Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நடந்தாய் வாழி காவேரி! - ஓர் அலசல் ! 15

அதிரைநிருபர் | February 24, 2013 | , , , , ,

நடந்தாய் வாழி காவேரி! 
நாடெங்குமே செழிக்க! 
நன்மையெல்லாம் சிறக்க!

"உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி"

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி"

என்று, காவிரியின் வெள்ளம் பாயும் மகிழ்ச்சியை சிலப்பதிகாரம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

 

`காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு‘  என்றெல்லாம் காவிரியைப் போற்றிப் பாடுகிறோம். காவிரி       ஆற்றைப் போற்றிப்  பல கவிஞர்கள் பாடியுள்ளனர். `அன்னையின் அருளே வா வா வா, ஆடிப்பெருக்கே வா வா வா,‘ என்று அரவணைத்து ஆடிப் பெருக்கு என்று ஆற்றில் வரும் புது நீரை வரவேற்று மகிழ்வதும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கலாச்சார நிகழ்வாகும். இப்படி எல்லாம் புகழ்ந்து பாடப்பட்டு பாய்ந்த காவிரி ஓய்ந்த காவிரியாகி மாய்ந்துபோனது அண்மைக்கால அரசியல் கலந்த வரலாறு.  அன்றெல்லாம் ஆடி பதினெட்டாம் நாள் காவிரி ஆற்றுக்குப் போனால் பார்க்குமிடமெல்லாம் மகிழ்வு விரவிக்கிடக்கக் காணலாம். அண்மைக்காலங்களில் ஆடி பதினெட்டாம் நாள் காவிரிக்கரைக்குப் போனால் மணல் திட்டுகளையும், சாக்கடை ஆற்றையும் தான் காணமுடியும். 

பிரச்னை என்ன? என்னவெல்லாம் நடந்தன? இப்போது காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது வரை உள்ள நிகழ்வுகளைப் பற்றி சற்று விவாதிக்கலாம்.

சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் 450 கி.மீ தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது.

மேலும் கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில் கலக்கிறது. ஆக கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி சமவெளி மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் காவிரி விவசாயம் தொன்மை வாய்ந்தது. உலகிலுள்ள பெரிய நதிதீரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெறும் பழமை வாய்ந்த விவசாயங்களோடு ஒப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம் காவிரி சமவெளியில் இருக்கின்றது. கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி சமவெளியில் இருக்கின்றன. 1971ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி காவிரி நீரினால் பயன்பெற்றது. அன்றைய சூழலில் கர்நாடகா 7 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழலில் காவிரியில் உற்பத்தியாகும் தண்ணீரின் ஆண்டு சராசரி அளவு 671 டி.எம்.சி. ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாகத்தான் விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முதன்முதலாக கி.பி. 2ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் காவிரி மீது கட்டப்பட்ட முதல் அணை கல்லணையாகும். உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த அணையாக இது கருதப்படுவது சிறப்பாகும். காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல… அன்றைய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. ஆம் கி.பி. 11ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் மைசூர் அரசு காவிரியை தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த முனைந்தது. அப்போதெல்லாம் முதலில் இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தடுத்ததும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டில் −ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.

அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.( காவிரிப் பிரச்சனை ஆரம்பமான 1924 ஆம் ஆண்டுதான் நானும் பிறந்தேன். பிறந்தது முதல் இதுவரை அந்தப் பிரச்சனைக்காகத்தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.)

தமிழக, கர்நாடக நீர்வளம் தமிழகம் முழுவதும்ஒவ்வொரு ஆண்டும் சராசரி 1300 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாகிறது. கர்நாடகா முழுவதும் 3300 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் இரண்டரை மடங்கு அதிகமாக தண்ணீர் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி ஒன்றுதான் பெரியநதி. ஆனால், கர்நாடகாவில் காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம் கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இந்நதி மூலம் மட்டுமே ஆண்டுக்கு 734 டி.எம்சி. தண்ணீர் (காவிரியில் உற்பத்தியாகும் நீரைவிட 63 டிஎம்சி அதிகம் கர்நாடகாவிற்கு கிடைக்கிறது) மேலும் இங்கு உற்பத்தியாகும் 2000 டிஎம்சி நீர் எதற்கும் பயன் இல்லாமல் நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இது மட்டுமன்று கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில்தான் கலக்கிறது. இந்த அளவு நீரைதான் தமிழகத்தில் மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி பரம்பரையாகவே காலங்காலமாக பயிர்செய்யப்படும் குறுவை சம்பா சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட வேண்டிய நீரின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரிச்சிக்கல்1924ல் உருவான ஒப்பந்தம் 1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடாகா.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.இதன் பொருட்டு தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அப்போதைய பிரதமரின் தலையீட்டால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிறகு 1983ல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர் மன்றம் அமைக்கும்படி கேட்டது. அதன் பிறகு தமிழக அரசு 1986ல் மத்திய அரசிடம் நடுவர் மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் திரு. வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970 முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள், முதல்வர்கள் போன்றோர் 21 முறை இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நடுவர் மன்றமே கூட அன்றைய நிலையில் காங்கிரஸ் பாரதியஜனதா போன்ற பெரிய கட்சிகள் அன்றி வி.பி.சிங்கை பிரதமராகக் கொண்ட தேசிய முன்னணியின் முயற்சியால் அன்றைய ம்தல்வராக இருந்த கருணாநிதியின் இடையறாத முயற்சியால் தொடர்ந்த  கோரிக்கையின்படி அமைக்கப்பட்டதாகும்.

நடுவர் மன்றத்தீர்ப்பு 25/6/91 தேதியிட்ட இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக தமிழகத்திலுள்ள மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் (ஜூன் மாதம் ஆரம்பித்து மே மாதத்தில் முடிவடையும்) 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும் என்றும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137 டி.எம்.சி. தண்ணீர் அனுப்ப வேண்டும்) கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது. இதன்பிறகு 25.11.91ல் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்ததன் விளைவாக 3.4.92ல் நடுவர் மன்றம் விளக்கத் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இதில் போதிய அளவு தண்ணிர் உற்பத்தியாகாத ஆண்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற வார்த்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி ஏமாற்றிக் கொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும் பற்றாக்குறை என்று கூறிக்  கொண்டிருந்தது. 1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இது மட்டுமல்லாது கர்நாடகா அணைகளுக்கு கீழே உள்ள கர்நாடக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகளை ஆழப்படுத்தி அணைகளில் நிரம்பி வழியும் நீரையும் அதில் தேக்கி வைப்பதன் மூலம் தமிழகத்திற்கு நீர் கிடைக்காமல் செய்ய முயன்றது.

 தமிழகத்தின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை என்றுமே  அரசியல் ஆக்கப்பட்டதுதான் வேதனை தரும் விஷயம். இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் இப்பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சமுறும் வகையில் நிகழ்வுகள் அங்கு அரங்கேறின. இலங்கை அகதிகள், பர்மா அகதிகள் போல் காவிரி அகதிகளும் உருவாயினர்.  

 தமிழகத்திற்கு நேரிட்ட அரசியல் சிக்கல்கள் நடுவர் மன்றம் அமைப்பதற்கு முன்புவரை, அதுகாலம்வரை மத்தியில் ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் அரசு ‘நடுவர்மன்றம்’ என்பதையே அமைக்கவே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1992ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணையில் 12/8/1998ல் உச்ச நீதி மன்றம் காவிரி நதிகள் ஆணையம் அமைக்க இறுதி வாய்ப்பு வழங்கிய நிலையில், உச்சநீதி மன்ற நெருக்கடியின் பேரில் அப்போதைய (1998) பாரதிய ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன் மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு சாதகமாகிவிட்டது. தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் (அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர தேர்தல் அரசியல் கட்சிகள்) இவ்விஷயத்தில் அதிகளவில் – டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினை தீர்த்து வைப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட இவர்களின் யார் மக்களின் காவலன் என்கிற வகையான அறிக்கை போர்களில்தான் அதிகம் அக்கறை காட்டினர்.  அதுமட்டுமல்லாது மாற்றுப் பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறி காவிரியில் பன்னெடுங்காலமாக நமக்கு உள்ள உரிமையை மறைமுகமாக நீர்த்து போகவும் செய்தனர். .

இவர்கள் மட்டுமல்ல, தேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள கட்சியாக விளங்குவதால் அவை கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட தயங்குகின.  தேசியக்கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களது தமிழ்நாடு பிரிவு தண்ணீர் கேட்டும், கர்நாடக பிரிவு தண்ணீர் தரக்கூடாது என்று கூறியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். காவிரி நடுவர் மன்றத்தையே மாற்ற வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியது. காவிரி நீரை மறுப்பதில் கன்னடர்களுக்கு உள்ள ஒற்றுமை அதை பெறுவதில் தமிழர்களுக்கும், தமிழக ஆட்சியளார்கள்,    அரசியல்வாதி ஆகியோர்களுக்கு இல்லை. அதனாலேயே மத்திய அரசு இதில் அதிக அக்கறை காட்டாமல் தட்டிக் கழித்து தாமதப் படுத்தி “ பெப்பே” காட்டி  வந்தது.

பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த முயற்சிகளின் பலனாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவைத் தொடர்ந்து, எதிர்பார்க்கப்பட்டதை போலவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. நீர்வளத் துறை செயலர், சாமல் கே சர்க்கார் கையெழுத்திட்ட அந்த உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டதற்கான தகவல், நேற்று காலை, 11:00 மணியளவில் அறிவிக்கப்பட்டது.இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., அளவு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின், அமராவதி மற்றும் பவானி நீர்தேக்கங்களின் தண்ணீரையும் உள்ளடக்கிய அளவு தான், இந்த 419 டி.எம்.சி., தமிழகத்துக்கு என, கர்நாடகாவில் இருந்து கிடைக்க இருப்பது, உண்மையில் 182 டி.எம்.சி., அளவு தண்ணீர் தான்.

எந்தவொரு அசாதாரண பருவநிலையும் ஏற்படாத பட்சத்தில், காவிரி நதி நீரின் மொத்த அளவு, ஆண்டுக்கு 740 டி.எம்.சி., என இறுதித் தீர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மொத்த அளவில் இருந்து தான், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி என, நான்கு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு என அளிக்கப்படும், 419 டி.எம்.சி., தண்ணீரை, மாத வாரியாக பிரித்து, ஒவ்வொரு மாதமும், இவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டுமென, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்துக்கு, ஜூன் மாதம், 10 டி.எம்.சி.,யும், ஜூலை மாதம், 34 டி.எம்.சி.,யும், ஆகஸ்ட் மாதம், 50 டி.எம்.சி.,யும், செப்டம்பர் மாதம், 40 டி.எம்.சி.,யும், அக்டோபர் மாதம், 22 டி.எம்.சி.,யும், நவம்பர் மாதம், 15 டி.எம்.சி.,யும், டிசம்பர் மாதம், 8 டி.எம்.சி.,யும் அளிக்க வேண்டும்.பிப்ரவரி முதல், மே மாதம் வரை, தலா, 2.5 டி.எம்.சி., அளவு தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். தமிழகத்துக்கு உண்டான பங்கீட்டு தண்ணீரின் அளவை, பிலிகுண்டுலு என்ற இடத்தில் வைத்து தான் அளவீடு செய்ய வேண்டும்.இந்த விவரங்கள் எல்லாமே, நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உள்ளன.
இவை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.அரசிதழில் வெளியிடப் பட்டதால் இதை நிறைவேற்றியாக வேண்டிய சட்டபூர்வமான நிர்ப்பந்தம் தொடர்புடைய எல்லா மாநில அரசுகளுக்கும்  உண்டு. 

ஆனாலும் காவிரி நதி நீர் நிர்வாக ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு என, இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; அவ்வாறு உருவாக்கப்படும் இந்த அமைப்புகள் தான், நதி நீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புகளாக திகழும் என, இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த இரண்டு அமைப்புகள் அமைக்கப்படுவது குறித்து, அரசிதழில் எவ்வொரு தகவலும் இல்லை. மாறாக, இது விஷயமாக, நீர் வள அமைச்சகமானது, சட்ட அமைச்சகத்துக்கு, ஒரு கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிகிறது.அந்த கடிதத்தில், "காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக, ஏராளமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளன. அவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இப்பிரச்னைக்கு சட்டப்படியான முடிவு இன்னும் வரவில்லை. இவ்வாறு சட்டப்படியான தீர்வு கிடைக்காத நிலையில், நிர்வாக ஆணையத்தையும் ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைத்தால், அதில் சட்டப் பிரச்னை ஏதும் வர வாய்ப்புள்ளதா' என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கான விளக்கம் கிடைத்த பின், இந்த குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அரசிதழில் வெளியான, 90 நாட்களுக்குப் பின், இந்த உத்தரவு அமலுக்கு வரும் என, கூறப்பட்டுள்ளது. எனவே, வரும் ஜூன் மாதம் 12ம் தேதி, மேட்டூர் அணை, வழக்கமாக திறக்கப்படும் போது, அரசு பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.

இதற்கான விளக்கம் கிடைத்த பின், இந்த குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அரசிதழில் வெளியான, 90 நாட்களுக்குப் பின், இந்த உத்தரவு அமலுக்கு வரும் என, கூறப்பட்டுள்ளது. எனவே, வரும் ஜூன் மாதம் 12ம் தேதி, மேட்டூர் அணை, வழக்கமாக திறக்கப்படும் போது, அரசு பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.

1989 ல் ..தமிழக ...அனைத்துக்கட்சி ..தீர்மானம்!
1990 ல் மீண்டும்..தமிழக சட்டபேரவை..தீர்மானம்!
1990 ல் ..நடுவர் மன்றம் ...வி.பி. சிங்'...அமைப்பு!
1991 ல் ..நடுவர் மன்றம் ...இடைக்கால தீர்ப்பு !
2007 ல் ...நடுவர் மன்றம் ...இறுதி ..தீர்ப்பு !

ஏதாவது இடிசாமங்கள் புகுந்து குட்டையை குழப்பாவிட்டால் மீண்டும் நடந்தாய்  வாழி காவிரி என்று பாடலாம். தமிழகத்தில் ஆடிப் பெருக்கை கொண்டாடுபவர்கள் மற்றும்  விவசாயிகள் மகிழலாம்.ஆனாலும் ஒரு விஷயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏனென்றால் சில அரசியல் குதிரைகள் கொள்ளு என்றால் வாயைத் திறக்கின்றன; கடிவாளம் என்றால் வாயைப் பூட்டிக்கொள்கின்றன.

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப் பட்டபோது அதைக் கண்டித்து இழித்துரைத்தவர்கள் கூட இன்று இந்த வெற்றி தன்னால்தான் என்று அரசியல் செய்வதுதான் பெரிய நகைச்சுவையாக இருக்கிறது.  

நடுவர் மன்றம் கோரி 1971ல் தமிழகம் தீர்மானம்! மேலே சொன்ன அனைத்தும் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் நடந்தவைதான்!

அந்த இறுதி தீர்ப்புதான் ...இப்போது அரசிதழில்! யாரோ பெற்ற குழந்தைக்கு யாரோ பெயர் சூட்டுவது ஒரு அரசியல் விந்தை . அதே நேரம் நடு நிலையாக தீர்ப்பு சொல்ல வேண்டுமானால் கருணாநிதி காலத்தில் அவர் முதல்வர் பொறுப்பில் இருந்ததால் இதற்காகப் போராடினார். வெற்றியும் கண்டார். இப்போதைய முதல்வர் அன்று அரசியல் காரணங்களுக்காக,  எதிர்ப்பான கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் தான் ஏற்றிருக்கும் இன்றைய பொறுப்புக்கு ஏற்ப செயல்பட்டு இன்று அரசிதழில் உத்தரவை வெளியிட வைத்தார். இருவரையும் பாராட்டுவோம். பகை மறப்போம். ஒன்றுபட்டு தமிழ்நாட்டைஉய்விப்போம்-இனியாவது.    

இப்ராஹீம் அன்சாரி

15 Responses So Far:

sabeer.abushahruk said...

காக்கா,

மடை திறந்துவிட்டதுவா? 

நான் கட்டுரையைச் சொல்கிறேன்!

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

மடை திறந்து நேரமாகிறது. கடை மடைப் பகுதி என்பதால் வந்து சேர நேரம் பிடிக்குமென நினைக்கிறேன். நானும் கட்டுரையைத்தான் சொல்கிறேன்.

( நாயுடு சார் பாடம் நடத்துவது போல் இருக்கிறதோ?)

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

A detailed and chronological order of information about The River Cauveri.

Verdict of The Cauveri river judgment got published in The Gazette is an important mile stone in the The Cauveri controversies and resolutions.

All the best Tamil Nadu Government and congratulations!!!.

Thanks and best regards,

B. Ahamed Ameen
from Dubai

Ebrahim Ansari said...

Alaikkumussalam.

Our younger brother Mr. B. Ahamed Ameen. jasak Allah.
I specially thank you again for your patience to read this lengthy article. I tried to insert ZAKIRISM but was not possible due to the subject and related details.

sabeer.abushahruk said...

//கடை மடைப் பகுதி என்பதால்//

காக்கா,
காவிரியை
பெண்ணென்றதால்தான்
கடை மடைப் பகுதிக்குள்
இடை மெலிந்து
ஓடையாகிப் போய்விடுகிறது.

Yasir said...

அறிவுக்களஞ்சியம் இவ்வாக்கம்..இவ்வளவு பெரிய்யய விசயத்தை எல்லா விவரங்களுடன்...நம்மில் ஊடுருவும் அளவிற்க்கு எழுதுவது என்பது...காவிரியின் கையைப்பிடித்துகொண்டு எல்லைத்தாண்டி தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்க்குச் சமம்......அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் மாமா...

ஆமா எப்ப காவிரி பிரச்சனை வந்தாலும் ஒரு வட்டாள் நாகராஜ்-ண்டு ஒருத்தன் முளைக்கின்றானே அவன் யார் ??

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா, காவேரியை பற்றித்தான் விசாரிச்சேன்... நீங்க ஜாதகத்தையே எழுதிட்டீங்களே ! :)

மு.க.வின் முயற்சியும்... ஜெயின் வெற்றிக் களிப்பும் கிறங்க வைத்து விட்டது ! எவ்வளவு டீப்பான ஆய்வு...

நேற்று மு.க.வின் அறிக்கையை செய்தியில் வாசிக்கும்போது... !

சொல்லச் சொல்ல அடடா ! பாவாம் மு.க. என்று ச்சூ கொட்ட வைத்து விட்டது !

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

காவிரியின் வெள்ளம் பாயும் மகிழ்ச்சியை சிலப்பதிகாரம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.இதைவிட சிறப்பாக உள்ளது தங்களின் விரிவான எழுத்தாற்றல் வாழ்த்துக்களும், துவாவும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காவிரி பற்றி விரிந்த தகவல்கள்!

அவர் பிறந்த வருசம் 24
இவர் பிறந்த தேதி 24
இரண்டின் ஒவ்வாமை தான்
இப்படி இழுத்தடிக்கிறதோ!

KALAM SHAICK ABDUL KADER said...

பூக்கள் பூக்க மறந்தனவே
புற்கள் மடிந்து உறங்கினவே
நாட்கட் செல்ல மறுப்பதுமே
நாங்கள் பட்டத் துன்பமாமே


காவிரி நீயும் வீணிலே யாங்குக்
.....கைதியாய் நிற்பதும் ஈண்டுப்
பூவிரிச் சோலை நெற்கதிர் கூட்டம்
.....பூமியில் செத்திடக் காண்பாய்!
பாவிகள் உன்னை அடைத்திடக் கண்டும்
......பாடலில் வடித்திடும் கருத்தை
மேவிடும் தமிழ்நாட் டின்நிலை கண்டும்
....மெச்சவும் கையறு நிலைதான்!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Jaffar Sadeq,

//அவர் பிறந்த வருசம் 24
இவர் பிறந்த தேதி 24
இரண்டின் ஒவ்வாமை தான்
இப்படி இழுத்தடிக்கிறதோ! //

The statement made above could be for fun. But it seems to be superstitious belief and such statement is haram to believe in the mind.

The word "Vishwaroopam" also seems to be having meaning of multiple Gods and avatar concepts which contradicts with the tauhid 'Allah'. Hence its not recommended to muslims brothers/sisters to use in their writing or talking eventhough its trendy word.

Thanks and best regards,

B. Ahamed Ameen
from Dubai

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு,

அன்புச் சகோதரர் அகமது அமீன்,
------------------------------------------

//The statement made above could be for fun. But it seems to be superstitious belief and such statement is haraam to believe in the mind//

மெய்யாகவே 24 என்பது 2 பேருக்கும் யதார்த்தமாக பொருந்திவிட்டதால் மேலே சொன்ன 4 வரி வார்த்தை ஒரு 'FUN'னாகவே எழுதினேன்.

ஆனால் என்னுள் ஒரு துளியளவு கூட மூட நம்பிக்கை சம்பந்தப்பட்ட எதுவும் அன்றும் இன்றும் என்றும் கிடையாது. இன்சா அல்லாஹ்.

அதையும் மீறி எழுதப்பட்டதே தவறு என்றால் அல்லாஹ் என்னை (நம்மை) மன்னிப்பானாக!

இன்னும் மேலே எழுதப்பட்ட 4 வரியும் பதிவில் கூட இருப்பது தவறு என்றால் நீக்கி விடுவீராக நெறியாளரே!

நன்றி சகோதரா அஹமது அமீன்.

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

இந்த ஆக்கத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்து கர்நாடக அரசுக்கு அனுப்பினால் கூட ஏதாவது விடிவு காலம் பிறக்கும் என நினைக்கிறேன்.
[ பெயரிலேயே 'நாடகம்' இருப்பதால் தான் இப்படி ஃபிலிம் காட்டுரானுங்களா?' ]

Iqbal M. Salih said...

அறிஞரின் அருமையான கட்டுரைக்கு அழகு சேர்க்கும் கவியரசரின் அற்புதமான மரபுக்கவிதை!

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன்,, அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு