Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு 16

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2012 | , , , ,

ஆன்மாவின் உணவாக
      ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
      நோய்முறிக்கும் ரமலானே!

பாரினிலே குர்ஆனைப்
      பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
      காதுகளில் சொட்டுந்தேன்!

பகைவனான ஷைத்தானைப்
      பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோர்கள்
      தொடரவும்தான் நெறியளித்தாய்!

இருளான ஆன்மாவை
       இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
        அழைத்திடுமுன் வழியாமே!

நண்பனாக மாற்றினாயே
       நாங்களோதும் குர்ஆனை
நண்பனாகப் போற்றுகின்றோம்
       நோன்பையும்தான் மாண்பாக

இம்மாதம் மறையோதி
       இரட்டிப்பு நன்மைகளை
இம்மைக்கும் மறுமைக்கும்
       இனிப்பாகத் தந்திடுமே

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
       புதுச்சுவையும் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
       தினந்தொழுத தராவிஹூமே
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) 
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

16 Responses So Far:

அதிரை சித்திக் said...

ரமலானை பற்றிய கவிதை ..
நயம்பட உரைத்த கவியன்பர்
கலாம் காக அவர்களுக்கு ..
நல வாழ்த்துக்கள் ..
நமதூர் ஜாவியாளில் இலவச சாகர் உணவு
தா மு மு க சார்பில் ஏற்பாடு செய்துள்ளார்கள்
இதில் வெளியூர் மாணவர்கள் ,உள்ளூர் மனைவி இழந்தோர்
உண்மையானா ஏழை எளியோர் பயன் பெறுகிறார்கள்
ஒரு நாள் சாப்பாட்டு செலவு ஐயாயிரம் மட்டுமே ..
நான் கொடுத்து விட்டேன் இன்னும் வாய்ப்புள்ளது
இதனை படிக்கும் அ.நி வாசக நண்பர்கள்
அதிரை சொந்தங்கள் சாகர் விருந்து கொடுத்து மகிழலலாமே ..!

crown said...

ஆன்மாவின் உணவாக
ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
நோய்முறிக்கும் ரமலானே!
----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அருமை! அருமை!! ஆன்மாவுக்கு சத்துமாவு இந்த ரமலான்! அருமையான உவமை! புலமை! நோவுக்கும் மருந்தாகும் ரமலான். நல்ல சிந்தனை!.

crown said...

இருளான ஆன்மாவை
இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
அழைத்திடுமுன் வழியாமே!
-------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்!இறைமறைவழி வெளிச்சத்தின் வழி! ஆமாம் இருள் அடைந்த உள்ளம் தெளிவுபெற திருகுரான் வெளிச்சம் பாய்ச்சுது!

crown said...

நண்பனாக மாற்றினாயே
நாங்களோதும் குர்ஆனை
நண்பனாகப் போற்றுகின்றோம்
நோன்பையும்தான் மாண்பாக
-----------------------------------------------------
ஓதி பழகியதால் நித்தம் நம்முடன் இருக்கும் திருகுரானை நண்பன் என்ற வித்தியாச சிந்தனை! வாழ்வில் வழிகாட்ட வந்த அருள் மறை நண்பன் என்ற நிலைவைத்து பார்த்தல் நலம் தானே?

crown said...

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
புதுச்சுவையும் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
தினந்தொழுத தராவிஹூமே
---------------------------------------------
என்னே சொல் வளம்!!!! எல்லாம் சுவையாகவும். உண்மை நிலையாகவும் உள்ளது.

ZAKIR HUSSAIN said...

//இருளான ஆன்மாவை
இறைமறையின் ஒளியாலே.......//

இந்த வரிகளுக்கும் மனோவியலுக்கும் மிகுந்த சம்பந்தம் உண்டு. மனிதனின் தேடல் பெரும்பாலும், பெண்ணிலும் , மண்ணிலும், பணத்திலும் இருக்கும். எல்லாம் ரத்தம் சூடாக இருக்கும்போது மட்டும்தான்.

கொஞ்ச காலம் ஆனவுடன் ஒரு வெறுமை தோன்றும், அதை நிரப்ப இறை அறிவு/ இறைவனை வணங்குதல் என்று மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மனிதன் தேடிய பணமும், மண்ணும், பெண்ணும் பாரமாகிப்போகும். கடைசியில் ' நல்லாதாப்பான் இருந்தாரு...இப்பொ ஏதோ சமயத்துலெ கிறுக்கு மாதிரி பேசுனதையே பேசிக்கிட்டு இருக்காரு" என்று பொடுசுகள் காது பட சொல்லிவிடுவார்கள்.

ஆன்மாவின் தேடல் இல்லாத மனித மூளை முன்பு சேகரித்த Data வை தேவையில்லாத சமயத்தில் வாந்தி எடுப்பதுதான் இந்த செயல்பாடு.

வெஸ்டர்ன் உலகம் எல்லாம் பார்த்து...பிறகு இஸ்லாம்தான் தீர்வு என்று கூட்டம் கூட்டமாக வரும் நிகழ்வு இதில் ஏற்படுவதுதான். சமயத்தில் இஸ்லாத்தை தேடி வருபவர்கள் பிறப்பால் இஸ்லாமியர்களாக இருப்பவர்களிடம் மார்க்க விசயத்தில் மிஞ்ச காரணம் அவர்கள் இறைமறை குர்-ஆனோடு நெருக்கமாக இருப்பதுதான்.

well done Brother Abulkalam...keep writing...

இப்னு அப்துல் ரஜாக் said...

தலைப்பே அருமை

ரமலான் சிந்தனை
ஒவ்வொன்றும் பலா சுளை

அருமை காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பாரினிலே குர்ஆனைப்
பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
காதுகளில் சொட்டுந்தேன்!//

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் "காதுகளில் சொட்டுந்தேன்!" ஆம் ! தேனே !

கவிதையை வாய் விட்டு வாசிக்க வைக்கும் வரிகள் !

Yasir said...

ருசித்து, ரசித்த கவிதை....நல்ல பொருள் பதிந்த வரிகள்...வாழ்த்துக்கள் கவியன்பன் அவர்களே...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கலாம் காக்காவின் ருசிக்க வைத்த மாண்பை ஸகர் சாப்பிடாமலும்,நோன்பு திறக்காமலும்.பசிக்க வைப்பது போல் உணர்வு.சிந்தைக்கு ஊட்டச் சத்தாய் அமைந்திருக்கும் நல் கவிதை வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

அருமையான அமல் இந்தக் கவிதை. இந்த மாதத்தையும்; இறை தந்த வேதத்தையும் புகழ்தலும் அரமே; அமலே!

இஸ்லாத்தில் கவிதை இயற்றுதல் முள்ளின் மேல் நடப்பதுபோல் கடினமானது. சில சமயங்களில் அழகான வார்த்தைகள் நம்மை அலைகழித்து மார்க்கத்துக்கு முரணான கருத்தை இலைமறை காயாக வைத்துவிடும் அபாயம் உள்ளது.

இத்தகைய ஆபத்து இருந்தும் மிக அநாயசமாக எழுதப்பட்டிருக்கும் இக்கவிதை கவியன்பனின் புலமைக்கு ஆதாரம்.

வாழ்த்துகள் கவியன்பன்.

sabeer.abushahruk said...

//நோன்பும்தான் மருந்தாகி
நோய்முறிக்கும் ரமலானே!//

இந்த மருத்துவக் குறிப்பை கவிதைக்குள் எடுத்தாண்டதும்

//பகைவனான ஷைத்தானைப்
பசியினாலே முறியடித்தாய்த்//

பசியென்றாலே அது பலகீனம்தான் என்னும் உலகில் இல்லை இல்லை "பசி" ஓர் ஆயுதம். அதுவும் பலம் வாய்ந்த ஷத்தானையே முறியடிக்கும் ஆயுதம் என்று சூளுரைப்பதும் கவிஞரின் உச்சகட்டத் திறமையைப் பரைசாட்டுகிறது.

வாழ்க இந்த எண்ணமும் எழுத்தும்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

அருமையான அமல் இந்தக் கவிதை. இந்த மாதத்தையும்; இறை தந்த வேதத்தையும் புகழ்தலும் அரமே; அமலே!

இஸ்லாத்தில் கவிதை இயற்றுதல் முள்ளின் மேல் நடப்பதுபோல் கடினமானது. சில சமயங்களில் அழகான வார்த்தைகள் நம்மை அலைகழித்து மார்க்கத்துக்கு முரணான கருத்தை இலைமறை காயாக வைத்துவிடும் அபாயம் உள்ளது.

இத்தகைய ஆபத்து இருந்தும் மிக அநாயசமாக எழுதப்பட்டிருக்கும் இக்கவிதை கவியன்பனின் புலமைக்கு ஆதாரம்.

வாழ்த்துகள் கவியன்பன்.
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். என்னிடம் கூட நலம் விரும்பி சொன்னார்கள் தம்பி கிரவுன் ஒரு இஸ்லாமிய கவிதை எழுதுங்களேன் நான் சொன்னேன் அந்த அளவிற்கு எனக்கு துனிச்சலும் இல்லை, அறிவும் இல்லை எனக்கு பயமாக இருக்கிறது என்று.

KALAM SHAICK ABDUL KADER said...

ஏற்புரை:
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழூற்று அதிரை சித்திக்:
வாழ்த்துக்களை ஏற்கிறேன்;ஜஸாக்கலாஹ் கைரன்

உளவியலார் ஜாஹிர்:

என் கவிதைக்குள்ளும் உளவியல் உள்ளதை உள்ளபடி கண்டுபிடித்த உளவியலார் நீங்கள் தான் என்பதை உள்ளம் நிறைவாய் உள்ளபடி உணர்ந்து கொண்டேன்.

அன்புத்தம்பி அர.அல:

உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

அன்புநெறியாளர் அபூஇப்றாஹிம்:

உங்களிடம் “எடிட்டோரியல்” “ஜெர்னலிசம்” நிரம்பக் காண்கின்றேன்; இன்ஷா அல்லாஹ் மாத/வார இதழ் துவங்குவீர்களாக! உண்மையில் அவ்வரிகள் ஹாபிழ்களின் தராவீஹ் தொழுகையில் ஏற்பட்ட ஈர்ப்பினால் உண்டான ஓர் அனுபவச் சான்றுகள்!

என் கவிதையைக் கண்டதும் உடன் மறுமொழியாக :விரைவில் பதியப்படும்” என்ற உங்களின் அலைபேசி குறுஞ்செய்தி என்னைக் குதூகலிக்கச் செய்யும்; அதிரையில் இலக்கியத்தரம் வாய்ந்த ஒரு வலைத்தள நிர்வாகியின் இப்படிப்பட்ட மறுமொழி எனக்குக் கிடைக்கும் அன்பளிப்பு!

அன்புத்தம்பி யாசிர்:
உங்களிடம் எல்லாவிதமான இரசனைகளும் உள என்பதை உளப்பூர்வமாய் ஏற்கின்றேன்.
ஜஸாக்கல்லாஹ் கைரன். “விலைக்காரத்தெரு” போன்ற இன்னும் எத்தனையோ இரசனையும் நகைச்சுவையும் மிக்க உங்களின் ஆக்கத்திற்காகக் காத்திருக்கின்றேன்.

அன்புத்தம்பி லெ.மு.செ.அபூபக்கர்:

கவிதையைப் படித்ததும் கவிதை மழைப் பெய்வது காணவும் இன்னும் நீங்கள் முயற்சித்தால் என்ன என்று கேட்கின்றேன்; உங்கள் “புன்னகையே ஒரு கவிதை” என்பது போல் பின்னூட்டமும் கவிதையாய்ப் பின்னி விட்டீரகள்!

என் கண்மணியான கவிவேந்தர் சபீர்:

உங்களின் ஆர்வமும் ஆதரவும் இக்கவிதை இத்தளத்தில் பதியப்படுவதற்குக் காரணமாக இருந்ததும்; என்பாலும் என் கவிதையின் பாலும் மிகவும் கண்ணியம் வைத்து அக்கவிதையில் கிஞ்சிற்றும் “பொருட்குற்றம்” வரக்கூடாதென்பதில் மிகவும் கவனமாக இருந்தது அறிந்து ஆனந்தக் கண்ணீர் எனும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன்;அதனாற்றான் நீங்கள் கேட்ட உடன், அலுவலக நேரத்தில் திருத்தம் செய்து அனுப்பினேன். ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கியும்; ஈண்டு இரு பின்னூட்டங்களில் புகழ்மாலையும் சூட்டியுள்ளீர்கள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

”என்னைப்போல் ஒருவன்” அன்புத்தம்பி க்ரவுன் எனும் தஸ்தகீர்:

அடுக்கு மொழியாய் அருவிபோல் கொட்டும் உன் மொழிப் புலமைபோல் அடுத்தடுத்துப் பின்னூட்டங்கட்குப் பின்னூட்டமாய்ப் பின்னிவிட்டாய் வார்த்தை வித்தகனே!
ஜஸாக்கல்லாஹ் கைரன். நீ சொல்வது போல் மார்க்கம் பற்றி கவிதைகளில் எழுதும்பொழுது மிகவும் கவனமாக இருப்பேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நோம்பின் மாண்பு நன்மையான கவி வடிவில் தந்த கலாம் காக்கா அருமை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு