Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! தொடரிலிருந்து... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2013 | , ,


தமிழ் இலக்கியத்திற்கு சமகாலத்தில் முத்தாய்ப்பாக அதிரைநிருபரில் வெளிவந்து கொண்டிருக்கும் நபிமணியும் நகைச்சுவையும் தொடரில் மூழ்கி எடுத்த முத்துக்களின் குவியலை இங்கே பங்கிட்டு பகிர்ந்தளிப்பதில் மகிழ்கிறோம் ! இந்தத் தொடரில் வேறெந்தப் புத்தகத்தையும் விஞ்சும் அளவிற்கு, வரம்பிற்குட்பட்டு, கண்மணி நபி முஹம்மது(ஸல்) அவர்களைப் புகழ்ந்துரைக்கும் கூற்றுகள் மெய்சிலிர்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது.  அவற்றை மீண்டும் ஒருமுறை வாசித்து மகிழ்வோம் வாருங்கள்.
-------------------------

“யா அத்தஹாக்! (சிரிப்பழகரே!)”

அப்படித்தான் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.

ஆம்!. அந்தச் செல்லப்பெயர் முற்றிலும் அவருக்குப் பொருந்திப்போனது. அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் குதூகலமும் கூடவே வந்துவிடும். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக, மகிழ்ச்சியை மட்டுமே மற்றவர்க்கு அளிக்க விரும்பியவராக, துன்பங்களைத் தூக்கி எறிந்தவராக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் துடிப்பும் முகமலர்ச்சியும் நிறைந்தவராக, நிலையான மகிழ்ச்சி எனும் சுவனச்சோலையின் இலக்கினை நோக்கி, உலக மாந்தரைக் கூவிஅழைத்தவராகவே அவர் முற்றிலும் தோன்றினார்.

அவர் இந்த அகிலங்களுக்கே அருட்கொடையானவர்! நமக்கு அவர் உயிரானவர். இல்லை; உயிரைவிடவும் மேலானவர்!

அவர்தாம் நம் இனிய தலைவர்  நபிகள் நாயகம், நற்குணங்களின் தாயகம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!
-------------------------

நபிகள் நாயகத்தை, தூதராக அனுப்பிய அல்லாஹ், "நற்செய்தி சொல்பவர் (முபஷ்ஷிர்)" என்றும் (அல்-குர்ஆன் 2:223); "மகத்தான நற்குணம் உடையவர்" என்றும் (அல்-குர் ஆன் 68:4); "அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரி" (33:21) என்றெல்லாம் அழைக்கின்றான்.

சொந்த ஊர்க்காரர்கள் "அல்-அமீன் (நன்நம்பிக்கையாளர்) என்ற பட்டமளித்தனர்.

அன்னை கதீஜா (ரலி), "யா அபல்காசிம் (காசிமின் தந்தையே)" என்று பிரியமுடன் அழைத்தனர்.

"என் உயிரினும் மேலானவரே!" என்றும் "என் தாய் தந்தையைவிட மேலானவரே" என்றும் சத்திய சஹாபாக்கள் போற்றி மகிழ்ந்தனர்.
-------------------------

யாரையும் எதிர் கொள்ளும்போதும் எந்தச்  சந்திப்பின்போதும் அரைகுறையாக வரவேற்றார்கள் என்றோ   முகத்தை மட்டும் கழுத்தை வளைத்துத் திரும்பிப் பார்த்தார்கள் என்றோ   ஒரு நிகழ்ச்சியைக்கூட நம் தங்கத் தலைவரின் வரலாறு நெடுகிலும் எவரும் காணவே முடியாது! எவரை எதிர் கொண்டாலும்  அவர் மீது முழுமையான அக்கறையுடனேயே எதிர் கொள்வார்கள். 

இத்தகைய உன்னதமான தன்மையின் பிரதிபலிப்பால் ஒவ்வொரு தோழரும், அல்லாஹ்வின் தூதர் இவ்வுலகத்தில் வேறு எவரையும்விட தன் மீதே அதிக அக்கறையும் அன்பும் கொண்டிருப்பதாக உணர்ந்தனர் (*). அதனால்தான் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரைத் தங்கள் அழகிய முன்மாதிரியாய் ஆத்மசுத்தியுடன் ஆக்கிக் கொண்டனர். அந்தச்  சரித்திரத்தின் சான்றாக சுந்தர நபி (ஸல்) உதிர்த்த  சுத்தமான சொற்களெல்லாம் பசுமரத்தில் ஆணியாய் அவர்தம் மனதில் பதிந்து போயின!

இந்த மானுட வர்க்கம் முழுதும் நல்லவர்களாகவும் அந்த நல்லவர்கள் அனைவரும் சுந்தர நந்தவனமாம் சுவர்க்கத்தை அடைந்துவிட வேண்டும் என்பதும் அண்ணலின் அபிலாஷையாய் ஆகிப்போனது. அந்தப் பாலைவன மணற்குன்றுகளில் நின்று, இந்த அவனியை அவர் பார்த்த வெளியெங்கும் பாதைப் பரந்து விரிந்தப் பரப்பானது!
-------------------------

சஹாபி என்றாலே பொருள் நபித்தோழர்தாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லுரைகளாலும் தோழர்களுடன் நடந்துகொண்ட பெரும் கனிவினாலும் அவர்கள் நபித் தோழமையில் பேருவகை கொண்டிருந்தனர். நபி தந்த அருள் மறையை தினமும் வாசித்தார்கள். அறியாமை இருளில் ஏகத்துவச் சுடரை ஏற்றிவைத்த ஏந்தல் நபியை உயிருக்கும் மேலாய் நேசித்தார்கள். எந்த அளவுக்கு என்றால், யுத்த களத்தில் உயிர் பிரியும் தருவாயில் கூட, இந்தத் தரணியில் மானிடர் நலமுடன் வாழ, வழி வகுத்துத் தந்த தங்கள் தலைவரின் காலில் ஒரு முள் தைப்பதைக்கூடப் பொறுக்க மாட்டாத அளவுக்கு அவர்கள் பெருமான் நபி (ஸல்) மீது பேரன்பு கொண்டார்கள்.
-------------------------

அன்று என்னவோ தேனீக்கள் போன்று சூழ்ந்து கொண்ட தோழர்களுக்கு மத்தியில் நடு நாயகமாக நம்  நபிகள் நாயகம் (ஸல்). யாருக்கும் எழுந்து போக மனமில்லை. புதிதாக வருபவர்க்கு அமர ஓர் அங்குல இடமுமில்லை!

காண்பதற்கு, நீல வானத்தின் முழு நிலவைச் சுற்றி தோரணங்களைப்போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களாய் மங்காப் புகழ் பெற்ற நம் தங்கத் தலைவரைச் சூழ்ந்து கொண்ட நட்சத்திரத் தோழர்கள். அங்கே, அண்ணலுக்கு அருகில், ஆனந்த உரையாடலில் ஒளி வீசும் அந்தப் பெரிய தாரகை யார்? அது அண்ணல் நபியின் ஆருயிர் நண்பர் அபூபக்ரு (ரலி) அல்லவா! அவர் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை விவரித்துக் கொண்டிருக்க, வியப்பினாலும் சிரிப்பினாலும் திண்ணைத் தோழர்க் கூட்டத்தில் கலகலப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. சுவையான சம்பவம் விரிவாகச் செல்லவும், அன்றலர்ந்த செந்தாமரை மலர்போல் அண்ணலின் முகம் மலர்ந்து ஆனந்த மணம் மேலும் வீசியது. நிகழ்வின் உச்ச வர்ணனை உயர்ந்து செல்லவும் தேனமுதம் சிந்தும் தெள்ளிய சிரிப்பால் காஸிமின் தந்தைக்குக் கடைவாய்ப் பல் மின்னியது! (**) 
-------------------------

அண்ணலின் திருக்கரம்! ஆறுதல் தரும் கரம்.

அந்த அருட்கரம் தொட்டதுமே அவர் அமைதியானார். அது எப்படி சாத்தியம்? அந்த கரத்தில் அப்படி என்னதான் இருந்தது?

அந்த இனிய கரம், சாதாரண கரமல்ல! மனித மனங்களையும் மனதின் உணர்வுகளையும் துல்லியமாக நாடிபிடித்துப் பார்க்கத் தெரிந்த உளவியல் மருத்துவரான உண்மைத் தூதரின் கரம்! 

அந்தக்கை, வெருங்கையல்ல! அருள் நிறைந்த கை. அறிவுப் பாதையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய்விட்ட, அறியாமை அந்தகாரம் எனும் அடிப்பாகமே இல்லாத, ஆழ்கிணற்றில் வீழ்ந்து கிடந்த விலங்குகளான அராபியர்களை, ஏகத்துவம் என்ற ஏணி மரம் கொண்டு கரைசேர்த்த கருணை மனிதரின் கை! இம்மையிலும் மறுமையிலும் அனைத்து முஃமின்களுக்கும் ஆதரவான ஒரே நம்பிக்கை!
-------------------------

இந்த மகோன்னதமான மாமனிதரின் வாழ்வு,

எடுத்த எடுப்பிலேயே தாயும் தந்தையுமற்ற அனாதையாகவே ஆரம்பமாகியது!

பிறகு, ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீல் முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக, 

நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, எல்லாவற்றுக்கும் மேலாக, தன் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, அத்துடன் "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!
-------------------------

'அழகின் சிரிப்பு' என்றாலும் 'சிரிப்பின் அழகு' என்றாலும் இந்த இரண்டுமே அந்த ஒருவரையே சுட்டி நிற்கும்!

அவர்தாம் 'அன்புப் பெட்டகம்' அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!
-------------------------

எல்லாவற்றையும் விட,  தன்னை அணுவணுவாகப் படைத்தவனின் தன் நேசர்கள் மீது கொண்ட "திருப்தி" எனும் திருப் பொருத்தம் அருளப்படுவதே பாக்கியங்களில் எல்லாம் மிகப்பெரும் பாக்கியமாகும்!

அதுதான் அல்லாஹ்வின் 'ரிள்வான்!' அதுதான் பேறுகளில் எல்லாம் மிகப்பெரும் பேறாகும்!

அந்தப் பெறுதற்கரிய பெரும் பாக்கியத்தை, தம் தோழர்களுக்குப் பெற்றுத்தந்தவர் யார்?

எவர் வரவால் இந்த உலகம் எல்லாம் சிறந்ததோ,
எவர் வரவால் அந்த உள்ளம் எல்லாம் மகிழ்ந்ததோ,

அவர்தான்!

அவருக்கு எழுதவும் தெரியாது! படிக்கவும் தெரியாது!

எனினும், சூழலை சுவர்க்கமாக்க, ஏற்றமிகு நபி எழுந்து வந்தார்!

அவர் நின்று பேசினார். எல்லா இலக்கியங்களையும் அது விஞ்சி நின்றது!

அவருக்கு அருளப்பட்டதை ஓதிக்காட்டினார். அதுபோன்ற ஒருவரியை இதுவரை

எவனாலும் எழுத முடியவில்லை!

அவர் பேசிய மொழியெல்லாம் வழியாகவும்
அவர் காட்டிய வழியெல்லாம் வாழ்வாகவும் ஆகிப்போனது!

மொத்தத்தில்,

எவ்வழி எல்லாம் நல்வழியோ இவ்வுலகில்,
அவ்வழி எல்லாம் நபிவழியாய் நிலைத்து நின்றது!

இனிய தோழர்கள் கடந்து சென்ற பாதையெல்லாம் இறைவழியாய் எழுந்து நின்றது!

அது அறவழி! அதுதான் அல்லாஹ்வின் வழி !

அண்ணலாரின் பயிற்சிப் பாசறை ஒரு சாதாரணமான பள்ளிக்கூடமல்ல; அது ஒரு பல்கலைக்கழகம் என்று பார்த்தோம்.

அந்த இறையருள் மிகுந்த இனிய தூதரின் தூதுத்துவப் பயிற்சிக்கூடம், சாதாரண பல்கலைக் கழகமுமல்ல!

கண்ணியத்தூதர் போதிப்பதற்காக கம்பீரமாக நின்ற அது ஒரு "பன்னாட்டுப் பல்கலைக்கழகம்!"
-------------------------

மாண்பாளர் நபிகள் நாயகம்(ஸல்) மதீனா வந்தபோது அனஸ் பின் மாலிக் பத்து வயது பாலகன்! உறுதியான முடிவெடுத்த உம்மு சுலைம்(ரலி), உத்தம நபியின் ஊழியத்தில் அனஸை அழைத்து வந்து சேர்த்தார்! உம்முசுலைமின் வேண்டுகோளுக்கு இணங்க அனஸை அருகே வைத்துக் கொண்டார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

அண்ணலின் அரவணைப்பில் சுவனக்காற்றைச் சுவாசித்தார் அனஸ்! ஏந்தல் நபியின் எளிமையான தோற்றத்தில் 'மூசா' நபியின் வீரத்தைக் கண்டார்! மேன்மைமிகு நபியின் மென்மையான பண்புகளுக்குப் பின்னால் 'ஈஸா' நபியின் பணிவைக் கண்டார்! கண்ணியத் தூதரின் கட்டளைகளிலும் காருண்யத்திலும் 'சுலைமான்' நபியின் கம்பீரத்தைக் கண்டார்! ஓங்கி நின்ற ஒப்பற்ற எழிலில் 'யூசுப்' நபியின் பேரழகைக் கண்டார்! எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து வகையான அற்புத குணங்களும் அவர்தம் பாட்டனார் 'இப்ராஹீம்' நபியிடமிருந்து பளிச்சிடக் கண்டார்!

எந்த மனிதரும் தன் வேலையாளுக்கு நிறைவான மனிதனாக விளங்கமுடியாது என்றுசொல்லப்படுகின்றது. ஆனால், அது முத்திரைத் தூதர் முஹம்மது நபியைத் தவிர! காரணம்,நெருங்கிப் பழகியவர்கள், அவரின் குறைகளையும் பலவீனங்களையும் தெரிந்து கொள்ள முடியும் அல்லவா!
-------------------------

அந்த ஒப்பற்றப் பெயர் கூறப்பட்டால் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்கள் பயத்தால் நடுநடுங்கிப்போகும்! அவன் வார்த்தைகளை வாசித்துக் காண்பிக்கப்பட்டால் அந்த நல்லவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாகும். மேலும், தங்கள் இரட்சகன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைத்து விடுவார்கள். (1)

அவன்தான் அர்ஷின் அதிபதி. அகில உலகங்களின் இரட்சகன். அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா! அவன் எல்லாம்  அறிந்தவன். எல்லாம்  வல்லவன். உயரிய புகழ், புகழ்ச்சிகள் அனைத்திற்கும் உரியவன். எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா மொழிகளிலும் எல்லா நாவுகளாலும்  எல்லா உயிர்களாலும் துதிக்கப்படும் தூயோன் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா! அனைத்தையும் எந்தவிதமான முன்மாதிரியின்றிப் படைத்து, பரிபாலித்து, காத்துவரும் அனைத்துப் படைப்பினங்களின் இரட்சகன்! என்றும் நிலைத்தவன்!
--------------------------
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
அதிரைநிருபர் பதிப்பகம்

8 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் !

நபிமணி பிறந்த மாதம் என்று ஒரு கூட்டம் பித்அத்களில் ஈடுபடும்போது...

உள்ளம் பூரிக்கும் இத்தகு வரிகளைப் படிக்கும்போது, யா அல்லாஹ்! இந்த தூய மார்க்கத்தில் எங்களையும் எங்கள் சந்ததிகளையும் நிலைக்கச் செய்வாயாக, தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த தூய்மையான வழியில் கடைசி மூச்சு இருக்கும் வரை எங்களை நிலைத்திருக்க வைப்பாயாக என்று பிரார்த்திக்க தூண்டுகிறது.

இன்ஷா அல்லாஹ்...

Abu Easa said...

மா ஷா அல்லாஹ்! நல்ல முயற்சி

கீழ் வரிகளை கொஞ்சம் சரி பார்க்கவும்

//இம்மையிலும் மறுமையிலும் அனைத்து முஃமின்களுக்கும் ஆதரவான ஒரே நம்பிக்கை!//

"ஒரே" என்கிற வார்த்தை நீக்கப்பட்டால் சரியாக இருக்கும் என்பது என் கருத்து - பிழையெனில் பொருத்தருள்க!

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் !

நபிமணி பிறந்த மாதம் என்று ஒரு கூட்டம் பித்அத்களில் ஈடுபடும்போது...

உள்ளம் பூரிக்கும் இத்தகு வரிகளைப் படிக்கும்போது, யா அல்லாஹ்! இந்த தூய மார்க்கத்தில் எங்களையும் எங்கள் சந்ததிகளையும் நிலைக்கச் செய்வாயாக, தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த தூய்மையான வழியில் கடைசி மூச்சு இருக்கும் வரை எங்களை நிலைத்திருக்க வைப்பாயாக என்று பிரார்த்திக்க தூண்டுகிறது.

இன்ஷா அல்லாஹ்...

sabeer.abushahruk said...

//நபிமணி பிறந்த மாதம் என்று ஒரு கூட்டம் பித்அத்களில் ஈடுபடும்போது...//

அனுமதி உண்டென்றால் அகிலத்தில் கொண்டாட கண்மணி நாயகத்தின் பிறந்த நாளைவிடச் சிறப்பான நாள் (ஈத் தவிர) வேறென்ன இருக்க முடியும்?

எனவேதான், வரம்பிற்குட்பட்டு அதிரை நிருபரில் ரசூலை(ஸல்)புகழ்ந்துரைத்திருக்கிறார்கள்.

இக்பாலிடம் அனுமதி பெற்றே அவன் கட்டுரையிலிருந்து எடுத்தாண்டு இருக்கிறார்கள். அவன் பயண சோலிகள் நிறைவடைந்து கலிஃபோர்னியா திரும்பிவிட்டதால் அடுத்த வியாழனில் தொடரப்போவதாகச் சொன்னான்.


M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உள்ளம் பூரிக்கும் தூய மார்க்கத்தில் எங்களையும் எங்கள் சந்ததிகளையும் நிலைக்கச் செய்வாயாக, தூதர் முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் காட்டித்தந்த தூய்மையான வழியில் கடைசி மூச்சு இருக்கும் வரை எங்களை நிலைத்திருக்க வைப்பாயாக.

ரபியுள் அவ்வல் 18, ஹிஜ்ரி 1434

Yasir said...

உள்ளம் பூரிக்கும் தூய மார்க்கத்தில் எங்களையும் எங்கள் சந்ததிகளையும் நிலைக்கச் செய்வாயாக, தூதர் முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் காட்டித்தந்த தூய்மையான வழியில் கடைசி மூச்சு இருக்கும் வரை எங்களை நிலைத்திருக்க வைப்பாயாக.

Ebrahim Ansari said...

சிறந்த நினைவூட்டும் தொகுப்பு.

KALAM SHAICK ABDUL KADER said...

\\'அழகின் சிரிப்பு' என்றாலும் 'சிரிப்பின் அழகு' என்றாலும் இந்த இரண்டுமே அந்த ஒருவரையே சுட்டி நிற்கும்!//>>>>>>


இதுபோன்ற கவித்துவமான வைர வரிகள் இத்தொடர் எனும் அறிவுக்கடலில் முத்துக்களாய் மிளிர்கின்றன! படிக்கப் படிக்க நெஞ்சில் மட்டுமல்ல நாவிலும் தேனூறும் வண்ணம் எழுதும் இச்சகோதரர் அவர்களின் கைவண்ணம் கண்டு வியக்கிறேன்;மாஷா அல்லாஹ்! இச்சகோதரரின் தங்கத்தமிழைத் தாங்கிக் கொண்டு என் இருதயத்தில் இடம் பெற்று வரும் இத்தொடர் நூலுருவில் வந்து என் இருக்கையிலும் இடம் பெறும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன், இன்ஷா அல்லாஹ்!

திடீரெனத் தாயகத்திற்குக் குறுவிடுப்பில் சென்ற எனக்குக் கவலைகட்கு இடையிலும் ஓர் ஆனந்தம் இச்சகோதரரை ஆங்குக் காணும் பெரும் பேறு பெற்றேன்; இச்சகோகரருடன் உரையாடி மகிழ்ந்த நொடிகள்; என் வாழ்வின் எதிர்கால விடியல், இன்ஷா அல்லாஹ்!

இப்படிப்பட்ட நல்லெண்ணமும், நல்ல தமிழ் எழுத்தாற்றலும் வாய்க்கப் பெற்ற இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் என்னும் அன்பினுக்கினியச் சகோதரர் அவர்களை இத்தளம் வழியாகப் பெற்றதை எண்ணி இவ்வலைத்தள நிர்வாகி அவர்கட்கும் என் அன்பான நன்றி= ஜஸாக்கல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு