (தாரிய்யாத்-56) என்ற வசனத்தில் என்னை வணங்குவதற்காக அன்றியே என்ற வார்த்தைக்கு என்னை அறிவதற்காக என்றும் பொருள் கொள்ளலாம் என்று நான் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா (1) கட்டுரையின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது தொடர்பாக தாங்கள் இந்த இழையில் கேட்டிருந்தவற்றுக்கு, மீண்டும் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா (1) இழையிலேயே பின்னூட்டும் இடுகின்றேன். காண வேண்டுகிறேன்.
>>>>>>>>>>>>>>>>>>>
6:115. மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
>>>>>>>>>>>>>>>>>>
குர்-ஆன் இறைவனுடைய வேதம்.
அது முழுமையானது என்று இறைவனே கூறுகின்றான்.
அவன் கூறுவதை ஏற்பதே இஸ்லாமியரின் வழி
அவனுடைய வார்த்தைகளை எவரும்
மாற்றிச் சொல்லுதல் கூடாது.
அப்படி அழுத்தமாகக் கூறுவதும் அந்த இறைவன்தான்.
நாம் அவன் மீது ஈமான் கொண்டுள்ளோம்
மனிதர்கள் மீது அன்புகொள்வோம்
ஆனால் மனிதர்களின் கூற்றுகள் யாவற்றையும்
நாம் நம்பத் தேவையில்லை
அவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்துதல் அவசியம்
ஹதீஸ் எனப்படுவது நபிகள் நாயகம்
62ம் வயதில் மறைந்ததன் பிறகு
200 வருடங்கள் கழித்து தொகுக்கப்பட்டது
சுமார் எட்டிலிருந்து பத்து தலைமுறைக்கு
வாய்வழியாகவே வந்த செய்திகளைத்
தொகுத்து வழங்கப்பட்ட ஒன்றுதான் ஹதீஸ்
மனிதர்களின் ஞாபக சக்திக்கு எல்லை உண்டு.
அது எப்போதும் குறையுடையது.
வாழும் காலத்தில் சொல்லும் செய்திகள் கூட
ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது
மனிதர்கள் வலிந்து பொய்சொல்கிறார்கள் என்று இல்லை
ஆனால் அவர்களின் ஞாபகசக்தி, கவனம், அக்கறை, புரிந்துணர்வு,
புத்திக்கூர்மை ஆகிவற்றால் ஒரு செய்தி சிதைவடைவது
மிக மிக இயல்பானது.
பொய்மூட்டைகள் தாம் இந்த உலகம் அதிகம்
எது பொய் எது நிஜம் என்பதைக் கண்டறிவது
சிறந்த ஞானிகளுக்கும் இயலுமானதாய் இருப்பதில்லை
அந்த அளவுக்கு பொய் நிஜமுகம் கட்டி ஆடுகின்றது.
குர்-ஆன் உண்மையால் கட்டப்பட்டது
குர்-ஆன் ஒன்றே பொய் தீண்டாத பொக்கிசம்
அன்புடன் புகாரி
>>> 6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். >>>
நாம் இறைவனின் வார்த்தைகளைத்தான் பின்பற்ற வேண்டும்.
ஐயங்களையுடைய மற்ற எதனையும் நாம் பின்பற்றத் தேவையில்லை.
ஆனால் அனைத்தையும் நாம் வாசிக்கலாம்
வாசித்ததை நேசிப்பதிலும் தவறில்லை
ஆனால் அதையே சுவாசிப்பதாக ஆக்கிக்கொள்ளுதல் கூடாது
நம் சுவாசமெல்லாம் குர்-ஆனாகத்தான் இருத்தல் வேண்டும்.
எக்காரணம் கொண்டும் இறைவனுக்கு நாம்
இணைவைத்தல் ஆகாவே ஆகாது
குப்பையிலிருந்து கிடைத்த குண்டுமணி என்று சொல்வார்கள்
அப்படித்தான் உலக அறிஞர்கள் ஒன்றுகூடி
குவிந்துகிடந்த குப்பைகளில் நல்மணிகளைத் தேடினார்கள்
அவர்களின் அறிவுக்கும் புத்திக்கும் அனுபவத்திற்கும் எட்டியவரை
எது குப்பை எது குண்டுமணி என்பதை வகைபிரித்தார்கள்.
ஆயினும் அவை மனிதனின் திறமைக்கு உட்பட்டதே
இறைவனின் சொல்லுக்கு இணையானதாக முடியுமா?
மனிதன் பிழை செய்பவனாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.
அவன் அறிந்து பிழை செய்கிறான் என்றில்லை
அவன் அறியாமல் செய்யும் பிழை மிக அதிகம்
ஏனெனில் அவன் அறிவு ஓர் எல்லைக்கு உட்பட்டது.
எல்லையில்லாப் பேரறிவாளன் இறைவன் ஒருவனே
ஹதீசுகள் நான்கு வகையாகக் கண்டெடுக்கப்பட்டன
1. ஆதாரப்பூர்வமானவை
2. இட்டுக்கட்டப்பட்டவை
3. விடப்படுவதற்கு ஏற்றவை
4. பலவீனமானவை
ஆதாரப்பூர்வமானவை என்று மனித அறிவு ஏற்றுக்கொண்டதைத் தவிர
மற்ற அனைத்தும் குப்பையில் இடப்பட்டன
அதுவும் மிகுந்த சர்ச்சைக்கு உரியதானதாய் இருக்கிறது.
எல்லா ஹதீசுகளையும் எல்லா அறிஞரும் ஏற்றுக்கொள்ளவில்லை
குப்பையென கொட்டிய ஹதீசுகளை நேசிக்கும் அறிஞர்களும் இருக்கிறார்கள்.
ஏகோபித்த தீர்ப்பு என்பது இதில் இல்லை
தங்களின் மன விருப்பத்திற்கும் சொந்த பார்வைக்கும்
ஏற்ற ஹதீசுகளையே ஒவ்வொரு அறிஞரும் பரிந்துரைப்பார்
இது மனித மனவோட்டத்தில் மிக இயல்பானது
பிரிந்துகிடக்கும் பலதரப்பட்ட முஸ்லிம் ஆய்வாளர்களில்
ஒரு வகையினரே அதிகாரம் உடையவர்களாய் இருக்கிறார்கள்
அவர்களின் பரிந்துரைகளே சபை ஏறுவதாய் அமைகிறது
இதில் தவறு எளிதாக உள் நுழைந்துவிடுகிறது
ஹதீசுகளின் தொகுப்பில் மிக மிக முக்கியமான ஒன்று என்னவெனில்
ஹதீசுகளின் கருத்து குர்-ஆனுடன் உடன்படுவதாய் இருத்தல் வேண்டும்
ஆனால் சில ஹதீசுகள் அப்படி இல்லை.
குர்-ஆனில் சொல்லாததை தங்களின் சுய விருப்பத்தின்பேரில்
சொல்வதாக அமைந்திருக்கிறது
இது இறைவனின் குர்-ஆனை அவமதிப்பதாகும்
நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி அவர்கள்,
நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.
என்று ஒரு குறிப்பு சொல்கிறது.
இதன் பொருள் என்ன என்று இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும்.
அறிவினைத் தேடும் அறிவுடையவனே இஸ்லாமியன்
அவனே ஈமான் உடையவன்
இறைவன் வழியில் நாம் எல்லோரும் செல்வோம்
அன்புடன் புகாரி
>>>>6:126. (நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்<<<<
குர்-ஆன் வசனங்களில் மிகப் பெரும்பான்மையான வசனங்கள் மிக மிக எளிமையானவை. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த இறைவசனம் அதற்கொரு எளிய விளக்கம்போல் அமைந்திருக்கிறது.
குர்-ஆனின் மற்ற வசனங்களை அறிவதற்கு கொஞ்சம் கவிதைகளில் பரிச்சயம் இருந்தால் போதும். தெளிவாகப் புரிந்துவிடும்.
சற்றே கடினம் என்று தோன்றும் இறைவசனங்களை ஒருமுறைக்கு இருமுறை வாசித்துப் பாருங்கள். இறைவன் உங்களுக்கு எளிமையாக்கித் தருவான்.
இறைவனின் வழியில் அவனின் நெறிமுறைகளில் இதயத்தையும் அறிவையும் குவித்துப் பார்த்தால் எத்தனை கடினமானதும் தெளிவாக விளங்கும்.
அப்படிக் குவித்துப் பார்க்கும் சிறப்பினைப் பெற்றவர்தான் நபிகள் நாயகம். பாமரர்களுக்கு எடுத்து விவரிப்பதுதான் அவரின் சிறப்புத் தொண்டு.
நபிகளிடம் சந்தேகம் கேட்கும் நிலை பெரும்பாலான வசனங்களுக்கு இல்லை. அவை தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டே இருக்கும். தங்குதடையில்லாமல் புரிவதாகவே இருக்கும்.
நபிகள் அல்லாத சிலர், சில குர்-ஆன் வரிகளுக்கு வேண்டுமென்றே தவறான விளக்கங்களைக் கொடுத்து தங்கள் சுயநலத்திற்காக இஸ்லாமிற்கு கேடு விளைவிக்க முயன்றிருக்கிறார்கள், இன்னமும் முயன்றுகொண்டு இருக்கிறார்கள்.
அறிவைத் தேடும் அறிவுடையோராகிய இஸ்லாமியர் அனைத்தையும் வென்று இனிய இஸ்லாம் மார்க்கத்தை நிலைபெறச் செய்வார்கள் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.
அன்புடன் புகாரி
அதிரை நிருபர்களே,
இதுவரை நாம் கண்ட சான்றுகளின்படி இசை இஸ்லாமில் தடை செய்யப்படவில்லை என்ற உண்மையைக் கண்டோம்.
அல்லாஹ் வெட்டறிவாளும் வேல்கத்தியும் தரித்த ஐயனார் சிலை அல்ல. அன்பே உருவானவன். கருணையே உருவானவன். அருளையே தானாய்க் கொண்டவன்.
அன்புடன் புகாரி
அன்புள்ள சகோதரர்களுக்கு,
இந்த பதிவை அவதானித்துவரும் சகோதரர்களுக்கு தெரியும் பதிவுக்கும், இதன் கருத்துரையாடலுக்கும் தொடர்புடைய கேள்விகளை சகோதரர் அன்புடன் புகாரி அவர்களிடம் கேட்டேன், ஆனால் அவைகளுக்கு இதுவரை தெளிவான பதில் ஏதும் அளிக்காமல் தன்னுடைய சுய கருத்துக்களை ஹதீஸ்களுக்கு விளக்கம் என்ற பெயரில் தந்து இசைக்கு இஸ்லாத்தில் தடையில்லை என்று இறுதியாக கருத்திட்டுள்ளார்.
இந்த பதிவை முழுமையாக படித்தவர்களுக்கு தெளிவாகியிருக்கும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் இஸ்லாத்தில் இசைக்கு தடை என்று.
குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் தொடர்பாக சகோதரர் அன்புடன் புகாரி அவர்களின் அப்பட்டமான இரட்டை நிலைபாட்டை பின் வரும் தேதியிட்ட பின்னூட்டங்களில் சுட்டிகாட்டியிருந்தேன் Thursday, July 12, 2012 11:57:00 AM & Thursday, July 12, 2012 11:59:00 AM ஆனால் இதற்கு எந்த ஒரு மறுப்புமில்லை.
மேலும் ஒரு தலைபட்சமாக அடுத்த கட்டம் என்ற பெயரில் ஒரு ஹதீஸ் 4 இடங்களில் ஷஹீஹ் புகாரியில் பதிவாகி உள்ளது, இந்த ஹதீஸை எடுத்து தனக்கு சாதகமான சுய விளக்கத்தை மட்டும் பின்னூட்டத்தில் பதிந்துவிட்டு இசைக்கு இஸ்லாத்தில் தடையில்லை என்று கருத்திட்டது ஒரு நிலை.
பிறகு ஆதரப்பூர்வமான ஹதீஸ்களை தொகுத்த மாமேதைகளை பற்றி விமர்சனம் செய்து ஷஹீஹான ஹதீஸ்களையும் கேள்வி குறியாக்கி இருப்பது ஒரு நிலை.
ஹதீஸ்கள் தொடர்பான தன்னுடையை பின்னூட்டத்திலும் தான் ஒரு இரட்டை நிலைவாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் சகோதரர் அன்புடன் புகாரி.
சகோதரர் புகாரி இசைக்கு ஆதரவளிக்கும் அதே ஹதீசையை நான் அது இசைக்கு எதிரான ஹதீஸ் என்று மிகத்தெளிவாக இந்த பதிவில் எண் 8 ல் (சிகப்பு, நீல நிற எழுத்தில்) விளக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.
“விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)
இந்த ஹதீஸுக்கும் தன்னுடைய சுய விளக்கத்தை தந்து இசைக்கு வக்காலத்து வாங்க முயற்சி செய்துள்ளார்.
சகோதரர் அன்புடன் புகாரி முன்னர் கேட்ட கேள்விகளுக்கு பதில் நேரடியாக அளித்தால் மட்டுமே இனிமேல் அவருடை கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
"சகோதரர் அன்புடன் புகாரியுடைய சுய கருத்தாடல் முடிவுகள் இந்த கட்டுரைக்கான நிறைவான தீர்வல்ல... என்பதை கவனத்தில் கொள்ளவும்"
அன்புச் சகோ தாஜுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்!
>>>>>>>>>
தான் ஒரு இரட்டை நிலைவாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் சகோதரர் அன்புடன் புகாரி.
>>>>>>>>>
அதிரை நிருபரின் நிர்வாக மடலின்படி, தனி மனித விமரிசத்தைத் தள்ளிவைத்துவிட்டு உங்கள் கருத்துக்களைமட்டும் கன்னியமான முறையும் பதியுங்கள்.
நான் இன்னமும் இந்த இழையில் என் கருத்துக்களை முடிக்கவில்லை.
நாணா ஜமிலின் மடலுக்காகக் காத்திருக்கிறேன். எனக்கு இங்கே நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. நான் சொல்லி முடிக்கும்போது அனைத்துமே ஒரு முடிவுக்கு வரும்.
நான் ஓய்வில் இல்லை பணியில் இருக்கிறேன். எனக்குக் கிடைக்கும் நேரம் மிகமிகக் குறைவு. ஆயினும் முயன்று தகவல்கள் சேகரித்து எழுதுகிறேன் என்பதை தாங்கள் உணர்ந்துகொண்டால் மகிழ்வேன்.
நான் இஸ்லாம் தழைத்தோங்கவே பாடுபடுகிறேன். தவிற இதில் எனக்கு எந்த ஒரு சுயலாபமும் கிடையாது. ஆகவே தனிமனித சாடல் கீறல் விமரிசனங்களை நாம் ஒத்திவைப்போம்!
இங்கே முரணான இரு கருத்தை புகாரி சொல்லுகிறார் என்று கூறுங்கள் அதில் தவறில்லை, ஆனால் இரட்டைநிலைவாதி என்று முத்திரை குத்தாதீர்கள், என்னைப்பற்றி ஏதும் உங்களுக்குத் தெரியாது.
அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்
அவனே ஈமான் மிகக் கொண்டவன்.
அன்புடன் புகாரி
அன்பினிய சகோதர்களே,
நோண்பின் நோக்கமாம் கருணை
அளவற்று நிறைக (ரமதான் கரீம்)
இறைவனின் கருணை நம்மீதும்
நம் கருணை
நம் உறவுகள் நண்பர்கள் மட்டுமின்றி
அயலாரின் மீதும்
நிறைவாய்ப் பொழியட்டும்
சில தினங்கள் விடுப்பெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பினை, ஓரிரு மாதங்களாய் இரைச்சலும் எரிச்சலுமாய் செல்லும் இசை பற்றிய சர்ச்சைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல எண்ணங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையாக்க முயல்கிறேன். இறைவன் அருள்வானாக. நான் திட்டமிட்டுக்கொண்ட உப தலைப்புகளை முதலில் தொகுத்து இங்கே இடுகிறேன். எளிமையாகவும் இறுக்கமாகவுமே எழுதுவதாய் இருக்கிறேன்.
இசைக்கு இசையும் இஸ்லாம்
--------------------------------------
1. குர்-ஆன் இசையைத் தடுக்கின்றதா?
3. இசை என்றால் என்ன?
4. இசையை ஆதரிக்கும் ஹதீஸ்கள்
5. குர்-ஆன் ஹதீஸ் ஓர் ஒப்பீட்டுப் பார்வை
6. ஹதீசுகள் ஏன் எப்படி தொகுக்கப்பட்டன?
7. இஸ்லாமை அழிக்க நினைத்தவர்கள் செய்தவை என்ன?
8. ஹதீசுகளை எப்படி அணுகவேண்டும்?
9. இசையை எதிர்க்கும் ஹதீஸ்கள் எவை?
10. இசை கூடாதென்று கூறும் நபித்தோழர்
11. இசையும் மனித வாழ்வும்
12. முடிவுரை - இசைக்கு இசையும் இஸ்லாம்
நான் எதை எவர் வாய்வழி கேட்டாலும் தீர ஆய்ந்து உண்மையைக் கண்டறியும் திசையில் அவசியம் செயல்படுதல் வேண்டும்.
மேலும் அவர்களில்
எழுத்தறிவில்லாதோரும்
இருக்கின்றனர்;
கட்டுக் கதைகளை
(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர
வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை.
மேலும் அவர்கள்
(ஆதாரமற்ற)
கற்பனை செய்வோர்களாக அன்றி
வேறில்லை - (குர்-ஆன் 2:78)
அறிவினைத் தேடும் அறிவுடையோராய் ஆகுங்கள் என்றே இறைவன் எப்போதும் அழைப்பு விடுத்தவனாய் இருக்கிறான். அவர்களையே ஈமான் கொண்டவர்களாகவும் கொள்கிறான்.
நிச்சயமாக
அல்லாஹ்விடத்தில்
உயிர்ப் பிராணிகளில்
மிக்க கேவலமானவர்கள்
(உண்மையை) அறிந்து கொள்ளாச்
செவிடர்களும் ஊமைகளும் தாம்.
(குர்-ஆன் 8:22)
அன்புடன் புகாரி
Post a Comment