நூல் பாகம் : இரண்டு
வெளியீடு : IFT - Chennai
தொடர் : 26
முதலில் திருமறை; பிறகு அருள்நெறி!
இதுவரை நாம் படித்தறிந்த பேறு பெற்ற பெண்மணிகள் எல்லாரும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே அதன் அருள் மறையாகிய அல்குர்ஆனைப் படிப்பதற்காக அதன் மூல மொழியாகிய அரபியைக் கற்கத் தொடங்கினர். ஆனால், இப்போது நாம் அறிமுகம் பெறப்போகும் பெண்மணியோ மிகவும் வேறுபட்டவர்!. ஆம்; முதலில் அரபி மொழியைப் படித்தார்! பின்னர், அதன் ஒப்புயர்வற்ற இலக்கியமான அல்குர்ஆன் வேதத்தைப் படித்தறிந்தார்! அதன் மூலம், இஸ்லாத்தைத் தழுவிப் பேறு பெற்ற பெண்மணியானார்!
இன்றுங்கூட, சஊதி அரேபியாவின் ஜித்தா நகரத்துக் குறிப்பிட்ட ஒரு ‘தஅவா’ சென்டரில் வெளிநாட்டுப் பெண்கள் பிரிவுக்குள் நுழைபவர்களுக்குச் சில வேளைகளில் வியப்பான காட்சியொன்று தென்படும். அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர் என்று கருதப்படும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் அழகிய - துல்லியமான அரபி மொழி உச்சரிப்புடன் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருப்பார்! அருள்மறை குர்ஆனின் வசனங்கள், நபிமொழி மேற்கோள்கள் சரளமாக அவருடைய சொற்பொழிவினூடே வீறுநடை போட்டு வரும்!
இவருக்கு இத்துணைப் பாண்டித்தியம் எவ்வாறு ஏற்பட்டது? கல்வியில் ஆர்வமுடைய அனைவரும் அறிய வேண்டிய அற்புதமானது அவருடைய முயற்சி!
ஏன்? எப்படி? என்றெல்லாம் கேள்விகள் கேட்காமல், கடவுளை நம்பியவர் அவருடைய தாய். கடவுள் நம்பிக்கையின்றி, ஒவ்வொன்றையும் பற்றிக் கேள்விகள் கேட்பவர் அவருடைய தந்தை! இந்த இரு துருவங்களுக்கும் மகளாகப் பிறந்தவர்தான் நம் கதாநாயகி!
தென் கலி•போர்னியாப் பல்கலைக் கழகத்தில் (University of Southern California) பட்டம் பெற்று முடித்திருந்த அவ்விள மங்கைக்கு, தன் எதிர் கால வாழ்வில் என்ன நடக்கும் என்பது தெரியாது! ஏன், அவரது பெற்றோரும் வழி வகுத்துக் கொடுத்திருக்கவில்லை. அது, மறைவானது! மகத்தானது! எதிர்பாராதது! ஏனென்று கேட்க முடியாதது!
அவருடைய மாற்றத்திற்கு ஒரேயொரு சாதகமான வளர்ப்புச் சூழல் மட்டுமிருந்தது. அதாவது, அவருடைய தந்தை அமெரிக்காவின் புகழ் பெற்ற புவியியல் விஞ்ஞானிகளுள் ஒருவர். எதையும் ஏன், எப்படி என்று ஆய்ந்தறியும் இயல்புடையவர். அத்தகையவருக்குப் பிறந்த மகள் எப்படியிருப்பார்? எந்த முயற்சியிலும் இயல்பு முந்தித்தானே நிற்கும்?
“என் தந்தையுடன் பலபோது ஆய்வுக் கூடங்களுக்குச் சென்றபோது, நான் கண்ட அவருடைய சிந்தனைப் போக்கும் அணுகுமுறையும்தான் என்னை இன்றுவரை இயக்கிக்கொண்டிருக்கின்றது” என்று நினைவுகூர்கின்றார் அம்னா அல் அமெரிக்கிய்யா!
அம்மாவின் தூண்டுகோளால் திருச்சபைப் பிரார்த்தனைகளுக்குப் போய்வந்த அந்தப் பிஞ்சுப் பருவம் முதல், தந்தையின் இயல்பு மிகைப்பால், ஏன், எப்படி என்று அம்மாவிடம் கேட்பால் சிறுமி. ஆனால், அம்மாவுக்கு விளக்கம் சொல்லத் தெரியாது! பெற்றோரின் ஒரே மகள் என்ற பாசத்தால், அவளை அலட்டி மிரட்டி அச்சுறுத்த முடியாது. அந்த உரிமையோடு, தனிமையில் இருந்து சிந்திக்கத் தொடங்கினாள் அந்தச் சிறுமி. விளைவு, கிருஸ்தவத் திருச்சபை அவளுக்குத் தூரமாயிற்று!
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளாக இருந்ததால், அப்பெண் மதங்களெல்லாம் ஒன்றே; எல்லார்க்கும் கடவுள் ஒருவரே; எல்லாரும் போய்ச்சேரும் இடம் ஒன்றே என்ற மதப் பொதுவுடைமைக் கொள்கை இயல்புடையவளாக இருந்தாள். அதனால், கல்லூரி வாழ்க்கையின் பின் சந்தித்த அழகிய அரபு வாலிபர் ஒருவர் மீது காதல் வயப்பட்டாள். அவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். காதல் கனிந்து, விரைவில் திருமணமும் முடிந்தது.
அடுத்துக் கணவருடன் சிரியாவுக்குப் பயணமானார் இப்பெண். கணவர் அரபு முஸ்லிம். ஆனால், அவ்வளவாக இஸ்லாமிய வழிபாடுகளில் ஈடுபாடற்றவர்! ஏட்டளவில், மனைவியைக் கிருஸ்தவப் பெண்ணாகவே வைத்திருக்க விரும்பினார். ஆனால், இறை நாட்டமோ வேறாக இருந்தது!
சிறுமியாக இருந்தபோது தாயிடமிருந்து பெற்ற கடவுள் நம்பிக்கையும், தந்தையிடமிருந்து பெற்ற உண்மையைக் கண்டறியும் (Reasoning) தன்மையும் ஒன்றாகி, அரபு நாட்டுப் புதிய வாழ்க்கையின்போது கிடைத்த நெடிய ஓய்வு நேரங்களில் அரபி மொழியின்மீது காதல் கொள்ளத் தொடங்கினார். மாமியார் வீட்டாரிடம் தன் ஆர்வத்தை வெளியிட்டபோது, அவர்களும் அமெரிக்க மருமகளுக்கு அரபியைக் கற்பிப்பதில் தீவிரமாயினர். மிகச் சில மாதங்களிலேயே அரபி மொழியைப் பழுதறக் கற்றார் இப்பெண்.
அடுத்து, முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனை அரபியிலேயே படித்து, அதன் பொருளை விளங்குவது இவருக்கு இலகுவாயிற்று. முதலில் சிறு சிறு சூராக்களை ஓதத் தொடங்கினார். ‘அத்தக்வீர்’ என்ற அத்தியாயத்தை ஓதி அதன் முடிவை நெருங்கியபோது, அதன் 27 மற்றும் 28 ஆம் வசனங்கள் இவரின் கவனத்தை ஈர்த்தன!
“இது உலகமனைத்திற்கும் ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. மேலும் நேரான வழியில் செல்ல விரும்புவோருக்கும் (நல்லுபதேசமாகும்).” (81:27,28)
கண்ணுக்கெட்டிய தொலைவின் கடைக்கோடியில் சிறியதோர் ஒளி தென்பட்டது! புதிய சூழலில் வந்த பிறகு கிடைத்த ஓய்வு நேரங்களை, இஸ்லாமிய நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டார் அமெரிக்கப் புதுப்பெண். போதுமான இஸ்லாமிய நூல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கவில்லை அப்போது. ஆனால், ஆர்வம் கூடி வந்தபோது, ஆங்கில நூல்கள் தாமாகவே பல பக்கங்களிலிருந்தும் வந்து சேர்ந்தன. தன் கணவரின் குடும்பத்தினர் தனக்கு ஏற்பட்ட அறிவுத் தாகத்தைத் தீர்த்து வைத்தது பற்றி இப்போதும் நன்றியுடன் நினைவுகூர்கின்றார் இப்பெண்.
இதற்கிடையில் இரண்டாண்டுகள் கழிந்தன. அந்தக் கால இடைவெளியில், அவர் கற்ற அறிவோ ஏராளம். அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது, ஆங்கில மொழியில் இஸ்லாமிய நூல்கள் ஏராளம் இருப்பது பற்றி.
சிரியாவுக்குக் கணவருடன் குடிபெயர்ந்து வந்த பிறகு, அங்கிருந்த அரபு மக்களின் அன்றாட வாழ்க்கை இவருக்குப் பழகிப்போய்விட்டதால், அவர்களின் வணக்க வழிபாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். ஐவேளைத் தொழுகையைத் தொழுதார்; ரமளானில் நோன்பு நோற்றார்; ஜக்காத்துக் கொடுத்தார். ஆனால், தன்னை முஸ்லிமாகப் பிரகடனப் படுத்திக்கொள்ளவில்லை! அப்படிச் செய்துவிட்டால், தன் மீது பெரும் பாரம் சுமந்துவிடுமோ என்று அஞ்சித் தயங்கினார். அதற்கு வேண்டிய தன்னடக்கமும் வரையறைக்குட்பட்ட வாழ்க்கையும் அமையுமா என ஐயங்கொண்டார்.
படிப்படியாக, ‘கிடைத்த அறிவைக் கொண்டு நம்மால் முடிந்ததைச் செய்வோம்’ என்ற உணர்வால் உந்தப்பெற்றபோது,
“இஸ்லாத்தையன்றி வேறொரு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், மறுமையில் அவர் இழப்படைந்தோருள் இருப்பார்.” (3:85)
என்ற இறைவசனம் அவருக்குக் கண்ணில் பட்டது. இப்போது தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார். கணவரிடம் தான் முஸ்லிமாகத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தபோது, அவர் கூறினார்: “பள்ளிவாசலின் இமாமிடம் சென்று, அவர் முன்னிலையில் ‘ஷஹாதா’ மொழியவேண்டும். அவர் சில கேள்விகளைக் கேட்பார். அதற்கெல்லாம் உன்னால் பதில் கூற முடியுமா?”
“ஏன் முடியாது? என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தவில்லை; என் பெற்றோரும் இதற்குத் தடையாயிருக்கவில்லை; ஏற்கனவே நான் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைச் செயல்படுத்தி வருகின்றேன்; இதற்கெல்லாம் மேலாக, அரபி மொழியை அழகாகப் பேசுவேன்; இறைமறை குர்ஆனை அதன் மூல மொழியிலேயே ஓதி விளங்குவேன். இதற்கு மேல் வேறு என்ன தகுதி வேண்டும் எனக்கு?” என்று பேசி முடித்த அருமைப் பெண் அம்னா, அதற்கு இரண்டே நாட்களின் பின், டமாஸ்கஸ் ஜுமுஆப் பள்ளியின் இமாமுக்கு முன் சென்று ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானார்!
இந்த உறுதிப்பாட்டைப் பெறுவதற்கு அம்னா கடந்து வந்த பாதை மிக நீண்டது. பிறந்த மதத்தில் பிடிப்பற்றுப் போன பின்னர், உண்மையான மார்க்கத்தைத் தேடி அவர் பயணம் செந்தது ஒன்றிரண்டல்ல; பன்னிரண்டாண்டுகள்! ‘நல்ல இறுதி முடிவு இறையச்சமுடையோர்க்கே’ (வல் ஆகிபத்து லில் முத்தகீன்) என்ற இறைவாக்கு இவர் வாழ்வில் முற்ற முற்ற உண்மையாயிற்றன்றோ!
அருட்பேறாய்க் கிடைத்த அரபி மொழி அறிவையும் ‘முஸ்லிம்’ என்ற பெரும் பேற்றையும் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி ஆங்கிலத்திலும் அரபியிலும் சில நூல்கள் இயற்றியுள்ளார் அம்னா என்ற இந்த அற்புதப் பெண்மணி. இவரது ஆங்கில நூலான ‘Transition from Doubt to Assurance’ (ஐயப்பாட்டிலிருந்து உறுதிப்பாட்டுக்குப் பயணம்) என்ற நூல், அதனைப் படிப்போர்க்குத் தமது உயர்வையும் கண்ணியத்தையும் உணரச் செய்து, நேர் வழியில் செல்லத் தூண்டும் ஓர் அரிய எழுத்தோவியமாகும்.
இன்றும் இந்த அமெரிக்கப் பெண் அம்னா, ஜித்தா ‘தஅவா’ சென்டரில் தாய்மொழி ஆங்கிலத்திலும் தகைமொழி அரபியிலும் முன்மாதிரி ‘தாஇயா’(இஸ்லாமியப் பயிற்சியளிப்பவர்) ஆக இருந்து, இஸ்லாத்தை எடுத்துரைக்கும் அழகுக் காட்சி, அனைவரையும் வியப்பிலாழ்த்துகின்றது!
அதிரை அஹமது
4 Responses So Far:
மத, விஞ்ஞான ஆராய்வின் இறுதி முடிவு நிச்சயமாக இஸ்லாமாகவே இருக்கும் என்பதற்கு கதாநாயகி 'அம்னா' அழகிய முன்மாதிரி. அவங்க பணி இருலோகத்துக்கும் பலனளிக்கட்டும். இன்சா அல்லாஹ்!
---------------------------------------------------------------------------------------
ரபியுள் அவ்வல் பிறை 24, ஹிஜ்ரி 1434
நல்ல பேரு பெற்ற பெண்மணிகளுக்கு..
அல்லாஹ் நல்ல சூழலையும் ..
அதற்கேற்ற சிந்தனையையும்..ஆர்வத்தையும் கொடுத்து
நல்வழி படுத்தியது அல்லாஹ்வின் அற்புத கருணை என்றே
சொல்ல வேண்டும்
இந்த உறுதிப்பாட்டைப் பெறுவதற்கு அம்னா கடந்து வந்த பாதை மிக நீண்டது. பிறந்த மதத்தில் பிடிப்பற்றுப் போன பின்னர், உண்மையான மார்க்கத்தைத் தேடி அவர் பயணம் செந்தது ஒன்றிரண்டல்ல; பன்னிரண்டாண்டுகள்! ‘நல்ல இறுதி முடிவு இறையச்சமுடையோர்க்கே’ (வல் ஆகிபத்து லில் முத்தகீன்) என்ற இறைவாக்கு இவர் வாழ்வில் முற்ற முற்ற உண்மையாயிற்றன்றோ!
Allahu Akbar
அல்லாஹு அக்பர்.
இத்தகைய சிறப்புக்குரியவரின் "இஸ்லாத்தை எடுத்துரைக்கும் அழகுக் காட்சியை" காணொளியாக்கிப் பதிந்தால் என்ன?
ஜித்தா வாழ் அதிரையர்கள் முயலலாமே! இன்ஷா அல்லாஹ்.
Post a Comment