Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 28, 2013 | ,

தொடர் : 23
மழை!

சுவனத்திலிருந்து இறங்கும் ஷவர்!

கீழ்வானில் அதோ வெள்ளிக் கீற்றாக கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல்!

அத்துடன் நீர்த்துளிகளைச் சுமக்கும் கருமேகங்கள் மெல்ல உரசுவதிலும் அதன் செல்ல உறுமல்களிலும் உதயமாகிப் பொழிவது மழை!

சரம்சரமாய்ப் பெய்தாலும் சொட்டச்சொட்டப் பெய்தாலும் அப்போதும் அதன் பெயர் மழைதான்!

அதற்கு அடை மழை. அந்தி மழை. அப்பு மழை. ஆலங்கட்டி மழை. கன மழை. காத்து மழை, குமுறும் மழை. கோடை மழை. திடீர் மழை. தொடர் மழை. தூறல் மழை. தூவும் மழை. சாரல் மழை. சுழி மழை. பனி மழை. பருவ மழை. பெய் மழை. பொடி மழை. வெக்கை மழை. வெள்ள மழை என்று என்ன பெயர் வைத்தாலும் மழை ஓர் அழகுதான்! பகலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அலுக்காமல் மனம் குளிர மழையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

ஆனால், "இரவின் இருளில் மழை பெய்வதில்லை. அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்" என்றான் தற்காலக் கவிஞன் ஒருவன்! அதுவும் சரிதான். இங்கேநம்மூரில் மின்னல் வெட்டினால், மின்சாரம் போய்விடுமல்லவா!

எல்லாம் வல்லவன் அல்லாஹ் (ஜல்) சொல்கிறான்:

வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம் என்பதை அவர்கள் காணவில்லையா? அதன்மூலம் பயிர்களை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அவர்களும் அவர்களது கால்நடைகளும் உண்ணுகின்றனர். இதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா? (1)

அன்பின் வடிவாய் ஆகி நின்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருள்மழை குறித்து அருளினார்கள்:

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; தம் கால்நடைகளுக்கும் புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது ஒன்றுக்கும் உதவாத வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(2)

கடும் வெப்பத்தின்போது ஆறுஏறி, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளிலிருந்து உறிஞ்சப்படும் நீர், நீராவியாக மாறி காற்றுடன் கலந்து ஆகாயம் சென்று பிறகு மழை மேகங்களாய் உருவாகின்றன! அது பின்னர், அல்லாஹ் (ஜல்) எங்கெங்கே எந்தந்த அளவில் பொழியப்பட வேண்டுமென நாடுகின்றானோ, அங்கெல்லாம் மழை அருளப்படுகின்றது. மீண்டும் நிகழும் அதே நீர்சுழற்சி! அது ஏகன் இறைவனின் ஏற்பாடு!

நீர் பார்க்கவில்லையாநிச்சயமாக அல்லாஹ் தான் மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து அதன்பின்ஒன்றின் மேல் ஒன்றாக இணையச் செய்கின்றான். அவற்றின் மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கின்றீர் (3)


மழை பொழிவதால் வறண்டுபோன நிலம், உயிர்பெறுகின்றது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதுபோல் நீர் சிலமாதம் இல்லையென்றாலும் இடர் தரும் ஏராளமான இன்னல்களும் உணவுப் பற்றாக்குறைகளும் உண்டாகி மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் பல கஷ்டங்களுக்கு உள்ளாகின்றன!

பாலைவனப் பிரதேசங்களில் மழையின்றிப் போய்விட்டால், அதன் சிரமம் எத்தகையது என்பதைச்சொல்ல வேண்டியதேயில்லை! அந்த ஆண்டு கொடுமையான பஞ்சம் மதீனாவைச் சூழ்ந்து கொண்டது. வானம் பொய்த்துப் போனது!

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "யா ரசூலல்லாஹ், மழை பெய்யாமற் போனதால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது" என்று முறையிட்டனர். அப்போது பொற்குணம் வாய்ந்த பூமான் நபியவர்கள், மக்களை ஊருக்கு வெளியே தொழும் திடலுக்கு புறப்பட்டு வருமாறு அறிவுறுத்தினார்கள். அத்தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்றை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டார்கள். ஆகவே, தொழுமிடத்தில் சொற்பொழிவு மேடை ஒன்று தயார் செய்யப்பட்டு அவர்களுக்குப் போடப்பட்டது.

செங்கதிரோன் பொற்கதிரை அதன் விளிம்பில் சிந்தவந்த அன்று காலை, செம்மல் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். பின்னர்,சொற்பொழிவு மேடை மீது ஏறி நின்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பெருமிதப்படுத்திவிட்டு,

"மக்களே,நீங்கள் உங்கள் நகரங்களில் மழைக்காலம் தொடங்குவது தாமதமாகவும் அதனால் வறட்சி நிலவுவதாகவும் முறையிட்டீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்) இதுபோன்ற சூழ்நிலைகளில் அவனிடமே பிரார்த்தித்துக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளான். மேலும், நீங்கள் இவ்வாறு அழைத்துப் பிரார்த்தித்தால் உங்களுக்கு மறுமொழி அளிப்பான் என்றும் உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளான்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள்,

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர்ரஹீம். மலிக்கியவ்மித்தீன். லாஇலாஹ இல்லல்லாஹு, யஃபஅலு மாயுரீது, அல்லாஹும்ம அன்த்தல்லாஹு லாஇலாஹ இல்லா அன்த்தல் ஃகனிய்யு, வ நஹ்னுல் ஃபுகராஹு அன்ஸில் அலைனல் ஃகைஸ், வஜ்அல் மாஅன்ஸல்த்த லனா குவ்வத்தன் வ பலாஃகன் இலாஹீன்"

என்று கூறி தனது கைகளை அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவு உயர்த்திய வண்ணமாகவே தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டு இருந்தார்கள்.

(தமிழில்: அகில உலகங்களின் இரட்சகனும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் கூலி கொடுக்கப்படும் மறுமை நாளின் அதிபதியும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. அவனே, நினைத்ததைச் செய்து முடிப்பவன். யா அல்லாஹ்! நீயே எங்களின் இறைவன் ஆவாய். எந்தத் தேவையும் அற்றவனாகிய உன்னைத் தவிர வழிபடத் தகுதியானவன் வேறு எவனுமில்லை. நாங்கள் எல்லோரும் உன்னிடமே தேவை உடையவர்கள்.  ஆகவே, நீ எங்களுக்கு மழையைப் பொழியச் செய்வாயாக. எங்களுக்குப் பொழிந்ததைப் பயனுள்ளதாகவும் சேமிப்பாகவும் எங்களின் தேவைகள் நிறைவடையும் ஒரு தவணைவரை ஆக்குவாயாக!)

பின்னர், தம் முதுகை மக்கள் பக்கம் திருப்பி, தமது கைகளை உயர்த்தியவாறு, தாம் அணிந்திருந்த போர்வையை கீழும் மேலுமாக மாற்றிப் போட்டுக்  கொண்டார்கள். பின்னர், மக்களை நோக்கியவாறு சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள். உடன், இரண்டு ரக்அத் 'மழைத்தொழுகை'  தொழுவித்தார்கள்.

அப்போது வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்) மேகத்தைத் திரளச் செய்தான். மின்னல்வெட்டியது. தொடர்ந்து பெரும் இடி முழங்கியது.  அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மழைக் கொட்டத் துவங்கியது. உலகம் செழிக்க வந்த உண்மைத் தூதர் (ஸல்) அவர்கள்இன்னும் திடலில் மழைத் தொழுகையை முடித்துக் கொண்டு மஸ்ஜித் நபவீக்கு வரவில்லை. அதற்குள், வீதியின் இரு மருங்கிலும் மழை ஆறாய் ஓடத்துவங்கியது!

மக்கள் தங்களின் இல்லங்களை நோக்கி ஓடுவதையும் மழையில் நனைய பயந்து ஓரமாய் ஒதுங்குவதையும் கண்ட மாண்பு நபியவர்கள் மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ந்து சிரித்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்:

"அல்லாஹ் (ஜல்) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாக இருக்கின்றான். நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றேன் என்று நான் சாட்சியம் அளிக்கின்றேன்" என்று உரைத்தார்கள். (4)

இதுபோல் மற்றொருமுறை மழைபெய்த சம்பவத்தில், அண்ணலார் அவர்கள், மற்ற மக்களைப் போல் மழைகண்டு மருளாமல், தமது தலை, தோள், மார்பு ஆகிவற்றைத் திறந்து விட்டவர்களாக, வெளியே சென்று சுவனத்திலிருந்து மண்ணகம் பெறும் அருட்கொடைகளைத் தமது உடம்பில் நேரடியாகப் பெற்று அம்மழைக்கான தம் பங்கை மிகவும் ரசித்து அனுபவித்தார்கள்! இவ்வாறு, ஏனைய மனிதர்களிடமிருந்து இது போன்ற விஷயங்களில் வித்தியாசப் பட்டவர்களாகவே விளங்கினர் வெற்றிகளின் நாயகர் வேந்தர் நபி (ஸல்) அவர்கள்.

அந்த வெற்றிவேந்தரின் வித்தியாசமான தோற்றம்தான் என்ன!

அன்றொரு நாள், அது ஒரு பௌர்ணமி இரவு! எனக்கு முன்னால் மட்டும் இரண்டு நிலவுகள்! விழிகளை உயர்த்தி விண்ணில் தவழ்ந்து வரும் வானத்து நிலவைப் பார்க்கிறேன். பேரொளி வீசும் நிலவொன்று என் முன்னால் நிற்பதையும் காண்கின்றேன். இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தால், நெஞ்சை சுண்டியிழுக்கும் ராஜகம்பீர அழகு! அழகும் சௌந்தர்யமும் ஒன்றாய் வடிவெடுத்த ஒரு தோற்றம்! ஆற்றலும் வல்லமையும் சீராகக் கலந்த ஒரு வார்ப்பு! அவர் மனிதருள் ஒருவராய்ப் பிறந்தவர்தான்! எனினும், அவரது மாசு மறுவற்ற முகம் வெண்ணிலவைக் காட்டிலும் அதிகமாய் ஜொலித்து நின்றது! இறுதியாக, அந்த சிவப்பு ஆடைகளுக்குள் அழகுக்கு அழகாய் அமைந்துள்ள இந்த மண்ணகத்து நிலவே, அந்த விண்ணகத்து நிலவை விடவும் பேரழகு எனும் முடிவையே கடைசியில் நான் கண்டேன்! (5)

அதே ஆண்டு மீண்டும் மதீனாவைப் பஞ்சம் சூழ்ந்தது! அது ஒரு வெள்ளிக்கிழமை. கற்கண்டு மொழியில் சொற்கொண்டு வந்த காஸிமின் தந்தை (ஸல்) அவர்கள் ஜும்ஆ வின் உரையாற்றிக் கொண்டிருந்தவேளை ஒரு கிராமவாசி எழுந்தார். 'யா ரசூலல்லாஹ்! பருவ மழை பொய்த்து விட்டது! அள்ளித் தரும் அல்லாஹ்வைக் கொண்டு அவன் அருள் மழையைப் பொழியச் செய்யுமாறு வேண்டுங்கள்' என்றார்.

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணார்ந்து பார்த்தார்கள். அதில் மழைமேகம் என்று ஏதும் இல்லாமல் வெறிச் சோடிக்கிடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் மண்ணகத்திற்கு புத்துயிர்  கொடுக்கும் அருள்மழையைப் பொழிந்து தங்களைக் கருணைக்கண் கொண்டு நோக்குமாறு பணிவுடன் இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.

உடனே மழை மேகங்கள் ஒன்றோடொன்று திரண்டு சூழ்ந்தன! மழைக் காற்று மாருதமாய் மக்களிடம் குளிர்ந்து வீசி வந்தது. அவர்கள் அந்த இடத்தை விட்டும் நகர்வதற்குள் மழை பொழியத் துவங்கியது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன! மழை என்றால் மழை! வானமே பொத்துக் கொண்டது போல் இடைவிடாத மழை! அதுவும் இரவு பகலாக ஏழு நாட்கள் அடுத்த ஜும்ஆ தினம் வரை அம்மழை நீடித்தது. 

இந்த வார ஜும்ஆ உரையின்போது வேறொரு மனிதர் எழுந்து நின்றார். நாவலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்களின் கவனத்தைக் குவித்துச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதரோ குறுக்கிட்டவராக, 'அல்லாஹ்வின் தூதரே! இடைவிடாத  தொடர் மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொருட்கள் கெட்டுப்போகத் துவங்கிவிட்டன! எங்கள் வீடுகளோ இம்மழையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விடும் நிலையில் இருக்கின்றன! எனவே, எங்களைவிட்டும் மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் அத்தனைப் பற்களும் தெரியும்படி அழகாகச் சிரித்தார்கள். பிறகு அறிவின் தென்றலாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! எங்களுக்காக மழையைப் பொழிந்தருள்! அது எங்களின் மீதல்ல! அது எங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள மலைகளின் மீதும் மானாவாரி நிலங்களின் மீதும் நிலத்தில் நிலைத்திருக்கும் மரங்கள் மீதும் இன்னும் நிரையக் காத்திருக்கும் நீர்நிலைகள் மீதும் மற்றும் நீர்நிலைகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகள் மீதும் உன் அருள்மழையைப் பொழியச் செய்வாயாக! தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!' என்று  மூன்று முறைப் பிரார்த்தித்தார்கள்.

அதன் விளைவாக, மழை நகருக்குள் பொழிவதை உடனே நிறுத்திக் கொண்டது! அந்தத் திரண்ட மேகங்கள் மதீனாவிலிருந்து விலகி, அதன் வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றன. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தான் தேர்ந்தெடுத்தத் தூதரின் உயர்ந்த மதிப்பையும் தன்னுடைய நேசத்திற்குரிய தூதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு அன்று தெள்ளத் தெளிவாக நேரடியாகவே காட்டினான்! (6)

தங்களின் துஆ' வை அப்படியே, அந்த கணமே ஏற்றுக்கொண்டு பலனை நிறைவேற்றித்தந்த அல்லாஹ்வின் மகத்தான அருள் நிறைந்த செயல் இந்த  புவனத்தின் பொன்மணியாம் நம் நபிமணியைப் புளகாங்கிதம் அடைய வைத்தது! எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றி "அல்ஹம்துலில்லாஹ்" என்றனர்.

சற்று நேரத்தில்தமக்கு மிக ஆதரவாய் இருந்த தம் பெரியதந்தையை சட்டென்று நினைவு கூர்ந்தார்கள்:

'இன்று அபூதாலிப் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் இயற்றிய கவிதையை அவரே உணர்வு பூர்வமாகப் பாடி மகிழ்ந்திருப்பார்' அப்போது அபீதாலிபின் வீரத்திருமகன் அலீய் அபுல்ஹஸன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கவிதை அதே பாணியில் இப்போது பாடப்பட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டு, தன் தந்தையின் அதே தொனியில் அதே இனிமையுடன் பாடத்தொடங்கினார்:

"அழகே அழகான வெண்மை நிறம் ஒளிர்பவர் எவரோ
அவரால் வான்மழைக்கே பெரும் கோரிக்கை எழுப்பப்படும்!

அதுமட்டுமின்றி,
அனாதைப் பிஞ்சுகளின் ஆதரவகம் அவர்தான்! அந்த 
அனாதரவான விதவைகளின் காவலனும் அவரேதான்!" (7)

இதுபோன்று காத்தமுன் நபியவர்கள் கவிதையை ரசித்ததாக இன்னொரு நிகழ்ச்சியும் கூறப்படுகின்றது:

நான், அகிலத்தின் இருளை அகற்றிட வந்த அண்ணல் நபி (ஸல்) யின் அவையில் நூற்றுக்கு மேற்பட்ட தடவை அமர்ந்திருக்கின்றேன். அப்போது அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்த சில சம்பவங்கள் குறித்தும் நினவூட்டுவார்கள். ஈமான் கற்பித்த இனிய நபியவர்கள் அதை அமைதியுடன் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். சில சமயம் நபித்தோழர்களுடன் சேர்ந்து சிரிக்கவும் செய்தார்கள். (8)

இவ்வாறு, மாண்பு நிறைந்த மங்காத அறிவுச் சுடரான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அர்ரஹ்மானிடம் வேண்டிப்பெற்ற அருள் மழைத்தூறல்கள் இந்த அவனிக்கு வந்து மண்ணுறையும் பல்லுயிர்களும் புத்துணர்வுடன் நலம் பெற்று வாழப் பயன்பட்டன! இன்னும் அந்த அருள் மழைத்துளிகளில் எஞ்சிய நினைவலைகள் அதோ அந்த பசும்புல் வனங்களிலும் பாலை மணல் வெளிகளிலும் மலைச் சிகரங்களிலும் இதமாய் வீசும் தென்றலிலும் சலசலத்து ஓடும் நீரலைகளிலும் நீக்கமறவே நிறைந்திருக்கின்றன! அல்லாஹ்வின் அருளை அழகாய் அடைந்திருக்கின்றன!

o o o 0 o o o
Sources:
(1) அல்குர்ஆன் 32:27
(2) புஹாரி 79: அபூ மூஸா (ரலி)
(3) அல்குர்ஆன்: 24:43
(4) அபூதாவூத் 992: ஆயிஷா (ரலி)
(5) திர்மிதீ 2811: ஜாபிர் இப்னு ஸும்ரா (ரலி)
(6) புஹாரி 6093: அனஸ் பின் மாலிக் (ரலி)
(7) புஹாரி 1009: இப்னு உமர் (ரலி)
(8) திர்மிதீ 2777: ஜாபிர் பின் சமுரா (ரலி)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இக்பால் M.ஸாலிஹ் 

15 Responses So Far:

Abu Easa said...

மா ஷா அல்லாஹ்!
அழஹான வர்னனைகளுடன் மாநபியின் வரலாற்று நிகழ்வுகளைத் தந்துள்ளீர்.
அல்லாஹ் உங்கள் பனியைப் பொருந்திக்கொள்வானாக!

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ்!

சகோதரர் அவர்களின் அழகிய எழுத்து மழையிலும் நாங்கள் நனைந்தோம்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sabeer.abushahruk said...


மாஷா அல்லாஹ்!
அழகான வர்ணனைகளுடன் மாநபியின் வரலாற்று நிகழ்வுகளைத் தந்துள்ளாய்.
அல்லாஹ் உன் பனியைப் பொருந்திக்கொள்வானாக!
அழகிய எழுத்து மழையிலும் நாங்கள் நனைந்தோம்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Unknown said...

மாஷா அல்லாஹ்
ஆக்கம் தரும் தாக்கம்
அவ்வபோது அழகிய ஒரு மயக்கம்
வார்த்தைகளின் வர்ணிப்பு
வாசிப்பதினால் திகைப்பு
உலகம் போற்றும் உத்தம நபி
உரக்க சொன்னார்கள் சத்தியத்தை - சகோதர தத்துவத்தை
நானிலம் போற்றும் நபியின்
நகைசுவையாய்
அறுசுவையிலும் இனிய சுவையாய்
சுவைக்க சுவைக்க
திகட்டாதே தீன் சுவையாய்
எழுத்து மழையில் அழகிய ஒரு சாரல்
---------------------------
இம்ரான்.M.யூஸுப்

sabeer.abushahruk said...

இரவின் இருளில் 
மழை பெய்வதில்லை
அதன் 
பேச்சுச் சப்தம் மட்டுமே 
கேட்டுக் கொண்டிருக்கும்"

மட்டுமல்ல

கைதட்டல்களோடான
தேர்ந்த மேடைப் பேச்சாக அட்டகாசமாகவோ
சிறுபிள்ளைகளின்
தேர்வு நேரப் மனணச் சப்தமாக
சீராகவோப் 
பேசிக்கொண்டிருக்கும்

விடிகாலையில் விழிப்பதற்குள்
சாளரங்களின் கதவிடுக்குகளில்
கதிரவன் கசிய
வெளியே
காற்று கருவுற்றிருக்கும்

சாரலோ தூறலோ
மண்ணில்
ஈரமிருக்கும் 

மழை
நனைத்தாலும் அழகு
மழையை 
நினைத்தாலும் அழகு

மழையைக்
காண்பதுபோல்தான்
கேட்பதுவும் மகிழ்ச்சி

மழை
பெய்வதும் பிடிக்கும்
பேசுவதும் பிடிக்கும்!

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

இரவின் இருளில் 
மழை பெய்வதில்லை
அதன் 
பேச்சுச் சப்தம் மட்டுமே 
கேட்டுக் கொண்டிருக்கும்"

மட்டுமல்ல

கைதட்டல்களோடான
தேர்ந்த மேடைப் பேச்சாக அட்டகாசமாகவோ
சிறுபிள்ளைகளின்
தேர்வு நேரப் மனனச் சப்தமாக
சீராகவோப் 
பேசிக்கொண்டிருக்கும்

விடிகாலையில் விழிப்பதற்குள்
சாளரங்களின் கதவிடுக்குகளில்
கதிரவன் கசிய
வெளியே
காற்று கருவுற்றிருக்கும்

சாரலோ தூறலோ
மண்ணில்
ஈரமிருக்கும் 

மழை
நனைத்தாலும் அழகு
மழையை 
நினைத்தாலும் அழகு

மழையைக்
காண்பதுபோல்தான்
கேட்பதுவும் மகிழ்ச்சி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என்று நிர்பந்தத்தை ஏற்படுத்தும் இந்த தொடரில் இன்றைய எழுத்து மழையில் நானும் நனைந்தேன்... !

வாசித்தோம் என்ற மனதிருப்தியை தருவது மட்டுமல்ல, இந்த தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எடுத்து வைக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் மற்றும் சஹாபாக்களின் வரலாற்று ஆதாரங்கள் அப்படியே மனதில் பதிந்து இருக்கச் செய்ததே இந்த தொடரின் வெற்றி !

தற்கால கவிஞர் (நீங்கள் போட்டது 'ன்') அவர்களின் கவிதைக்கு மற்றுமொரு அங்கீகாரம்.... இந்தப் பதிவில் 'காட்டாக' இடம்பெற்ற வரிகள் எங்கள் கவிக் காக்காவின் கவிதை உணர்வோடு உறவாடும் உசுரு என்பதற்கு சான்று !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மாநபியின் நிகழ்வுகள் பற்றிய தமிழ்த் தேன்!

ZAKIR HUSSAIN said...

மழை வர மாநபியின் முயற்சியையும் இறைவனின் கருணையையும் நேரில் பார்த்த உணர்வு உன் எழுத்துக்களில்...இந்த நிகழ்வை முதன் முதலாக உன் மூலமே அறிகிறேன்.

வர்ணணைகளில் பள்ளிக்கூடம் படிக்கும்போது உன் கவிதை திறமையை பார்த்ததுபோல் ஓர் உணர்வு.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum My Dear Brother Iqbal,
It is really exciting and moving to read your narration. And I feel proud of being one of your dearest brothers. All the comments too are more poetic and it is rather more intersting to read the comments from the conributors of AN.
Jazakkalah Khairan.
Wassalam
N.A.Shahul Hameed.
I returned from India on 26th Feb. Where are you now?

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் நாடினாலே தவிர எதுவும் நடப்பதில்லை, ஆனால் நாம் அல்லாஹ்விடம் தேவையுடயவர்களாயிருக்கிறோம். நமது வாழ்வியல் வழிகாட்டி ஓப்பற்ற ஓரிறையின் சத்திய தூதர் நமக்கு வேண்டியதை அந்த இறைவனிடமே கேட்க வேண்டுமென்றும் அது கிடைத்ததும் அவனுக்கே நன்றி செலுத்தவேண்டும் என்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ். அது கிடைத்தபின் இறைவனை மறந்து நன்றி செலுத்தாமல் இருப்பது கூடாது என்பது நம் இறைத்தூதர் மூலம் நாம் பெற வேன்டிய படிப்பினையாகும். பதிவுக்கு நன்றி.

Ebrahim Ansari said...

தம்பி இக்பால் அவர்களின் தமிழ் மழை . சொல் மழை. சுவை மழை. மார்க்க மழை. அனைவருக்கும் மகிழ்ச்சி மழை.

Yasir said...

மேன்மை நபி(ஸ்ல) அவர்களைப்பற்றி இனிய தமிழில் இனிமையாக சொல்லி இருக்கின்றீர்கள்....காத்திருப்போம் அடுத்த வியாழக்கிழமைக்காக

Iqbal M. Salih said...

சகோதரி ஆமினா அவர்கட்கும்
அறிஞர் அன்சாரி காக்கா அவர்கட்கும்

அபுஈஸா, அபுஇப்றாஹீம், இம்ரான் கரீம், இப்ன் அப்துல்வாஹித் ஆகியோருக்கும்

அண்ணன் N.A.S, தம்பிகள் யாசிர், ஜஃபர் ஸாதிக் மற்றும்
எனது நண்பர்கள் சபீர், ஜாகிர் இருவருக்கும் நன்றிகள்!

ஜாகிர்: கவிதைகள் எழுதுவதை என் கல்யாணத்திற்குப் பிறகு நிறுத்திவிட்டேன்.ஆனால் நமது கையெழுத்துப் பத்திரிக்கை 'நியூஇந்தியா' விலிருந்து நீ இன்னும் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றாய்.மகிழ்ச்சி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு